இன்னிக்கு நம்ம அநந்தபத்பநாபனை சேவிச்சுட்டு சென்னை சுற்றை ஆரம்பிக்கணும். காலைக் கடமைகளை முடிச்சதும் நாம் தங்கி இருக்கும் இடத்துலேயே ப்ரேக்ஃபாஸ்ட் கிடைச்சிருது. ரொம்பவே நல்ல ஏற்பாடு. பெரும்பாலான தங்குமிடங்களில் இடங்களில் இந்தமுறை இருப்பது நல்ல வசதி. பயணத்தில் இருக்கும்போது இந்த வசதி உள்ள ஹொட்டேலைத் தேர்ந்தெடுங்கள். போதுவிடிஞ்சதும் சாப்பாட்டுக்கு அலைய வேணாம்பாருங்க!
இங்கே நம்ம லோட்டஸில் ஆடம்பரம் இல்லைன்னாலும் அவசியமானவைகளை வச்சுருக்காங்க. தென்னிந்திய வகையில் தினமுமே மசால்வடையோ இல்லை மெதுவடையோ மெனுவில் கட்டாயம் உண்டு:-) தவிர இட்லியும் தினப்படி சமாச்சாரம். பொங்கல், இடியாப்பம், உப்புமா, இப்படி எதாவது ஒன்னு. இதுக்குண்டான சாம்பார், ரெண்டு வகைச் சட்டினி.
வடக்கர்களுக்கு பராத்தா, அதுக்குண்டான குருமாவோ இல்லை ச்சனா மசாலாவோ. நீங்க தெற்கா இல்லை வடக்கான்னு தீர்மானிச்சுக்குங்க. பஃபே என்பதால் மொத்த இந்தியாவும் சரின்னாலும் பிரச்சனை இல்லை.இது போக ம்யூஸ்லி, பழச்சாறு, ப்ரெட், ஜாம், பட்டர் வகையறாக்கள். காஃபி , டீ வச்சுருக்காங்க. காலை ஏழரை முதல் பத்துவரை எப்பவேணுமுன்னாலும் போய்ச் சாப்பிட்டுக்கலாம் என்பதால் டைனிங் ஹாலில் கூட்டம் இருப்பதில்லை. தமிழ்நாட்டு வழக்கத்தை அனுசரிச்சு பணியாட்கள் எல்லோருமே பீஹார், ஒரிஸ்ஸா, உ.பி என்று வடமாநிலத்தவர்..ஹிந்தி பேசினதும் அவர்கள் முகம் மலர்வதைப் பார்க்கணுமே! முகத்தில் எப்போதும் இருக்கும் தூக்கக்கலக்கம்கூட ஓடியே போச்:-)
பரவசத்துடன் கோவில் வாசலில் நுழைஞ்சேன். மார்கழி மாசத்துக்குன்னு மூலவரை எல்லோரும் வசதியாக தரிசனம் செய்யும் வகையில் மண்டபத்தில் காலரி போல படிவரிசைகள் நாலு. இதைத்தவிர மூலவருக்கு முன் கம்பித்தடுப்பினருகில் நின்னால் பெருமாள் கோவில்களுக்கே உரிய தீர்த்தம் சடாரி தீப ஆரத்தி எல்லாம் கிடைக்கும். இது ஆனதும் படி வரிசைகளில் ஏறி மூலவரைப் பார்த்தபடி நின்னோ அமர்ந்தோ ... உங்களிஷ்டப்படி, கிடப்பவனை சேவித்துக் கொண்டேஇருக்கலாம். ஒரு தள்ளுமுள்ளோ ஒரு ஜருகோ .....ஊஹூம்!
விசேஷம் தவிர்த்த மற்றநாட்களில் கம்பித்தடுப்பு ஆங்கில T போல. இடது பக்கம் பூராவும் பெண்களுக்கும் வலப்பக்கம் பூராவும் ஆண்களுக்கும் என்ற கணக்கு. இந்தக் காலத்தில் கணக்கை யார் சட்டை பண்ணறாங்க? எப்படியும் மூணுவாசல் வழியாப் பெருமாளை சேவிக்கத்தானே வேணும்? முகம் பார்த்தால் சரணம் இல்லை. பாதாரவிந்தங்களை கண்டால் திருமுகம் கண்ணீல் படாது! ஒரே கிடப்புதான்! யார் வந்தால் எனக்கென்னன்னு மேலே நட்ட பார்வை. கொஞ்சம் திரும்பிப் படுத்து நம்மைப் பார்த்தால் என்ன கொறைஞ்சுருமோ:( அதுக்காக அவனை விட்டுடமுடியுமா?
எனக்கு 'அவனோடு'பேசப்பிடிக்கும். ஏகப்பட்ட நியூஸிருக்கு அவனிடம் சொல்வதற்கு:-) நம்ம காசிப் பயணத்தைச் சொல்லிட்டுக் கூடவே வந்துருன்னேன். இந்தமுறை சென்னைத்திட்டம் கொஞ்சம் மாறித்தான் போயிருக்கு. அதனால் அடிக்கடி வந்து போக ச்சான்ஸ் கிடைக்காது. அதுக்காக உன்னை விட்டுடமாட்டேன். மனசுக்குள்ளே சுமந்துக்கிட்டே இருப்பதால் என் கண்வழி நீ பார்த்துக்கோன்னதும் சரின்னான்:-)
கருவறையை வலம் வந்தோம். பளிச்ன்னு சுத்தமா இருக்கு. ஆனாலும் ஏகப்பட்ட வாகனங்கள் சேர்ந்துபோய் ,பார்க்கிங் ஸ்பேஸ் ப்ராப்லம்தான். இனி இதுக்குன்னே ஒரு பெரிய ஹால் வேண்டி இருக்கும். கோவிலைப்பத்தி ரொம்ப விவரிக்கப்போவதில்லை. பலமுறை நம்ம பதிவுகளில் சொல்லியாச்சு:-) சாம்பிளுக்கு இஷ்டதெய்வத்தை இங்கே பார்க்கலாம்!
இடது பக்கம் தோழியின் ரங்கா. வலது பக்கம் துளசியின் ரங்க்ஸ்.
கோவிலில் இருந்து கிளம்பி பதிவுலகத்தோழி வீட்டுக்குப் போனோம். தோழி வீட்டில் இல்லை. அவரோட ரங்க்ஸ் இருந்தார். அவர் நம்ம கோபாலுக்கு சீனியர் .ஒரே காலேஜ். ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா......... கொசுவத்தியை ஏத்திருவாங்க:-) தோழிக்கு உடல்நலமில்லைன்னு மருத்துவமனையில் இருக்காங்கன்னார். இன்னும் ரெண்டொரு நாட்களில் வீட்டுக்கு விட்டுருவாங்களாம். அப்புறம் வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு வீட்டுச் சுவரில் ஒட்டி இருந்த அலங்கார முகத்தைக் கிளிக்கிட்டு வந்தேன். தோழியும் மகளும் கைவினைப்பொருட்கள், அலங்காரங்கள் செய்வதில் வல்லவர்கள். இந்த முகம் சரிகைக் கயிறால் ஆனது. சூப்பரா இருக்குல்லே!
அங்கிருந்து நேரா நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு! குடும்பத்தின் புதுவரவின் முகம் பார்க்கணும். ஆறுமாசம் ஆகப்போகுது! குழந்தைக்கு நாங்கள் மாமா தாத்தா & அத்தைப் பாட்டி:-) ஏன் ,என்னை வந்து பார்க்க இப்பதான் நேரம் கிடைச்சதான்னு கண்ணால் ஒரு கேள்வி!
அங்கிருந்து திரும்பி நம்ம ராகவேந்திரர் மடத்துக்கு ஒரு ஓட்டம். இங்கே நம்ம கிருஷ்ணன் கொள்ளை அழகு! தொட்டடுத்து இருக்கும் கண்ணாடிக்கடைக்கு ஒரு விஸிட். இப்ப எல்லாமே யானை விலை ஆகிக்கிடக்கு. புதுக்கண்ணாடிக்கு ஆர்டர் கொடுத்துட்டு வருசம் முடியுமுன் வேணுமுன்னு சொன்னேன்! அஞ்சு நாளுக்குள்ளே செஞ்சு வருமான்னு தெரியலை. முயற்சிசெய்யலாம் என்றார் கடைக்காரர்.
க்ராண்ட் ஸ்நாக்ஸ் ரெஸ்ட்டாரண்டில் (டாக்டர் நாயர் ரோடு) பகல் உணவு. தயிர் சாதம் அருமை:-)
இன்னொரு பதிவுலகத்தோழியை சந்திக்கலாமுன்னு செல்லில் கூப்பிட்டால் (சொல்ல மறந்துட்டேனே..... போனவருசம் எடுத்த சிம் கார்டுக்கு இன்னும் உயிர் இருக்கு. தப்பிச்சேன். (ஆறுமாசம் பயன்படுத்தலைன்னா அந்த செல் நம்பரை வேற யாருக்காவது தூக்கிக் கொடுத்துருவாங்களாமே) வீட்டுக்கு வரும் வழியைச் சொல்றாங்க...... போச்சுடா.... உறவினர் வீடுகளுக்குப்போய் வந்தமே அங்கிருந்து ரொம்பப்பக்கம்! காலையிலே கேட்டு வச்சுருந்தால் இன்னொரு ஓட்டம் மிச்சம். போயிட்டுப்போறது....... உறவினர் வீட்டைக் கடந்து, நிக்காமல் இந்தமுறை போகலாம்:-)
மச்சினர்வீட்டுச் சின்னு மறக்காமல் வாலைஆட்டினான்!!!
அப்பதான் மதியத்தூக்கம் தூங்கி எழுந்த பிள்ளை. ஆனாலும் எங்களோடு இன்னும் சொன்னால் கோபாலோடு ஒட்டிக்கிட்டான். பேச்சும் சிரிப்பும் சாயாவுமா நேரம் போனது தெரியலை. தோழி 'டீ' போடும்போது அடுக்களையில் இருந்தேன். என்னத்துக்கு இவ்ளோ அதிகமா தயாரிச்சு இருக்கீங்க என்றதும் அவுங்க சொன்ன பதிலில் தோழி மேல் இதுவரை வச்சுருந்த மதிப்பு ஒரேடியா உச்சாணிக் கொம்பிலே போய் உக்கார்ந்துக்கிச்சு.
" உங்க ட்ரைவர்க்கும் சேர்த்து ஒரு கப் டீ போட்டுருக்கேன். "
ஹைய்யோ!!!!! என்ன ஒரு மனசுப்பா!!! மலரை விட மென்மையான மலர்வனம். தாயே...ரொம்ப நல்லா இருக்கணும் என்றுபெருமாளை மனமார வேண்டிக்கிட்டேன். யாருன்னு சொல்லணுமா? நம்ம 'தலபாலபாரதியின் வீட்டு மஹா'லக்ஷ்மி'தான்.
மாலை ஏழுமணிக்கு நம்ம ஹோப் இயக்குனர் நம்மை சந்திப்பதாக ஏற்பாடு. சரியான நேரத்தில் சந்திப்பு நம் அறையிலேயே நடந்தது. ஹோமில் எல்லோரும் நலமே!!!!
நடுவில்: Hope இயக்குனர்
இருக்கும் நாட்கள் கொஞ்சம் என்றதால் காலில் சக்கரம் கட்டிக்கிட்டுத்தான் பயணம் முழுசுமே ஓடவேண்டியதா போச்சு:-)
தொடரும்...........:-)
18 comments:
//உங்களிஷ்டப்படி, கிடப்பவனை சேவித்துக் கொண்டேஇருக்கலாம். ஒரு தள்ளுமுள்ளோ ஒரு ஜருகோ .....ஊஹூம்!//
ஆனந்தமான நிம்மதி கிடைப்பது உறுதி அனந்தபத்மநாபன் கோவில் சென்று வந்தால்.
அதற்கு பிரத்யேக நன்றி உங்களுக்கு சொல்லியே ஆகணும் துளசி . உங்கள் பதிவு படித்துதான் நான் அங்கு முதன் முதலில் சென்றேன் . இப்போ நானும் அவனோட விசிறி !!!இன்னொரு முறை பழைய பதிவைபடித்து ஆனந்தித்தேன் !!.
காசி பற்றி படிக்க ஆவலோடு waiting .
// கொசுவத்தியை ஏத்திருவாங்க:- // இனிய நினைவுகள் சுகம் தானே - அவர்களுக்கு ...! ஹிஹி... சரிகைக் கயிறாலான முகம் அருமை...
குழந்தைச் செல்லம் அழகு... நாங்களும் கூடவே ஓடி வருகிறோம் அம்மா...
வணக்கம்
தங்களின் பயண அனுபவப்பகிர்வு நனறாக உள்ளது.... படங்களும் அழகு. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்
அப்படியே உங்கள் கண்கள் வழியே எல்லாவற்றையும் அனுபவிக்கிறேன் துளசி. இனிதே பயணம் தொடர வாழ்த்துகள். மலர்வனத்தின் பரிசு வெகு அருமை. கனியும் கோபாலும் அருமை. பிள்ளை முகத்தில் என்ன சிரிப்பு.
குட்டிப்பாப்பா ரொம்ப அழகு..
கண்ணால் கேள்வி கேட்கும் குழந்தை மிக அழகு. சின்ன பையனிடம் விளையாடி களிக்கும் கோபால் சார் படம், சரிகை நூலில் செய்த நவராத்திரி நாயகி எல்லாம் அழகு.
யானை பொம்மையும் அழகு.
பயண அனுபவம் அருமை.
நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்.....
படங்கள் அனைத்தும் அருமை.....
வாங்க சசி கலா.
அடுத்த முறை அடையார் போகும்போது பதுமனை நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்க. அவன் புரிஞ்சுப்பான்.
காசிப்பயணம் ஆரம்பிச்சுருச்சு. ஷார்ட் கட்டா இருக்கட்டுமேன்னு காஞ்சிபுரம் வழியாப்போறோம்:-)
வாங்க தனபாலன்.
தங்களன்புக்கு நன்றி.
வாங்க ரூபன்.
வணக்கம்.
பயணங்கள் விருப்பம் என்றால் நம்ம துளசிதளத்தில் உள்நாடு, வெளிநாடுன்னு நிறையவே இருக்கு.
நேரம் இருக்கும்போது பாருங்க.
வாங்க வல்லி.
அன்பு ஊற்றெடுக்கும் அருமையான பின்னூட்டத்துக்கு நன்றீஸ்ப்பா.
வாங்க சாந்தி.
குட்டிப்பாப்பா செல்லம் போல இருந்தாள். புது முகம் கண்டு அழவே இல்லைப்பா!
வாங்க கோமதி அரசு.
ஒன்னு விடாமப் பாராட்டி இருக்கும் உங்க மனசுக்கு என் மனம் சொல்லும் பதில் நன்றியோ நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
டீச்சர் ஒங்க பதிவுகளைப் படிச்சு ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு வந்து பாத்தா இத்தனை பதிவுகள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒன்னொன்னா படிக்கனும். :)
அடையாறு அனந்தன் நமக்கும் அனந்தனே. ஒவ்வொரு முறை நீங்க அனந்தனைப் பத்திச் சொல்லும் போதெல்லாம் அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்ட புளகம் தான் நினைவுக்கு வருகிறது.
இப்பல்லாம் கூட்டம் எக்கச்சக்கம். முந்தி மாதிரி நிம்மதியா சாமி கும்பிட முடியுறதில்ல. அதுனால போறதும் இல்லை. கோயிலுக்குப் போறதே ரொம்பக் கொறஞ்சு போச்சு. எங்கயாச்சும் போய்ட்டு வரனும். எந்த சாமி கூப்புடுதுன்னு பாப்போம்.
இனிய நட்புகளின் சந்திப்புகள் அருமை.
என் அக்கா அடையாறில் இருந்த போது சேவித்திருக்கிறேன்,அனந்த பத்மநாபனை.
Post a Comment