Wednesday, January 26, 2011

பெருந்தலைவர் என்ற பெயருக்கு .............

அடுக்குமாடிக் குடி இருப்புகள் வராத காலக்கட்டத்தில் அநேகமா எல்லா வீடுகளும் இப்படித்தான் இருந்துருக்கும் இந்த ஏரியாவில் என்பதற்கு அத்தாட்சியா நிக்குது, திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் இந்த பங்களா.


புத்தகப்பைகளோடு காமராஜர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். காம்பவுண்டுக்குள்ளில் தெருவைப் பார்த்தபடி இடதுகையை இடுப்பில் வைத்தபடி நிற்கும் சிலை. காமராஜர் நினைவு இல்லம் காலை 9 முதல் மாலை ஆறுமணிவரை திறந்துருக்கு, தமிழக முதலமைச்சர் எம் ஜி. ராமச்சந்திரன் அவர்களால் 1978 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுருக்கு.
வீட்டு வாசலில் நின்னு, நம்மை அன்போடு வரவேற்று உள்ளே கூட்டிட்டுப் போனாங்க.

வாசலில் இருக்கும் போர்ட்டிகோவில் ஒரு மூலையில் மேசை நாற்காலி போட்டு அதுலே தமிழகக் காவல்துறைக் காவலர் சீருடையோடு ஒரு பெண் ட்யூட்டியில் இருந்தாங்க. ஒரு வயசான அம்மாள் வீட்டைச்சுத்தம் செஞ்சு வைச்சுக்கறாங்க. இந்தம்மாள் பத்து வயசா இருக்கும்போது ஐயா வீட்டுக்கு வேலைக்கு வந்தவங்களாம். (குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டம்)

சுருக்கமா ஐயாவைப் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலுமா வாசலுக்கு ரெண்டு பக்கமும் எழுதி வச்சுருக்காங்க.


வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் வலதும் இடதுமா ரெண்டு அறைகள். வலப்பக்கம் அறை நூலகம். இடப்பக்க அறை ஐயாவின் படுக்கைஅறை. காலம் உறைஞ்சு நிக்கறமாதிரி நாள்காட்டி அக்டோபர் ரெண்டுலேயே நிக்குது. ஐயாவின் இறுதி நாள்:(
அடுத்துள்ள சின்ன ஹாலின் நடுவில் ஒரு மேசை. ரொம்ப சாதாரணமா ஒரு ப்ளாஸ்டிக் மேசை விரிப்பு. டைனிங் டேபிள். அந்த ஹாலில் அலுமினியச் சட்டங்களோட ஏராளமான படங்கள். இளவயது தொடங்கி முதல் அமைச்சரா இருந்தவரை சந்தித்த முக்கியஸ்த்தர்களுடன். முந்தி காலத்துலே சினிமாலே நியூஸ் ரீலுன்னு ஒன்னு போடுவாங்களே அந்த நினைவு வந்துச்சு.
அம்மாவுக்குச் செல்ல 'காமாட்சி'யா இருந்தவரின் கல்வி ஆறாம் வகுப்பு வரை. 12 வயசாகும்போதே அரசியல் ஆர்வம். (இப்பவா இருந்தால் பிஞ்சுலே பழுத்ததுன்னு சொல்வோம் இல்லை?)

ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டம், சைமன் கமிஷன் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல்ன்னு பலதில் பங்கெடுத்து எட்டுவருசம் சிறை வாழ்க்கை.

33 வயசில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர். தொடர்ந்த அடுத்தவருசத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். இப்படிப் படிப்படியா உயர்ந்து நாட்டுக்கு சுதந்திரம் 1947 கிடைச்சப்ப அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

1954 முதல் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளா தமிழ்நாட்டு முதலமைச்சர். தன்நலமில்லாமல் நாட்டின் நலம் மட்டுமே நோக்கம் என்று கருதிய வாழ்க்கை.

இப்ப எல்லோரும் சொல்லிக்கிட்டுத் திரியறாங்களே 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்'ன்னு...இதுலே இருந்தே தெரியுதே அப்போதைய ஆட்சி உண்மையாவே நல்லா இருந்துருக்கணும் என்பது. இல்லையா?


ஹாலை ஒட்டிய மாடிப்படி. மேலே ஒரு ஹால். மேலே ஏறிப்போனால் வலப்பக்கம் ஒரு திறந்தவெளி( பின்பக்கம் மொட்டைமாடி) இடப்பக்கம் இன்னொரு ஹால். இங்கே ஐயாவின் மொத்த வார்ட்ரோபும் காட்சிக்கு இருக்கு., எண்ணி மூணு சட்டை, மூணு வேஷ்டி. நாலாவது ஒன்னு பிரிச்சுக் கண்ணாடிக் கதவுக்குப்பின் காட்சிக்கு வச்சுருக்கு. ஒரு பக்கம் இருக்கும் கப்போர்டில் அவர் சமையலுக்குப் பயன்படுத்திய அஞ்சாறு பாத்திரங்களும், ஒரு அலுமியக் குக்கரும்.
வெளிப்புறம் தெருவைப் பார்த்தமாதிரி இருக்கும் பால்கனியில் நாலு பிரம்பு நாற்காலிகளும் ஒரு டீபாயும். விருந்தினர்கள் வந்தால் அவுங்களோடு உக்கார்ந்து பேசறதுக்காம்.

அங்கங்கே பெரிய சைஸில் கண்ணாடிச்சட்டமிட்ட ஐயாவின் உருவப்படங்கள். "இதெல்லாம் எதுக்குத் தேவை இல்லாம? வேணாங்க்றேன்" ஐயா சொல்வது போல் மனசுக்குள் கேட்டது ஒரு குரல்.
இந்த வீட்டுக்கு சிவகாமி அம்மா வந்துருக்காங்களான்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க இங்கே இருந்த பணியாளரம்மா. வயசானதுலே ஒருவேளை மறந்து போயிருக்கலாம் அந்தம்மா. ஒரே ஒருமுறை வந்துருக்காங்கன்னு இவர் சொல்றார் பாருங்க.

எளிமையா இருக்கணும். அதுக்காக இவ்வளோ எளிமையா? மனசு கசிந்தது உண்மை. இந்த வீடும் அப்போ வாடகைக்கு எடுத்த வீடுதான். இதை அரசாங்கம் விலைக்கு வாங்கி, நினைவு இல்லமா ஆக்கி வச்சுருக்கு. வீட்டைச் சுற்றி மரங்கள் செடிகள் எல்லாம் நல்ல குளிர்ச்சியா நிக்குதுங்க.
மாடியிலும் நிறைய புகைப்படங்களைக் கண்ணாடி போட்டு வரிசையா வச்சுருக்காங்க. அதுலே இவரோட இறுதி யாத்திரை பார்த்ததும் என்னையறியாமல் கண்ணு தளும்பிருச்சு. ஐயா....நாட்டைக் கெடுத்துட்டாங்கையா..............மனசின் ஓலம்:( எப்பேர்ப்பட்ட மனிதர்..

இப்படிப்பட்டத் தலைவர்கள் கூட இருந்துருக்காங்களான்னு இப்போது இருக்கும் தலைமுறை வாயைப் பிளக்கத்தான் வேணும். எனக்கே இழப்பின் அருமை இப்போதான் தெரியுது .
வாசலில் ஒரு கல்வெட்டு போல ஒன்னு. பெருந்தலைவர் என்ற பெயருக்கு இவரை விட்டால் வேற யார் பொருத்தம்? ரெண்டு நிமிஷம் மௌனமா மனசில் அஞ்சலி செலுத்திட்டு அறைக்கு வந்தோம்.

PIN குறிப்பு: நடந்த நிகழ்வுகளை வரிசையா எழுதும்போது எப்படியோ குடியரசு தினத்தில் வெளியிடும்படியா அமைஞ்சுபோச்சு இந்தப் பதிவு. தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த மகான்களுக்கு 'மட்டும்' இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் 'குடி' அரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.



50 comments:

said...

அஞ்சாப்பு படிக்கும் போது (னு நியாபகம், தொடக்கப் பள்ளியில தான்), காமராஜர் கதையை நாடகம் எழுதிப் போட்டேன். அதுல நடிச்ச பயபுள்ளைங்க இதப் படிக்க மாட்டாங்கங்கிற தகிரியம் தான்;) எனக்கு ஊக்கமளித்த வரலாறு அவருடையது.

ஊர் ஊராப் பார்த்துச் சேர்கிற‌ புண்ணியத்துல, இப்படி எங்களோட பகிர்கிற புண்ணியமும் உங்களுக்கு! நன்றி! நடத்துங்கண்ணேன்.

said...

இதெல்லாம் பார்க்க நம்ம கண்ணு என்ன புண்ணியம் செஞ்சுருக்குமோ!!!!

நல்லாருக்குன்னேன்..

said...

பகிர்விற்கு நன்றி

said...

பெருந்தலைவர் காமராஜரை ஞாபகம் வைத்துள்ளதற்கு நன்றி.

said...

பகிர்விற்கு நன்றிகள்

said...

படங்களும் பதிவும் அரும! 87 லிலே திருமலைப் பிள்ளை ரோடில் எங்க ஆபீஸ் இருந்தது. வள்ளுவர் கோட்டத்துக்கு போகும்போது அந்த வீட்டப் பாத்ததும் அய்யா ஞாபகம் வரும். இப்படி எல்லாம் தலைவர்கள் இருந்தாங்களா?!!!

டீச்சர் அந்த கடைசி வரி பஞ்ச் நெத்தியடி! உ.பிக்கு அடுத்து நாமதான் 2வது எடத்துல இருக்கோமாம், வேதனயா இருக்கு!

said...

அவரை மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு அந்த அம்மா என்ன புண்ணியம் செய்தாரோ.அவர் இறந்த அன்று அவர் சட்டைப் பையில் இருந்த பணம் என்று ஒரு சிறிய எண்ணிக்கையும் சொல்வார்கள். குடியரசு தினத்தன்று முடிசூட்டிக்கொண்ட தலைவர்களின் படங்களைப் பார்க்கும் துரதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.

said...

1967-க்கு முன்னால் அவரை ‘குரங்குமூஞ்சி கருப்பன்’ என்று சொன்னவர்கள் தான் இன்று அவரை பெருந்தலைவர் என்றும் ‘காமராஜ் ஆட்சி’யை அமைப்போமென்றும் முழங்குகிறார்கள்!

1967-ல் நடந்த சட்டசபைத்தேர்தலில், திமுக மாணவர் தலைவர் சீனிவாசன் என்பவர் விருதுநகரில் காமராஜரைத் தோற்கடித்தார்.

எங்கள் நாகர்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு வந்தார். தில்லி வாழ் ‘நாகர்கோவிலர்கள்’ அவருக்கு விழாவெடுத்து வரவேற்றோம். அசோகா ரோட்டிலிருந்த அவர் வீட்டுக்கு போயிருக்கிறேன். அவரிடம் சமையல்காரராக வேலை பார்த்த ‘அம்பி’யிடம் வாயைப்பிடுங்கி, பல ரகசியங்கள் தெரிந்துகொள்வோம்.

கன்யாகுமாரி,செங்கோட்டைப்பகுதிகள்தமிழ்நாட்டுடன் இணைய நேசமணி போன்றவர்களோடு இவர் ஆற்றிய பணி மறக்கமுடியாதது!

துளசீம்மா! உங்கள் எழுத்தைப்படிக்கும்போது பொறாமையால் காதிலிருந்து புகை வருகிறது! வாழ்த்துகள்!

பாரதி மணி

said...

அவர் பெயரைச் சொல்லிப் பிழைக்கும் மற்றும் அடித்துக்கொள்ளும் கூட்டங்களை பார்க்கும்போது, நெஞ்சு பொருக்குதில்லையே.

said...

கெபி முந்திக்கிட்டார். உங்க தயவுல இதெல்லாம் எங்களுக்குக் கிடைக்குது. கற்பனையில கூட என்னால இந்த அளவுக்கு பரந்த பயண அனுபவங்களை என்னால் அடைய முடியாது. மிக மிக மிக (வெட்டு ஒட்டு வசதி :) நன்றி.

லிஸ்டில் சேத்துக்கிட்டேன்.

'காமராஜர் ஆட்சி' என்ற இன்றைய வழக்கெல்லாம் 'ஸ்டன்ட்' தானே? காமராஜரை இன்றைய 'ஓட்டு வங்கியில்' யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது. இது அரசியல் கேளிக்கை, அவ்வளவுதான். இன்னும் முப்பது வருடம் போனால் கலைஞரின் ஆட்சியைக் கொண்டு வருவோம்னு சொல்வாங்க. (இப்பவே பயமா இல்லே?)

said...

நாடகம் வேறே எழுதுவீங்களா கெபி.. வியக்க வைக்குது.

said...

நல்ல பகிர்வு. இந்த நல்ல தலைவரை இப்போது அவரது கட்சிக் காரர்களே மறந்து விட்டார்கள். நீங்கள் நினைவில் வைத்து இந்த இடுகையும் போட்டு இருக்கீங்க சகோ. நன்றி.

said...

இவரை போன்ற தலைவர்களை இனி இப்படித்தான் பார்க்கவேண்டும் போலிருக்கு டீச்சர்:((((

said...

பெரும் தலைவர் வாழ்ந்த இல்லம் பார்த்து மனம் நெகிழ்ந்தது.

said...

முதலில் எல்லாம் போகனும் என்று தோனும் இப்போதெல்லாம் வெந்த புண்ணில் ஏன் வேல் பாய்ச்சனும் என்று வெளியில் இருந்து பார்ப்பதோடு நிருத்திக்கொண்டேன். ஒரே ஒரு முறை நாகையில் இவரை நேரில் பார்த்திருக்கேன்.

said...

திருமங்கலம் பள்ளியில் அவர் கையால் திருக்குறள் பரிசு வாங்கி இருக்கிறேன்.
ஒவ்வொரு குழந்தையாக அவர் தட்டிக் கொடுக்கும் அழகே தனி.
'சாப்பிடு பாப்பா' எனக்குக் கிடைத்த அறிவுரை:) அவரைப் பார்த்த பிரமிப்பு நீங்க நிறைய நாட்கள் ஆச்சு.!!!

said...

பாரதி மணி சார், நேற்று உங்களை நிறைய நினைத்துக் கொண்டேன்.
ரிபப்ளிக் டே பரேட். அப்புறம் பாரதியார் பட்த்தில ஷிண்டேக்கு தமிழ் கற்றுக் கொடுத்த வைபவம்.
நன்றி சார். உங்கள் உதவியால் ஒரு அருமையான படம் , கண்ணில் நீருடன் பார்க்க முடிந்தது.

said...

//மாடியிலும் நிறைய புகைப்படங்களைக் கண்ணாடி போட்டு வரிசையா வச்சுருக்காங்க. அதுலே இவரோட இறுதி யாத்திரை பார்த்ததும் என்னையறியாமல் கண்ணு தளும்பிருச்சு. ஐயா....நாட்டைக் கெடுத்துட்டாங்கையா..............மனசின் ஓலம்:( எப்பேர்ப்பட்ட மனிதர்..//

உயர்ந்த மனிதருக்கு வணக்கங்கள்.

நல்ல பகிர்வுக்கு நன்றிகள்.

said...

ஒரு உன்னதத் தமிழனை இந்த நாளில் நியாபகப்படுத்திவிட்டீர்கள்.. நன்றி டீச்சர்..!

said...

I am very much touched to read the blog.
Two years back I have visited Kamarajar Illam in Virudhunagar.
Thanks for your fantastic blog.

said...

Very nice !

said...

பலமுறை பக்கத்தில்சென்றும் பார்க்கமுடியாத குறையைத் தீர்த்தது உங்க பதிவு.

பகிர்வுக்கு நன்றிகள் துளசிம்மா.

said...

எண்ணங்களில் உண்மை = அவர்பேசிய
வார்த்தைகளும் உண்மை .
செய்த செயல்களிலும்
உண்மை. தனக்கென வாழா பிறர்க்குரியாளர்
என்னும் முதுமொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்.

அவர் வாழ்ந்த நாட்களில் நாம் எல்லாம் இருந்தது,
நாம் பெற்ற பாக்கியம்.
அவர் வாழ்ந்து காட்டிய வழியில் செல்லாது இருப்பது
நமது துர்பாக்கியம்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

said...

வாங்க கெக்கே பிக்குணி.

நாடகமா!!!!!!!!!!! ஆஹா...........

நாடகம் நினைவில் இருந்தா பதிவு செய்யுங்க.

நீங்கெல்லாம் கூட வரும் தைரியம்தான் இப்படி ஊர் சுத்தச் சொல்லுது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

எல்லாம் கொடுப்பினைதான்னேன்!

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க தமிழ் உதயம்.

மறந்தால் பெரும் பாவம்.

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க குலோ.

ஏழைகளுக்கான அரசாமே!!!!! அப்படித்தான் இருக்கும்:(

said...

வாங்க வல்லி.

//குடியரசு தினத்தன்று முடிசூட்டிக்கொண்ட தலைவர்களின் படங்களைப் பார்க்கும் துரதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.//

அடேயப்பா!!!!!!!!!

வெகுவாக ரசித்தேன். முக்கியமா முடி சூடலை!

said...

வாங்க பாரதி மணி ஐயா.

பலதரப்பட்ட மக்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்த புண்ணியவான் நீங்கள்.

எல்லாம் உங்க ஆசீர்வாதம்.

அரசியல்வியாதிகள் பேசுனதை அன்றும் இன்றும் போட்டால்....... அப்படியே அள்ளிக்கிட்டுப்போகும் :(

said...

வாங்க பாலசுப்ரமணியம் ஐயா.

முதல் வருகைக்கு என் நன்றிகள்.

இப்படியெல்லாம் வருங்காலத்தில் ஆகும் என்ற தீர்க்க தரிசனம்தான் முண்டாசுக் கவிஞருக்கு............

'நெஞ்சு பொறுக்குதில்லையே' ன்னு பாடி வச்சுட்டுப்போயிருக்கார்!

said...

வாங்க அப்பாதுரை.

//கற்பனையில கூட என்னால இந்த அளவுக்கு பரந்த பயண அனுபவங்களை என்னால் அடைய முடியாது. ...//

நசிகேதன் 'போன இடத்தில்' நின்னு விளக்கம் சொல்லும் மனிதரின் பேச்சா இது:-)

பயமா? கடைசி வரி படிச்சுட்டு நடுநடுங்கிப்போயிட்டேன்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இவரைக் கருவேப்பிலை மாதிரிப் பயன்படுத்திக்கிட்ட கட்சி மேலிடத்தின் நடவடிக்கைகள் இப்போ நினைச்சாலும் வெறுக்கத்தக்கது.

கொளுகை எல்லாம் காத்தில் பறந்து போச்சு:(

said...

வாங்க சுமதி.

உண்மைதான். நாமும் பழம்பெருமை பேசும்போது இவரை நினைச்சுக்கலாம்.

said...

வாங்க மாதேவி.

அந்தத் துணிமணி அலமாரியும் பாத்திரபண்டம் அலமாரியும் பார்த்தப்ப எனக்கு ஐயோன்னு இருந்துச்சுப்பா.

said...

வாங்க குமார்.

எவ்வளவோ நாட்கள் நினைத்தும் இந்தப் பயணத்தில்தான் போய்ப்பார்க்க முடிஞ்சது.

said...

வல்லி,

அட! இப்படி குண்டைத்தூக்கிப் போடுறீங்க:-)))))

அந்தக் குறள் புத்தகம் பத்திரமா வச்சுருக்கீங்கதானே?

said...

வாங்க கோமதி அரசு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மேன்மக்கள் மேன்மக்களே.......!!!

said...

வாங்க உண்மைத்தமிழன்.

இந்த நாளுக்குன்னே அவரைப்பற்றிய பதிவு தானாவே அமைஞ்சு போச்சு!!!!

said...

வாங்க ரத்னவேல்.

விருதுநகர் வீடு இதைவிடவும் எளிமையாத்தான் இருந்துருக்கும்,இல்லையா?

said...

வாங்க கனாக்காதலன்.


முதல்வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுந்தரா.

வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீங்க.

அபூர்வப் படங்கள் அங்கே ஏராளம்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நீங்க சொன்னது அத்தனையும் சத்தியம்.

இப்போ அரசியல் ஒரு சாக்கடையால்லெ கிடக்கு:(

said...

மறைந்த நெல்லை ஜெபமணி ஒருமுறை தி.மு.கவினரின் மேடைப்பேச்சை கிண்டல் செய்து பேசினார்.

ஒரு பத்தடிப் பாலம் கட்டிடுவான், பகட்டா ஒரு மேடை போட்டு கூட்டம் கூட்டி “இந்தப் பாலம் இக்கரையையும் அக்கரையையும் இணைப்பதற்காக கட்டப்பட்டிருக்கிறது. (பின்னே துண்டிக்கவா பாலம் கட்டுவான்!) இதிலே ஆடுகள் செல்லலாம், மாடுகள் செல்லலாம், மனிதர்கள் செல்லலாம், வாகனங்கள் செல்லலாம். (இவங்கள்ளாம் போக வரத்தானேய்யா பாலம் கட்றே..) இதைக் கட்ட அயராது பாடுபட்ட MLA அவர்களுக்கும், அவர் கேட்டதும் அனுமதியை வழங்கிய அமைச்சர் பெருமகனாருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” (இது கடமை. இதச் செய்யத்தான் MLA, மந்திரி எல்லாம். பாராட்டு என்னத்துக்கு கொள்ளை போகுது.) அடைப்புக் குறிக்குள் தரப்பட்டிருப்பது ஜெபமணியாரின் கமெண்ட்.

ஆனால் காமராசர் வைகை அணையைத் திறந்து வைத்துப் பேசியது வெகுசில சொற்களே. “வெவசாயத்துக்கு வேணுங்கிறப்ப தண்ணி விட்ரதுக்கு தான் இந்த அணைக்கட்டு கட்டிருக்கோம். பாத்து அடிச்சுகிறாம வெவசாயம் பண்ணுங்கய்யா”. இவ்வளவு தான் பேசினார்.

இவர் ஏன் திமுகவிடம் தோற்றார்?
Business terminologyல் சொன்னால் He ignored changes in operating environment. Well, doesn’t matter in which order the nice guys finish. They are nice guys, period.

said...

இப்போது நான் படித்துக் கொண்டிருக்கும் நாடார் வரலாறு ஜெயபாண்டியன் என்பவர் எழுதியது. ஆராய்ச்சி கட்டுரை போல எழுதியுள்ளார். ஒரு இடத்தில் வரும் செய்தி.

வெளிநாட்டில் இருந்து 28 வயது ஒரு ஆராய்ச்சி மாணவன் இந்தநாடார்கள் பற்றி குறிப்பெடுக்க வந்து இந்த நூலாசிரியரை வந்து சிந்தித்து நாடார் சார்ந்த அடித்தட்டு மக்களை சந்தித்து இவர் மூலம் பேட்டி எடுக்கின்றார்.

நீங்கள் ஏன் நாடாராக இருந்து அறிஞர் அண்ணாவை ஆதரிக்கிறீங்க?

இது போன்ற பத்து கேள்விகளை எழுதி திமுக அபிமானிகளை பேட்டி எடுக்க அதில் ஒருவர் சொல்லும் பதில்.

எனக்கு அண்ணா என்றால் யார் என்றே தெரியாது. ஆனால் தினந்தந்தி படித்த என் நண்பர்கள் அணைவரும் அண்ணா நல்லவர் நல்ல திறமைசாலி. என்கிறார்.

மொத்தத்தில் அண்ணா தனது பேச்சாலே ஒரு இளைஞர் சமூகத்தையே திசை திருப்பி இருக்கிறார்.

இதேஅண்ணா தேர்தலில் வெற்றி பெற்றதும் சொன்ன வாசகம் இன்னும் ஆச்சரியமானதே.

மக்களை நர்ம் நம்பக்கூடாது. இத்தனை வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் மக்களை நிமிட நேரத்தில் தூக்கி எறிந்து விட்டார்களே. கவனமாக இருக்க வேண்டிய தருணம்இது என்றாராம்.

said...

வணக்கம். இந்தப் பதிவு எனக்கு பிடித்திருக்கிறது. இவர் வாழ்ந்து முடித்த காலத்திற்கு பின்னால் பிறந்திருந்தாலும், இவரைப்பற்றி பெரியவர்கள் சொல்லக் கேட்கும்போது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதை தவிர்க்க முடிந்ததில்லை. நன்றி.

said...

வாங்க அருண் அம்பி.

அதே வைகை அணை இப்போ கட்டி இருந்தால்....( முடியாது. தண்ணியே இல்லையே) அதுக்கு வேற பெயர் வந்துருக்குமுல்லே?

நல்லவர்களும் இருந்துருக்காங்கன்ற மன ஆறுதலைத்தவிர வேறு என்ன இருக்கு நமக்கு?

கடமையைச் செய்யவே லஞ்சம் கேக்கற நாடா ஆகி இருக்கே:(

முதல் வருகைக்கு நன்றிங்க.

said...

வாங்க ஜோதிஜி.

உங்க ஆராய்ச்சி சுவையா இருக்கப்போகுது மனசு சொல்லுது. காத்துருக்கோம்.

அடுக்கு மொழி பேசி.......... பேசிப்பேசி....பேசிப்பேசியே ஆட்சியைப் பிடிச்சுட்டாங்க.

இப்பவும் பேச்சை விடலை பாருங்க!!!

said...

வாங்க ரெக்ஸ்.

அபூர்வமா பிறக்கும் உன்னத மனிதர்களில் இவரும் ஒருவர்.

அவரைப்போல நல்ல எண்ணம் உடையவர்கள் இன்னும் பிறக்கலை என்பதுதான் நாட்டைப் பற்றி யோசிக்கும்போது வரும் கவலை:(


முதல் வருகைக்கு நன்றி.