Monday, February 17, 2014

நம்ம யானையைக் காப்பாத்தின எட்டுக்கைகாரன் !


 ஒருநாள் பயணமாக் காஞ்சீபுரத்துக்குப் பலமுறை போய் வந்துருக்கேன். பொதுவா எப்போ போனாலும் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில்பார்த்து முடிக்கும்போதே உச்சிகால பூஜைமுடிஞ்சு கோவில் அடைக்கும் நேரம் வந்துரும்.  இனி கோவில்கள் எல்லாம் சாயங்காலம் நாலு மணிக்குமேல்தான். அதுவரைநேரம் போக்க? இருக்கவே இருக்குப்புடவைக்கடைகள். இத்தனை தூரம் பட்டுப்புடவை நகரத்துக்குள் வந்துட்டுப் புடவை வாங்காமப்போனால் சாமிக் குத்தமாகிறாதா?

நாலுமணிக்கு நம்ம வரதனைக் கும்பிட்டுக்கிட்டு, பல்லிகளையும் தொட்டுப் பார்த்துட்டு வெளிவரும்போதே நல்லாவே இருட்ட ஆரம்பிச்சுரும்.  காலிலே வெந்நீரைக் கொட்டின கதைதான் அதுக்குப்பிறகு. சட்னு கிளம்பினால்தான்   வீட்டுக்கு ராத்திரி ஒன்பதுக்குள்போய்ச் சேரலாம்.  சென்னைக்குள் நுழைஞ்சவுடன் இருக்கும் போக்குவரத்தில் மாட்டிக்கிட்டு ஊர்ந்துவர எப்போதும் பத்துமணி ஆகிரும் என்பது இன்னொரு சோகம்.

முந்தி ஒரு காலத்தில் எல்லாம் சாப்பாடு வேற கட்டிக்கிட்டுத்தான் போவோம். பயணத்தில் ரெஸ்ட் ரூம் பிரச்சனைன்னு ஒரு சமயம்  ஒரு ஹொட்டேலில் ரூம்  கூட  அரைநாளுக்கு  எடுக்கும்படியாச்சு. நல்லவேளையா இப்போ சரவணபவன் வந்தாச்சு.   ஓரளவு சமாளிக்கமுடியுது!

இப்போ ரோடு கொஞ்சம் நல்லா இருப்பதால் மூணு மணிநேரம் என்பது ரெண்டு மணியாக் குறைஞ்சுருக்கு.  போரூர் ஜங்ஷன் வழியாப்போறோம். ஒரு இடத்தில் டோல் கட்டணும். அதைக் கடந்து ஒரு 15 நிமிசமானதும்........  கொஞ்ச தொலைவில் ஏதோ கோவில் கட்டுமானப்பணி  நடப்பது தெரிஞ்சது.  வட இந்திய ஸ்டைலில் கோபுரம்.  எனெக்கென்னவோ  ....  குஜராத்  சோம்நாத் கோவில் நினைவு மனசில் வந்து போச்சு.

நமக்கெல்லாம் அலைச்சல் வேணாமுன்னு   வடக்கர்கள்  அவுங்க ஸ்டைல் கோவில்களை இங்கே கொண்டுவந்துக்கிட்டு இருக்காங்க சிலபல வருசங்களாக!  அதுலே இதுவும் ஒன்னா  இருக்குமுன்னு நினைக்கும்போதே  இன்னும் கொஞ்சதூரத்தில்  பெரிய நந்தியும்  எதிரில்  பெரிய தக்ஷிணாமூர்த்தி  சிலையுமா  இன்னுமொரு  கோவில்  உருவாகிக்கிட்டு  இருக்கு!  பெரிய பெரிய சுதைச்சிற்பங்கள் வைப்பதுகூட  வடக்கத்து ஸ்டைல்தான், இல்லையோ?


அங்கிருந்து ஒரு இருவது நிமிசப்பயணத்தில்  ஊருக்குள் நுழைன்சோம். நகரேஷூ காஞ்சி என்ற புகழ்பெற்ற கோவில் நகரம்! கண்முன்னே தெரிஞ்சது சங்கரமடத்தின்  மாடக்கோபுரம். இடதுபக்கச் சாலையில் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் இன்னொரு பெரிய கோபுரம். ஸ்ரீ கச்சபேஸ்வரர்!

காந்தி ரோடில் போறோம்.  இந்தமுறை  ஒரு ரெண்டு நாளாவது தங்கணும் என்னும் ப்ளான், நம்ம ராஜேஷ் வைத்யாவால்  ஒருநாளாகக் குறைஞ்சிருந்தது. அதில்  எனக்கொண்ணும் குறையில்லை:-)ஏற்கெனவே அங்கே ஜி ஆர் டி ஹொட்டேல் இருக்குன்னு  வலையில் பார்த்து  அறை புக் பண்ணிக்கலாமுன்னு ஃபோன் செஞ்சால்........  நாம் சொல்லும் தேதிக்கு அறை காலி  இல்லைன்னு சொன்னாங்க. வேற நல்ல இடம் ஒன்னு சொல்லுங்கன்னு அவுங்ககிட்டே கேட்டதுக்கு  எம் எம் ஹொட்டேல் நல்ல வசதியோடு இருக்குன்னாங்க.  தொட்டடுத்து சரவணபவன் இருக்காம்.

நேரே அங்கேதான்   அந்த எம் எம்முக்குப் போனோம்.   சென்னையிலிருந்து  ஃபோன் செஞ்சு  அறை இருக்கான்னா.... இருக்குன்னாங்க.  நாம் போன சமயம்  (காலை  பத்து மணிதான்)  அறைகளைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்கோமுன்னு ரிஸப்ஷனில் சொன்னாங்க. அறையைப் பார்க்கலாமான்னதுக்கு  மாடிக்குக் கூட்டிப்போய் காமிச்சாங்க. ஐயோ:(  ஒரே மக்கல் நாத்தம்! கோபாலின்  முகம் போனபோக்கைப் பார்க்கணுமே:-)  படி ஏறி வரும் வழி இருட்டா இருக்கு.

ஒரே ஆறுதல்.மாடிப்படி ஆரம்பிக்குமிடத்தில்  வலது பக்கம் ரெண்டு எட்டு வச்சு அங்கிருக்கும் கதவைத் திறந்தால் சரவணபவன். அங்கேயும் காலை வைக்க முடியாத அளவு கூட்டம் நெரியுது! ஒரு காஃபி குடிக்கலாமான்னு கேட்ட கோபாலை முறைச்சேன்.

அப்பதான் வந்து நின்ன ஒரு தனியார் பஸ்ஸிலிருந்து பச்சை  உடை அணிஞ்ச கூட்டம் திமுதிமுன்னு  உள்ளே போறாங்க. விசாரிச்சதும்  அவுங்க முருகபக்தர்கள் என்றார்கள். சாமிகளுக்கெல்லாம் இப்போ கலர்கோட் (code)வந்துருச்சு போல.  சிகப்பு  மேல்மருவத்தூர், கருப்பு ஐயப்பன், பச்சை முருகன், இன்னும் பெருமாளுக்கு என்னன்னு  தெரியலை. நான் ஒரு வெளிறிய  காவி நிறம் உடுத்தி இருந்ததால் அது பெருமாள்கலர்ன்னு வச்சுக்க வேண்டியதுதான்.

அந்த ஜி ஆர் டி யில் இன்னொரு முறை கேட்டுப் பார்க்கலாமுன்னா இவர்  ஃபோன் நம்பரை எழுதி வச்சுக்கலைன்றார். இங்கேதானே இருக்கு நேரில்போய்க் கேக்கலாமேன்னு  போனோம். காந்தி ரோடு.  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்குக் கட்டிடம்.  நேரில் போனதும் இடம் கிடைச்சது. இங்கேயும்  ஜஸ்ட் ஒரு 100 மீட்டர் தள்ளி சரவணபவன்   ஒன்னு இருக்கு.  போனமுறை நாம் சாப்பிடப் போனது இங்கேதான். இதுவும் மெயின் ரோடிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளிதான் இருக்குன்னாலும், ஜிஆர் டி கட்டிடத்துக்கு ரொம்பப்பக்கம்.  அங்கே பின்வாசல் இருந்தால் அதைத் திறந்து இங்கே  கால் வைக்கலாம்.

அறை வசதியாகத்தான் இருக்கு.  விலைமதிப்புள்ள பொருட்களை வைக்க எலெக்ட்ரானிக் லாக்கர் வசதி இருக்குதான். அதுக்காக  அதை நம்ம தலைமாட்டுலே வச்சுக்கிட்டால் நல்லாவா இருக்கும்?

சின்னப்  பெட்டியைப் போட்டுட்டு கோவில் தரிசனங்களுக்குக் கிளம்பினோம்.  வழக்கம்போல் நம்ம சீனுவாசன்தான் ட்ரைவர். வழக்கமாகப்போகும் கோவில்களுக்கு இந்த முறை பின்னுரிமை. பார்க்காத கோவில்களுக்குத்தான் இந்தமுறை போறோம். எல்லாம் 108  வரும் திவ்ய தேசங்கள்..  கடைசியில் நேரம் இருந்தால்  மற்றவர்களைப்  பார்க்கலாம் என்றேன்.

ஊர் நிறையக் கோவில்களே என்றாலும்  நான் சொன்ன கோவில்கள் பெயரைக்கேட்டதும் 'ஙே' ன்னு முழிச்சார்  நம்ம சீனு.  வாயிலே இருக்கு வழின்னேன்:-)

ஏற்கெனவே கொஞ்சம் ஹோம் ஒர்க் செஞ்சு எடுத்துவச்ச லிஸ்ட் கையில்.  தொண்டைமண்டலத் திவ்யதேசங்கள் . பட்டியலில் முதலில் இருக்கார் வரதர்.  நாளைக்குப்பார்க்கலாம். இப்போ அஷ்டபுஜப் பெருமாள்.  ஹட்ஸன் பேட்டை தேரடிக்கு சமீபத்தில் கோவில் இருக்கு. நம்ம வரதருக்கு மேற்குத் திசையில்  ஜஸ்ட் ஒரு கிமீ தூரமே!)

ரொம்பவே பழைய கோவில்தான். கேட்டால் ரெண்டாயிரம் என்று  சொல்கிறார்கள்.  ( இது ஒரு ஆகி வந்த எண்ணிக்கையோன்னு நினைப்பேன்.  பழைய கோவில்களாத் தோற்றமளிக்கும் எந்தக் கோவிலைப் பற்றிக் கேட்டாலும் அர்ச்சகர்களுக்கும் பட்டர்களுக்கும்  டக் னு வாய்ச்சொல்லா வருவது  இந்தரெண்டாயிரமே! ( சரியானபடி  பராமரிப்பு செய்யாத சமீபத்திய கோவில்களும் பார்க்கப் பழசாத்தான்  இருக்குன்னாலும் 'அந்தப்பழசு' வேற கேட்டோ!

கோபுரவாசலில் நிக்கறோம்.நமக்கு வலப்பக்கம்  கோவில் குளம். கஜேந்த்ரப் புஷ்கரிணி.  ஒருகாலத்தில் பிரமாண்டமான குளமா இருந்துருக்கணும்.   தாமரைப் பூக்கும் தடாகம். கஜேந்த்ரன் என்ற  யானை தினமும் தாமரைப்பூ போட்டுப் பெருமாளைக் கும்பிட்ட தலம். ஒர்  நாள் குளத்தில் இருந்த முதலை, யானையின் காலைக் கவ்வி இழுக்க, பலகாலம் போராடிப் பார்த்த யானை கடைசி நிமிசத்தில் 'ஆதிமூலமே'ன்னு குரல் கொடுக்கச் சட்னு  கருடவாகனத்தில்  பறந்துவந்து  முதலையைக் கொன்னு, கஜேந்திரனைக் காப்பாற்றிய இடம் இது(வே)தான்.

இப்பப் படிக்கட்டுகள் எல்லாம் அமைச்சுக் குளம் சின்னதாக் கிடக்கு.  யானையால் இந்தப் படிகளில் இறங்க முடியுமுன்னு எனக்குத் தோணலை. அப்படியே இறங்கினாலும்  வெறும் பாண்டி விளையாடத்தான் முடியும்.  புல்லும் மணலுமான வெறுந்தரை. தண்ணீர் மிஸ்ஸிங்:(

கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனால் இடது கைப்பக்கம் பெரிய  மண்டபம். இங்கேதான் விசேஷ நாட்களில் வந்து ஸேவை சாதிப்பார் போல.  மண்டபத்தின் கோடியில்  மணிமண்டபம் ஒன்னும் இருக்கே.

 கோபுரவாசலுக்கு நேரா  அலங்காரம் அதிகமில்லாத வைகுண்டவாசல்!


கோவில் பிரகாரத்தில் வலம்வந்தால்  பெரிய முற்றத்தில் அங்கங்கே சந்நிதிகள்.  முதலில் கண்ணில் படுவது கொடிமரம்.  அருகே பெரிய திருவடிக்கான குட்டிச் சந்நிதி.  அவருக்கு எதிரே மூலவர்.  இவருக்கு ஆதி கேசவன் என்றே பெயர்.  மேற்கு  பார்த்தபடி   நின்ற கோலம்.  சந்நிதிக்குள் நுழைஞ்சு  அவர்முன் நிற்கிறோம். எட்டுக்கைகள் கொண்ட அஷ்டபுஜம்.  சங்கு சக்கரம், வில் அம்பு, கத்தி கேடயம்,  Gகதை இப்படி ஏழு கைகளில் ஆயுதம் ஏந்தியவர்  எட்டாவது கையில் மட்டும்  மலர் ஏந்தி இருக்கார்.  அதுதான்  நம்ம கஜா கொடுத்த தாமரையா இருக்கணும்.

பெருமாளின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் எட்டுக் கைகளோடு காட்சி தருவது  இங்கே மட்டும்தான் என்பது தனிச்சிறப்பு. தாயாரின் பெயர் அலர்மேல் மங்கை.  நம்ம  அம்மு!  இவருக்கும் தனிப்பாடல் ஒன்று பாடி மங்களாசாசனம் செஞ்சுருக்கார் ஆழ்வார். இதுவும் சிறப்பே! கோவில் அறிவிப்பில்  புஷ்பவல்லித்தாயார்  னு போட்டுருக்காங்க.  தமிழ்ப்படுத்தினால்  சரியாத்தான் வருது, இல்லையோ! அலர்மேல்மங்கை!





வழக்கம்போல் இருட்டில்  ஆண்டாள்:(


கோவில் திறந்திருக்கும் நேரங்கள் காலை 7 முதல்  பகல் 12. மாலை 5 முதல் இரவு எட்டு வரை.   தினமும்  இரவு எட்டுக்கு ஏகாந்த சேவையும்  அதன்பின் பிரசாத விநியோகமும் இருப்பதால் கோவில் அடைக்க  ஒன்பது மணியாகிருமுன்னு நினைக்கிறேன்.

நித்யப்படி நிகழ்ச்சிகளையும் பிரசாத வகைகளையும் எழுதிப் போட்டுருக்காங்க. காலையில் எட்டே முக்காலுக்குச் சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம்.

மாலை அஞ்சு மணிக்கு ஊஞ்சல் ஸேவை. பஞ்ச பருவ புறப்பாடு சில நாட்களில் .(மாசப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி, ஹஸ்த நட்சத்திரம் நாட்களில் பெருமாளின் வீதி உலா உண்டு) அன்று மட்டும் புளியோதரை!  மற்றநாட்களில்  மாலை,  திருவிளக்கு மாவு, சுண்டல்.
இரவு  நடை அடைக்குமுன் தச்சு மம்மு.

சிம்பிள் அண்ட் சூப்பர் மெனு! இதைப்போன்ற முக்கிய தகவல்களை மற்ற கோவில்களிலும் எழுதி வைக்கப்டாதோ?  இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் என்ற  செந்தில் வசனம் போல Dடாடா பேஸ் வச்சுக்க எல்லோர்க்கும் பயனாகுமே!

வைகுண்ட வாசப்படியில் அமர்ந்திருந்த பெரியவரிடம், பக்கத்தில் இருக்கும் பெருமாள்கோவில் வேறென்னன்னு கேட்டப்ப  அவர் சொன்னது நம்ம லிஸ்ட்டில் அடுத்து இருப்பதேதான். வழியைக் கேட்டுக்கிட்டு  கல்கி ஸ்வரூபி ஸ்ரீ அஷ்டபுயங்கரத்தானை ,மனதில் நிறுத்தி, அங்கிருந்து கிளம்பினோம்.


தொடரும்.......:-)






17 comments:

said...

படங்கள் மூலம் நாங்களும் கோயிலை சுற்றி விட்டோம்... நன்றி அம்மா...

said...

வணக்கம்

கோயிலுக்கு சென்ற ஒரு உணர்வுதான் படங்கள் மிக அழகு...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

பாதுகா சஹச்ரம் சொல்லிக்கொண்டே உங்களுடன் பெருமாளை தரிசித்தேன்.

சுப்பு தாத்தா.
i have created a link from your earlier blog on RAJESH VAIDHYA
HERE;
www.wallposterwallposter.blogspot.in
anticipating your kind permission.

said...

கோவில் அழகு. பிரசாதம். அழகு. ஆண்டாள் ஏன் எல்லாக் கோவில்களுக்கும் வருகிறாள். மதிப்பிருக்கும் இடத்தில் இருந்தால் போதாதோ. இருட்டடிப்புச் செய்து அவளை அவம்திப்பதேன்.ஹ்ம்ம்.

said...

ஸ்வாரஸ்யம். இந்தக்கோவில் காஞ்சியில்தான் இருக்கு என்பது எனக்கு புது தகவல்.

said...

வாங்க DD.

கூடவே வர்றதுக்கு நன்றீஸ்.

said...

வாங்க ரூபன்.

ரசனைக்கு நன்றி.
மீண்டும் வருக.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

எங்களோடு வர்றீங்களா!!!ஆஹா..... நாங்க கொடுத்து வச்சுருக்கோம் .

வால் போஸ்ட்டருக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

11 மாசம் கண்டுக்காம இருந்துட்டு மார்கழி வந்ததும் தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடுவதைப் பார்த்தீங்கதானே?

அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஒரு ஓரமா இருட்டில் நிக்கவச்சாலும் அவனைப் பார்த்துக்கிட்டு அந்த ஏரியாவில் இருந்தால் போதுமாம்!

ஹூம்... இப்படி(யும்) ஒருத்தி !!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

விஷ்ணு காஞ்சின்னு சொல்லும் சின்னக் காஞ்சீபுரத்தில் ஒரு சுத்துலேயே பல கோவில்கள் (எல்லாம் 108 இல் சேர்த்தி!) காணக்கிடைக்குதேப்பா!!!

said...

அஷ்டபுஜப் பெருமாள் கோயிலை தர்சித்து சுற்றி வந்தோம்.

said...

// யானையால் இந்தப் படிகளில் இறங்க முடியுமுன்னு எனக்குத் தோணலை. அப்படியே இறங்கினாலும் வெறும் பாண்டி விளையாடத்தான் முடியும். //

பெரும்பாலான கோவில் தீர்த்தங்களில் இதே நிலை தான்.... பல இடங்களை இழந்தாயிற்று.....

உங்கள் பகிர்வு மூலம் நானும் இந்த இடத்திற்குச் சென்றேன். நன்றி.

said...

அட்டபுயங்கப் பெருமான். 108க்கும் போய்ப் பாக்கனும்னு நீங்க முந்தி ஒரு பதிவுல விரும்பியிருந்தீங்க. அந்த விருப்பம் ஒவ்வொன்னா நிறைவேறட்டும்.

உங்க புண்ணியத்துல கோயிலப் பாத்தாச்சு :)

said...

வாங்க மாதேவி.

தொடர் வருகைக்கு நன்றீஸ்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பதிவில் வந்தது சரியா இருக்கான்னு பார்க்க ஒரு நடை போய்வரலாமே!

ஒரு நாள் அங்கே தங்கினால் ஏகப்பட்ட கோவில்களைக் கவர் செஞ்சுடலாம், கேட்டோ!

said...

வாங்க ஜிரா.

உங்க வாக்கு பலிக்கட்டும்.

அந்த நூத்தியெட்டிலே கடைசி ரெண்டும் உறுதியாயிருச்சு. மீதம் இருக்கும் நூத்தி ஆறில் இதுவரை நாப்பத்தி ஏழு கிடைச்சிருக்கு.

பாக்கி? எப்போ?

அவனன்றி யாரறிவார்?

said...

எப்போதோ ஒருமுறை இங்கு போனது. இன்று உங்கள் பதிவில் பார்த்தேன். எங்களுக்கும் காஞ்சிபுரம் போய் நான்கு நாட்கள் இருந்து சுற்றிலும் இருக்கும் எல்லா திவ்ய தேசங்களையும் சேவிக்கணும் என்று ஒரு திட்டம் இருக்கிறது. எண்பது சேவித்தாயிற்று. மீதி எப்போது என்று நானும் அவ்வப்போது யோசிப்பேன். அவனன்றி யாரறிவார்?
ரொம்பவும் உண்மை!