Wednesday, March 02, 2011

லக்ஷ்மண் ஜூலா

ராமாயணகாலத்துலே லக்ஷ்மணன் ஒரு கயிற்றைப் பிடிச்சுக்கிட்டு கங்கையைத் தாண்டின இடமாம். பலவருசங்களுக்கு அங்கே கயிற்றுப் பாலமாத்தான் இருந்துருக்கு. 1889 லே இந்தப் பாலத்தை இரும்பு கம்பிகளை முறுக்கிய கயிற்றால் கட்டிப் புதுப்பிச்சாங்க. 1924 வது வருசம் கங்கையில் வந்த வெள்ளப்பெருக்கில் இது அடிச்சுக்கிட்டுப் போயிருச்சாம். இங்கே பாலத்துக்கும் கங்கைக்கும் அம்பத்தியொன்பது அடி இடைவெளி. இந்தக் கணக்குலே பார்த்தால் அப்ப வந்த வெள்ளம் அறுபதடிக்கு மேலே போயிருக்கணும். ஐயோ..... நினைச்சுப்பார்க்கவே முடியலை! சில இடங்களில் கங்கையின் அகலம் ஒரு கிலோமீட்டர் மேலேயே இருக்கே!
இந்த லக்ஷ்மண் ஜூலாதான் வயசில் மூத்தது. லக்ஷ்மண் தனியா இருக்கானே, துணை வேணாமான்னு சிவானந்தா ஜூலா கட்டி முடிச்சதும் அதுக்கு ராமர் பெயரை வச்சுட்டாங்க. லக்ஷ்மண் ஜூலாவின் நீளம் 450 அடி.
என்னதான் அண்ணந்தம்பின்னாலும் ஒரு பாலத்து நின்னு பார்த்தால் இன்னொன்னு தெரியாது. கங்கைதான் வளைஞ்சும் நெளிஞ்சும் போறாளே!
இப்போ இருக்கும் புதுப் பாலம் இன்னும் உறுதியாக் கட்டி வச்சுருக்காங்க. பாருங்க கம்பி முடிச்சுகள் சரியா இருக்கான்னு எஞ்ஜிநியர் பரிசோதிப்பதை!
தனியார் கார்பார்கிங் ஒன்னு இருக்கு. வண்டியை நிறுத்திட்டுப்போனோம். சச்சா அகிலேஷ்வர் மஹாதேவ் கோவில். நிறையக் கூட்டமா இருக்கு உள்ளே. பதினாலடி சிவ லிங்கம். சைடுலே சின்னதா மாடிப்படிகள் வச்சுருக்காங்க. அதுலே ஏறிப்போய் சிவனைத் தொட்டும், கையில் கொண்டு போகும் கங்கை நீரை அபிஷேகம் செய்தும் மக்கள் வழிபடறாங்க. நான் எட்டிப்பார்த்துக் கும்பிட்டுக்கிட்டேன். நேர் எதிரில் சின்னதா ஒரு ரவுண்டபௌட்டில் கண்ணாடிக் கூண்டில் 'அண்ணனை உபத்திரவிக்க எங்கே பரதன் வந்துக்கிட்டு இருக்கானோ' ன்ற பதைப்பில், வில்லும் கையுமா லக்ஷ்மணன் கங்கையைப் பார்த்தபடி.
எதிர்சாரியில் ஸ்ரீ ஆதி பத்ரிநாத் த்வார்க்காதீஷ் மந்திர். பாம்புப்படுக்கையில் ஹாயா சாய்ஞ்சிருக்கும் விஷ்ணு. கால் பிடிச்சுவிடும் லக்ஷ்மி. உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. கண்ணன், ராமன், நரசிம்ஹன் இப்படி சந்நிதிகள். ஸேவிச்சுக்கிட்டு ஜூலா நோக்கிப் போனோம்.
தெருவில் இருந்து படிகள் கொஞ்சம் இறங்கணும். நம்மாட்கள் ஏகப்பட்ட பேர் சுவாதீனமா அங்கேயும் இங்கேயுமா நடமாடிக்கிட்டு இருந்தாங்க. கண்ணாடி பயம்தான். தலையைக் கொஞ்சமாக் குனிஞ்சுக்கிட்டேன். கையில் தீனியோ பையோ வச்சுருக்கறவங்க மேல் தான் அவுங்க கவனம்.


பாலம் ஆறடி அகலம். எல்லோருக்கும் பொது! இங்கேயும் ஸ்கூட்டர், மாடு, கைவண்டிகள் எல்லாம் அக்கரைக்குப் போகுது. அக்கரையில் பாலத்துக்கு ரெண்டு பக்கமும் அழகான 13 மாடிக்கட்டிடம். பக்கத்துக்கொன்னா நிக்குது. இடதுபக்கம் ஸ்ரீ த்ரியம்ப்கேஷ்வர் ஆலயம். வலப்பக்கம் யோகா செண்டர். போய்ப் பார்க்க முடியாதபடி உள்ளே பழுதுபார்க்கும் வேலை என்னமோ நடக்குதாம்.
ஊர் முழுக்க ஆஸ்ரமங்கள், யோகா செண்டர்கள், தங்கும் விடுதிகள்னு கொட்டிக் இருக்கு. வலதுபக்கம் இருந்த குறுகிய தெரு(?)வின் கடைசியில் ஒரு ராமர் கோவில். . இதுவும் ஒரு ஆஸ்ரமத்தின் உள்ளேதான். ஸ்ரீ சந்த் சேவா ஆஷ்ரம்

ஸ்ரீ ராமன், லக்ஷ்மணன் சீதா, ஹனுமன் பளிங்குச்சிலைகள். ஒரு பக்கம் தொட்டிலில் கிருஷ்ணன். கங்கைக் கரையோரமாவே ஆசிரமம் கட்டிக்க இடம் பிடிச்சவங்களுக்கு தனித்தனி படித்துறைகள் சொந்தமா இருக்கு. புழக்கடையில் கங்கை! அவரவர் வசதிக்கும், புகழுக்கும், வரும் கூட்டத்துக்கும் ஏத்தபடி அவரவர் படித்துறையில் கங்கை ஆரத்தி வச்சுக்கறாங்க. சில இடங்களில் சந்தியா தீபம் வீடுகளில் ஏற்றுவது போல் அமைதியாவும், சில இடங்களில் ஏகப்பட்ட ஆரவாரத்தோடும் நடக்குது. விதவிதமான ப்ரைவேட் படித்துறை
இருக்கும் ஆசிரமங்கள் போதாதுன்னு இன்னும் ஏகப்பட்டது கட்டிக்கிட்டே இருக்காங்க. தடுக்கி விழுந்தா அது ஒரு ஆஸ்ரமமோ இல்லை யோகா செண்டராவோத்தான் இருக்கும்.
நல்ல ஆற்றுமணலில் சின்னசின்ன பீச் போல சில இடங்களில் அமைஞ்சுருக்கு. இங்கேயும் மணல்வெளியில் அதிகாலை யோகா வகுப்புகள் தியான வகுப்புகள் நடக்குமாம். திரும்பி பாலம் வரும் வழியில் கைவண்டிகளில் பிஸ்கட்களைச் சுட்டு எடுக்கும் அடுப்புகளை வச்சு சுடச்சுடச் சுட்டு விக்கறாங்க. அதுலே கொஞ்சம் வாங்கி பாலத்தில் தீனிக்காக இங்கும் அங்கும் தாவிக்கொண்டு இருக்கும் குடும்பஸ்தர்களுக்குக் கொடுத்தோம்.
மெட்ராஸ் ஹொட்டெல்ன்னு ஒன்னு காலையில் ரிஷிகேஷ் உள்ளே வரும்போது கண்ணில் பட்டது. பக்கத்தில் சின்னதா ஒரு அஞ்சு நிலை வெள்ளைக் கோபுரம் நம்மூர் ஸ்டைலில். திரும்பி இந்த வழியில் வரும்போது என்ன ஏதுன்னு பார்க்கலாமுன்னு, இது இருந்த இடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். திருப்பதி தேவஸ்தானக் கோவில். ஸ்ரீ வெங்கடேஸ்வரர்.
கோபுர வாசலுக்கு நேரே கொடிமரம். பின்னால் பெரிய மண்டபம். ஆனா குரங்க்ஸ் தொல்லைகளுக்குப் பயந்து சுத்திவரக் கம்பி வலை அடிச்சு வச்சுருக்கு. ரெண்டு பக்கங்களிலும் .சின்னதாக் கதவு. நுழைஞ்சதும் கொடிமரத்தின் பின்னால் வரும் இடத்தில் மூலவருக்கு எதிரில் பெரிய திருவடி. கண்ணெதிரே ஸ்ரீநிவாஸன். இடப்பக்கம் தனிச் சந்நிதி அனந்தபத்மநாபன். வலப்பக்கம் தனிச் சந்நிதியில் லக்ஷ்மிநாராயணன். மூணு சந்நிதிகளும் ஒன்னோடொன்னு ஓட்டியே இடைவெளி இல்லாம இருக்கு.

நமக்கு இடது பக்கம் பத்மாவதித் தாயார். வலது பக்கம் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கோதை. வழக்கமா பெருமாள் கோவில்களில் எல்லாம் தாயார்கள் இருவரும் பெருமாள் பார்க்கும் திசையிலேயே பார்த்துக்கிட்டு இருப்பாங்கல்லே? இங்கே அதிசயித்திலும் அதிசயமாக ரெண்டு லேடீஸும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு கண்ணாலேயே பேசிக்கிட்டு இருக்காங்க. எனக்குப் பரம திருப்தி. ஆண்டாள் எப்போவும் பாவமா தனியா கொட்டுகொட்டுன்னு இருப்பதையும் மார்கழி தவிர மற்ற நாட்களில் அந்த சந்நிதிக் கதவை மூடியே வச்சுருப்பதையும், பக்தர்கள் கூட்டமெல்லாம் தாயார் சந்நிதியில் மட்டும் கூடுவதையும் பார்த்து மனம் கசிந்து போவேன்.

நல்லவேளை...இங்கே அப்படி இல்லை. நகைநட்டு அலங்காரங்களுடன் மூக்கில் ஜொலிக்கும் நத்து பார்க்கவே பரவசமா இருந்துச்சு. கோவிலைத் தொட்டடுத்து ஒரு மடமும் இருக்கு. தெருவில் இருந்து பார்த்தாலே தாயார் & பெருமாளின் பிரமாண்டமான படங்கள் பளிச்ன்னு தெரியுது.
கோவிலுக்கு இந்தப் பக்கம் நான் சொன்ன அந்த மெட்ராஸ் ஹொட்டேல். தென்னிந்திய சாப்பாடுகள். ஆனா நமக்கு உள்ளே போய்ச் சாப்பிடத் தோணலை. ரெண்டுங்கெட்டான் நேரமாப் போயிருச்சு. அட்லீஸ்ட் ஒரு காஃபி குடிச்சுருக்கலாம்...................

பட்டர் தீபாராதனை காமிச்சுப் பிரஸாதம் கொடுத்துட்டு எந்த ஊருன்னு விசாரிச்சார். "சென்னை." தமிழான்னுட்டுத் தமிழில் பேச ஆரம்பிச்சார். மார்கழி பொறந்த மறுநாளே இந்த முறை வைகுண்ட ஏகாதசி வருதுன்னார்.

சரின்னு கேட்டுட்டுக் கோவில் அழகா அம்சமா இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்.

26 comments:

said...

லக்ஷ்மண் ஜூலா பற்றி நல்ல விமர்சனம். ரிஷிகேசத்திலும், ஹரித்வாரிலும் மடத்திற்கு என்ன, தடுக்கி விழுந்தால் ஒரு மடம். லக்ஷ்மண் ஜூலாவில் நிறைய பேர் மீன்களுக்கு கோதுமை மாவு உருண்டைகள் போட்டுக் கொண்டு இருப்பார்கள்! அதை பார்த்து பலமுறை ரசித்திருக்கிறேன்.

said...

//இருக்கும் ஆசிரமங்கள் போதாதுன்னு இன்னும் ஏகப்பட்டது கட்டிக்கிட்டே இருக்காங்க. தடுக்கி விழுந்தா அது ஒரு ஆஸ்ரமமோ இல்லை யோகா செண்டராவோத்தான் இருக்கும்.//

இந்தப்பகுதி எல்லாம் சுத்தமாக இருக்குமா!

said...

போனவருசம் இந்த பாலாஜி தான் நியூ இயர் அன்னிக்கு எங்களுக்கு விசேச அலங்காரத்தோடு காட்சி தந்து மனசையும் தயிர்சாதம் சக்கரை பொங்கலால்வயிறும் குளிர வச்சார்..:)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோதுமை மாவு உருண்டைகள் மீன்களுக்கு ஆகுமோ என்னவோ?

நம்ம கபாலியின் குளத்துலே பொரியான பொரிபோட்டே மீன்களை மேலே அனுப்பிக்கிட்டு இருக்காங்க பார்த்தீங்களா?

said...

வாங்க கிரி.

ஆஸ்ரமங்கள் உள்ளே அப்பழுக்கு இல்லை. எல்லாம் படுசுத்தம்.

யோகா செண்டருக்குள் போகலை.

ஆனால் தெருக்களில் அவ்வளவு சுத்தம் போதாது.

சென்னைநகரைப் பார்த்த கண்களுக்கு இந்தத் தெருக்கள் நல்ல சுத்தமுன்னு தோணும்:-)

said...

வாங்க கயலு.

ஆஹா.... சக்கரைப் பொங்கல் கொடுத்தாரா!!!! யோகம்தான்.

said...

நிக்கிறதுக்கு இடம் கிடைச்சாலே ஆசிரமம் ஆரம்பிச்சுருவாங்க போலிருக்கு. நீங்க ஆரம்பிக்கப்போற கல்ட்டுக்கும் ஆசிரமம் கட்ட இடம் பாத்தாச்சா :-))))))))))

said...

நல்ல புகைப்படப் பயணம்...

said...

படங்களும், தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

said...

//லக்ஷ்மண் ஜூலா/
ஏதோ ஒரு மாலில்/ வரிசையா கடைங்க இருக்கிறா மாதிரி கோவிலா. அதனால வேகமா கும்பிட்டுகிட்டே போகும்போது சில கடைக்காரங்களையும் கும்பிட்டுட்டோம் :)

said...

நிறைவா இருக்கு கங்கையின் படமும் பாலாஜி கோவிலும். அதெப்படி சொல்லிவச்ச மாதிரி அனந்தனும், கோவிந்தனும் உங்களைப் பார்க்க வந்துடறாங்க:)
ஆண்டாளுக்கு நத்து போட்டு இருக்காங்களா. !!அழகா இருக்குமேப்பா. நாமும் ஆசிரமும் ஆரம்பிக்கறதாப் பேசினோமே ஞாபகம் இருக்கா. கண்மணி டீச்சர் ஆரம்பித்த கதை அது:)

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம ஆஸ்ரமம் வட இந்தியாவில் இல்லை. தீந்தமிழ் நாட்டுலேதான் சாமி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் கும்பலும் மறைமுகமா நம்ம ஆஸ்ரமத்துக்கும் வரும்.

பணம் அள்ளிடலாம். ஏகப்பட்டது கி9டைக்கும்:-)

said...

வாங்க கலாநேசன்.

வருகைக்கு நன்றிங்க.

said...

வாங்க கோவை2தில்லி.

வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க இளா.

நோ ஒர்ரீஸ்:-)

நம்ம ஊரில் மால் வாக் போகும்போது ஒவ்வொரு கடைக்கும் ஒரு சந்நிதி பெயர் வச்சு அங்கே சுத்திட்டுத்தான் வருவேன். DEKA Storesதான் நவகிரக சந்நிதி:-)

தோழிகளுடன் போகும்போது அவுங்களையும் கோவில்சுத்துலே சேர்த்துக்கறதுதான்:-)

said...

வாங்க வல்லி.

அநந்தன் ஒருவேளை கோபாலைப் பார்க்க வர்றாரோ!!!!

அந்த நத்துக்கு என்னமோ ஜொலிக்கும் கற்கள். தகதகன்னு தீயா ஜொலிச்சதுப்பா!!!!!

பொறுங்க. ரிட்டயர் ஆனதும் முதல் வேலை ஆ.....ஸ்ரமம் ஆரம்பிப்பதுதான். இப்பதான் ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பில் இருக்கு:-)

said...

நம் முன்னோர்களின் ரசனையே ரசனை... வளைவு நெளிவாக இருக்கும் நதிகளுக்கு பெண் பெயரையே வைத்திருக்கார்கள். :-)

said...

எப்படியும் இந்த வருஷம் போயிட்டு வந்துடனும் # வயசாகிக் கிட்டே போகுது:-)

said...

padnakaludan pakirvu enkalaiyum anku alaiththu senrathu poola irunthathu... pakirvukku nanri.

said...

என்ன மொழி பேசுறாங்க? இந்தியா?

said...

வாங்க குமார்.

ஆண்நதிகளும் இருக்கே மறந்துட்டீங்களா?

கிருஷ்ணா ப்ரம்மபுத்ரா

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

வயசெல்லாம் கணக்கா? ஆனா ஒன்னு உடல் ஆரோக்கியமா இருக்கும்போது போயிருந்தால் இன்னும் நல்லா அனுபவிச்சு இருப்பேன்.

said...

வாங்க மதுரை சரவணன்.

கூடவே வருவதற்கு நன்றி

said...

வாங்க அப்பாதுரை.

எல்லோரும் ஹிந்திதான் பேசறாங்க.

லோக்கல் ஆளுங்களோட ஸ்லாங் சிலசமயம் புரிஞ்சுக்கக் கஷ்டமா இருக்கு. திருப்பித்திருப்பிக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். பிரச்சனை இல்லை.

said...

உங்கள் பயணத்தில் நன்றாய் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். நன்றி.

said...

வாங்க மாதேவி.

ஆஹா...... பில் அனுப்பவா?;-))))))