Wednesday, August 15, 2012

கிருஷ்ணார்ப்பணம் 2

ஏண்டா க்ரிஷ்ணா, ஒரு பேச்சுக்கு ,   க்ரிஷ்ணா நீ பேகனே ..... பாரோ.......ன்னு சொன்னதை நிஜமுன்னு நம்பிக்கிட்டு இந்த ஓட்டம் ஓடி வரலாமோ? ஆவணி மாசம் க்ருஷ்ணபக்ஷம் அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம் எல்லாம் கூடிவரும் வேளையில் பொறந்தவனுக்கு அப்படி என்ன அவசரமோ?

 சிலசமயம் அப்படித்தானாம். ஆடிமாசம் முடியலை. அதுக்குள்ளே ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி வந்துருக்கு. ஒரு குழுமத்தில் இதைப்பற்றிப் பேசிக்கிட்டு இருந்தப்ப, ஆவணி மாசம் ரெண்டு அமாவாசை வருது. அது மலமாதம்ன்னு சொன்னார் ஒருத்தர். அதனால்தான் ஆடியிலேயே ஆவணிஅவிட்டம். கோகுலாஷ்டமி வந்துருதாம். அடப்பாவமே.... இந்த ஆவணிக்கு புத்தி ஏன் இப்படிப்போச்சு:( சொன்னவர் தொழில்முறை ஜோதிடர் என்பதால்....... நான் வாயைத் திறக்கலை:-)

 இந்த இடும்பிக்கு எல்லாம் சரியா அமையலை. அதனால் செப்டம்பர் எட்டுதான் கொண்டாடப்போறேன்னு முடிவு எடுத்துட்டா. அதான் தனிவழிக்காரியாச்சே! அதுக்காக கோவிலில் கொண்டாட்டம் இருக்கு வான்னு வீடு தேடிவந்த அழைப்பிதழை உதறமுடியுதா?

 இதுதான் இந்தவார வீக் எண்ட் ஈவண்ட் # 2

 விடாமல் ஒரு மழை! நம்மூரில் நிலநடுக்க அழிவுகளை இன்னும் சரியாக்கலை. அதுக்குள்ளே கெட்டகுடியே கெடுமுன்னு மழையும் வெள்ளமும். வீட்டைவிட்டு சாலைகளுக்கு வந்துறாதீங்கன்னு அரசு போக்குவரத்துத்துறை சொல்லுது.

 யோவ்..... க்ரிஷ்ணன் பொறந்தப்ப யமுனையில் வெள்ளமைய்யா. அதான் இப்படி. அதுக்காக நாங்க கூடையிலே வச்சுத் தலையில் சுமந்து காருலே கொண்டு போவோமோன்னு நினைக்காதே!

 நல்ல பொடவையாக் கட்டமுடியலைன்ற கவலையோடு கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். கோலாகலமா இருக்கு. ஆனால்.... கூட்டம் கம்மி. மழை காரணமோ?

 நல்ல க்ரீடங்கள் வச்சு அலங்கரிச்சு இருந்தாங்க. நாலு செட் சாமி சிலைகள் இருக்கு. அதுலே ரெண்டு பக்கக் கடைசியில் இருக்கும் சந்நிதிகளில் இருக்கும் சாமிகளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் கிடையாது.

 அக்‌ஷர்புருஷோத்தம், ஸ்வாமி நாராயண்  என்று அவர்களும், நர நாராயணர்கள் என்று நானும் சொல்லிக்கும் நடுச்சந்நிதி பாய்ஸ், ராதா கிருஷ்ணரா இருக்கும் தம்பதிகள் இந்த நால்வருக்கும்தான் விதவிதமான ஆடை அலங்காரங்கள்.

 சனிக்கிழமைகளில் கோவிலுக்குப்போகும்போது இன்னிக்கு என்ன நிற உடையாக இருக்குமுன்னு நினைச்சுக்கிட்டே போவேன். நான் நினைச்ச நிறம் (கிட்டத்தட்டன்னு வச்சுக்கலாம்) இருந்துச்சுன்னா ஒரு தனி மகிழ்ச்சி.

 இந்த நாலுபேரில் மூணு பாய்ஸ்க்கும் ஒரே மாதிரி ஒரே நிறத்திலும். ராதாம்மாவுக்கு மட்டும் ஏறக்கொறைய அதே நிறத்தில் புடவையுமா இருக்கும். ராதாம்மா சில நட்களில் கையில் ஹேண்ட்பேக் கூட வச்சுருப்பாங்க:-)

 இந்தக்கோவிலில் எங்களுக்குப் பிடிச்சது ஒன்னுன்னா அது டிஸிப்ளின். எல்லாம் சரியான நேரத்துக்கு நடக்கும். பூஜை முடிஞ்சவுடன் வயசு வித்தியாசம் இல்லாம எல்லா ஆண்களும் வேக்குவம் க்ளீனர் வச்சு தரை, சுவர்கள் எல்லாம் சுத்தப்படுத்துவாங்க.

 பெண்கள்தான் லக்ஷ்மண ரேகைக்கு இப்பால் உட்காரணுமே. அந்தக் கடுப்பில் நான் நல்லா சுத்தம் செய்யட்டும். ஆண்களுக்குன்னு முன்மரியாதை கிடைக்குதுல்லேன்னு இருப்பேன்:-)

 இன்னொரு பிடிச்ச விஷயம் ஹாலில் நாற்காலிகள் போட்டு வச்சுருப்பாங்க. அதுலே உக்கார்ந்து சாமி கும்பிடலாம். ஆரத்தியின்போதுகூட எழுந்திரிக்க வேணாம்!!!!

 கொஞ்சநாளா சதுர்மாஸ்ய விரதத்தில் ஆரம்பிச்சு வழக்கமான சந்நிதிகளைத்தவிர சின்னதா ஒரு தாற்காலிக சந்நிதி அலங்கரிச்சு வச்சுருக்காங்க.நல்ல ஸ்டேண்டு போட்டு அதில் ஒரு சின்ன ஊஞ்சல். குட்டியா ஒரு சிலை அதுலே வச்சுருப்பாங்க. ஒரு மணிக்கயிறு ஊஞ்சலோடு இணைஞ்சுருக்கும். நாம் அதை இழுத்து லேசா ஊஞ்சலை ஆட்டலாம்.

 பண்டிகைகள் கொண்டாட்டங்கள் தவிர காலத்துக்கேற்ப, வசிக்கும் நாட்டுக்கு ஏற்ப சில பல அலங்காரங்களும் செய்வதுண்டு.

 ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்குன சமயம் லண்டன் 2012 மஸ்காட் ரெண்டு பக்கமும் வச்சு கலந்துகொள்ளும் நாடுகளின் கொடிகளை வரிசையா வச்சு அலங்கரிச்சு இருந்தாங்க. எல்லாம் இளைஞர்களின் கை வரிசை! அழகா இருந்துச்சு!

 எது செஞ்சாலும் அழகா அம்சமா மனப்பூர்வமா செஞ்சுடறாங்க.போனமாசம் ஒரு ரத யாத்ரா விழாவுக்குப்போனப்ப குதிரைகள் பூட்டுன தேரில் சாமி நம்ம பக்கமெல்லாம் கூட வந்தார். அவருக்குப் பெண்கள் நோ அப்ஜெக்‌ஷன்:-) ரிமோட் கண்ட்ரோலில் ஓடும் கார் பொம்மையை வாங்கி அதன்மேல் தேர் அலங்கரிச்சு ரெண்டு குதிரைகளையும் இணைச்சுட்டாங்க. சும்மாச் சொல்லக்கூடாது. கோவிலுக்கு வரும் இளைஞர்கள் குழு உக்காந்து நல்லாவே யோசிக்குது!


 நாங்கள் கொஞ்சம் லேட்டாத்தான் போனோம். பெரிய திரையில் ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மகராஜ் கண்ணன் பிறந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணெய்த் தாழியைக் கவிழ்த்த கண்ணன் திரையில்! ஹால் முழுசும் பலூன்களைக் கட்டித்தொங்கவிட்டு, நடுவில் சின்னதா ஒரு உறி. அதுலே வெண்ணெய் (சேர்த்த சாக்லெட்ஸ்) வச்சுருந்தாங்க. உறியடி உற்சவம்போல மனிதக்கோபுரங்களின் மேல் குழந்தைகளை ஏற்றி வெண்ணெய் எடுத்து எல்லாருக்கும் பகிர்ந்துதரும் சீன் நல்லாவே ஒர்க்கவுட் ஆச்சு. பலூன்களைஎல்லாம் குத்தி ஒடைச்சதும் மலர்மாரி பொழிஞ்சது:-)))))

வரப்போகும் சுதந்திர தினத்துக்காக எல்லோரும் எழுந்து நின்னு இந்திய தேசிய கீதம் பாடினோம். பெரிய திரையில் இந்தியக்கொடி பறக்க நல்ல துள்ளல் இசையுடன் அருமையாகவே பாடப்பட்டது. அது என்னமோ தெரியலை எப்பவும் அந்த ஜயஹே வரும்போது மனசுக்குள்ளில் ஒரு கசிவு:(

 நடுக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் சின்னக்குழந்தைகள் எல்லோரும் விழாவை முன்னிட்டு அழகா உடுத்திக்கிட்டு வந்துந்தாங்க. இப்பெல்லாம் பசங்க பொறக்கும்போதே ரிமோட் கண்ட்ரோல் எப்படி ஆபரேட் செய்யணுமுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் பொறக்கறாங்கன்னு எனக்கு ஒரு தோணல். மாடர்ன் சமாச்சாரங்கள் எல்லாம் அதுகளுக்கு அத்துபடி. அழகா இருக்குன்னு ஒரு குழந்தையை கெமெராவில் ஃபோகஸ் செஞ்சதும். நின்னு போஸ் கொடுத்துட்டு க்ளிக்கினவுடன் படம் எப்படி வந்துருக்கு கிட்டே வந்து எட்டிப் பார்த்தது ஒரு பிஞ்சு:-))))

ஆஜ்கல் பச்சோ லோக் பஹூத் ஆகே ஹை!! 


 ஆரத்தி முடிஞ்சதும் வழக்கம்போல் விருந்து. வயித்துக்குக் கேடு வராமல் ஒரு சாப்பாடு. பூரி, சாதம், ஆலூபைங்கன் கறி, பச்சைப்பட்டாணி கூட்டு, அப்பளம், ஊறுகாய், இன்றைய இனிப்பு பாதாம் கீர்!

 நண்பர்களை சந்திக்க இப்படிக் கோவில் விசேஷங்கள்தான் உதவுது. இல்லைன்னா இந்தக் குளிர்காலத்தில் ஹைபர்னேட் பண்ணும் ஜீவன்கள் நாங்கள்! (இன்னும் 17 நாட்களில் குளிர்காலம் முடியப்போகுது காலண்டர் கணக்குப்படி)

 கோவில் நிதிக்காக இப்பெல்லாம் கொஞ்சம் பாட்டு சிடிகள் புத்தகங்கள், பூஜைக்காக ஊதுபத்தி போன்ற சில பொருட்கள் விற்பனைகள் முக்கிய (மக்கள் கண்டிப்பா வருவாங்கன்னு தோணும் )நாட்களில் நடக்குது. ஒரு மேசையில் பரத்தி வச்சுருப்பாங்க.

 அங்கே தமிழ்ப்புத்தகங்கள் இருக்குன்னு கோபால் கண்டுக்கிட்டு வந்து சொன்னார். பாய்ஞ்சேன்.

தமிழில் இருந்த ரெண்டு புத்தகங்களையும், நித்யகான் என்று ஆரத்திப்பாட்டுகள் உள்ள ஹிந்தி புத்தகம் ஒன்றும் வாங்கினேன்.

 1: 101 அமுதமொழிகள் என்று ஒரு புத்தகம். மொழியாக்கம் முனைவர் ல.சம்பத் குமார் M.A. M.Phil, Ph.D இணை மொழிபெயர்ப்பு P..பானுமதி M.A.. ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் குஜராத்தியில் சொன்னதை தமிழில் அச்சுப்போட்டுருக்காங்க.

 சாம்பிள்: இறைவனின் சக்தி,

 சிலர் ஆளும் சக்தியையும் சிலர் பணத்தின் சக்தியையும் சிலர் ஆன்மீக சக்தியையும் பெற்றிருக்கலாம்.ஒவ்வொருவரும் தங்களின் சக்தி குறித்தே பேசுகின்றனர்..ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேல் இறைவனின் சக்தி உள்ளது.

 2; சிக்ஷாபத்ரியின் முத்துக்கள். மொழி பெயர்ப்பு மேற்படியாளரே. முனைவர். ல. சம்பத் குமார். அன்பளிப்பு டாக்டர்..நா.மகாலிங்கம் தலைவர் சக்தி குழுமம் கோவை.    ஸ்வாமி நாராயண் சம்ப்ரதாயத்தின் நியமங்களையும், சாதாரண மனிதருக்குள்ள நியதிகளையும் இதில் சொல்லி இருக்காங்க.

 எப்படியோ ஓசைப்படாம தமிழ் நியூஸிவரை வந்துருக்கு!

 எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம்:-))))

28 comments:

said...

விக்ரகங்களின் அழகு அள்ளிக் கொண்டு போகிறது. அலங்காரங்கள் அற்புதம்.

நியூஸிக்கு தமிழாக நீங்கள் இருக்கிறீர்களே:)? உங்களைத் தேடி வந்தவையாக அந்தப் புத்தகங்கள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நல்ல ஆழ்ந்த பக்தியோடு பொறுமையா அலங்கரிக்கறாங்க. சாந்தமான முகங்கள் இன்னும் அழகா ஜொலிக்குது இல்லே!

வருகைக்கு நன்றிப்பா.

said...

பாட்டி சுத்த வெஜ் பாட்டி.......கங்காரு கறி,ஈமு கறி எல்லாம் உண்டா......அதைபற்றி ஒரு போஸ்ட்...

said...

சிறப்பான படங்களுடம் பதிவு மிக மிகச் சிறப்பு
வீட்டில் அனைவரும் கண்டு மகிழ்ந்தோம்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

said...

சந்தனக்காப்பு, பூ அலங்காரம்ன்னு நம்ம தென்னிந்தியச் சாமிகளின் அலங்காரம் ஓர் அழகுன்னா, இவங்க அலங்காரம் இன்னொரு வகை அழகு. அப்படியே ஜீவனோட நம்ம முன்னாடி எழுந்தருளியிருக்கறது மாதிரியே தோணும்.

said...

கோயில்னா எப்படி இருக்கனும்னு என் மனசுக்குள்ள ஒரு விருப்பம் இருக்கோ அதன்படி இருக்கு இந்தக் கோயில். வெள்ளைச் சிலைகளையும் விலையுயர்ந்த உடைகளையும் சொல்லலை. செயல்பாடுகளைச் சொல்றேன். பெண்களுக்குப் போடும் லெட்சுமண ரேகையும் போயிட்டா நல்லாயிருக்கும்.

அந்த வகையில் கத்தோலிக்க சர்ச்சுகள் எனக்குப் பிடிக்கும். செருப்போட உள்ள போகலாம். நம்ம கோயில்கள்ள செருப்பில்லாம போகனும். ஆனா உள்ள தரை எந்த அளவுக்குச் சுத்தமா இருக்கு? அதே போல இந்த ஜருகண்டி ஜருகண்டி பிரச்சனை இல்லை. இன்னும் நெறைய இருக்கு. சொன்னா கலாச்சாரக் காவலர்கள்(!?!?!) என் மேல பாஞ்சு விழுவாங்க.

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள்தானே விளையாட்டுப் பொருட்கள். அவங்க கிட்டயிருந்துதான் நம்ம கத்துக்கனும்.

தேசிய கீதத்துக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டது எல்லாம் பழைய கதையாப் போச்சு டீச்சர். இப்பல்லாம் ஒரு சலிப்புதான் மிச்சம். ஒருமைப்பாடாம். இறையாண்மையாம். இந்திய இறையாண்மை மலடாகிப் போச்சுங்குறதுதான் உண்மை. இதைச் சொன்னா தேசத்துரோகிம்பாங்க. தேசத்துக்கு யாரும் துரோகம் பண்ணீரக்கூடாதேன்னுதான் இதச் சொல்றோம்னு மரமண்டைகளுக்குப் புரிய மாட்டேங்குது.

said...

இந்த ரெண்டு அமாவாசைக் கதை நானும் கேள்விப் பட்டேன்.
படங்களைப் பார்க்கும்போது 'என்ன கோலாகலக் கொண்டாட்டங்கள்' என்று தோன்றுகிறது. ஹேன்ட் பேக் வைத்த ராதா அழகு.

said...

படங்கள் கண்ணைப் பறிக்கின்றன... நல்ல பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

said...

அக்கா!!!! கிருஷ்ணர் ராதை அழகோ அழகு !!!!

அதுவும் ராதைகட்டியிருக்கும் புடவை அலங்காரம் சர்தொசி ஸ்டோன் வர்க் ...புடவை நிறம் அவங்க ரெண்டு பேர் முகம் அப்படியே ஜொலிக்குது
..

said...

ராதா கிருஷ்ணாவை அள்ளிக் கொண்டு வரவேண்டும் போல அப்படி ஒருஅழகு.
சூப்பர் அலங்காரம்.


இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

said...

அழகான பதிவு. ரசித்தேன். குழந்தைகள் கேள்விகளில் மாட்டக்கூடாது. அதுதான் என் தற்போதைய பிரார்த்தனை.

said...

/ ஆஜ்கல் பச்சோ லோக் பஹூத் ஆகே ஹை!! //

ஸப் குச் மே

மீனாட்சி பாட்டி.

said...

படங்கள் அருமை டீச்சர்.அது என்ன ராதை கைல கர்சீப் மாதிரி?அப்புறம் அந்த ரெண்டு பேரு யாரு ,கிருஷ்ணர்,பலராமன?

டீச்சர் என்னக்கு ஒரு சந்தேகம்?
இது நான் அனுபவத்துல அமெரிக்கால கண்டது,நம்ப ஊருல பெருசா எந்த பண்டிகையும் கொண்டாடாத நம்ப ,வெளிநாட்ல இருக்குறப மட்டும் விழுந்து விழுந்து ஆடி 18 ல இருந்து எல்லாம் கொண்டாடறோம்,நண்பர்கள பர்கான ஒரு gettogether pothume !தப்ப நெனசுகதீங்க ரொம்ப நாள் டவுட்.

said...

கண்ணனே அவங்க ஊர்க்கலர் ஆகிட்டானே. எத்தனை அழகு. என்ன அலங்காரம். கண் நிறைஞ்சு போச்சுப்பா.குழந்தைகள் படம் ஸ்வீட்டோ ஸ்வீட்.
சாப்பாடு வாசனை இங்கயே வருது:)

said...

வாங்க நான்.

நீங்க சொன்னதெல்லாம் இப்போ தமிழ்நாட்டுலே தாராளமாக் கிடைக்குமே!

அறுபதாயிரம் ஈமூஸ் பட்டினி கிடக்காமே:(

said...

வாங்க ரமணி.

வீட்டாரோடு பகிர்ந்து மகிழ்ந்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம கோவில்களில் விழும் நிர்மால்யங்கள் போல இங்கே ஒன்னும் சேராததால் சுத்தமாவும் இருக்கு!

அதேபோல கண்ட இடத்தில் விளக்குகளும் கற்பூரம் ஏத்திக் கரிபடிய வைப்பதும் இல்லாம மூணு நேரம் ஆரத்தியோடு முடிஞ்சுருது.

காசு உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும் ஒரே மாதிரி பிரசாதம். இது சிரேஷ்டம் இல்லையா!!!!

said...

வாங்க ஜீரா.

லக்ஷ்மண ரேகை அழியாதுன்னுதான் நிலமை. வருசம் 1781 லே போட்டுவச்சது:(

எல்லா சர்ச்சுகளுக்குள்ளூம் காலணியோடு போகலாம். அதேபோல் இருக்கைகளும் போட்டு வச்சுருப்பதால் முழங்கால் வலி இல்லாம உக்காந்து சாமி கும்பிட முடியுதே!


உண்மையான சுதந்திரம் எதுன்னு நம்ம சனங்கள் இன்னும் புரிஞ்சுக்கலையேப்பா:(

said...

வாங்க ஸ்ரீராம்.

ரெண்டு முறை வந்தா அது தப்பா!!!!!

என்னவோ போங்க....:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் ரசிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

said...

வாங்க ஏஞ்சலீன்.

நிறையக் கொசுவம் வச்சுக் கட்டிக்கிட்டு ஆடாமல் அசையாமல் புடவையைக் கசக்காமல் பளிச்ன்னுஇருக்காள் எப்பவும்.

நம்ம பக்கத்துப் பட்டு கட்டிவிட்டால் எப்படி இருக்குமுன்னு நினைச்சுக்குவேன்.

குழந்தை சைஸுக்கு ரெடிமேட் புடவை அசல் காஞ்சீபுரம் பட்டு வந்துருக்கு தெரியுமா?

நம்மூட்டு சின்னவளுக்கு வாங்கியாந்தேன்.

படம் இங்கே:-)
http://thulasidhalam.blogspot.co.nz/2011/09/blog-post_28.html

said...

வாங்க மாதேவி.

நம்ம சண்டிகர் கோவில் ஹனுமனைப்பார்த்தால் எனக்கு இப்படித்தான் டக்ன்னு இடுப்பில் தூக்கி வச்சுக்கிட்டு நடையைக் கட்டிடலமான்னு தோணும். செல்லம்போல் ஒரு அழகு!

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

சரியாச் சொன்னீங்க. வாயைக் கட்டிக்கணும் அவுங்களோடு பேசும்போது:-)))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

பாத் சச் தோ ஹை:-)

தனிமடல் அனுப்பினேன். பார்த்தீர்களா?

said...

வாங்க விஜி.

நரன் நாராயணனாகவும் வச்சுக்கலாம். கடவுள் கோச்சுக்கமாட்டாரு:-)

எதுவுமே இல்லாதப்பதான் அருமை தெரியும். ஒருவேளை அதனால்தான் எல்லாப்பண்டிகையையும் இழுத்துப்போட்டுக் கொண்டாடுறோம் போல.

சண்டிகர் இந்தியாவில்தானே இருக்கு? அங்கே கூட ஆடி வெள்ளிகளில் விளக்கு பூஜை தவறாமல் நடக்குது. ஒரு நாள் கிழமையை விடுவதில்லை அங்கே நம்ம கோவிலில்!

வீட்டுலே வெறும் கெட் டு கெதர் வச்சா எத்தனைபேர் வருவாங்க? அதிலும் பாட்லக் ன்னு சொல்லிப் பாருங்களேன்:-)

விருந்தினர்களைக் கூப்பிடும்போதே அவர்களுக்கு வேண்டாதவர்கள் யார் யார் வர்றாங்கன்னு கேக்கும்போது என்ன சொல்வீங்க? நமக்கு எல்லோரும்தானே வேணும்? அது பெரிய தலைவலி இல்லையோ!

கோவில் என்றால் கொஞ்சம் ஆன்மீகம், கொஞ்சம் லௌகீகமுன்னு போயிருதுல்லே? கோவிலுக்கு வரும் அத்தனை தெரிஞ்சவங்களையும் வீட்டுக்குக் கூப்பிட்டுக் குலாவ முடியுமா?

said...

வாங்க வல்லி.

நோகாம நோம்பு கும்புடறேன்ப்பா.

சாமி கூப்பிட்டுக் கூப்பிட்டு சோறு போடறாரே:-)))

said...

//அது என்னமோ தெரியலை எப்பவும் அந்த ஜயஹே வரும்போது மனசுக்குள்ளில் ஒரு கசிவு:(//

சேம் ஃபீலிங்... எனக்கும்...

சிறப்பான அலங்காரங்கள். அழகிய படங்கள்...

அசத்தறீங்க டீச்சர்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அழகா சிரத்தையுடன் அலங்கரிக்கறாங்க. பொருத்தமான உடைகளும் நகைகளும் பார்க்கவே அம்சமா இருக்கு.

இந்தக் கோவில்களில் எல்லாம் ஸ்வாமி சிலைகள் ஒரே அளவாவே உலகெங்கும் இருக்கும் போல!

எல்லாம் ஒரு இடத்தில் தயாரிச்சு செட் செட்டா வந்துருது!