Sunday, April 04, 2010

குட்டிச்சாத்தான் வேலை

கண்ணுத் தெரியாத அவஸ்தையில் ஜாக்கெட்டின் தையலைப் போராடிப் பிரிச்சுக்கிட்டு இருந்தேன். மூணு வாரத்தில் இப்படிப் பூசணிக்காயா ஆகமுடியுமா? இப்பத்தானே தோழி வீட்டுக் கல்யாணத்துக்குப் போட்டுக்கிட்டுப் போனேன்! பரிதாபப்பட்டு நான் உதவறேன்னு 'தானாவே' முன்வந்தார் கோபால். பாவம் நல்ல மனிதர். என் கண்ணு கலங்கினால் அவருக்குத் தாங்காது கேட்டோ!

ஆளுக்கு ரெண்டுன்னு எடுத்துவச்சுக்கிட்டு.........குட்டிச்சாத்தான் மாதிரி .....கண்ணை சுருக்கிக்கிட்டுக் 'கர்மமே கண்ணாயினார்' ஆக இருந்தோம்.

நாலுநாளைக்கு உடுப்பிக்குப் போயிட்டு வரலாமான்னார். காண்பது..... கேட்டது கனவிலா? இல்லையே! சோழியன் குடுமி ஏன் இப்படிச் சும்மா ஆடுது? அடுத்த மூணு வாரம் ஆள் 'எஸ்' ஆகப்போறாராம். அதானே .....பார்த்தேன். சரி. நாலை அஞ்சாக்கினேன்.

துணிமணிகள், டாய்லட்ரி பை, படிக்க ஒரு புத்தகம், முக்கியமா ஸ்பேர் கண்ணாடி. எடுத்துவச்சமா போனமான்னு இல்லாம இந்த முறை குழப்பம் ஒரு கிழவரால் வந்துச்சுன்னு சொன்னா நம்புங்க.

சின்னதா ஒரு கொசுவத்தி ஏத்திவச்சுக்குங்க. ஜஸ்ட் ஒரேஒரு மாசத்துக்குத்தான். தோழி ஒருத்தர் போயிட்டுவந்து, 'அப்படியே வாயடைச்சு நின்னுட்டேன். உன் நினைவுதான் வந்துச்சு'ன்னு சொன்னாங்க. அனுமார் கோவிலுக்காப் போனீங்கன்னு கேட்டேன்:-)

"லக்ஷ்மிநரசிம்மர் கோவில். கட்டவாக்கம் என்ற ஊர். வழி மட்டும் கேக்காதே. காட்டுப்பகுதி போல இருக்கு. ரோடும் சரி இல்லை. கஷ்டப்பட்டுப் போனோம்"

தாம்பரம் பக்கத்துலே அப்படி என்ன காடு? அதே கஷ்டத்தை நாமும் படலாமேன்னு ரெண்டே வாரத்துக்கு முன் ஒரு நாள் திடீர்னு மனசுலே தோணுச்சு. ஞாயித்துக்கிழமை வேற! நம்மாளு ஊர்லே இருக்கார். போயிட்டே வந்துறலாம். கூட இன்னொரு தோழியையும் கூட்டிக்கலாமுன்னு அவுங்களுக்குத் தகவல் சொன்னதும் மறுபேச்சே இல்லாமல் சரின்னுட்டாங்க.

கூகுளாரைத் தஞ்சம் அடைஞ்சால்.... 'தோ.... இங்கெதான் இருக்கு பாரு'ன்னார். ஒரு மணி நேரம் போதும். தாம்பரம் முடிச்சூர் ரோடுலே(ஸ்டேட் ஹைவே 48) போகணும். படப்பை தாண்டிப்போனால் நிஸான் தொழிற்சாலை இருக்கு. அதைக் கடந்து கொஞ்சதூரம் போய் வலது பக்கம் திரும்புன்னார். அப்படியே ட்ரைவரிடம் சொன்னோம்..

கொஞ்சம்கூட எதிர்பாராத விதமா அட்டகாசமான சாலை. படப்பை கிராமம்(?) தாண்டினோம். கடைவீதியில் ஒரு அதிசயம். போஸ்டர் கலாச்சாரம் இப்போ மதங்களைக் கடந்துருச்சு. சமத்துவம் பரவுனாச் சரி.

மணிமங்கலம் ஏரியில் தண்ணீர் நிறைய இருக்கு. கூடவே பறவை இனங்களும் பனைமரங்களும்.
தப்பான ரைட்லே (இங்கே கோவிலுக்கான தோரணவாசல் இருக்கு. ஆனா இது எல்லையம்மன் கோவிலுக்கானது) திரும்பி பிறகு சரியான ரைட்டுக்கு வந்தோம். இங்கே பிரியும் சாலைதான் கொஞ்சம் கரடுமுரடானது. ஒரு 50 மீட்டருக்கு இப்படி. அப்புறம் மண்சாலை. அரைக் கிலோமீட்டரில் கோயில் வந்தாச்சு.
செம்மண் பட்டை போட்ட ஒரு சாதாரணக் கட்டடம். கோபுரத்துக்கான வேலை ஆரம்பிச்சு இருக்காங்க போல. கண்டிப்பாப் படம் எடுக்கக்கூடாதுன்னு ஒரு போர்டு. வம்பு எதுக்குன்னு கேமெராவைப் பைக்குள் வச்சுட்டேன். ஹாலில் ஒரு முப்பதுபேருக்குக் குறையாமல் ஒரு கூட்டம் பலர் பாயில் உக்கார்ந்துருக்காங்க. நேரெதிரே 'பெரும் ஆள்'!!!! கோவில் மணி ஒலிக்கத் திருமஞ்சனம் நடந்துக்கிட்டு இருக்கு. சந்தனமும் மஞ்சளுமா தீற்றிவச்ச முகம். இடது மடியிலே சின்ன உருவில் தாயார். நெய்விளக்கு ஆரத்தி முடிச்சுத் திரை போட்டு அலங்காரம் தொடங்குச்சு.
சந்நிதிக்கு நேரா இருந்த ஒரு பெஞ்சில் எங்களை உட்காரச்சொன்னார் ஒரு புண்ணியவான். அப்பாடா....முழங்கால் தப்பிச்சது. அலங்காரம் முடியும்வரை பக்தர்களுக்கு நரசிம்ம அவதாரத்தின் விசேஷத்தை ஒருத்தர் விவரிக்கறேன்னு வந்து உக்காந்தார். அவர் இங்கே முக்கிய புள்ளியாகத்தான் இருக்கணுமுன்னு நினைச்சேன். அது ரொம்பச் சரி. இவர் பெயர் பார்த்தசாரதி. இவருடைய கனவில்(தான்) நரசிம்மர் வந்து, தனக்குக் கோவில் எழுப்பச் சொன்னாராம். ஒரு மரத்தடியைக் காமிச்சு கனவுலே வந்த இடமுன்னு அவர்மனைவி கல்யாணி சொன்னாங்க. இவுங்க மகன்கள், மருமகள்கள்ன்னு சின்னதா ஒரு கூட்டம் அங்கேயும் இங்கேயுமாப் போய் ஏதோ வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாங்க உக்கார்ந்துருந்த இடத்துக்குப் பக்கத்துலே சமையல் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்கேயும் சிலர் பிஸியா இருந்தாங்க.

ப்ரஹ்லாதன் பக்த சக்ரவர்த்தி. ஹிரண்யகசிபு எவ்வளவு பயங்கரமான தண்டனை கொடுத்தாலும், 'நாராயணா, என்னைக் காப்பாத்து'ன்னுகூடக் கேக்காம, 'நாராயணாய நமஹ' மட்டும் சொல்லிக்கிட்டே இருந்துட்டான். பூரண சரணாகதின்றது இதுதான்.

ஹிரண்யனின் அரண்மனையில் ஒரு விஜயஸ்தம்பம் இருந்துச்சு. எல்லோரையும் ஜெயிச்சுட்டு இதைக் கட்டுனானாம். 'உன்னால் படைக்கப்படாத எந்தப் பொருளினாலும் மரணம் நேரக்கூடாதுன்னு வரம் வாங்குனதால் இந்தக் கம்பத்தில் நாராயணன் இருக்கமாட்டான்னு நினைச்சு, 'இதுலே இருக்கானா அந்த நாராயணன்?'ன்னு குழந்தையைக் கேட்டானாம்.

வெவ்வேற கதைகளில் வெவ்வேறு மாதிரி கேட்டுருக்கோமில்லையா? சின்னக் குழந்தை எந்தத் தூணைக் காமிக்குமோன்ற கவலையில் நாராயணன் அங்கிருக்கும் எல்லாத் தூண்களிலும் ரெடியா இருந்தான்னும் சொல்வாங்க

நரசிம்ஹம் வெளிப்பட்டதும் இவனை ஒரே அறை அறைஞ்சு கொல்லலை. தயாளமூர்த்தி. சிநேகமுள்ள சிம்மம். இவன் இப்போவாவது மனம் திருந்தி மன்னிப்பு கேப்பானான்னு பார்த்துட்டு, அப்புறமாத்தான் மெள்ள(!) வயித்தைக் கீறிக் குடலை எடுத்தாராம். அப்புறமும் கோபாவேசமா இருந்தவரை, எப்படி சமாதானப்படுத்தறதுன்னு தெரியாம, பக்தனை முன் நிறுத்துனதும் அவனைத் தூக்கித் தன்மடிமேல் வச்சுண்டாராம். இவர் மடியில் அமரும் பாக்கியம் ப்ரஹ்லாதனுக்குத்தான் கிடைச்சது. (ஆனா ரெண்டு தொடையிலும் கிடக்கும் பாக்கியம் ஹிரண்யகசிபுவுக்குக் கிடைச்சதே!!!!)

கடைசியில் இங்கே என்னமோ நடக்கறதேன்னு பார்க்க வந்த லக்ஷ்மியை விருட்ன்னு கையை நீட்டி அப்படியே வாரிஎடுத்து மடிமேலே வச்சுண்ட மாதிரி இருக்கார் பாருங்கோன்னார். பார்த்தேன். எனக்கென்னமோ நம்ம கோகி பல்லைக் காமிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கானோன்னு தோணுச்சு. குழந்தையை நினைச்சுக் கண்ணு நிறைஞ்சது. ப்ச்......

இந்த ப்ரவசனம் முடியும் தறுவாயில் ஒரு பெரியவர் வந்தார். எங்க பக்கத்துலே ஒரு நாற்காலியைப்போட்டு அவரை உக்காரவச்சார் பண்டிட் பார்த்தசாரதி. வயசு ஒரு எண்பது இருக்கலாம். கொஞ்ச நேரத்துலே ஏதோ கர்புர்ன்னு சத்தம். பெரியவர் சின்ன உறுமலா உறுமிக்கிட்டே சுத்தும் முத்தும் பார்த்தார். கைவிரல்களை மடிச்சு கீறும் போஸில் வச்சுக்கிட்டார்.

சாமி வந்துடுத்து!!!!! கதை கேட்டுக்கிட்டு பாயில் உக்கார்ந்துருந்த மக்கள்ஸ் எல்லோரும் எழுந்து நின்னுட்டாங்க. ஒருந்தர் 'சிங்கச்சாமி' காலில் விழுந்தார். 'அவரைத் தொடாதீங்கோ, தொடாதீங்கோ, தொடப்பிடாது'ன்னு பார்த்தசாரதி சொல்லிக்கிட்டே இருந்தார். ஜனங்க எல்லோரும் பக்தி பரவசத்தில் கைகூப்பி நிற்கறாங்க. இதில் நம்ம கோபாலும், நம்ம தோழியும் சேர்த்தி.

இதுக்குள்ளே அந்தக் கல்யாணி மாமி வந்து 'சிங்கச்சாமியிடம்' கோபப்படாதேள். பானகம் வேணுமா? மோர் வேணுமா? கரைச்சுண்டு வரேன்'னாங்க. உறுமலோடு 'பானகம்' என்றது சிங்கம். பக்கத்துலே இருந்த அறைக்குள்ளே போய் பானகச் சொம்பைக் கொண்டுவந்ததும் டம்ப்ளரில் ஊற்றிக்கொடுக்கக் கொடுக்க, 'சிங்கம்' மாந்திக்குடிச்சது. அப்புறம் வழிவிடுங்கோன்னு சொல்லி சிங்கத்தை சாமிச்சிலைக்கு முன்னே கொண்டுபோய் நிறுத்துனாங்க. திரை போட்டுருந்ததால் நமக்கு 'ஒன்னும்' தெரியலை.

இன்னிக்கு விசேஷத்தை ஸ்பான்ஸார் பண்ணி இருந்த அந்தக் கூட்டத்தினர் எல்லாம் கண்ணில் பரவசத்துடனும் பயத்துடனும் 'கப்சுப்' ன்னு இருந்தாங்க. மெதுவாக் கண்ணை இப்படியும் அப்படியும் ஓட்டுனேன். கோபாலும், தோழியும் கைகள் கூப்பி அதே பயபக்தியுடன். நானும் ஏறக்கொறைய நம்பும் நிலைக்கு வந்துட்டேன்.. திரைக்குப்பின் கற்பூரம் ஏத்துன ஜ்வாலை தெரிஞ்சது. பெரியவரை ஆசுவாசப்படுத்தி மறுபடி அதே நாற்காலியில் கூட்டிவந்து உக்காரவச்சாங்க. இதோடு நின்னுருந்தால் எல்லாம் பரிபூரணம். ஆனால்..........

'கோவிலுக்கு மக்கள் வந்து கும்பிடணும். பயபக்தியா வரணும். கடவுள் இல்லைன்னு சொல்றதையெல்லாம் நம்பக்கூடாது. பகவான் இருக்கார். கோவிலுக்கு வரும்போது இந்தமாதிரியெல்லாம் போட்டுண்டு வராம( என்னைப் பார்த்தபடி) நம்ம பாரம்பர்யத்தையொட்டி புடவை கட்டிண்டு வரணும். கேரளாவில் புடவை கட்டிண்டால்தான் உள்ளே விடுவா. இன்னொருமுறை என்னைப் பார்த்துத் தலையை ஆட்டி(அதான், நான் முன்னாலே நின்னுக்கிட்டு இருந்தேனே) இப்படியெல்லாம் போட்டுண்டு வர்றது சரி இல்லை. நான் சொல்றது தப்பா இருந்தால் மன்னிச்சுக்கோங்க'ன்னார். சாமி வந்ததை அவரே நம்பி தன்னை சாமியாவே நினைச்சுக்கிட்டார் போல! எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் வருதே!
பார்த்தசாரதி கொஞ்சம் முழிச்சார். (என்ன இப்படிச் சொதப்பிட்டாரே!)

என்னைப்போல் சால்வார் கமீஸ்களுக்கும், மடிசார் கட்டிக்காம இருந்த திருமதிகளுக்கும் லேசா ஒரு சங்கடம். ஜனங்கள் அதிலும் சின்னவயசுக்காரர்கள் கோவிலுக்கு வர்றதே இல்லைன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே ஆளாளுக்குக் கலாச்சாரக் காவலர்களா இருந்தால் சின்னக்குட்டிகளுக்கெல்லாம் புடவையைச் சுத்திக் கூட்டிவர முடியுமா?

எனக்கொன்னும் பிரச்சனை இல்லை. சாமி படத்தைப் பார்த்து எல்லா அலங்காரமும் செஞ்சுக்கிட்டு வரக் கசக்குதா? ஆனால் கோபால்? இன்னும் ஒரு மூணு கிலோ தங்கம் வாங்கினால்தான் முடியும். தாங்குவாரா? க்ரீடம் ஒட்டியாணம் எல்லாம்கூட இப்ப ஜிஆர்டியில் பார்த்தேன்!

என் முகத்தில் இருந்த எரிச்சலைப் பார்த்த தோழி, 'போனாப்போறது. வயசானவர். சொல்லிட்டுப் போகட்டும். விட்டுடு'ன்னாங்க. பின்னே விடாம....பிடிச்சுக்கிட்டா இருக்கப்போறேன்? ஆனா .........

அலங்காரம் முடிஞ்சு பூஜை ஆரம்பமாச்சு. அமர்க்களமா எல்லாம் நறுவிசா ஒன்னுவிடாம நடந்துச்சு. நரசிம்மர்கிட்டே போக அஞ்சு படி ஏறணும். மேல்படியில் ஓரத்தில் சிங்க(ஆ)சாமி நின்னுக்கிட்டு இருந்தார். கண்ணைச் சுழட்டிச் சுழட்டி கீழே நின்ன கூட்டத்தை ஒரு துழாவல். இன்னும் ஏதாவது சொல்லலாமோன்னு யோசனையா இருக்கும். அதுக்குள்ளெ அவருக்கு செல்லில் அழைப்பு. காதுலே செல்லை வச்சுக்கிட்டே படி இறங்கி ஹாலில் போய்ப் பேசுனார். பாரம்பரியம் பெண்களுக்கு மட்டும்தானா? கோவிலுக்குள்ளே வரும்போது செல்லை அணைச்சுட்டு(தான்) வரணும். ஒருவேளை கால் ஃப்ரம் அசல் நரசிம்மமோ என்னவோ! ( எனக்குத்தான் பொருமல். நம்ம கோபாலும், தோழியும் அவரை இன்னும் பயபக்தியோடுதான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க)

இங்கே இருக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹர் விஸ்வரூப தரிசனம் கொடுக்கறார். ஆதாரபீடம், கூர்மபீடம், பத்மபீடம், அநந்தபீடம், யோக பீடம் இப்படி அடுக்கிவச்ச அஞ்சு பீடங்களின் மேல் ரெண்டு காலையும் மடிச்சுச் சம்மணம் போட்டு உக்கார்ந்துருக்கார். ஏழுதலை நாகம் குடைபிடிக்குது. மேலே ஒரு கையில் சக்கரம், மறுகையில் வில். அடுத்த ரெண்டு கைகளாலும் அபயவரத ஹஸ்தம். சிலையின் உயரம் 16 அடி. செல்லம்போல சிக்குன்னு சின்னதா லக்ஷ்மி இடது தொடையில் உட்கார்ந்துருக்காள்.


பளீர்னு பல்லெல்லாம் (மொத்தம் 12) தெரிய சிரிச்ச முகம். இது நவகிரகப் பரிகாரத் தல(மா)ம். அந்தப் பனிரெண்டு பற்களும் பனிரெண்டு ராசிகளைக் குறிக்குது. இடது கண் சந்திரன். வலது கண் சூரியன். நெற்றிக்கண்(?) செவ்வாய். மூக்கு சுக்கிரன், வலது காது கேது. இடது காது ராகு. மேல் உதடு குரு. கீழ் உதடு புதன். நாக்கு சனி. (இது என்னவோ நெஜம்தான். எல்லாருக்கும் நாக்குலேதான் சனி! வேண்டாததையெல்லாம் உளறிக்கொட்டிட்டு வாங்கிக் கட்டிக்கிறோமே) ஆக மொத்தத்தில் 'கோவில்' சொல்லும் சேதி 'நவகிரகங்களும் இங்கேயே இருக்கு. வேறெங்கும் போகாதே. இங்கே ஒரு இடத்துக்கு வந்தால் ஆச்சு'!

இன்னிக்கு பூஜைக்கான நைவேத்யங்கள், தளிகை எல்லாம் சுடச்சுட அண்டா அண்டாவா தூக்கிக்கிட்டு ஓடிவந்து ஸ்வாமி முன்னால் வச்சுக் கைகாட்டி முடிச்சு எல்லோருக்கும் விநியோகம் செஞ்சாங்க. இதுக்குள்ளே மணி ரெண்டு. எல்லோருக்கும் அகோரப் பசி. சாம்பார்சாதம் பெருசு பெருசா பூசணித்துண்டு(இப்படித்தான் அகோபிலத்துலே இருக்குமாம்) தயிர்சாதம், சக்கரைப்பொங்கல், பழப்பச்சடின்னு அருமை.


பஸ் ஸ்டாப்புலே இறக்கி விடறீங்களான்னு கேட்டுக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க. அப்புறம் பத்துகிலோமீட்டர் தூரம் பஸ்ஸைத் துரத்திக்கிட்டுப்போனதெல்லாம் தனிக்கதை:-)

வீட்டுக்கு வந்தபிறகும் 'சாமி வந்தது'தான் பேச்சா இருந்துச்சு. அது நெஜம்தான்னு இவர் சாதிக்கிறார். இல்லைன்னு என் கட்சி. யோசனை பண்ணிப் பார்க்கப் பார்க்க இது ஏதோ செட்டப்ன்னு ஸ்ட்ராங்க மனசுலே தோணுது. எங்கூர்லே பொம்பளைங்க பலர் சாமி ஆடிப் பார்த்துருக்கேன்றார் கோபால். நானும்தான் பார்த்துருக்கேன். எல்லாம் மன அழுத்தம் காரணமா ஹிஸ்டீரிக்கலா வருவது அதுன்னு நான் சொல்றேன். அதே மாதிரி கைவிரல்களை மடிச்சுக் கண்ணை உருட்டிச் சீறிக் காமிச்சேன். நான்கூடச் செஞ்சுருக்கலாம். ஆனால் இந்த பாழாப்போன சிரிப்பு வந்து தொலைச்சுரும். அதுதான் பிரச்சனை.

"பாவம். வயசானவர். இப்படி ஏன் செய்யணும்? என்ன நிர்ப்பந்தம்?"

தீயைவிட வேகமாப் பரவுவதுதான் வதந்தீ. இப்ப அங்கே நடந்ததைப் பேப்பரில் ஒரு மூலையில் போட்டா சிலர் படிச்சுட்டு மறந்துருவாங்க. ஆனால் இன்னிக்கு அங்கே இருந்த முப்பது பேரும் சாமி வந்ததுக்கு சாட்சி. அவரவர் வீட்டுக்குப் போனதும் கொஞ்சமே கொஞ்சம் மசாலா(மனுஷ சுபாவம்) சேர்த்து இன்னும் கொஞ்சமாட்களுக்குச் சொல்வாங்க. அவுங்க இன்னும் சிலரிடம். இப்படியே பரவிக்கிட்டுப் போகும் பாருங்க.

இங்கே அத்வானக்காடா இருக்கும் இந்த இடமும், கோவிலும் இன்னும் அஞ்சு வருசத்துலே எப்படி அமோகமா ஆகப்போகுது பாருங்கன்னேன். இப்போ சாமி சிலைக்கு ஒரு ரெண்டடிவரை போய்ப் பார்த்தோம். வருங்காலங்களில் படி ஏற அனுமதி இருக்காது. அப்புறம் கருவறைக்கு வெளியே நிக்கணும் இப்படி..... ஜருகு ஜருகு ஆகப்போகுதுன்னு எனக்குள்ளே இருக்கும் 'சாமி' சொல்லுது!

கோவிலுக்கு ஏகப்பட்ட வேலை பாக்கி நிக்குது. சாமி சிலையை மட்டும் செஞ்சு வச்சுருக்காங்க. பிரமாண்டமான சிலை. இதுக்கே நிறைய செலவு ஆகி இருக்கும். ஒரு எலெக்ட்ரிக் மேள செட்( ஜல்ஜல்ன்னு பூஜை மணி அடிக்குது) இருக்கு. இன்னும் கோபுரம் எழுப்ப, கர்ப்பக்கிரஹம், விமானம், பலிபீடம், கொடிமரம்,அர்த்தமண்டபம், மஹாமண்டபமுன்னு கட்டணும். இப்போதைக்கு ஒன்னரைக்கோடி ரூபாய் வேணும். ஸ்ரீ பவன ஹரி ஹோம ட்ரஸ்ட், மக்களிடம் அப்பீல் செய்யுது. மேனேஜிங் ட்ரஸ்டீ, ஃபௌண்டர் எல்லாமே பிரசங்கம் செஞ்ச பார்த்தசாரதிதான். முதல் கட்டமா ஒரு வெப்ஸைட் கூட வச்சுருக்காங்க. http://www.naraharikrupa.com/

மனுசமனசு எவ்வளோ விசித்திரம் பாருங்க. வேண்டாமுன்னு தள்ளுவதை ஒரு மூலையில் போட்டு வச்சுக்கிட்டு வேண்டாத சமயத்தில் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தும். இப்போ பயணம் கிளம்பணுமுன்னு ஆரம்பிச்சதும், போற இடங்களில் ட்ரெஸ் கோட் இருக்கோன்னு சம்சயம் வந்துருச்சு. . ஒருவேளை இருந்துச்சுன்னா......நிச்சலனமா இருந்த குளத்தில் கல்லெறிஞ்சுருச்சு சிங்கம்.

அதுவும் ரொம்ப நாள் ஆசையா நினைச்சுக்கிட்டு இருந்த இடத்துக்குப் போறோம். உள்ளே போக அனுமதி இல்லைன்னு வந்துட்டால்..... அட ராமா!
புடவை கட்டுவது இவ்வளோ கஷ்டமான்னு யாரும் கேக்கப்பிடாது. பிரச்சனை புடவையில் இல்லை. அது இருப்பது ப்ளவுஸில்தான். வெய்யில் கூடக்கூட வேர்வை பெருகி, ஹ்யூமிடா இருப்பதால் உடம்பே வீங்குனமாதிரி ஆகுது. அதுக்குத்தான் நல்ல லூஸா தைக்கச் சொன்னா....நம்ம டெய்லருக்கு ஒரே நடுக்கம். தலையைத் தலையை ஆட்டிட்டு டைட்டாத் தச்சுடறார். செகண்ட் ஸ்கின்!

இந்தியாவிலே ஒரு கோவில்விடாமப் போய்வந்த ( சரியா கீதா?)ஆன்மீகப்பதிவரிடம் கேட்டால்..... 'கவனிக்கலையே. அதுவும் அதிகாலையில் கோவிலுக்குப் போனோம். உள்ளூர் மக்கள்ஸ்தான் இருந்தாங்க'ன்னு சொல்லிட்டாங்க.

பிரச்சனைன்னு வந்தபிறகு அதுலே இருந்து தப்பிக்க வழி தேடும் மனசு, ஒரு ஐடியாவைக் கண்டு பிடிச்சது. தேவைகள்தானே கண்டுபிடிப்புகளின் தாய்! கேரளா முண்டு பாரம்பரிய உடைதானே? அதை எடுத்துக்கிட்டுப் போகலாம். தேவைப்பட்டால் சல்வார் மேலேயே அடிமுண்டு சுத்திக்கிட்டு, மேல்முண்டை தாவணியாப் போட்டுக்கலாம். அப்ப ப்ளவுஸ்? நோ ஒர்ரீஸ். அதான் கமீஸ் போட்டுருக்கோமே!!!!! சரிகை முண்டு என்பதால் ப்ளவுஸுக்கு எந்தக் கலரும் ப்ரிண்டும் ஓக்கே:-) கட்டிப் பார்த்தேன். ரெண்டே நிமிஷம். பர்ஃபெக்ட்!

குட்டிச்சாத்தான் வேலையைச் செய்யாம இருந்துருக்கலாம்!!!!! சலோ!


PIN குறிப்பு:

ரெண்டுபேருக்கும் அப்பப்பப் பொழுது போக்க இப்படி ஒரு மேட்டர் சிக்குமுன்னு நான் நினைச்சும் பார்க்கலை. சாமி வந்தது உண்மைன்னு இன்னும் அப்பாவித்தனமா நம்புறவரை என்னன்னு சொல்றது? போய் நம்ம சின்ன அம்மிணி கதையைப் படிங்கன்னேன். ஊஹூம்..... எங்கூர்லே சாமி வருமுன்னு............. ஒரே முடவாதம். பேசாம நான் ஒரு நாள் சாமியாடத்தான் போறேன்னேன். சவுக்கு வச்சு அடிப்பாங்களாம் அவுங்க ஊர்லே! அப்ப அது பேய்க்கு இல்லையா? சாமிக்குமா!!!!!

'அச்சச்சோ.... நான் தப்பாச் சொல்லிட்டேன். சாமிக்கு மஞ்சத்தண்ணி ஊத்துவாங்க. பேய்க்குத்தான் அடி'ங்கறார்! இதுக்கே ஒரு நாள் ஆடத்தான் வேணும்.

பேசாம உங்களைத்தான் கேக்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.

சனங்க மேலே சாமி வருவது நெசமா?

ஆமாம்ன்னாலும் இல்லைன்னாலும் சொல்லுங்க

நானே ஆரம்பிச்சு வைக்கிறேன்: உண்மை இல்லை.

58 comments:

Anonymous said...

//காதுலே செல்லை வச்சுக்கிட்டே படி இறங்கி ஹாலில் போய்ப் பேசுனார். பாரம்பரியம் பெண்களுக்கு மட்டும்தானா? //

போச்சுடா, டீச்சர் உங்களை பெண்ணியவாதீன்னுடுவாங்க.

Very interesting post.

Anonymous said...

//பாவம். வயசானவர். இப்படி ஏன் செய்யணும்? என்ன நிர்ப்பந்தம்?"//

அவருக்குச்சொல்லிக்கொடுக்கப்பட்டது. நீங்களும் பின்பற்றணும்னு நினைச்சு உங்களை பயமுறுத்தப்பாத்திருக்கார். நீங்க யாருன்னு அவருக்கு தெரியலை :)

இன்னும் கோபால் சார் சாமி வந்துருச்சு கதை படிக்கலையா?

said...

வாங்க சின்ன அம்மிணி.

அடடடா..... தங்கக் கையால் போணி!

படிக்கச் சொல்லி இருக்கேன் சாமி வந்ததை.

said...

I agree with you totally. It's not real.

said...

வாங்க சந்தியா.

இப்ப எனக்கே அட்டகாசமாச் செய்ய வருது!

முதல் ஸீன் கரெக்ட்டாப் பண்ணியவர், அடுத்த ஸீன்லே.....
க்ர்ர்ர்ர்......

said...

//க்ரீடம் ஒட்டியாணம் எல்லாம்கூட இப்ப ஜிஆர்டியில் பார்த்தேன்!//

உங்களோட 'ஏங்க..வாங்கிறலாமா?'வை அண்ணா மறந்திருக்கப்போறார். அதான் இப்ப சப்போர்ட்டுக்கு இன்னொருத்தரும் வந்துட்டாரே?..மறுபடி படிக்க வையுங்க. இப்பவாவது கிரீடம், ஒட்டியாணம் கிடைக்கட்டும்..அடுத்த தடவை எல்லாத்தையும் போட்டுக்கிட்டுப்போய் சாமியாடுனா, மக்கள் அந்த லட்சுமியே வந்துட்டதா நினைச்சு, அதையும் நம்புவாங்க.காணிக்கை மட்டும் கொஞ்சம் பலமா கேளுங்க :-)))))

said...

http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_12.html

எல்லாம் உங்களுக்கு ஒரு ஒத்தாசைதான் :-))

said...

////க்ரீடம் ஒட்டியாணம் எல்லாம்கூட இப்ப ஜிஆர்டியில் பார்த்தேன்!////

ஆஹா . பாவம் கோபால் சார். இந்த சாமி வரதுல எனக்கும் நம்பிக்கை இல்லை. நீங்க சொல்ற மாதிரிதான். ரொம்ப அப்பாவிய இருக்காரே கோபால் சார் .
உங்களை பத்தி என்னோட பதிவுல சொல்லி இருக்கேன். டைம் இருக்கறப்ப வந்து பாருங்க

http://www.karthikthoughts.co.cc/2010/04/blog-post.html

said...

பிரகலாதன் கதையில் இத்தனை நுணுக்கமா? தெரியாதே?
போட்டோ எல்லாம் டாப்.
புடவை கட்டினா தான் அனுமதியா? இன்னும் கேட்டா மடிசார் தான் கட்டணும்னு சொல்லிடப்போறார், பாத்துங்க. ஆமாம், பிரகலாதன்/நரசிம்மாவதாரம் சமாசாரம் கொஞ்சம் வடக்கத்தியில்லையோ?

said...

அன்பின் துளசி

மிக மிக ரசித்துப் படித்தேன் - கோபம் புரிகிறது - என்ன செய்வது - பயம் - பயம் தான் காரணம் - ஒன்றும் சொல்வதற்கில்லை

இவ்ளோ தைரியமா எழுதிட்டீங்க - அதான் துளசி - அடிக்கடி ஜீஆர்டி போகாதீங்க - நியுஸிலே வசிக்கறதுக்கு வூடு வேணும் - பாவம் கோபால்

உங்க சமி சொன்னாப்ல இன்னும் 5 வருசம் கழிச்சு ஜெருகண்டி தான் .

ஆமா எல்லாத்தையும் லூசாக்கியாச்சா

Anonymous said...

//அடடடா..... தங்கக் கையால் போணி//

இன்னைக்கு ஈஸ்டர் மண்டே. இங்கெல்லாம் லீவு. அதான் முதல் போணி :)

said...

இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்ப மாட்டோம். அவருக்கு வந்த சாமி உண்மையான்னு தெரியாது. எங்க மாமாவுக்கு நரசிம்மர் வரும். அப்ப நீங்க சொல்ற மாதிரி முழிப்பார். கைகளை உருட்டுவார். உறுமும் சவுண்ட் வரும். குடம் குடமாக ஒரு பத்துக் குடம் தண்ணிய மேல கொட்டியவுடன் நிற்கும். இத்தனைக்கும் அவர் 1960களில் பீ.ஈ படித்து இரயில்வேயில் சீனியர் எஞ்சினியர். ஆக இது நம்ம அறிவு ஜீவீகள் சொல்வது போல டிப்ரசன் அல்லது டிஸ்ட்ராக்சன் அல்ல, இது எங்க சாருக்கு சப்போட்டா சொன்னது.

ஆனா இதை சாக்கா வைத்துக் கொண்டு, கதை விடும் ஆசாமிகளும் இருக்கார்கள். அவங்க முதுகைப் பார்க்காமல் அடுத்தவர் முதுகை நல்லா நோட்டம் பார்ப்பார்கள். இது உங்களுக்கு சப்போட். கோவில் எப்படியும் டெவலப் ஆகிவிடும்.

உடுப்பி கோவிலில் இந்த சம்பிரதாயம் இருந்தால், சிம்மம் தந்த எச்சரிக்கைன்னு வைச்சுக்கலாம். அப்படி எல்லாம் ரூல்ஸ் இல்லை என்றால் இது தற்செயல் என்று வைச்சுக்கலாம். போயிட்டு வந்து பதிவு போடுங்க. வெயிட்டிங்.

said...

கோபல் சார், தீ நகர் எல்லாம் போகாதீங்கன்னு சொன்னா கேட்டாரா. இன்னமும் வேணும், நல்லா வேணும்.

ஒரு பானிபூரி வாங்கிக் கொடுத்து நைசா கூட்டி வர்றது இல்லாம, ஏன் ஜீ.அர்.டிக்குள்ள எல்லாம் போக விட்டார். நல்லவேளை மகாராணி மாடல்ன்னு உடம்பு பூரா நகையை உங்ககிட்ட காட்டுல. அந்த வரைக்கும் தப்பிச்சார்.

said...

சூப்பர் அம்மா. அருமையான கட்டுரை, வழக்கம் போல உங்கள் பாணியில் :).

சிங்க சாமி : அப்புறம் கோவிலை எப்படி பிரபலமாக்குறது, கல்லா கட்டறது. சாமி வந்தவரை பளார்னு அறைய முடியும் "உரிமை" இருந்தால் சாமி உடனே இறங்கும், அப்புறம் எப்போதும் சாமி வராமல் இருக்கிறது என்பது "ஐ"தீகம் :))

டிரஸ் கோட் பிரச்சினையில் ரொம்ப தூரம் வந்து கருவறைக்கு முன் entry தரப்படாமல் நிறுத்தப் பட்ட அனுபவம் எல்லாம் உண்டு. அதனால் நான் கண்டுபிடிச்சது: எல்லா புடவைக்கும் போடும் படியான போச்சம்பள்ளி ப்ளவுஸ் தாரள அளவில் தைப்பது அல்லது short top chudidhar அணிந்து புடவை கட்டுவது எளிதாக இருக்கு. sleeve கூட சின்னதாக இருப்பதால் புழுக்கம் இல்லாமல் இருக்கு. என்ன fitting / style எல்லாம் பார்க்க முடியாது. :(

ஒட்டியாணம் மட்டும் இந்த வருஷ பட்ஜெட்டில் கேட்டுக்கோங்க. நாங்க பதிவுலக சார்பில் தமிழ்மண கிரீடத்தில் வேணும்னா ஏத்தி விட்டுர்றோம். :))

said...

ஆமா எல்லாத்தையும் லூசாக்கியாச்சா//
:))))))))))))))))))))))))))0000

said...

அட தேவுடா!
ஏற்கனவே பல்லு சுளுக்கு இருக்கு. எத்தனை தடவை சிரிக்கிறது துளசி. குட்டிச்சாத்தான் தான் சட்டையைப் பிரிக்கும்னா நானே நிறைய அங்க வந்து சட்டைகளைக் கொடுத்து இருப்பேனே. ஹைய்யொ. கடவுளே.:)))
நரசிம்மா உனக்கு வந்த கதியைப் பாருடா.
பேசாம நான் சாமி யாடியிருக்கலாம். . எங்க சும்மா நின்னாலெ விழறோம் இன்னும் சாமி வேற ஆடி விஅணுமா:)
சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவு.

said...

// வீட்டுக்கு வந்தபிறகும் 'சாமி வந்தது'தான் பேச்சா இருந்துச்சு. அது நெஜம்தான்னு இவர் சாதிக்கிறார். இல்லைன்னு என் கட்சி. யோசனை பண்ணிப் பார்க்கப் பார்க்க இது ஏதோ செட்டப்ன்னு ஸ்ட்ராங்க மனசுலே தோணுது. எங்கூர்லே பொம்பளைங்க பலர் சாமி ஆடிப் பார்த்துருக்கேன்றார் கோபால். நானும்தான் பார்த்துருக்கேன். எல்லாம் மன அழுத்தம் காரணமா ஹிஸ்டீரிக்கலா வருவது அதுன்னு நான் சொல்றேன். அதே மாதிரி கைவிரல்களை மடிச்சுக் கண்ணை உருட்டிச் சீறிக் காமிச்சேன். நான்கூடச் செஞ்சுருக்கலாம். ஆனால் இந்த பாழாப்போன சிரிப்பு வந்து தொலைச்சுரும். அதுதான் பிரச்சனை.//

எனது இளைய சகோதரர் ஃபிலாஸபி ப்ரொஃபஸர் வாரணாசி யூனிவர்சிடிலே இருந்தப்போ இதுபோன்ற சாமி ஆட்டங்களின் உண்மைகளை ஆய்வு செய்திருக்கிறார். பல ந்யூரோ மருத்துவர்கள், ரேடியாலஜிஸ்ட் உதவியுடன்
சாமி ஆட்டங்கள் முடிந்தவுடன் அவர்களுக்கு ஈ. ஈ. ஜி. ஸ்கான் செய்து இருக்கிறார். சாதாரணமாக, செரிபல்லத்தில் ஒரு
அப் நார்மல் ஆக்டிவிடி ( ஸ்கான செய்யப்படுபவரின் கண்ட்ரோலில் அவரது செயல்கள் இல்லாத நிலை ) ஸ்கான் செய்யப்படும் நேரத்திற்கு ஒரு 2 மணி நேரம் முன்னதாக இருந்திருந்தால் இந்த ஸ்கானில் தெரியும். அது போன்று இல்லை எனத்தெரிய வந்ததாம். ஆகையால், இது போன்று சாமி வந்த நேரங்களிலும் சாமி வந்தவருக்கு சாமி வந்தபோது தாம் என்னசெய்கிறோம் என்ற முழு உணர்வு இருக்கத்தான் வேண்டும். அப்பொழுது அதை வேண்டுமென்றே செய்கிறாரா இல்லையா என அறிந்துகொள்ள, ட்ரான்ஸ் வரும் நேரங்களில் ஒரு நார்கோலாப்டிக் டெஸ்ட் செய்தால் சில உண்மைகள் தெரியவர வாய்ப்பும்.இருக்கிறது. ஆனால், இதற்கு அது போல் சாமி வரும் நபர்கள் ஒத்துழைக்கவேண்டும். சாமி வந்த, வருவதாகச் சொல்பவர்கள் ஒத்துழைப்பு வெகுவாக இல்லை.

நிற்க. எந்த ஒரு பாஸிடிவ் அல்லது நெகடிவ் எமோஷனல் நிலையும் அளவுக்கு அதிகமாக ஏற்படும்பொழுது ஒரு விதமான தன் வசத்திலே தான் இல்லாத நிலை ஒன்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும்.
இந்த ஐ.பி. எல். ஆட்டத்திலே ஒரு விக்கெட் எடுத்துவிட்டால் அந்த போலிங் போடுபவர் ஆடும் பேய் ஆட்டத்தினையும் பாடி லேங்குவேஜையும் என்ன என்று சொல்வீர்கள் ? அதுவும் ஒரு வகை சாமி ஆட்டம் தானே !! நல்ல வேளை !! கற்பூர ஆரத்தி எடுக்காமலேயே தணிந்து விடுகின்றனர். ரொம்ப அனாகரீகமாக இருக்கும்பொழுது, சிலருக்கு ஃபோர்த் அம்பயர் ஃபைன் போட்டுவிடுவதையும் பார்க்கிறோம். அதே போல் ஒரு துக்கம் ஒரு அளவிற்கு மீறி ஏற்படும்பொழுதும் மக்கள் தமது சுய நிலையை இழந்துவிடுகின்றனர். பாச மலர் படத்தில் கடைசி காட்சியில் சிவாஜி அழுகிறாரே அதை பொய் என்று உங்களாலும் என்னாலும் சொல்ல முடிந்ததா ? அந்த காட்சியின் உணர்வுகளில் அப்படியே லயித்துப்போய் நாமும் அழுதோமே ! நினைவு இருக்கிறதா ?சினிமா தானே ? ஏன் அழுதோம் ? அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக்கொண்டோமே !!!

Emotional Intelligence எனும் தனது நூலில் Antony Robbins
இது போன்ற trance நிலைகளின் சாத்தியக்கூறுகளை வர்ணிக்கிறார்.

உங்களது ஒரு பதிவிலே, தன் மனைவி தீக்குளித்து இறந்ததைக் கண்டு, சிவ பெருமான் பேயாட்டம் ஆடியதாகச் சொல்கிறீர்கள். அதை கண்ட்ரோல் செய்யமுடியாத பார்வதியின் சகோதரன் ( நான் ரைட் தானே ? ) சக்கரத்தை எடுத்து அந்த தேவியை 51 துண்டாக ஆக்கினார் என்றும் சொல்கிறீர்கள். இதெல்லாம் புராணக்கதைகளாக கூறப்படும் வரையில் நாம் நம்புகிறோம். அதுவே ந்ம் கண்கள் முன்னாடி நடந்தால் நம்ப மறுக்கிறது மனசு.

ஒரு வேளை நமக்கே ஒரு நாள் சாமி வந்தால் தான் தெரியுமோ என்னவோ ?

சுப்பு ரத்தினம்.

said...

//இந்தியாவிலே ஒரு கோவில்விடாமப் போய்வந்த ( சரியா கீதா?)ஆன்மீகப்பதிவரிடம் கேட்டால்..... 'கவனிக்கலையே. அதுவும் அதிகாலையில் கோவிலுக்குப் போனோம். உள்ளூர் மக்கள்ஸ்தான் இருந்தாங்க'ன்னு சொல்லிட்டாங்க.//

இல்லையே! கேரளாவிலே குருவாயூர் தான் போயிருக்கேன். மிச்சம் இருக்கு. :( கிழக்குப் பக்கம் போகவே இல்லை. பூரி ஜகந்நாதர் கூப்பிட்டுட்டே இருக்கார். சிவசங்கர் அஸ்ஸாமிலே இருந்தப்போ காமாக்யா பார்க்கவும், பிரம்மபுத்ராவைப் பார்க்கவும் பலமுறை கூப்பிட்டார். இதோ இங்கே இருக்கிற திருவண்ணாமலைக்கு ஒரு வருஷத்துக்கும் மேலே கூப்பிடறார். எங்கே???? :(((((((((( முடியலை! அயோத்தி, நைமிசாரண்யம், மிதிலாபுரி(போனமாசம் போக நல்ல சான்ஸ் அடிச்சுது, அப்போப் பார்த்து உடம்பு வந்து போக முடியலை!)

said...

பிரசாதம் மெதுவா வந்து எடுத்துக்கறேன். அந்த சாமி மாட்டர் மறுபடி படிக்கணும்! :D

said...

டீச்சருக்கு ஓட்டு ;)

said...

தனியார் கோவில்களை நான் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். ஏகப்பட்ட பழமையான கோவில்கள் கவனிப்பார் அற்று கிடக்கு. புனருத்தாரண வேலைகள் செய்ய பலரு சிரமப் படும் போது நரசிம்ஹர் வந்து இங்கே கோவில் கட்டுன்னு சொல்லலாமா? பக்தா எனது இந்தக் கோவில் இங்கே இன்ன இடத்தில் மோசமான நிலையில் இருக்கு என்றோ அல்லது எனது பக்தன் ஒருவன் தீவிர கஷ்டத்தில் இருக்கிறான் அவனுக்கு உதவு என்றோ சொல்ல வேண்டாமோ?
what a coincidence. நேற்று நானும் இங்கே பொன்னியம்மேடு என்ற இடத்தில் இருக்கும் லக்ஷ்மி நரசிம்ஹர் கோவில் போய் வந்தேன். 100 வருடம் முன் கட்டியது. சின்ன கோவில். நரசிம்ஹர் பக்கத்தில் லக்ஷ்மி( மடியில்அல்ல)
யாரோ நாயக்கர் தம்பதிகள் கட்டியது. இப்போ தனியார் வசம் இல்லை என்று தான் நினைக்கிறேன். பழைய (சில்லறை வரும்) கோவில்கள் இப்போ அரசு வசம்தானே.

சாமி வரும் அனுபவம் குறித்த எனது அனுபவம்( எனக்கு சும்மாவே வரும். இது வேறே ) என் தெய்வம் அவமானப் படுத்தப் படுகிறதா ? என்றே தலைப்பில் பதிவிட்டு இருக்கிறேன்.பதிவின் நோக்கம் சாமி வருவது பற்றி இல்லை.

http://www.virutcham.com

said...

புடவை கட்டிட்டு தான் வரனும் என்றால் (கேரளாவில் இருப்பதை போல்)அழகா எல்லாருக்கும் புரியும் படியா கோவிலின் முன்பு ஒரு போர்டில் கொட்டை அக்‌ஷரத்தில் எழுதி வைத்திருந்தால் இந்த ப்ரசனை இல்லாமல் இருந்திருக்கும். ம்..

இண்ட்ரஸ்டிங்.
படங்கள் எல்லாம் சுப்பர் துளசி டிச்சர்.

டிச்சர் டைம் இருக்கறப்ப இங்கு வாங்கோ.

www.vijisvegkitchen.blogspot.com

said...

many many thanks for sharing this journey.

said...

//அதே மாதிரி கைவிரல்களை மடிச்சுக் கண்ணை உருட்டிச் சீறிக் காமிச்சேன். நான்கூடச் செஞ்சுருக்கலாம். ஆனால் இந்த பாழாப்போன சிரிப்பு வந்து தொலைச்சுரும். அதுதான் பிரச்சனை.//

படிக்கும்போதே சிரிப்பு வருதே

//இங்கே அத்வானக்காடா இருக்கும் இந்த இடமும், கோவிலும் இன்னும் அஞ்சு வருசத்துலே எப்படி அமோகமா ஆகப்போகுது பாருங்கன்னேன். இப்போ சாமி சிலைக்கு ஒரு ரெண்டடிவரை போய்ப் பார்த்தோம். வருங்காலங்களில் படி ஏற அனுமதி இருக்காது. அப்புறம் கருவறைக்கு வெளியே நிக்கணும் இப்படி..... ஜருகு ஜருகு ஆகப்போகுதுன்னு எனக்குள்ளே இருக்கும் 'சாமி' சொல்லுது//

நீங்க துளசி மாமி இல்ல துளசிசாமி இல்லே துளசிசாமியிரிணி

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஐடியா எல்லாம் சூப்பர். பேசாம நம்ம ஆஸ்ரமத்துக்கு ( அதான் ஆரம்பிக்கப்போறோமுல்லே) வந்துருங்க. அடுத்த 'பீடம்' உங்களுக்கு:-)

said...

வாங்க எல் கே.


ஆனாலும் ரொம்ப அப்பாவிதான். என் காலத்துக்கு அப்புறம் எப்படிப் பொழைக்கப் போறாரோன்னு கவலையா இருக்கு. அதான் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிச்சுக் கொடுக்கணும்!

said...

வாங்க அப்பாதுரை.

வடக்கத்தின்னு பார்த்தால்........... நிறைய சமாச்சாரங்கள் வடக்'கத்தி'தான்.

ஆனால் தெற்கிலே ஏகப்பட்ட நரசிம்மர் கோவில்களும், பழையகாலத்துக் கோவில்களின் தூண்களில் நரசிம்மர் உருவமும் இருக்கே.

said...

வாங்க சீனா.

எல்லாத்தையும் இல்லை. ஒன்னே ஒன்னைத்தான் 35 வருசமா லூஸாக்கிக்கிட்டு இருக்கேன்:-)

said...

சின்ன அம்மிணி.

இங்கே ஈஸ்டர் ஒன்னும் விசேஷமா இல்லை. அதுவும் வேளாங்கன்னி கோவிலுக்குப் பக்கத்துலே இருக்கோம்.

வந்ததும் தெரியலை போனதும் தெரியலை.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

உங்க பின்னூட்டத்தின் முதல் பாராவை 'மட்டும்' படிச்சுட்டு ஆனந்தத்துலே துள்ளுறார் கோபால்.

தராசுலே ஒரு பக்கம் நீங்க. மற்ற எல்லோரும் அடுத்த தட்டுலே மேலே.

இப்படியா கனமா இருப்பீங்க:-)))))

சூசகமுன்னு வச்சுக்கணுமா?

said...

பித்தனின் வாக்கு,

ஆலுக்காஸ்லே ஒன்னு பார்த்தேன். வெறும் நாலரைக்கிலோதான். கழுத்துவலி இருக்கேன்னு வாங்கிக்கலை:(

said...

வாங்க விதூஷ்.

//டிரஸ் கோட் பிரச்சினையில் ரொம்ப தூரம் வந்து கருவறைக்கு முன் entry தரப்படாமல் நிறுத்தப் பட்ட அனுபவம் எல்லாம் உண்டு.//

அச்சச்சோ:(

இப்பெல்லாம் குட்டைக் கை வந்துட்டதால் எனி கமிஸ் ஈஸ் ஓக்கே:)

ஆனாலும் இந்த ட்ரெஸ் கோட் விஷயம் பேஜார்தான்.

பாரம்பரியமுன்னு சொல்ல ஆரம்பிச்சால் பழங்காலச் சிற்பங்கள் (கோவிலில் அம்பாள்கூட இப்படித்தான் இருக்காள்)போல 'கச்சை'கட்டிண்டு போகவேண்டியதுதான்.

said...

வாங்க வல்லி.

கூடவந்த என் தோழி அசலா உங்களை மாதிரியேதான்.

நரசிம்மா நரசிம்மான்னு சாமி ஆடுவாங்கன்னு எதிர்பார்த்தேன்:-))))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அந்தப் பத்துப் பக்கத்துக்குக் கொஞ்சம் குறையுதே!!!

அதென்னமோ மூளை குதர்க்கமாவே யோசிக்கிறது. பெருமாளும் மனசுலே வந்து மணை போட்டு உக்காந்து, 'இருக்கும் கொஞ்சநஞ்ச மூளை'யையாவது பயன்படுத்திக் கொஞ்சம் 'மாத்தி யோசி'ன்றார்.

எமோஷனல் அட்டாச்மெண்ட் வரும்போது மனம் இளகி கண்ணு நிறையும் எனக்கு. அதுவும் கண்ணில் துளியெல்லாம் இல்லை. ஒரு கடலே வந்து ஆர்ப்பரிக்கும்.

ஆனா ஆடும்வரை போவேனான்றது சந்தேகம்தான்.

நெர்வஸ் ப்ரேக்டவுனில் உடம்பெல்லாம் ஆடுவதைப் பார்த்துருக்கேன்.

said...

வாங்க கீதா.

கிடைக்கணும் என்பது கிடைக்காமப் போகாது!

said...

வாங்க கோபி.

டாங்கீஸ்:-)

said...

வாங்க விருட்சம்.

அந்தப் பதிவைத் தேடிப் படிச்சேன்.

லிங்க் கொடுக்கும்போது குறிப்பிட்ட இடுகையின் சுட்டியைக் கொடுத்தால் வசதியாக இருக்கும்.

அஃபினை பல்லிடுக்கில் அடக்கிக்கிட்டு 'மோன நிலையில் சாமி பார்க்கும்' ஆசாமிகளை நிறையப் பார்த்தாச்சு.

என்னவோ போங்க:(

said...

வாங்க விஜி.

அறிவிப்பு போடுவது நல்ல ஐடியா.

ஆனாலும் உடம்பை நல்லாவே மூடி இருக்கும் உடைக்கு தடை ஏன் என்பதுதான் புரியலை.

பெருமாளே லுங்கி கட்டிண்டு ரொட்டி திங்கறார்!!!

said...

வாங்க ராம்ஜி யாஹூ.

கூட வர்றதுக்கு நன்றி.

said...

வாங்க லோகன்.

நம்ம ஆஸ்ரமத்துலே உங்களுக்கு 'தரிசனத்துக்கு டிஸ்கவுண்டு' போட்டுருக்கு:-)

said...

word press templateல் எதோ சில மாற்றங்கள் செய்ததில் link ரொம்ப ப ப ப ... நீ நீ நீ ளம் ஆகிவிட்டது . அதான் குடுக்கலை. அதுவும் இல்லாம நான் வேறேயும் சிலது எழுதி வேசிருக்கேன்னு உங்களுக்கு எப்படி சொல்லரதாம் சொல்லுங்க.

அந்த தம்பதியின் படம் தேவை இருதிருக்கலையோ. ஆமா ரொம்ப கோவமா நரசிம்ஹர் அவதாரம் எடுத்து உங்க முகத் திரையை கிழிக்கிறேன்னு ....

நீங்க எதுக்கு படம் எடுக்கரீங்கனு தெரியாம போஸ் எல்லாம் கொடுத்திருக்காங்க

http://www.virutcham.com

said...

விருட்சம்,

அந்தத்தம்பதிகளை மோசமுன்னு சொல்லலை. இவ்வளவு பெரிய வேலையை எப்படி முடிக்கப்போறோம் என்ற கவலை மாமி முகத்தில் தெரியுது.

பார்த்தசாரதியும் பெரிய ஸ்காலர். ப்ரபந்தம் எல்லாம் அப்படியே மளமளன்னு சொல்றார். அவர் செஞ்ச பிரசங்கம் ரொம்ப ஆத்மார்த்தமாத்தான் இருந்துச்சு.

சொதப்புனது சிங்கம் மட்டும்தான்.

said...

நான் சொல்லவதில் உடன்பாடில்லை என்றால் விட்டுவிடலாம். என் மனசில் திரும்ப திரும்ப தோன்றுவதால் சொல்லிடலாம்னு இத எழுதறேன்.
நீங்க மனசில் இருக்கும் ஆதங்கம் தணியும் முன் எழுதிட்டீங்க போல. படத்தை போட்டு விட்டதால் ஆதங்கத்துக்கும் மீறி பார்வையாளனை சில அனுமானங்களுக்கு கொண்டு செல்லும். இது பொது தளம் என்பதால் பின்னால் யார் மனதையாவது புன்படுதிட்டோமோனு வரக் கூடிய சங்கடங்களை தவிர்க்கலாம். படம் நீக்கி பார்த்தல் உங்கள் ஆதங்கம் தெளிவா புரியும்னு என் எண்ணம். இதில் உங்களுக்கு உடன்பாடில்லனா நான் எழுதியதை பெரிசா எடுத்துக்க வேண்டாம்.
just ignore. I was hesitant writing this.
I view your site more as travalogue/experience and I see you have good no. of readers and felt telling this.
http://www.virutcham.com

said...

விருட்சம்,

இவ்வளவு மன உளைச்சல் ஏன்? அந்தத் தம்பதிகளுக்குத் தெரியும் நான் வலையில் எழுதுவது. படம் போடவான்னு அவுங்ககிட்டே அனுமதி வாங்கி இருக்கேன்.
இப்பவும் அவுங்களைப் பற்றிய குறை ஒன்னும் சொல்லலை. ஒரு கோவில் கட்டுவதென்பது சாதாரண வேலையா? ஊர் கூடித் தேரு இழுக்கணும்.

எங்க ஊர்லே ஒரு கோவில் கட்டணுமுன்னு நானும் கோபாலும் மற்ற இந்தியர்களையும், ஃபிஜி இந்தியர்களையும், இலங்கைத் தமிழரையும் கூப்பிட்டு ப்ரப்போஸல் வச்ச அன்னிக்கே அதே மீட்டிங்குலே கருத்து வேற்றுமை வந்து ஆளாளுக்கு ஒன்னு சொல்ல, கடவுளுக்கு விருப்பமுன்னா தானே கட்டிக்கட்டுமுன்னு விட்டுற வேண்டியதாப் போச்சு. இது ஒரு பத்து வருசத்துக்கு முந்தி.

அவரும் மெத்த ஆன்மீக விஷயங்களெல்லாம் தெரிஞ்சவர். இதுலே அவரைக் குறைச்சுச் சொல்லமுடியாது. மாமியும் ரொம்ப டெடிகேட்டட்.

said...

அதானே . ஓவரா feel பண்ணீ ட்டேனோ

said...

ஃபீல் பண்ணினதுக்கு நோ ஒர்ரீஸ். அப்புறம் ஒர்ரி பண்ணிட்டோமேன்னு ஃபீலாகிரும்.

ஆனாலும் உங்க மனக்கருத்தைச் சொன்னதுக்கு டாங்கீஸ்.

said...

//அதே மாதிரி கைவிரல்களை மடிச்சுக் கண்ணை உருட்டிச் சீறிக் காமிச்சேன். நான்கூடச் செஞ்சுருக்கலாம். //

உங்களுக்கு ஓவர் குசும்பு, பாவம் கோபால் ஐயா எப்படி மிரண்டிருப்பார் என்று நினைத்தால் பாவமாக இருக்கு.

said...

வாங்க கோவியார்.

//.....கோபால் ஐயா எப்படி மிரண்டிருப்பார்...//

அய்ய..... மிரண்டுட்டாலும்....:-)))))

said...

"சாமி வந்துடுத்து!!!!" :)))))))))

said...

வாங்க மாதேவி..

சும்மா வரலைப்பா. கூடவே கொஞ்சம் மன உளைச்சலையும் தந்துட்டுப்போச்சு:(

said...

இந்த அனுபவம் எப்படியோ தெரியல. ஆனா வேறொரு கோவில்ல எனக்கு கெடைச்ச அனுபவம் மிக அருமையானது.
இத நேரம் கெடைக்கும்போது படிங்க.

http://www.artistictemples.org/2009/07/temples-blog-lakshmi-narayana-perumal.html

Ram

said...

வாங்க ராம்.

இங்கேயும் 'சாமி' வந்த ஆசாமியைத் தவிர மற்றதெல்லாம் நல்லதாகவே இருந்துச்சு.

நீங்க கொடுத்த சுட்டிக்கு போனேன்.

தானே தானே மெ(ய்)ன் லிக்கா ஹை கானே வாலாகா நாம்!

ரொம்ப உண்மை.

said...

என்பதிவுக்கு லக்ஷ்மி நரசிம்மர் தேடியதில் உங்கள் வலைப்பதிவுக்கு வரும் வாய்ப்பு வரம் பெற்றேன், மனம் லயித்துப்போன பதிவு , ஆன்மீகத்தை பற்றி இப்படியும் எழுத முடியும் என்று காட்டியிருக்கிறீர்கள் , அற்புதம் .நன்றி
உங்கள் லக்ஷ்மி நரசிம்மரை நான் என் பதிவுக்கு எடுத்துகொண்டிருக்கிறேன் நன்றி அதற்கும்

said...

வாங்க ராஜகோபாலன்.

உங்க பெயரைப் பார்த்ததும் ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்!!!!

குமுதம் ஜோதிடத்தில் இருந்து...... இங்கேயான்னு!

நீவிர் அவரில்லை என்றதும் கொஞ்சம் நிம்மதியாச்சு:-)

குழந்தை பட்டுப்போல் இருக்காள். எங்கள் ஆசிகள்.

said...

உங்களின் 1000 ஆவது பதிவை தேடும் போது இதை படித்தேன் .
என் மனதில் இருப்பதை படித்தது போலிருந்தது . தெய்வத்தை தவிர வேறு யாரையும் தொழுவதையும் ஏற்க முடியாது . இதுல சாமி வந்து தன மனசிலி ருப்பதை வேறு சொல்லி irritate பண்ணி இருக்கார் . உங்களின் பதிவுகள் பலதையும் படித்து முடித்துக் கொண்டு இருக்கிறேன் . பிரமிப்பூட்டுகிறீ ர் கள் துளசி .. மிகவும் மனம் நெகிழ்ந்தும் , சந்தோஷப்பட்டும் , வாய் விட்டு சிரித்தும்
ஆச்சர்யப்பட்டும் போகிறேன் உங்கள் பதிவுகளை படித்து .
சென்னை வருவீர்களா near future la .நேரில் வாழ்த்த தோணும் எப்பவும் . thanks and all the best for you and your husband Gopal .and your daughter Madhumitha.
இப்போ எத்தனை பதிவுகள் ஆயிற்று ?

இதற்கு பதில் தனி மடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ அளித்தால் சந்தோசம் .

said...

உங்களின் 1000 ஆவது பதிவை தேடும் போது இதை படித்தேன் .
என் மனதில் இருப்பதை படித்தது போலிருந்தது . தெய்வத்தை தவிர வேறு யாரையும் தொழுவதையும் ஏற்க முடியாது . இதுல சாமி வந்து தன மனசிலி ருப்பதை வேறு சொல்லி irritate பண்ணி இருக்கார் . உங்களின் பதிவுகள் பலதையும் படித்து முடித்துக் கொண்டு இருக்கிறேன் . பிரமிப்பூட்டுகிறீ ர் கள் துளசி .. மிகவும் மனம் நெகிழ்ந்தும் , சந்தோஷப்பட்டும் , வாய் விட்டு சிரித்தும்
ஆச்சர்யப்பட்டும் போகிறேன் உங்கள் பதிவுகளை படித்து .
சென்னை வருவீர்களா near future la .நேரில் வாழ்த்த தோணும் எப்பவும் . thanks and all the best for you and your husband Gopal .and your daughter Madhumitha.
இப்போ எத்தனை பதிவுகள் ஆயிற்று ?

இதற்க்கு பதில் தனி மடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ அளித்தால் சந்தோசம் .

said...

வாங்க சசி கலா.

ஒருமுறை சென்னை பதிவர் சந்திப்பில் கலந்துக்கணும் என்ற பேராசை இருந்தாலும் சரியான நேரம் வாய்க்கலையேப்பா:(

11 மாசம் சென்னையில் இருந்தேன். அப்ப மாநாட்டை நடத்தி இருக்கப்படாதோ?

இந்தமுறை வருசக்கடைசியில் ஒரு சென்னைப் பயணம் இருக்கும்போல இருக்கு.

இதுவரை துளசிதளத்தில் வெளியிட்ட பதிவுகளின் எண்ணிக்கை 1486 தான்.

ஆயிரமாவது இங்கே
http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_16.html

said...

ரொம்ப சந்தோசம் உங்க சென்னை பயணம் உறுதி ஆகக்கடவது :)

டிக்கெட் புக் பண்ணதுமே எனக்கு மெயில் பண்ணுங்க . ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஒதுக்கிடுங்க . ஆவலோடுAll our family members waiting .


//1486 தான் .//

கலக்கிட் டீங்க . ஓரளவு படிச்சுருக்கேன் . எப்போ முடிப்பேன் தெரில . சீக்ரமே 2000 தொட வாழ்த்துக்கள் !!