Thursday, April 22, 2010

கனவு பலித்ததம்மா......

கடந்து போன ஜென்மாவில் கோபால் என்னவா இருந்துருப்பார்? வேறென்ன. பருந்துதான். சந்தேகமே இல்லை எனக்கு. ' பருந்துப் பார்வை'ன்னா மனுசனுக்கு அப்படி ஒரு ஆசை. எந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கும் டவர் ஏறிப் பார்த்தே ஆகணும். இங்கேயும் கிடைக்கும் சான்ஸை விடுவாரா?
"எத்தனை மாடி வரை போகலாம்".

"18"

"மொத்தம் எத்தனை மாடி இருக்கு.?"

"18."

"லிஃப்ட் எத்தனாவது மாடி வரை போகும்?"

"18."

"டிக்கெட் எவ்வளவு? பதினெட்டா?"
இல்லையாம் . தலைக்கு 20. எங்களைக் கூட்டிக்கிட்டுப் போன இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தேன். குடும்பத்தில் பத்து பேராம். யாருக்குமே பேச முடியாதாம். காதும் கேக்காதாம்:( 'உலகமே இரைச்சலாக் கிடக்கு. கவலைப்படாதே'ன்னு சொன்னேன். மேலே போனவுடன் மனசில் குடைஞ்சுக்கிட்டு இருந்த இன்னொரு கவலை தீர்ந்தது. மொட்டைமாடிக்குப் போகும் படிக்கட்டின் முடிவில் பூட்டுப் போடப்பட்டக் கதவு. இங்கே இந்த தளம் மிகவும் விஸ்தாரமாக இருக்கு. நாலு புறமும் சின்னதா கம்பித் தடுப்புகளோடு நாலு ஜன்னல்கள்.
'இந்தப் பக்கம் பார், அந்தப் பக்கம் பார்'ன்னு ஓடி ஓடிக் காமிச்சுக்கிட்டு இருந்தார் அந்த இளைஞர் அன்னப்பா. (கீழே வந்ததும் டிக்கெட் கவுண்டரில் அவர் பெயரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். உடல் குறைபாடுள்ள பலர் இங்கே வேலை செய்யறாங்களாம். நல்ல எடுத்துக்காட்டுன்னு நினைச்சுப் பாராட்டினோம்) மேற்கில் கடலை ஒட்டி இருக்கும் ஒரு குன்றின்மேல் ஒரு கட்டடம். அதன் கூரையில் புலித்தோலில் இருந்து தியானம் செய்யும் சிவன். கழுத்திலும் கைகளிலும் நெளியும் தங்கப் பாம்புகள். எதிரே ஒரு நந்தி. நந்திக்குக் கீழே சரிவில் இலங்கை அரசனும் ஒரு சிறுவனும்.
இந்த சிவன் சிலையின் உயரம் 123 அடிகளாம். உலகிலேயே பெரிய சிலைன்னு சொல்றாங்க. செஞ்சு முடிக்க ரெண்டு வருசமும் அஞ்சு கோடி ரூபாய் செலவும் ஆச்சாம்.
இந்தப் பக்கம் கீதை உபதேசம். கொஞ்சம் பின்னால் அடுத்த பகுதியில் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் சூரியன். இன்னொரு பக்கத்தில் நிற்கும் சிவனும் அவன் தலைமேல் ஏறி ஒரு பெண்ணும் (கங்கையோ?) இன்னொரு சரிவில் தவம் செய்யும் முனிவர்கள், செடிகொடிகள் பூக்கள் இப்படித் தீம் பார்க் போல இருக்கு! அங்கே வச்சுருந்த 'ஸின்டெக்ஸ் டேங்க்' கூட சிவலிங்கமோன்னு முதலில் தப்பா நினைச்சுக்கிட்டேன்:-)
இன்னொரு பக்கம் அப்போதான் கரைக்கு வந்திருந்த மீன்பிடிப் படகில் உள்ளதை வாங்கக் குவிஞ்சுருக்கும் மக்கள். அடுத்த பக்கத்தில் பீச், கட்டிடங்கள், கடலில் தூரத்தே தெரியும் சின்னக் குன்றுகள், தண்ணீர் விளையாட்டுக்குன்னு நீச்சல்குளங்கள்( ஹொட்டேலைச் சேர்ந்தது) இப்படிச் சுத்திச்சுத்திப் பார்த்தாச்சு.

கீழே இறங்கி கோபுரவாசலைத் தாண்டி உள்ளே ப்ரகாரங்களுக்குப் படி ஏறும் இடத்தில் இன்னும் ரெண்டு யானைகள். படியேறினதும் நேரெதிரா 'பகில ஜதிகேஸ்வரர் 'சந்நிதி. என்ன சாமின்னு புரியலை. குதிரை மேல் உக்கார்ந்துருக்கார். இடது பக்கம் போனால் தலவிருட்சம். அதைக் கடந்து படிகள் ஏறிப்போகணும் கோவில் விமானங்கள் எல்லாம் தங்கமா மின்னுது. இந்தமாதிரி தங்கக் கலர் பெயிண்ட் அடிச்சுட்டால் வேலை முடிஞ்சது. தங்கம் விற்கும் விலையில் தங்கத்தகடு எல்லாம் வேணுமான்னு கோபால் சொல்ல நானும் ஆமோதிச்சேன். போகட்டும் நீங்க சொல்றது ரொம்பச்சரின்னு அப்பப்ப அனுசரிச்சுப் போகணுமா இல்லையா?
விமானங்கள் ஸ்டைலும் அதிலுள்ள சிற்பங்களும் நம்ம பக்கங்களில் உள்ளதைப் போலவே இருக்கேன்னு பார்த்தால்.....தலப்புராணம் (?) விளக்கம் சொல்லிருச்சு.

ஆர். என். ஷெட்டி (ராம நாகப்பா ஷெட்டி) என்றவரின் முழு முயற்சியால்தான் இப்போ இந்தக் கோவில் உருவாகி இருக்கு. இவர் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர். முருதேஷ்வரர் மேல் அடங்காத பக்தி கொண்டவர். கோயில் என்னவோ ரொம்பப் பழமை வாய்ஞ்சதுன்னாலும் சரியான கவனிப்பில்லாமல் சிதிலமாகிக்கிட்டே இருந்துருக்கு. இவருடைய அப்பாதான் அப்போ கோவிலை நடத்திக்கிட்டு இருந்தார். 1935 வது வருசம் ஒரு முறை இடிஞ்சு விழப்போகும் நிலையில் இருந்த கோவிலை, பொதுமக்களிடம் இருந்து நிதிவசூல் செஞ்சு சுமாராப் பழுதுபார்த்துருக்காங்க. அப்போ ராமநாகப்பாவுக்கு வயசு ஏழு. அப்பவே இந்தக் கோவிலை இன்னும் நல்லாக் கட்டணுமுன்னு ஒரு கனவு இவர் மனசுலே வளர ஆரம்பிச்சது.

பள்ளிப்படிப்பு முடிஞ்சு சிவில் வேலைகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்து நடத்த ஆரம்பிச்சு அதுலே இருந்து வாழ்க்கை நல்ல முன்னேற்றம் அடைய ஆரம்பிச்சது. குடும்பத்தோடு தலயாத்திரைன்னு தமிழ்நாட்டுப்பக்கம் வந்துருக்கார். கன்யாகுமரியில் அப்போ புதுசாக் கட்டி இருந்த விவேகானந்தர் நினைவகம் பார்த்ததும் கனவு தீவிரம் அடைஞ்சுருக்கு. தமிழ்நாட்டுக் கோவில்களின் கோபுரங்களின் அழகும், கருவறை விமானங்களின் அற்புதமும் மனசுலே பச்சக்ன்னு ஒட்டிக்கிச்சு. இப்படி அழகா அம்சமா நம்மூர்லே கோவில் கட்டியே ஆகணுமுன்னு தீவிரமா யோசனை செஞ்சுருக்கார். இவருடைய ஒரு நண்பர் மூலமா ஹல்திபூர் வைஷ்ய சமாஜ் கோவிலைக் கட்டுன திரு. எஸ் கே, ஆசாரி அவர்களின் அறிமுகம் கிடைச்சது. அவரோடு கலந்து பேசி அவரையே இங்கே கோவில் நிர்மாணிக்கணுமுன்னு கேட்டுக்கிட்டார். குடும்பமும், நண்பர்களும், பொது மக்களும் தாராளமா நிதி உதவி செஞ்சாங்க.
1977 இல் கோவில் வேலை ஆரம்பிச்சது. முதலில் புள்ளையாருக்கு ஒரு சந்நிதி கட்டுனாங்க. தமிழ்நாட்டிலே இருந்து இருநூறு முன்னூறு சிற்பிகள் வந்துருக்காங்க. எண்ணி ஒன்பதே வருசத்துலே (வருசம் 1986 இல்) முழுக்கோவிலும் கட்டி முடிச்சுட்டாங்க. கோவிலுக்குப் பின்னால் இருந்த இடத்துலே அழகான சிலைகள், தோட்டங்கள்னு சிறுகச்சிறுக வேலை நடந்து இப்ப அட்டகாசமா இருக்கு.

இப்ப அவருக்கு 82 வயசாகுது. ஆர். என். ஷெட்டி குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மேன். இவுங்க குடும்பமே கடின உழைப்புக்குப் பெயர் போனதாம். எந்த தொழிலில் நுழைஞ்சாலும் . (construction, manufacturing, hotel, automobile, power & IT services and education. ) அதை வெற்றிகரமா நடத்தறாங்க. நாம் தங்கி இருந்த ஹொட்டேலும் இவுங்களுடையதுதான். தேசிய நெடுஞ்சாலை 17 இல் வருது முருதேஷ்வரா என்ற ஊர். இங்கே சாலையை ஒட்டியே ஒரு ரெண்டு கிலோமீட்டருக்கு இவுங்க ராஜ்ஜியம்தான். இதுலே ஹைவே ஹொட்டேல்னு கூட ஒன்னு இருக்கு.
சாமியைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு ஆசாமி கதைக்குப் போயிட்டேன் பாருங்க. என்ன செய்யறது? சாமியைக் கொண்டாடணுமுன்னா ஆசாமிகளும் தேவைதானே? எப்படியோ ஷெட்டி கண்ட கனவு பலித்தது. ( சாமி விவரம் அடுத்த பகுதியில் வரும்) கோவிலுக்குள்ளே போய் மீசை வச்ச முருதேஷ்வரைக் கும்பிட்டுக்கிட்டு உள்பிரகாரமெல்லாம் சுத்தி வந்தோம். பார்வதி, சுப்ரமண்யர், ஆஞ்சநேயர், தத்தாத்ரி,, நவக்ரஹங்கள் இப்படித் தனித்தனிச்சந்நிதிகள் இருக்கு.
ரங்கமண்டபம், சேவை மண்டபம், நந்தி மண்டபம், யாகசாலை, யாத்ரீகர்களுக்கு உணவளிக்க போஜனசாலை ன்னு விஸ்தாரமாக் கட்டி வச்சுருக்காங்க. எல்லாமே ரொம்ப நல்லாப் பராமரிக்கப்பட்டுப் பளிச் ன்னு இருக்கு. அங்கங்கே குப்பைக்கூடையை ஏந்திக் குரங்கார் நிற்கிறார். (கங்காருவைப் பார்த்துப் பார்த்து போரடிச்சுக்கிடந்தேன்) சின்னதா அழகா ஒரு தங்கத்தேர் இருக்கு. நல்ல நேரம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு. கோவில் ப்ரஸாதமா லட்டு விக்கறாங்க.
வெளியே வந்து கோவிலுக்கு முன்னால் இருக்கும் கடைவீதியில் கோபாலின் கெமெராவுக்காவது பேட்டரிஸ் வாங்கிக்கலாமுன்னா கிடைக்கவே இல்லை:( இவ்வளவு டூரிஸ்ட்கள் வரும் இடத்தில் கிடைக்கலை என்றதுதான்......... ஒருவேளை நாம்தான் சரியாத் தேடிப் பார்க்கலையோ என்னவோ! கடைவீதி முழுக்கத் தெருவோரம் மீன் வித்துக்கிட்டு இருக்காங்க.

இருட்டுலே பொடிநடையா ஹொட்டேலுக்குத் திரும்பிவந்தோம். கொஞ்ச நேரம் பீச்சுக்குப் போகலாமுன்னா, இங்கே இருட்ட ஆரம்பிச்சதும் கடற்கரையில் இருந்து மக்களை வெளியேத்திடறாங்களாம். ரூம் சர்வீஸ்லே சாப்பாடு வரவழைச்சாச்சு. இன்னிக்கு நடந்த நடையிலே கெஞ்சும் கால்களுக்கு ஓய்வு கொடுக்கணுமே.
முருதேஷ்வர் பயணப் படங்கள் முழுசும் இங்கே ஆல்பத்தில் இருக்கு. எடிட் செய்ய நேரம் இல்லை. பலது ரொம்பச் சின்னச்சின்ன வித்தியாசங்களோடு ரிபீட்டடாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது சரி பண்ணலாம். ஓக்கே.

37 comments:

said...

மிக அருமையான பகிர்வு.

ஆல்பத்தையும் பார்த்தேன். படங்களெல்லாம் அருமை.

முழுக் கோபுரத் தோற்றத்தின் படம் ஒன்றையும் பதிவில் சேர்த்திருக்கலாம்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா காணோமே இந்தப் பக்கம்?

கோபுரத்தின் முழுத்தோற்றம் இதுக்கு முந்தின இடுகையில் போட்டுருந்தேன்.

அதான் இதுலே சேர்க்கலை.

said...

ஆப்செண்ட் ஆயிட்டு கேட்கிற கேள்வியப் பாருங்களேன்:))!! நானே பெஞ்சு மேலே ஏறிக்கிட்டேன்:)!

said...

அங்கே வச்சுருந்த 'ஸின்டெக்ஸ் டேங்க்' கூட சிவலிங்கமோன்னு முதலில் தப்பா நினைச்சுக்கிட்டேன்:-)//

:)) எங்கும் கடவுளைக் காணும்பக்குவம் வந்துடுச்சு இல்லையா ..அதான்..

said...

பெரிய சிவன் மற்றும் அனைத்து

படங்களும் ஒன்று விடாமல்
எடுத்துள்ளது. அனைத்தும் நேரில் தரிசித்தது போல் உள்ளது அருமை.

said...

டீச்சர் மொத்தம் நாலு குதிரை தான் இருக்கு. ஏழுன்னு சொல்லியிருக்கீங்க?

வாட்டர் டேங்க்-சிவலிங்கம் :))))))))

said...

அங்கே வச்சுருந்த 'ஸின்டெக்ஸ் டேங்க்' கூட சிவலிங்கமோன்னு முதலில் தப்பா நினைச்சுக்கிட்டேன்:-) //
இதல்லவோ துளசி ட்ரேட் மார்க்!!!!!!!!
பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை'' அப்டீன்னு பாட இருந்தேன்.
18 மாடியைப் பார்த்ததும் உங்களுக்கு யாராவது அங்க போய் சூசைட் செய்துக்கப் போங்களோன்னு பயம் வந்துட்டது. அதான் பூட்டெல்லாம் போட்டு இருக்கான்னு செக் பண்ணீங்க இல்லையா:)
படங்கள் அனைத்தும் சூப்பர். ஒரு செட் குடும்பம் இங்க இருக்கு. இன்னோரு செட் எங்கேன்னு தேடினேன் கிடைச்சது.!! தான்க்ஸ் பா.
வயசான ஷெட்டி சாருக்கு வாழ்த்துகள். முனைப்போட செய்திருக்காரே. மிகவும் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

said...

வாங்க கயலு..

பாரதிக்கு எங்கெங்கும் காணினும் சக்தி.

துளசிக்கு அதுக்கு நேர் எதிர்மறை:-)))))

said...

வாங்க சுமதி.

என் கண்வழியே நீங்கள் பார்ப்பது மகிழ்ச்சி. ஆனா அங்கே போக சான்ஸ் கிடைச்சால் (எழுதுனது சரியான்னு தெரிஞ்சுக்கவாவது) போய்வாங்க.

said...

வாங்க நான் ஆதவன்.

நாலு ..... ஏழு....
என்ன குழப்பம்?

ஆதவனிடம் இருந்து நாலு எடுத்து அர்ச்சுனன் தேரில் பூட்டிக்கிட்டானா!!!!!

said...

வாங்க வல்லி.

பரம்பொருள் உலகெங்கும் நிறைஞ்சு கிடக்கு!!!!! அதான்........

மொட்டைமாடி பூட்டு கவனிச்சதுக்கு தேங்க்ஸ்ப்பா.

அவசரமுடிவுக்கு சிலர் இப்படிப் பட்ட இடங்களைத் தெரிவு செஞ்சுக்கிட்டு, அழகான காட்சிகளை ரசிக்க ஆக்ஸெஸ் இல்லாமப் பண்ணிடறாங்கப்பா:(

said...

ஆர். என். ஷெட்டிக்கு ஒரு வாழ்த்து ;)

மனுஷன் ரசிகன் போல..பின்னியிருக்காரு ;)

படங்களில் கொஞ்சம் சுட்டுட்டேன் ;)

said...

வாங்க கோபி.

ஒரு படத்துலே நான் 'ஒல்லியா' இருக்கேனாம். வல்லியம்மா சொன்னாங்க. அதை தாராளமாச் சுட்டுக்குங்க:-))))))


தமிழர் கட்டடக் கலைக்கு மதிப்பளிச்சு அதை ஆர்வமா தன்னுடைய ஊர்வரை கொண்டு போனதுக்கும் ஷெட்டி ஐயாவுக்கு பாராட்டுகளைச் சொல்லணும்,இல்லையா?

said...

\\☀நான் ஆதவன்☀ said...
டீச்சர் மொத்தம் நாலு குதிரை தான் இருக்கு. ஏழுன்னு சொல்லியிருக்கீங்க?
\\

டேய் ஆல்பத்தில் பாரு அதுல சூரியன் இருப்பார் ;;))

said...

படங்களும் விவரங்களும் சூப்பர்.

said...

present teacher

said...

நானும்பயணத்தில் கூட வந்துகிட்டு இருக்கேன். குதிரை தின்ன கடலை - இதிலேருந்து கீதா மேடம் பதிவுக்கு போய் அந்த கதையும் படிச்சுட்டு வந்தேன். இந்த வேதங்கள் அரக்கர்களால் கைக்கொள்ளப் படுவதும் நம்ம கோபாலசாமி அதை மீட்டு வந்து கொடுப்பதும் வேறு ஒரு அவதரதிலேயும் வருமே நு ஒரு குழப்பம். அப்புறம் இங்கே வேளச்சேரி யில் வேதங்கள் அரக்கர்களால் தீண்டப் பட்ட பாவம் தீர்க்க மனித உருவில் சிவனை வழிபட்ட ஸ்தலமா வேதசீரணியை பற்றி ஒரு கேள்வி. இதெல்லாம் சேர்ந்து ஒன்றுக்கொன்று என்ன தொடர்புன்னு நீங்களோ கீதா மேடமோ சொன்னா நல்லா இருக்கும்.
--
தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்களை மிஞ்ச வேண்டும்னு சும்மா நெடு நெடுன்னு கட்டிட்டாரு போலிருக்கு

http://www.virutcham.com

said...

// அதன் கூரையில் புலித்தோலில் இருந்து தியானம் செய்யும் சிவன். கழுத்திலும் கைகளிலும் நெளியும் தங்கப் பாம்புகள். //
உட்கார்ந்து இருக்கறது புலித்தோல்..போட்டுகிட்டு இருக்கறதோ தங்க செயின் தாம்பு கயிரு மாதிரி.
தங்கம் இன்னிக்கு தேதிலே விக்கிற விலைலே பாம்பு மாதிரி செயின் பண்ணி போட்டு இருக்காரே...
எங்கே வாங்கினாராம் ? ரெடி மேடா வாங்கினாரா இல்லை, ஆர்டர் கொடுத்து பண்ணினாரா ?
எல்.கே. எஸ்ஸிலா, தங்க மாளிகை யிலா ? அதே மாதிரி இந்தக்கிழவிக்கு ஒண்ணு ரண்டு வேணுமாம்,

சுப்பு தாத்தா.

said...

கண்டிப்பாக அடுத்த முறை ஊருக்கு
செல்லும்பொலுது பார்க்கும் இடங்களில் இதனையும் சேர்த்து விடுகின்றோம்.செல்லும் வழித்தடங்கள்
தெரியப்படுத்தவும்.

said...

thnaks for sharing

seen this in Podigai TV, abirami mahal sutrula

said...

சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக
பார்க்க வேண்டிய இடம்தான் டீச்சர்:))))))

said...

வாங்க நானானி.

வருகைக்கும் 'கருத்துக்கும்' நன்றிப்பா.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆஜர் பட்டியலில் பதிஞ்சாச்சு:-)


சாரிப்பா.... பொதிகை நினைவில் உங்களைப் புதிகை ஆக்கிட்டேன்.

said...

வாங்க விருட்சம்.

உங்களுக்கான பதிலை கீதா மேடம்தான் சொல்லணும். அவுங்கதான் கோவில் கதைகளைக் கரைச்சுக் குடிச்சவுங்க.

நெடுநெடுன்னு இருக்கே தவிர ரொம்ப அழகா இல்லை என்பதுதான் என் 'சொந்தக் கருத்து'

said...

வாங்க சுப்பு ஐயா.

அச்சச்சோ..... தாம்புக்கயிறு சங்கிலியா ? நெசமான பாம்புக்கயிறு சங்கிலியாச்சே!
இதையா மீனாட்சி அக்கா கேட்டாங்க?????

தோஹாவில் இதே மாடல் சங்கிலி கிடைப்பதாகக் கேள்விப்பட்டேன்.

அக்காவுக்கு வாங்கும்போது, தங்கைக்கும் ஒன்னு வாங்குவீங்க என்ற அதீத நம்பிக்கையுடன் இருக்கேன்:-))))

said...

வாங்க காஞ்சு சுரேஷ்.

வணக்கம்.

முதல் வருகை போல? நலமா?

திடீராக் கிளம்புன இந்தப் பயணத்துக்கு ப்ளான் ஒன்னும் மெனெக்கெட்டுப் போட்டுக்கலை.

மங்களூரில் இருந்து ஒரு ட்ராவல்ஸ் லே வண்டி எடுத்துக்கிட்டு அப்படியே தேசிய நெடுஞ்சாலை 17 இல் போய் வந்ததுதான்.

பொதுவா பஸ்லே போகாமல், தனி வண்டியாப் பேசி எடுத்தால், போகும் வழியிலே நம் விருப்பப்படி அங்கங்கே நிறுத்தி இடங்கள் பார்த்துக்கிட்டே போகலாம்.

என்ன ஒரு சிரமம் என்றால் எங்கே தங்கப்போறோமுன்னு தெரியாது. அன்னன்னிக்கு முடிவு செஞ்சு அடுத்துவரும் பெரிய நகரங்களிலே தங்கலாம்.

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

அட! பொதிகையில் வந்துச்சா? தெரியாமப் போயிருச்சே!

(நான் பொதுவா டிவி பார்ப்பதில்லை)

said...

ஆமாம் சுமதி.
விட்டுறாதீங்க:-)

said...

இது தான் எனது முதல் வருகை ஆனால் எனது தங்கமனி(சுமதி) நிதமும் படித்துவிட்டு பின்னூட்டம் போடுவார்.

said...

ரசித்து ரசித்து பிடிச்சுருக்கீங்க படங்களை - நாங்கள் இன்னுமொரு முறை போகனும்...

said...

ஆஹா.... சுமதியின் ரங்க்ஸா நீங்க!!!

பேஷ் பேஷ்.

நல்வரவு சுரேஷ்.

said...

வாங்க சுகுமார்.

நாங்களும் இன்னொருமுறை போக நினைச்சுருக்கோம்.

அக்கடான்னு..... ஹாயா.......
ஒரு வாரம்.

நம்ம கனவு எப்போ பலிக்கப்போகுதோ??

said...

பெரியசிவன் சிலை,கீதாஉபதேசம், படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி.

பெரிய சிவன் முகம் நல்ல லக்ஷணம் உள்ளது. சாந்தமான முகம்.

said...

ஏன் இருட்டின அப்பறம் பீச்ல விடறதில்ல? Security?

Ram

said...

வாங்க ராம்.

ஒருவேளை இதுவும் நல்லதுதான். டூரிஸ்ட் கூட்டம் கூடும் இடத்தில் 'எதுவும் நடக்க' இருட்டு துணை போகுமே:(

said...

படங்கள் நீங்கள் சொல்வது போல் ஆல்பத்தில் தான் போட வேண்டும். படங்கள் எடுக்க எடுக்க திகட்டா அனுபவம் தான்.

அருமையான இடம்.