ஒரு அரைக்கிலோமீட்டர் வந்துருப்போம், ஹரிகிபௌரிக்குப் போகும் .
சாலையில் கொஞ்சம் முன்னாலே ஒரு ஆட்டோ தனியா நிக்குது.
சரி விசாரிக்கலாமுன்னு ஒரு தோணல். லிஸ்டைப்பார்த்து, பார்க்காத அஞ்சாறு கோவில்களுக்கு போகணுமுன்னு சொன்னதுக்கு 250 கேட்டார். அம்பது மிச்சம்! கங்கைப்பாலத்தைக் கடந்து ஆட்டோக்காரர் ராம் முதலில் கொண்டு போனது மாயாதேவி மந்திர். நேத்தே சண்டியையும் மானஸாவையும் தரிசிச்சது போதுமுன்னு இங்கே வர அவ்வளவா ஆர்வம் காட்டலை. ஆட்டோக்காரரிடமும் இந்தக் கோவிலைச் சொல்லலை. ஆனால்..................... கூப்பிட்டுத் தரிசனம் கொடுத்தாள்.
மாயாதேவிகோவில் முகப்பு.லேயே உள்ளே நாம் தரிசிக்கப்போகும் தேவிகள் யார்யார்ன்னு படங்களைப்போட்டு வச்சுட்டாங்க.
இந்த மூன்று தேவிகளும் ரொம்ப முக்கியம் அதிலும் இது சக்திபீடக் கோவிலாகவும் இருக்குன்னு இங்கே வந்ததும்தான் தெரிஞ்சது. தக்ஷயாகத்தில் குண்டத்தில் வீழ்ந்து இறந்த சக்தியின் உடல் பலதுண்டுகளா பாரதமெங்கும் பல இடங்களில் விழுந்துருச்சுன்ற கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். இல்லைன்னா இங்கே போய் ஒரு பார்வை பார்த்துக்குங்க.
தேவியின் இதயமும் தொப்பூழ் பகுதியும் விழுந்த இடம்தான் இந்த மாயாதேவி கோவில். ஏழு மோட்சஸ்தலங்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏழில் ஒன்னான மாயாபுரி என்றது இந்த ஹரித்வார்தான்னு சொன்னது நினைவிருக்கா? இந்த இடத்துக்கு மாயாபுரி என்ற பெயர் வரக்காரணமே இங்கே கோவில் கொண்டுள்ள இந்த மாயாதேவிதான்!! இங்கே தரிசனம் செய்யலைன்னா........... இந்த ஆன்மீகப்பயணத்தின் பலன் பூரணமாக் கிடைக்காதுன்னு ஐதீகம்.
ப்ராச்சீன் ப்ராச்சீன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் கோவில்கள் வகையில் நெசமான ப்ராச்சீன் மூணு இங்கே ஹரித்வாரில் இருக்கு. அதுலே இது ரொம்பவே புராதனம். பதினோராம் நூற்றாண்டு சமாச்சாரம்.
மாயாதேவி கோவிலுக்குள் மூணு சந்நிதிகள். மாயாவுக்கு இடப்புறம் காளி. வலப்புறம் காமாக்யா. நிம்மதியான தரிசனம்.
இவர்தான் ஆனந்த பைவர்
அடுத்த பழையது ஆனந்த பைரவர் கோவில். அவருடைய தரிசனமும் நல்லாவே முடிஞ்சது. மூலவரைக்கூடப் படம் எடுத்துக்கோன்னுட்டார் பண்டிட். ஆனந்தமோ ஆனந்தம் எனக்கு:-)
சனிபகவான் மந்திர்
தொட்டடுத்து எதிர்சாரியில் இன்னொரு சந்நிதி. சனி மந்திர். கட்டிடமே வட்டமா இருக்கு, உள்ளே வட்டமான மேடையின் நடுவில் மரம்(ஸ்தலவிருட்சமோ?) கூரையை துளைச்சு வெளியே வளர்ந்து போக, மரத்தையொட்டி சனி பகவான். சுற்றிலும் பீடத்தின் மேல் மற்ற எட்டுகிரகங்கள். நவகிரக சந்நிதிதான். ஆனால் புகழ்மேல் ஆசை கொண்ட 'சனி' ........ 'தன் பெயரைப் போட்டுக்கிட்டார்':-)
மறுபடி பாலம், கங்கை தரிசனம். போய்ச்சேர்ந்தது பார்தேஷ்வர் மஹாதேவ் மந்திர். ஆட்டோவை விட்டு இறங்கும்போது ராம் சொன்ன சொல் காதில் தேனாகப்பாய்ஞ்சது. உள்ளே ருத்திராட்ச மரம் இருக்குன்னார்!!!!
ஆட்டோக்காரர் ராம்
அடடாடா...... தேடிப்போன வள்ளி காலில் சிக்கியதே!!!!!! பெரிய மேடையில் நடுநாயகமா ஒரு பெரிய மரம். மரத்தைசுத்தி ஏகப்பட்ட சிவலிங்கங்கள். ஸ்ரீமஹாகாலேஷ்வர் உஜ்ஜயினி, ஸ்ரீமல்லிகார்ஜுனர் ஸ்ரீ சேலம், ஸ்ரீ ஓம்காரேஷ்வர் நர்மதான்னு பெயர்ப்பலகைகள். ஓஹோ..... பிரசித்தி பெற்ற கோவில்களின் சிவன்ஸ். ஒன்பது மொழிகளில் ருத்ராக்ஷ என்று எழுதி வச்சுருக்காங்க. அதுலே தமிழும் இருக்கு 'ருட்ரக்ஷ' ஆஹா....... தென்னிந்த மொழிகள் நாலுமே இருக்குங்க!!!!! அப்டிப்போடு!
மரத்தையும் லிங்கங்களையும் வலம் வர வழி வச்சுருக்காங்க. எங்கேயும் ஒரு குப்பைகூளமில்லாமல் படு சுத்தமா நேர்த்தியா இருக்கு வளாகம் முழுசுமே!
உடனே நம்ம கயலுவின் நினைவு வந்துச்சு. இதான் இதான்......சிறுமுயற்சியில் இதே மரத்தின் படம் போட்டுருந்தாங்க.
கோவிலுக்குள் நுழைஞ்சோம். ஒரு பெரிய நீண்ட சதுர ஹாலும் முன் வராண்டாவும்தான். பாரத் (Parad) லிங்கம். பாதரசத்தில் செஞ்ச லிங்கம். அந்தக் காலத்துலே ரிஷிகளும் முனிவர்களும் திரவ நிலையில் உள்ள பாதரசத்தை, மூலிகைகளைக்கொண்டு ரகசிய ஃபார்முலா மூலம் திடநிலைக்குக் கொண்டுவந்து லிங்க ரூபமாச் செய்ஞ்சுருவாங்களாம். இதை பூஜித்தால் விசேஷ 'பவர்' கிடைக்குமுன்னு நம்பிக்கை. இதைப் பூஜை செய்யும் அரசர்கள் சகல வெற்றிகளையும் கீர்த்திகளையும் அடைவார்களாம்.
இந்த வகையில் 151 கிலோ பாதரசத்தைக் கெட்டிப்படுத்திச் செஞ்ச சிவலிங்கம் இங்கே பூஜைக்கு வச்சுருக்காங்க. பொதுவா வட இந்தியக் கோவில்களி;ல் சிவனுக்கு நாமே அபிஷேகம் ஆரத்தி செஞ்சுத் தொட்டுக்கும்பிடுவது இங்கே மட்டும் இல்லை. சுத்திவர கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. ஏழுதலை வெள்ளி நாகம் ஒன்னு சிவனுக்குக் குடை பிடிக்குது. எதிரில் கருங்கல் நந்தி. இந்த லிங்கத்துக்கு வயசு 25. 1986 வருசம் மஹாசிவராத்திரி தினம் பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க. கண்ணால் பார்த்தாலே பாவங்களைப் போக்கும் மஹாலிங்கம் இது. நம்பணும். நம்பினால்தான் தெய்வம். நம்புங்க. தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச பாவம் அத்தனையும் போகட்டும்.
பாதரச லிங்கம்
வெளிவெராந்தாவில் ஒரு கோடியில் பக்தர்கள் நினைவுப்பொருட்கள் வாங்கிக்க வசதியான ஒரு ஸ்டால். இந்தப் பக்கம் மேசை, இருக்கை போட்டு அதில் கோவில் அதிகாரி மேற்பார்வை பார்த்துக்கிட்டு இருந்தார். அவர் முன்னால் ஒரு கும்பா நிறைய ருத்திராக்ஷங்கள். எல்லாம் மூன்று முகங்கள். புத்தம்புதுசு. பழுத்த தோல்கூட முழுசும் உதிராத நிலை. விற்பனைக்கு வச்சுருக்காங்க. எல்லாம் இங்கே இருக்கும் ருத்ராக்ஷமரத்தில் விளைஞ்சது! அரிதாகத்தான் ஒருமுகமும் இருமுகமும் கிடைக்குமாம். மற்ற முகங்களுக்குப் பிரச்சனையே இல்லை. மூன்று முகம் ஒன்னு 11 ரூபாய். நாலு முகம் 21. ரெண்டு முகம் 400ன்னு விலைப்பட்டியல் சொல்லுது. நம்மிடம் ஏற்கெனவே நாலு அஞ்சு ஆறு இருக்கேன்னு ஒரு மூணுமுகம் வாங்கினேன்.
இந்தக் கோவிலும் ஒரு மடம்/ஆஸ்ரமத்தைச் சேர்ந்ததுதான். (ஆச்சார்யா மண்டலேஷ்வர் ஜூனா பீதாதீஷ்வர், ஸ்வாமி அவ்தேஷானத் கிரி ஜி மஹராஜ்) கோவிலுக்குப் பின்பக்கம் அழகான தோட்டத்துக்கு நடுவில் பிரமாண்டமான ஆஸ்ரமக் கட்டிடம் கம்பீரமா நிக்குது. கிட்ட நெருங்கவிடாமல் பலத்த காவல்! போகட்டும்................
இதே வளாகத்தில் இன்னொரு சிவனும் இருக்கார். ஸ்ரீ மஹா ம்ருத்யூஞ்ஜெயர். ஏழெட்டுப்படிகள் வச்ச அருமையான கோவில். அழகான வேலைப்பாடுகள். அகலமான வெராந்தா, கலையழகோடு கூடிய தூண்கள், கதவுகள், பெரிய கரும்பளிங்கு லிங்கம். இவருக்கேற்ற அளவில் இதே கரும்பளிங்கில் செதுக்கிய நந்தின்னு பிரமாதமா இருக்கு. நாமே அபிஷேகம் செஞ்சு வழிபடலாம்.
ஹரித்வாரின் இந்தப் பகுதிக்கு கன்கல் என்று பெயர். அகலமான வீதிகளும், கலையழகோடு இருக்கும் பல கட்டிடங்களுமா இருக்கு. ஹரிகிபௌரியில் இருந்து சுமார் ஒரு அஞ்சு அஞ்சரைக் கிலோமீட்டர் இருக்கும். மகாபாரதத்தில் வாயுபுராணத்தில் இந்த இடத்தைப்பற்றி கன்கலான்னு வருதாம். பஞ்ச்தீர்த் என்ற வகையில் இதுவும் ஒரு தீர்த்(தம்) வனவாசத்தில் பாண்டவர்கள் இருக்கும்போது மகாமுனிவர் தௌம்யர், தீர்த்தங்களின் மகிமையைச் சொல்லும்போது ஹரிகிபௌரி, கங்கலா பற்றி எல்லாம் சொல்கிறார்.
சிவனுக்கு இது கோடை வாசஸ்தலமாம். ஓ....அப்ப குளிர்காலத்துக்கு? குருக்ஷேத்ரம் போயிருவாராம்!!!!! இத்தைப் பார்றா...... இமயமலை வாசிக்கு குளிருன்னு ஒன்னு தனியா இருக்கா:-)
சரித்திரக்குறிப்பு வகைகளில் சொன்னாலும் இது ரொம்ப முக்கியமான ஊர். சீக்கிய மதத்தை ஸ்தாபிச்ச குரு நானக் ஜி, 1504 வது ஆண்டு இங்கே விஜயம் செஞ்சுருக்கார். இவுங்களொட ஒரு பிரிவான உதாஸின் அகாராவை ஏற்படுத்தியவர் நானக் ஜியின் மகன் பாபா ஸ்ரீ சந்த் மஹராஜ் இங்கே அழகான மாளிகை கட்டி இருக்கார். அதோட முன்புறம்தான் கீழே இருக்கும் படம்.
ஸ்வாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யை நிவேதிதா இங்கே வந்துருக்காங்க. முக்கிய கல்விச்சாலைகள் இருந்த இடம். முந்தியெல்லாம் இந்த ஊர் தனி சமஸ்தானமாவும், ஜமீந்தார்களும் ராஜ குடும்பத்தினரும் நிறைஞ்சு இருந்ததாகவும் சொல்றாங்க. அதுக்குச் சாட்சியா நிறைய மாளிகைகள் (ஹவேலி) அங்கங்கே இருக்கு. கோடைகாலத்துலே இங்கே வந்து தங்குவாங்களாம்.
1842 வது ஆண்டு, கங்கை - கன்கல் கால்வாய் கட்ட ஆரம்பிச்சதும்தான் கங்கைக்கரையை ஒட்டி இங்கே ஏகப்பட்ட ஆஸ்ரமங்கள் வந்துருக்கு. எக்கச்சக்கக் கோவில்கள் நிறைஞ்ச ஊர். இப்போ இந்த ஊர் ஹரித்வாரின் ஒரு பகுதியா மாறிக்கிடக்கு.
இதெல்லாத்தையும் விட அதிமுக்கியமான ஒரு 'சம்பவம்' நடந்த இடமும் இதுதான். அது என்னன்றதை அடுத்த பகுதியில் சொல்றேன்.
தொடரும்...........................:-)
PIN குறிப்பு: என்னைமாதிரி ருத்ராக்ஷமரத்துக்கு அல்லாடாம.....பாதரசத்தையும் ருத்திராக்ஷத்தையும் முடிச்சுப்போட்டு வச்சுக்குங்க:-) ரெண்டு நாளா என்னாபாடு படுத்திருச்சு!
Wednesday, March 16, 2011
கண்டேன் கண்டேன் கண் நிறையக் கண்டேன்.
Posted by துளசி கோபால் at 3/16/2011 04:36:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
தக்ஷேஸ்வர் மந்திர் செல்லும் வழியில் சில ஆஸ்ரமங்களில் ருத்ராக்ஷ மரங்கள் இருக்கின்றன. நல்ல பயணக் குறிப்புகள் கொடுக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ருத்திராக்ஷ மரம் பார்க்கணும் என்ற ஆசை ஒருவழியா அடங்குச்சுன்னு சொல்லணும்.
தொடர்ந்த வருகைக்கு நன்றிகள்.
கட்டுரைக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி.
//நம்பணும். நம்பினால்தான் தெய்வம். நம்புங்க. தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச பாவம் அத்தனையும் போகட்டும்.//
நம்புறங்க டீச்சர்,
பாதரசத்தில் செய்த சிவலிங்க தரிசனத்திற்கு நன்றி. அப்படியே இவரையும் தரிசனம் செய்துருங்க
அப்பாடா ருத்ராக்ஷ மரத்தைப் பார்த்தாச்சா. அத்தனை புண்ணியத்தில எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டீங்க. உண்மையிலியே பாதரச லிங்கம் எப்படிச் செய்தாங்களோன்னு அதிசயமா இருக்கு. ப்ராசீன் மந்திர்னு ரொம்பப் பழையகால கோவிலுக்கே போயிருக்கீங்க. நல்ல பதிவுப்பா.
இரண்டையுமே முடிச்சுப் போட்டு வச்சாச்சு.. :))
ருத்ராக்ஷ மரம்....ஆஹா! நானும் பார்க்கணுமே!
ருத்ராக்ஷம்.. மரம் ரெண்டையும் பாத்துட்டேன். மரத்துல காய்ச்சுக்கிடக்கும்போதும் பார்க்க கொடுத்துவெச்சா எவ்ளோ நல்லாருக்கும் :-)))
மிக அற்புதமான பதிவு. நேரில் பார்ப்பது போலவே உள்ளது. மிக்க நன்றி
வாங்க லோகன்.
தங்க லிங்கம் சூப்பரா இருக்கு. மதுரா பயணத்தில் ஒரு தங்கத்தலை சிவனைப் பார்த்துருக்கேன்.
தங்கத்தைவிட பாதரசம் கட்டுவது கொஞ்சம் மெனெக்கெடவேண்டிய வேலைதான் இல்லே?
வாங்க வல்லி.
கிடைச்ச புண்ணியத்தையும் தளத்தில் கொட்டிவச்சுருக்கேன். கைப்பிடி அள்ளிக்கிட்டுப் போங்க:-)
வாங்க சுசி.
முடிச்சு போட்டுக்கிட்டதுக்கு நன்றி.
எப்படி முடிச்சுப்போடணும்? விளங்கலையேன்னு கோபால் புலம்பிக்கிட்டு இருக்கார்:-)))))
வாங்க அன்புடன் அருணா.
இமயமலைச்சாரல் பக்கங்களில்தான் இந்த மரம் ஏராளம். ஆனால் ஊட்டியிலோ இல்லை கொடைக்கனாலிலோ பார்த்ததாக நம்ம தெக்கி ஒருக்காச் சொல்லி இருக்கார்.
வாங்க அமைதிச்சாரல்.
ஏப்ரல் மே மாதம் பூக்க ஆரம்பிக்கும் மரம் ஜூன் மாசம் கொத்துக்கொத்தாக் காய் பிடிச்சு செப்டம்பர் அக்டோபரில் நீலக்கலரில் பழங்கள் உதிருமாம்.
நாமோ நவம்பர் கடைசி வாரம் போயிருந்தோம்:(
வாங்க மலைக்கோட்டை மன்னன்.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
மீண்டும் வருக.
படங்கள் நல்ல தெளிவாக உள்ளது. நேரே போவது போல உள்ளது. நன்றி துளசி.
கண்டுகொண்டோம் கண்டுகொண்டோம்:)
வாங்க வேதா.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிப்பா.
வாங்க மாதேவி.
கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.
Post a Comment