Monday, February 07, 2011

குழலூதி... மனமெல்லாம்..... கொள்ளை

மறு நாள் அதே இடம் அதே நேரம். அதே இருக்கைகள். டாக்டர் சகுந்தலாவைப் பார்த்துச் சின்ன தலை அசைப்பு. அதான் ரெகுலர் கஸ்டமரா ஆகிட்டோமுல்லெ? காலையில் கணினி திறந்தப்பயே அவுங்க மடல்கள் காத்து நின்னது. தினசரியில் ரெண்டு நாள்தான் விளம்பரம் இருக்கு. ஆனால் மொத்தம் 12 நாட்கள் நிகழ்ச்சிகள் இருக்கு. விட்டுடாதேன்னு அனுப்பி இருக்காங்க. நம்ம ரசிப்பு இவ்வளவு தூரமா பரவிருச்சு!!!!!

இன்னிக்குக் குழலிசை. பண்டிட் ஹரிப்ரஸாத் சௌராஸியா. (Pt. Hariprasad Chaurasia )இவருடைய ஸீடிகள் வீட்டுலே இருக்குன்னாலும் நேரில் பார்க்கவும் கிடைச்சதே! 73 வயசு. கைகளில் ரொம்ப லேசா ஒரு நடுக்கம். நம்மை மாதிரி மூட்டுவலி இருக்கு போல:( மேடையின் முன்னால் வந்து கால்களைத் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்தார். அழகான ஒரு சிஷ்யப்பொண்ணு (பெயர் தேவப்ரியா) கூடவே வந்து உக்கார்ந்தாங்க. தப்லாவுக்கு பண்டிட் அனுதோஷ் திகாரியா. (Anutosh Deghariya)
வீட்டுலே நம்ம அப்பூப்பன்மார்கூட இருப்பதுபோல் ஒரு உணர்வு. அவரும் குடும்பத்துலே இருந்து வாசிக்கும் உணர்வு வருதுன்னு சொன்னார். த ஃபீலிங்ஸ் ஆர் ம்யூச்சுவல்! குழந்தைகளை சங்கீதம் கேட்கவைக்கணும். பாடவருதோ இல்லையோ காதாலே கேக்கணும். குழந்தைகள் பிறந்ததும் முதலில் கேட்பது தாயின் தாலாட்டுதானேன்னார். உண்மைதான். விருந்தாவன் என்ற பெயரில் மும்பையில் ஒரு குருகுலம் நடத்தி ஏகப்பட்டக் குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி கொடுக்கறாராம். ஆச்சு எட்டு வருசங்கள். இப்போ ஒரிஸ்ஸாவிலும் ஒரு குருகுலம் ஆரம்பமாகி இருக்காம்.
இவரோட சொந்த ஊர் அலஹாபாத். அம்மாவை நாலுவயசாகும்போதே இழந்துட்டார்:(. அப்பா ஒரு மல்யுத்த வீரர். அவர் மகனை மல்யுத்த வீரனாக ஆக்கணுமுன்னு பயிற்சி கொடுத்துக்கிட்டே இருக்கார். 15 வயசானபோது பக்கத்துவீட்டுலே இருந்த பாடகர் பண்டிட் ராஜாராம் அவர்களிடம் பாட்டு கத்துக்கிட்டு இருந்துருக்கார். அப்புறம்தான் புல்லாங்குழல் மேல் ஒரு ஆசையும் ஈர்ப்பும் வந்து பண்டிட் போலாநாத் ப்ரசன்னா அவர்களிடம் குழலூதக்கத்துக்கிட்டார். இது எல்லாமே அப்பாவுக்குத் தெரியாமலேயே நடந்துக்கிட்டு இருக்கு. அப்பாகூடவே மல்யுத்தப்பயிற்சிக்குப் போவார். அப்போ சண்டைக்காக மூச்சை அடக்கிப்பிடிச்சதெல்லாம் இவருக்கு மூச்சைப்
பிடிச்சுக் குழலூத நல்லாவே பயன்பட்டு இருக்கு. அப்பக் கிடைச்ச பயிற்சியாலேதான் இந்த வயசிலும் என்னாலே வாசிக்க முடியுதுன்றார்.
வாங்கிய விருதுகளை அடுக்கினா பதிவு ரொம்ப நீண்டு போயிரும்! முக்கியமானவைகள் கணக்கில் 1992 இல் பத்ம பூஷன், 2000 தில் பத்ம விபூஷண். ம்யூஸிக் ஆல்பங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை.

முதலில் பண்டிட் பீம்ஸென் ஜோஷி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமா ஒரு ராக ஆலாபனை. (என்ன ராகமுன்னு தெரியலை. க்கும்.... தெரிஞ்சுட்டாலும்.........) அடுத்து ஹம்ஸத்வனியில் 'வாதாபி கணபதீம் பஜேஹம் நம்மை நிமிர்ந்து உக்கார வச்சது. முத்துஸ்வாமி தீக்ஷதர் பாட்டாச்சே!

அடுத்து ஒரு மலைநாட்டு இசை. பஹாடி கீத். குருவும் சிஷ்யையுமா ரொம்ப அனுபவிச்சு வாசிச்சாங்க. அப்படியே மனசைச் சொக்க வச்சது. கண்ணன் மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்த காலத்தில் இப்படித்தான் வாசிச்சுக்கிட்டு இருந்துருப்பானோ!!!!
அரங்கம் முழுசும் 'முன்னாள் யூத்'களால் நிரம்பி வழிஞ்சது. சின்னப் பிள்ளைகளையும் இசை படிப்பவர்களையும் மேடையிலேயே ஒரு பக்கம் உக்கார வச்சுருந்தாங்க. அதுலே மூணு சின்னப்பிள்ளைகளைக் கூப்பிட்டுப் பக்கத்துலே உக்காரவச்சுக் குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுத்து ஆளுக்கொரு பாட்டு பாடுங்கன்னு பாடவச்சார். முன்னாலேயே சினிமா பாட்டு வேணாமுன்னு சொல்லிட்டதால் பசங்க கொஞ்ச நேரம் முழிச்சுக்கிட்டு இருந்து அப்புறம் நல்லாவே பாடிட்டாங்க. பள்ளிக்கூடத்துலே சொல்லித் தந்த ஆங்கிலப்பாடலை (கறுப்பு உடை) முரளிதர் பஜன் ( க்ரே ஜாக்கெட்) மா சரஸ்வதி ஷாரதா (சிகப்பு உடை) இப்படி மூணு பேரும் பாடி அசத்திட்டாங்க.
கேள்வி நேரம் ஆரம்பிச்சது. எழுந்து வர முடியாதபடி நடக்க இடைவெளி இல்லாம தரையெங்கும் மக்கள்ஸ். நம்மாட்கள் கேள்வி கேக்க அசரமாட்டாங்கன்னு ரொம்பவே புரிஞ்சு போச்சு. கேள்விக்கு முன்னுரையா அஞ்சு நிமிஷம் பேசறாங்கப்பா!!!! பேச்சோ பேச்சு! அதான் இவ்வளோ செல்ஃபோன் விக்குது:-))))))
இன்றைய முக்கிய விருந்தினரா பாட்டியாலா மகாராஜா வந்துருந்தார் ராணியுடன். இசைக் கலைஞருக்கு மாலை மரியாதைகள் ஆச்சு. ராஜா பேச ஆரம்பிக்குமுன் நாங்கள் 'எஸ்' ஆனோம். நடுவில் வந்தால் மரியாதையா இருக்குமா?

நேத்து சிதார். இன்னிக்கு செல்லோ. தினமும் போக முடியுதா? நாளைக்கு நம்ம ஸஷாங் சுப்ரமணியன் குழலிசை. அதுவும் மத்தியானம் 4 மணிக்கு. நிகழ்ச்சிகளை 'கீழே போட்டுருக்கு' பாருங்க. எது கிடைக்கணுமோ அது கிடைக்கட்டுமுன்னு இருந்தேன்.

கிடைச்சது. எல்லாம் அதே அதே ஆனால் நேரம் மட்டும் மத்தியானம் நாலு மணி. ஏற்கெனவே கர்னாடக சங்கீதமுன்னா வடக்கிகளுக்குக் கொஞ்சம் இதுதான். அதிலும் வெள்ளிக்கிழமை நாலு மணி. யாரும் வேலையை விட்டே வந்துருக்கமாட்டாங்க:( நம்ம சங்கீதத்துக்கு நாமே ஆதரவு கொடுக்கலைன்னா எப்படின்னு நாங்க அடிச்சுப்புடிச்சு ஓடுனோம். அரங்கமே காலி. எல்லா இருக்கைகளும் நமக்கே! யாரும் வரலைன்னா என்ன கதின்னு மனம் பதைபதைச்சுக்கிட்டே இருந்துச்சு. ஆர்கனைஸர் கூட ரொம்ப நேரம் கழிச்சுத்தான் வந்து மேடை அலங்காரங்களைச் சரி செஞ்சாங்க.

இம்டெக்லே வகுப்பு முடிஞ்சு கொஞ்சம் ஸ்டூடண்ட்ஸ் வந்து சேர்ந்து என் மனசில் பாலை வார்த்தாங்க. ஷஷாங்கும் அவர் கூடவே ஜெயசந்திர ராவ் அவர்களும் வந்து சேர்ந்தாங்க. கூடவே குழல்கள் அடங்கிய பையும் மிருதங்கமும். ரொம்பவும் தாமதிக்காம சட்னு ஆரம்பம் ஆச்சு. பூர்வி கல்யாணியில் ஆலாபனை ஆச்சு அப்புறம் விஸ்தாரமா இதையே முக்காமணி வாசிச்சார். தடதடன்னு ஷதாப்தி எக்ஸ்ப்ரெஸ் வேகம் கடைசியில். அடுத்து கிருஷ்ணா நீ பேகனே தொடர்ந்து ஒரு பஜன்.
எதிர்பார்ப்பு அதிகமானதாலோ என்னவோ, எனக்கு நிகழ்ச்சி ரொம்ப சுமாராத்தான் இருந்துச்சு. சண்டிகர் நியூஸ்லைனில் மனசை அப்படியே சிறகடிச்சுப் பறக்க வச்ச வாசிப்புன்னு ரெண்டு உள்ளூர் மாணவர்கள் சொன்னதாப் போட்டுருக்கு.

ரமா வைத்தியநாதனின் பரதம். சனிக்கிழமையாப் போனது சந்தோஷம். மொஹாலியில் இருக்கும் ஷிவாலிக் பப்ளிக் ஸ்கூல். இசைவிழா நிகழ்ச்சிகளை சண்டிகரின் வெவ்வேற பள்ளிக்கூடங்களில் வச்சுருக்காங்க.
நிகழ்ச்ச்சிக்குப் பாட்டு இந்து நாயர். மிருதங்கம் அருண் குமார். நட்டுவாங்கம் சிவகுமார். இவுங்க எல்லோருமே தில்லி மக்கள்ஸ்.
பரத...... என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து வடக்கர்களுக்கு விளக்கிய ரமாவின், அஞ்சலியில் ஒரு மயில் நடந்துவந்து ஆடுச்சு பாருங்க........அற்புதம். அடுத்து முத்திரைகளைபற்றி ஒரு விளக்கம். அஞ்சு விரல்களில் என்னென்ன மாதிரி எதையெதையெல்லாம்னு படபடன்னு சொல்லிச் செஞ்சு காமிச்சது நல்லாவே இருந்துச்சு. தில்லி ஏர்போர்ட்லே பார்த்த முத்திரைகள்தான் எனக்கு உடனே நினைவு வந்துச்சு. நவரச கிருஷ்ணா என்று ஒரு அயிட்டம் செஞ்சாங்க. கண்ணன் சிறு குழந்தையா இருந்தப்ப அம்மா பறவைகள் மான்கள் எல்லாம் காட்டிச் சோறு ஊட்டும் காட்சி அப்படியே கண் முன்னால். பதினாலு வயது இளைஞனாக மதுரா நகருக்குள் நுழையறான். கண்டவர் கண்களையெல்லாம் கட்டிப்போடும் அழகு, கம்பீரம். கடைசியில் கம்ஸனைக் கொல்லுதல் யமுனை நதிக்கரையில் வந்து கைகால் முகம் கழுவி விஸ்ராந்தியாக ஓய்வெடுத்தல் இப்படி ஸீன் பை ஸீன் நம்ம மனதை அப்படியே சுருட்டி எடுத்துக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்.
வந்தேமாதரம் பாடலுக்கு அபிநயம் அப்புறம் தில்லானா . ஒரு மணி நேரத்துலே நிகழ்ச்சி கச்சிதமா முடிஞ்சது. ஆரம்ப நடனத்துலே மணிரத்தினம் பட ஷூட்டிங்லே இருந்தோம். அப்படி ஒரு இருட்டு. விளக்கைப் போடலாமுன்னா....எது எங்கேன்னு கூடத் தெரியலை. மைக் செட்டைச் சரி பண்ணிக் கொடுத்துட்டு எலெக்ட்ரீஷியன் காணாமப் போயிருந்தார். செல்லடிச்சு அவரைப் புடிச்சாங்க.
திரும்பி வந்து சரி செய்யும்வரை பொறுமையா மேடையின் ஒரு பக்கம் காத்திருந்ததைச் சொல்லணும். அழறபிள்ளைதான் பால் குடிக்கும்! இத்தனைக்கும் அவுங்க வலைப்பக்கத்துலேயே அவுங்க நடனத்துக்குத் தேவையான மேடை, ஒலி ஒளி அமைப்பு எப்படியெல்லாம் இருக்கணுமுன்னு விலாவரியாப் போட்டு வச்சுருக்காங்களே, இங்கத்து ஆட்களுக்கு இதைச் சொல்லாம இருந்துருப்பாங்களா என்ன?


நம்ம நாட்டுக்கே உரித்தான அலட்சியம் அங்கங்கே எட்டிப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கு என்பது ஒரு சோகம்:(

'சிம்ரன் மாதிரி இருக்காங்கல்லே?' கோபால்.

ஆமாம்ன்னாலும் உடனே ஒத்துக்க முடியாதுல்லே? மறுநாள் 'நீங்க சொன்னது சரி. கொஞ்சம் சிம்ரன் சாயல் இருக்கு'ன்னு சொன்னேன்.


இன்னிக்கு மாலை கவாலி நிகழ்ச்சி ஒன்னு இருக்கு. கடைசிநாள் ஒரு சூஃபி மியூஸிக். முதல்முறையா இப்படி ஒரு சான்ஸ். பார்க்கலாம் நமக்குக் கிடைக்குதான்னு..........



24 comments:

said...

chaurasia's disciple is stunning pretty!!!! :O

said...

வாவ்! புகைப்படங்களுடன் நல்லதொரு பகிர்வு.

said...

nice post! thanks

said...

நல்ல பதிவு.
நேரில் பார்த்தது போன்ற உணர்வு.

said...

//பார்க்கலாம் நமக்குக் கிடைக்குதான்னு..........//

கிடைக்கும்.. அப்போதானே நாங்களும் பார்க்க முடியும்ங்க :)

said...

hai thulasiakka,
nalla pakirvu. athai vida nalla rasanai.en veetuku vanthathuku romba nandri.technical vishayam ezhuthi irukkenga.enaku onnum puriyala.konjam vilakama sollikkudunga.thanks for visiting me.

said...

படங்கள் கொள்ளை அழகு. கோபால் சார் தேவப்ரியா பத்தி என்ன சொன்னார்னு சொல்லுங்களேன்:-)

அந்தப் புல்லாங்குழல் பேர் பண்சூரிதானே? எங்கயோ படிச்சது.

said...

@Porkodi, இது எங்க ஏரியா. உள்ள வராதீங்க:-)

said...

புகைப்படங்களுடன் நல்ல பகிர்வு. நன்றி.

said...

ரமா வைத்யநாதனும் சிம்ரனும்:)

குழந்தைகளும் சௌராசியா தாத்தாவும் அற்புதம். கூட வாசிக்கிற சிஷ்யைதான் எத்தனை அழகா இருக்காங்க!! ஷஷான்க் ஏமாத்திட்டாரா:(
நல்லா இருந்ததுப்பா படிக்க.

said...

மிகவும் அர்மை. படங்களும் நல்லா இருக்கு.

said...

வாங்க பொற்கொடி.

உண்மை உண்மை உண்மை

said...

வாங்க சித்ரா.

தொடர்வதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சமுத்ரா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

நான் பெற்ற இன்பம் என்று லேபில் கொடுக்கலாமா?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுசி.

உங்க வாய் முகூர்த்தம் பலிச்சுருச்சு! கிடைச்சதுங்க. இன்னிக்கு பதிவு போட்டுருக்கேன் பாருங்க.

said...

வாங்க தேனீக்காரி.

நானே ஒரு க கை நா. (காப்பி ரைட் என்னிடமே)

எங்கிட்டே டெக்னிகல் விஷயம் கேட்டா...... உருப்பட்ட மாதிரிதான்!!!!

சரி எதுக்கும் தனிமடலா உங்க பதிவுலே வந்து சொல்றேன்:-))))

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

பொதுவா புல்லாங்குழலுக்கு ஹிந்தியில் பன்சூரின்னு சொல்றாங்க.

தெளிவான பளிங்குபோல இருக்கும் தேவப்ரியாவைப் பத்தி கோபால் ஒன்னுமே சொல்லலை. இப்படி ஒரு மகள் இருந்துருக்கக்கூடாதான்னு நினைச்சுருப்பார் இல்லே?

said...

வாங்க வெங்கட்ட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி.

said...

oops........வெங்கட்டைக் கொஞ்சம் அழுத்திட்டேன்!

said...

வாங்க வல்லி.

நம்ம ரமாவுக்கு வயசு 42! ஆனா உடம்பு எப்படி ச்சிக்ன்னு இருக்குன்னு பார்த்து......... லேசா ஒரு புகை!

ஷஷாங் எங்கப்பா ஏமாத்துனார்? ஏமாந்தது நம்ம குற்றம்.

அதுக்குத்தான் க்ளீன் ஸ்லேட்டா மனசை வச்சுக்கிட்டுப் போகணும்.

said...

வாங்க கோமு.

வருகைக்கு நன்றி.

மீண்டும் வருக.

said...

"நவரச கிருஷ்ணா" அழகான வர்ணனை நேரில் பார்த்ததுபோல மனத்தை இழுக்கிறது.

said...

வாங்க மாதேவி.

ரொம்பவே சூப்பரா இருந்துச்சுப்பா அந்த நடனம்.