Friday, March 18, 2011

மாமனார் வீட்டுக்கு வந்து...............ஆடித் தீர்த்துட்டார்!

தண்ணி தவிக்கி......... யாராவது வந்து கொஞ்சம் தண்ணி அடிச்சுக்கொடுக்க மாட்டாங்களா.... என்ற பார்வையோடு வளாகத்தின் உள்ளே இருக்கும் அடிப்பம்புக்குப் பக்கத்தில் நின்னுக்கிட்டு இருக்காங்க தாயும்சேயுமா ரெண்டு பேர், சுத்திவர கோவில் கடைகள். கேட்டைக் கடக்கும்போதே இறந்துபோன மனைவியைக் கையில் தூக்கிவச்சுக்கிட்டுப் பேந்தப்பேந்தப் பேய் முழி முழிக்கும் புருஷன். பாதையின் ரெண்டுபக்கமும் மேடையில் நின்னு வாய் பொளந்து சீறும் சிங்கங்கள்..
சாமியார் உடை அணிஞ்ச(?) ஒருத்தர் கைப்பம்பை அடிச்சுத் தனக்கு மட்டும் தண்ணீர் பிடிச்சுக்கிட்டுப் போனார். சொட்டுச்சொட்டா கடைசியில் வந்த நீரை நீளமான நாக்கால் கீழே சிந்தாமல் பிடிக்கும் பிரயத்தனத்தில் கன்று. தாங்க முடியாமல் ஓடி கைப்பிடியைப் பிடிச்சுத் தண்ணீர் அடிச்சேன். தபதபன்னு வரும் நீரை அப்படியே குடிக்கும் கன்றைப் பார்த்தால் பாவமா இருக்கு. ஆவலா அது குடிப்பதைப் பார்த்தால் எனக்கு நிறுத்தணுமுன்னு தோணலை.

தக்ஷப்ரஜாபதி மந்திருக்குள்ளே போறோம். தாக்ஷாயணியின் தகப்பனார் இவர். சிவனின் மாமனார். போன பதிவில் கதை இருக்கு. அப்போ பார்க்காதவங்க இப்போ ஒருக்கா பார்த்துக்குங்க.

சோம்பல் படுபவர்களுக்கு ஒரு 'சுருக்' இங்கே.

மருமகனுக்கு அழைப்பு வைக்காம தக்ஷன் யாகம் செஞ்சதும், கணவனை அவமதிச்சதைத் தாங்காத சதி தாக்ஷாயணி அதே யாககுண்டத்தில் விழுந்து உயிரைப் போக்கிக்கிட்டதும் விஷயம் அறிஞ்சு வந்த சிவன், தக்ஷனை அழிக்க வீரபத்திரரையும் பத்ரகாளியையும் மற்ற சிவகணங்களையும் ஏவியதும் அவர்கள் தக்ஷணைக் கொன்றதும் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவள் உடலைச்சுமந்து சிவன் பேயாட்டம் ஆடுனதும் எல்லாம் இங்கே நடந்த சம்பவங்கள். இங்கிருந்து ஒரு நாலைஞ்சு கிலோமீட்டரில் ஜ்வாலாப்பூர் என்ற ஊர்கூட இருக்கு!

கோவிலில் ஒரு பெரிய யாககுண்டம், அதுக்குப் பின்னால் ஒரு பளிங்கு நந்தி சிவலிங்கத்தைப் பார்த்தபடி. கோவிலுக்கு வயசு 200. ராணி தன்கௌர் 1810 வது ஆண்டு கட்டியது. 1962 -இல் பழுது பார்த்து புனரமைச்சு இருக்காங்க.

இறந்துபோன தங்க்ஸை சூலத்தில் குத்தி எடுத்துக்கிட்டு ஜாலியாப்போகும் ரங்க்ஸ் பாருங்க..................என்னமோ பார்பிக்யூ சாஸேஜை ஃபோர்க்லே குத்தி எடுத்ததுபோல. ( உண்மையில் அவதான் நெருப்புலே விழுந்து நல்லா சுட்டவளாச்சே)
வளாகம் ரொம்பப் பெருசு. இதுக்குள்ளேயே நாலைஞ்சு கோவில்கள் இருக்கு. இடதுபக்கம் தக்ஷேஸ்வர் கோவிலும் வலதுபக்கம் ஸ்ரீ ப்ரஹோஷ்வர் மஹாதேவ் சந்நிதி ஒரு பக்கமும் மந்திர் ஸ்ரீ தஷ் மஹாவித்யா னு இன்னொரு சந்நிதியுமா இருக்குத் தனிக்கட்டிடத்தில்.
இந்த ரெண்டுக்கும் நடுவில் இருக்கும் வாசலில் நுழைஞ்சு போனால் ஸ்ரீதக்ஷேஸ்வர் மஹாதேவ் கோவிலில் வைதீக கர்மங்கள் செஞ்சுக்க கட்டி வச்சுருக்கும் பெரிய கட்டிடமும் அதில் நடக்கும் வேத பாடசாலையும். பின்பக்கம் போனால் தக்ஷ காட் என்ற படித்துறை வருது. வலப்பக்கமா ஒரு ராதாகிருஷ்ணா மந்திர் தசாவதாரச் சிலைகளோடு! சின்ன ஹாலில் சுத்திவர சிலைகளை அமைச்சுருக்காங்க.

நீளமான குறுகிய சந்து போல இருக்கும் வழியில் நடந்து பின்பக்கம் போனால் சீதளமாதா சதி பிறந்த இடமுன்னு இன்னொரு தனிக்கோவில்.. இது ப்ராச்சீன்னு சொல்லவும் வேண்டுமோ? சின்னச்சின்னதா மேடை போட்டு உக்கார்ந்துக்கிட்டு பக்தர்களுக்கு குங்குமம் கொடுக்கறதும், மயில் பீலியால் தலையைத் தடவி ஆசி வழங்கறதுமா தக்ஷிணை வாங்குவதில் படு பிஸியா இருக்காங்க பண்டிட்டுகள்.
தக்ஷ காட்லே கங்கையில் இறங்கிக் கோரியெடுத்துத் தலையில் தெளிச்சுக்கிட்டு அஞ்சு நிமிசம் அந்த (அழுக்கு) படிக்கட்டில் உக்கார்ந்து கண்மூடி பிரார்த்தனை செஞ்சுட்டுத்தான் கிளம்புனேன். ஊரில் சுற்றிவரும்போது எங்கே பார்த்தாலும் கங்கை என்றாலும் அஞ்சு நிமிஷம் கங்கைக்கரையில் உட்காரலையே என்ற ஏக்கத்தை ஏன் சுமப்பானேன்?

சதிமாதா பிறந்த இடத்துக்குப் பக்கத்துலே இன்னொரு வழி இருக்கேன்னு போனால் அங்கேயும் ஒரு அழகான கட்டிடம். மா ஆனந்தமயி சமாதி இருக்குமிடம். 1896 வது ஆண்டு பிறந்த கிழக்கு வங்காள மாநிலவாசி. (இதுதான் இப்போ பங்ளாதேஷ்) 17 வயசில் கல்யாணம். இருபத்தியாறு வயசில் சந்நியாசினி ஆகிட்டாங்க. அவுங்களுக்குக் கிடைச்ச வித்தியாசமான தெய்வீக அனுபவங்களால் ஆன்மீகத்தை வளர்த்துருக்காங்க. 1932 வது ஆண்டு கணவருடன், டேராடூன் அருகில் இருக்கும் கிஷன்பூரில் வந்து தங்கிட்டாங்க. எல்லா சாமியார்களுக்கும் பின்தொடரும் மக்கள் கூட்டம் ஒன்னு இருக்குல்லே? அதுபோல் இவுங்களுக்குப் பின்னேயும். ஆஸ்ரமம் எல்லாம் அமைச்சாங்க. தன்னுடைய 86வது வயசில் மரணம். இவுங்களோட கடைசி கர்மங்கள் எல்லாம் இங்கே தக்ஷ காட்டில்தான் நடத்தியிருக்காங்க. அந்த நினைவாதான் அந்த ஆஸ்ரமவாசிகள் இங்கே இந்த சமாதிக் கோவில் கட்டியிருக்காங்க இங்கேயும் வைதீகக்காரியங்களுக்கான யாக குண்டங்களும், 'மா' வின் தத்துவங்களைச் சொல்லிக் கொடுக்கும் வகுப்புகளுக்கான ஹாலும், ஆஸ்ரமவாசிகள் வந்தால் தங்க வசதிகளும் இருக்கு. விசேஷமா இங்கேயும் ருத்ராக்ஷ மரங்கள் இருக்காம்! நமக்கு வளாகம் முழுசும் சுத்திப்பார்க்க நேரமில்லை:(
நாங்க போனபோது தக்ஷேஸ்வர் கோவிலை விட இங்கேதான் நல்ல கூட்டம். கண்ணாடிக் கதவின் வழியா தரிசனம் ஆச்சு. சுவரோரமா பலர் கண்ணைமூடி தியானத்தில் இருந்தாங்க. திரும்ப சதிமாதா கோவில் வளாகத்துக்குள்ளே நுழைஞ்சு வந்தவழியாவே திரும்பிப் போனால் தக்ஷேஸ்வர் கோவில்போகும் சந்துவழியில் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி முளைச்சுருக்கு. ஒரு பக்கம் விரிப்பு போட்டு வரிசையா யாசகர்கள் உக்கார்ந்துருக்காங்க. எல்லோருக்கும் எவர்ஸில்வர் தட்டு. அங்கங்கே ஆட்கள் ஆப்ஸெண்ட். தட்டுகள் மட்டும் இடம்பிடிச்சுருக்கு. இந்தப்பக்கம் குட்டியா ஒரு மேசை. அதுலே ஒன்பது ஒத்தைரூபாய்களா கூறுகட்டி வச்சுருக்காங்க. நாம் பத்து ரூபாய் நோட்டு கொடுத்துட்டு ஒரு கூறு எடுத்துக்கலாம். அதை வரிசையில் உள்ள தட்டுகளில் போட்டுக்கிட்டே போகலாம். தட்டில் பத்து நாணயங்கள் ஆனதும் அவுங்க அதை கம்பேனி முதலாளியம்மாகிட்டே கொடுத்துட்டு நோட்டா வாங்கி இடுப்புலே வச்சுக்கறாங்க. உக்காந்த இடத்துலேயே நமக்கு(ம்) தர்மம் செய்ய உதவிக்கிட்டு அவுங்களுக்கும் ஒரு சம்பாத்தியம். நான் கடவுள் நினைவுக்கு வந்துச்சு.
அங்கிருந்து கிளம்பி ஹரித்வார் வந்தோம். பாலம் கடக்குமுன் இடப்பக்கம் பில்வபர்வத் குன்றில் மனஸாதேவி கோவிலும் ஹரித்வார் நகரக்கட்டிடங்களும், பாலத்தினடியில் கங்கையுமா கண்ணில் படுது. க்ளிக் க்ளிக்:-) தூரக்க ஹரிகிபௌரியில் படித்துறைகளில் கூட்டமா மனிதர்கள்.வெளியே இருந்து பார்த்தால் கூடத்தின் விஸ்தாரம் புரியவே புரியாது. இந்த 'பாவன் தாம்' முழுக்க முழுக்க ராஜஸ்தான் கண்ணாடி வேலைப்பாட்டுக் கலை. முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகள் வச்சு உள்கூரை சுவர்கள், தூண்கள் உட்பட கண்ணாடி மாளிகையில் நுழைஞ்சு நடக்கும் எஃபெக்ட். நடுநாயகமா பாவனகுமாரர் நம்ம நேயுடு பட்டு உடுத்தி 'கதை'யுடன் நிக்கறார். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. தெருவில் நின்னாலே கண்ணுக்கு நேரா இருப்பவரை க்ளிக்கினேன். ஒன்பது படங்களை கோவிலே இருவது ரூபாய்க்கு விக்குது. அதில் கண்ணாடி வேலைப்பாடுகள் ஒன்னுமே தெரியலை:( சிலைகளின் அழகுமட்டுமே!
லக்ஷ்மிநாராயணன், சிவன்(மனிதரூபம்)பார்வதி, ராதா கிருஷ்ணா,துர்கை, புள்ளையார், ஹனுமன், ரெண்டு குதிரைகள் பூட்டிய அர்ஜுனனின் ரதம், சந்தோஷி மாதா இப்படி வரிசைகட்டி நிற்கும் கண்ணாடிச் சந்நிதிகள். பெரிய பெரிய சிலைகள். எல்லா சிலைகளுக்கும் ஆடையும் ஆபரணமும் பட்டும், பளபள ஜிகினாவுமா ஜம்முன்னு அலங்காரம். ஒவ்வொரு சந்நிதிக்குள்ளும் தலையை நீட்டிப்பார்த்தால் இடமும் வலமுமாக அங்கே இருக்கும் சாமிச்சிலையும் நம் தலையுமா ஆயிரக்கணக்கான பிரதிபலிப்புகள். ஒன்றுக்குப்பின்னால் ஒன்றா மூணு வரிசையா கண்ணாடி ஹால்கள்.

கோவில் என்ற பக்தி உணர்வு வரலை. ஏதோ எக்ஸிபிஷனில் இருப்பதுபோல...... இருந்துட்டுப் போகட்டும். இதுவும் ஒரு அனுபவம்தான்.

ஸ்வாமி வேதாந்தானந்த் ஜி மஹராஜ் இந்த பாவன் தாம்(கோவில்) நிறுவியிருக்கார். பராமரிப்புக்குச் சொல்லவும் வேணுமா? கண்ணாடிபோல எல்லாமே பளிச்:-)))))

தொடரும்....................:-)

21 comments:

said...

இனிய பயணக் குறிப்புகள். சதிமாதா மந்திர் பார்த்த நினைவு மனதுக்குள் ரீங்காரம் செய்கிறது. தொடருங்கள்.

said...

தவிச்ச வாய்க்கு தண்ணி இதுதாங்க தலயாத்திரையைவிட சிறந்தது.

பில்வபர்வத் குன்றில் மனஸாதேவி கோவிலும்... ராஜஸ்தான் கண்ணாடி வேலைப்பாட்டுக் கலை நேயுடுவும் நிறைந்த அழகுடன் இருக்கிறது.

said...

தண்ணீர் குடுத்த கதை நெகிழவச்சிடுச்சு துளசி உங்களுக்காகவே காத்திருந்திருப்பாங்க போல ..

நான் ‘மா’ வோட புக் வாங்கிவந்தேன். படிக்க ரொம்ப நல்லா இருந்தது.. அந்தம்மா என்ன அழகுங்கறீங்க ..

said...

தவிச்ச வாய்க்கு தண்ணி குடுத்தீங்களே.. அதான் மிகப்பெரிய புண்ணியம்.

said...

அன்பு துளசி. நம் ஊரிலும் கண்ணாடி அறை பார்த்திருப்பீர்கள். பெருமாளை பள்ளிகொள்ள்ச் செய்யும் அறையாகச் சில இடங்களில், இல்லாட்டி கண்ணாடி சேவைன்னு தனியா ஒரு ச்சேவை. காஞ்சி வரத ராஜர் கோவிலில் கூட பார்த்திருக்கிறேன்.
ஆனல்ல் இந்தப் படங்களைப் பார்த்தால் மொகலே ஆசம் ''ப்யார் கியா தோ டர்னா க்யா தான் நினைவு வருது.:)
ஹரித்வார்ல ரெண்டு உயிருக்கு ஜலதானம் செய்து புண்ணியம் தேடிக் கொண்டீர்கள். மனசுக்கு நிறைவா இருக்குப்பா.

said...

தாகம் தீர்த்த அன்னைக்கு ஒரு ஸ்பெசல் ஓ ;)

said...

ரொம்ப நன்றி டீச்சர்.

said...

இந்தத் தண்ணீர்ப் பிரச்னைக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ள சிறப்பான தீர்வு, இந்த இணைப்பில்
http://www.rediff.com/business/slide-show/slide-show-1-amazing-innovations-from-rural-india/20110316.htm

said...

''இறந்துபோன தங்க்ஸை சூலத்தில் குத்தி எடுத்துக்கிட்டு ஜாலியாப்போகும் ரங்க்ஸ் பாருங்க..................என்னமோ பார்பிக்யூ சாஸேஜை ஃபோர்க்லே குத்தி எடுத்ததுபோல. ( உண்மையில் அவதான் நெருப்புலே விழுந்து நல்லா சுட்டவளாச்சே)''....nalla uvamai sonneenga.....
'

said...

இறந்துபோன தங்க்ஸை சூலத்தில் குத்தி எடுத்துக்கிட்டு ஜாலியாப்போகும் ரங்க்ஸ் பாருங்க..................என்னமோ பார்பிக்யூ சாஸேஜை ஃபோர்க்லே குத்தி எடுத்ததுபோல. ( உண்மையில் அவதான் நெருப்புலே விழுந்து நல்லா சுட்டவளாச்சே)'' nalla uvamai sonneenga...
vetha.Elangathilakam
Denmark.(kovaikkavi)

said...

நல்ல படங்கள் நிறைந்த விபரங்கள் அடங்கிய பதிவு. நேரில் பார்த்தது போன்ற உணர்வு. நன்றி அம்மா.
Madam, I have written my first blog 'Srivillipuththuuril Thirumukkulam' - when you are having time please visit my blog
rathnavel-natarajan.blogspot.com & have your comments & guidance.
rathnavel_n@yahoo.co.in
rathnavel.natarajan@gmail.com
Thanks Madam.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பிரமாதமான பெரிய கோவில்கள் இல்லைதான் என்றாலும் அந்த சூழல் மனசுக்கு நல்லாத்தான் இருக்குல்லே!

said...

வாங்க மாதேவி.

தலயாத்திரை புண்ணியமெல்லாம் பதிவர்களுடன் பகிர்ந்தாச்சுப்பா.

said...

வாங்க கயலு.

ஒரு பத்தெட்டு எடுத்து வச்சா எதாவது ஒரு படித்துறையில் இறங்கி வேணுமட்டும் குடிக்கலாம். ஆனாலும் இதுகள் சோம்பேறியாக் குழாய்ப் பக்கத்துலேயே உக்கார்ந்துக்க கத்துக்கிட்டு இருக்கு:-)))))

ம்யூஸியம் ஒன்னு இருக்கு. நாங்கதான் போகலை 'மா' பார்க்க:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

புண்ணியம் பகிர்ந்தாச்சு:-)

said...

வாங்க வல்லி.

நம்ம பெருமாள் கோவிலில் கண்ணாடி அறையில் முகம்பார்க்கும் கண்ணாடிகள் பெருசுபெருசா சுவர் முழுசும் இருக்கு. ஆனால் இங்கே சின்னத்துண்டுகள் கலர்கலராய் ஒட்டிவச்சுருக்காங்கப்பா.

said...

வாங்க கோபி.

தண்ணி கொடுத்தால் புண்ணியமாம். அதான்....... நம்ம தமிழ்நாட்டுலே அரசே........ப்ச்!

said...

வாங்க சுசி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க பிரகாசம்.

சுட்டிக்கு மிகவும் நன்றி.

said...

வாங்க வேதா,

யாரும் கவனிக்கலைன்னு நினைச்சேன்:-))))))

said...

வாங்க ரத்னவேல்.

தங்கள் தளம் புகைப்படங்களுடன் விவரமாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் உங்கள் ஊருக்கு வந்தபோது இருட்டும் சமயம் ஆகிவிட்டதால் நேராகக் கோவிலுக்குள் போய்விட்டேன். திருக்குளத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. அந்தக்குறை உங்கள் பதிவால் தீர்ந்தது. நன்றிகள் பல.