Monday, August 27, 2012

போனால் வராது.... பொழுது போனால் கிடைக்காது..... (ப்ரிஸ்பேன் பயணம் 29)

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாமே! பனிவிழாத ஊரில் ஐஸ் ஸ்கேட்டிங் செஞ்சுக்க வேற வழி? கிங் ஜியார்ஜ் சதுக்கத்துலே விண்ட்டர் ஃபெஸ்டிவல் நடக்க ஏற்பாடாகுதுன்னு நேத்து பார்த்து வச்சுக்கிட்டதை ஞாபகமா கோபாலிடம் சொல்லி வச்சேன்.

 காலையில் வழக்கம்போல் எழுந்து கடமைகள் முடிச்சு காலை உணவுக்கு கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் வந்ததும் முதல் வேலையா பொட்டிகளை அடுக்கி வச்சோம். இன்னிக்கு மாலை ஃப்ளைட்டில் வீடு திரும்பணும்.


 ஆறுமணிக்குத்தான் விமானம் என்பதால் லேட் செக்கவுட்டு கேட்டு மதியம் மூணு வரை கிடைச்சது. பக்கத்து பேட்டையில் ஒரு மால் இருக்கு, அங்கே போகலாமுன்னு குவீன்தெரு மாலுக்கடியில் இருக்கும் பஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். ஜிலோன்னு கிடக்கு. தகவலில் பார்த்தால்.... நாம் போய் கொஞ்சம் சுத்தி வரவே குறைஞ்சது நாலு மணி நேரம் ஆகும்போல இருக்கு. இதே வெஸ்ட்ஃபீல்ட்ஸ் நம்ம ஊரில் இருக்கே. வேணாமுன்னு தோணுச்சு.

 பார்த்துவச்ச பையை வாங்கிக்கலைன்ற துடிப்பு கோபாலின் முகத்தில் தெரிஞ்சது. குவீன்தெரு மாலில்தானே இருக்கோமுன்னு மையர்ஸ் கடையில் போய் பையை வாங்குனதும்தான் புள்ளி முகத்தில் மகிழ்ச்சி. மடிக்கணினியும் ஒரு நாளுக்குள்ள துணிமணியும் வச்சுக்க வாகாய் இருக்காம்! சும்மாவே பை பைன்னு ஆடுவார்., இப்போ இந்த மடிக்கணினி தூக்கும் வழக்கமும் சேர்ந்துக்கிட்டதால் வகைவகையா இந்த ரகம் பைகள் சேர்ந்து கிடக்கு வீட்டுலே!

 விலை கொஞ்சம் கூடுதலுன்னு நானும், நியூஸியை விட விலை மலிவுதான். பத்து வருச இன்ட்டர்நேஷனல் கேரண்டீ வேற இருக்குன்னு அவருமா எண்ணம். ஆமாம்... பத்து வருசம் இந்தப் பையை வச்சுருக்கப் போறதுமாதிரிதான்......

 அப்படியே பார்த்து வச்ச ஷர்ட்ஸ்ம் வாங்கிக்கிட்டு காலாற நடந்து ஒரு ஆர்கேடுக்குள் நுழைஞ்சோம். கப் அண்ட் சாஸர்ஸ் விக்கும் கடையில் புது அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பூனை டீ ஜக் ஒன்னு நல்லா இருந்துச்சு. மால் கலகலன்னு இருக்கு. வீக் எண்ட் கூட்டம் வேற! பலூன்காரர் ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கார். எங்க சாமிதான் ஒஸ்த்தின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஒருத்தர். இருந்துட்டுப் போகட்டும் எனக்கு பிரச்சனை இல்லை!


 கிங் ஜியார்ஜ் சதுக்கத்துக்கு வந்தோம். விழா ஆரம்பிச்சு ஃபுல் ஸ்விங்க்லே இருக்கு. 23 டாலர் டிக்கெட்டுலே 45 நிமிஷம் பனிச்சறுக்கு விளையாடிக்கலாம். ஸ்கேட்ஷூவும் தர்றாங்க. டவுன் கவுன்ஸில் முன்னால் இருக்கும் இடத்துலே தண்ணீரைத் தேக்கி Ice Skating Rink போட்டுருக்காங்க.

 Bobby is a seal skating aid ஒன்னு ஏழரைக்குக் கிடைக்கும். இது 12 வயசுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டும். ஆனா.... 2 டைம்ஸ் பன்னிரெண்டு வயசெல்லாம் அதுலே ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.. போனா வராது, பொழுது போனாக் கிடைக்காதுன்னு ...... கொண்டாட்டம்தான்.

 நமக்கோ........ ஐஸைப் பார்த்துப்பார்த்துப் போதுமுன்னு ஆகிருச்சு. எங்கூர்லே நம்ம வீட்டிலிருந்து ஒரு மணி நேர ட்ரைவ் போனால்.... முழுசா ஒரு ஏரியே உறைஞ்சு கிடக்கும். இலவச ஸ்கேட்டிங்தான். பக்கத்துலே இருக்கும் குன்றுச் சரிவில் கொட்டிக்கிடக்கும் பனியில் மெள்ள ஏறி ஒரு முப்பது மீட்டர் போனதும் ப்ளாஸ்டிக் விரிச்சு அதுலே உக்கார்ந்தால் சர்ருன்னு ஒரே சறுக்கு. சின்னப்பிஞ்சுகளையெல்லாம் கூட்டிவந்து அஞ்சாறு மீட்டர் சரிவில் உக்கார வைப்பாங்க. சறுக்கி வரும்போது சிரிப்பைப் பார்க்கணுமே!!!!

 பெரிய பெரிய ஸ்கீ ஃபீல்ட் இருக்குன்னாலும் அதுக்கெல்லாம் போய் ஆட நேரம் ஏது? ஒரு ஆசைக்கு இப்படி அநேகமா எல்லாக் குடும்பங்களும் வந்துரும். என்ன ஒன்னுன்னா..... முதல்நாள் நல்ல பனி பேய்ஞ்சு மறுநாள் நல்ல வெய்யில் இருக்கணும்!

 இங்கே வந்த புதுசில் நாங்க போடாத ஆட்டமா? இப்போ ஒன்னும் வேணாம். குளிர் குளிருன்னு கொஞ்சம் வெறுப்பாக்கூட இருக்கு. ஆனா இள ரத்தத்துக்குக் குளிர் தெரியாது. இங்கத்து மக்களுக்குக் குளிர்காலம் ரொம்பப் பிடிக்குமாம். ஈ ஒன்னும் இருக்காதே அப்போன்னு ஒரு சந்தோஷம். லிப்டன் சாய்க்காரங்க தனிக் கூடாரம் போட்டு உள்ளே ஃபயர்ப்ளேஸ், ஹீட்டர்ஸ் எல்லாம் வச்சு இருக்கைகள் போட்டு வச்சு அதிதி உபச்சாரம் செய்யறாங்க. இலவச ச்சாய் வேற! சூடாக் குடிச்சுக்கிட்டே ஸ்கேட்டிங் ரிங்க் பார்த்துக்கலாம்.

 ச்சாய் நல்லாத்தான் இருக்கு. ஆனால் பெரிய கப்! குடிச்சு முடிக்க நாலுநாளாகும் போல இருக்கு! வீட்டுலே போய் போட்டுக் குடிக்க இலவசப்பாக்கெட் நாலும் கொடுத்தாங்க. எல்லாம் அதுலே இருக்கு. கொதிக்கும் நீர் ஊத்துனால் போதும் ச்சாய் ரெடி!

 நல்லா ஹெவியா விளம்பரப்படுத்திக்கறாங்க லிப்டன் டீ நிர்வாகத்தினர்.


 எந்த ஊருக்குப் போனாலும் கிளம்பும் சமயம் வந்துட்டால்.... கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆகிப்போகுதுல்லே? ஆன்ஸாக் சதுக்கம்வழியா அறைக்கு வந்துக்கிட்டு இருக்கோம். செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச்சை உள்ளே போய்ப் பார்க்கலையேன்னு போனால்.... காலை 12 மணி வரைதான் திறந்திருக்குமாம் சனிக்கிழமைகளில்:( போயிட்டுப்போகுது. அடுத்த முறைக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு.

 எதிரில் ரயில் ஸ்டேஷனில் வண்டிகள் கிளம்ப ரெடியா இருக்கு. பேசாம ஏர்ப்போர்ட்டுக்கு ரயிலில் போகலாம். :"வேணாம்மா.... பெட்டிகளை உருட்டிக்கிட்டு தெருவிலே வரணும். " (வந்தால் என்ன ? )

 பகல் சாப்பாடு இப்போதைக்கு வேணாம். குடிச்ச ச்சாய் பசியைப் போக்கடிச்சுருச்சு:(   ஏர்ப்போர்ட் லவுஞ்சில் போய் (ஓசியில்) சாப்பிட்டுக்கலாம்.

 அறைக்கு வந்ததும் புதுப்பையிலே கொஞ்சம் பொருட்களை எடுத்து அடுக்கி அழகு பார்த்தார்! முகம் முழுசும் ஒரு பூரிப்பு! இப்போ நாம் போகப்போவது ஏர் நியூஸிலண்ட் விமானச்சேவை. அதுலே கோபாலுக்கு ரெண்டு கேபின் பைகள் அனுமதி உண்டு.

 சாமான்களை எடுத்துக்கிட்டு லாபிக்கு வந்தோம். கணக்கை முடிச்சுக்கிட்டு டாக்ஸிக்குச் சொன்னப்ப, அப்போதான் யாரையோ கொண்டு இறக்குன வண்டியே தயாரா இருக்குன்னாங்க.

 ஐயோ..... வேன்... வேணாமுன்னா.... ட்ரைவரைப் பார்த்துட்டு, இதுலேயே போலாமுன்னு கோபால் சொன்னார். ட்ரைவர் ஒரு இந்தியர். பஞ்சாப். லூதியானாக்காரர் வந்து ஒரு வருசம் ஆச்சாம். கொஞ்சம் கூட நளினமே இல்லாத சாரத்யம். நிதானமா போகச்சொன்னால்..... கேட்டுட்டாலும்.....

 சமையல் வேலைக்கு படிக்க வறேன்னு அளந்துட்டு விஸா வாங்கிக்கறாங்க. இங்கே வந்ததும் காசு சம்பாரிக்க எதாவது ஒரு வேலை கிடைச்சுருது..

 வடக்கே முக்கியமா தில்லி, சண்டிகர் பஞ்சாப் ஹரியானா பயணங்களில் எங்கே பார்த்தாலும் ஆஸி, நியூஸி, இங்கிலாந்து, அமெரிக்கா,கனடா போகணுமான்னு ஏகப்பட்ட விளம்பரங்களும் ஏஜன்ஸி ஆஃபீஸ்களும் பார்த்தோம். விஸா, டிக்கெட், படிக்கக் கட்டவேண்டிய ஃபீஸ், இங்கே வந்தால் தங்கவும் உணவுக்கும் ஆகும் செலவுக்குக் காசுன்னு எல்லாத்தையும் கூட்டிப்பார்த்தால் சில லட்சங்களுக்குக் குறையாது.. ஆனால் எப்படித்தான் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் வர்றாங்களோ தெரியலை:(

 சென்னையில் இப்படி ஏஜன்ஸிகளின் விளம்பரம் பார்த்த நினைவில்லை எனக்கு. ஒருவேளை அந்த ஏரியாவுக்கு நான் போகலையோ என்னவோ!

 ச்சைனா டவுனைத் தாண்டும்போதுதான் .... அட இதை எப்படி மறந்தோமுன்னு நினைச்சேன். ப்ரிஸ்பேன் நதியையொட்டிப் போகும் சாலையில் பயணம். ஹொட்டேலை விட்டுக் கிளம்புன இருபத்தியஞ்சாவது நிமிசத்துலே ஏர்ப்போர்ட். வந்தோமுன்னா வேகம் எப்படி இருக்குமுன்னு பாருங்க.


ஆளரவம் இல்லாத விமான நிலையத்தில் எப்பவும்போல ஒரு கருப்புப் பசு நின்னுக்கிட்டு இருக்கு. நானும் ஒரு ஆறேழுவருசமாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இரத்தப்புற்று நோய்க்கு ஆளான சின்னஞ்சிறு சிறுவன் நாலுவயசு Lachlan வரைஞ்ச படங்களை,  தன் உடலெங்கும் தாங்கிப்பிடிச்சு நிக்கும் பசு. சிகிச்சை நடக்கும்போது ஏற்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு வடிகாலா பெயிண்டிங் செஞ்சவைகள்.

 தூரத்தில் ப்ரிஸ்பேன் நகரின் வானளாவும் அடுக்குகள். 

செக்கின் செஞ்சுட்டு லவுஞ்சுப்போய் கொஞ்சம் சாப்பிட்டோம். அப்புறம் தமிழ்மணம் மேய்ச்சல். அஞ்சரைக்கு அறிவிப்பு வந்துச்சேன்னு நம்ம கேட்டாண்டை போனால்..... நம்ம டிக்கெட் ஆறரை மணி ப்ளைட்டுக்காம்.

 நாம் முதலில் செவ்வாய் மாலை மகளுடனே திரும்பிவர்றதாத்தான் திட்டம். அது இதே ஆறுமணி விமானம்தான். அதுக்குப்பிறகு கோபாலின் அலுவல் காரணம் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் இன்னும் நாலுநாள் கழிச்சு மாற்றி எடுக்கச் சொன்னப்ப, கோபால் ஆஃபீஸ்லே ட்ராவல் கவனிக்கும் நபர் செஞ்ச மாற்றம் இப்படி. ஜெட் ஸ்டாருக்கு ஏர் நியூஸிலேண்ட் தேவலைன்னு நினைச்சிருப்பார் போல!

 நல்லவேளை அரைமணி தாமதமானது. ஒருவேளை காலை ஃப்ளைட்டுக்கு மாற்றி இருந்தா? பொழுதன்னிக்கும் போறார் வாரார். அப்படி இருக்க ஏன் டிக்கெட்டை எடுத்துப் பார்க்கலைன்னா.......... ஙே..........

  'உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))

 சரியா நடுராத்திரிக்கு விமானம் விட்டிறங்கி வர்றோம்.... எங்க முன்னாலே நடந்து போகும் பயணியின் ஜாக்கெட் பையில் ஒரு வாழைப்பழம் எட்டிப் பார்க்குது. அவரைக்கூப்பிட்டு பழமெல்லாம் கொண்டு போனால் 200 டாலர் ஃபைன், போர்டைப் பாருன்னா.... ஐயோ என்ன செய்யறதுன்னு முழிக்கிறார். பேசாம உரிச்சுத் தின்னுட்டுத் தோலை குப்பைத்தொட்டியில் போடு. ஆச்சு. ஒரு ஆஸி பயணியின் காசைக் காப்பாத்திக் கொடுத்த புண்ணியம் நம்ம கணக்குலே:-)

 சாப்பாட்டு ஐட்டம் இருக்குன்னு என் கார்டில் எழுதி வச்சுருந்தேன். என்னன்னு கேட்டப்ப ச்சாய் னு எடுத்துக் காமிச்சப்ப, அதிகாரியின் கண்ணில் மின்னல். அட சுடுதண்ணீ ஊத்துனாப் போதுமா!!!!

 ஆஹா.... அப்ப இன்னும் இது  நியூஸிக்கு வரலை போல!!!!

 டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தப்ப மணி பனிரெண்டரை! வழியெங்கும் நாலுநாளைக்கு முன்னே விடாம ரெண்டு நாளாக் கொட்டுன பனி கெட்டிப்பட்டுக் கிடந்துச்சு.

 மறுநாள் 'ஞாயிறு' வீட்டின் புழக்கடைப் பனியைக் கரைக்க முயன்று கொண்டிருந்தது!

  கடைசியா ஒரு சேதி!  ' பயணம் முடிஞ்சு வந்து ஒரு மாசம் கழிச்சு கோபிட்வீன் ப்ரிட்ஜ் பாதையில் போனப்ப டோல் கட்டாம போயிட்டே. அதுக்கு 30 டாலர் அபராதம் கட்டணுமுன்னு நோட்டீஸ் வந்துருக்கு அதையும் உன் க்ரெடிட் கார்டுலே சார்ஜ் பண்ணிட்டோமுன்னு கடிதாசு போட்டுருக்கு வாடகைக்கார் நிறுவனம்! காரெடுக்கும் பயணிகளுக்கு எங்கெங்கே டோல் கட்டணுமுன்னு ஒரு விவரம் வச்சுருக்கக்கூடாதா?

 கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் டோல் பூத் வச்சுருந்தா நாம் என்ன செய்வது? இந்தியாவில் இருப்பது போல சாலையை வழிமறிச்சு வசூல் பண்ணத்தெரியலை பாருங்க:(

 போகட்டும் எல்லாம் நமக்கொரு படிப்பினைதான்.

 அதுக்காக பயணம் போகாமல் இருக்க முடியுமா?

 பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!  பி.கு: எங்க ஊரில் டோல் ரோடு எதுவுமே இல்லை. இன்னும் சொன்னால் தெற்குத்தீவில் சாலைப்பயணம் முழுசும் இலவசமே! தைரியமா வாங்க:-))))

16 comments:

said...

// 'உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))//

அது சொல்லவும் பயம் தான் டீச்சர். :)

ஒரு இனிய பயணம் முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் இன்னும் மனதில். ஆனால் கூடவே ஒரு சந்தோஷமும்... அடுத்த பயணப் பதிவு சீக்கிரமே ஆரம்பிச்சுடுமே... :)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... அ(த்)து:-)))))

அடுத்த பயணம்.....?

உண்மைதான். பயணங்கள் முடிவதில்லை!

ஆனால்..ஏகப்பட்ட சமாச்சாரங்கள் காத்துக்கிடக்கு.

சொல்லவேண்டியவைகள் என்றுதான் நினைக்கிறேன்.

கடையில் போணி பண்ணதுக்கு நன்றி:-)

said...

/ இலவசமே! தைரியமா வாங்க:-)))) /

ரிக்கெற் அனுப்பி வைக்கவும்.

said...

வாங்க கொத்ஸ்.

ஒரு ஞாயித்துக்கிழமை சொல்றேன், டிக்கெட் அனுப்பிட்டேன்னு!

said...

//எங்க சாமிதான் ஒஸ்தின்னு சொல்லிக்கிட்டு இருந்தாக ஒருத்தர். இருந்துட்டுப் போகட்டும். எனக்குப் பிரச்னை இல்லை!//

:))) சூப்பர்!

அடேங்கப்பா.. எத்தனை விவரங்கள், படங்கள்... அசத்தல்!

said...

// ஆமாம்... பத்து வருசம் இந்தப் பையை வச்சுருக்கப் போறதுமாதிரிதான்..... //

இது ஒரு அருமையான பாயிண்ட். :) இன்னைக்கு வாங்குனா நாளைக்கு மாத்தத் தோணுது. அதான வியாபார யுகம். கலியுகத்துல கலி எதைப் பிடிக்கிறதுன்னு கேட்டப்போ வியாபாரத்தைப் பிடிச்சுக்கோன்னு சிவன் சொல்லீட்டாரு போல. விக்கிறவங்களையும் வாங்குறவங்களையும் நல்லா ஆட்டி வைக்குது :)

// இரத்தப்புற்று நோய்க்கு ஆளான சின்னஞ்சிறு சிறுவன் நாலுவயசு Lachlan வரைஞ்ச படங்களை, தன் உடலெங்கும் தாங்கிப்பிடிச்சு நிக்கும் பசு. சிகிச்சை நடக்கும்போது ஏற்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு வடிகாலா பெயிண்டிங் செஞ்சவைகள். //

இப்போ அந்தப் பையன் எப்படியிருக்கான்? கடவுள் எப்பவும் அவனுக்குத் துணையிருக்கட்டும். ஒரு காய்ச்சல் வந்தாலே மனசு போட்டு அடிச்சுக்கும். இதுல இந்த மாதிரி நிலையில் மனசுக்குள்ள என்னென்ன எண்ணங்கள் ஓடும். எல்லாத்தையும் வெளிய சொல்ல முடியாது. அதை வடிகாலா படம் வரையுறதுல காட்டுன அந்தப் பையனுக்குப் பாராட்டுகள்.

// சாப்பாட்டு ஐட்டம் இருக்குன்னு என் கார்டில் எழுதி வச்சுருந்தேன். என்னன்னு கேட்டப்ப ச்சாய் னு எடுத்துக் காமிச்சப்ப, அதிகாரியின் கண்ணில் மின்னல். அட சுடுதண்ணீ ஊத்துனாப் போதுமா!!!! //

ஒங்கள நல்லவங்கன்னு சொல்லீட்டாங்க :)

இந்தத் தண்ணி மட்டும் ஊத்துனாப் போதும் காப்பி/டீ எல்லாம் இந்தியாவுக்கு எப்பவோ வந்து தோல்வி அடைஞ்சிருச்சு. எடுபடலை. மக்களுக்கு நுரை வர்ர அளவுக்கு ஆத்தி ஆத்திக் குடிச்சாத்தான் பிடிக்கும் :)

said...

// 'உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))//

:))

said...

//உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))//

ட்ரெயினிங் பத்தலை போலிருக்கு :-)))

கருப்புப்பசுவின் பின்னணியில் இருக்கும் கதை நெகிழ வைக்குது.

said...

படங்கள் அருமை!
உண்ட களைப்பு தொண்டருக்கே உண்டு! பைகளை ககைகளில் தூக்கின களைப்பு அவருக்கு; பாவம் போனா போகுதுன்னு ஒரு ஆறுதல் ட்ரின்க்!

அது ஏன் எல்லா வீட்டுக்கார அம்மாவும் கணவர்களை சுமை தாங்கியாக வைத்துக் கொள்கிறார்கள்!

said...

வாங்க ஸ்ரீராம்.

சாமின்றது அவரவர் மனது அறிவது இல்லையயோ!!!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜீரா.

கலி பிடிச்சு ஆட்டுதேப்பா:(

குட்டிப்பையன் நாலு மாசம் தொடர்ந்த சிகிச்சையில் தேறி வர்றதா பசுவுக்குப் பக்கத்தில் குறிப்பு இருக்கு. அது 2002லே எழுதி வச்சது.

அதன்படியே நல்லா இருக்கட்டுமுன்ஞு மனசு நினைக்குது. மேற்கொண்டு விசாரிக்க எனக்குப் பயம்:( இப்ப 14 வயசு.

இந்த 25 வருசமா நியூஸியிலே நல்லவளாவே (நடிச்சுக்கிட்டு!) இருக்கேன்:-))))

நமக்குப் புல்தின்ன மாடு கொடுக்கும் பால் பிடிக்கறதில்லை. மாடுன்னா காகிதம், ப்ளாஸ்டிக் , தெருமுனையில் இருக்கும் குப்பைத்தொட்டிச் சமாச்சாரங்கள் எல்லாம் தின்னும் மாடு கொடுக்கும் பால்தான் காஃபிக்கு நல்லா இருக்கு:(

கலி கலி கலி.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பொழைப்பு சிரிப்பாக்கீதுன்னு சொல்றீங்க:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

38 வருச ட்ரெய்னிங் பத்தலையா:(

டீச்சர் ஃபெயிலா????? அட ராமா.....

said...

வாங்க நம்பள்கி.

அவர் தூக்கும் பையில் உள்ள அத்தனையும் அவரோட சொந்த ஷாப்பிங். அதுலே எனக்கானது ஒன்னுமே இல்லை! அப்ப அவர் பை தூக்குவதுதானே முறை:-)

வீட்டுக்கார அம்மாங்க அனைவரும் கணவனின் நலனுக்காகவே வாழறாங்க. கைகளுக்குப் பலம் வேணுமுன்னு வெயிட் தூக்க வைக்கறோம். உடற்பயிற்சி தேவைதானே:-)))))))

said...

தங்களின் பயண அனுபவம் மூலம் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி... வாழ்த்துக்கள்...

said...

இனிய பயணத்தில் பல சுவாரஸ்யங்கள்.