Monday, February 28, 2011

பார்க்கவேண்டிய இடம்தான், இந்த பரமார்த் நிகேதன்.

அடுத்துப்போனது பரமார்த் நிகேதன் ஆஸ்ரமம். அட்டகாசமான அலங்கார வளைவுகளும், கம்பிக் கூண்டுகளுக்குள்ளில் ராமாயண மகாபாரத இதிகாச சம்பவங்களின், சுதைச் சிற்பங்களுமா பெரிய தோட்டத்தில் அப்படியே கண்ணைக் கட்டி இழுக்குது. அங்கங்கே உக்கார பளிங்கு மேடைகள், பெஞ்சுகள், ஆஸ்ரமவாசிகள், யாத்ரீகர்கள் தங்கும் அறைகள், கோவில்கள், சந்நிதிகள் இப்படி எதைச்சொல்ல எதைவிட! படு சுத்தமான பராமரிப்பு. நின்னு நிதானமாப் பார்த்தால் ஒரு அஞ்சாறு மணி நேரம் போயிரும்.
தோட்டத்தில் ரொம்ப பாதுகாப்பான கம்பிவேலிக்குள்ளில் கற்பக மரம் இருக்கு. இதைக் கண்டாலே எல்லா நலன்களும் கிடைச்சுருமாம். நல்லா பார்த்துக்குங்க. படம் பதிவர் ஸ்பெஷல்.


ததிசி முனிவர் இந்திரனுக்கு எலும்பு கொடுத்த கதை அங்கே சிற்பமா இருக்கு. கதை தெரியாதவர்களுக்கு இங்கே 'சுருக்'. தேவலோகத்துலே பாற்கடல் கடையும் ஸீன். தேவர்களும் சாமிகளும் கைகள் நிறைய ஆயுதம் தாங்கி நிற்பாங்க இல்லையா? ஞாபகம் வருதா? எத்தனை படத்துலே பார்த்துருக்கீங்க! கையிலே பொருட்களை வச்சுக்கிட்டுக் கயிறை இழுக்க முடியுமா? அதுவும் அது வாசுகி. பாம்பு வழவழன்னு வழுக்காதா?

யார்கிட்டேயாவது பத்திரமாப் பார்த்துக்கச் சொல்லிக் கொடுக்கலாமுன்னா அனைத்து தேவர்களும் கயிறு இழுத்தாகவேண்டிய நிலமை. சுத்துமுத்தும் பார்க்கறாங்க.கண்ணுலே பட்டார் ததீசி முனிவர். நல்ல குணநலன்கள் கொண்டவர். அவர்கிட்டே போய், நாங்க 'வரும்வரை' இதையெல்லாம் பார்த்துக்குங்கன்னு சொல்லிக் கொடுத்து வச்சுட்டுக் கடையப்போனாங்க.

அமுதம் வந்தது. அசுரர்களுக்கு, அவர்கள் பங்கைக் கொடுக்காமல் 'ஏமாத்திட்டு' மோகினி தேவர்கள் எல்லோருக்கும் விளம்பினாள். ஒரே கொண்டாட்டம். இனி அழிவே இல்லை. போதாததுக்கு உண்ட மயக்கம். எல்லோரும் கிளம்பிப்போயிட்டாங்க. கைகள் காலியா இருக்கேன்னு எப்பவாவது நினைவு வந்தாலும், எதுக்கு வீணா சுமக்கணும். அமிர்தம் தின்ன நமக்கு இனி யாராலும் ஆபத்து இல்லையேன்னு ஒரு தோணல்.

ததீசி இங்கே தேவுடு காத்துக்கிட்டு இருக்கார். யாரும் வந்து வாங்கிக்கும் வழியைக் காணோம். தன்னுடைய கடமைகளான தவம், யாகம் இதையெல்லாம் செய்யாமல் முனிவர்ன்னு பெயர் வச்சுக்கிட்டு எத்தனைநாள்தான் காவல்காரனாக் காத்துக்கிட்டு இருப்பார்? அங்கேயே போட்டுட்டுப் போகவும் மனசு வரலை. அசுரர்கள் கையில் ஆப்ட்டுக்கிட்டா? உக்கார்ந்து யோசிச்சார். எல்லாத்தையும் பொடி செஞ்சு மாத்திரைகளா மாற்றி மூணு வேளைக்கு முழுங்கிட்டார். அது எல்லாம் அவர் எலும்புக்குள்ளே போய் ஸ்ட்ராங்கா உக்காந்துக்கிச்சு. முதுகெலும்புக்கு எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெந்த்!!!

அசுரர்கள் கூட்டத்தில் விருத்திகாசுரன் என்பவன் பயங்கர பலத்தோடு விருத்தியடைஞ்சுக்கிட்டு இருக்கான். இவன் அசுர குருவான துவஷ்டாவின் ஏவல் சக்தி. இவன் இந்திரன் மீது படையெடுத்து வந்துட்டான். ஆயுதம் ஒன்னும் கையில் இல்லாத நிலையில் அரக்கனை எதிர்கொள்ள முடியாமல் தேவர்களின் அரசன் இந்திரன் ஓடி ஒளிஞ்சுக்கிட்டான். வழக்கம்போல் தேவர்கள் விஷ்ணுவிடம் போய் குய்யோ முறையோன்னு கூவி அழ, மகாவிஷ்ணு சொல்றார், எல்லோரும் ஆயுதத்தை முனிவர் கிட்டே கொடுத்துட்டு ஜாலியா இத்தனைநாள் இருந்தீங்களே...... ஆபத்து காலத்துலே இதெல்லாம் வேணுமேன்னு யாருக்காவது தோணுச்சா?

வருமுன் காக்கத்தெரியாதவங்களுக்கு இப்படித்தான் ஆகுமுன்னு ரெண்டு வார்த்தை திட்டிட்டு, போங்க...போயி அந்த ததீசி முனிவரைப்போய்ப் பாருங்க. ஆனால் அவரும்தான் எம்மாநாள் காத்துருப்பார்? எல்லாத்தையும் பொடிபண்ணி முழுங்கிட்டார்'னார்.

தேவர்கள் எல்லோரும் பயந்து நடுங்கி 'ஓ'ன்னு விம்மி அழறாங்க. விஷ்ணுவுக்குப் பாவமாப்போச்சு. முனிவரின் முதுகெலும்பு கிடைச்சால் அதுலே ஒரு வஜ்ராயுதம் செஞ்சு அதை வச்சுச் சண்டை போட்டால் விருத்திகாசுரனை ஜெயிக்கலாமுன்னு ஐடியாக் கொடுத்தார். ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இந்திரனுக்கு சேதி போச்சு. முனிவரைப் பார்க்கக் கிளம்பிப் போனான்.
முனிவர் குணக்குன்று. மறு பேச்சில்லாமல் 'முதுகெலும்பை எடுத்துக்கோ'ன்னுட்டார். பசு ரூபத்தில் இந்திரன் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக நக்கி தசைகளைக் கரைச்சு உள்ளே இருந்து எலும்பை எடுத்துக்கிட்டான். தேவதச்சன் அதை வஜ்ராயுதமாச் செஞ்சு கொடுத்ததும் அதை வச்சு விருத்திகாசுரனைக் கொன்னு போட்டதாக புராணக் கதை.
ஆமாம்.....கர்ணன் தன் தங்கப்பல்லை கிருஷ்ணனுக்குக் கொடுத்தாராமே! அது எப்போ? தங்கப்பல் கட்டுனதைப்பத்தி நம்மகிட்டே ஒரு வார்த்தை சொல்லலை! சம்பவம் எனக்குப் புதுசு கதை தெரிஞ்சவுங்க சொல்லுங்க.

ஆயுர்வேத மருத்துவமனைக்கான நுழைவு வளைவில் சுவர்களில் புடைப்புச்சித்திரங்களா ஒரு மனிதன் வாழ்க்கை பிறந்தது முதல் மரணம் வரை! அவனுக்கு உடம்பு சரி இல்லைன்னு டாக்டர் வந்து பார்க்கிறார்!

போகும்போது மூடி இருந்த கடைகள் எல்லாம் திறந்து இப்போ கரையை ஒட்டிய கடைத்தெரு ஜேஜேன்னு இருக்கு. அங்கே ஒரு கடையின் வாசலில் நம்மைக்கொண்டு நிறுத்தினார். உள்ளே ஒருமுகம் பார்க்கலாமாம். எதுவும் வாங்க வேண்டியதில்லை. கொக்கி நம்பர் 2 :-)

ஒரு நகைப்பெட்டிக்குள்ளில் பூமெத்தையில் ஒரு வெள்ளிப்பூண் போட்ட ருத்திராட்சம்.இது விற்பனைக்கு இல்லை! கையில் எடுத்துப் பார்க்கவும் படம் எடுக்கவும் அனுமதிச்சாங்க. அத்தோடு போகுமா...ச்சும்மா இதையெல்லாம் பாருங்கன்னு காமிச்ச வகைகளில் குடும்ப நலம் முன்னிட்டு(???) ஒரு ஸ்படிக ஸ்ரீமேரு ஒன்னும் ஸ்படிக மாலை ஒன்னும் வாங்கும்படியா ஆச்சு 'என்னை அறியாமல்'. உண்மையான ஸ்படிகமான்னு நமக்கு வந்த சதேகத்தைப் புரிஞ்சுக்கிட்டு சட்னு கடை விளக்கை அணைச்சுட்டு ஸ்படிக மணிகளை ஒன்னோடொன்னு உரசிக் காமிச்சார். தீப்பொறி பறந்துச்சு. (இதுதான் 'அந்த' சிக்கிமுக்கிக் கல்லோ?)இன்று முதல் அஞ்சு வருசங்களுக்குள்ளில் எப்பத் திருப்பிக் கொடுத்தாலும் 75% திருப்பிக் கொடுத்துருவாங்களாம் கொக்கி நம்பர் 3:-)

மிளகு சைஸில் தங்கத்துலே கட்டுன ருத்திராட்ச மாலை ஒன்னு ரொம்ப நல்லாவே இருக்கு. ரொம்பப் 'புளிப்பு' வேணாமுன்னு கோபால் மனசில் பால் வார்த்தேன். முப்பதாயிரம் ஸேவிங்க்ஸ்.

உங்களுக்கு ஒரு நல்ல பரிசு தர்றோமுன்னு ஒரு ஆறுமுகம் ருத்திராட்சம் காமிச்சார். இன்னொரு கிண்ணத்தில் நாலு முகமும் வச்சுருக்காங்க. கடைசியில் இது ஒன்னு அது ஒன்னுன்னு டீல் ஓக்கே:-) ஏற்கெனவே கோகர்ணத்தில் ஒரு அஞ்சு முகம் கிடைச்சது. கலெக்ஷன் ஆரம்பிக்கத்தான் வேணும். அர்த்தசந்திர ருத்திராட்சம் பார்த்தேன். உத்தரகண்ட் மாநில அரசு பரிந்துரைக்கும் கடைகளில் இதுவும் ஒன்னு.

இதுக்குப்பிறகு நிறைய கடைகளில் ஒரு முக ருத்திராட்சம் பார்வைக்கு இருக்கு என்ற விளம்பர போர்டுகள் வச்சுருப்பதைப் பார்த்தேன். ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்திராட்ச வகைகள் இங்கெல்லாம் கிடைக்குது.

'எதாவது வாங்குனீங்களா?'ன்னார் கௌஷலேந்த்ர சிங். எத்தனை பெர்ஸண்ட் உங்களுக்குன்னு கேட்டேன்:-) வெறும் ரெண்டு தானாம். சரி. ரெண்டுன்னா ரெண்டு. 'அறுபத்தியாறு ரூபாயை விட்டுடாதீங்க'ன்னேன்:-)

கங்கைப் படித்துறைகளில் கங்கையைத் தெளிச்சுக் கோதுமைமாவைப் பிசைஞ்சு சின்ன உருண்டைகளா உருட்டி ஒரு தொன்னையில் போட்டு அஞ்சு ரூபான்னு விக்கறாங்க. பசுமாட்டுக் கன்றுகள் அங்கங்கே நம்மை எதிர்பார்த்து நிக்குதுகள். இவை விற்பவர்களின் சொந்தக் கன்றுகளாத்தான் இருக்கணும். கன்றையும் மேய்ச்சு வியாபாரமும் நடத்தி. கன்றுக்குத் தீனியும் போட்டு, நமக்கும் புண்ணியம் தேடித்தந்துன்னு ஃபோர் இன் ஒன்.

இக்கரையில் இருந்து கங்கையைக் கடந்து அக்கரைக்குப் போக படகுகள் தயாரா இருக்கு. பத்தே ரூபாய்.
திரும்பி ராமர் பாலம் வரும்போது கருப்புக் கம்ப்ளி மஹராஜ் கோவிலுக்குள் போனோம். ஸ்வாமிஜிக்கும் மாதாஜிக்கும் கம்பளி போர்த்திக் கண்ணாடி மாடத்தில் வச்சுருக்காங்க. சந்நிதி ஹாலின் ஒரு பக்கம் கீதோபதேசம் சிற்பம் ஒன்னு. நாலு வெள்ளைக் குதிரைகளோடுள்ள தேரில் கிருஷ்ணனும் அர்ஜுனனும். தேரின் உச்சியில் நம்ம நேயுடு கொடியில் மறைஞ்சு இருக்காம, 'என்னைப்பார்'ன்றார்:-) . ராமர் பாலத்தில் நடந்து வரும்போது எதிரில் வானளாவ நிற்கும் மலையில் நீல்கண்ட் கோவில் இருப்பதாகவும் போய் வரணுமுன்னா சுமார் நாலு மணி நேரமாவது ஆகும் என்றதால் 'எஸ்' ஆவதற்காக 'நோ' சொல்லும்படி ஆச்சு.
பாலத்தில் நடந்து வரும்போது ஒரு இடத்தில் 'கீழே பாருங்க'ன்னார் கைடு. மீன்கள் கூட்டங்கூட்டமா நிக்குதுங்க. அந்த இடத்தில் மீனுக்கு பொரி போடுவாங்க போல!

மறுபடி சிவானந்தா ஆஸ்ரமத்துக்குள்ளே நுழைஞ்சு பத்ரிநாத் சாலைக்கு வந்தோம். நவீனக் கருவிகள் எல்லாம் உள்ள மருத்துவமனையை நடத்துறாங்க. எக்ஸ்ரே ரூம் எல்லாம் இருக்கு. ஆன்மீகப்பயணமா இல்லாம சும்மா மலை ஏறுவது, கங்கையின் வேகத்தோடு போகும் படகுச்சவாரி (ராஃப்டிங்) இப்படி பொழுதுபோக்கு விஷயங்களுக்காகவும் ஏராளமான மக்கள் வந்து கூடும் இடம் இந்த ரிஷிகேஷ். பல வெளிநாட்டுக்காரர்களின் நடமாட்டங்களையும் பார்க்கலாம்.

இப்போ ராமர் பாலம்தான் பார்த்திருக்கோம். இன்னும் லக்ஷ்மணன்பாலம், த்ரிவேணி காட், பரத் மந்திர் எல்லாம் போகணும். வண்டி இருந்து என்ன பயன்? எதெது எங்கேன்னு சொல்ல உள்ளூர் ஆள் வேணாமா? வழிகாட்டுன வேலையை முடிச்சுக்கிட்டுக் கிளம்ப இருந்த கைடையே 'இந்த இடங்கள் எல்லாம் வந்து காமிக்க முடியுமா'ன்னதுக்கு சம்மதிச்சுட்டார்.

தொடரும்.................:)

24 comments:

said...

இந்த இடத்துல வந்து என் டூர் பதிவு நின்னுபோயிடுச்சு.. தேர் நிலைக்கு போகலை.. நீங்க நாளொன்றுக்கு ஒரு இடம்ன்னு போனாலும் அழகா எல்லாத்தையும் போட்டுட்டே வர்ரீங்க.. அதுல நடுவில் கதை சொற்பொழிவு வேற :))

said...

//கன்றையும் மேய்ச்சு வியாபாரமும் நடத்தி. கன்றுக்குத் தீனியும் போட்டு, நமக்கும் புண்ணியம் தேடித்தந்துன்னு ஃபோர் இன் ஒன்//

சாமர்த்தியசாலிங்கதான் இல்லியா :-))))

கற்பகம்கிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க ;-)

said...

முனிவர் குணக்குன்று. மறு பேச்சில்லாமல் 'முதுகெலும்பை எடுத்துக்கோ'ன்னுட்டார். பசு ரூபத்தில் இந்திரன் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக நக்கி தசைகளைக் கரைச்சு உள்ளே இருந்து எலும்பை எடுத்துக்கிட்டான். தேவதச்சன் அதை வஜ்ராயுதமாச் செஞ்சு கொடுத்ததும் அதை வச்சு விருத்திகாசுரனைக் கொன்னு போட்டதாக புராணக் கதை.//

கதை
romba nanna irukku. innikkum osteo porosis viyaadhi varavangalukku, intha maadhiri iraval mudhuku thandu vadam kidacha eththanai nallathu ?

meenachi paatti.

enathu thamil ezhuthi thagaraaru pannuthu. athanaal thaan intha phonetic english le ezhutharen.

m.pa.

said...

கங்கைப் படித்துறைகளில் கங்கையைத் தெளிச்சுக் கோதுமைமாவைப் பிசைஞ்சு சின்ன உருண்டைகளா உருட்டி ஒரு தொன்னையில் போட்டு அஞ்சு ரூபான்னு விக்கறாங்க. பசுமாட்டுக் கன்றுகள் அங்கங்கே நம்மை எதிர்பார்த்து நிக்குதுகள். இவை விற்பவர்களின் சொந்தக் கன்றுகளாத்தான் இருக்கணும். கன்றையும் மேய்ச்சு வியாபாரமும் நடத்தி. கன்றுக்குத் தீனியும் போட்டு, நமக்கும் புண்ணியம் தேடித்தந்துன்னு ஃபோர் இன் ஒன்.

நாங்கள் போன போது இந்தமாதிரி இல்லையே! புதிதாக ஆரம்பித்து இருக்கிறார்கள் போலும்.

இப்போது எல்லா பாவமும் போக கோயில்களில், மடங்களில் பசு தானம் செய்ய சொல்கிறார்கள். பசுவை பாதுகாக்க பணம் கேட்கிறார்கள்.

நமக்கு புண்ணியம் கன்றுக்கு தீனி நல்ல யோசனை.

கற்பக மரம் எல்லோருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுக்கட்டும்.

said...

உங்க புண்ணியத்தில் ரிஷிகேஷ் பார்த்திட்டு வரேன். பகிர்வுக்கு நன்றி.

said...

பதிவர் ஸ்பெஷல் படங்களுக்கும், "சுருக்" கதைக்கும் நன்றி

//கன்றையும் மேய்ச்சு வியாபாரமும் நடத்தி. கன்றுக்குத் தீனியும் போட்டு, நமக்கும் புண்ணியம் தேடித்தந்துன்னு ஃபோர் இன் ஒன்.//
:)))

said...

கற்பக மரம் கதைகளில் படிச்சது,படங்களும்,கதையும் நல்லாருக்கு டீச்சர்:))))

said...

இவ்ளோ போட்டோவை வலையேற்ற உங்களுக்கு எப்படித்தான் பொறுமை இருக்கோ:-௦)

said...

வாங்க கயலு.

கோபாலுக்குக் கதை கேக்கப் பிடிக்கும். ஆனால்..... சொல்லத்தான் சிலசமயம் எனக்கு சடைவு. கேட்ட அடுத்த கணமே மறந்துடுவார். திரும்பத்திரும்ப எத்தனை முறைதான் சொல்வதுன்னு பதிவுலே போட்டு வைக்கிறேன். தெரியாதவர்களும் தெரிஞ்சுக்கட்டுமே!

பின்னாளில் கதாகாலட்சேபம் செய்யப்போனா இவை கை கொடுக்கலாமே எனக்கு:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஒன்னும் வேண்டிக்கலை. 'இது அதுவா'ன்னு மனசுக்குள்ளே ஒரு குறுகுறு.

அதுவும் மரத்தடியில் நின்னுதானே வேண்டிக்கணும். இங்கே அண்டவிடாம வேலி இருக்கே:-)))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

செயற்கைத் தண்டுவடம் வரும் நாள் அதிக தூரமில்லையாம்.

காத்திருப்போம் அதுவரை!

said...

வாங்க கோமதி அரசு.

நம்ம பக்கம் கோவில்களின் பசுமடத்தில் கீரை விற்பவர்கள் பலவகைகளை வைக்காமல் வெறும் அகத்திக்கீரையைத்தான் வச்சுருக்காங்க. நாமும் 'பாவம் தீர' அதையே வாங்கி பசுவுக்குக் கொடுத்து.............. அதுகள் பாவம்......ஒரேடியா கழிஞ்சு வைக்குதுகள்.

வயித்தைக் கெடுத்த புதுப்பாவம் நமக்கு:(

இங்கே கங்கையிலும் வெறும் மாவு உருண்டைகளைத் தின்னு தின்னு வயித்துக்கு ஆகுமான்னு தெரியலை:(

வியாபாரம் புதுசுபுதுசாக் கண்டுபிடிப்பதில் நம் மக்கள் வல்லவர்கள்!

said...

வாங்க கோவை2தில்லி.

நீங்களும் தில்லி வரை வந்தாச்சே. ஒரு வீக் எண்டில் கூடப்போயிட்டு வந்துறலாமே!

said...

வாங்க லோகன்.

கிடைச்ச புண்ணியத்தை அனைவருக்கும் பங்கிட்டாச்சு.

வருகைக்கு நன்றி

said...

வாங்க சுமதி.

//கற்பக மரம் கதைகளில் படிச்சது//

இது கதையல்ல நிஜம்:-))))

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

டிஜிட்டல் கெமெரான்னதும் அசராம எடுக்கும் ஆயிரங்களில் ஒரு பத்திருபதாவது போடலைன்னா எப்படி:-))))))

said...

ததீசி முனிவருக்கு என்ன ஆச்சுனு சொல்லலியேப்பா. முடுகெலும்பு இல்லாம அவர் என்ன செய்தாரோ. பாவம். சரியான் சுயநலவாதிங்க இந்தத் தேவர்கள்.
அந்த நந்தவனம் நல்லா இருக்கு. உங்கபுண்ணியத்தில இங்க புண்ணியதல யாத்ரை நடக்குது. மற்ற இடங்களையும் பார்க்கலாம்.

said...

20 வருடங்களுக்குமுன்பு ஹரித்வார் ரிஷிகேஷ் பத்ரிநாத் யாத்திரை சென்று வந்த என் தாயார் யாத்திரைப் பற்றி வர்ணித்ததுதான் தங்கள் பதிவுகளைப் பார்க்கையில் நினைவு வருகிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வருமாறு அவர்கள் தெரிவித்திருந்தார்கள். இன்னும் வேளை வராவிட்டாலும் உங்கள் புண்ணியத்தில் கற்பக மரத்தைக்கூட தரிசிக்கும் பாக்கியம் கிட்டிவிட்டது.

said...

கதை இப்போதுதான் கேட்கிறேன்.சந்தோஷ அனுபவம்.

said...

வாங்க வல்லி.

ஏம்ப்பா..... முதுகெலும்பு இல்லாம பிழைக்கரதுக்கு அவரென்ன அரசியல் வியாதியா?

போய்ச் சேந்துட்டார் சொர்கத்துக்கு!

said...

வாங்க பிரகாசம்.

உங்கள் தாயார் சொன்னதைச் செஞ்சுருங்க. உண்மையிலேயே பார்த்து அனுபவிக்கவேண்டிய ஊர்கள்தான்.

said...

வாங்க ஷண்முகவேல்.

கதையை'ஆராயாமல்' படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டீங்கதானே:-))))

said...

நிகேதன் நல்லாகத்தான் இருக்கிறது.

கற்பகவிருட்சம் பார்த்துவிட்டேன்.

கொக்கி :)

said...

வாங்க மாதேவி.

விருட்சத்திடம் வேண்டியாச்சா?

கொக்கிகள் இழுக்குதுப்பா:-)))))