Friday, July 10, 2009

இதென்ன, இப்படி ஒரு அன்பு!!!!..........(2009 பயணம் : பகுதி 42)

நாளுக்கொரு மாற்றமுமா முன்னேறும் சிங்கையில், எனக்குத் தெரிஞ்சு மாறவே மாறாத ஒரு கட்டிடம். ஹெரிட்டேஜ் லிஸ்டில் சேர்த்துட்டாங்கன்னு நினைக்கிறேன், இந்த ப்ராட்வே ஹொட்டேலை(-: வேற இடம் ஒன்னும் கிடைக்காத நிலையில் ரெண்டு நாள்தானே சமாளிச்சுக்கலாமுன்னு துணிஞ்சுட்டோம். சரியா 25 வருசத்துக்கு முன்னால் இதே ஹொட்டேலில் வந்து தங்கினோம்.

அப்போ முதல்முறையா சிங்கைக்கு வர்றோம். கையில் 17 மாசக் குழந்தை.
இந்தியாவுக்குப்போகும் வழியில் ஷாப்பிங் செஞ்சு, நம்ம மக்கள் அனுப்புன லிஸ்ட்டையெல்லாம் சரி பார்த்து ஒன்னு விடாம வாங்கிக்கிட்டுப்போகணும்
ஊரைவிட்டுவந்தபிறகு மூணு வருசம் கழிச்சு முதல் பயணம். வரப்போறோம், வர்றோம், வந்துக்கிட்டு இருக்கோமுன்னுத் தம்பட்டம் அடிச்சதுலே நமக்கு வாழ்த்துப்பா ரேஞ்சுலே சாமான்கள் பட்டியல் அனுப்பிக்கிட்டு இருக்காங்க. நாமும் கொஞ்சமும் அசராம கவனமாப் பார்த்து ஒன்னொன்னாச் சேகரிச்சுக்கிட்டு இருக்கோம். யார் மனசும் கோணக்கூடாது பாருங்க. இதுக்குத் தோதா சிராங்கூன் ரோடுலே தங்குனா நல்லதாச்சேன்னு போன இடம்தான் இது. ப்ராட்வே ஹொட்டேல். இப்போ தோலெல்லாம் கனமா ஆனதால் எந்த லிஸ்டையும் கண்டுக்கறதைல்லை. உள்ளூர்லேயே எல்லாமும் கிடைக்குது. அப்புறம் என்னத்துக்குச் சுமக்கணும்?
சிராங்கூன் ரோடு, காலைநேரத்தில்

முஸ்தாஃபா , நியூபார்க் எல்லாம் அப்போ இல்லை.
கல்யாணசுந்தரமுன்னு ஒரு கடையில் எலக்ட்ரானிக் சாதனங்கள் வாகிக்கலாம். அந்தக் கடை இருந்த இடம்தான் முஸ்தாஃபா செண்டரில் சேர்ந்துபோயிருக்கு. இப்போ இதெல்லாம் சேர்த்துச் சிராங்கூன் ப்ளாஸா. சாதாரணமான கடையாத்தான் 1985 லே ஆரம்பிச்சது. கடைக்கு வர்றவங்க ஏன் வெளியே போய்த் தங்கணும்? இங்கியே குடி இருந்து சாமான்கள் வாங்கிக்கிட்டு ஊர் போய்ச் சேரட்டுமேன்னு முஸ்தாஃபா ஹொட்டேல் 90 களில் ஆரம்பிச்சு அதுவும் சக்கைப்போடு போட்டுச்சு. இப்போ அஞ்சாறு வருசம் முன்னே இதையும் மாற்றி
கடைகளை விரிவுபடுத்தி சையத் ஆல்வி தெரு முழுக்க ஒரே கடையா ஆகி இருக்கு. போதாக்குறைக்கு தங்கத்துக்குன்னே ஒரு கட்டிடம் ஜலான் பெஸார் தெருவில் கட்டி ரெண்டையும் இணைச்சும் வச்சுருக்காங்க. 24 மணி நேரமும் கடையைத் திறந்தே வச்சுருக்காங்க. சுற்றுலாப் பயணிகள் வந்து வாரிக்கிட்டுப்போக ஏதுவா இருக்கு. முக்கியமாச் சொல்லவேண்டியது வேலை வாய்ப்பு. எக்கச்சக்கமான எண்ணிக்கையில் ( சுமார் ஆயிரம் பேர் இருக்கலாமாம்)
பலதரப்பட்ட வயதினர்( முக்கால்வாசி இளம் வயதினர்) வேலை செய்யறாங்க. இதில் உள்ளூர் மக்கள் இல்லாம ஊருலே இருந்து வந்த மக்களும் உண்டு. தனியாப் பேசிப்பார்க்கும்போது சிலருக்கு திருப்தி இல்லைன்னு தெரியுது. ஆனால் எல்லோரையும் திருப்தி பண்ணி ஒரு நிறுவனம் நடத்த முடியுமா?
சுருக்கமாச் சொன்னா இது ஒரு தனி உலகமாவே இயங்குது! இயங்கட்டும்.

நாம் ப்ராட்வேயைக் கவனிக்கலாம். அன்றைக்குப் பார்த்ததுக்குப் பழுதில்லாம இன்னிக்கும் அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிவச்சுருக்காங்க. வாசலில் இருந்த லைட்டிங் கடை போய் அங்கே ஒரு ரெண்டாரண்ட் வந்துருக்கு. இப்போ நமக்கு 2 x 10$ க்கு காலையுணவு வாங்கிக்கலாமாம். முற்றிலும் இலவசம். துணிஞ்சு தங்கும் மக்களுக்கு:-) அஞ்சு நிமிச நடையில் கோமளா இருக்கும்போது இதை யாரு சட்டை செய்யப்போறா?

அன்றைக்குப் பார்த்த அதே அறைன்னு அசுவாரசியமா நுழைஞ்சால் ஏஸிப் பொட்டியை எடுத்துட்டு மாடர்னா இன்வெர்ட்டர் வச்சுருக்கு. பரவாயில்லையேன்னு மனசுலே நினைக்குமுன்பே பாத்ரூம் கதவைத் திறக்கணுமா கோபால்?

இத்துனூண்டு இடத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத வாஷ் பேஸின். முக்காலே அரைக்கால்வாசி இடம் புடிச்சு நீட்டிக்கிட்டு இருக்கு. அதுமுன்னாலே நின்னால் நாம் கதவை மூட முடியாது. டாய்லட் அதை ஒட்டி இடதுபுறம். வாஷ் பேஸின்லே இடிச்சுக்காம சரிஞ்சு அந்த இடைவெளியிலே சொருகுனாப்லெ நின்னு எட்டிக் கதவை சாத்திக்கணும். போதுண்டா சாமி. மாடர்ன் டிஸைன் வாஷ் பேஸினாம். துடைப்பக் கட்டைக்குப் பட்டுக்குஞ்சலமா?



சட்னு குளிச்சு முடிச்சுச் சீனுவைப் பார்க்கப்போனோம். வழக்கம்போல் சிரிச்சுக்கிட்டே இருக்கார். கோவிலில் பங்குனி உற்சவத்துக்குக் கொடியேத்தியிருக்காங்க. நிம்மதியான சாமி தரிசனம். ஞாயிறு என்றதால் கொஞ்சூண்டு கூட்டம். பொடிநடையா சிராங்கூன் ரோடு கோமளவிலாஸ் போனால் கடையை மூடிவச்சுருக்காங்க. புதுப்பிக்கிறாங்களாம். எருமை வீதி கிளை தொறந்துருக்காம். அதிகாலையில் செராங்கூன் ரோடின் முகமே வேற! காலியாக் கிடக்கும் நடைபாதையில் நடப்பதும் ஒரு அனுபவம்தான். பத்துமணி ஆனால் அமைதியே பறிபோயிரும்!!
மூலவர்


தாயார்
ஆண்டாள்
அனுமார்

காலை உணவைப் பிச்சு வாயில் போட்டுக்கிட்டு( என்னவா இருக்கும் என்பதை யூகிச்சுக்குங்க) திரும்பிவரும் வழியில் வீரமாகாளி அம்மன் கோவிலில் புகுந்து அங்கே நடக்கும் கல்யாணத்தில் கலந்து மணமக்களை வாழ்த்திட்டு அறைக்கு வந்து அஞ்சுமணிநேரத் தூக்கம்.


சிங்கையில் பதிவர்களின் பெருந்தலை(வர்) மாலை சந்திப்புக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அவருக்கும் நம்ம வருகையைச் சொல்லியாச்சு. மூணு மணிபோல எழுந்து கீழே போனால் எதுத்த நடைபாதையில் சிங்கைத் தொலைபேசி கடை போட்டுருக்கு. பாஸ்போர்ட்டைக் காமிச்சு ஒரு சிம்கார்டு வாங்கிச் செல்லில் போட்டுகிட்டோம். ஜூலை வரைக்கும் செல்லுமாம். உள்ளூர் மக்களைத் தொடர்பு கொள்ள ஒரு எண் வேண்டித்தானே இருக்கு? சென்னையில்தான் ஒரு சிம் கார்டு வாங்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துருச்சு. அது ஆச்சு ஒரு ஆறு வருசம் முந்தி.


சூடா ஒரு காஃபி மட்டும் குடிச்சுட்டுப் பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம். சமயம் பார்த்து மழை பிடிச்சுக்கிச்சு. சிங்கை மழைக்குன்னே ஒரு ஸ்டைல் உண்டு. படபடன்னு அடிச்சுப்பேய்ஞ்சுட்டுச் சட்னு விட்டுரும். ஒரு காமணி நேரத்துலே பார்த்தால் மழை பேய்ஞ்ச சுவடே இல்லாமல் தெருக்கள் எல்லாம் பளிச்சுன்னு கழுவிக் காயவச்சாப்புலெ இருக்கும். சூரியனும் அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு சத்தியம் செஞ்சுக்கிட்டு காய்ச்சுவான். ஒரு வெள்ளிக்கு ஒரு குடையை வாங்கிப் புடிச்சுக்கிட்டு லிட்டில் இந்தியா ரயில் நிலையத்துலே ரயில் ஏறி வண்ணாந்துறையில் இறங்கி ரயில் மாறி ராஃபிள்ஸ் ப்ளேஸ் போய்ச் சேர்ந்தோம்.

அதுக்குள்ளே சந்திப்பு நடத்தும் இடம் மழைகாரணமா இடம் பெயர்ந்து லா பாஸட் ஃபுட் கோர்ட்டுக்குப் போயிருந்துச்சு. Lau Pa Sat Food court தட்டுத்தடுமாறி நாங்க போகும்போது எதிர்கொண்டு வந்து சரியான இடத்துக்குக் கூட்டிப்போயிட்டாங்க நம்ம மக்கள்ஸ்.

ஒரு காலத்துலே இது பெரிய மார்கெட்டா இருந்த இடம். காய்கறிகள், இறைச்சி, மீன்னு விற்பனை. நூத்திப்பதினைஞ்சு வயசான கட்டிடம். அருமையான வேலைப்பாடு உள்ள இரும்புக் கம்பிகளால் ஆன டிஸைன். கட்டுனது 1894 வது வருசம். இப்போ இது பலவகை சாப்பாடுகள் கிடைக்குமிடமா இருக்கு. ஏழெட்டுப்பேர் இருந்தோம். சாப்பாட்டுக்கடையில் உக்கார்ந்துருக்க ஒரு நியாயமான காரணம் காமிக்கணுமேன்னு ஆளுக்கொரு பான வகைகளை வாங்கி முன்னாலே வச்சுக்கிட்டோம். எல்லாம் காஃபி, டீ வகைகள்தான். முழநீள டம்ப்ளர்கள். குடிச்சு முடிக்கும்வரை நம்மை யாரும் அங்கிருந்து கிளப்ப முடியாதுல்லே:-)))

கோவி கண்ணன், ஜோதி பாரதி, மீனாட்சி சுந்தரம், இளங்குமரன், பாஸ்கர், செந்தில்நாதன்ன்னு இருந்தவர்களுடன் கொஞ்சம்கொஞ்சமா வந்து சேர்ந்துக்கிட்டாங்க இன்னும் பலர். மழைகாரணமா வர நினைச்சும் முடியாமப்போனவங்க சிலர் கோவியாருக்குச் சேதி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கிரி, அவரோட நண்பர் ஒருத்தர், பிரியமுடன் பிரபு, நட்புடன் ஜமால், நீதிபதி பாண்டித்துரை, ஜகதீசன், முகவை ராம், நிஜமா நல்லவன், ஞானசேகரன், விஜய் ஆனந்த், அப்பாவி முரு, டொன் லீ, ராம்ஸ், மலேசியா மாரியாத்தா, மாதங்கின்னு பதிவர்கள் பலர். யார் பெயராவது விட்டுப்போயிருந்தா மன்னிக்கனும். டீச்சருக்கு வரவர ஞாபகமறதி கூடிக்கிட்டு இருக்கு வயசாகுதுல்லே? இத்தனைபேரை ஒருசேரப் பார்த்ததுலே மகிழ்ச்சியிலே திக்குமுக்காடிட்டேன். யாருமே வேற்றுமுகம் காட்டாம ரொம்ப இனிமையா, உள்ளன்போடப் பேசிப் பழகுனாங்க. அதெப்படி உண்மையான உள்ளன்புன்னு உனக்குத் தெரியுமுன்னு கேட்டால்........ அகத்தின் அழகுதான் முகத்தில் சிரிப்பாச் சிரிச்சுச்சே:-))))

சந்திப்பில் தொலைபேசி வழியாக் கலந்துக்கிட்டாங்க நம்ம ஆன்மீகச் செம்மல் ராகவனும், அமித்து அம்மாவும்.

கூட்டம் பெருக ஆரம்பிச்சதும் இன்னும் கொஞ்சம் நகர்ந்துத் தள்ளிப்போய் ஏழெட்டு மேசைகளை இழுத்துப்போட்டு உக்கார்ந்தோம். அடிச்சுத் துரத்தினா ஓடித் தப்பிக்கத் தோதான இடம். போண்டா இல்லாம சந்திப்பு இருக்கமுடியாதேன்னு கிடைச்ச தீனிகளை வாங்கி விளம்பிட்டாங்க. நம்ம செந்தில்நாதன், பூசணிவிதை அல்வா கொண்டு வந்துருந்தார். பாவக்காய் கிடைக்கலையாம். எதிர்பார்ப்போட இருந்த பலருக்கு ஒரே ஏமாற்றம்:-)
மீட்டிங் அஜெண்டாவே அல்வாதானாம்!!

பதிவர் சந்திப்புகளுக்கு அல்வா கிளறியே வாழ்க்கை வெறுத்துப்போயிருப்பாங்க செந்திலின் தங்ஸ். அவுங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தமிழ்கூறும் நல்லுகத்தின் சார்பாக இங்கே சொல்லிக்கறேன். அப்படியே தனிப்பட்ட வகையாக் கொடுத்தனுப்பிய பொதிக்கும் நன்றி.

பொதுவான அறிமுகமா இருந்தாலும், இளங்குமரன் பற்றிய விவரங்கள் வியப்பா இருந்துச்சு. (உண்மையான) ஆசிரியரா இருக்கார். காலை 7 முதல் இரவு 9 வரை அநேகமாப் பள்ளியிலேயே இருக்காராம். தமிழ்நாட்டில் ஒரு நூறு ஏக்கர் நிலத்துலே பள்ளிக்கூடம் ஒன்னு கட்டி அதுலே படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்குக் கல்விக் கண்ணைத் திறந்து வைப்பதுதான் அவர் வாழ்க்கையில் குறிக்கோள்னு சொன்னார். நினைச்சு நினைச்சு மாளலே என் மனசுக்கு. சின்ன அளவுலே ஆரம்பிச்சாலும் சரி. நல்லவைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட நாமெல்லாம் இருக்கோமுன்னும், அவர் நோக்கம் வெற்றியடையுமுன்னும் வாழ்த்தினோம். ஆசி வழங்கியது பதிவானந்தமயி. எல்லாம் நல்லபடி நடக்கும். கவலை ஏன்?

பாண்டித்துரை, அவர் முயற்சியால் வெளிவந்து கொண்டிருக்கும் சிறு பத்திரிக்கைகள் சிலதைக் கொடுத்தார். மாதங்கி அவுங்க கவிதைப் புத்தகத்தை (பொக்கிஷமா வச்சுக்க ஒரு செட் ப்ரூச்சும் உள்ளே வச்சுந்தாங்க. நியூஸி வந்துதான் பார்த்தேன்) அன்பளிப்பாத் தந்தாங்க.
இந்த சந்திப்பு முழு ஏற்பாடும் செஞ்ச கோவியாருக்கு எங்கள் நன்றி.

நம்ம பதிவர் குடும்பங்கள் இப்படியே பல்கிப்பெருகி அன்பு குறையாம
வளரணுமுன்னு மனமார வேண்டுகிறேன்.

பதிவர்களாக ஆகிக் கண்டபலன் யாதெனில்,
என்றும் அகலா அன்பு

(எதுகைமோனையையோ, இலக்கணத்தையோக் கண்டுக்கப்பிடாது ஆமாம்)

ஏழுமணிபோலக் கிளம்பி நாங்க பூகீஸ் நிலையத்துலே இறங்கினோம். கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு அப்படியே கிருஷ்ணன் கோயில் போனோம். சுவற்றில் புடைப்புச் சிற்பங்களோடு இருக்கும் திருப்பாவை பாடல்களில் பாட்டு உள்ள மார்பிள் கல்வெட்டுக்களைக் காணோம். சிற்பம் மட்டுமே எஞ்சி இருக்கு. எதுக்காக இப்படிச் செஞ்சுவச்சுருக்காங்கன்னு தெரியலை? யாருடைய (துர்) ஆலோசனையோ?

ஸ்ரீவேணுகோபாலனாகத் தரிசனம் கொடுத்தார் மூலவர். பொடிநடையாக் கிளம்பி சிம்லிம் டவரைக்கடந்து கால்வாய் சாலையில் நடந்து வாழை இலைக்கு வந்து சேர்ந்தோம். ஞாயிறாச்சே...... தேன்கூடு கலையட்டுமுன்னு கொஞ்சம் மெதுவாவே சாப்பிட்டு முடிச்சோம்.

சிராங்கூன் ரோடில் கூட்டம் கூடுன அடையாளம் ஒன்னுமே இல்லாம, எல்லாம் சுத்தம் செஞ்சு பளிச்சுன்னு இருந்துச்சு, நாங்கள் அறைக்குத் திரும்பும் சமயம்.

தொடரும்......:-)



பி.கு: பதிவர்கள் பெயருடன் படம் அனுப்பிவைத்த கோவி, கண்ணனுக்கு நன்றி. 'காலத்தினால் செய்த உதவி'!!

சந்திப்புச் சமாச்சாரங்களில் யாருடைய பெயரையாவது குறிப்பிட விட்டுப்போயிருந்தால் அது முழுக்க முழுக்க என் கவனக்குறைவுதான். மன்னிக்கணும்.

படங்களை ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்க.

29 comments:

said...

வாங்க வாங்க!


பயணம் இப்பொழுது சிங்கையிலா!

நலம் நலம்...

said...

இத்தனைபேரை ஒருசேரப் பார்த்ததுலே மகிழ்ச்சியிலே திக்குமுக்காடிட்டேன்\\


எங்களுக்கும் அப்படித்தான் டீச்சர் இருந்துச்சி ...

said...

நம்ம பதிவர் குடும்பங்கள் இப்படியே பல்கிப்பெருகி அன்பு குறையாம
வளரணுமுன்னு மனமார வேண்டுகிறேன்.

பதிவர்களாக ஆகிக் கண்டபலன் யாதெனில்,
என்றும் அகலா அன்பு\\


வழிமொழிகிறேன் ...

Anonymous said...

ஹை பூசணி விதை அல்வா, வித்தியாசமா இருக்கே, ரெசிப்பி கேட்டு செய்முறை ஒரு பதிவு போட்டுருங்க .

said...

முக்கியமான பதிவர் இல்லாத கடைசி புகைப்படத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்....

said...

//வரப்போறோம், வர்றோம், வந்துக்கிட்டு இருக்கோமுன்னுத் தம்பட்டம் அடிச்சதுலே நமக்கு வாழ்த்துப்பா ரேஞ்சுலே சாமான்கள் பட்டியல் அனுப்பிக்கிட்டு இருக்காங்க. //

இதுக்கு தான் சத்தம் இல்லாம வந்துடனுமா ;-)

// எல்லோரையும் திருப்தி பண்ணி ஒரு நிறுவனம் நடத்த முடியுமா?//

இது பதிவுலகிலேயே நடக்காது அப்புறம் அங்கே! ;-)

//சூரியனும் அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு சத்தியம் செஞ்சுக்கிட்டு காய்ச்சுவான்.//

:-)

மேடம் சிங்கை பற்றி பல தகவல் கூறி இருக்கீங்க நன்றி.

அப்புறம் உங்களுக்கு இவ்வளோ பெரிய பெரிய பதிவா எழுத ரொம்ப பொறுமை மேடம் :-)

said...

போன பதிவில உங்கள் எழுத்துக்களுக்கு 'ஞாபகம் வருதே' னு பின்னூட்டி இருந்தேன். இதில் படங்களுக்கு .... வழக்கம் போல அருமையான செய்திப் பகிர்வு. தோஸா டெலி,குறுக்குத் தெரு, புலிப்பால் விளம்பரம் .... அடடாஆஆஆஆ :))))

said...

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்
பதிவு செய்யப்பட்ட விதம் அருமை

said...

நானும் மூளை முடுக்கெல்லாம் சிங்கப்பூரில் சுற்றி வந்துள்ளேன். உங்கள் விவரிப்புகளை பார்த்ததும் எனக்கே நாம் அங்கு தான் இருந்தோமா? என்று தோன்றுகின்றது. பத்திரிக்கை துறையில் இருப்பதாக அதன் சார்ந்த நண்பர்கள் உள்கட்டமைப்புக்கு உறுதுணையாக வைத்து இருக்கிறீர்களோ? பிக்காஸோ புகைபடத்தில் கைபேசி வைத்துக்கொண்டுருப்பவர் நீங்கள் எனில் என் (2020) அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் போட வேண்டும்? எங்கே வைத்துக்கொள்ளலாம் கதையை ? http://texlords.wordpress.com

said...

துளசின்னா அன்புன்னு ஒரு முதுமொழி வந்திருக்காம்.

அதனால இத்தனை பேரும் உங்களிடம் அன்பு காண்பித்ததில் அதிசயமே இல்லை. இத்தனை பதிவர்கள் பார்ப்பதே எனக்கும் சந்தோஷமாக இருக்குப்பா. வாழ்த்துகள்.

said...

வாங்க நட்புடன் ஜமால்.

அன்னிக்கு உங்களையெல்லாம் பார்த்த மகிழ்ச்சியை அப்படியே மனசுலே புடிச்சுவச்சுருக்கேன்:-)

நலமே.

said...

வாங்க சின்ன அம்மிணி.

பதிவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டுட்டாலும்........


சாரப்பருப்பு, வெள்ளரி விதை வச்சு ஒரு இனிப்பு செஞ்சுருந்தேன். அதைப் படமும் எடுத்து வச்சுருக்கேன். அதைவேணா ஒரு நாள் எழுதட்டுமா?

said...

வாங்க அப்பாவி முரு.

அந்த 'முக்கியமானவர்' ஆல்பத்துலே ஒளி வீசறார். பார்க்கலையா?

said...

வாங்க கிரி.

ஓசைப்படாமல் இருப்பது ஒருவேளை நல்லதுதான்:-)

பெரிய பதிவு?
ஆமாம்ப்பா. ஒரு இடுகையையே பத்து துண்டாப் போட்டுருந்தா.... இப்போ எட்டாயிரத்துத் தொளாயிரத்து முப்பதாவது இடுகைகளா ஆகி இருக்கும். கோட்டை விட்டுட்டேனே....

சமீபத்துலே கவனிக்கலையா?

பதிவுன்னு சொல்லப்படாதாம். இடுகையாம்.

said...

வாங்க சதங்கா.

தெரிஞ்ச இடங்களை மீண்டும் பார்க்கும்போது ஒரு கூடுதல் மகிழ்ச்சி வருதுதானே? :-)

said...

வாங்க மாதங்கி.

கவிதாயினி பேச்சுக்கு மறு பேச்சு உண்டா?

நன்றிப்பா.

said...

வாங்க ஜோதி ஜி.


அவர் நம்ம நட்புடன் ஜமால். எப்படி சிரிப்பை அள்ளி வீசறார் பாருங்க.

அவர் கதாநாயர் வேடமுன்னா.... அவருக்கு அம்மா வேடம் எனக்குத் தாங்க.

தூள் கிளப்பிருவொம்லெ:-)

said...

வாங்க வல்லி.

முதுமொழி எல்லாம் நம்மைப்போன்ற இளைஞிகளுக்கு வேண்டித்தான் இருக்கோ?

நன்றிப்பா.

said...

சிங்கை சீனு படங்கள் நல்லா இருக்கு டீச்சரக்கா.

//இத்தனைபேரை ஒருசேரப் பார்த்ததுலே மகிழ்ச்சியிலே திக்குமுக்காடிட்டேன்//

படங்களை பாத்தாலே தெரியுது.அவங்களுக்கும் அப்படிதான் இருந்திருக்கும் இல்லையா:-).கொடுத்துப்பெற வேண்டும் அன்பை.அந்த உணர்வே தனிதான்.

said...

மறுபடியும் கேமிராவில் கோளாறா? புடவைக்கு பார்டர் மாதிரி ஒரு பட்டை இருக்கு.
இப்பெல்லாம் இங்கிருந்து சாமான்கள் வாங்கிப்போவதில்லை நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் அங்கேயே கிடைக்குது.
பதிவர் சந்திப்பையும் விட்டாச்சு அல்வாவும் போயிடுத்து...நமக்கு கொடுத்துவைக்கலை,அவ்வளவு தான்.

said...

வாங்க ஐம்கூல்.

உலகம்பூரா நம்மாளுங்க இருப்பதால் எங்கெபோனாலும் பிரச்சனை இல்லை:-)

ஆராயாம அனுபவிக்கணும் இதையெல்லாம்:-)

said...

வாங்க குமார்.

(அவர் வேணாமுன்னாலும் )பட்டை போட்டது நம்ம கோவியார் கேமெராதான்!!!

said...

நிழற்படங்களா அவை !
நிஜமாகவே நாம் அக்கோவிலில் இருப்பதுபோன்ற
உணர்வை ஏற்படுத்து கின்றன.

படங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே இணைத்து கல்யாணி ராக ஆலாபனையைக்கூட்டி
தொகுத்து ப்பார்த்தேன்.
படங்கள் காபி ரைட்டோ ?
பிகாசோ ஸாரி எனச் சொல்லிவிட்டதே !!!


சுப்பு ரத்தினம்.

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

எல்லாம் நம்ம கெமெராவின் வண்ணம்தான்.

உங்க மெயில் ஐடி அனுப்புங்க.

படங்களை நான் அனுப்பித்தரேன்.

சீனுவின் படங்களும் அந்தக் கோயிலும் எக்கச்சக்கமாப் புடிச்சுவச்சுருக்கேன். தூண்தூணாவும் இருக்கு:-)

said...

//பதிவுன்னு சொல்லப்படாதாம். இடுகையாம்//

Forgot :-)

said...

மிஷன் ஃபெயில்ட்(-:

இப்படி டீச்சரை ஃபெயில் ஆக்கலமா சுப்பு ரத்தினம்?

ரெண்டு டெஸ்ட் மெயில் அனுப்பினேன்.

said...

//சின்ன அளவுலே ஆரம்பிச்சாலும் சரி. நல்லவைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்ட நாமெல்லாம் இருக்கோமுன்னும், அவர் நோக்கம் வெற்றியடையுமுன்னும் வாழ்த்தினோம். ஆசி வழங்கியது பதிவானந்தமயி. எல்லாம் நல்லபடி நடக்கும். கவலை ஏன்?//

சரியாகச் சொல்லி இருக்கிங்க. (நான் குயிஸ் நடத்தல). நீங்க சொல்வது தான் எனக்கும் தோணுது !

said...

வாங்க கிரி.

மறக்கூடாதக் குறிப்புகள்ன்னு இதை எழுதி வச்சுக்கணும்:-))))

said...

வாங்க கோவியாரே.

வழி மொழிதல்ன்னா இதுதானே?:-))))