Wednesday, April 07, 2010

குந்தவர்மாவின் கொசுவத்தி

அரசர், இளவரசரா இருந்த காலத்துலே அவர் பாட்டி, தாத்தா, அம்மா எல்லோரும் 'விஹாஸினி, அந்தாசுரன், பரசுராமர்' பற்றிச் சொன்ன கதைகள் எல்லாம் நினைவுக்கு வருது.. ஷோனிதபுரம் நாட்டை ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் ஆண்டுவந்தான். அவனும் நம்ம ஹிரண்யகசிபுவைப்போலக் கொஞ்சம் அக்கிரமம் எல்லாம் செஞ்சு, ஸ்ரீஹரியால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஒரு மகள். அவள்தான் விஹாஸினி. தகப்பனைக் கொன்னதுக்குப் பழிவாங்கணுமுன்னு ஆவேசமா எல்லா அரக்கர்களையும் திரட்டிப் படையெடுத்து இந்திரலோகம் போறாள். அங்கே இந்திரனை ஜெயிச்சு, தேவலோகத்தினரையெல்லாம் ஓட ஓட விரட்டிட்டாள், அசுரர்களுக்குக் கொண்டாட்டமா இருக்கு. காலியா இருந்த இந்திரனின் சிம்மாசனத்தில் போய் உக்காந்துக்கிட்டு ஆட்டம் போடறாங்க..

குபேரனுக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்கலை. அவன் வந்து அரக்கர்களின் தலைவனைக் கொன்னு இவுங்களையெல்லாம் தேவலோகத்தை விட்டு விரட்டுறான். செல்வம் கைக்கு வரலைன்னா என்ன ஜெயிச்சு என்ன பயன்? இதையெல்லாம் பார்த்த விஹாஸினி, தனக்கு இன்னும் சக்தி, அதிகாரம் எல்லாம் கிடைக்கணுமுன்னு பிரம்மாவைக் கும்பிட்டுத் தனக்கொரு வீரமான மகன் வேணுமுன்னு கடுமையான தவம் செய்யறாள். ஒன்னும் நடக்கலை. இன்னும் கடுமை வேணுமுன்னு தன்னுடைய உடம்பையே வெட்டிப் பலி கொடுக்கப்போகும்போது, அவள் தவத்தின் வலிமையை மெச்சி ப்ரம்மா அவள் முன் தோன்றினார். எங்கப்பனைக் கொன்ன ஸ்ரீஹரியை பழிவாங்குனாத்தான் என் மனசு ஆறும். அதுக்கு எனக்கொரு வலிமையான மகன் வேணுமுன்னு வேண்டறாள். ஸ்ரீஹரியையெல்லாம் கொல்லவே முடியாது. மும்மூர்த்திகளுக்கு மரணமே இல்லை. உனக்கு மகன் வேணுமுன்னு வரம் கேட்டே பாரு. அதை வேணுமுன்னா கொடுக்கலாம். உனக்கு சிவன் மூலம் ஒரு குழந்தை பிறப்பான்னு சொன்னார்.


குஷியான விஹாஸினி, பார்வதி போல தன்னுருவத்தை மாத்திக்கிட்டு சிவனை வணங்கி கும்பிட்டாள். சிவன், இது தன்னுடைய மனைவிதான்னு நினைச்சுக்கிட்டு(????) அவளுடன் கூடிக் குலவுனான். (என்ன சாமியோ! மனைவிக்கும் வேற ஆளுக்கும் வித்தியாசம் தெரியலையா?) விஹாஸினி கர்ப்பம் தரிக்கிறாள். வேண்டிய வரம் கிடைச்சுருச்சேன்னு தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப்போயிடறாள். தேவர்களால் தன்னுடைய கருவுக்கு ஆபத்து வந்துருமோன்னு தாயுள்ளம் பயப்படுது. பூமாதேவிகிட்டே கொடுத்து பாதுகாப்பா வைக்கச் சொல்றாள். கரு பூரணவளர்ச்சி அடைஞ்சதும் பூமியைப் பிளந்துகிட்டு குழந்தையா வெளியே வருது. அவந்தான் அந்தாசுரன். பழி உணர்ச்சியை ஊட்டி ஊட்டி மகனை வளர்த்துவிட்டதும், அவன் தேவலோகத்துக்குப் போய் சண்டை போடறான். சிவனுடைய மகன் என்றபடியால் யாராலும் அவனை எதிர்த்து நிக்க முடியலை. தோத்து ஓடுனாங்க.

ஸ்ரீஹரியைத் தேடிக்கிட்டு போறான் அந்தாசுரன். கைலாசமலையில் 'கான்ஃபரன்ஸ்' நடந்துக்கிட்டு இருக்கு. இவனால் பூமிக்கு வந்த ப்ராப்லத்தை எப்படித் தீர்க்கலாமுன்னு மும்மூர்த்திகளும் ஆலோசனை செய்யறாங்க. ஓடிப்போன தேவர்களின் ராஜா இந்திரனும் வந்து கூட்டத்துலே கலந்துக்கறான். பேசாம ஆதிபராசக்திகிட்டே நாம் நாலுபேரும் வேண்டிக்கலாம். 'அந்தம்மாவுக்கு பவர் ரொம்ப ஜாஸ்தி' ன்னு முடிவு செஞ்சாங்க. தேவியும் ஓக்கேன்னு கிளம்பிப்போனாங்க. அசுரன் முன்னால் சாதாரணமா அழகான யுவதியாப் போய் நின்னாங்க. அவனும் இது யாரோ என்னமோன்னு நினைச்சு, மரியாதை நிமித்தம் பேசறதுக்குக் கிட்டே வந்தான். என்கூட சண்டைக்கு வர்றயான்னு கேட்டதும் 'ஃபூ'ன்னு ஊதித்தள்ளுனா ஆச்சு'ன்னு சரின்னான்..

பராசக்தி உடனே தன்னுடைய 'சுயரூபத்தை'க் காட்டுனதும் அசுரனுக்கு பயம் வந்துருச்சு. 12 கைகள். ஒவ்வொன்னிலும் ஒரு பயங்கரமான ஆயுதம். சீறிப்பாயும் சிங்க வாகனத்துலே உக்கார்ந்துருக்காள். உயிரைக் காப்பாத்திக்க அவன் ஓடிப்போய் கடலுக்குள்ளே விழுந்தான். ரக்தேஸ்வரியா ரூபமெடுத்து இவளும் கடலில் குதித்து அந்தாசுரனை வதம் செஞ்சுடறாள். உலகமெல்லாம் மகிழ்ச்சியா இருக்கு. ஆதிபராசக்தியும் அனைவருக்கும் மங்கலம் நேரட்டுமுன்னு இங்கே மங்களாதேவியா கோவில் கொண்டுட்டாளாம்.

ஊருக்கே பேரைத் தந்த கோவில் சிட்டிக்குள்ளேதான் இருக்கு. பார்க்க ரொம்ப சாதாரணமா ஓடுபோட்ட அமைப்பு. வாசலில் ரெண்டுமூணு பூக்கடைகள். வளாகத்தில் நுழைஞ்சவுடன், உசரமான படிகளுடன் வலது பக்கம் ஒரு சந்நிதி நாகதேவதைக்கு.
மூலவர் சந்நிதிக்கு முன்னே வெளியே கொடிமரம். மேலே போகப்போகத் தங்கமா ஜொலிக்கும் இதுக்கு வெண்கலப்பூண் போட்டாப்போல ஒரு அமைப்பு.. அதன் அடிப்பாகத்துலே சுற்றிவரச் சின்னச்சின்னதா சிலைகள். யானை, முதலை, மான், எருமை, கழுதை, குதிரைன்னு விதவிதமான வாகனங்களில் தேவர்களும் தேவதைகளும்.
உள்ளே நுழைஞ்சவுடன் நமக்கு ரெண்டு பக்கமும் ஆரம்பிக்கும் விசாலமான திண்ணைகள் உள்முற்றம் பூராவும் சுற்றிவர இருக்க, நேரெதிரே வெள்ளித்தகடுகளால் அலங்கரிச்ச கருவறை முகப்பு.. அட்டகாசமான அலங்காரங்களுடன் மங்களாதேவி. சின்ன உருவம்தான். கேரளப் பாரம்பரியத்துடன் அமைஞ்ச கோவில். திண்ணைக்கும் கருவறைக்கும் இருக்கும் இடைவெளியில் நாம் சுற்றிவந்து நமஸ்கரிக்கலாம். அர்ச்சகர்கள் ஒரு பக்கமா இருந்து தீர்த்தமும், புஷ்பமும், துளிச் சந்தனமும் பிரஸாதமாகத் தர்றாங்க. காலத்துக்கேத்தபடி வெப்சைட் வச்சுருக்காடா அம்மா!!!!
வெளிப்பிரகாரம் ரொம்ப விஸ்தாரமா இருக்கு. சாமி ஊர்வலத்துக்கு ஒரு தேர் ஒன்னும் இல்லை. வண்டி வச்சுருக்காங்க. வெய்யில் தெரியாம இருக்க தென்ன ஓலைகளால் பந்தல் போட்டுருக்கு. இந்தப் பக்கம் அநேகமா எல்லாக் கோவில்களிலேயும் பந்தல் இருக்கு. பக்தர்களுக்கு சௌகரியம்.
நவராத்ரி சமயங்களில் அப்படி ஒரு நெரியும் கூட்டம் இருக்குமாம். இப்போ விழாக்காலம் இல்லை என்றதால் பல இடங்களில் நமக்கு ஏகாந்த தரிசனம் கிடைச்சது. காமணி நேரத்துலே தரிசனம், ஃபோட்டோ செஷன் எல்லாம் ஆச்சு. பொதுவாக் கோவில்களில் ஆஃபீஸ் இருக்கு பாருங்க. அங்கே போய் படம் எடுத்துக்க அனுமதி கேட்டால் பல இடங்களில் கிடைச்சுருது. சில இடங்களில் மட்டும் படம் எடுக்கக்கூடாதுன்னு அறிவிப்பு வச்சுருக்காங்க. இதையெல்லாம் கவனிச்சு வச்சுக்கணும். அப்பத்தான் பயண நினைவுகள் இனிமையா இருக்கும்.
எங்கெங்கே நம்மைக் கொண்டு போகணுமுன்னு தினேஷ், பிரஷாந்துக்கு விளக்கிட்டதால் நம்ம வேலை ஈஸியாப் போச்சு. அடுத்த கோவிலைப் பார்க்கக் கிளம்பினோம்.

33 comments:

said...

மெதுவா வாங்க, அந்த ஆஞ்சநேயர் கீழே காலில் பெண்ணை மிதிச்சுட்டு இருக்கிறது பத்திக் கேட்டீங்களே?? என்னோட சந்தேகத்தை இப்போ பரோடா போனப்போ ஜ்யோதிஷ் மடத்தில் (பத்ரிநாத் ஜ்யோதிஷ் மட் சங்கரமடத்தின்கிளை) பரோடாவிலே கேட்டு நிச்சயம் செய்து கொண்டேன். அது பத்திச் சொல்ல மறந்துட்டேன். ஒரு பதிவாப் போட்டுடலாமானு யோசனை! :)))))))))

said...

கடைசியில சக்திக்கு தான் வெற்றியா! ;)

said...

தப்பா நினைக்காதீங்க கதைல எங்கயோ தப்பு இருக்குனு நினைக்கிறேன்.

said...

// பராசக்தி உடனே தன்னுடைய 'சுயரூபத்தை'க் காட்டுனதும் அசுரனுக்கு பயம் வந்துருச்சு. //

உண்மைதாங்க.. அசுரன் என்னங்க ? பராசக்தி சுயரூபத்தைக் காட்டினா வீட்டுக்காரரே பயந்து போறாரு இல்லையா ? அதே போலத்தான்.

இந்த அம்பது வருசத்திலே இவரும் அஞ்சாறு தடவை பயந்திருக்காரு.(என்ன சாமியோ! மனைவிக்கும் வேற ஆளுக்கும் வித்தியாசம் தெரியலையா?)

அகல்யா கேசு இதுக்கு ஆபோசிட்டு.( ? ) கணவனுக்கும் இந்திரனுக்கும் வித்தியாசம்
தெரியலையா என்ன ?

மீ. பா.

said...

வாங்க கீதா.

யோசனையை உடனே செயல்படுத்துங்கப்பா!

ஒவ்வொரு ஹனுமன் கோவிலுக்குப் போகும்போதும் சரணாகதிக்குன்னு காலைப் பார்க்காம அங்கே யாராவது மிதிபடறாங்களான்னு பயத்தோடு அணுக வேண்டி இருக்கு:-))))

said...

வாங்க கோபி.

ரொம்பச் சரி. இல்லையா பின்னே!!!!

said...

வாங்க எல் கே.

என்ன தப்புன்னு கொஞ்சம் சொல்லக்கூடாதா?

கோவிலில் வாங்குன தலபுராணத்தைத்தான் எழுதி இருக்கேன்.

அங்கேயும் யாராவதுதானே எழுதி அச்சுக்குக் கொடுத்துருக்கணும்.

என்னன்னு தெரிஞ்சால் கோவிலுக்கும் தகவல் தெரிவிக்கலாம். அதான் தேவிக்கே வெப்சைட் இருக்கே!

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அகல்யாவாவது மானிடப்பிறவி.

ஆனால் சிவன்?

ஆமாம் அம்பது வருசத்துக்கு அஞ்சாறுதடவைதானா?

கணக்குத் தப்பா இருக்கேக்கா. இங்கே 35க்கு ஒரு இருபதாவது வரும்:-)

said...

//காலத்துக்கேத்தபடி வெப்சைட் வச்சுருக்காடா அம்மா//

ஆன்மீகப்பதிவுகளெல்லாம் எழுதுவாங்க போலிருக்கு.ஒரு பதிவர் சந்திப்பு நடத்தி அவங்க கிட்டயே தலபுராணமெல்லாம் கேட்டுக்கலாமே?.. :-))

said...

வாங்க அமைத்ச்சாரல்.

அதெல்லாம் சந்திப்புக்கு ஒத்துக்கமாட்டாங்க.சாமியா லக்ஷ்ணமா இல்லாம சாமியாடணுமா அவுங்க! எல்லாமே மனமெயில் காண்டாக்ட் மட்டும்தானாம்.

said...

oops.....

அமைதிச்சாரல்
அமைதிச்சாரல்
அமைதிச்சாரல்
அமைதிச்சாரல்
அமைதிச்சாரல்

said...

தேவி பாகவதம் புத்தகத்தை ஒரு முறை படிச்சிட்டு வந்து சரியாய் சொல்றேன் என்ன தவறுன்னு

said...

சிவனுக்கே தெரியலைன்னா எப்படிங்க டீச்சர்..?

said...

வாங்க உண்மைத் தமிழன்.

இன்னொரு சஞ்சய் ராமசாமி:-)

said...

சிவம் இப்படி பண்ணினலாமா? கதையை மாத்துங்கப்பா. நான் ரொம்ப ஆயிட்டேன்.
அப்புறம் எந்த கோவில் போனாலும் இந்த ஸ்தல புராணம் கேட்கும் பழக்கம் உங்களாலே எனக்கும் ஒட்டிகிச்சு.

said...

எல்கே இரண்டு முறை சொல்லி இருப்பதைப் பார்த்ததுமே கதையை முழுமையாகப் படிச்சேன், நேத்திக்குப் படிக்கலை. :( கதை முழுதும் தப்பு.

முதல்லே அந்தாசுரனா??
அந்தகாசுரனா???
அந்தகாசுரன் கதை நான் ஏற்கெனவேயே வேறொரு குழுமத்துக்கு எழுதி உள்ளேன். மத்தியானமாக் கொடுக்கிறேன், மேலும் சிவன் விஹாசினியோடு கூடுவது போல் எல்லாம் எந்தப் புராணத்திலும் இல்லை, தேவி பாகவதம், தேவி மாஹாத்மியம் உள்பட. இது ஏதோ இட்டுக் கட்டியதாய் இருக்கு, முற்றிலும் தவறான தகவல்களைக் கொண்ட தல புராணக் கதை! மின்சாரம் போயிட்டுப் போயிட்டு வருது, மத்தியானம் மின்சாரம் இருந்தால் வருவேன். :D

said...

நீங்க இப்படி இம்போசிஷன் எழுதறதப்பாத்தா அழுவாச்சியா வருது.. சரீ..சரீ.. ஆனைக்கும் அடி சறுக்கும்தானே!..

said...

எல் கே,

நான் தேவி பாகவதம் படிச்சதில்லை.

நீங்க படிச்சுட்டு வந்து சொல்லுங்க.

said...

எனக்கு முன்னாடி கீதா பாட்டி/மாமி சொல்லிட்டாங்க

said...

வாங்க கீதா.

கோவிலில் வாங்குன ஸ்ரீ மங்களாதேவி மாஹாத்மே என்ற புத்தகத்தில் இருந்த கதையைத்தான் நான் தமிழ்ப்'படுத்தி' இருக்கேன்.

அதுலே அந்தாசுரான்னு இருக்கு.

நீங்க பின்னூட்டனுதுக்குப் பிறகு வலையில் தேடுனதில் இதே கதைதான் கிடைச்சது. அதுலே அந்தகாசுரான்னு இருக்கு.

சின்ன பிட் இருக்கு பாருங்க.

Dreaming about her rosy future Vikhasini prepares herself for meeting Lord Shiva. She decided to discard her true form and disguise herself as Parvathi and chose a place where she could meet Shiva. She made Shiva Linga and began meditating on Lord Shiva.

The spring season came. In Kailasa Lord Shiva, who had tamed his mind began to feel a new kind of inexplicable sensation. He found it hard to meditate. His feet led him wandering about the hills. He reached a certain spot where the natural surrounding was quite captivating.

These sensations made Shiva long for the company of Uma. He was led to the place where Vikhasini in the guise of Uma was awaiting him. Seeing Uma, Lord Shiva was overwhelmed with the desire for carnal pleasures. Uma obliged him and they go under cover. The boon of Brahma began to come to fruition.

said...

நோ ஒர்ரீஸ் அமைதிச்சாரல்.

நாமெல்லாம் நக்கீரன் கூட்டமில்லையோ? :-)))))

said...

வாங்க விருட்சம்.

பலஊர்களின் கோவில்களில் தல புராணம் ஏறக்கொறைய ஒரே மாதிரி இருந்தாலும் இந்தக் கதைசொல்லிக்குக் கதை கேக்கப்பிடிக்குதே.

அப்பத்தானே நானும் (கொஞ்சம் கண்ணு மூக்கு வச்சு) உங்களுக்கெல்லாம் சொல்ல முடியும்.

இப்பப் பாருங்க, கீதாவும் எல் கேவும் தப்பாச் சொல்லிட்டேன்னு சொல்லிட்டாங்க.

கலகம் பிறந்தால்தான் 'உண்மை' வெளிவரும்.

நாலு பேர்கிட்டே, தனித்தனியா ஒரு விஷயத்தைக் கேட்டால் நாலு வெவ்வேறு கதைகள் கிடைச்சுரும்.

போன சனிக்கிழமை, 'லங்கேஸ்வரன் நாடகம்' போய்வந்தேன்.

சீதை, ராவணனின் மகள். ஆனந்த ராமாயணத்தின்படி நாடகம் போட்டுருக்கோமுன்னு சொன்னாங்க.

said...

/ // இது ஏதோ இட்டுக் கட்டியதாய் இருக்கு, முற்றிலும் தவறான தகவல்களைக் கொண்ட தல புராணக் கதை//

கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி. நானும் அப்படித்தான் நினைச்சேன்.
இதுவரை சிவன் இந்த மாதிரி சமாசாரங்களில் ஈடுபட்டதாக எங்கேயும் இந்த 68 வயதிலே படிச்சது இல்லையே !
அப்படின்னு . .... நினச்சுக்கிட்டு இருந்தப்போ கரெக்டா சொல்லிட்டாக.

சிவன், ஆன் த அதர் ஹான்ட், பார்வதியை விட்டுப்பிரியாம, அர்த நாரீஸ்வரரனாவர். அவரு உடம்பிலேயே
பார்வதி கீரா. சிவன் இல்லையேல் ச்க்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவன் இல்லை அப்படின்னுகூட
வசனம் கேட்டிருக்கோமே !! அப்ப அது தப்பா ?

அப்படி இருக்கச்ச, பார்வதிக்குத் தெரியாம ..... !!! சான்ஸே இல்லை.

கூகுள் லே தேடினா அவங்கவங்க அவங்கவ டேஸ்டுக்கும் ஆடியன்ஸுக்கும் தகுந்தபடி கதை எழுதறாங்க..
மெய்யா சொன்னா கதைக்கறாங்க.. . எந்த பொஸ்தகததுலே இந்த கதை இருக்குது அப்படின்னு சொல்றாகளொ
அதுக்கு அதாரடி என்ன ? அப்படி போட்டிருக்குதா என்ன ! ஸோ, அவங்கவங்க கற்பனைதான். கன்ஸர்ன்ட்
பார்டீஸ் வந்து சண்டை போடாத வரைக்கும் பிரச்னை கிடையாது.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவணும் அப்படின்னு நிச பார்வதி தேவியே சிவன்கிட்டே சொன்னாதான்
அந்தகாசுரன் யாருன்னு தெரிய சான்ஸ் இருக்குது.


அது சரி.. அப்ப எல்லாம் டி. என்.ஏ. டெஸ்ட் அப்படின்னு சொல்றாகளே ! அதெல்லாம் கிடையாதா ?

சிவ சிவா !


சுப்பு தாத்தா.

said...

வாங்க சுப்பு (தாத்தா??????)

//இதுவரை சிவன் இந்த மாதிரி சமாசாரங்களில் ஈடுபட்டதாக....//

ஹாஹாஹாஹா......

சிவலிங்கம் கதையை படிச்சது நினைவுக்கு வருது.

குறிச்சொல்: தாருகாவனம்

said...

அடடா. ஒரு பதிவைப் படிக்காம விட்டு விட்டேன். இத்தனை சமாசாரம் நடந்திருக்கே.
அதான் பார்த்தேன் மத்தவங்க விஷயம் மாதிரி ஸ்ரீ சிவன் விஷயத்தில் இப்ப தான் இப்படி ஒரு சரித்திரம்.
இப்பதான் பார்க்கிறேன். கதையை விட பின்னூட்டங்கள் ஜோர்.
அதென்ன கூகிள்ள இப்படி ஒரு ரொமான்ஸ் கதை போட்டு இருக்கான். சுப்பு சார் சொல்ற மாதிரி கட்டிவிட்டதெல்லாம் கதையாகிவிடுகிறது.
துளசி, ஆன்மீகத்துக்குத் தனி பதிவு ஆரம்பிங்கப்பா.

said...

//சிவலிங்கம் கதையை படிச்சது நினைவுக்கு வருது.

குறிச்சொல்: தாருகாவனம் //

மறுபடியும் தப்பு துளசி, சிவலிங்கங்கள் வழிபாடு உலகம் பூராவும் பரவி இருந்திருக்கு என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. தெய்வத்தின் குரலில் மூன்றாம் பாகம்?? சரியா நினைவில்லை தேடிப் பார்த்துட்டுச் சொல்றேன்.நீங்க குறிப்பிட்டிருக்கும் குறிச்சொல்லில் கிடைப்பவை எதுவும் சரியான ஆதாரங்களோடு உள்ளவை அல்ல. மேலும் சிவலிங்கம் பற்றி நான் ஒரு பதிவே போட்டிருக்கேன், சுட்டி கொடுக்கிறேன். மத்தியானமா அந்தகாசுரன் பத்தியும், அநுமன் காலில் பெண்ணைப் போட்டு மிதிப்பது பற்றியும் போட்டுடறேன், என்ன?? நம்ம ஆற்காட்டாருக்குப் பிடிக்கிறதில்லை, அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு! அவர் வரலைனா கட்டாயம் இன்னிக்குப் பதிவு வரும்!

said...

வாங்க வல்லி.

கூகுளார் விட்ட கதை இல்லேப்பா.

மங்களாதேவி கோவிலின் ( எக்ஸ்) ட்ரஸ்டி ஸ்ரீ வாசு குமார் கன்னடம்/துளுவில் எழுதுனதை கனரா காலேஜ் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் ஹெட் ஸ்ரீ நாராயண பட் இதை இங்கிலீஷில் மொழி பெயர்த்துருக்கார். புத்தகத்தை கோவில் வெளியிட்டு இருக்கு.

said...

கீதா,

படிச்சதைத்தான் சொன்னேன்ப்பா.
சரியா தப்பான்னு ஆராயலை.

உங்க பதிவுக்குக் காத்திருக்கேன்.

சீக்கிரம் போடுங்க.

ஆற்காட்டார் நந்தியாக இருக்க மாட்டார்ன்னு நம்பறேன்:-)

said...

//http://sivamgss.blogspot.com/2010/04/blog-post_08.html//

இப்போதைக்கு சிவலிங்கம் பத்தின பதிவை மட்டும் மீள்பதிவாக்கி இருக்கேன். அந்தகாசுரனும், அநுமனும் தொடர்ந்து வருவார்கள். அப்புறம் லங்கேஸ்வரன் நாடகம் நாடக நடிகர் மனோகர் போட்ட கதையின் வடிவம் தான் நீங்க பார்த்தது என நினைக்கிறேன். ராவணனுக்குப் பிறக்கும் பெண்குழந்தையை அவன் பெட்டியில் போட்டுக் கடலில் விடுவதாயும் அந்தப் பெட்டிதான் ஜனகரிடம் கிடைப்பதாயும் வரும்.

said...

"மங்களாதேவியா கோவில்" வித்தியாசமான வாகனங்களில் சிலைகள் அழகாக இருக்கின்றன.

said...

ஆமாம் கீதா. ஆனந்த ராமாயணத்தை தொடர்ந்து அந்த நாடகம் போட்டாங்கன்னு ஒரு இண்ட்ரோ கொடுத்தாங்க.

எப்பொருள் யார்யார்வாய் கேள்ப்பினும்......

said...

வாங்க மாதேவி.

சின்னச்சின்ன உலோகச் சிலைகள்தான். ஒரு அரையடி உசரம். ஆனால் அழுத்தம் திருத்தமான வடிவங்கள்.

said...

ராமாயணம்

இந்தக் குறிப்பிட பதிவுக்குப் போனால் வால்மீகி சொல்லி இருப்பதும் தெரியவரும். வேதவதி தீக்குளித்ததும், அவளே சீதையாய்ப் பிறந்ததும் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்.