வண்டிக்குள் ஏறி உக்கார்ந்ததும் ட்ரைவருக்கான மொதக் கேள்வி.... கந்தசாமி கோவில் தெரியுமா? நல்லாத் தெரியுங்க. அப்ப காளிகாம்பாள் கோவில்? அதுவும் தெரியுங்க. சரி கிளம்புங்க. அண்ணாசாலையைத் தொட்டதும், பாரீஸ் போய் போகலாமா? இல்லை நுங்கம்பாக்கம்..... எதுலே சீக்கிரமா போகமுடியுமோ அதுலே போங்க. 'நம்பினோர் கெடுவார் ' என்ற புதுமொழிக்கேற்ப.............
சட்னு வண்டி நுங்கம்பாக்கம் கடந்து போச்சு. இன்னொரு ஆட்டோகாரரிடம் வழியைக்கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டார் ட்ரைவர். அபிராமி மெகா மால் பார்த்ததும், 'ஏன் புரிசைவாக்கம்'னு நினைச்சாலும், கோபால்கிட்டே கங்காதீஸ்வரர் கோவில் அதுதான்னு கை காமிச்சேன். பெருசா குளம் ஒன்னு இருக்குமேன்னதும் 'இந்தப்பக்கம் இருக்கும்மா'ன்றார் ட்ரைவர். அவர் காதுகள் பின்னாலயே(தான்) இருக்குன்றதைக் கவனிக்கலை நான்:(
பதிவுலக நண்பர் இருக்கும் தெருவைக் கடக்கும்போது அவர் நினைவு. சூளை, வேப்பேரின்னு போய்க்கிட்டே இருக்கோம். ஒரு இடத்தில் பிரியும் பாதைக்கு அலங்கார வாசல் மாதிரி ரயில்பெட்டி ஒன்னு குறுக்கே உசரத்துலே நிக்குது. ஐசிஎஃப் க்கு போற பாதையா? ' பேஷ் பேஷ். வாட் அ நீட் ஐடியா'ன்னு பாராட்டறேன். வால்டாக்ஸ் ரோடு முழுசும் கடந்தாச்சு. மிண்ட் ஐப் பார்த்ததும் 'காசடிக்கிற இடம். இந்தியாவில் நாலு இடங்களில் காசு அடிக்கிறாங்க. அதுலே இது ஒன்னு. எங்க சித்தப்பா ஒருத்தர் இங்கே வேலை செஞ்சாரு'ன்னு குடும்பக்கதைகளை கோபாலுக்குச் சொல்லிக்கிட்டே.... போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம்.
சர்ர்ரக்ன்னு வண்டி நின்ன இடம் ஒரு தெருமுக்குக் கோவில். மஞ்சப்பெயிண்ட் அடிச்சு ,அங்காள பரமேஸ்வரின்னு எழுதிவச்சுருக்கு. ட்ரைவர் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகையுடன் 'இதாங்க நீங்க சொன்ன காளி கோவில்'.
'இருக்கவே இருக்காது. பக்கத்தில் நின்ன பெரியவரைக் கேளுங்க'.
' யோவ்.... அது எம்மாம் பெரிய கோவில்! இங்கெ வந்து நிக்குறே? இந்தப் பக்கம் போக முடியாது......பீச்சாங்கைப்பக்கம் திரும்பி நேராப்போ' பெரியவர் வாக்கு.
சின்னத் திருட்டு முழியுடன். 'நீங்க மிண்ட்ன்னு சொன்னீங்க அதான் இந்தக் கோவில்'ன்னு நினைச்சுக்கிட்டேன்.
"காளிகாம்பாள் கோவில் தெரியுமான்னு முதல்லே கேட்டதுக்கு நல்லாத் தெரியுமுன்னு சொன்னீங்க?"
"இல்லீங்க நீங்க மிண்ட்ன்னு......."
கோபம் எட்டிப்பார்க்குது. பல்லைக்கடி. பல்லைக்கடி
"மிண்ட்ன்னு சொன்னீங்களேன்னுதான் இந்தக்கோவிலுக்கு கொண்டுபோனேன்......"
அட ராவணா............ பிபி எகுறுதே..........
ஸ்டான்லி .ஆஸ்பத்திரி தாண்டறோம். 'இங்கேதான் எங்க அம்மா' ன்னு ஆரம்பிச்சவ சட்னு வாயை மூடிக்கிட்டேன். இந்த ஆள் வேற, காதை நம்மபக்கம் வச்சுக்கிட்டு சடார்னு ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுட்டா?
துறைமுகத்தை மேம்பாலத்தில் இருந்து பார்த்துக்கிட்டே பீச் ஸ்டேஷனைக் கடந்து பாரிமுனை தொட்டு கோட்டை ஸ்டேஷனைக் கடந்து பல்லாஸ்பத்திரி பக்கம் போறோம். இந்த ஆள் வழியைக் கோட்டை விட்டுருக்கார். இடப்பக்கம் போனால் செண்ட்ரல். வலப்பக்கம்தான் போகணும். ஆனால் நோ எண்ட்ரி போர்டு. ஒரு யூ டர்ன் எடுத்து இன்னும் சில இடங்களில் திரும்பி கரெக்டா அதே இடத்துக்கு வந்தார். அதே நோ எண்ட்ரி.
குமுறும் எரிமலை லேசாய்......வாய் திறக்குதோ.........
"ஏன்ப்பா.... தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லக்கூடாதா? இங்கே நிக்கறவர்கிட்டே வழி கேட்கலாமுல்லே?"
அந்தப்பக்கம் வந்துக்கிட்டு இருந்த ஒரு பெண்மணியிடம் 'யக்கா இந்த கன்சாமி கொய்லு எங்கெருக்கு?'
பெண்மணி கை காட்டிய திக்கில் 'நோ எண்ட்ரி' யைக் கொஞ்சம்கூடக் கண்டுக்காம குறுக்குசால் ஓட்டிப்போய் அந்தம்மா சொன்ன சந்தைவிட்டு முன்னாடி இருந்ததில் திரும்பினதும்......... கால்வைக்க இடமில்லாமல் இரும்புச்சாமான்கள் விற்கும் கடைகள்.. மெள்ளமெள்ள முன்னேறுனதில் இரண்டுபக்கமும் இரும்போட பித்தளையும் இருக்கு. திருவாச்சிகள் பல அளவுகளில். நாம கோவில் கட்டும்போது இங்கே வந்து வாங்கிக்கணும்.
இதுக்குமேல் வண்டி போக துளியும் வழி இல்லைன்னு ஆனதும் வலப்பக்கச்சந்தில் திரும்பினார். ' நிப்பாட்டுங்க. நாங்க இறங்கிப்போய் பார்க்கிறோம். நீங்க வண்டியை எங்கியாவது (?) பார்க் பண்ணிட்டு இருங்க'.
சந்துமுனையில் விசாரிச்சால் 'தோ'ன்னு கையை உசரத்தூக்கிக் காமிச்சார். அட! ஆமாம். கட்டிடங்களுக்கிடையில் எட்டிப்பார்க்கும் கோபுரம்.
அம்மம்மாவுக்கு வருசத்துக்கொரு தரம் இந்தப் பக்கம் ஒன்னு ரெண்டு விஸிட் இருக்கும். டவுனுக்குப் போகணுமுன்னு சொன்னதும் அது பெரிய ஊர்ப்பயணமா இருக்கும் எங்களுக்கெல்லாம். நாலு பேராப்போய் வரணும் என்பது ஒரு கணக்கு, மூணு ஆவாதுல்லே? நான் அம்மம்மா வீட்டில் இருந்தால் அந்த நாலில் ஒன்னு நான். மற்ற சித்திகள் மாமாக்கள் வீட்டுப் பிரதிநிதியாய் யாராவது ஒரு பொடியன். அதானே....ஆம்பளைத் துணை இல்லாம அம்மாந்தூரம் போறதா? அம்மம்மா கூடவே வசிக்கும் மூணாம் சித்தி ரெகுலர் துணை. நகைநட்டுன்னா மட்டும் ஓசைப்படாமக் காதும்காதும் வச்சதுமாதிரி அம்மம்மாவும் சித்தியும் கிளம்பிருவாங்க. சைனா பஜார்லே புது வீகம்ஸீஸ் கடை திறந்துருந்த சமயம். அங்கெ போய் சித்திக்கு ரவக் கம்மல் வாங்குன சரித்திர நிகழ்வு ரொம்ப நாள் கழிச்சுதான் எனக்குத் தெரிஞ்சதுன்னா பாருங்களேன்!
ரயில் வண்டி பிடிச்சு செண்ட்ரல் வந்து இறங்கி குதிரை வண்டி வச்சுக்குவோம். வீட்டுக்கு வேண்டிய இரும்பு வாணலிகள். சட்டுவம், தோசைக்கல்லு இப்படிப்பட்ட பர்ச்சேஸ்தான் முக்காலும். பெரிய குடும்பம் உள்ளூர்லேயே அங்கங்கே இருந்தாலும் எல்லாருக்கும் இரும்பு பர்ச்சேஸ் அம்மம்மாதான் செஞ்சு தருவாங்க. அப்போ இந்தப்பக்கம் வரும்போது கோவில் கோபுரம் பளிச்சுன்னு தனியாத் தெரியும். இவ்வளவு கூட்டமாக் கடைகளும் இல்லை. ஆனாலும் கோவிலுக்குள்ளே எல்லாம் கொண்டுபோக மாட்டாங்க. வந்த வேலையை முடிச்சுக்கிட்டு அதே குதிரைவண்டியில் நேரா அம்பீஸ் கஃபே. நெய் தோசை. பெரியங்களுக்கு காஃபி. சின்னதுகளுக்கு கூல்ட்ரிங். நான் எப்பவும் ரோஸ் மில்க்தான். இன்னொன்னு யாரா இருந்தாலும் எப்பவும் என்னைப் பார்த்தே காப்பி அடிக்கும். குதிரைவண்டி, திரும்பி செண்ட்ரல் கொணாந்து விட்டுறணும். அப்படித்தான் கூலி பேசிக்குவாங்க.
சின்னவளா இருந்தப்பப் பெருசாத் தெரிஞ்ச கோவில் இப்போ சட்னு மினியேச்சர் ஆனமாதிரி இருக்கு. ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் பக்கத்தில் மொய்ச்சுக்கிட்டு(!) இருக்கும் இரும்புக்கடைகளோடு இன்னொரு இரும்புக்கடை போல கம்பி அடைப்புகள்.
வழக்கம்போல் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. இருந்துட்டாலும்.......... அடைசலான இருட்டில் என்னத்தைன்னு எடுப்பதாம்:( கோவிலைச்சுத்தி நெருக்கமா உசரமா இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் சேர்ந்து கோவிலுக்குள் வெளிச்சம் வராமப் பண்ணி இருக்கு.
பூட்டிடப்போறாங்களேன்னு அவசர அவசரமா உள்ளே நுழைஞ்சேன். பிரகாரத்தில் வலப்பக்கம் போனதும் மண்டபத்துலே ஒரு பக்கம் ரெண்டு மாடுகளைக் கட்டி வச்சுருக்காங்க. தரையெல்லாம் நசநசன்னு கோமியம். எதிர்ப்பக்க மூலையில் நாகஸ்வரம் தவில்காரர்கள் பிராக்டீஸ் செய்யறாங்க போல.... ஒரே ப்பீப்பீஈஈஈ டும்டும். ட்யூனிங் நடக்குது. முத்துக்குமரன் தன் தேவியருடன் உற்சவரா நிற்கும் ஒரு சந்நிதி, பூக்களும் மாலைகளுமா அலங்காரம் பிரமாதம். குருக்கள் வாங்கன்னு கூப்பிட்டு தீபாரதனை காமிச்சார்.
வலத்தைத் தொடர்ந்ததில் மூலவர் நிற்கும் கருவறை மண்டபம். நிக்கறார். அதுவும் மேடையோ, பீடமோ ஒன்னுமில்லாமல் ச்சும்மா தரையில். நடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே என்னவோ தோணி அப்படியே நின்னுட்டாராம். அவருக்கு இரண்டு பக்கமும் தனித்தனிச் சந்நிதிகளில் தெய்வானையும் வள்ளியும். கிழக்குப் பார்த்த சந்நிதி. ஆனால் கோவிலுக்குள் நாம் நுழையும் வாசல் வடக்கு பார்த்திருக்கு
பிரகாரம் ஒன்னே ஒன்னுதானான்னு தெரியலை. குளத்துக்குப்போகும் வழியில் கட்டைகளைப்போட்டு என்னவோ மரவேலைகள் நடக்குது.
விசாரித்தவரை கோவிலின் வயசு யாருக்கும் சரியாத் தெரியலை. ஐநூறு, ஆயிரமுன்னு சொல்றாங்க. கோபுரம் பலமுறை புதுப்பிக்கப்பட்டு இருக்கணும். குமரகுருபரர், பாம்பன் ஸ்வாமிகள் எல்லாரும் வந்து தரிசனம் செஞ்சு பாடி வச்சுருக்காங்க.
சென்னைக்கு வயசு முன்னூத்துச்சொச்சம் என்ற கணக்கில் ஆயிரம் வருசக்கோவிலா இருந்தால் பெருசுபெருசா கூடுதலா ரெண்டு மூணு பிரகாரங்கள் இருந்துருக்காதோ? இடத்துக்கு என்ன தட்டுப்பாடு அந்தக் காலத்தில்? இல்லே........ நகரம் ஆனதும் கோவிலுக்கான இடத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுட்டாங்களா?
அங்கே இருந்து பேசிக்கிட்டு இருந்த பூஜாரிகள் (சிவாச்சாரியார்கள்?)கிட்டே காளிகாம்பாள் கோவில் எங்கே இருக்குன்னதும், நேராத் தம்புச்செட்டித் தெருவுக்குள்ளே போயிருங்கோ. கடைசியில் வந்துரும். இன்னும் கோவில் பூட்டி இருக்கமாட்டாங்க. சீக்கிரமாப் போனால் தரிசனம் கிடைச்சுரும். வண்டி இருக்கா'ன்னார். இருக்குன்னு வெளியில் ஓடி வந்தோம்.
நம்ம வண்டி எங்கே போய் நிக்குதோன்னு முழிச்சு நின்னு நாம் இறங்குன இடத்துக்குப்போய் தேடி, செல்லடிச்சா, பக்கத்துத் திருப்பத்துலே கார் பார்க்கு ஒன்னுலே இருந்து வண்டியை எடுக்கறார் ட்ரைவர். பெரிய அகலமான தெருவா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே அங்கே நின்ன ரெண்டு பேர்கிட்டே 'பாரீஸ் கார்னர் எந்தப் பக்கமு'ன்னு கேட்டேன். 'இதே ரோடுதான் நேராப் போங்க'ன்றார்.
கொஞ்ச தூரத்துலே பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் கண்ணில் பட்டது. அடராமா............ நாம் ராட்டன் பஸார் வழியாவா வந்துக்கிட்டு இருக்கோம்? வலப்பக்கம் திரும்பிப்போங்கன்னு ஹைகோர்ட் நோக்கிப் போறோம்.
இந்த சமயத்துலே நம்ம ட்ரைவருக்கு வேண்டாத ஒரு சந்தேகம் முளைச்சுருக்கு. போக்குவரத்து நெரிசலில் வண்டி நிக்கும்போது.... பக்கத்தில் மோட்டர்சைக்கிளில் இருந்தவங்ககிட்டே 'தம்புச்செட்டித் தெரு எங்கே'ன்னு கேட்க 'இன்னும் நாலு தெரு கடந்தா லெஃப்ட்லே வருமு' ன்னு பதில். ' இவன் சொல்லி நானென்ன கேக்கறது?'ன்னு தோணுச்சோ என்னமோ அடுத்த லெஃப்டுலே நுழைஞ்சுட்டார். அதுவும் சரியான கீக்கிடமா உள்ள தெருவில். அங்கே நின்னுக்கிட்டு இருந்த சின்னப்பையன்கள்கிட்டே தம்புச்செட்டியான்னு விசாரணை வேற! அந்தப் பொடியன்களும் பாதி சரின்றாப்பல தலையை ஆட்டுனாங்க. அந்த சரி...'செட்டி'க்கு! கடையில் இருந்த பெயர்பலகைகளில் கண்ணு நட்டுருந்த நான் இது கொண்டிச்செட்டின்னு அப்புறமாக் கண்டுபிடிச்சேன்.
மெயின் சாலையில் இருந்து பிரியும் எந்தத் தெருக்களுக்கும் பெயர்பலகைகளோ விவரங்களோ இல்லை. தப்பித்தவறி மாநரகாட்சி (எழுத்துப்பிழை இல்லை) வைக்கும் தெருப்பெயர் கல்லில், ஊருலே இருக்கும் எல்லா விளம்பர நோட்டீஸையும் ஒட்டி தெருப்பெயர்களை உள்ளே பத்திரமா ஒழிச்சு (எழுத்துப்பிழை இல்லை) வச்சுருக்காங்க.
கொஞ்சம் அடங்குன ரத்தக்கொதிப்பு திரும்ப ஏற ஆரம்பிச்சுருச்சு. கோவில் பூட்டிருவாங்களே...... இந்தத் தெருக்களில் எல்லாம் உள்ளே போயிட்டோமுன்னா அவ்ளோதான். திரும்பி வர நோ ச்சான்ஸ். போற போக்கில் போய் கிடைச்ச சந்தில் திரும்பி .......'இது மூக்கர் நல்லமுத்துத் தெரு............இன்னும் நாலு இடத்தில் நகரமுடியாமல் நின்னு இன்னும் நாலுபேரைக்கேட்டு தம்புச்செட்டித் தெருவில் புகுந்து கோவிலுக்கு முன்னால் வந்தோம். காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் என்ற பெயரோடு அழகா சின்னதா ஒரு அஞ்சுநிலைக் கோபுரம். வாசல் திறந்து இருக்கு. ஓடினால் சந்நிதி மூடி இருக்கு. திரை போட்டு வச்ச மூலவர், முன்மண்டபக் கம்பிக்கிராதி வழியா வலக்கையை மட்டும் காமிச்சார், .
பிரகாரம் இங்கே ஒன்னே ஒன்னுதான். சுத்திவந்தோம். ஒரு பிரகாரத்தில் குட்டிக்குட்டியா நிறைய சந்நிதிகள். பிள்ளையாருக்கும் முருகருக்கும் கொஞ்சம் பெருசா சந்நிதிகள். விஸ்வகர்மாவுக்கும் ஒரு சந்நிதி இருக்கு. இந்தக் கோவிலையே விஸ்வகர்மா இனத்தினர் சேர்ந்து கட்டுனதாகச் சொல்றாங்க. கோவிலுக்கு வயசு நானூத்திச் சொச்சமாம்.
விஸ்வகர்மாவுக்கு அன்னபட்சி வாகனம் அவர் காலருகில் நிக்குது.. இங்கே வட இந்தியாவில் அநேக கோவில்களில் விஸ்வகர்மாவுக்குத் தனிச்சந்நிதிகள் இருப்பதைக் கவனிச்சுருக்கேன். அதே அன்ன வாகனம்தான். முதலில் வெண்தாடிவச்ச வயசான பெரியவரின் சிற்பங்களையும் படங்களையும் பார்த்து பிரம்மாவாத்தான் இருக்கணும் என்று நினைச்சதுண்டு. ப்ரம்மான்னா கிள்ளுன தலையைக் கணக்கில் எடுக்கலைன்னாலும் பாக்கி மூணு இருக்கணுமே.........
இந்தக் காளிகாம்பாள் கோவில் கோபுரவாசலில் 'ஸ்ரீ மத் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ'னு இருக்கே............ அப்ப இந்த விஸ்வகர்மாதான் பிரம்மனோ? ரெண்டு பேருக்குமே படைக்கும் தொழில்தானே?
இன்னொரு மண்டபத்தில் காளியின் பெரிய சிலை ஒன்னு சுவரோரமா நிக்க, மக்கள் எண்ணெய் விளக்குகளைக் கொண்டுவந்து ஏத்தி வைக்கிறாங்க.
கோவிலுக்கு வந்து வழிபட்ட விவிஐபிக்கள் லிஸ்ட்டில் நம்ம ஆதி சங்கரர் வந்து அம்மனுக்கு முன்னால் அர்த்தமேருவை ஸ்தாபிச்சு ஸ்ரீ சக்கரப் பிரதிஷ்டை செஞ்சார்ன்னு குறிப்பு. மராட்டிய மன்னர் வீரசிவாஜி 1667 இல் இங்கே வந்து வழிபட்டுருக்கார். நம்ம முண்டாசு அடிக்கடி வந்து போன கோவில் இது. யாதுமாகி நின்றாய் காளின்னு பரவசத்தோடு பாடுனவைகள் எல்லாமே இந்தக் காளியைப்பற்றித்தானாம்.
நவராத்திரி விழா இங்கே ரொம்ப விசேஷம். கோவிலைப்பற்றி இன்னும் எதாவது விவரம் கிடைக்குமான்னு வலையில் தேடுனப்ப பொக்கிஷம் ஒன்னு கண்ணில் பட்டது. நம்ம கைலாஷி அருமையான படங்களுடன் காளிகாம்பாளைப் பற்றி அருமையா பக்திப்பரவசத்தோடு எழுதி இருக்கார். அவர் பதிவைப் படிச்சதும்தான் சரியா சுத்திப்பார்க்காம வந்துட்டோமோன்னு ...........
சரி(ய்)யா..........கோவிலைப்பூட்டும் நேரத்துக்குப்போனால் இப்படித்தான் ஆகும்:(
கோவில் கடைகளில் வழக்கம்போல் மூலவர் படங்களும் சாமி பாட்டு ஆடியோ வீடியோ சிடிக்களுமா ரொம்பி வழியுது. பெரிய படம் ஒன்னு ரொம்ப அழகா ப்ரேம் போட்டு விற்பனைக்கு இருக்கு. ரொம்பவே பெருசு....... ச்சீச்சீ....இந்தப் பழம் புளிக்குதே............
திரும்பி வரும் வழியில் ஒரு 'கோடி அர்ச்சனை' நடத்துனேன் நம்ம ட்ரைவருக்கு. ரிசர்வ் பேங்க், கோட்டை, புது சட்டசபை(பிரமாண்டமா இருக்கே தவிர பார்க்க அம்சமா இல்லை. தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கட்டிடக்கலை எங்கே போச்சு?) அண்ணாசாலை வழியா இருவதே நிமிசத்துலே திநகர் அறைக்குக் கொண்டு வந்து சேர்த்துட்டார். போகும்போதே இப்படிப் போயிருந்தா நின்னு நிதானமா சாமி தரிசனம் செஞ்சுருக்கலாம்.
ஆமாம்.... தெரியாமத்தான் கேக்குறேன்.... ஒரு விஷயம் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்றதுக்கு ஏன் தயக்கம்? எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரன்களா தங்களைக் காமிச்சுக்க வேண்டிய அவசியம் என்ன? சினிமா ஹீரோக்களா,. எல்லாக் கலைகளும் அத்துப்படியாய் இருக்க?
ட்ராவல்ஸ் வண்டிகளில் காரோட்டும் வேலைக்கு வர்றவங்களுக்கு ஸ்டியரிங் பிடிக்கவும், ப்ரேக் அழுத்தவும் தெரிஞ்சால் மட்டும் போதுமா? எந்த நகரத்தில் வண்டி ஓட்டறாங்களோ அதைபற்றிய பொது விவரங்கள் எதுவுமே தெரிய வேண்டாமா? (நம்ம அதிர்ஷ்டம் பாருங்க...வர்றவங்க எல்லாம் அன்னிக்குத்தான் வேலையில் சேர்ந்துருக்காங்க)
'வாயிலே இருக்கு வழி'ன்றதைச் சொல்லிக் கொடுத்தாலும், யாருக்கு வழி தெரியாதோ, அவுங்களைக் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சு அவுங்ககிட்டே மட்டும் வழியைக் கேக்கறாங்க இந்த ஏகாம்பரன்கள்.
குறைஞ்சபட்சம் ஒரு சிட்டி மேப், தெருக்கள் விவரம் அடங்கிய கைடு ட்ராவல்ஸ் வண்டியில் கட்டாயம் வச்சுருக்க வேணாமா? என்னவோ போங்க. இதையெல்லாம் விட்டுட்டு காலண்டர் அடிச்சு வச்சுக்கராங்க. நமக்கும் கொடுத்து அனுப்பி இருந்தார் ட்ராவல்ஸ் ஓனர்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அடுத்த அரைநாளைப் பார்க்கலாம்.
Wednesday, January 19, 2011
காளிகாம்பாளும் கந்தசாமியும்
Posted by துளசி கோபால் at 1/19/2011 07:55:00 PM
Labels: Kalikambal temple, Kanthaswamy Temple, அனுபவம், அனுபவம் Bharathi Memorial Chennai
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
நல்ல பகிர்வு. வண்டி ஓட்டுனர் நீங்க ஊர் ”சுற்றி”ப் பார்க்க வந்தததாக நினைச்சுட்டார் போல! எல்லா இடத்தையும் நன்று சுற்றிக் காட்டி இருக்காரே.
பகிர்வுக்கு நன்றி.
வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html
(நம்ம அடிர்ஷ்டம் பாருங்க...வர்றவங்க எல்லாம் அன்னிக்குத்தான் வேலையில் சேர்ந்துருக்காங்க)'வாயிலே இருக்கு வழி'ன்றதைச் சொல்லிக் கொடுத்தாலும், யாருக்கு வழி தெரியாதோ, அவுங்களைக் கரெக்ட்டாக் கண்டு பிடிச்சு அவுங்ககிட்டே மட்டும் வழியைக் கேக்கறாங்க இந்த ஏகாம்பரன்கள்.///
நீங்க ரெம்ப பாவம்.
ஓஹோ காலண்டர் கிடச்சுதா. பின்னால் கோவில்கள் பற்றிக் கொடுத்திருப்பாங்க்களே:)
நீங்க சொன்ன மாதிரியே ஒரு வண்டி ஓட்டியை எனக்குத் தெரியும். வாய் திறக்க மாட்டார். ஓட்டுவதில் அவ்வளவு ஆர்வம்:)தப்புத் தப்பா இடங்களில் நிறுத்தி வைப்பார்.முன்ன மாதிரி இல்லப்பா ட்ராவல்ஸ்:)
காளிகாம்பாள் ரொம்ப அழகா இருப்ப்பாங்க. மூன்று தேவிகளும் சேர்த்தே காட்சி கொடுப்பாங்க.
ஆஹா! எங்க ஏரியாவுக்கு வந்திருந்தீங்களா? என்னோட ஆபீஸ் கூட காளிகாம்பாள் கோவில் இருக்கிற அதே தம்புசெட்டித்தெருவுலேதான். :-)
ஆக நல்லா சுத்தி பாத்திட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க :))
காலண்டருக்கு பதில் மேப் போடச்சொல்லி ஐடியா குடுத்துட்டு வரலையா நீங்க..
நல்ல பகிர்வு. நல்லா சுத்தி பார்த்திருக்கீங்களே!!!!
நல்லா சுத்தி வந்தோம் நாங்களும் உங்களோட. "எழுத்துப்பிழை இல்லை" யை ரொம்பவே ரசிச்சேன் .
காளிகாம்பாள் கோவிலை பற்றி கேள்விபட்டிருக்கிறேன், அயனாவரத்தில் இருக்கும்போது,ஆனால் போக முடியவில்லை இப்போது பார்த்தாச்சு டீச்சர் இரண்டு கோவிலையும்.
காளிகாம்பாள் கோவிலுக்கு நான் போன வருஷம் போனேன். நான் போயிருந்த நேரம் பாலகுமாரன் வந்திருந்தார். பேசத் தயக்கம். மவுனமே காதலாக சிறுகதைத் தொகுப்பைப் பத்திக் கொஞ்சமாவது அவரோட பேசனும்னு ஆசை.
நீங்க எப்போ மதராஸ் வந்தீங்க?
காளிகாம்பாள் தயவுல நல்லா ஊர் சுத்தி பாத்திங்களா.:)
புதிதாக வருபவர்களுக்கு சிங்காரச் சென்னையில் ஏதாவது ஒரு இடம் கண்டுபிடிக்கனும் என்றால் ஓடியே போய்விடுவார்கள், சாலையில் பல இடங்களில் தகவலே இருக்காது.நீங்கள் பக்கத்தில் நிற்பவர்களிடம் கேட்பதற்குள் பல ஹாரன்கள் உங்களை எரிச்சல்படுத்தும் வேலையை தவறாமல் செய்யும் இதில் காரும் அடக்கம்.சிங்கை/துபாய் மாதிரி ஓட்டுனர் டெஸ்ட் வைத்தால் பல ஆண்டுபவர்கள் கூட பெயில் தான் இங்கு.
//ஆமாம்.... தெரியாமத்தான் கேக்குறேன்.... ஒரு விஷயம் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்றதுக்கு ஏன் தயக்கம்? எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரன்களா தங்களைக் காமிச்சுக்க வேண்டிய அவசியம் என்ன? சினிமா ஹீரோக்களா,. எல்லாக் கலைகளும் அத்துப்படியாய் இருக்க?//
அதெப்படிங்க, ஆட்டோ டிரைவரா இருந்துட்டு ஒரு எடம் தெரியலைன்னு சொன்னா எம்புட்டு கேவலம்? எப்படியோ உங்களுக்கு சென்னை பூராவும் சுத்திக்காட்டாம விட்டானே அதுக்கு காளிகாம்பாளுக்கும், எனக்கும் (கந்தசாமி) நன்றி சொல்லுங்க.
ரஜினிகாந்துக்கு இந்தக்கோயில்ன்னா ரொம்ப இஷ்டமாமே.. அதை சொல்லியிருந்தா கரெக்டா கூட்டிட்டு போயிருப்பாரோ :-)))
அருமையான் ரன்னிங் காமெண்ட்ரி. ரெளத்திரம் பழகுறதா, இல்ல ஆறுவது சினமான்னு மனசு டாஸ் போட்டுப் பாக்குது. இதான் நம்ம ஆளுங்ககிட்ட ... தெரியாத விஷயத்த தெரியாதுன்னு சொல்லத் தெரியாது (எழுத்துப்பிழை இல்லை)
வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மையைச்சொன்னா....நாம்தான் அவருக்கு வழி காட்டி இருக்கோம். அடுத்த பயணிகளையாவது ஒழுங்காக் கொண்டு போனால் சரி.
வாங்க தமிழ் உதயம்.
கொஞ்சநஞ்சம் சென்னைச் சமாச்சாரம் தெரிஞ்ச நமக்கே இப்படின்னா.... பட்டணம் பார்க்க வரும் புது ஆட்களுக்கு எப்படி இருக்கும்?
வாங்க வல்லி.
அதென்ன காலண்டர் கலாச்சாரமோ????
ஜி ஆர் டியில் ஒரு பத்து காலண்டரைக் கொத்தா எடுத்துப் பையில் வச்சுக் கொடுத்தாங்க. அப்புறம் துணிமணி வாங்கும் கடைகளிலும் அங்கங்கே கிடைச்சது. இது தெரியாம நம்ம வீட்டுக்கு ஒரு தினக் கேலண்டரை காசுக்கு வாங்கி வச்சுருந்தோம்.
இவ்வளவு கேலண்டரையும் என்ன செய்வதுன்னு யோசிச்சு, இங்கே சண்டிகர் முருகன் கோவிலில் கொண்டுகொடுத்தாச்சு. கோவிலுக்கு வரும் மக்கள் வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்களாம். சேவை செஞ்சாச்சு:-)))))
மூணு தேவிகளா??????
சந்நிதி மூடி இருந்தது கொஞ்சம் வருத்தம்தான் எனக்கு:(
வாங்க சேட்டைக்கரன்.
அடடா..... உங்க ஏரியாவா? சென்னையிலா இப்போ இருக்கீங்க? தெரிஞ்சுருந்தா 'வழி' கேட்டுருப்பேனே!!!!!!
வாங்க கயலு.
மேப்தான் கிடைக்குதேப்பா. வண்டிக்கு ஒன்னுன்னு வாங்கி வைக்கலாமுல்லே?
எங்க ஊரில் வாடகைக் கார்ன்னா கட்டாயம் தெருக்கள் மேப் வச்சுருப்பாங்க.
நாமே ஓட்டிப்போகும் காரை வாடகைக்கு எடுத்தா அதுலே நாட்டின் கம்ப்ளீட் கைடு புக் இருக்கும்ப்பா.
வாங்க கோவை2தில்லி.
ஆமாமாம். அவரைச்சுத்தவச்சுக் காட்டிட்டோமுல்லெ:-))))))
வாங்க சிவகுமாரன்.
எல்லாம் எரிச்சலில் நொந்துபோய் வந்தவைதான்:-))))
வாங்க சுமதி.
சான்ஸ் கிடைச்சா ஒருமுறை போய் பார்த்துட்டு வாங்க. விடுபட்டவை நிறைய இருக்கு.
வழிமட்டும் நினைவு வச்சுக்குங்க:-)
வாங்க கோபி ராமமூர்த்தி.
ஒரு முறை நம்ம வெங்கடநாராயணா சாலை வெங்கியைப் பார்க்க கோவிலுக்குப் போனப்ப பாலகுமாரன் வந்துருந்தார்.
சட்னு பார்க்கும்போது என்னன்னு போய்ப் பேசறது? வணக்கம் சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்தான்.
சும்மா ஒரு எட்டுநாள் இந்த கிறிஸ்மஸ் சமயம் வந்துருந்தோம்.
வாங்க லக்ஷ்மி.
காளிகாம்பாள் ஊரைக் காமிச்சுட்டுத் தன்னை மறைச்சுக்கிட்டாளேப்பா!!!!!
வாங்க குமார்.
அதே அதே. கொஞ்சம்கூட இன்னும் மாறலை:(
நேரத்தின் மதிப்பு கொஞ்சமும் உணராத நம் மக்கள்:(
வாங்க டாக்டர் கந்தசாமி.
நன்றி சொல்லிட்டேன்:-)
ஆட்டோக்காரர்கள் அடாஅவடி செஞ்சாலும் அங்கே இங்கே கேட்டு சந்து பொந்துலே நுழைஞ்சு கொண்டுபோய் விட்டுருவாங்க.
நான் சொல்வது இந்த ட்ராவல்ஸ் வண்டி ஓட்டும் வெள்ளைச்சட்டை ட்ரைவர்களை.
காருக்குள்ளே இருப்பதால் எதுவும் தெரியலைன்னாலும் கவலை இல்லை(யாம்)
வாங்க அமைதிச்சாரல்.
சரியாப்போச்சு. ரஜினிகாந்துன்னு சொல்லி இருந்தால் ஒருவேளை நம்மை இமயமலைக்குக் கொண்டு போயிருப்பாரோ என்னவோ:-))))
வாங்க குலோ.
தெரியாது என்ற உண்மையை இவர் ஒத்துக்குவாரோன்னு எனக்குத் தெரியலை.
அர்ச்சிக்க வேண்டியதாப் போச்சு. இந்த எட்டுநாள் பயணத்துலே நாலு நாள் வண்டி எடுத்தோம். மூணு ட்ரைவர்களுக்கு சென்னையே தெரியலை:(
நாலாவது ஆள் நம்மை ஏர்ப்போர்ட்லே கொண்டு விட வந்தார்:-))))
பக்தி கலந்த ஒரு காமெடி பதிவு, குறிப்பாக Flashback in Italic and "யக்கா இந்த கன்சாமி கொய்லு எங்கெருக்கு?" proper சென்னை slang :)
வாங்க லோகன்.
வேலைக்குப் புதுசுன்னாலும் வந்தவுடன் 'பேச'க் கத்துக்கறாங்க. சென்னைத்தமிழைச் சொல்றேன்:-)
காளிகாம்பாளை பார்க்கணுமுன்னா நல்லா சுத்திவந்துதான் வணங்கணும் :)
வாங்க மாதேவி.
ஊரைச் சுத்துனாலே கோவிலையும் சுத்தினதுக்கு சமம்:-))))
Post a Comment