Friday, August 10, 2012

தாய் எட்டடின்னா.... குட்டி எம்பது அடிகள்!!!! ( ப்ரிஸ்பேன் பயணம் 25)


நான் பக்தி வேகத்தில் காலை வீசிப்போட்டு நடந்து எலிஸபெத் தெருவில் இருக்கும் செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கதீட்ரலுக்குப் போனேன். எங்க ஊர் கதீட்ரல் நிலநடுக்கத்தால் அழிஞ்சு போன மனக்குறையை இதைப் பார்த்துக் கொஞ்சமாவது ஆறுதல் இப்போதைக்கு அடைஞ்சுக்கணும்.



119 இடங்களை பாரம்பரியக்கட்டிடங்கள் என்ற பட்டியலில் சேர்த்துருக்காங்க ப்ரிஸ்பேன் நகரில்!  ஹெரிட்டேஜ் ட்ரெய்ல் என்று  அதுக்குப்போகும் வழிகளை தரையில் அம்பு போட்டுக் காமிக்குது சிட்டிக் கவுன்ஸில்.




செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் சாப்பல், கதீட்ரல் ரெண்டும் ஒரே வளாகத்துலே தெருவைப்பார்த்தமாதிரி நிக்குது. விசாலமான படிகளில் ஏறிப்போகணும். இதுலே தாய் எட்டடின்னா குட்டி எம்பது அடின்ற அளவு! முதலில் கட்டுனது இந்த சின்ன சாப்பல்தான். அப்போ இருந்த மக்கள் தொகைக்கு இதுவே ப்ரமாண்டமா இருந்துருக்கலாம்.


 குடி பெயர்ந்த இங்கிலாந்துக்கார்கள் ப்ரிஸ்பேன் நகருக்கு வந்து சேர்ந்த வருசம் 1842. அதுக்கு முன்னால் குற்றவாளிகளை நாடு கடத்திக் கொண்டு வந்து தள்ளும் தீவு(!!!!!!)தான் இந்த அஸ்ட்ராலியா! சிட்னியில்தான் கொண்டுவந்து தள்ளிக்கிட்டு இருந்தாங்க. அங்கே கூட்டம் (??) அதிகமாகுதுன்னு வேறு வாகான இடங்களைத்தேடுனதில் காலநிலை கொஞ்சம் நல்லாவே இருக்கும் இடங்களாக இருந்ததில் ப்ரிஸ்பேனும் ஒன்னு.

 1823லே சர்வே செஞ்சு பார்க்க ஜெனரல் ஜான் ஆக்ஸ்லி வந்துருந்தார். அப்போதான் இங்கே ஓடிக்கிட்டு இருந்த பெரிய நதிக்கு சிட்னியில் கவர்னரா இருந்த ஸர் தாமஸ் ப்ரிஸ்பேன் அவர்களுக்கு கூடுதல் மரியாதை தர்ற வகையில் இந்த நதிக்கு ப்ரிஸ்பேன் நதின்னு பெயரும் வச்சாங்க. ஒரு முப்பது மைல் பரப்பளவில் புது நகரம் வச்சுடலாம். என்று தீர்மானிச்சு நகரத்துக்கும் அதே பெயர் வச்சாங்க.

 அஞ்சு வருசம் கழிச்சு 1828 லே நூத்துக்கணக்கான குற்றவாளிகளை இங்கே கொண்டுவந்து அவர்களை வேலைவாங்கி முதல் கல் கட்டிடம் இங்கே கட்டுனாங்க. அந்தக் காலக்கட்டத்தில் கட்டுனதுதான் நாம் முன்னே பார்த்த விண்ட் மில்.

 1848லே செயிண்ட் ஸ்டீஃபன் பெயரில் கட்ட ஆரம்பிச்சு 1850 வது வருசம் மே மாசம் 12 தேதிக்கு இங்கே முதல்முறையா பூஜைபுனஸ்காரம் செஞ்சாங்க. அப்ப இங்கே இருந்த அறுபது கத்தோலிக்க குடும்பத்தினருக்கு இது ஒரு பெரிய கோவிலா இருந்துருக்கு.

 1861 வது ஆண்டு Bishop Quinn இங்கே வந்து சேர்ந்து பொறுப்பு ஏத்துக்கிட்டதுக்குப் பிறகுதான் இன்னும் பெரிய தேவாலயமா ஒன்னு கட்டலாமேன்னு இப்ப இருக்கும் (மகள் கட்டிடம்!) கதீட்ரலை கட்ட 1863 இல் செயிண்ட் ஸ்டீஃபன் நாளான டிசம்பர் 26 இல் அடிக்கல் நாட்டுனாங்க.

 சாதாரணச் சர்ச்சுக்கும் தேவாலயத்துக்கும் என்ன வித்தியாசமுன்னு பார்த்தால்.... பாதிரிமார்கள் பூஜை செஞ்சால் அது சர்ச். பிஷப்ன்னு ஒருத்தர் (பாதிரிகளில் படிப்படியாக உயர்ந்த ரேங்க்) இருக்காருன்னா அது தேவாலயம். இந்த அடுக்குவரிசைக்கு வெவ்வேற நிறங்கள் அலங்காரங்கள் இப்படி ஏகப்பட்டவைகள் இருக்கு. நம்ம கோவில்களில் சாமிக்குத்தான் அலங்காரம். இங்கே சாமி என்னவோ படு சிம்பிளா இருக்கார்.


 வேலை நடந்துக்கிட்டு இருக்கும்போதே நாட்டின் பொருளாதார நிலை கீழே போயிட்டதால் ரொம்பவே மெதுவாத்தான் கட்ட முடிஞ்சுருக்கு.. முழுசும் முடிக்காமலேயே எட்டரை வருசம் ஆனநிலையில் 1874 மே மாசம் கும்பாபிஷேகம் நடந்துருக்கு.

 ஆலயத்தில் இருக்கும் ஸ்டெயின்ட் க்ளாஸ் (stained glass windows)அலங்காரமெல்லாம் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்துன்னு பல இடங்களில் இருந்து வந்துருக்கு.

 பெரிய ஆர்கன் ஒன்னு (ஜூபிலி பைப் ஆர்கன்) 2442 குழாய்களோடு சமீபத்துலே ஒரு 12 வருசத்துக்கு முந்தி வச்சுருக்காங்க. ஆல்டரில் அட்டகாசமா இருக்கு. இதோட எடை மட்டும் 16 டன்களாம்! இது தேவாலயத்தின் மூணாவது ஆர்கன். முதலிரண்டும் 1873, 1921 ன்ற காலங்களில் இருந்தவைகள் இப்போ ம்யூஸியத்துலே இடம்பிடிச்சுருக்குன்னாங்க.

 இந்த ஆர்கன் இருக்கும் கருவறையில்(!) மேலே இருந்து தொங்கவிடப்பட்ட நிலையில் சிலுவையில் அறையப்பட்ட யேசு நாதர் சிலை ஒன்னு ..... ஹைய்யோ!!!! என்னன்னு சொல்ல?

 ஜான் எலியட் என்பவர் வடிச்ச வெங்கலச்சிற்பம். முதலில் மரத்தில் செதுக்கி இருக்காங்கன்னு நினைச்சுருந்தேன். முகத்தில் வலியும், விலா எலும்புகள் எல்லாம் வரிவரியாத் தெரியும் ஒல்லி உடம்பும், ஒட்டுன வயிறும், கையைத் துளைச்சுப்போகும் ஆணிகளும், முள் சாட்டைகளால் உடம்பில் தோலுறிஞ்சு ஏற்பட்ட காயங்கள் எல்லாம் தத்ரூபம். யேசு இறந்தப்ப அவருக்கு 31 வயசுன்னுதான்னு வாசிச்ச ஞாபகம். அதேபோல அந்த வயசுக்குரிய வாலிப முகத்தோடு இந்தசிற்பத்தில் இருக்கார்!!! ஐயோன்னு இருக்கு:(

 அழகான தேவாலயம் இந்த செயிண்ட் ஸ்டீபன் கதீட்ரல். கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கணும் அந்த உள் விதானத்தை. அம்மாடி.......... எவ்வளோ உயரம். அந்த உயரம் காரணமா சின்னக் குரலில் பேசுனாலும் கணீர்னு கேக்குது. சந்நிதானத்தைப் பார்த்து நாம் நின்னோமுன்னா நமக்கு இடப்புறம் அழகான பளிங்குச் சிலைகளா ரெண்டு தெய்வங்கள். பக்கத்துலே மெழுகுவர்த்தி ஏத்தறதுக்குள்ள எல்லா வசதிகளும் இருக்கு. இவர்தான் பரி. ஸ்டீபன் போல.ஒரு சிறுவனைக் கைப்பிடிச்சுக்கிட்டு நிக்கறார். நான் முதலில் இவரை செயிண்ட் கிறிஸ்டோபர்னு நினைச்சேன். ஒருவேளை அவர் கையில் இருந்த தடி காரணமான்னு தெரியலை.

 சந்நிதிக்கு அந்தப்பக்கம் சுவத்துலேயே பதிச்ச இன்னொரு பளிங்கு சிற்பம். இயேசுநாதரும் அவருடைய ரெண்டு சீடர்களும் உக்காந்துருக்காங்க. நடுவிலே ஒருமேஜை. அதைக் கடந்து வலப்புறம் திரும்புனா........ ஞானஸ்நானம் கொடுக்க தீர்த்தம் வைக்கும் பளிங்குப் பாத்திரமும் அதுலே இருந்தே அதேபளிங்கு உருகி, சீலையாகி அதுலேயே உருவானதுபோல ஒரு பெண்ணும், கருவில் உள்ள குழந்தையும்! எப்படி வர்ணிக்கறதுன்னே புரியலை. உங்களுக்காக படமாவே எடுத்துக்கிட்டு வந்துட்டேன்.





 ஆல்ட்டருக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் பகல் பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. BLESSED SACRAMENT CHAPELன்னு இந்த இடத்தைச் சொல்றாங்க. கண்ணாடிச்சுவர்கள் வச்சு நல்ல வெளிச்சமா இருக்கு! 1988 லே இருந்துதான் இங்கே(யும்) சர்வீஸ் நடத்த ஆரம்பிச்சாங்களாம். ரெண்டுமூணு வரிசை பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க. ஓசைப்படாம க்ளிக்கிட்டு பக்கவாட்டுக் கதவின் வழியா வந்தால் ஜெபமாலைகள் குவிச்சுவச்சு எப்படி இதைவச்சு என்னென்ன சொல்லி ஜெபிக்கணும் என்ற விவரங்கள் எல்லாம் பக்தர்களுக்குத் தகவலா வச்சுருக்காங்க. நானும் ஒரு ஜெபமாலையும் தகவல் விவரங்களும் எடுத்துக்கிட்டேன். நம்ம வீட்டில் இருக்கும் லேடி ஃபாத்திமா கையில் இருக்கு ஜெபமாலை இப்போ!



 பக்கத்துப்பள்ளிக்கூடப்பிள்ளைகள் கூட்டமா வந்து புல்தரையில் உக்காந்து லஞ்ச் சாப்பிட ஆரம்பிச்சாங்க. கலகலன்னு பறவைகள் கூட்டம் போல நல்லா இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி இருக்கும் பரந்த புல்வெளியில் பலர் ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தாங்க. சுற்றிவர நிற்கும் வானுயர்ந்த கட்டிடங்கள் ஒரு அரண் போல இருந்து தேவாலயத்தைக் காக்குதோ?

 பழைய சாப்பலைப் பார்க்கப்போனேன். தெருப்பார்த்த கதவை மூடி வச்சு பக்கவாட்டுக் கதவை மட்டும் திறந்து வச்சுருந்தாங்க. அழகா சின்னதா க்யூட்டா இருக்கு. புதுக்கோவில் வந்தவுடன் பழசுக்கு மதிப்பில்லாமப் போச்சு:( . சர்ச்சுக்கான அலுவலக அறையாகவும் வகுப்புகள் பைபிள் வகுப்புகள் நடத்தும் வகுப்பறையாகவும் கொஞ்ச நாள் இருந்துருக்கு.

 மிருதுவான மணற்கற்களால் கட்டுன கோவில்மணி பீடம் ஒருசமயம் உடைஞ்சு விழுந்துருச்சுன்னு, கோவில் பழசாப்போச்சு. இனி எதுக்கு இடிச்சுடலாமுன்னுகூட கொஞ்சநாள் பேசிக்கிட்டு இருந்துருக்காங்க. இவ்வளோ நல்ல இடத்தை கண்டாமுண்டா சாமான்களைப்போட்டு வைக்கும் ஸ்டோர் ரூமா கூடப் போட்டு வச்சுருந்தாங்களாம். அதுவும் நூறு வருசத்துக்கும் மேலே!

 (ஐயோ! எனக்கென்னமோ பல பெருமாள் கோவில்களில் நம்ம ஆண்டாள் சந்நிதி ஞாபகம் வருதே(. அங்கே ஆண்டாளை இருட்டுலே நிக்கவச்சதுமில்லாம வாகனங்கள், மரப்பலகைன்னு கண்டதையும் போட்டு வச்சுருப்பாங்க....)

 சரித்திரப்புகழ்ன்னு சொன்னால் உண்மைக்குமே இதுதான் குவீன்ஸ்லாந்துலே இருக்கும் சர்ச்சுகளில் மிகவும் பழையது. 1995 லே ஹெரிட்டேஜ் சமாச்சாரங்களை ஆராய்ஞ்சப்ப இந்த விஷயம் வெளிவந்து , உடனே இதை சீரமைக்கணுமுன்னு முடிவு செஞ்சு 1999லே புது பெல்டவரைக் கட்டி எழுப்பி உள்ளே மராமத்து எல்லாம் பார்த்து குட்டிச் சர்ச்சா மாத்திட்டாங்க.

 இப்ப தனிப்பட்டவர்கள் வீட்டு விசேஷங்கள் ஞானஸ்நானம், கல்யாணம், தியானம் செய்யும் குழு, சின்ன அளவிலான ஜெபக்கூட்டங்கள் இப்படி பலதும் நடத்திக்கத் தோதா அமைஞ்சுபோச்சு. உள்ளே இருக்கும் பெஞ்சுகளை எடுத்து அந்தந்த குழுவினரின் தேவை அனுசரித்து இடம் மாத்திப் போட்டுக்கலாமாம்!

 இதே வளாகத்துலே ஒரு பக்கம் பெரிய பிரமாண்டமான கட்டிடம் ஒன்னு இருக்கு. ஆர்ச் பிஷப் ஃப்ரான்ஸிஸ் ராபர்ட் ரஷ் என்பவரின் ஆட்சியில் கட்டுனது. அவர் பெயரையே வச்சுட்டாங்க.. இதுக்குப் போகும் வழியிலேதான் ஒரு ப்ரமாண்டமான வெங்கலமணியைப் பார்த்தேன்.

 சர்ச்சுக்குன்னு கப்பலில் வந்துருக்கு. ஆனால் மணிக்கூண்டுலே வைக்காமல் தரையில் ஒரு ரெண்டடி உயர காங்க்ரீட் மேடையில் வச்சுருக்காங்க. எடை 2856 கிலோ! அதான் இதுக்கேத்த கோபுரம் கட்டமுடியலை போல! .


மணி முழுக்க ஆட்டோகிராஃப் போட்டு வச்சுருக்காங்க. மனிதக் கைகள் சும்மா இருப்பதில்லை:( 

அதுவும் சரித்திரமுன்னா கேக்கவே வேணாம்:(




 விலை ரொம்ப சல்லிசு. 250 பவுண்டுதான். ஆனா இது 1887 லே இருந்த விலை. கப்பலில்வந்து இறங்கி, 1888லே கோவிலில் பிரதிஷ்டை. திருமதி கெல்லியின் அன்பளிப்பு. தானம் கொடுத்துட்டு அதோட விலையையும் போட்டுட்டாங்களே !!!

 ( நம்மூரில் 'கோவிலில் ட்யூப் லைட்' ஞாபகம் வருதே)

தொடரும்..............:-) 

 

23 comments:

said...

சரித்திரம், பூகோளம், பழங்கலை, இதிகாசம், பைபிள், கட்டுமானக்கலை, இப்படி ஒரேயடியா சமுத்திரத்தில மூழ்கடிச்சா மனுசங்க எப்படிங்க பொழைக்கிறது?

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

என்னங்க செய்யறது? எல்லாம் ஒன்னோடொன்னு பின்னிப் பிணைஞ்சுல்லே கிடக்கு!!!!

எதை சொல்ல எதை விட:-)

said...

சாதாரண ஆலயம், தேவாலயம் வித்தியாசம் புரிஞ்சது. அப்புறம் இப்போதான் முதன்முதலா தாடி வைக்காத ஏசுபிரானைப் பார்க்கிறேன். பிரம்மாண்ட வெண்கல மணி பெரிய ஆச்சர்யம். அதை ஒலிக்கச் செய்தால் அக்கம்பக்கமெல்லாம் சும்மா... அதிருமில்லே...

அந்த பளிங்குச் சிற்பமும், கர்ப்பக்குழந்தையும் ... நீங்கள் சொல்வது போல் வர்ணிக்க வார்த்தை இல்லை... கற்பனை நயமும் கலைநயமும் இணைந்து கலந்த விந்தை!

அழகானப் படங்களோடான பகிர்வுக்கு மிகவும் நன்றி மேடம்.

said...

தகவல்களும் படங்களும் பிரமாதம்.. அதுவும் அந்த நாலாவது படம் ஜூப்பரு..

said...

படங்கள் எல்லாம் அட்டகாசம்...

(வேற வழி... படத்தை பார்த்தாவது சந்தோசப்பட வேண்டியது தான்... ஹிஹிஹி)

வாழ்த்துக்கள்... நன்றி…

said...

அழகிய படங்களுடன் எவ்வளவு விளக்கமான பதிவு! இவ்வளவு பெரிய மணியை ஒலிக்கச் செய்து, அருகிலிருந்து, கேட்டு, காது போச்சுன்னா அப்புறம் இங்குதான் நிஜமாவே 'கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ' என்று பாட வேண்டும்!! நம்மோர் மக்களுக்குச் சளைக்காமல் அதில் கிறுக்கியிருப்பதைப் பார்க்கும்போது ஒரு அல்ப ஆறுதல்!

said...

/ 2856 கிலோ/

அப்பாடீ..!

/ட்யூப் லைட்/

ஹி. மனிதர்கள்!

அமைதி தவழும் ஆலயப் படங்களும் அழகு. விரிவான தகவல்களுக்கு நன்றி.

said...

யேசுநாதர் உருவம் வெங்கலத்தில் இவ்வளவு தத்துரூபமா எனத் தோன்றுகிறது.

அழகிய படங்களுடன் சரித்திரமும் தெரிந்து கொண்டோம்.

said...

பள்ளிக்கூடப்பிள்ளைகள் கூட்டமா வந்து புல்தரையில் உக்காந்து லஞ்ச் சாப்பிட ஆரம்பிச்சாங்க. கலகலன்னு பறவைகள் கூட்டம் போல நல்லா இருந்துச்சு

கலகல்ப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

said...

முப்பத்தோரு வயது. சாகுற வயசா? சுவையான அனுபவங்கள் பக்குவப் படும் வயது. அந்த வயதில் ஒருவர் தவறான அரசாங்கத்தால் கொடூரமாகக் கொல்லப்படும் அளவிற்கு மக்களிடத்தில் விழிப்புணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறார் என்பது மிகப் பெரிய சாதனை.

கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாதுங்குறது 1950களில் ஒலித்த குரல் மட்டுமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவி மக்களுக்காக ஒலித்த குரலும் கூட.

கடவுள், மாயக்கதைகள் என்பதைத் தாண்டிப் பார்த்தாலும் ஏசுநாதர் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் மக்களுக்காகப் போராடுகின்றவராகவும் இருந்திருக்கிறார்.

கடவுள் என்ற வகையில் பார்த்தாலும் ஏசுநாதர் என் நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.

ஆண்டாள் சந்நதிகளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஆன்மிகச் செம்மல்கள் என்னதான் தமிழ் முன்னாடி குமிழ் பின்னாடி என்றாலும், ஒவ்வொரு கோயிலிலும் ஆண்டாளின் சந்நதியை மற்ற சந்நதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு தெரியும். பல இடங்களில் பூட்டப்பட்ட கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் பார்த்திருக்கிறேன்.

said...

நல்ல படங்கள்.கலவையான உணர்ச்சிகளைக் கொடுக்கிறது.
ஸ்ரீரங்கத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் தான் ஆண்டாளுக்கு பெருமை.
மற்ற இடங்களில் ஒரே ஒரு விளக்கு ஒளியில் பாதிமுகத்தைப் பார்க்கலாம்.

said...

வாங்க கீதமஞ்சரி.

ஊக்கம் தரும் பின்னூட்டங்களை வாரி வழங்கும் வள்ளல் நீங்க!

மனதுக்கு நிறைவா இருக்கு. மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க கீதமஞ்சரி.

ஊக்கம் தரும் பின்னூட்டங்களை வாரி வழங்கும் வள்ளல் நீங்க!

மனதுக்கு நிறைவா இருக்கு. மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.


சரியான கேமெராக் கண்ணுப்பா உங்களுக்கு! எப்படி சுட்டதைச் சரியா நல்லா இருக்குன்னு பாராட்டறீங்க!!!!!!

அது கோவிலில் கிடைச்ச படத்தை ஸ்கேன் செஞ்சது:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நம்ம பதிவுகள் பெரும்பாலும் ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ்களுக்குத்தான்.

காலம் வந்தால் கிடைக்கணும் என்பது கிடைத்துவிடும். எல்லாம் அனுபவம்தான்:-)

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆயுசில் ஒருநாளாவது அந்த மணி பேசி இருக்குமான்னே எனக்கு டவுட்டு!

நாடு எதா இருந்தால் என்ன மனுஷ்யரெல்லாம் ஒன்னு போலே:-)))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

முகபாவனை அப்படியே, எப்படி வெங்கலத்தில் கொண்டுவந்தாருன்னு இன்னும் வியப்புதான் எனக்கும்!!!!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்.

said...

வாங்க ஜீரா.

ரெண்டாயிரம் வருசங்களுக்கு முன்புகூட கோவில்கள் வியாபாரஸ்தலமாத்தான் இருந்துருக்கு பாருங்களேன்!!!!

ஆண்டாள் மார்கழியைத்தவிர மற்ற மாதங்களில் இருட்டிலே தனிச்சுத்தான் இருக்காள். ஒருவேளை அதைத்தான் மாதங்களில் தான் மார்கழின்னு கண்ணன் சொல்லி இருக்கானோ????

said...

வாங்க வல்லி.

பாவம்ப்பா..... அவள்:(

எல்லாம் வாங்கி வந்த வரம்!

said...

சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிற்பம் தத்ரூபம்.... என்ன, இந்த சிறுவயதிலேயே சிலுவையில் அறையப்பட்டதை நினைக்கும்போது ஒரு வருத்தம் தானே மிஞ்சுகிறது....

விளக்கங்களுடன் பதிவுகள் பகிரும் உங்கள் பணிக்கு எனது வந்தனம்....

said...

வாங்க வெங்கட்.

பயணம் முடிஞ்சு வந்ததும் அரியர்ஸை எல்லாம் முடிச்சதுக்கே என் நன்றிகள்.

யேசுவை நினைச்சால் பாவமாத்தான் இருக்கு. உடலை வருத்திக்கிட்டு சாகணுமான்னு தோணுது:(