Friday, February 21, 2014

விளக்கொளி என்னும் தீபப்ரகாசர், தூப்புல், திருதண்கா


இப்ப நாம் தரிசனத்துக்காகப் போய்க் கொண்டிருக்கும் கோவிலும் அந்த நூற்று எட்டில்வருவதுதான். கொஞ்சநாட்களா எப்படியாவது ,முடிஞ்சவரை பாடல்பெற்ற தலங்களா இருக்கும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களை தரிசிக்கணும் என்ற பேராசை வந்திருக்கு. நூற்றியெட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே தவிர, பூலோகத்தில் இருப்பவை நூற்றியாறுதான். மேலோகத்தில் பாக்கி ரெண்டும் இருக்காம்!

எனக்குத் தெரிஞ்சவரை நம்ம பதிவர்களில் இந்த நூற்றியாறையும் தரிசித்தவர் நம்ம  லதானந்த் அவர்கள்தான்.  என்ன ஒரு புண்ணியாத்மா !  அடுத்து நினைவுக்கு வர்றவர் நம்ம கோபி ராமமூர்த்தி. அவரும்  தொன்னூத்தியொன்பது  போய் வந்துட்டார்!  இன்னொருத்தர் சொல்லவே வேணாம். நம்ம ஸ்ரீ. 'இணையநண்பர்களுக்காக' ன்னு பதிவு வச்சுருக்கார்.  கோவில்களின் படங்களைப் போடுவதில் இவரை அடிச்சுக்கவே முடியாது! அருமையான தெளிவான படங்கள். அடடா....நாம் இன்னும் போகலையே என்ற குறை தீர்க்கும் வகை.  நாம் போய் வந்த கோவில்களா இருந்தால்.... அடடா!  இந்த இடத்தைப் பார்க்க விட்டுப் போச்சேன்னு லேசாப் புலம்ப வைப்பவர்:-)

நாங்க  முக்கித்தக்கி  இதுவரை  ஒரு நாப்பத்தியஞ்சு ஸேவிச்சிருக்கோம்.  இன்னும் அறுபத்தியொன்னு இருக்கே! இந்தியப்பயணம் வரும்போது  நாலைஞ்சு கிடைச்சால்  போதும் என்ற நினைப்புதான்.  கிடைக்கும் அதிகப்பட்சமான  மூணு வாரத்தில்  இவ்ளோதான் முடியும்.

திவ்யதேசங்களை ஒருமுறை  நாடுவாரியாப் பிரிச்சுப்போட்டுருந்த  பட்டியலைப் பார்த்தபோது, தொண்டை நாட்டுலே அதுவும் காஞ்சிபுரத்துலேயே பதினைஞ்சு  திவ்ய தேசங்கள் இருக்குன்னு தெரிஞ்சது.  இதுலே 14 தேசங்கள் ஏகதேசம் மூணுகிமீ சுத்தளவுக்குள்ளேயே! ஒன்னே ஒன்னுதான்  நகரிலிருந்து அஞ்சு கிமீ தள்ளி.சொன்னவண்ணம் செய்தவர் கோவிலில் இருந்து  ஜஸ்ட்  ஒரு கிலோமீட்டர் தூரம்தான் தீபப்பிரகாஸர் கோவிலுக்கு. முதலில் பார்த்த அஷ்டபுயங்கரருக்கு ரொம்பக்கிட்டே!  வெறும் அரைக் கிலோ மீட்டர். சரியான விவரம்  பார்த்துக்காம  இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா  டி.கே. நம்பித் தெருவை பலமுறை கடந்தோம்.

கோவில் உள்ள தலம் திருத்தண்கா.  நல்ல குளிர்ந்த இடம் என்று பொருள்.  தூப்புல்  என்றும் ஒரு பெயரிருக்கு. யாகம் செய்யத் தேவையான  தூயபுல் அதாங்க தர்ப்பைப்புல்  இங்கே ஏராளமாக் கிடைச்சுக்கிட்டு இருந்த  காலமும் இப்பப் போயிந்தே:(

போனபதிவில் சரஸ்வதியின் அட்டகாசங்கள் பார்த்தோமே.... அதன் தொடர்ச்சிதான் இங்கே. ப்ரம்மாவின் யாகத்தை நடத்த விடாமல் சூரிய சந்திரர்களை அசுரர்கள் உதவியோடு கிட்நாப் செஞ்சாங்க  சரஸ்வதி.  எங்கும் இருளானதும் மஹாவிஷ்ணுவிடம் காப்பாற்றச் சொல்லி ப்ரம்மா வேண்ட, அவரே ஒளிபொருந்திய மேனியுடன் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அப்படி ஒருவெளிச்சம், கண்ணைக்கூசுதுன்னு  கொஞ்சம் காண்ட்ராஸ்ட் ஆக இருக்கலாமேன்னு  மஹாலஷ்மி தாயார் ,  பராசக்தியின் அம்சமாகப்  பச்சை வண்ண மேனியுடன்  இங்கே மரகதவல்லி என்னும் பெயரோடு  இருக்காங்க.

இன்னொரு வர்ஷன்  கிடைச்சது. கோபத்திலிருக்கும் சரஸ்வதி,  மாயநலன் என்ற  அரக்கனை ஒரு நெருப்புக்கோளமாக்கி யாகசாலையை  அழிக்க அனுப்பும்போது,  பெருமாள் அந்த  தீக்கோளத்தைக் கையில் பிடித்து  சாந்தமாக்கி, அதையே   விளக்காகக் கையில் ஏந்தி நின்றார். விளக்கொளி என்ற பெயருக்கு  இதுவே பொருத்தமாத்தான் இருக்கு. நின்ற திருக்கோலம்.  பின்னே.... விளக்கைக் கையில் ஏந்திக்கிட்டுப் படுக்கவா முடியும்:-)

திருத்தண்கா என்ற பெயருக்கு ஏத்தபடி நல்ல மரங்கள் அடர்ந்த பிரகாரங்கள். கோவில் நந்தவனத்தில் வாழையும்  மற்ற பூச்செடிகளும் இருக்கு. பசுமடத்தில் நல்ல ஆரோக்கியமான பசுக்களும் கன்றுகளும். உள்ளூர் பக்தர்கள்  கணவரும் மனைவியுமா கோவிலை வலம்வந்துட்டு, கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை மாடுகளுக்கு ஊட்டிக்கிட்டு இருந்தாங்க.


மரகதவல்லித் தாயார் சந்நிதி.

மூலவர் சந்நிதி. இருட்டா இருக்கு:(

மார்கழி மாசம் புண்ணிய மாசம், மாதங்களில் நான்  மார்கழின்னு  பெருமாள் சொல்லிக்கிட்டு இருந்தாலும்.... மார்கழியில்  பெருமாள் கோவிலுக்குப் போகக்கூடாதுன்ற எண்ணம் எனக்கு இப்போ வந்துக்கிட்டு இருக்கு. அவர் பாட்டுக்கு தைல எண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத் திரை மறைவில் இருக்கார்.  ஏறக்கொறைய முக்கால்வாசி கோவில்களில் உற்சவர் தரிசனம்தான். சரி, நாம்தான் பார்க்கலை அவர் நம்மைப் பார்த்திருப்பார்தானேன்னு  நம்மை ஆற்றுப்படுத்திக்கத்தான் வேணும்.

ஒரு வேடிக்கை பாருங்களேன்......   வருசத்துலே பதினோரு மாசம் இருட்டுலே  இருக்கும் ஆண்டாளுக்கு  மார்கழி முழுசும்  உபசாரம் அமர்க்களமுன்னா,  பதினோரு மாசம் பளிச்ன்னு  தரிசனம் கொடுக்கும் பெருமாளுக்கு  மார்கழி ஆனால் எண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத் திரை போட்டுக்கணுமாம். ஒன்றிருக்க ஒன்றில்லை:(

கோவில் குளம், சரஸ்வதி தீர்த்தம். சொட்டுத்தண்ணி இல்லை:( கோபத்தில் ஓடி ஒளிஞ்சது உண்மைதான் போல!

கொடிமரம் எந்த கவசமும் இல்லாமல் மரமாகவே இருக்கே!

 கோவில் திறந்திருக்கும் நேரம் ரொம்பவே கொஞ்சமா இருக்கு.  காலை ஏழரை முதல் பத்து, மாலை ஐந்து  முதல் ஏழு என்று  ஒருநாளைக்கு  நாலரைமணி நேரம் மட்டுமே!

முழுக் கோவிலையும் புனருத்தாரணம்  செய்ய உதவி செஞ்சவர்கள் பற்றிய (நவீனகால)கல்வெட்டு ஒன்னு இருக்கு.

ஸ்ரீ உத்தர அஹோபில மடாதிபதி , ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி பால முகுந்தாச்சார்யா அவர்களின் கட்டளைப்படி ஜோத்பூர்   ஸேட் மக்னிராம் ராம்குமார் பங்காட் ஆஃப் டிட்வானா,விக்ரம ஆண்டு!


வேதாந்த தேசிகர்  அவதாரத் தலம் (பிறந்த ஊரும் ) இது என்பது இன்னுமொரு விசேஷம்.

தொடரும்...........:-)19 comments:

said...

வணக்கம்

பயண அனுபவம் பற்றிய பதிவு அருமையாக உள்ளது.. அறிய முடியாத சில இடங்களை அறியக்கிடைத்துள்ளது படங்கள் அழகு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

அருமையான படங்கள் மூலம் நாங்களும் கோயிலை வலம் வந்தோம் அம்மா... நன்றி...

said...

தூப்புல் தேசிகர் என்றே பெயர் அவருக்கு. தூப்புலில் புஇறந்து கதா காலட்சேபம் செய்தவர்கள் நிறைய. மண்ணின் பெருமை துளசி. கோவில் படங்கள் சூப்பர். நடுவில் மாமரம் வேற.

said...

திவ்யதர்சனம் பெற்றோம்.

தொடரமுடியாமல் விட்டதை தொடர்வேன்.

நன்றி.

said...

வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

said...

விளக்கொளிப் பெருமாள்... அடடா! என்ன அழகான பெயர். இருள் அடைந்த வாழ்வில் ஒளி மலர விளக்கொளியாய் வந்த பெருமாள்!

அப்போ சரஸ்வதிதான் வில்லியா? படையப்பா ரம்யா கிருஷ்ணன், ராஜசுலோச்சனா, சி.கே.சரஸ்வதி, விஜயலலிதா, வரலட்சுமி ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்களே. பாவம் கலைமகள்.

said...

படித்தவுடனேயே கோவிலுக்கு நேரில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டு விட்டது. அருமையான பதிவு மேடம்

said...

திவ்ய தேசங்கள் பட்டியல் உபயோகமான ஒன்று. இணைய நண்பர்களுக்காக எழுதும் ஸ்ரீ அவர்களின் படங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கோயில் தரிசனங்களில் உங்கள் பதிவுகளும் பாராட்டத் தக்கவை.

said...

திவ்ய தேசங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் எண்ணம் எனக்குள்ளும் அவ்வப்போது வந்து போகும்....

திருச்சி அருகிலேயே பல தலங்கள் உண்டு. சில மட்டுமே சென்றிருக்கிறேன்.....

நல்ல படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து தரும் உங்களுக்குப் பாராட்டுகள்.....

said...

நண்பர்களே,

முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

கண் சிகிச்சை நடந்துருக்கு. கணினியில் அதிக நேரமிருக்க வேண்டாமுன்னு எச்சரிக்கை வந்துள்ளது:-)

said...

வாங்க ரூபன்.

வணக்கம்.

சிலசமயம் ரொம்ப அருகில் இருக்கும் கோவிலைப்பற்றிக்கூடத் தெரியாமல் போயிருது:(

காஞ்சிபுரத்துக்கு இதுவரை பலமுறை போயிருந்தாலும் விளக்கொளியை தரிசித்தது இப்போதான்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு என் நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

இதுநாள்வரைகண்ணில் படலையே இந்தக்கோவில்கள் என்று மனசுக்குள் சின்ன வருத்தம் இருக்குப்பா:(

said...

வாங்க மாதேவி.

இணையத்தில் காணாமப்போக சான்ஸே இல்லை. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

said...

தி த,

தகவலுக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜிரா.

நானும் அந்தப்பெயரை ரசித்தேன்!

இங்கே ரொம்பக்கிட்டக்க இருக்கும் சில கோவில்களில் சரஸ்வதி ப்ரம்மா சம்பந்தம், கேட்கவே வியப்பா இருக்கு!

எப்பப்பார்த்தாலும் வீணை என்ன வேண்டிக்கிடக்குன்னு இப்ப வீண்சண்டை வில்லியாக மாறிட்டாங்க வாணி:-)

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

வணக்கம். முதல் வரவு போல இருக்கே! நலமா?

கோவில் சுற்றப்பிடிக்கும் என்றால் நம்ம தளத்தில் நிறைய இருக்கு.

நேரம் கிடைக்கும்போது பாருங்களேன்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

விபத்தில் இருந்து மீண்டமைக்கு எங்கள் வாழ்த்து(க்)கள்.

இப்ப கை, கால் தேவலையா?

நான் ரசித்துப் பார்ப்பவை நம்ம ஸ்ரீயின் படங்களே!

நல்ல துல்லியமான பார்வை!
அவருக்கு துளசிதளத்தின் அன்பும் பாராட்டுகளும் உரியதே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் திவ்யதேசபித்து இப்போ அதிகமாகி இருக்கு:-)

திருச்சியைச் சுத்தி ஏகப்பட்டது இருக்கே!

அதில் ஒன்னுரெண்டுதான் தரிசனம் ஆச்சு.

உண்மையைச் சொன்னால்.......... நம்ம இந்தியாவிலேயே பார்க்க வேண்டியது ஏராளம். இந்தப் பிறவியில் முடியாது என்பதால் புனரபி ஜனனம் ஆறதோ என்னமோ!