Friday, February 28, 2014

புள்ளுக்கும் இரங்கிய பெருமாள் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்.

சரவணபவனில்  வழக்கம்போல்  தென்னிந்திய சாப்பாடுதான் நமக்கு.  ஒரு  நாளைக்கு  ஒருமுறையாவது  குழம்பு கூட்டு கறிகளுடன் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஊர்சுற்றத் தெம்பு வருமுன்னு கோபாலின் கணிப்பு. பக்கத்துக்கட்டிடம்தானே  நடந்தே ஹொட்டேலுக்குப் போனோம்.  இது  முக்கிய சாலைகளில் ஒன்னு என்பதால்   கலகலன்னு கூட்டமும் கடைகளுமா இருந்தது.  ஒரு பழக்கடையில் ஒரே ஒரு மாம்பழம் வாங்கினோம்.  டிசம்பரில் மாம்பழம் எங்கிருந்து வருதோ?

ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின்  கிளம்பினோம்.  நம்ம  ஜிஆர் டியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு  வச்ச  மாட்டுத்தொழுவம்  அலங்காரம் அப்படியே புது வருசம்வரை இருக்குமாம்.  கோவில்நகரத்தில் இருக்கோம் என்பதால் வெளி வாசலில்  செயற்கைக்குன்று அருவி, கோவில் எல்லாம் செயற்கையா வச்சுருக்காங்க. அழகாத்தான் இருக்கு. என்ன ஒன்னு.......  மெயின் ரோடுலே இருந்து ரொம்ப  உள்ளே  தள்ளி இருக்குக் கட்டிடம். வாசலில் பெரிய உருளியில் பூக்களுக்குப் பதிலாக  மீன்கள்.

கார்பார்க் ரொம்ப பிஸியா இருக்கு.  ஃபாரின் இளவரசிஒருத்தர் வந்துருக்காங்களாம். ஏகப்பட்ட வண்டிகள் (8 ) அவுங்களோடு வந்துருக்குன்னார் நம்ம ட்ரைவர் சீனிவாசன். நம்மைத்தான் சொல்றாங்களோன்னு ஒரு விநாடி திகைப்பு.  நம்மகிட்டே ஏது எட்டு வண்டி?  ஸோ நாமில்லை:-)

வேலூர் போகும் வழியில்  13  கிலோமீட்டர்  போனால் பாலுச்செட்டி சத்திரம் என்ற ஊருக்குப் பக்கத்திலே  ஒரு அரைக்கிலோ மீட்டர் உள்ளே போனால் திருப்புட்குழி என்னும் இடம் வருது.

 ஸ்ரீ தாயார் மரகதவல்லி உடனுறை ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில்.  ஆழ்வார்களால் பாடல் பெற்ற  108 திவ்யதேசத்தில் ஒன்னு.
விசேஷம் என்னன்னா...  ராம அவதாரத்தோடு சம்பந்தமுள்ள கோவில் இது என்பதே!  சீதையைக் கவர்ந்து கொண்டு ராவணன் ஆகாய மார்க்கமா இலங்கையை நோக்கிப்போறான்.  அப்ப  கழுகரசன் ஜடாயு, சீதையை எப்படியாவது காப்பாத்தணும் என்று அரக்கனுடன்  மோதிச் சண்டை போடுது.  சண்டையில் ராவணன் ஜடாயுவின் சிறகுகளை  வெட்டிமுறிச்சதும்  தொபுக்கடீர்னு கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கிட்டே இருக்கு.  சீதையைத் தேடிக்கிட்டு ராமன், தன் தம்பி லக்ஷ்மணனுடன் காட்டில் நடந்து வரும்போது , அதுவரைத் தன் உயிரைக் கையில்(?) பிடிச்சு வச்சுக்கிட்டு இருந்த ஜடாயு,  சீதை போனவழியைக் காட்டி  சமாச்சாரம்  முழுசும் சொல்லிட்டு, ராமா.... நீயே எனக்கு இறுதிக்கடன் செய்யணுமுன்னு  கேட்டுக்கிட்டுத் தன் உயிரை விட்டது.

அந்தப்பறவையை (புள்)  ராமர்  குழி தோண்டிப் புதைச்சு இருப்பார் போலன்னு நான் நினைச்சேன். ! புள் + குழி = புட்குழின்னு ஆகி இருக்கு. ஆனால் சிதை மூட்டி இறுதிக்கடன் செய்தார்னு சொல்றாங்க.

நம்ம வீட்டுலே நம்ம ரஜ்ஜு ஒரு முறை ஸில்வர் ஐ ஒன்னு பிடிச்சுக்கிட்டு வந்து எனக்குப் பரிசளித்தான். ரொம்பச் சின்னதாச்சா.... இவன் தொட்டதுமே பயத்தில் உயிரை விட்டிருக்கும். பாவம்.......  செல்லம்போல இருக்கு.  நம்ம இவனும்  பெருமிதத்தோடு  என்னப் பார்க்கிறான்.


தேங்க்ஸ். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட கிஃப்ட் எனக்கு வேணாமுன்னு சொன்னேன். புரிஞ்சு இருக்குமோ என்னவோ! அப்புறம்  வேறொன்னும்  கொண்டு வரலை!  நம்ம தோட்டத்திலும் ஒரு புட்குழி  இருக்கு .

ஒரு ஒன்னரை வருசத்துக்கு முன் நாம் புள்ளிருக்கு வேளூர்  போகலாமா?ன்னு போனதைப்பற்றி எழுதுன பதிவில்  எழுதியது  கீழே!   நமக்கு அப்ப ஒரு பேச்சு இப்பபேச்சு இல்லை கேட்டோ:-))))

இந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு.  ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.



காஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு  ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது.  இப்படி ஒரு இடம் இருக்க,   இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை  தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை.  ஆனாப் பாருங்க.... இது  சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா?  ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை  ஒரு அதிசயமுன்னு  எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு  அர்த்தம்.

புலம்பல் கேட்டு, இப்பப் பெருமாள் கூப்புட்டு கோவிலுக்கு வரச் சொல்லிட்டார் கேட்டோ!

இருபத்தியஞ்சு நிமிசப்பயணம்.  கோவில் திறக்கும் நேரம்தான் இப்போ. நாலுமணியாகப்போகுது.  கோவிலுக்கு வெளியே இருக்கும் முன்மண்டபத்தில் தரிசனத்துக்கு சிலர் காத்திருந்தாங்க. பலிபீடமும், கொடிமரமும் இங்கே  இந்த மண்டபத்தில் தான் இருக்கு.
 கோவிலையொட்டி திருக்குளம்.  ஹப்பா! நல்ல சுத்தமா , சூப்பர்.  ஜடாயுவுக்கு  ஈமக்ரியை செய்ய  ஸ்ரீராமன் தன் அம்பினால்  தரையில் குத்தியதும் உண்டான குளமாம். இதுக்கு ஜடாயு தீர்த்தம் என்றே பெயர்.

 கோவிலுக்கு நேரெதிரில் தெருவின் கடைசியில் இன்னொருகோவில் கண்ணில்பட்டது. ஆஞ்சநேயர் கோவில்.  அப்புறம் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே மறந்து போயிட்டோம்:(

குளத்துக்கு எதிரில்  இன்னொரு சந்நிதியும்  அடுத்த முற்றத்தில்  சின்னசின்ன மாடக்கோவில்களுமா இருக்கு.  இதையொட்டி இருக்கும் வீட்டுக் குழந்தைகளுக்கு விளையாட ஜோரான இடம்!

சும்மா அங்கே சுத்திப்பார்த்துவரும் சமயம் வாகனமண்டபமுன்னு  தனியா பார்க்கிங்  இருக்கு பெருமாளுக்கு.  இந்தக் கோவிலில் கல்குதிரை ரொம்ப விசேஷமுன்னு  கேள்வி.  மூணுபகுதியா இருக்கும் துண்டுகளை இணைச்சால் குதிரை வந்துருமாம்!  ஒருவேளை இங்கே இந்த மண்டபத்தில் தான் வச்சுருக்காங்களோ என்னவோ!

கோவில்திறந்து வெளியே காத்திருந்த மக்கள்ஸ் உள்ளே போவதைப்பார்த்து நாமும் பின்தொடர்ந்தோம்.






கோவிலைப்பற்றிய தகவல் சுவாரசியம். அதைவிட சுவாரசியம் கட்டண விபரத்தில் இருந்தது.  பயறு முப்பது ரூபாய்.

அட! என்னவா இருக்கும்.? விசாரிக்கத்தான் வேணும்.

இங்கத்துத் தாயார்  மரகதவல்லி  ஒரு குழந்தைப்பேறு மருத்துவ ஆலோசகரா இருக்காங்க.  அந்தக் காலத்துலே பார்த்தீங்கன்னா........
 தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கலைன்னா....  காரணம்  மனைவி மட்டுமே என்ற அசைக்கமுடியாத  நம்பிக்கைதான்  ஊருலகத்துக்கு:(  மாட்டுப்பொண்  விதவிதமான  ஏச்சுக்களைப் புகுந்தவீட்டில் சகிச்சுக்கொண்டு வாழணும்.  ஓசைப்படாம  கணவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க:(  அப்போ அந்தப்பெண்ணின் மனசு எப்படிப் புண்பட்டுக்கிடக்கும் பாருங்க.

அதுக்குத்தான் ஆலோசகரா இங்கே தாயார் உதவி செய்யறாங்க. பயறுக்குக்குப் பணம் கட்டியவர்கள் இங்கே இருக்கும் ஜடாயு தீர்த்ததில் முங்கி எழுந்து , கோவில் மடைப்பள்ளியில்   ஏற்கெனவே 'வறுத்து ஊறவச்சுருக்கும் 'பயிறை வாங்கி மடியில் கட்டிக்கிட்டுத் தூங்கிடணும். கோவிலிலேயே தான்னு நினைக்கிறேன்.

மறுநாள் காலையில் மடியை அவிழ்த்துப்பார்த்தால்.............

பயிறில் முளை விட்டுருந்தால்  அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. அததுக்கு நேரம் மட்டும் வரணும். எத்தனையோ பெண்களுக்கு மன நிம்மதி  இதனால் கிடைச்சிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே  இல்லை.

நம்ம ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் , காஞ்சி யாதவப்ரகாசரிடம்  கல்வி பயின்றார்னு கேட்டுருக்கோமே பல உபந்நியாசங்களில்....   அந்த  இடம் கூட இங்கே தான். நம்ம ஸ்ரீ யின் பதிவில் அந்த மண்டபத்தின் படத்தைப் போட்டுருக்கார்.

ஏகப்பட்ட கல்வெட்டுகள் இங்கே கிடைச்சதுன்னும் சொல்றாங்க. பிரகாரச்சுவற்றில் கூட பழைய தமிழ் எழுத்துகளைப் பார்க்கலாம்.

ஜடாயுவை தன் தொடையில்  வைத்துள்ளாராம்  மூலவர்.அதுக்கும் சேர்த்தே தைலக்காப்பு. மூலவர் ஸ்ரீ விஜயராகவப்பெருமாளுக்கு  இருபுறமும் தேவிமார் உண்டு.  ஜடாயுவுக்கு மூட்டின சிதையின் சூடு தாங்காமல்  ஸ்ரீதேவி ,பூதேவி நாச்சியார் இடம் மாறி அமர்ந்து இருக்காங்க.

ராமாவதாரம் ஏகபத்னி ஸ்பெஷல் இல்லையா?அதெப்படி ரெண்டு தேவிகளும் மூலவரோடு இருக்காங்க என்பது  மனசின் ஓரத்தில்  இப்போ எழுந்த கேள்வி.


ஜடாயுவுக்கு தனி சந்நிதி உண்டு. பெருமாள் புறப்பாட்டின்போது இவரும் கூடவே கிளம்பிடறாராம்.

பிரகார மண்டபங்களில் ஒரு பக்கம் வாகனங்களுக்கு  அறைகள் கட்டி உள்ளே வச்சுருக்காங்க. ரொம்பநல்லது. சீக்கிரம்  கேடு வராமலிருக்கும். கோவிலுக்கு வெளியே,உள்ளேன்னு டபுள் பார்க்கிங் ஸ்பேஸ்.


கோவில் சுத்தமா இருக்கு என்றாலும் கண்டாமுண்டா சாமான்களை எடுத்து சீராக்கி அடுக்கி வச்சுருந்தால் இன்னும் நல்லா  இருக்கும்.

ஸ்ரீராமனே ஈமக்ரியை செய்த இடமென்பதால்  பித்ரு தர்ப்பணங்கள்  செய்ய இந்த ஊர் விசேஷம்.தைஅமாவாசையில் கூட்டம்  நெரியுமாம்.

பொதுவா ஒரு கோவிலுக்குப்போனால்   குறைஞ்சபட்சம்  ஒருமணி நேரமாவது இருந்து சுற்றிப்பார்க்கணும் என்று எனக்கு விருப்பம். ஆனால்   ஒருநாள் மட்டுமே காஞ்சியில் தங்கல் என்பதால் ஓடியோடிப் பார்க்கும்படி ஆச்சு.   இதோ கிளம்பி மறுபடி காஞ்சி நகரத்துக்குள் போய்ச் சேர்ந்தோம்.

 தொடரும்...............:-)




14 comments:

said...

நல்ல பதிவு!
தமிழ்மணம்+2
இதையும் தமிழ்மணம் மகுடம் ஏற்றுவோம்--மக்கள் ஓட்டுப்போட்டால்!

said...

ஓடியோடிப் பார்த்தாலும் படங்கள் மூலம் நாங்களும் சிறப்பான கோயிலை சுற்றி விட்டோம் அம்மா... நன்றி...

said...

இருக்கை,குழி ,குடி,புரம்னு எத்தனை பெயர் ஒரு ஸ்தலத்திற்கு. இன்னும் புள்ளம் பூதங்குடி நீங்க பார்க்கலையே துளசி.கும்பகோணம் பக்கத்திலியே இருக்கு. எரியூட்டினதாகத் தான் தகவல் இராமாயணத்தில்.சபரிக்கு,கபந்தனுக்கு,ஜடாயுவுக்கு என்று மோக்ஷ்ம் கொடுத்துவிட்டார் ராமன். படங்கள் அத்தனையும் சூப்பர்.

said...

திருபுட்குழி கோவிலின் தகவல்களும், படங்களும் என எல்லாமே சூப்பர் டீச்சர்.

இந்த முறை பயணத்தொடரை தொடர்ந்து என்னால் படிக்க முடியாமல் போய்விட்டது...:(

said...

வாங்க நம்பள்கி.

மகுடமெல்லாம் எப்போதாவது கிடைத்தால்தான் நல்லது. எப்பவும் மகுடம் சுமந்தால் தலை வலிக்காதோ!!!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஒரேதா ஓடுனாலும் உடம்புக்கு நல்லதில்லே!

அப்பப்பக் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டே ஓடலாம்:-)

said...

வாங்க வல்லி.

இனி சான்ஸ் கிடைச்சால் ஒவ்வொரு பெரிய நகரத்தையும் சுற்றி இருக்கும் நூத்தியெட்டுகளுக்கு ஒவ்வொரு இந்தியப் பயணத்துக்கும் ஒரு வாரம் ஒதுக்கிடணுமுன்னு இப்பொதைய முடிவு.

பெருமாள் வரச்சொன்னதும் துளசி கிளம்பிடுவாள்:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பதிவுகள் எங்கே ஓடிடப்போகுது? நேரம் கிடைக்கும்போது நிதானமாப் பார்க்கலாம்.

நோ ஒர்ரீஸ் கேட்டோ:-)

said...

அருமையானவிளக்க்கங்களுடன் படங்கள் . நேரில் பார்த்த உணர்வு. நன்றி துளசி !! ஆனால் எங்குமே யானை இல்லையா ?

said...

படங்கள் மூலம் நாங்களும் கோவிலைப் பார்க்கிறோம். கூடவே நீங்கள் தரும் சிறப்பான விவரங்கள்.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி டீச்சர்.

said...

"ராம அவதாரத்தோடு சம்பந்தமுள்ள கோவில்" கண்டுகொள்ளக்கிடைத்தது.

said...

வாங்க சசிகலா.

என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க?

முழங்கால்வலியைத் தாங்கிக்கிட்டு ஒரு பிடி(பெண்யானை) கோவிலுக்குள் புகுந்து வருவது உங்க (மனக்)கண்ணில் தெரியலையா!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

said...

வாங்க மாதேவி.

தொடர்ந்து வந்து ஊக்கம் தருகின்றீர்கள்! ரொம்பவே மகிழ்ச்சியா இருக்குப்பா.