Monday, January 31, 2011

(ஒரே கேக்குலே) நாற்பெரும் விழா!

முதல்லே பருப்பும் நெய்யும். அப்புறம் ஒரு சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம் ஊறுகாய்ன்னு ரொம்ப சிம்பிளா வீட்டுச்சாப்பாடு ருசியில் அதிகம் காரமில்லாம வயித்துக்கு இதமா சாப்பாடு! எல்லாம் ஞானாம்பிகா கேட்டரர்ஸ்தான். ரெண்டு நாளைக்கு முன்னால் பகல்நேரக் கச்சேரியும் மாலை எதோ நாடகமுன்னு சொன்னாங்களே அதெல்லாம் என்னன்னு கண்டுக்கலாமுன்னு வாணி மஹால் வந்தா...........நமக்கு அவ்வளவா சுவாரசியமில்லாத நிகழ்ச்சி போய்க்கிட்டு இருக்கு. கீழே இருக்கும் ஹால் காலி. வாசலுக்குப் பக்கத்தில் இருந்தவங்ககிட்டே என்ன நிகழ்ச்சி அடுத்துன்னா............... 'நாங்க சாப்பிட வந்துருக்கோமு'ன்னு சொன்னாங்க. "இங்கெயா? சாப்ட்டாச்சா?"

"இனிமேத்தான். சில ஃப்ரெண்ட்ஸ் வரவுக்குக் காத்துருக்கோம். "

மனசுலே குறிச்சு வச்சுக்கிட்டதை இன்னிக்கு வெளியே எடுத்தேன். வாங்கி வந்த புத்த்கங்களையெல்லாம் பெட்டியில் அடுக்கிட்டு வாணிமஹாலுக்குக் கிளம்பினோம். மணி பனிரெண்டேகால்தான். அவ்வளவா பசி இல்லை. ஆனாலும் கேண்டீன் பக்கம் எட்டிப்பார்த்தோம். மதியச் சாப்பாட்டுக்காக டைனிங் ஹால் மேசைகளை மாத்தி மூணு வரிசையா பந்தி ஏற்பாடு. பகல் மூணுவரை சாப்பாடு இருக்குமாம். பேசாம ஒரு காஃபியைக் குடிச்சுட்டு ஒருமணி கச்சேரியைக் கேட்டுட்டு வந்து பகல் சாப்பாட்டை ஒரு கை பார்க்கலாமுன்னு ஐடியா வந்துச்சு.
மாடிப்படி அருகில் பச்சைச் சட்டை இளைஞர் தோளில் மிருதங்க பையுடன் நின்னுக்கிட்டு இருந்தார். ஒரு மணிக் கச்சேரிக்கான்னேன். ஆமாம்ன்னார். எங்கேயோ பார்த்த நினைவு...............

ஏஸி ஜாலில் ஈ காக்காய் இல்லை. நிம்மதியா உக்கார்ந்துக்கிட்டுக் குட்டித்தூக்கம் போடலாம். அழகான ராமர் படம் ஒன்னு மாட்டிவச்சுருக்காங்க. ஓபுல்ரெட்டிகாருவின் படமும் தொங்குது.

ஒரு மணிக்குக் கால்மணி இருக்கும்போது சரசரன்னு சத்தம். கிடுகிடுன்னு நாலைஞ்சு பேர் அரங்கத்தில் நுழைஞ்சாங்க. மேடைக்குப் போனாங்க. மைக் செட் பண்ணுவதும் ஸ்ருதி செக் பண்ணுவதுமா பரபரன்னு ஆரம்பிச்சு......... 'டாண்' னு ஒரு மணிக்குக் கச்சேரி ஆரம்பிச்சது.
எண்ணி மூணே பேர். சுஷ்மா சோமசேகரன்(சிங்கை) பாட்டு, ஸ்மிதா கிருஷ்ணன்(அமெரிக்கா) வயலின். குரு பரத்வாஜ் (உள்ளூர்) மிருதங்கம் (காரைக்குடி மணியின் சிஷ்யர்) எல்லாம் அண்டர் 23 டீம். அதுவே கண்ணுக்குக் குளுமையா இருந்துச்சு.

சுஷ்மாவின் குரல் வளம் அருமை. 'நம் கணபதே நமோ நமோ'ன்னு ஆரம்பிச்சதுலேயே நம்மைக் கட்டிப்போடப் போறாங்கன்னு புரிஞ்சுபோச்சு. சங்கரி, அம்பா, ஷ்யாமளே, சந்த்ரமௌலி, சாவித்ரி, பஞ்சஷாந்தி ஸ்வரூபிணி, பாண்ட்யகுமாரின்னு படபடன்னு அம்பாள் பெயர்களே பாட்டுமுழுசும் சுத்திச்சுத்தி வருது. யார் எழுதுனாங்களோ?

இந்த இசைக்கச்சேரிகளில் எப்பவும் எனக்கொரு சின்னக் குறை இருக்கும். என்ன பாட்டு, ராகம், தாளம்னு ஒரு வரி பாட்டின் ஆரம்பத்துலே சொல்லிட்டா நல்லா இருக்குமே................. அனாவஸியமா அது என்ன ராகமுன்னு மண்டையைக் குடைஞ்சுக்கிட்டு பாட்டை அப்போ அனுபவிக்காமல் கோட்டை விடுவதில் இருந்து நாம் தப்பிக்கலாமேன்னுதான்....................... இதே போல நிகழ்ச்சி முடிஞ்ச வினாடியே திரை போட்டுட்டு அதுக்குப்பிறகு உள்ளே சன்மானம் கொடுப்பதையும் கொஞ்சம் மாத்திக்கலாம். திரையை ஒரு வினாடி மறுபடித் திறந்து ரசிகர்கள் முன்னிலையில் அந்தக் கவரைக் கொடுக்கப்படாதோ? நாமும் கைதட்டி ஊக்கப்படுத்தலாமே..... அது ஒருவேளை வெறுங்கவராக இருந்தாலுமே!

வயலின் ஸ்மிதா நல்லாதான் வாசிச்சாங்கன்னாலும் விளையாட்டுப் புள்ளையா வயலினை ரெண்டு முறை கைநழுவ விட்டுட்டாங்க. oops...........
முதல் கச்சேரியா இருக்கலாம். இசைவிழாவின் சீரியஸ்னஸ் புரிபடலை போல!

குரு பரத்வாஜ் மேடை அனுபவம் நிறைய இருக்குன்னு வாசிப்புலேயே காமிச்சார். (இப்ப நினைவுக்கு வந்துருச்சு. போன வருசம் பாரதிய வித்யாபவனில் இவர் வாசிப்பைக் கேட்டுருக்கேன்). தாயே த்ரிபுர சுந்தரி உமா மஹேஸ்வரி, இதி ஜென்மமிதியா ஓ ராமா (தியாகராஜர். முதல்முறையாக் கேட்கறேன்) படிப்படியா நம்மை உயர்த்தும் படி பதினெட்டாம் படி (சீஸன் அனுசரிச்சு) இப்படிப் படபடன்னு நாலைஞ்சு பாட்டு, 20 நிமிசத்துக்கு ஒரு ராக ஆலாபனைன்னு ஒரு மணி நேரத்துலே கச்சிதமா இந்த ஒருமணிக் கச்சேரி முடிஞ்சது. கீழே போய் சாப்பிடப்போனோம். முதல் பாராவைப் படிச்சீங்கதானே?

ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம் உபசரிப்பு. என்னமோ அவுங்க வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்கோமுன்னு நம்மை நினைக்க வச்சுடறாங்க. நான் வெறும் பருப்பு சாதம் மட்டுமேன்னதுலே பரிமாறுனவர் இது வேணாமா, அது வேணாமான்னு கேட்டே பரிதவிச்சுப் போயிட்டார். மறுநாள் புத்தாண்டை முன்னிட்டு பெரிய விருந்தே நடக்கப்போகுது. மெனுவைக்கூட வெளியில் எழுதிப்போட்டாச்சு. 200 ரூ மதிப்புள்ள உணவு வெறும் 120தான்னு வேற காதில் ஓதினார். இருக்கட்டும். இன்னிக்கு சாப்பாடு வயித்துக்கு ஒத்துக்கிட்டால் நாளை பார்க்கலாம்.

மூணு மணிக்கு ஒரு காத்திருப்பு. மூணரைக்கு சீனா ஐயாவும் அவர் மனைவி செல்வியும் வந்தாங்க. அடுத்த சில நொடிகளில் கவிதாயினி மதுமிதாவும் அவுங்க கணவரும் வந்தாங்க. இன்னும் சில தோழிகளுக்கும் சொல்லி வச்சுருந்தேன். சீனா ஐயாவைச் சந்திக்க வாங்கன்னு. போதிய அவகாசம் கொடுக்காமத் திடீர்னு அழைச்சதால் அவுங்களாலே வரமுடியலையாம்

நேத்து நீங்க செல்லில் கூப்பிட்டப்ப, மக்கள் வரிப்பணத்தில் உண்டாக்கிய 'கலைஞரின் செம்மொழி பூங்கா' வில் இருந்தேன்னு சீனாவிடம் சொன்னால்......... 'அட! நானும் அங்கே இருந்துதான் கூப்பிட்டேன்'றார். அட ராமா............. அப்புறம் பதிவுலகம், பதிவர்கள்ன்னு கொஞ்சம் பேச்சு போனது. தருமியை செல்லில் கூப்பிட்டார். நாங்களும் அவரோடு நாலு வார்த்தைகள் பேசுனோம். நாலு பதிவர்களும் ஒரு வாசகரும், ஒரு ஆதரவாளருமா பதிவர் (குடும்ப) சந்திப்பு ஜேஜேன்னு களை கட்டிருச்சு:-)
சீனாவும் செல்வியும் அருமையா ஒரு கேக் கொண்டு வந்துருந்தாங்க. கூடவே பழங்களும். அன்னிக்கு அவுங்க மகளின் பிறந்தநாள். சரியா வருசக் கடையில்!!! மதுமிதாவும் தீனிகளோடு ஆஜர். நாமும் ஏற்கெனவே வாங்கி வச்சுருந்த இனிப்புகளுடன் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து காஃபி வரவழைச்சுட்டோம். பிறகு? பார்ட்டிதான்!
நம்ம சீனா ஐயா ஒரு 12 நாளுக்கு முன்னால்தான் மணி விழா கொண்டாடி இருந்தார். நமக்குத்தான் போய்க் கலந்துக்க முடியலை. அதனால் இப்போ அவரைக்கொண்டே கேக் வெட்டியாச்சு. கோபால் சொல்றார் 'மணியைப் பாரு'ன்னு! அப்போ மணி சரியா நாலரை. எங்க நியூஸிக் கணக்குப்படி அங்கே இரவு 12. புது வருசம் பொறக்குது:-)

ஆஹா.... இப்படி நாற்பெரும் விழா! டேட் லைனில் நியூஸி இருப்பதால் எப்பவும் போல உலகிலேயே புதுவருசத்தைக் கொண்டாடுன முதல் ஆட்களா நாங்க:-)))))))))))) (எங்கே இருந்தாலும் விட்டுறமாட்டொம்லெ)
ஒரு ஆறுமணி போல கிளம்பிட்டாங்க. நாங்களும் ஒரு ஆட்டோ பிடிச்சு ம்யூஸிக் அகெடமி போனோம். புத்தாண்டைக் கொண்டாட சென்னை ரெடியா இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் மின்விளக்கு அலங்காரங்கள். இந்த முறை ஆட்டோக்காரர் ரவி நியாயமான தொகையாக் கேட்டார். கழுத்தில் மாலையைப் பார்த்து முதலில் கொஞ்சம் தயங்குனேன். பேச்சுக்கொடுத்ததில் அது 'துளசி' மாலையாம். சின்னவயசு முதலே போட்டுருக்காராம். கல்லூரி நாட்களிலும் கழட்டவே இல்லையாம். பட்டதாரி. எல்ஜியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். அந்த வேலை போயிருச்சாம். இப்போ ஆட்டோ ஓட்டறார். மாலை 7 மணிக்கு அப்புறம் வேலை செய்யமாட்டாராம். நேரா வீடு. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணும். மனைவிக்கு சன் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவில் பணி. ஆறு வயசில் ஒரு பெண் குழந்தை. பெயர் ஜனனி ( எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர்) தனியார் பள்ளிக்கூடத்தில் படிப்பு. மாசம் 3500 செலவாகுதாம் கல்விக்கு. இயல்பா பேசிக்கிட்டே அகெடமி உள்ளே கொண்டுபோய் இறக்கினார்.
வருசக் கடைசியிலாவது ஒரு நல்ல ஆட்டோக்காரரைச் சந்திச்சதுலே பரம திருப்தி எனக்கு. புதுவருச வாழ்த்தைச் சொல்லிட்டு டிக்கெட் எடுக்கப் போனோம். இன்னும் முக்கால் மணியில் உஸ்தாத் ஆலம் கான் சரோட் வாசிக்கிறார். இப்போ உள்ளே காயத்ரி க்ரீஷ் பாட்டு நடந்துக்கிட்டு இருக்கு. அதையும் போய்க் கேளுங்கன்னு தாராள மனசோடு சொன்னார் கவுண்ட்டரில் இருந்தவர்.
பால்கனிக்குப்போய்ச் சேர்ந்தோம். (இங்கே ரெண்டு பால்கனிஸ் இருப்பதை இன்னிக்குத்தான் கவனிச்சேன்) 'தனி' நடந்துக்கிட்டு இருக்கு. பிடிச்ச ஐட்டம் என்பதால் சுவாரசியமாப் போச்சு.
ஏழு மணிக்கு உஸ்தாத் ஆலம் கான் ஆரம்பிச்சார். இவர் சரோட் புகழ் உஸ்தாத் அலி அக்பர் கான் அவர்களின் மகன். அதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். இவரோட தம்பி தம்பூரா. தப்லாவுக்கு மிட்டாய்க்கலர் ஜிப்பாவுடன், சுபாங்கர் பானர்ஜி.
ரெண்டு மணி நேர நிகழ்ச்சி. அதுலே ஒன்னரை மணி நேரம் சரோடுக்கு ஸ்ருதி சேர்க்கறதும், மைக்கை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றதும்,. அப்பப்ப தம்பியின் தம்புராவை வாங்கி அதுக்கு ஸ்ருதி சரியாக்குறதுமா குனிஞ்ச தலை நிமிராம உஸ்தாத் ஆலம்கான் பார்த்துக்கிட்டார். 'விறுவிறுன்னு வாசிக்கப்போறார்............ நாம் வா வா சொல்லத் தொண்டையை ரெடியா வச்சுக்கணும்'னு திட்டத்தோடு வந்த எங்களுக்கு.............. எப்படி இருந்து இருக்கும்னு உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்..........

ஹிந்துஸ்தானி சங்கீத ரசிகர்களா வந்துருந்த அத்தனைபேரும் தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு வெளியே வந்தோம். உண்மையைச் சொன்னால் கூட்டமே இல்லை. அதிலும் பாதிப்பேர் தாங்கமுடியாம பாதியிலேயே எழுந்து போயிட்டாங்க. இதோ வாசிக்கப்போறார் இதோ வாசிக்கப்போறாருன்னு கடைசிவரை அஞ்சாநெஞ்சர்களா இருந்தவங்க கொஞ்சம்பேர்கள்தான். போகட்டும் 2010 வருச நட்டக் கணக்குலே............... எழுதிறணும்..

20 comments:

said...

ம்ம்ம் நல்ல ரவுண்ட் அப் போல

said...

மியூசிக் அகாடெமி, பார்ட்டி, நல்ல சாப்பாடு… ம்… கலக்கல் பகிர்வு. நன்றி.

said...

விழா சிறப்பா நடந்துச்சு போலிருக்கே..

said...

பகிர்வு சுவாரசியம்.மிக்க நன்றி.நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த சீனா ஐயாவை பார்த்து மனசு நிறைஞ்சி போச்சு,எல்லாரையும் பார்த்த்ததில் மகிழ்ச்சி.

said...

நல்ல பகிர்வுங்க.

said...

செவிக்கும் உணவு,சிறிது வயிற்றுக்குமா?
பகிர்வுக்கு நன்றி

said...

நல்லதொரு பகிர்வு மேடம்.

said...

நானேநேரில் அனுபவித்த மாதிரி இருக்கிறது.

said...

ஞானாம்பிகா வுக்கு நல்ல பேருமா துளசி. சுத்தம்,கவனிப்பு இரண்டைப் பற்றியும் அவங்களைக் கல்யாண சாப்பாடுக்கு ஏற்பாடு செய்தவங்க சொன்னாங்க.
அது பங்களூரு ரயிலில் கேட்ட கதை. இங்க வந்தால் நீங்க நல்ல புராணம் சொல்றீங்க.
பதிவர் சந்திப்புக்கு வரமுடியலையேன்னு இருக்கு. குடும்பமா, பதிவுலகமான்னு ஒரு பதிவு போடப் போறேன்:)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆமாங்க. சுத்தணுமுன்னே போனேன்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நியூஸி போனால் இதெல்லாம் கிடையாது பாருங்க. அதான் கிடைக்கும்போதே....... விடுவதில்லை:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

இல்லையா பின்னே?

சிறப்பு விருந்தினர் இருந்தாங்களேப்பா!!! அதுவே ஒரு தனிச்சிறப்பு.

said...

வாங்க ஆசியா.

சீனா ஐயாவும் அவர் மனைவியும் இனிய மனசுக்காரர்கள். கவிதாயினி மதுவோ..... கேக்கவே வேணாம்.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க சுசி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ராஜி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஷண்முகவேல்.

எல்லாம் நான் பெற்ற இன்பம் வகை:-))))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

நம்ம சித்ரா அப்பாவின் சதாபிஷேகத்துக்கும் ஞானாம்பிகாதான். ரொம்ப நல்லா இருந்துச்சு. அப்பவே இவுங்களைப்பத்தி பதிவொன்னு எழுதணுமுன்னு நிறைய படங்கள் எடுத்து வச்சேன். வேளை வரலை!

said...

நல்ல பதிவர் கூடல்.

ஹிந்துஸ்தானி :(

said...

வாங்க மாதேவி.

அப்ப டிசம்பர் 31 இல் விட்டதைச் சரியா ஒரு மாசம் கழிச்சு அதே 31 தேதிக்கு பிடிச்சுட்டோமுல்லெ!!!

அடுத்தபதிவுலே விவரம் இருக்கு பாருங்க;-))))