Wednesday, August 08, 2012

ஒன்னாயிருக்கக் கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா....( ப்ரிஸ்பேன் பயணம் 24)

தனியா வாழமாட்டான். மனுசன் சமூக விலங்கு. கூட்டமாத்தான் இருப்பான் என்றதெல்லாம் எவ்ளோதூரம் சரின்னு தெரியலை. ஆனால்.... ஒன்னு மட்டும் நல்லாப்புரியுது. மனுசன் கூட்டமா இருந்தாலும் தனக்குன்னு ஒரு கூட்டம் சேர்த்துக்கிட்டுத் தனிக்கூட்டமா இருப்பான்.

 என்னுடைய மனசில் ஓடிக்கிட்டு இருந்த ஒரு சமாச்சாரத்துக்கு இன்னிக்கு ஒரு விடை கிடைச்சமாதிரின்னு வச்சுக்கனும். ஒரே சாமியைக் கும்பிட்டுக்கிட்டு எதுக்கு இத்தனை வகைக்கோவில்? கொஞ்சம் பேர் கூட்டமா ஆனதும் கருத்து வேற்றுமை வந்துரும். அதுக்குக் குரல் கொடுக்கும்போது கூடவே இன்னும் நாலுபேர் அதே கருத்து வேற்றுமையை மனசில் வச்சுப் பொருமிக்கிட்டு இருந்த நாலுபேர் இவனோட வந்து சேர்ந்துருவாங்க. அப்புறம்? கட்சியை ஆரம்பிக்க வேண்டியதுதான். கட்சின்னா அரசியல் கட்சி இல்லை. சாமிக்கட்சி. சாமியை வச்சுக் கட்சி.

 பாவம் சாமி. அது என்ன செய்யும்? எப்படியாவது தொலையுங்கடா என்னைக் கும்பிட்டாச் சரியெங்குமோ என்னவோ! அரசியல் கட்சிகளும் இப்படித்தான் கிளைவிரிச்சு பரந்து விரிஞ்சுக்கிட்டே போகுதுன்றது உண்மைதானே? நதிமூலம் ரிஷிமூலம் போல விட்டுடாம இதன் ஆதிமூலத்தைத் தூண்டி. ஐமீன் தோண்டித் துருவிப் பார்த்தால் ஆரம்பிச்சது ஒரு வித்துன்னு புரிஞ்சுரும்.

 ஆன் தெருவில் நடந்தவ, ஒரு இடத்தில் குறுக்கே ஓடும் ஆல்பர்ட் தெரு முனையில் நிக்கிறேன். இடது பக்கம் கிங் ஜ்யார்ஜ் சதுக்கம். அங்கே நாளைக்கு ஒரு விழா நடக்கப்போகுது. அதுக்கான முஸ்தீபுகளில் பலர் ஓடியாடிக்கிட்டு இருந்தாங்க. நாளைக்குன்னா நாளைக்கே வந்து பார்த்தால் ஆச்சுன்னு வலப்பக்கம் திரும்பி ஆல்பர்ட் தெரு சர்ச்சுக்குள் நுழைஞ்சேன். இதுவும் ஒரு யுனைட்டிங் சர்ச்தான். பழைய கட்டிடமுன்னு தனியாச் சொல்ல வேண்டியதே இல்லை.

மெதடிஸ்ட் மிஷன் ப்ரிஸ்பேன் நகரத்தில் ஆரம்பிச்ச முதல் சர்ச். 1847. இப்பக் காலையில் பார்த்ததைவிட மூத்த சர்ச். குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் மெதடிஸ்ட் மிஷனின் தாய்! நகரின் பாரம்பரியம் மிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்னு. இப்ப நாம் பார்க்கும் இந்த சர்ச் இடம் பத்தலைன்னு புதுசா கட்டுனது. கட்டுமானம் முடிஞ்சு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது 1889 ஆம் ஆண்டு.

 ஊர் மக்களுக்கு நல்லது செய்யணும், அதிலும் யாருமில்லாமத் தனிமை உணர்வோடு இருப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவணும் என்ற எண்ணத்தோடு இதுலே வெஸ்லி மிஷன் என்ற பிரிவை 1907 வது ஆண்டு ஆர்ம்பிச்சாங்களாம். 1930 ஆம் ஆண்டு முதல் முதலா இரு முதியோர் இல்லம் ஆரம்பிச்சதும் இவுங்கதான். சமூகசேவையை மட்டுமே குறிக்கோளாக வச்சுருந்தாங்கன்னு சர்ச் உள்ளே போன என்னை வரவேற்ற பில் Bill சொன்னார்.

 இவர் இங்கே எல்டர் (Elder) என்ற வகையில் இருக்கார். மூத்தோர் சொல் அமுதம் அல்லவா? சர்ச் ஆட்கள் தன்னார்வலர்களா இந்த அமைப்பில் சேர்ந்துக்கிட்டு சர்ச் சம்பந்தப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டுச் செஞ்சு கடவுளுக்கான ஊழியத்தைச் செய்யறாங்க.

 இதுவும் 1977 முதல் யுனைட்டிங் சர்ச் ஆகிருச்சுன்னார். ஆஹா.... நமக்கு விசாரிக்க ஆள் கிடைச்சுட்டார் என்று மகிழ்ந்துபோனேன். கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கன்னதும் நம்மைப்பற்றிக் கொஞ்சம் விசாரிச்சார். எழுதப்போறேன்னதும் உள்ளே ஓடி எல்லா விவரங்களையும் அச்சுப்போட்டு வச்சுருந்தவைகளையும் தூக்கி வந்து என்னிடம் கொடுத்துட்டார். (எழுத்தாளன்னா ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யுதோ!)

 நல்லா சுத்திப்பாருங்க. படங்கள் எடுத்துக்கலாம். பிரச்சனையே இல்லை. திருச்சபைக்கூட்டம் நடக்கும்போது மட்டும் ஃப்ளாஷ் போடாதீங்கன்னு சொல்லி பெருமூச்சு விட்டார். ஒய் பெருமூச்சு?

 ஞாயிறுகளில் சாமி கும்பிட அஞ்சாறு பேர் வந்தாவே அதிகமாம். இந்த இளைய தலைமுறை கோவிலுக்கு வர்றதை ஒரு முக்கியமான விஷயமா நினைக்கறதில்லைன்னு எல்லா முதியவர்களையும் போலவே கொஞ்சம் கவலையோடு சொல்றார். அதனால் வெள்ளிக்கிழமைகளில் பகல் ஒன்னேகாலுக்கு லஞ்ச் அவர் மினிஸ்ட்ரின்னு ஏற்படுத்தி இருக்காங்களாம். டவுனுக்கு வேலைக்கு வருபவர்களில் சாமி கும்பிடணும்தான். ஆனால் வீக் எண்ட் களில் நேரம் இல்லையே என்ற மனக்குறை(!) இருப்பவர்களுக்காக இந்த ஏற்பாடு. வேலைக்கு நடுவில் காலோடு காலாய் இங்கே அரைமணி நேரம் வந்துட்டுப்போயிடலாம். இன்னிக்கு இருக்கு. நீங்க இருந்து பார்த்துட்டுப்போங்கன்னு உபசாரம் வேற எனக்கு! பரவாயில்லையே! 


பக்தர்களுக்காக கடவுள் காத்துருக்கானேன்னு, எத்தனை பேர் பொதுவா வர்றாங்கன்னு கேட்டேன். பத்துப்பேருக்குக் குறையாதுன்னார்! அட ராமா............

 ஞாயித்துக்கிழமை காலையிலும் மாலையிலும் வழிபாடு உண்டு. சாமி கும்பிட்டு முடிச்சதும் டீ காஃபி, கொஞ்சம் கேக் பிஸ்கெட்ஸ், தீனிகள் எல்லாம் தருவாங்களாம். சாமி ப்ரசாதமுன்னு சாப்பிட்டுப்போகலாம்!

 1849 லே மெதடிஸ்ட் கூட்டுவழிபாடு என்ற வகையில் கட்டுன ஒரு சின்ன சர்ச் 150 பேர் கொள்ளும் அளவில்தான் கட்டப்பட்டது. அந்தக் காலக்கட்டத்துலே இதுவே பெரிய எண்ணிக்கையா இருந்துருக்கும். ஒரு ஏழு வருசத்தில் இடம் போதாமல் ஆகிருச்சு. வழக்கமா சாமி கும்பிடும் பழக்கம் இருந்த காலம் அது! . 1856 லே இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுக் கட்டுனாங்க. இதுவும் 1889 வரை தாக்குப்பிடிச்சது. மனித குலம் பெருகும் வேகத்துக்கு இனி ஈடு கொடுக்கமுடியாதுன்ற நிலையும் வந்தப்ப, உக்கார்ந்து யோசிச்சு 1888 லே ( இதுக்கே எட்டு வருசம் யோசிக்கும்படி ஆகிப்போச்சோ?) அடிக்கல் நாட்டி ஒரே வருசத்துலே புது சர்ச் கட்டி முடிச்சு 1889லே திறப்பு விழாவும் நடத்திட்டாங்க.

 பொதுவா எதாவது ஒரு பரிசுத்தர் பெயரில் இருக்கும் (செயிண்ட் ஸோ அண்ட் ஸோ சர்ச்) வகைகளில் பட்டுக்காம, இதுக்கு ஆல்பர்ட் தெரு கோவில் என்றே பேரும் வச்சுட்டாங்க. அந்தக் காலத்திலே இதுக்கு பத்தாயிரம் பவுண்ட் காசு செலவாகி இருக்கு. இங்கிலாந்துலே இருந்து பைப் ஆர்கன் இறக்குமதி செஞ்சுருக்காங்க. 2500 குழாய்கள் இருக்காம் இதுக்கு! சர்ச்சுலே இதை இசைக்கும்போது கம்பீரமா இருக்கும் இல்லே? ஆல்டருக்குப் பின்பக்கம் இந்த ஆர்கன்தான் நடுநாயகமா இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு!

 கும்மாச்சி கோபுரம் 43 மீட்டர் உசரம். சுத்திவர அடுக்குமாடிகள் வந்துட்டதால் கோபுரத்தின் கம்பீரம் சரியாப்புலப்படலைன்னு என் தோணல்:(

 இங்கிலாந்துலே பழைய காலத்து நாடகக்கொட்டாய்கள், ஒபேரா அரங்கங்கள் போல பால்கனி வச்ச சர்ச். ஆயிரம்பேர்வரை அமர்ந்து ஆண்டவனைத் தொழும் ஏற்பாடு! ஸ்டெய்ன்க்ளாஸ் ஜன்னல்களும், பால்கனியைத் தாங்கிப்பிடிக்க வச்சுருக்கும் இரும்பு, மரச்சட்டங்களும்கூட கலை அழகோடு இருக்கு.

 வாசலில் வச்சுருந்த அறிவிப்புப்பலகை விழுந்துருச்சுன்னு அதைத் தோளில் சுமந்துக்கிட்டே உள்ளே வந்தவர்தான் சர்ச்சின் பாதிரியார் என்றதும் வியப்புதான். கடவுளுக்கு ஊழியம் செய்யறோம் என்ற மனம் இல்லைன்னா இப்படி எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்ய முடியாதுல்லே?
வலது பக்கம் இருப்பவர் பாதிரியார்.


நிறைய சுற்றுலாப்பயணிகள் வர்றாங்கன்னும் அவுங்க வந்து சுத்திப்பார்க்கறதே மனசுக்குத் திருப்தியா இருக்குன்னும் சொன்னார். எப்படியாவது மனிதர்கள் கோவிலுக்குள்ளே காலடி எடுத்து வச்சால் போதும்! அதுவும் வேற நாடு அதிலும் வேற மதம் என்றால் இன்னும் மகிழ்ச்சியா இருக்குமோ என்னவோ! 

 ஆமாம்.... அதென்ன யுனைட்டிங் சர்ச்சுன்னு ஆரம்பிச்சேன். மெதடிஸ்ட் மிஷன், காங்க்ரெகேஷன் என்ற கூட்டு வழிபாடு நடத்தி அதேபெயரில் இருக்கும் குழுஅமைப்பு, ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் இந்த மூணு சேர்ந்து ஒன்னா இருந்து சாமி கும்பிடலாமேன்னு 1977 இல் தொடங்கிவச்சது இது. இப்போ 35 வருசமா வெற்றிகரமா நடந்துக்கிட்டு இருக்கு. முழுக்க முழுக்க அஸ்ட்ராலியாதான் இதுக்கான க்ரெடிட் எடுத்துக்கணும். ப்ராட்டஸ்டண்ட் வகையில் இருக்கும் சர்ச்ச்சுகள் இவை. மூணு வகை மக்கள்! ஆனால் எல்லாக் குழுவும் இதுலே சேர்ந்துக்கலை. எதிரில் இருக்கு பாருங்க அவுங்க கூட ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச்சுதான். ஆனால் தனியாத்தான் இருக்காங்கன்னாரு பில் .

 ஒவ்வொரு சர்ச்சுலேயும் இருக்கும் அங்கத்தினர்களைக் கேட்டு அவுங்க எல்லோரும் ஒன்றுபட்டு விரும்பினால் மட்டுமே இதில் இணைஞ்சுக்க முடியுமாம். 1.3 மில்லியன் மக்கள் இப்படி சேர்ந்து செயல்படறாங்க. உள்ளூர் பூமிபுத்திரர்களான அபாரிஜன்களை அம்போன்னு விட்டுடாமல் அவர்கள் நலன் வேண்டி அவர்களையும் இணைச்சுக்கிட்டு சேவை செய்யணும் என்பதில் உறுதியா இருக்காங்க.

 இந்த அமைப்பு அவுங்களுக்குன்னு தனி எம்ப்ளம், பல சட்டதிட்டங்கள் என்று ஒரு தனி ராஜாங்கமாத்தான் செயல்படுது. கடவுள்தான் ராஜா!

 கல்யாணம், சாவு, ஞானஸ்நானம், குழந்தை பிறந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லும் பூஜை இது நாலும் மனுசவாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயங்கள். இதைக் கொண்டாடாமல் ஒரு போதும் இருக்கக்கூடாது.

 மனிதர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களில் முக்கியமாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள். ராணுவம், ஜெயில், சீர்த்திருத்த மையங்கங்கள், முதியோர் இல்லம் இங்கெல்லாம் கட்டாயம் போய் உதவணும்.

 நகரத்துக்குள்ளே, என் பேட்டையில் மட்டும்தான் சேவை புரிவேன்னு சொல்லாம ரிமோட் ஏரியாவிலேயும் போய் உதவத் தயாரா இருக்கணும். நாம் இருக்கும் சமூகத்துக்கு உதவணும் மாற்றுத்திறனாளிகள், அகதிகள் இப்படி அனைவருக்கும் உதவ முன்வரணும்.


 மொத்தத்தில் அனைவரும் நீதி நியாயம் கிடைக்கணும் இப்படி நிறைய கொள்கைகளும் நோக்கங்களுமா இருக்காங்க. தலைவர்களை ரெண்டு இல்லை மூணு வருசத்துக்கொருமுறை அவுங்களுக்குள் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுத்துக்கறாங்க.

 எல்லாத்தையும் கேட்டதும் எனக்கு லேசாத் தலை சுத்தல். சரி. போகட்டும் எப்படியோ ஒன்னாச்சேர்ந்து சாமி கும்பிட்டுக்கிட்டு சமூகத்துக்கும் பயனுள்ள சேவைகளைச் செஞ்சாச்சரி. மக்கள் சேவை மகேசன் சேவை இல்லையோ!!!!

 ' சாமிச்சண்டை பிடிச்சுக்காம ஒத்துமையா இருப்பது சிறந்த பண்பு' ன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்.

 தொடரும்............:-)

17 comments:

said...

சாமிகள் சண்டை போடாம இருந்தாத்தான் நல்லா இருக்கும்.

said...

ஒன்னாச்சேர்ந்து சாமி கும்பிட்டுக்கிட்டு சமூகத்துக்கும் பயனுள்ள சேவைகளைச் செஞ்சாச்சரி. மக்கள் சேவை மகேசன் சேவை இல்லையோ!!!!

' சாமிச்சண்டை பிடிச்சுக்காம ஒத்துமையா இருப்பது சிறந்த பண்பு'//

தலைப்பும், பகிர்வும் அருமை.
நாம் கற்றுக் கொண்டு சிறந்த பண்மை வளர்த்துக்கனும். நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய பதிவுக்கு வாழ்த்துக்கள்.

said...

இனிய பகிர்வு.

ஒத்துமையா இருக்காங்களே.... அதுவே எவ்வளவு சந்தோஷம்..

இனிய பயணம் தொடரட்டும்.

said...

கல்யாணம், சாவு, ஞானஸ்நானம், குழந்தை பிறந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லும் பூஜை இது நாலும் மனுசவாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயங்கள். இதைக் கொண்டாடாமல் ஒரு போதும் இருக்கக்கூடாது

சிறப்பாய்தான் சிந்தித்திருக்கிறார்கள் !

said...

சாமியெல்லாம் சண்டைகள் போடாது. ஏன்னா.. எல்லா சாமிகளும் ஒரே சாமிதான். ஊரூக்கு ஏத்தமாதிரி மேக்கப்.

ஆனா சாமி கும்பிடுறவன் சண்டை போடுவான். ஒரே சாமியைக் கும்பிட்டாலும் சண்டை போடுவான். நான் உள்ள. நீ வெளிய. இந்த பாட்டைத்தான். அந்தப் பாட்டை அங்கயே பாடிக்கோ. இன்னும் என்னென்ன முடியுமோ, அத்தனை வகையிலும் சண்டை போடுவான்.

சாமியக் கும்பிடுறவன் சண்டையப் போடுறான்னா... கும்பிடாதவன் சும்மாயிருக்கானா? அவனுக்கும் ஆயிரத்தெட்டு சண்டைகள். சாதி, மதம், மொழி, நிறம், பணம், தொழில், ஊர், தெருப்புழுதி, புண்ணாக்கு, புளியங்கொட்டைன்னு சண்டை போட நெறைய காரணங்கள் இருக்கு.

இதத்தான் கண்ணதாசன் இப்பிடி எழுதியிருக்காரு.

இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது
சத்தியத் திருநாயகா முருகா..சத்தியத் திருநாயகா
எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு
சத்தியத் திருநாயகா முருகா..சத்தியத் திருநாயகா

உண்மையே உன் விலை என்ன? படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இந்தப் பாட்டை அழகாப் பாடியிருப்பாரு.

கோயிலுக்குத் தொண்டு செய்யனும்னு ஒருத்தராச்சும் இருக்காரே.

பேசாம இந்தச் சர்ச்சுகளை கோயில்களா வாடகைக்கு விட்டா நல்லாயிருக்குமே. நம்மாளுக கூட்டங்கூட்டமாப் போயி சில்லரையக் கொட்டுவாங்க.

said...

சாமிகளுக்குள் சண்டை வர்றதேயில்லை. ஆசாமிகளுக்குள்ளேதான் சண்டை வருது. நீ பெரியவனா நான் பெரியவனான்னு :-))

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுங்கறதை மறந்துடறோம் இல்லே ????

said...

இனிய பயண (தலைப்பிற்கேற்ற) பகிர்வு... பாராட்டுக்கள்...

படங்கள் காணக் கிடைக்காதவை... அருமை...

நன்றி… தொடர வாழ்த்துக்கள் ஐயா...

said...

தேவாலயத்தின் மூத்த ஊழியரிடமிருந்து தகவல்கள் திரட்டி பல விவரங்களை வெளியிட்டமை வியக்கவைக்கிறது. பிரமாண்ட பைப் ஆர்கன் படம் அசத்துகிறது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

சாமி எங்கே சண்டை போடுது?

மனுஷன்தான் சாமிச்சண்டை போடுறான்!!!!

said...

வாங்க கோமதி அரசு.

உங்கள் வாழ்த்துகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதுவும் 35 வருசமா ஒத்துமை என்பது மிகப்பெரிய சந்தோஷம்!!!!

நீங்கள் தொடர்ந்துவருவது இன்னும் அதிக சந்தோஷம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சிந்திச்சதோடு விட்டுடாமல் செயல் படுத்திக்கிட்டும் இருப்பது மனமகிழ்ச்சியா இருக்குதுங்க.

said...

வாங்க ஜீரா.

இங்கே இருக்கும் பழைய சர்ச்சு ஒன்னு விலைக்கு வந்தப்ப நானும் கோபாலும் இதைத்தான் நினைச்சோம். பேசாம வாங்கி உட்புறத்தை மட்டும் கொஞ்சம் மாத்தி நம்ம கோவிலாக்கிடலாமான்னு!

அப்புறம் அவுங்களுக்குள்ளே என்ன ஆச்சுன்னு தெரியலை. கோவிலை விற்பனைமார்கெட்டில் இருந்து எடுத்துட்டாங்க.

போனவருச நிலநடுக்கத்தில் கோவில் மொத்தமும் இடிஞ்சு வெறும் கற்குவியல்களா ஆனதும்......... ஐயோன்னு வாய் கூவுனாலும் மனசுக்குள்ளே ....நல்லவேளை நாம் வாங்கலைன்னு தோணியது உண்மை:(

நம்ம சாமிச் சிலைகள் எல்லாம் குப்பையோடு குப்பையா போயிருக்கும்.எதையும் அரசு தொடவிடறதில்லை இங்கே:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆமாம்ப்பா. ஒரு பக்கம் ஒத்துமையை சொல்லிக்கிட்டே அடுத்த பக்கம் சண்டை:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்ந்த வருகைக்கு நன்றிகள்.

காணக்கிடைக்காத படங்கள் என்றால் நம்ம கம்போடியாப் பயணத்தில் நல்ல படங்கள் இருக்கின்றன.

said...

வாங்க கீதமஞ்சரி.

இந்த பைப் ஆர்கன் வாசிக்க விசேஷத்திறமை இருக்கணும் இல்லை?

எத்தனையெத்தனை குமிழிகள்!!! எப்படித்தான் வாசிக்கிறாங்களோ!!!

காலப்போக்கில் வாசிக்க ஆள் கிடைக்கலைன்னா என்ன ஆகும் என்ற கவலையும் அடிக்கடி வருது:(

said...

சர்ச் நல்ல அழகாக இருக்கின்றது.

' சாமிச்சண்டை பிடிச்சுக்காம ஒத்துமையா இருப்பது சிறந்த பண்பு' இதை உணராமல்தானே நடந்துகொள்கிறார்கள்.:(