புகைமூட்டத்தின் வழியா 'பலமே' இல்லாத சூரியனையும் தூரத்தே தெரிஞ்ச சண்டியின் கோவில் கோபுரத்தையும் பார்த்தாலே ஒரு மாதிரி வேறெந்த உலகத்திலோ இருப்பதுபோல ஒரு தோணல். 'எனக்குத்தான் க்ளிக்கக் கையில்லையே' என்ற குறையை கோபால் தீர்த்தார். தரையில் இருந்து 2900 அடி உசரத்தில் இருக்கு இந்தக் கோவில்.
சண்டி கோவிலுக்கு இப்போ படியேறி நடந்து போய்க்கிட்டு இருக்கோம். வழியில் குரங்குப் பட்டாளங்கள் ஏகப்பட்டது. அப்போ ஒரு பெரிய குரங்கன் (மூணடி உயரம் இருப்பான்) தாவிக் குதிச்சுக்கிட்டு அப்படியே பயமுறுத்திக்கிட்டே வர்றான். சட்னு கையில் இருந்த தேங்காய்த் துண்டங்களை வேற பக்கம் வீசி எறிஞ்சேன். உடனே அங்கே தாவிட்டான். அப்பாடா....ன்னு இருந்துச்சு.
இதுக்காகத்தான் கூடுதல் தேங்காய் கிடைச்சதோ? தீர்க்கதரிசனம்!!!!!
கோவிலுக்கான நுழைவு வாயில் அலங்காரத்தில் புள்ளையாரும் ரெண்டு சிங்கங்களும்,ரெண்டு யானைகளும். வரிசைக்கான கம்பித்தடுப்பு முழுசும் சிகப்புச் சரிகைத் துணிகளால் கோடிக்கோடி வேண்டுதல்கள். கடந்து உள்ளே போனால் இங்கேயும் விசேஷ நாட்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வரிசைகள். ஆனால் எல்லா நாட்களுமே விசேஷம்தான்னு அதன் வழியாவே பக்தர்களை கோவிலுக்குள் அனுப்பி வைக்குது! கம்பித்தடுப்பு முடிஞ்சதும் ஒரு மாடிப்படி ஏறிப்போனால் 'மூலவள்!
சும்பன் நிசும்பன் என்று ரெண்டு பலம் கூடிய அசுரர்கள் இந்திரனை விரட்டியடிச்சுட்டுத் இந்திரலோகத்தைப் பிடிச்சுக்கிட்டாங்க. அங்கே இருந்த சாமிகளையெல்லாம் துரத்திட்டாங்க. தேவர்கள் எல்லாம் அன்னை பார்வதியிடம் போய் அழுது புலம்பறாங்க. 'கவலைப்படாதீங்க. இதோ வர்றேன்' னு சண்டி அவதாரமாக் கிளம்பி வந்து அசுரர்களைப் போட்டுத் தள்ளிட்டாங்க. இந்திரனுக்கும் நிம்மதி கிடைச்சது. ஏன் மற்ற பெரிய சாமிகளிடம் உதவி கேக்கலை? பெண் கையால் மட்டுமே மரணம் என்ற வரம் கிடைச்சவங்களாம் இந்த அசுரர்கள். வீட்டோடு கிடக்கும் பொம்பளை வெளியே வந்து நம்மைக் கொல்லப் போறாளான்னு அசட்டையா இருந்துருப்பாங்க போல!
வதம் முடிஞ்சு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்தது இந்த மலையில், இதே இடம். அதனால் இங்கேயே தேவர்கள் சண்டிக்குக் கோவில் கட்டி இருக்காங்க. உள்ளே இருக்கும் மூலவள் சிலை ஆதி சங்கரர் எட்டாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்தது. இப்போ நாம் பார்க்கும் இந்தக் கோவில் 1929 வது வருசம் காஷ்மீர் அரசர் சுசத் சிங் கட்டியது.. இஷ்ட சித்திகள் எல்லாம் பூர்த்தி செய்து தரும் சண்டிக்கு இங்கே ஏகப்பட்ட மவுசு.
சிங்க வாஹனத்தில் எட்டுக்கைகளோடு இருக்கும் பளிங்குச்சண்டியை, சண்டிகரின் சண்டிக்குத் தரிசனம் செஞ்சு வச்சார் பண்டிட். (படம் எடுக்கத் தடை உள்ளதாம்!)சந்நிதியை வலம்வந்து வெளியேறும் வாசலுக்குப்போனால்......கீழே இறங்கும் படிகள் முழுசும் வாநரப்படைகள். 'எப்படி எங்களைத் தாண்டிப்போவே?'ங்குதுங்க. புறமுதுகு காட்ட வேண்டியதாப் போச்சு:(
தடதடன்னு திரும்பி இதுவரை வந்த எல்லாத்தையும் ரீவைண்ட் செஞ்சுக்கிட்டோம். மணி அஞ்சரைகூட ஆகலை. இருட்டிப்போச்சு. கூண்டில் ஏறிக் கீழே வந்து காரில் ஏறி ஊருக்குள் போனோம். பாரதமாதாவுக்கு ஒரு கோவில் இருக்குன்னு கயலு சொல்லி இருந்தாங்க.
ஹரிகிபௌரி கிட்டே நின்னுக்கிட்டு இருந்த பெண் போலீஸிடம் வழி கேட்டும், அதைக் கணக்கிலாக்காமல், போகும் வழியில் இன்னொரு ஆளிடம் கேட்டுட்டு கிட்டத்தட்ட நம்ம ஹொட்டேல் வரை வந்தபிறகு பெண் (போலீஸ்) சொன்ன வழிதான் சரின்னு தெரிஞ்சது நம்ம ட்ரைவருக்கு. திரும்பிப் போன்னு 'மிரட்டுனேன்':-)
குறிப்பிட்ட தெருவில் இண்டியா டெம்பிள்ன்னு ஒரு கோவில், தென்கலை நாமத்தோடு வரவேற்றது. அதன்கீழ் ஹிரண்யகசிபுவை மடியில் போட்டு அமர்ந்திருக்கும் நரசிம்மம்! இதானா அதுன்னு ரெண்டுபக்கமும் வாய்பிளந்து நிற்கும் அசுரர்களுக்கிடையில் உள்ள வாசலில் நுழைஞ்சோம்.
முன்பகுதியிலேயே கஜேந்திர மோட்சம் ஒரு பக்கம், கோவர்தனகிரியைத் தூக்கி நிற்கும் கிருஷ்ணன் ஒரு பக்கம். நடுவில் ஒரு சந்நிதி. முப்பெரும் தேவியராக மஹாலக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி அமர்ந்த கோலத்தில்.
குகைபோன்ற அமைப்பின் உள்ளே போனால் புராண இதிகாசக் காட்சிகள். கண்காட்சி ஸ்டாலுக்குள் போயிட்டோமோ? அஞ்சு ரூபா எண்ட்ரன்ஸ்க்கு பத்து ரூபா போட்டோ எடுத்துக்க. மக்கள் நைஸா மொபைலில் படம் எடுத்துடறாங்கன்னு அதுக்கும் பத்துரூபான்னு எழுதிவச்சுருக்காங்க.
அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டிய கண்ணன், இலங்கைப்போரில் அடிபட்டு வீழ்ந்த லக்ஷ்மணனை மடிமேல் தாங்கிப்புலம்பும் ராமன், வியாஸர், கோகுலத்தில் திருட்டுக்கண்ணன், காமதேனு( ஏதோ ஒரு நடிகையின் முகம் நினைவுக்கு வருது!) பாலாஜி, லக்ஷ்மிநாராயண், ராதாகிருஷ்ணா, த்வார்கீஷ், பத்ரிநாராயண், கீதை உபதேசம், ராமலக்ஷ்மணர்களின் தாடகை வதம், சிறையில் கண்ணன் பிறந்த காட்சி, இப்படி ஏராளம். இதுலே ராஜா ந்ருக் கதை(மட்டும்) எனக்குப் புதுசு.
தானதர்மங்கள் செய்வதில் ரொம்ப ஆர்வமுடையவர் இந்த ராஜா ந்ருக். பசுக்களை ரிஷிமுனிவர்களுக்கு தானம் செய்வாராம். ஒரு சமயம் தானம் கொடுத்த பசு ஒன்னு, யாரும் அறியாமல் இனி தானம் கொடுக்கப்போகும் பசுக்களின் மந்தைக்குத் திரும்பி வந்து சேர்ந்துருக்கு. . இதை அறியாத ராஜா, அதே பசுவை இன்னொரு ரிஷிக்கு தானம் செஞ்சுட்டார். ரெண்டு ரிஷிகளும் அது தங்களுக்குச் சேரவேண்டியதுன்னு கம்ப்ளெயிண்ட் கொடுக்கறாங்க.
தவறு நடந்துபோச்சு. மன்னிச்சுக்கணும். உங்களுக்கு ஆளுக்கு ஆயிரம் பசுக்கள் தரேன்னு மன்றாடுறார். ரிஷிகள் கேட்டால்தானே? அதே மாடுதான் வேணுமுன்னு அடம் பிடிக்கறாங்க. இந்த வழக்கு அப்படியே இழுவையில் நிக்குது.
ராஜா, காலம் முடிஞ்சு எமலோகத்துக்குப் போனார்.. வழக்கை தீர்க்காமல் வந்தது பாவக் கணக்கில் இருக்கு. இதுவரை செய்த தான தருமங்கள் எல்லாம் புண்ணியக் கணக்கில். குழப்பத்தில் இருக்கும் எமதர்மராஜன் இவரிடம், செஞ்சபுண்ணீயத்துக்குண்டான சொர்கம், பாவத்துக்குண்டான நரகம் இதுலே எது உனக்கு வேணுமுன்னு கேக்க, நல்ல மனசும் நேர்மையும் உடைய ராஜா ஒரு பாவமுன்னாலும் பாவம் பாவமே. அதனால் நரகத்துக்கே போறேன்றார்.
அவரை பச்சோந்தி ரூபத்தில் ஒரு பாழும் கிணத்துலே தூக்கிப்போட்டார் எமன். அங்கேயே பலகாலம் இருக்கார். ஒரு சமயம் கிருஷ்ணரில் பிள்ளை அந்தப் பாழும் கிணத்துக்கருகில் விளையாடிக்கிட்டு இருக்கும்போது தலையை ஆட்டிக்கிட்டு இருக்கும் பச்சோந்தியைப் பார்த்துட்டு தன் தகப்பனிடம் சொல்ல, அவரும் என்ன ஏதுன்னு பார்க்கக் கிணத்தாண்டை வந்தார். பச்சோந்தி பாவமா பார்த்துச்சு. ஐயோன்னு மனம் இரங்கி அதன் தலையைத் தடவ, பளீர்ன்னு மானிட உருவில் ராஜா ந்ருக்காக மாறிட்டார்.
'உன் தண்டனை காலம் முடிஞ்சது'ன்னு ஆசீர்வதிச்சு அவரை நேரடியா சொர்கத்துக்கு ட்ரான்ஸ்பர் செஞ்சுட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். இதை தானதருமம் விஷயத்தில் முக்கிய கதையாச் சொல்றாங்க. நீதி என்னவா இருக்கும்?
நாம்தேடி வந்த கோவில் இது இல்லைன்னு அதே தெருவில் போறோம். லைஃப் சைஸ் யானைகள் உட்பட விதவிதமான நுழைவு வாசல் சிற்பங்களுடன் ஏகப்பட்ட கட்டிடங்கள். முகப்பில் ராஜஹம்ஸப் படகில் ராமரும் சீதையும் லக்ஷ்ணனும் குகனும் இருக்கும் சிலை கண்ணை அப்படியே இழுக்குது. கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை:(
முதலில் மாடியேறிப்போய் பார்க்கலாமுன்னு போனால்...... பிரமாண்டமான புள்ளையார், ஹனுமார் எல்லாம் இருக்காங்க. 12 ஜ்யோதிர்லிங்கங்கள், பல ரூபங்களில் சாமிகள்..... தவழ்ந்து உள்ளே போகும்படியான ஒரு குகை.......ஆஹா.... இது வைஷ்ணவோ தேவி குகையாச்சே..... ஏற்கெனவே பார்த்துருக்கோமேன்னு மூளையைக் கொஞ்சமாக் கசக்குனதுமே பிடிபட்டுப்போச்சு! நாம் அம்ரித்ஸரில் பார்த்த லால்மாதாஜியின் கோவில்களில் ஒன்னு இது!
இது என்னடா நமக்கு வந்த சோதனை, இந்த பாரதமாதாவைக் கண்டுபிடிக்க முடியலையேன்னு வண்டியைத் திருப்பத் தோதான இடத்துக்காகக் கொஞ்சம்தூரம் போனா இதோ இங்கே இருக்கேன்னு கூப்பிடறாள் நம்ம பாரதமாதா! வாசல் கேட்டுலேயே பெரிய அறிவிப்பு படம் எடுக்கக்கூடாதுன்னு:(
பட்டப்பகலில் வந்துருந்தால் இந்த 180 அடி உசரக் கட்டிடம் பளிச்ன்னு கண்ணில் பட்டிருக்குமில்லே!!!!! (சுட்டபடம்)
அரை இருட்டாக் கிடக்கு முன்வாசல். எட்டுமாடிக் கட்டிடம். கீழ்த்தளத்தில் தரையின் நட்ட நடுவில் ஒரு வட்ட மேடை! அதுலே ஒரு இந்தியா மேப் அதுலே பாகிஸ்தானும் பங்க்ளாதேஷும்கூட இருக்கு. குட்டிக்குட்டி கலர்லைட்டுகளால் அலங்கரிச்சு வச்சுருக்காங்க.
எட்டுமாடி ஏறணுமான்ற மலைப்பு. கவலைப்படேல். ஒரு ரூபாய் கொடுத்து லிஃப்டுலே போயிடலாம். நேரா எட்டாம் மாடிக்குக் கொண்டுபோய் விட்டுடுவாங்களாம். கொடுத்தோம். லிஃப்டுக்காரருக்குத் தூக்கக்கலக்கமோ என்னவோ லிஃப்ட் நின்ன இடம் ஏழாம் மாடி. மேல்மாடியை விட மனசில்லாம ஏறினேன். தளம் முழுசும் அடைச்சபடி பெரிய ஹால் சிவனின் பல ரூபங்கள் அங்கே! ஏழாம்மாடிக்குப் படி இறங்குனால் அங்கே விஷ்ணுவின் பலரூபங்கள். ஆறில் பெண்தெய்வங்கள்.
அஞ்சில் வெவ்வேற மாநிலங்கள். பெரிய பெரிய சித்திரங்கள். என்னமோ இடமே இல்லாமப்போயிட்ட மாதிரி தென்னிந்திய மாநிலங்கள் மட்டும் ரெவ்வெண்டா தமிழ்நாடும் கேரளமும், ஆந்திராவும் கர்நாடகாவுமுன்னு:(
நாலில் வெவ்வேற மதங்களும் சந்நியாசிகளும் முனிவர்களுமா பெருங்கூட்டம்.
மூணாவது மாடி ஹாலில் பெண் வீராங்கனைகள். ஜான்ஸி ராணி, மீராபாய் மைத்ரேயி, சாவித்ரி ஆண்டாள், இந்திரா இப்படி மாத்ரு மந்திராம்.
ரெண்டாம் மாடி முழுசும் காந்தி , நேரு, வல்லப் பாய் படேல், திலகர், பகத் சிங் உள்பட சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
ஒன்னாம் மாடிஹாலில் மேடை அமைச்சு அதில் பாரதமாதா உருவம். சின்னப்பையர் ஒருத்தர் சாமியார் கெட்டப்புலே மேடையில் உக்கார்ந்துக்கிட்டு, பிரசாதமுன்னு பொரி கொடுக்கறார்.
ஆச்சு இந்த கோவிலுக்கும் வயசு 28. ஸ்வாமி சத்யமித்ரானந்த் கிரி என்பவரின் முயற்சியால் கட்டப்பட்டது. பாரதமாதாவுக்கு அர்பணிச்சுருக்காங்க. 1983வது ஆண்டு பிரதமர் இந்திரா பிரியதர்ஷினி அவர்கள் திறந்து வச்சுருக்காங்க.
நின்னு நிதானமாப் பார்க்க நேரமில்லை. காலையில் இருந்து இவ்வளவு சுத்துனதே கூடுதல். மரியாதையா அறைக்குப் போயிடலாம். பொழைச்சுக் கிடந்தா பாக்கி நாளைக்கு.
தொடரும்...............:-)
Friday, March 11, 2011
சண்டியின் சண்டி தரிசனம்!
Posted by துளசி கோபால் at 3/11/2011 01:04:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
சண்டிக்கும் டீச்சருக்கும் ஒரு வணக்கம் ;)
கதையின் நீதியென்னன்னு எங்களையா கேக்கறீங்க.. நீங்க தானே சொல்லனும் :)
படகில் இராமர் அன்ட் கோ நன்றாகத்தான் இருக்கிறது.
எமக்கு போனஸ்சாக பார்கக் கிடைத்தது.
அலைந்தாலும் பார்த்தே தீருவேன் என பாரதமாதாவைக் கண்டு பிடித்திட்டீங்கள்.
நல்ல பகிர்வு. சண்டி தேவியும் மானசா தேவியும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! முன்னோர்களின் தொந்தரவு தான் கொஞ்சம் அதிகம்!
தங்கப்படகில் ராமலட்சுமணர்கள்.. ரொம்ப அழகாருக்கு.
ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வந்ததும் அது குறித்த விபரங்களைப் போல அந்த ஊரில் உள்ள விசயங்கள், சந்தித்த நபர்கள், முரண்பட்ட சமூக நியாயங்கள் என்று தெரிவிக்க ஏதும் இல்லையா? வெறும் ஆன்மீக சுற்றுலா மட்டும் தானா?
வாங்க கோபி.
சண்டீஸ் உங்க வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்:-)
வாங்க கயலு.
தானம் கொடுத்தால் இப்படி வம்பெல்லாம்கூட வரும். அதனால் 'கொடுக்காதே'ன்னு சொல்லுதோ!!!!!!
வாங்க மாதேவி.
இருட்டில் தெரியலை. மறுநாள் அந்தப்பக்கம் யதேச்சையாப்போனப்ப க்ளிக்கினது. போனஸேதான்:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
பூஜைப்பொருட்கள் கடையில் ஒரு குச்சி வாடகைக்கு விடலாம். கையில் ஏந்திப்போனால் முன்னோர்கள் கபர்தார்ன்னு இருக்கமாட்டாங்களா?
வாங்க அமைதிச்சாரல்.
பழைய படங்களில் (அங்கே வாங்குன படப்புத்தகம்) இந்தப் படகு இல்லை. லேட்டஸ்ட் அடிஷன் போல!
வாங்க ஜோதிஜி.
உண்மை. இது ஆன்மீகச் சுற்றுலாவேதான்.
சமூகநியாயங்கள் நாட்டாமை செய்யணுமுன்னா.....கண்ணால் கண்டதும் காதால் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.
அதுக்குக் காலம் பத்தாது:(
அன்பின் திருமதி.துளசி கோபால்
எழுத்து பேசுகிறது, கூட்டிக் கொண்டு செல்கிறது, மூச்சு விடாமல் சொல்கிறது, மூச்சுப் பிடிக்க நிற்கிறது. அந்த எழுத்துக்கு ரசிகர் கூட்டம் கூட சேர்த்துக் கொள்கிறது. ஆக, எழுத்து வெற்றிக் கொடி துளசிதளத்தில் உயர்ந்து பறக்கிறது.
அன்புடன
ஜெயஸ்ரீ ஷங்கர்
வாங்க ஜெயஸ்ரீ ஷங்கர்,
முதல் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மீண்டும் வருவீர்கள் என் நம்புகின்றேன்:-)
Post a Comment