Monday, July 20, 2009

சென்னையில் கிடைச்ச சுகங்களில் ஒன்னு

நாட்டியவிழாவாம். ஓடும் கால்களுக்கு ஆடும் கால்களைப் பார்க்க ஆசை இருக்காதா? ஓடினேன். அடையார் அனந்தபத்மநாப ஸ்வாமி கோவில். அனந்தனுடன் ஒட்டி நிக்கும் அனந்தமண்டபம். தர்ம பரிபாலன சபா. காஞ்சி மடத்தின் ஏற்பாடோ? உள்ளே மேடையை அடுத்த ரெண்டு பக்கங்களிலும் சங்கீத மும்மூர்த்திகளின் படங்களும், சாரதா, காமகோடி பீடங்களின் பீடாதிபதிகளின் படங்களும் சுவரை அலங்கரித்தன.


கோவில்

மகாராஜா ஸ்வாதித் திருநாள் ராம வர்மா அவர்களின் நினைவுக்கான நிகழ்வு. தாஸ்யம் வழங்கும் ஸ்வாதி ந்ருத்தோத்ஸவம். ஏழு நாட்களும் நாளுக்கிரண்டா பதினான்கு நாட்டிய நிகழ்ச்சிகளும். முதல்நாள் முதல் நிகழ்ச்சி முதல் வரிசையில் ஆஜர் ஆனேன். நடனக்கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், நாட்டிய விழாவைத் துவக்கிவச்சுப் பேசுனாங்க. முதல் நிகழ்ச்சியில் ஆடப்போறது அவருடைய மாணவி, பல்லவி ஸ்ரீதர்.
கோவில் கொடிமரம்

திருவனந்தபுரம் அரண்மனையில் நடக்கும் நவராத்ரி விழாவில் நடனமாடிய கால நினைவுகளைச் சின்னக் கொசுவத்தியா ஏத்துனாங்க நம்ம சித்ரா. இந்த நிகழ்ச்சிகளில் மகாராணி சேதுலக்ஷ்மி அவர்களின் கலை ஆர்வம், மொழிகளில் உள்ள தேர்ச்சி எல்லாம் ரொம்ப சுவையாச் சொன்னாங்க. அரண்மனையில் நடக்கும் இந்த நவராத்ரி விழாக்களில் மகாராஜா ஸ்வாதித் திருநாள் இயற்றிய கீர்த்தனைகள் மட்டுமே பாடி ஆடுவாங்கன்னும் அதுக்காகவே அவைகளில் தெரிஞ்செடுத்து நாட்டியம் கம்போஸ் செஞ்சு அவையில் ஆடுனாங்கன்னும் சொன்னது புதுச் செய்தி.
சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள்

விசேஷ விருந்தினராக வந்தவங்களில் நம்மைத் தவிர பி.எஸ் நாராயணஸ்வாமி , கர்நாடக இசைக் கலைஞர் முக்கியப் புள்ளி. சித்ரா, இன்னும் மற்ற கலைஞர்கள் எல்லாம் ஒவ்வொருத்தராகக் காலில் விழுந்தாங்க. அதுலே இருந்து புரிஞ்சுக்கிட்டதுதான். இடைவேளையின்போது நான் அவரிடம் ரெண்டொரு வார்த்தை(அபத்தமா) பேசினேன். உங்க கச்சேரியை நான் கேட்டதே இல்லைன்னு சொன்னது அபத்தத்தில் சேருமா சேராதா? பனிரெண்டு வயசில் பாலகான ரத்னம் என்ற விருது வாங்கியவர். அவர் மாணாக்கர் லிஸ்ட் ரொம்பப் பெருசு.
திரு.பி.எஸ்.நாராயணஸ்வாமி

பல்லவியின் நடனம், தொடக்கத்தில் அலாரிப்பு , அநேகமா எல்லாப் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் வருவதையொட்டி வழக்கம்போல். அடுத்த நடனமாக எடுத்துக்கிட்டது தசாவதாரம். ஹைய்யோ.....மீனாக, ஆமையாக, வராகமாக, நரசிம்ஹமாக, வாமனனாக, பரசுராமராக, ராமனாக, பலராமராக, கிருஷ்ணனாகன்னு நம்மைக் கைப்பிடிச்சுக் கூட்டிக்கிட்டேப்போய் கல்கியில் முடிச்சாங்க. கிட்டத்தட்ட அம்பது நிமிஷம். மெய் மறந்தேன்னு சொன்னால் அது பொய் இல்லை. இந்த நடனத்தை வடிவமைச்சுச் சொல்லித்தந்த குரு நம்ம சித்ரா விஸ்வேஸ்வரன்தான். நாட்டியப்பள்ளி நடத்தறாங்க. ஒரு தில்லானாவோட மங்களம் ஆச்சு.

கோபிநாத் மிருதங்கம், முத்துக்குமார் புல்லாங்குழல், சித்தார்த் என்ற இளைஞர் பாட்டு நட்டுவாங்கம் சுதா ( சித்ரா விஸ்வேஸ்வரனின் மாணவி)
கூடுதல் விவரம் வேணுமுன்னா இந்த பாடகர் சித்தார்த், நாராயணஸ்வாமி அவர்களின் சிஷ்யர். இன்னும் கூடுதலாச் சொல்லவா? இவர் நாட்டியம் ஆடுன பல்லவி ஸ்ரீதரின் தம்பி. அருமையான குரல். நிகழ்ச்சி முடிஞ்சதும் அவரைப் பாராட்டுனோம். அப்போ அவருடைய தாய்மாமா ஒருத்தர் கண்களில் நீர்மல்கக் கோபாலின் கையைப் புடிச்சுக்கிட்டார். நீங்க எல்லாம் பாராட்டுனதே ......மனசுக்குத் திருப்தியா இருக்குன்னார். பெரிய க்ரிடிக் ரேஞ்சுலே நம்மை நினைச்சுக்கிட்டார் போல. பேசாம மீடியா/ப்ரெஸ்ன்னு ஒரு அடையாள அட்டையை வாங்கிக்கணும். நானும் பெரியமனுஷியா....'நல்லா இருந்ததை நல்லா இருந்துச்சுன்னுதானே சொல்லணுமுன்னுச் சொல்லிவச்சேன்:-) நடனமணி பல்லவியும் திரு.நாராயணஸ்வாமி அவர்களிடம் பாட்டுக் கத்துக்கிட்டு இருக்காங்களாம்.
(கடந்த அஞ்சு வருசமா இவரிடம் பாட்டு சம்பந்தப்பட்டவைகளில் ஆலோசனை கேட்டுக் கத்துக்கிட்டவங்க லிஸ்டில் பெரியபெரிய ஆளுங்க இருக்காங்க)


பதினைஞ்சு நிமிஷ இடைவெளியில் புது ம்யூஸிக் செட் வந்து மேடையில் இடமாற்றம் ஆச்சு. கூடுதலா ஒரு இசைக்கருவி. 'இடய்க்கா'ன்னு மலையாளத்தில் சொல்வாங்க. நம்மூர் உறுமி மேளம் போலச் சின்ன சைஸில் இருக்கும். இதை வாசிக்கிறவர் நின்னுக்கிட்டே வாசிக்கணும் என்றதால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் மைக் கொடுத்துருந்தாங்க. ஒரு மலையாளப் படத்தில் மோகன்லால் இதை ரொம்பவே ரசிச்சு வாசிப்பார்.படத்தோட பெயர் நினைவில் இல்லை. தேவாசுரம் இல்லைன்னா ஆறாம் தம்புரான், தெரிஞ்சவங்க சொல்லுங்க.
நடனக்கலைஞர் கோபிகா வர்மா. மகாராஜா ஸ்வாதித் திருநாளின் வழித்தோன்றலான இளவரசர் பூரட்டாதித் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் மனைவி இளவரசி கோபிகா வர்மா. மாதம் மும்மாரி பெய்ததான்னு கேட்கும் வழக்கமெல்லாம் ராஜ குடும்பங்களில் வழக்கொழிஞ்சு போயிருக்கு. இவுங்க இங்கே சென்னையில் ஒரு நடனப்பள்ளி நடத்தறாங்க. அதுக்குப்பெயர்தான் தாஸ்யம். மோகினியாட்டம் சொல்லித்தர்றாங்க.

பரத நாட்டியமும் கதகளியும் கைகோர்த்து நிற்கும் வகை இது. பரதநாட்டியம் போலவே அடவுகள், முகபாவனைகள், நவரசங்கள்ன்னு எல்லாமே க்ரேஸ் ஃபுல்லா இருக்கும். இந்த வகைக்கு 40 அடவுகளாம்.
ஒரு சின்னக் கதையைப் பார்க்கலாம். பஸ்மாசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் அசுரர்கள் வழக்கம்போல் சிவனைப் பூஜிச்சுத் தவம் செஞ்சு வரம் வாங்கிக்கிட்டான். எல்லாம் மரணத்தை வெல்லும் வழிக்காகத்தான். அவன் தன் கையால் தன் தலையைத் தொட்டால் மட்டுமே சாகணுமுன்னு கேட்டுக்கிட்டான். சிவரும் சரின்னுட்டார். (அன்னேலிருந்துத் தலைகூட சீவி இருக்கமாட்டான் இல்லே? ஒருவேளை பணியாளர்கள் சீவிவிட்டுருப்பாங்களோ?) அரக்கன் பேயாட்டம் ஆடிக்கிட்டு இருக்கான். தேவர்களை இம்சை செய்யறான். பொறுக்கமாட்டாத தேவர்கள் (வழக்கம்போல்) மகாவிஷ்ணுவிடம் முறையிடறாங்க. 'சரி. போங்க நான் போட்டுத்தள்ளிடறேன்'னு அபயகரம் நீட்டுனார். எந்த வழியில் செயல்படுத்தலாமுன்னு யோசிச்சார். ஆண்களின் ஜொள்ளும் தன்மை அறியாதவரா இவர்? ஏற்கெனவே பொம்பளை வேஷம் கட்டுன அனுபவம்வேற இருக்கு. அது என்னன்னு கேக்காதீங்க. அதுக்கு(ம்) ஒரு கதை இருக்கு. அதுக்குள்ளே போனா இப்ப நேரமாயிரும். சுருக்'னு சொல்றேன். பாற்கடலைக் கடைஞ்சப்ப எடுத்த மோகினி அவதாரம்.

பஸ்மாசுரன் முன் தோன்றி ஆடறாள் இந்த மோகினி. அவன் மயங்கினான். இவள் செய்யறதையெல்லாம் அவனைச் செய்யமுடியுமான்னு கேக்கறாள். மயக்கம் எல்லை மீறிப்போயிருந்துச்சு. சரின்னான். ஒவ்வொரு அபிநயம் காமிக்கக் காமிக்க அவனும் ரிப்பீட்டு. மோகினி தன் தலையைத் தடவறாள். அவனும்............. கதை குளோஸ்.

இப்படி மனதை மயக்கும் ஆட்டம் இந்த மோகினி ஆட்டம். இதுலே மிகை ஒன்னுமே இல்லை. இன்னிக்கு அவுங்க எடுத்துக்கிட்ட சப்ஜெக்ட் பாகவதம். கம்சனின் அரண்மனைச் சிறையில் கிருஷ்ணன் பிறப்பு முதல் பாரதப்போரில் அர்ச்சுனனுக்கு உபதேசிச்சப் பகவத் கீதை வரை. அடடா..... என்னன்னு சொல்வேன். அப்படி ஒரு முகபாவம், நளினம், கண்ணாலேயே கதை முழுசும் சொல்லும் அருமை. பரதநாட்டியம் போல விறுவிறுப்புக் கூடுதலா இல்லாம நின்னு நிதானத்தோடு ஆடும் வகை இது. (பாவம்.... அந்தப் பல்லவிக்கு ஸ்டேஜ் விளக்கு, ஆட்டத்தின் வேகமுன்னு வேர்த்து விறுவிறுத்து வேர்வை வெள்ளம் . போதாக்குறைக்கு குத்துவிளக்கு அணைஞ்சுருமுன்னு மின்சார விசிறிகளைப் போடாம விட்டுட்டாங்க. எனக்கே ஐயோன்னு போச்சு. நம்மளைப்போன்ற அனுதாபி ஒருத்தர் கவனிச்சதால் பாதி நடனத்துலே ஃபேனைப்போட்டு விட்டாங்க. விளக்குகள் எல்லாம் தீவட்டியா எரிஞ்சுக் கரி பிடிச்சுப்போச்சு. இன்னிக்குத் தேய்ச்சவங்க படாத பாடு பட்டுருப்பாங்க. எதுக்கு இத்தனை விளக்கு? ஒன்னே ஒன்னை அம்சமா வச்சுருக்கலாமுல்லே?)

இளவரசி என்ற பாவனை ஒன்னுமில்லாம அடக்கத்தோடு இருந்தாங்க இளவரசி. கடைசியில் சபைக்கு வணக்கம் சொல்லிய அருமை ஒன்னே போதும். நடனம் முடிஞ்சதும் இசைக்குழுவை அவுங்களே அறிமுகப்படுத்துனாங்க. ராஜேஷ் என்றவர் பாட்டு. பிரமாதம். இந்த வகை நடனத்துக்கு மணிப்பிரவாளமாத்தான் பாட்டுகள் இருக்குமாம். சமஸ்கிரதமும் மலையாளமும் சேர்ந்து அருமையான இசை.

எல்லாமே அளவோடு அருமை. அந்தக் காலத்துலே கலைஞர்கள் ஆட, அரச குடும்பம் உக்கார்ந்து பார்க்கும். இப்போ...... ஜனநாயகம் பாருங்க. இளவரசி ஆட நாம் உக்கார்ந்து பார்க்கிறோம். இந்தக் குறிப்பிட்ட நடனம் இன்னிக்கு 42 வது முறையா மேடை ஏறி இருக்குன்னாங்க. ஆஹா....அனுபவம் பேசுகிறது.

இன்னும் ஒரு வாரம் விழா நடக்கும். எல்லாரும் வந்துருந்து ஆதரவு தரணுமுன்னு சொன்னாங்க. ஹைய்யோ....... செய்யமாட்டமா என்ன? கரும்பு தின்னக் கூலியா? இலவச நிகழ்ச்சின்னு நான் சொல்லாம இருந்துட்டேன்னு நாளைக்கு யாரும் என்னைக் குறை சொல்லக்கூடாது ....ஆமாம்.

நடன நிகழ்ச்சிக்கு நடுவில் வருணபகவான் வானத்தைப் பொத்துகிட்டு வந்துட்டார். காய்ஞ்சுகிடந்த சென்னையும் எங்கள் மனசுபோல குளிர்ந்தது. இடியுடன்கூடிய பலத்த மழை:-)


பின் குறிப்பு: மோகினியாட்டத்தின் முகபாவனைகள்னு ஃபோட்டோப் பதிவு போடணுமாம். கோபாலின் அன்பு 'மிரட்டல்'. வேலைக்காகாதுன்னு ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்களேன் இரண்டு நிகழ்ச்சிகளையும்.

29 comments:

said...

காய்ஞ்சுகிடந்த சென்னையும் எங்கள் மனசுபோல குளிர்ந்தது. இடியுடன்கூடிய பலத்த மழை//

ஆஹா!!!! ஜூலை மாதத்தில் சென்னையில் மழைன்னு தனியா ஒரு பதிவு போட்டிருக்கலாம். எம்மாம் பெரிய அதிசயம் இது.

said...

நாட்டிய விழா!

நானும் ஒரு தடவை மதுரையில பார்த்தது!

ரொம்ப நல்லா இருக்கும்!

10-12 வருஷமாச்சு!

நினைவுகள் கிளறியதற்க்கு நன்றி!

சிவமுருகன்

said...

டீச்சரக்கா... பல்லவியோட ஒட்டியாணம் நல்லா இருக்கு, கண்டுகிட்டீங்களா?:-)))

said...

அப்ப எத்தனை தொடர் வரும் இதில்.. இது ஒன்னு.. அடுத்து ரெண்டு.. ;))
மோகினி ஆட்டம் சூப்ப்ரா இருக்கு..

said...

கோபிகா வர்மா சிலப் பள்ளிகளில் கூட சிறப்பு வகுப்பு வொர்க்ஷாப் மாதிரி நடத்தினாங்க. இப்போ செய்றாங்களா தெரியல. ஆனா, அப்பவும் அவங்கக்கிட்டப் போய் சம்யுக்தா வர்மா சொந்தமான்னு கேக்குற புத்தி எனக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

said...

//சென்னையில் கிடைச்ச சுகங்களில் ஒன்னு//

மெட்ராஸ்...நல்ல மெட்ராஸ்! ஹார்லிக்ஸ் கணக்கா சொல்லணும்னா "உலகமெங்கும் சுற்றுவேன்...லீவுக்கு... மெட்ராஸ் வந்துருவேன்"!!!

கரீட்டா?

இப்படிக்கு
ஜாமபஜார் ஜக்கு

said...

மோகினியாட்டம் மட்டும் தானா, கைகொட்டுக்களி இல்லையா. அதுவும் எனக்கு பிடிச்சது

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இந்த வருசம் ஜூனில் வரும் மழையே பொய்த்துப்போச்சாம். அதான் தீப்பிடிக்கும் சூடு.

நாட்டியவிழாவைப் பார்க்கவாச்சும் மழை வந்துச்சே என்ற திருப்திதான்:-)

said...

வாங்க சிவமுருகன்.

நலமா? ரொம்ப நாளாச்சே இங்கே உங்களைப் பார்த்து!

இப்போ எந்த ஊர்?

பொதுவா நாட்டிய விழா ஜனவரியில் சென்னையில் நடக்குது.

ஜூலையில் இது நமக்கான ஸ்பெஷல்:-)

said...

வாங்க ஐம்கூல்.

ஹூம்........ பெருமூச்சுதான் விடணும். ஒட்டியான சைஸ் எல்லாம் தாண்டியாச்சு(-:

ஒரு யானைக்கு வாங்கித்தரேன், அது சீப்பா இருக்குமுன்னு கோபால் சொல்றார்.:-)

said...

வாங்க கயலு.

ஒன்னுதான்னு நினைக்கிறேன்.

நேத்தும் போனேன். வேறவேற ஆர்ட்டிஸ்ட்தான். பாட்டுன்னா லிமிட்டேஷன் இருக்கு. அது மகாராஜா ஸ்வாதித்திருநாள் இயற்றிய க்ருதியா இருக்கணுமுன்னு.

கொஞ்சம் பெரிய பாட்டுன்னு தசாவதாரத்தை (கமலாஜஸ்ய) எடுத்துக்கறாங்க போல. ( ரிபீட்டானது கொஞ்சம் போர்தான். அதிலும் பாடுபவர்கள் தங்கள் மனோதர்மத்துக்கு ஏற்ப இன்னும் நீட்டிக்கறதாலும், நடனமணி முழு மேடையையும் ஆக்ரமிச்சு ஆடணுமுன்னு சுத்திச் சுத்தி வர்றதாலும் கொஞ்சம் இழுவையாத்தான் போச்சுப்பா.
(ஓசியில் கிடைச்சால் குத்தம் சொல்ல வந்துட்டா.....)

said...

வாங்க ராப்.
இப்பக்கூட நிறைய வொர்க்ஷாப் நடத்தறாங்கன்னு கேள்வி.

ஆனாலும் கோபிகா , டவுன் டு எர்த்ப்பா.

நேத்து விழாவில் பார்த்தேன். (அவுங்கதான் முன்னின்று நடத்தறாங்க)
ஸோ........சிம்பிள்.

பரிசு கொடுக்க டி.வி.கோபாலகிருஷ்ணன் வந்துருந்தார்.

said...

வாங்க ஜக்கு.

ஊர் உலகமெல்லாம் சுத்துனாலும் ஜாம்பஜாரும் சைதாப்பேட்டையும் போல வருமா? :-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

அதென்ன கைகொட்டிக்களி நாட்டிய விழாவில்? அது குரூப் டான்ஸ்ப்பா.

வெள்ளி சனி ரெண்டு நாளும் குச்சுப்புடி, ஒடிஸ்ஸி இருக்கு. பார்க்கலாம். சனிக்கிழமை ஐஸ்வரியா தனுஷ் பரதநாட்டியம். ரஜினி பொண்ணுதானே? முடிஞ்சால் போறேன்.

said...

//பெரிய க்ரிடிக் ரேஞ்சுலே நம்மை நினைச்சுக்கிட்டார் போல. //

நிச்சயமா இது பெரிய க்ரிடிக் தான். உங்கள போல இரசனையுள்ளவர்கள் பாராட்டினா அப்படி தான் இருக்கும்.

அந்த மோகன்லால நடிச்ச படம் “ப்றம ரம்”ன்னு நினைக்கிறேன்

said...

சென்னை மாதிரி என் மனசும் இந்த பதிவை பார்த்துட்டு குளிர்ந்து போச்சு டீச்சர்.

ஏசியா நெட்டில் கோபிகா மேடம் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜா இருந்தாங்க..அப்ப அதுல ஒரு நடனம் ஆடினாங்க..பத்து கண் இருந்தாலும் பத்தாது அதை ரசிக்க!!!!

said...

***
கோபிகா வர்மா சிலப் பள்ளிகளில் கூட சிறப்பு வகுப்பு வொர்க்ஷாப் மாதிரி நடத்தினாங்க. இப்போ செய்றாங்களா தெரியல. ஆனா, அப்பவும் அவங்கக்கிட்டப் போய் சம்யுக்தா வர்மா சொந்தமான்னு கேக்குற புத்தி எனக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
****

ராப், இது எல்லாம் ரொம்பவே ஓவர் !

said...

கோபிகா வர்மா இளவரசியா.
ம்ம் ராஜ நாட்டியம். மோகனமாகவும் இருந்தது.


இங்க இருக்கும் படங்களே வெகுத் தெளிவா இருக்கு. இன்னும் முகபாவம் செய்த படங்களா. ஐ மீன்:)
முகபாவம் செய்த போது எடுத்த படங்களா. பார்க்கிறேன்.
மழையின் தாளத்துக்கு தில்லானா மொகனாம்பாள் ஆடியிருப்பாங்க..நமக்குத்தான் கொடுப்பினை இல்லை:)

said...

Basmaasuran thalai seevinaanaa illaiyaa:))))

said...

மேடம் படங்கள் அனைத்தும் அருமை, அப்புறம் அந்த பொண்ணு நடனமும் கூடவே பொண்ணும் சூப்பர் :-)

said...

வாங்க நான் ஆதவன்.
முந்தாநேத்து கிரகணம் புடிச்சதே....நீங்க நல்லா இருக்கீங்களா?

கலை ஆர்வம் இருக்கு. நுணுக்கமெல்லாம் தெரியாதுன்னாலும் நல்லா இருப்பதை ரசிக்கத்தெரியுது.

அந்தப் படம் ப்ரமரம், நான் பார்க்கலைங்க. புதுப்படமில்லையோ?

நான் சொல்லும் படம் கொஞ்சம் பழசு.

said...

வாங்க சிந்து.

தினம்தினம் கோபிகாவைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். டவுன் டு எர்த். ரொம்பவே சிம்பிள்ப்பா.

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு. நல்லா இருக்கட்டும்.

said...

வாங்க மணிகண்டன்.
ராப்புக்குக் கண்டனம் சொல்லிட்டீங்க!

said...

வாங்க வல்லி.

பஸ்மாசுரன் தலை சீவலைன்னு நினைக்கிறேன். தலை வெடிச்சுருச்சு, அப்புறம் எங்கே 'சீவறது'?

said...

வாங்க கிரி.

எந்தப் பொண்ணைச் சொல்றீங்க? இளவரசியையா? பெரிய இடத்துப்பொல்லாப்பு வேணாம், கேட்டோ?

said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

said...

வாங்க செய்திவளையம்.

ஆட்டத்துலே நம்மையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி.

said...

/அந்தப் படம் ப்ரமரம், நான் பார்க்கலைங்க.புதுப்படமில்லையோ?/

தேவாசுரம்

said...

வாங்க கரிசலாரே.

ஆமாம்.

தேவாசுரமா என்பதைப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இப்போ நினைச்சால் 'ஆறாம் தம்புரான்' தானோன்னு ஒரு எண்ணம்

ஒரு திண்ணைமேலே சாய்ஞ்சு உக்கார்ந்துக்கிட்டு மோகான்லால் இடெக்கா வாசிப்பார்.