போன ஜென்மத்தில் நம்ம கோபால் பூனையாத்தான் இருந்துருப்பார் என்பது இந்த ஜன்மத்தில் எனக்கு உறுதி ஆயிருச்சு. நிஸப்தம். நல்ல இருட்டு. இவர் வழிகாட்ட(?) கையைப்பிடிச்சுக்கிட்டே மெள்ள அடிமேலடி எடுத்துவச்சுப் போறேன். இங்கே உட்காருன்னு கிசுகிசுப்பாச் சொல்றார்.
காயத்ரி தீர்த், ஷாந்திகுஞ்ஜ் ஆஸ்ரமத்துக்குள்ளே இப்போ இருக்கோம்.
ஹரித்வார் வந்து சேர்ந்ததும் அறைக்குப் போகாமல் எதிரில் இருக்கும் ஷாந்திகுஞ்ஜுக்குள் நுழைந்தோம். த்ரிவேணி காட் போய்வந்ததுலே மனம் கொஞ்சம் சரியில்லை அதனால் பசியுமில்லை. நம்ம ட்ரைவர் ப்ரதீப்பை சாப்பிட அனுப்பிட்டோம். கொஞ்சநேரம் இங்கே சுத்திட்டு அறைக்குப் போகலாம். இடையில் பசி வந்தால் பார்த்துக்கலாம்.
நேற்று இரவில் கொடுத்தமாதிரியே விஸிட்டர்ஸ் பாஸ் கொடுத்தாங்க. ஆஸ்ரமக் கட்டிடத்தை நோக்கிப்போகும் வழியில் ரெண்டு பக்கமும் நிறைய மரங்களும் செடிகளுமா ஒரு நர்ஸரி இருக்கு. எல்லாச் செடிகளுக்கும் பெயர்ப்பலகை வச்சுருக்காங்க. கண்ணை நட்டுக்கிட்டு ருத்ராக்ஷ செடியைத் தேடிக்கிட்டே போனேன். ஊஹூம்.............
அலங்கார நுழைவு வாயில் கடந்தால் கண்ணெதிரில் பளிங்கு மணிமண்டபம். அதில் ரெண்டு தேர் வடிவ மாடங்கள். ஸ்தாபகர் ஸ்வாமிக்கும் மாதாஜிக்குமான சமாதிகள். பெரிய பளிங்கு மேடையில் ஸ்வஸ்திக் டிசைனில் பூக்கள் அலங்காரம். இதுக்குப்பின்னே மூன்று யாக சாலைகள். நடுவில் உள்ளதில் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு. ஆஸ்ரம வாசிகளுக்கு மஞ்சள் நிற சீருடை.
தங்கும் அறைகளா வரிசையாக் கட்டி விட்டுருக்காங்க. லைன்வீடுகள் போல் ஒவ்வொரு வாசப்படிக்குப் பக்கத்திலும் பூச்செடிகள், துணி காயப்போடும் கொடின்னு பார்க்கவே அருமையா இருக்கு. பேசாம அக்கடான்னு வந்து ஒரு பத்துநாள் தங்கிடலாமான்னு தோணுச்சு.
இன்னொரு கட்டிடத்தில் கீழ்வரிசை முழுசும் முனிவர்கள், ஞானிகளின் சந்நிதிகள்.
சும்மா சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தப்ப ஆஸ்ரமவாசி ஒருவர் வாங்க அகண்ட தீபம் பார்க்கலாமுன்னு கூட்டிப்போனார். தனிக்கட்டிடமா இருக்கு. மாடி ஏறிப்போனால் முன் அறையில் ஸ்தாபகர் தம்பதிகளின் பெரிய படங்களும், எதிரில் ரோஸ்க்வார்ட்ஸ் கல்லில் செதுக்கிய பெரிய சிவலிங்கமும் பெரிய நந்தியுமா இருக்கு. அடுத்துள்ள இன்னொரு அறையில் காயத்ரி மாதாவின் பளிங்குச்சிலையும் அணையாவிளக்கும் இருக்கு.
சஞ்ஜீவினி வித்யயை கத்துக்க மக்கள் வர்றாங்களாம். எல்லாம் ஆயுர்வேத ஆராய்ச்சிகள். இதுக்காகவே தோட்டங்களில் இருநூற்று அம்பது வகை அரிய மூலிகைச்செடிகள் வச்சுப் பராமரிக்கிறாங்க. அப்புறம் டென்ஷன் மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் மனதை சமநிலைப்படுத்தி வாழும் கலை படிக்க ஒரு கூட்டம். மனநிலை சரி இல்லாம இருக்கும் மக்களுக்கு, போதைப்பழக்கத்துக்கு அடிமையா இருக்கும் ஆட்களுக்கு, சமூகத்தில் இருக்கும் கல்வி அறிவின்மை, மூடநம்பிக்கை, வரதட்சிணைக்கொடுமை போன்ற விஷத்தைக் களைய வகுப்புகள், இளைஞர் சமூகத்தை நல்வழிப்படுத்தும் வகைகள்ன்னு ஏகப்பட்ட சமாச்சாரங்கள் நடத்திக்கிட்டு இருக்காங்க. ஆன்மீக வகுப்புகள், இதிகாச விளக்கங்கள் லெக்சர்கள், யோகா வகுப்புகள் இப்படித் தனிப்பிரிவு. நம்மைக்கூட்டிப்போய் எல்லா இடமும் சுற்றிக் காமிச்சவர்கூட ரெண்டு வார வகுப்புக்காக ஹைதராபாத் நகரில் இருந்து வந்துருக்கார்.
இயற்கையில் நடக்கும் பேரழிவில் அகப்பட்டுக்கொண்ட மக்களுக்கு கவுன்ஸிலிங் செய்ய இந்த ஆஸ்ரமத்தை இந்திய அரசாங்கம் தேர்ந்தெடுத்து இருக்கு.
1971 வது வருசம் இந்த ஆஸ்ரமம் ஆரம்பிச்சவர்கள் குருதேவ் ஸ்ரீராம் ஷர்மா ஆச்சார்யாவும் அவர் மனைவி பகவதி தேவி ஷர்மாவும். இந்த நாப்பது வருசங்களில் பிரமாண்டமான வளர்ச்சி அடைஞ்சுருக்கு. தனி ராஜாங்கமா நடக்குது இந்த நிறுவனம். ஆரம்பித்த அன்று ஏற்றிய தீபம் என்றும் அணையாவிளக்காய் எரிஞ்சுக்கிட்டே இருக்கு. ரெண்டு விளக்குகள் ஏற்றிவச்சுருக்காங்க. ஒரு விளக்கைச் சுத்தம் செய்யும்போது மற்றொரு விளக்கு எரிஞ்சுக்கிட்டே இருக்கும் ஏற்பாடு, Back up! விசேஷ நாட்களில் இங்கே மட்டும் ஒரு கோடி பக்தர்கள் வருவாங்களாம்!
மேலும் பக்தர்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சியை இங்கே இருக்கும் கூடங்களில் இலவசமா நடத்திக்கலாம். நாங்கள் அங்கே போனப்ப ஒரு குடும்பம், குழந்தைக்கு மொட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
பக்தர்களுக்குத் தங்குவதற்காகத் தனி அறைகள், கூடங்கள் எல்லாம் இலவசம். சாப்பாடும் இலவசம்தான். சமையல் முதல் சுத்தப்படுத்தும் வேலைகள் வரை எல்லாமே தங்குபவர்கள் பார்த்துக்கறாங்க. எல்லா இடமும் படு சுத்தம். ஓய்வு நேரம் என்பதே இல்லாம எதாவது வேலை இருந்துக்கிட்டே இருக்குமாம். என் பத்துநாள் தங்கலை மீண்டும் பரிசீலனை செய்யத்தான் வேணும்! ஒருவேளை தியான நேரம்தான் உடலுக்கு ஓய்வோ?
'நீங்க இன்னும் சாப்பிடலைன்னா, உணவுக்கூடத்துக்கு இந்த வழியாப்போங்க'ன்னு சொன்னார் அந்த தன்னார்வலர். பரவாயில்லைன்னு வேத சம்பந்தமான புத்தகங்கள் விவரங்கள் இருக்கும் நூலகத்துக்குப்போய் பார்த்தோம். அஞ்ஞானிகளுக்கு என்ன புரியப்போகுது? கண்ணால் பார்த்த புண்ணியம் மட்டுமே. அதுக்குப் பக்கத்துக் கட்டிடம் 'தேவாத்மா ஹிமாலய் மந்திர்'. இது தியானக்கூடம். இதுக்குள்ளேதான் கோபாலின் கையைப் பிடிச்சுக்கிட்டு நடந்து போனது.
தியானம் செய்ய வழக்கம்போல் கண்ணை மூடிக்கவேண்டாம், இங்கேதான் இருட்டா இருக்கேன்னு இமயமலையைப் 'பார்த்தபடி' கொஞ்சநேரம் தியானம் செஞ்சேன். கண்ணை மெதுவா அந்த இருட்டுக்குப் பழகிக்கிக்கிட்டுப் பார்த்தால் உச்சியில் வெள்ளைவெளேருன்னு பனிமலை. இண்டு இடுக்கில் சின்னதா நீல மினுக்கல். நேரம் ஆக ஆக அந்த நீலஒளி மனசுக்குள்ளே ஊடுருவிப் போறதுபோல இருந்துச்சு. தன்னிலை இல்லாமப்போயிருமோன்ற 'திடுக்' வந்தவுடன் போதுமுன்னு எழுந்து வெளிவரும்போது தலையை மறுபக்கம் திருப்புனால்............ ஏழெட்டு ஆட்கள் சிலைகள் போல மேல் வரிசையில் நமக்குப் பின்பக்கம் இருக்காங்க! காலரி போல மூணு அடுக்குவரிசையா நீள பெஞ்சுகளாய் இருக்கைகள். (இதுக்குள்ளே மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு வெளியே இருந்தவர் சொல்லி இருந்தார்) துளி ஓசையும் உள்ளே வரும் ச்சான்ஸ் இல்லை! ஒருவேளை ஆஸ்ரமப்பேரைக் காப்பாத்தும் அறை இதுதானோ!!!
பகல் ஒன்னரை. கோபால் முகத்தில் பசி தெரியுது. நாம் தங்குன ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்ட் சரி இல்லைன்னுதான் நேத்தே தெரிஞ்சுபோச்சே....... ஆஸ்ரமத்துக்கு எதிரில் சாலையைக் கடந்தால் ஒரு தாபா. ஸ்ரீ தன் லக்ஷ்மி போஜ் & லாட்ஜ். சுடச்சுட சப்பாத்தி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. தட்டு வைக்கும்போதே கையோடு பச்சமிளகாய், வெங்காயம், நறுக்கின எலுமிச்சம்பழத்துண்டு, ஊறுகாய் வந்துருது. தகதகன்னு ஒளி!
சப்பாத்தியும் ஆலுமட்டர் கறியும், தாலும் வாங்கிக்கிட்டோம். விலையும் மலிவு, ரெஸ்ட்டாரண்ட் சாப்பாட்டைவிட ஆயிரம் மடங்கு ருசி (கோபால் வாக்கு)
வெளியே இருக்கும் கடைகளில் யாவாரம் இல்லாமக் காத்தாடுது. கடைக்காரர்கள் சீட்டு ஆடிக்கிட்டு ஜாலியா இருக்காங்க. விற்பது விக்காமல் போகாது என்ற நம்பிக்கை. நானும் ஒரு கடைக்குள்ளே நுழைஞ்சதும், சீட்டுகளை கவுத்து வச்சுட்டு ஓடிவந்தார் கடைக்காரர். சின்னதா ஒரு செம்புத்தட்டு கிறிஸ்டல் மேரு வைக்க வாங்கினேன்.
அறையில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த பரிபாடி என்னன்னு தீர்மானிக்கணும்.
தொடரும்........................:-)
Monday, March 07, 2011
ஷாந்திகுஞ்ஜ் சாம்ராஜ்ஜியம்
Posted by துளசி கோபால் at 3/07/2011 05:27:00 AM
Labels: Shanthikunj, அனுபவம் Haridwar
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
அமைதியின் இருப்பிடம் அவ்வளவு அழகாக இருக்கிறது.
"சமூகத்தை நல்வழிப்படுத்தும் வகைகள்ன்னு ஏகப்பட்ட சமாச்சாரங்கள் நடத்திக்கிட்டு இருக்காங்க"
சிறந்த சேவை அவசியமானதும் கூட.
அருமையான இடங்களுக்கு அழைத்துப் போயிருக்கிறீர்கள்..துள்சி! அதுக்காகவே ஒரு டாங்ஸ்!!
அந்த தியான அறை....இமயமலை தரிசனம்...அற்புதம்!!!கொஞ்சம் தன்னிலை மறந்துதான் பாக்குறது? கோபால்தான் துணையிருக்கிறாரே!!!
//என் பத்துநாள் தங்கலை மறுபடி பரிசீலனை செய்யத்தான் வேணும்//
அத்தானே...பாத்தேன்!!!
வாங்க மாதேவி.
இன்னிக்கு பொழுதோட வந்துருக்கீங்க. வடை உமக்கே!
வாங்க நானானி.
ரிஸ்க் எடுக்க வேணாமுன்னுதான்......
ஒரு காலத்துலே மயங்கி விழுந்த என்னை அலேக்காத் தூக்கி டாக்ஸியில் வச்சு ஆஸ்பத்ரிக்குப்போனார் என்றதுக்காக இப்போ டபுளான பிறகு ட்ரபுள் கொடுக்கணுமான்னு.....
அவ்ளோ வேலையை நம்மூட்டுலே, நம் தோட்டத்துலே பார்த்தால் .....
அந்தச் சுத்தத்துக்கே 'அவன்' ஓடிவந்துட மாட்டானா!!!!!
ருத்ராட்சம் ஆப்டுச்சா இல்லியா.. உங்க புண்ணியத்தில் எங்களுக்கும் இந்த இடங்களையெல்லாம் பாக்க கொடுத்துவெச்சிருக்கு..
:) பூனை மேல உங்களுக்கு ஏன் பிரியம்ன்னு தெரியுதே இப்ப
நல்ல இடமா இருக்கு கேக்கவே சந்தோசம் ..எல்லாம் இலவசம்.எல்லாம் சுத்தம்.. அருமை.
உங்க ஆசிரமமும் இதைப்போல இன்னும் சிறப்பா வருமென்று நம்பிக்கை இருக்கு.. :) எல்லாம் பாத்து நோட் செய்துக்குங்க..
நல்ல பகிர்வு. இதுவரை ஷாந்தி குஞ்ச் சென்றதில்லை. அடுத்த முறை செல்லும் போது பார்க்கத்தூண்டியது படங்களுடன் கூடிய உங்கள் பதிவு.
//அறையில் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு //
:)
தியான அனுபவம் அருமை டீச்சர்.
ஒவ்வொரு இடமாகத் தேடித்தேடி அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் . மிக்க நன்றி. ஆனால் இந்த இடங்களைப் பார்ப்பதென்றால் பேக்கேஜ் டூர்களில் போனால் சரிப்பட்டு வராது. தாங்கள் தெரிவித்துள்ளபடி ஒரு 10 நாட்களாவது இருந்தால்தால்தான் முடியும். இருக்கும் பொறுப்புகளை அப்படியே விட்டுவிட்டு உடனே கிளம்பிவிடவேண்டும்போன்ற உணர்வுதான் இந்தப் பதிவுகளைப் படிக்கையில் வருகிறது.
உடனே கிளம்ப ஆசையா இருக்குப்பா. அத்தனை அழகு. நீங்களும் தியானம் செய்து அந்த நீலச் சுடரும் கண்ல பட்டுதே. ஒரு வேளை கப்புவும் ஜிக்குவுமங்கெயிருந்து பைபை சொன்னாங்களோ.
தூங்கப் போகும் சமயத்தில் இனிய பதிவு. இதயம் பேசுகிறது மணியன் போல வாய்ப்பு கிடைக்கும் போது இது வரையிலும் பார்த்த பயணித்த கேட்ட படித்த மொத்த நாடுககளை வைத்து ஒப்பீட்டளவில் ஒரு நீண்ட பயண மற்றும் அனுபவ கட்டுரைகளை எழுதி ஒரு புத்தகமாக்கலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை உணர வாய்ப்பு இருப்பவர்களுக்கு உத்தம எண்ணங்களை உருவாக்கக்கூடும்.
வாங்க அமைதிச்சாரல்.
ருத்ராட்சம் ஆப்டுடுச்சுக் கடைசியில்:-)
வாங்க கயலு.
நம்ம ஆஸ்ரமத்துக்கு 'வேண்டிய' எல்லாத்தையும் தெரிஞ்சுக்கத்தானே இப்பப்பயணமே போறது:-)
பொருளாளர், சமையல் இன்சார்ஜ் எல்லாம் பொறுப்பேத்துக்கிட ஆள் ரெடி!
மற்ற முக்கிய வேலைகளுக்கும் தேர்வு நடந்துக்கிட்டு இருக்கு.
பக்தர்களைச் சேர்க்கவேண்டியதுதான் பாக்கி:-)
அற்புதங்கள் நிகழ்த்திக்காட்ட ஐடியாஸ் தேவை.
வாங்க வெங்கட் நாகராஜ்.
நாலுநாள் தங்கும்விதமா இருந்தா இன்னும் நிறையப் பார்க்கலாம்!
வாங்க சுசி.
தினமும் ஒரு ஆறுமணி நேரமாவது 'தியானம்' செய்யும் பழக்கம் இருக்குப்பா:-))))
வாங்க பிரகாசம்.
உண்மைதாங்க. பேக்கேஜ் டூருன்னா அவுங்க கொண்டுபோகும் இடங்களும் அதற்கான குறிப்பிட்ட நேர அளவும்தான்.
ஆனால் மொழி தெரியாத இடங்களில் இப்படிப்போவதுதான் நல்லதும்கூட.
எங்க யூரோப் டூரில் இப்படிப்போய் ரொம்பக் கொஞ்சமாத்தான் பார்க்க முடிஞ்சது. ஆனால் தங்கும் இடங்களுக்கு மெனெக்கெடாமல் நல்லதாவே வாய்ச்சது.
நாமே தனியா டூர் போனால் 60% செலவு தங்கும் இடங்களுக்கு:(
நமக்கு விருப்பமான இடங்களை ஆற அமரப் பார்க்கலாம். இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் இருந்துருந்தா அநேக இடங்களைக் கவர் செஞ்சுருப்போம்.
கிடைச்சவரை போதுமுன்னு ரொம்ப எதிர்பார்ப்பில்லாம மனசை வச்சுக்கிடணும்,முதலில்.
வாங்க வல்லி.
கண்ணு இருட்டுக்குப் பழகுனா எல்லாமே பளிச்தான்:-)))))
வாங்க ஜோதிஜி.
இப்பெல்லாம் ஆன்மீகக்கட்டுரைகள் என்றால் பரிகாரம் எல்லாம் எழுதணும். இன்ன நேரம், இந்தக் கோவில், இதுக்கு இப்படிச் செய்யணும். குழந்தை வரம் முதல் கோடிகோடியா பணம் சேர்க்க.......
உள்ளது உள்ளபடி, சிலசமயம் இறைமறுப்பு ஒளிஞ்சு நின்னுருக்கும்படியெல்லாம் எழுதுவதை யாரும் புத்தகமாப்போட முன்வருவாங்களா?
பேசாம நாமே ஒரு பப்ளிஷிங் கம்பெனி ஆரம்பிச்சுடலாமா? ஷேர்ஸ் வாங்க நம்மாட்கள் வரமாட்டாங்களா என்ன? :-)
Post a Comment