Friday, July 03, 2009

முறுக்கு மீசையும் மசால் வடையும்!!..........(2009 பயணம் : பகுதி 39)

என்ன விசேஷம் இவ்வளவு கூட்டம் மேயுது? அதுவும் கரை வேட்டிகளா, இந்த நேரத்தில்? பீச் ரோடில் போய்க்கிட்டு இருக்கோம். எல்லாம் உள்ளூர்தான். சிடி செண்டர்ன்னு ஒன்னு இருக்காமே. அதைப் பார்க்காம இருந்தால் என் ஜென்மம் சாபல்யமடைவது எப்படி?

அம்மா உண்ணாவிரதம் (நாலு மணி நேரத்துக்கும் கூடுதலாக) இருக்காங்களாம். பீச் ரோடு முழுக்க பேனர்களும் அடிபொடிகளின் கூட்டங்களும் 'ஜெ ஜெ' ன்னு இருக்கு. இங்கே அங்கேன்னு 'காவல்' கை காமிச்சதுலே நாங்க பாசாதிக்குப் பக்கம் வந்துருந்தோம். கண்டுக்கிட்டுப் போயிறலாமுன்னு கோயிலுக்குள்ளே நுழைஞ்சோம். விசேஷ சீட்டெல்லாம் வேணாமுன்னு அண்ணி பரபரன்னு பொதுவழியில் நுழைஞ்சுட்டாங்க. நானும் காசு கொடுக்காமப் பார்த்தேன்னு கேஆரெஸ் கிட்டேச் சொல்லிக்கலாமுன்னு பின் தொடர்ந்தேன். சாமி முன் திரை போட்டுப் உச்சிக் கால பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. வளைஞ்சு போகும் கம்பி வரிசைகளுக்கிடையில் காத்து நிக்கறோம்.

திடீர்ன்னு நமக்கு முன்னால் இருந்த நாலைஞ்சுபேர் வரிசையை விட்டு விலகி வெளியே போனதால் நமக்குக் கொஞ்சம் முன்னேறும் வாய்ப்பு கிடைச்சது. சரியாப் படிக்கட்டில் இருக்கோம். இனி வலது பக்கம் இருக்கும் ராமர், ரங்கநாதன் சன்னிதிகளைக் கடந்து வலப்பக்கம் திரும்பினால்தான் மீசைக்காரனைத் தரிசிக்க முடியும்.

தரிசனத்துக்குக் காத்திருக்கும்போது மனசுக்குள் ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தாலும் கண் பரபரன்னு அலையுது. திருடர்கள் இருக்காங்களாம் கவனமா இருங்கோன்னு எழுதிப்போட்டுருக்கு அங்கங்கே. பட்டர்களைச் சொல்லலைன்னு நம்புவோம். உள்ளூர் வாசிகள் சில வயசான பெண்கள் கண்களில் வெறுமையோடு காத்திருப்பதையும் பார்த்தேன். அவரவருக்கு அவரவர் கவலை. ஆனாலும் இப்படிப் புகழ்பெற்ற கோவில்களுக்குப் பக்கத்திலே வசிக்கும் உள்ளூர்க்காரர்களை நினைச்சால் எனக்குப் பாவமா இருக்கும். அக்கடான்னு ஒரு நாளாவது ஆற அமர தரிசனம் கிடைக்குமோ என்னவோ? தினம்தினம் டூரிஸ்ட் கூட்டத்தோடு முட்டிமோதி....... ச்சீன்னு ஆகிடாதோ?

நமக்கிடதுபுறத்தில் ஆஞ்சநேயரும், ஆழ்வார்கள் வரிசையும். இந்த பதினொன்னு ப்ளஸ் ஒன்னு ஃபார்முலாவைப் பத்தி அண்ணனிடமும் புலம்புனதைக்கேட்டு நாங்கள் திருவிடந்தை போனப்ப அங்கிருந்த பட்டரிடம் விசாரித்தார். ஆண்டாளுக்கு எப்பவும் தனிச் சந்நிதின்னு அவர் சொன்னாலும் விடாம, அந்த பன்னிரெண்டில் ஆண்டாளும் ஒன்னான்னு கேட்டு, ஆமாம்னு பதில் வந்ததும்தான் என் மனசுக்கு நிம்மதியாச்சு. நாம் ஒரு பொய் சொல்லிட்டோமுன்னு நாளைய சரித்திரத்தில் வந்துறக்கூடாது பாருங்க.:-)

சரேல்னு திரை விலகியது. முட்டைக் கண்ணும் முறுக்கிவிட்ட முரட்டு மீசையுமா கண்ணுக்கு நேராய் மிரட்டும் பார்த்தசாரதி. பளபளன்னு புதுசா பெயிண்ட் அடிச்ச மீசையோ? மின்னுதே இப்படி! நாங்க நின்ன இடம் சரியான இடமாப்போச்சுன்னு நினைக்க நினைக்க, மனசுலே ஒரு பூரிப்பு. வரிசை மெதுவா நகர்ந்துச்சு. நம்ம ராமர் கூட்டத்தையும், ரங்காவையும் சேவிச்சுக்கிட்டு மூலவரை நோக்கிப் போனோம். தீர்த்தம் கிடைச்சது. எனக்கொரு தேங்காய் மூடியும் துளசியும்.

'தட்டுலே எவ்வளவு போட்டே?' அண்ணியின் மிரட்டல்:-)

"பைக்குள் கைவிட்டப்ப அம்பது வந்துச்சு. அதைத்தான்..............."

"அதானே பார்த்தேன்"

கோயிலை வலம் வந்தோம். பழமையான கோவில் 1200 வருசத்துக்கு முந்தி எப்பவோ கட்டியிருக்காங்க. அப்பெல்லாம் இங்கே துளசிவனம்தான். ப்ருந்தாரண்ய ஸ்தலமாம். ஸ்வாமி, சாமியா நிக்காம ஆசாமியா நிக்கும் கோவில் இது. நம்மளில் ஒருத்தர் என்ற சுவாதீனம் வந்துரும் இவர் முகம் பார்க்கும்போது. எட்டடி உயரம். சங்கு சக்கரம் எல்லாம் மிஸ்ஸிங். பாரதப்போரில் பார்த்தனுக்குச் சாரத்யம் செஞ்ச கையோட இங்கே வந்துட்டார் எம் பெருமாள். ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கக்கூட நேரமில்லை(-: அந்த 108 இல் இதுவும் ஒன்னுன்னாலும் பெருசாப் பிரமாண்டமா இல்லாமச் சுமாரான அளவுலேதான் இருக்கு. ஒருவேளைக் கோவிலைச் சுத்தி நெருக்கமா வீடுகள் இருப்பதால் அப்படித் தோணுச்சா? அல்லிக்குளம் எதுத்தாப்புலே அந்தப் பக்கம் கம்பி வேலியுடன். ரெண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் கோவிலின் முன்வாசல் மண்டபம். இதுக்கும் கம்பிக் கட்டங்கள் போட்டுவச்சுருக்கு. சும்மா விட்டால் சோம்பேறிகள் கூட்டம் வந்துருதாம்.

மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்ப வேலைகள். அசோகவனத்தில் மரத்தடியில் அமர்ந்துள்ள சீதை, இன்னொரு தூணில் வெண்ணெயை ஈஷிண்டிருக்கும் ஆஞ்ச நேயர் இப்படி விதம் விதமாய். நம்ம ஜனங்களும் கவனமாப் பார்த்துத் தனக்கு வேண்டிவர்களைக் கொண்டாடிக்குவாங்க.

இதுவரை கணக்கில்லாத முறை போயாச்சு. ஆனாலும் இந்த வேங்கட கிருஷ்ணனைத்தவிர ருக்மிணியையோ பலராமரையோ பார்க்கவே இல்லை. கோவில் காலண்டரில் பார்த்ததோடு சரி. ஆஜானுபாகுவா நிற்பவரைக் கவனிப்பதிலேயே அங்கே நிக்கும் ரெண்டு நிமிஷம் போயிருது. சதா ஜனக்கூட்டம்தான். முட்டிமோதிப் பார்க்கத் தோணறதில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டுமுன்னு விட்டுவச்சுருக்கேன். அனிருத்தனும் ப்ரத்யும்னனும்கூட இருக்காங்களாம் உள்ளே. இருக்கட்டுமே.......யார் வேணாமுன்னா?

தாயார் பெயர் வேதவல்லி. வழக்கம்போல் வலப்புறம் தனிச் சந்நிதியில். இடதுபக்கம் தனிச் சந்நிதி நம்ம ஆண்டாளம்மாவுக்கு. மூலவர் இருக்கும் கருவறைக்கு நேராப் பின்பக்கத்தில் நரசிம்மர். உக்ர நரசிம்ஹமாம். அழகான சிங்கர்..அங்கேயும் தீர்த்தம் சடாரி எல்லாம் கிடைச்சது இன்னிக்கு. நேர் எதிரே இன்னொரு வாசல். யானை இருக்கான்னு எட்டிப் பார்த்தேன். ஊஹூம்(-:

யானைக்கு அருளியவராக கஜேந்திர வரதராஜர் தனிச் சந்நிதியில் இருக்கார். இந்தக் கோவில் யானைதான் நம்ம முண்டாசுவைத் தூக்கி வீசியதாம். அந்த யானைக்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கக்கூடாதா? ஹூம்.... அது ஆச்சு எம்பளத்தெட்டு வருஷங்கள் முந்தி.

வைணவக் கோயில்களுக்குரிய எல்லாம் இங்கேயும் அழகா அம்சமா இருக்கு. மார்கழி மாசம் பூராவும் மூலவர் எண்ணெய்க் காப்பில் இருப்பார். அப்போ அவரைத் தரிசிக்க முடியாது. அதானே நியாயமும், இல்லையா? ஆம்பளை எண்ணெய் தேய்ச்சிண்டு நின்னுருந்தால் எட்டிப் பார்ப்பதா?....ச்சீச்சீ......

மடப்பள்ளி அருகே பிரஸாதக் கடை. புளியோதரையும், மைசூர் பாகும், அதிரசமும் வாங்கினோம். என்னதான் இந்தப் புளியோதரையைப் பற்றி 'தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ' தாளிச்சிருந்தாலும் திங்கத் தைரியம் வரலை எனக்கு. அண்ணனும் அண்ணியும், 'பேஷ் பேஷ்'னு பாராட்டுனாங்க. ஆனா எனெக்கென்னமோ அந்த அதிரஸம் சூப்பரா இருந்துச்சு. இப்பத்தான் செஞ்சு வந்து, இன்னும் இளம்சூட்டோடு வாயில் போட்டதும் கரைஞ்சது. இன்னும் வாங்கிக்கோன்னு அண்ணன் சொல்லியும், பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்கத் தவறினேன். ஞானம் வந்து ரொம்ப நாளாச்சு. 'ஆசையே 'துன்பத்திற்குக்' காரணம்.

திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் பேயாழ்வார் என்று மூவரால் மங்களசாஸனம் செய்யப்பட்டத் திருக்கோவில் இது. பிரிட்டிஷ்காரன் முதல்முதலில் சென்னைப்பட்டினத்துக்கு வந்து, அப்போதிருந்த நவாபிடம் லீஸ் எடுத்து வாங்கின குக்கிராமம் இந்தத் திருவல்லிக்கேணிதானாம். கோவிலைப் பார்த்து என்ன நினைச்சானோ!!!

பதிவர் சந்திப்பு நடந்த அதே ஃபுட் கோர்ட் ஆஃப் சிட்டி செண்டர். சுத்திப் பார்த்தால் சாப்பாடு அயிட்டங்கள் ஒன்னும் சரிப்படலை. வந்ததுக்குக் கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யலாமுன்னு பலது பார்த்துட்டு, மகளுக்கு ஒரு பரிசுப் பொருள் வாங்கினேன். ஒரு இடத்தில் புர்க்கா வித்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னு வாங்கிக்கணுமுன்னு ஆசை. ஆயிரத்து ஐநூறுலே இருந்து அஞ்சாயிரம்வரை வகைவகையா இருக்காம். விசாரிச்சதோடு சரி.

வம்பு வேணாமுன்னு சரவணபவன் (ராதாகிருஷ்ணன் சாலை) போய்ப் பகலுணவை மூணு மணிக்கு முடிச்சுட்டு வெளியே வரும்போது வெளியே வாசலில் சமைக்கும் அறிகுறிகள். என்னன்னு பார்த்தால் வடை(யாம்). சாயங்காலம் டிஃபனுக்கு ரெடியாகுதாம். அசுவாரசியமா என்ன வடைன்னு கேட்டுவச்சேன். பாவி..... மசால்வடைன்னு பதில் வருது. பத்து நிமிஷம் காத்திருந்து, சுடச்சுடச் செஞ்சு கொடுத்ததை பார்ஸல் வாங்கிக்கிட்டு வீடுவந்தோம்.

போன ஜென்மத்துலே எலியா இருந்திருப்பேனோ? வடை வாசம் மூக்கைத் துளைக்குதே:-)

தொடரும்.....:-)

பி.கு: கெமெராவின் சார்ஜர் காணாமப்போயிருச்சுன்னு தேடல்.அதனால் கெமெராவைக் கொண்டு போகலை. படங்கள் மிஸ்ஸிங் ஆன பதிவு இது(-:
சுட்டவை ரெண்டு மட்டுமே:-)

35 comments:

said...

//பைக்குள் கைவிட்டப்ப அம்பது வந்துச்சு. அதைத்தான்//

said...

//பைக்குள் கைவிட்டப்ப அம்பது வந்துச்சு. அதைத்தான்//

என்ன உங்க அண்ணி, ஐம்பது ரூபாயா ஐம்பது காசான்னு கேக்காம விட்டுட்டாங்களே :)

said...

எண்ணைத் தேய்த்துக் கொள்வதைப் பார்க்கக் கூடாது குளிக்கிறதைப் பார்க்கலாமா ? ஐ மீன் அபிஷேகம் !
:)

********

கையில மசால் வடை வரும் வழியில் வாங்கியது தான். தமிழ்மணத்தைத் திறந்தால் உங்கள் பதிவின் தலைப்பிலும் அதுவே.

இன்னிக்கு உங்கப் பதிவைத்தான் முதல் பதிவாகப் படிக்கத் தொடங்கினேன்.

பார்த்தசாரதியைப் பார்த்திட்டிங்கம் நம்ம கபாலியையும் கண்டு கொண்டுவாங்க.

said...

பாசாதியைப் பார்த்துட்டு,

ஆண்டாளை விட்டுட்டீங்களா.

சிங்கருக்கு அந்தப் பக்கம் அழகா அளவாப் புடவை கட்டி யாராவது வரமாட்டாங்களான்னு காத்துக்கிட்டு இருப்பாங்களே.
அவங்களைச் சேவிக்கணும்னா பட்டரைக் கையோட இழுத்துக் கொண்டு போகணும்:))

சிலசமயம் தனியா இருக்கியேம்மான்னு கேட்கத்தோன்றும்.
நான் இங்க எங்க இருக்கேன், என்னிக்கோ அவனோடக் கலந்தாச்சுன்னும் சொல்லுவாங்க.!!!

மசால் வடை வேற. ம்ம்ம்:)

said...

ஒரு ஒரு புண்ணிய க்ஷேத்ரமா ப் பார்க்க கொடுக்கறீங்க. ரொம்ப தான்க்ஸ்பா.
பாசாதியை நிம்மதியாப் பாக்கணும்னா செவ்வாய் புதன் சாயந்திரம் அஞ்சுமணிக்குப் போகலாம். வெள்ளிசனி ஞாயிறு

கூட்டம்தான்.

said...

மதுரையில் என் சித்திப்பிள்ளைங்க மாசிவீதியிலிருந்துகிட்டு ..எப்படிம்மா இந்தக் கூட்டத்துல மீனாட்சியப் பார்ப்பீங்கன்னா..

அதுக்கெல்லாம் டைம் எங்களுக்குத்தெரியும்ன்னு ...ரெண்டு சாய்ஸ் வச்சிருக்காங்க... ராத்திரி 9.30 க்கு சரியா பாக்கலாமாம்..

said...

வாங்க சின்ன அம்மிணி.

அம்பது பைசா கொடுத்தால் கோவில் வாசலில் இருக்கும் இரந்துண்பவர்கள் கூட நம்ம மூஞ்சியிலேயே திருப்பி எறிஞ்சுருவாங்க.

அப்படி இருக்கத் தேங்காய் மூடி கிடைக்குமா?

அழுகலா இருந்தால் ஒருவேளை, அம்பது பைசாவுக்குக் கிடைக்குமாயிருக்கும்:-)

இப்பெல்லாம் கோவில் தட்டுகளில் சில்லரை போடணுமுன்னா, அது பத்து ரூபாய் நோட்டா இருக்கணும். பத்து ஒத்தை ரூபாயைப் போட்டாலும் ஒரு லுக் கிடைக்கும் பாருங்க....சீச்சீ:-)

said...

வாங்க கோவியாரே.
அபிஷேகத்துலே கூடவே தேவிகளும் உண்டு. எல்லாரும் உடுப்பு அணிஞ்சே நீராடுவாங்க. ஸோ நோ ப்ராப்ஸ்:-)

கபாலி அண்ணாத்தையையும் கண்டுக்காம இருப்பேனா?

மசால் வடை பார்த்ததும் என்னை நினைக்க வேணாம்!

said...

வாங்க வல்லி.

ஆண்டாளம்மாவைப் பார்க்காம வந்ததா சரித்திரமே இல்லை. பாவம் பொண்ணு.

முக்கால்வாசி நேரங்களில் கம்பிச்சிறைகளுக்குள்தான். ஆனால் அலங்காரம் மட்டும் திவ்யமா இருக்கும்.

கோயில் (நிம்மதி)நேரம் சொன்னதுக்கு நன்றிப்பா. திங்களும் வியாழனும் விடுமுறையா?

said...

வாங்க கயலு.

ராத்திரிக்கு போகணுமுன்னா எல்லாராலேயும் முடியுமா?

ஓ....புரிஞ்சு போச்சு அதுதான் டிவி சீரியல்கள் வரும் நேரம். இல்லே?:-)))

said...

தமிழ் எழத‌ க‌த்துகிட்டு தான் பின்னுட்ட‌ம் போட‌னும்னு இவ்வ‌ள‌வு நாளா அமைதியா இருந்தேன்

//பளபளன்னு புதுசா பெயிண்ட் அடிச்ச மீசையோ? மின்னுதே இப்படி! //

ப‌ச்சை க‌ற்பூர‌ம் அது.

//"பைக்குள் கைவிட்டப்ப அம்பது வந்துச்சு. அதைத்தான்..............."

"அதானே பார்த்தேன்"//

வ‌ருந்துகிறேன்!

அப்போ எங்க‌ தாத்தா தான் கோயில் முழுக்க‌ ப‌ராம‌ரிச்சுட்டு இருந்தார். அன‌ந்த‌ ப‌ட்டாச்சாரியார்ன்னு பேரு. நெமிலி ங்கர‌ கிராமத்தல‌ நில‌ம் இருந்ததால‌ கோவிலை சரியா பாத்துக்க‌ முடியலை, உத‌விக்காக‌ தூர‌த்து சொந்த‌கார‌ங்களை, மாச‌த்துக்கு 22 நாள் பார்துக்க‌ சொன்னார். மீதி 8 நாள் இவ‌ர் வ‌ந்து க‌ணக்கு பார்க்க‌ற‌தா முடிவு. அப்ப‌ர‌ம் அதுவே நடைமுறை ஆயிடுச்சு. இப்போ எங்க‌ பெரிய‌ப்ப‌, அப்பா, அப்ப‌ர‌ம் சொந்த்கார‌ங்க‌ 8 நாள் பார்த்துகராங்க‌. இதுக்கு சின்ன‌ முறைன்னு பேர், மீதி நாள் பார்த்துக‌ர‌வ‌ங்க‌ பெரிய‌ முறை கார‌ங்க‌. நிறையா ச‌ண்டை வ‌ரும், காசு வற்ர‌ இட‌ம் பாருங்க அதான்.

எங்க‌ அப்ப‌க்கு, அவ்வ‌ள‌வா அந்த‌ காசு சாம‌ர்த்தியம் போதாது.இத‌னாலேயே நிறைய‌ ச‌ண்டை வ‌ரும். போக‌ வேண்டாம்னு சொன்னாலும் கேக்க‌ மாட்டார். சிங்கை வ‌ந்த‌ கோயில் போக‌ முடியாதுன்னு (க‌ட‌ல் கட‌ந்தா என்னவோ!) வ‌ர‌வே இல்லை, அம்மா ம‌ட்டும்தான் வ‌ந்தாங்க‌

இவ‌ங்க‌ ப‌ண்ர‌ லூட்டி எல்லால் பார்த்துட்டு தான் முடிவு ப‌ண்ணினேன், கோயில் போனால் சாமி கும்பிட‌ ம‌ட்டும்தான்னு.

said...

டீச்சர் பதிவு சூப்பர்னா...பின்னூட்டம் கூட...வடையும் சாம்பார் மாதிரி ஆயிடுத்து...

அப்ப இனியும் நிறைய அம்பதுக்கு செலவு இருக்குனு சொல்லுங்கோ டீச்சர்.

said...

108-ல் கொஞ்சத்தை இந்தப்பயணத்தில் தேத்திட்டீங்க. எங்களுக்கும் பார்க்க கொடுத்து வச்சது. நன்றி.
//போன ஜென்மத்துலே எலியா இருந்திருப்பேனோ? வடை வாசம் மூக்கைத் துளைக்குதே//
எங்களுக்கும் அதுதான் சந்தேகம்:-00
//பத்து ஒத்தை ரூபாயைப் போட்டாலும் ஒரு லுக் கிடைக்கும் பாருங்க....சீச்சீ:-)//
கோவில்ல மட்டுமில்ல இரந்துண்பவர்களும்கூட அப்படித்தான் லுக் விடறாங்க.(எல்லோருமே நோட்டாத்தான் போடறாங்கன்னு சிபாரிசு வேற):-)). ஒரு படத்தில்கூட கவுண்டரும் மதன்பாப்பும் இதை நகைச்சுவையாக சொல்லியிருப்பாங்க.

said...

சாரி துளசிமா.
ஆமாம் கம்பிக்குள்ளதான் இருப்பாங்க .

அதென்னவோ செவ்வாய் புதன் கூட்டம் இருக்கறது இல்ல.
திங்கள் வியாழன் பத்தித் தெரியாது.

இந்த விவரம் பக்கத்துத் தெருவில குடியிருக்கிற சம்பந்தி உபயம்:)
அவங்க தினம் சாரதியைப் பார்க்கப் போறவங்க.

said...

ஒரே ஒருமுறை போயிருக்கேன். ரொம்ப எல்லாம் சுத்தியது இல்லை டீச்சசர்..உங்க புண்ணியத்துல இனி போனால் நீங்க சொல்லியது எல்ல்லாம் ஞாபகத்துல வரும் ;)

வடை..ம்ம்ம்...நடத்துங்க ;))

வாழ்த்துக்களுக்கு நன்றி டீச்சர். ;)

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

தமிழ் எழுத ஜோரா வந்துருச்சே. அதுக்கான இனிய பாராட்டுகள்.

கோவில் விஷயங்கள் மனசுக்குக் கவலைதான் தருது.

பணத்தால் தொந்திரவுதான் அதிகம்(-:

ஆமாம். பச்சைக் கற்பூரம் எப்படி பளபள?

கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். பலருக்கும் பயனாக இருக்கும்.

said...

வாங்க சிந்து.

அம்பது என்னப்பா பெருசா? அங்கங்கே பாருங்க நாலரைக்கிலோ தங்கம் எல்லாம் உண்டியலில் போடுறாங்க.

சாமியை வெறுங்கையாப் பார்க்க ஒரு மனசுக் கூச்சம்தான். எல்லாம் அவர் கொடை என்றாலும் தரிசனத்துக்கு வெறுங்கையாப்போனா மரியாதை இல்லையே(-:

said...

வாங்க ஐம்கூல்.

அதெப்படீன்னா.... நானே நினைக்காத வகையில் 108 இல் கொஞ்சம் இந்தமுறை தரிசிக்கக் கிடைச்சது. மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு.

இதன் பலனை உலகமக்கள் எல்லாரோடும் பகிர்ந்துக்கறேன்.

said...

ஆஹா.....
வல்லி உங்க சம்பந்தி தினம் சாரதியைச் சேவிக்கிறாரா!!!

கொடுத்து வச்சவர்.

said...

வாங்க கோபி.

புண்ணியத்தைப் பங்கு போட்டாச்சு:-)

said...

//சிடி செண்டர்ன்னு ஒன்னு இருக்காமே. அதைப் பார்க்காம இருந்தால் என் ஜென்மம் சாபல்யமடைவது எப்படி?//

அதானே! நான் வந்தா பதிவர்களோடு கும்மி அடிப்பது அங்கிட்டு தானே? :)

//. நானும் காசு கொடுக்காமப் பார்த்தேன்னு கேஆரெஸ் கிட்டேச் சொல்லிக்கலாமுன்னு பின் தொடர்ந்தேன்//

ஆகா!
பார்த்தசாரதியும் வேங்கடகிருஷ்ணனுமான அவனைப் பார்க்கும் போதா டீச்சருக்கு என் ஞாபகம் வரவேண்டும்? :)

said...

//ஆமாம். பச்சைக் கற்பூரம் எப்படி பளபள?
கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். பலருக்கும் பயனாக இருக்கும்//

எங்காளு மீசை மேல ஓங்களுக்கு இப்படி ஒரு கண்ணா? :))

பார்த்தனுக்குத் தேரோட்டும் சாரதியான கண்ணன், சும்மானா சாரதியாக மட்டும் இல்லாமல், ஒரு தோரோட்டி எப்படியெல்லாம் இருப்பானோ, அப்படி எல்லாம் இருந்தான்! குதிரையைக் குளிப்பாட்டுவது, புல்லு பிடுங்கிப் போடுவது, கொள்ளு கலந்து வைப்பது, சேணம் ஏற்றுவது-ன்னு தன்னிலைக்கு கீழான வேலைகளையும் செய்யக் கூச்சப்படவே இல்லை!

பொறுப்பை எடுத்துக் கொண்ட பின்னால், அதில் ரொம்ப "தான்"-ன்னு கலக்காமல், பொறுப்பை மட்டும் முடித்துக் கொடுத்த அடியார்க்கு மெய்யன்! அதான் ரதசாரதிகள் போலவே அவர்கள் குல வழக்கப்படி மீசை, தலைப்பாகை, கையில் கோல் எல்லாமே உண்டு!

அல்லிக்கேணியில் எம்பெருமானுக்கும் அதான் மீசையைக் காட்டுகிறார்கள்! கருஞ்சிலையில் தெரியாது என்பதால், வெள்ளைப் பொடி மின்னும் மீசை!

பச்சைக் கர்ப்பூரம், கொஞ்சம் திருமண், துளசிச் சாறு, ஏலம்/சாதிக்காய் என்று அத்தனையும் பொடித்து, கொஞ்சமா நீரால் கெட்டியாக்கி இடப்படுவதால் அந்தப் பளபள! :))
பச்சைக் கர்ப்பூரம் பார்க்க வெள்ளையா இருக்கும்! உடைச்சா உள்ளே பளபள தான்!

said...

வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை, விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை, நந்தனார் களிற்றை, குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை, அமுதை, என்னை ஆளுடை அப்பனை, ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் "திரு அல்லிக்கேணி கண்டேனே"!

- திருமங்கையின் திருவல்லிகேணி பாசுரம்

said...

//புளியோதரையைப் பற்றி 'தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ' தாளிச்சிருந்தாலும் திங்கத் தைரியம் வரலை எனக்கு. அண்ணனும் அண்ணியும், 'பேஷ் பேஷ்'னு பாராட்டுனாங்க. ஆனா எனெக்கென்னமோ அந்த அதிரஸம் சூப்பரா இருந்துச்சு. இப்பத்தான் செஞ்சு வந்து, இன்னும் இளம்சூட்டோடு வாயில் போட்டதும் கரைஞ்சது//

வாவ்! வாவ்! வாவ்!
கண்டிப்பா திருவல்லிக்கேணி அதிரசம் சுவையோ சுவை தான்! எல்லா நேரமும் கெடைக்காது! சீக்கிரம் தீர்ந்துரும்!
அதிரசத்தை தையல் இலை-ல கட்டித் தருவாங்க பாருங்க! அந்த இலையே அதிரசம் வாசம் வீசும்! நல்ல மொறுமொறு அதிரசம்! அந்தத் தித்திப்பு அடங்க, கூடவே ஒரு கடி மிளகு வடை! :)

கிறு கிறு அதிரசம் நாவில் கரைய
சுறு சுறு மிளகு வடையும் நொறுக்க
அதி ரசமான அதிரசம் தன்னைத்
அணி திருவல்லிக் கேணி கண்டேனே! :))

said...

வெண்ணை திருடிய வாயினை = என்
உள்ளம் கவர்ந்த கள்வனை
வல்லித் திரு மேனியனை
வா வாவென அழைத்தொரு கணம்
உள்ளத்தில் நிறுத்திவிட்டால்,
திருடன் எங்கிருந்தாலும் அவனை
கருடன் போல் கொத்திடுவான்.
அருள் வேண்டின்
மருள் வேண்டாம்.

மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com
r u now at chennai? We are so near near but not able to reach each other.

said...

/// கிறு கிறு அதிரசம் நாவில் கரைய
சுறு சுறு மிளகு வடையும் நொறுக்க
அதி ரசமான அதிரசம் தன்னைத்
அணி திருவல்லிக் கேணி கண்டேனே! :))//

அடடா!! அதிரசத்தையும் மிளகு வடையையும் சுவைக்க‌
இப்போதே திருவல்லிக்கேணி கிளம்பிவிட்டேன்.

கேஆர் எஸ் இங்கே கிளம்பி வரவும். வடை சுவைத்துக்கொண்டே
உங்கள் பாட்டையும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=rkIEhR5YQVo

பக்கத்தில் துளசி அம்மா சென்னையில்தான் இருக்காகளா ?

சுப்பு தாத்தா
வளசரவாக்கம், சென்னை

said...

படிச்ச எல்லாத்தையும் நாம் இப்ப மறந்திட்டேன். வடையை ஞாபகப்படுத்தீட்டீங்க..  சாப்பிடனும்போல இருக்கு :-)

said...

//போன ஜென்மத்துலே எலியா இருந்திருப்பேனோ?//

வைத்தீஸ்வரன்கோயிலில் ஏடு பாத்தீங்களா?

said...

வாங்க கே ஆர் எஸ்.

பதிவர்களால் ஒரே சல்லியம்தான். எங்கே போனாலும் எதைப் பார்த்தாலும் அதுக்குச் சம்பந்தமுள்ளவர் ( அப்டின்னு நாம் நினைச்சுக்கிட்டு இருப்போம்) ஞாபகம் வந்து தொலைச்சுருது:-)

ஆமாம். அது என்ன எங்காளு? நீங்கெல்லாம் பொறக்குமுந்தி இருந்தே அவர் நம்மாளுப்பா:-)

அட! அது பச்சை மேஜிக்கா? வெங்கடநாராயணா ரோடிலும் பெருமாளுக்கு மலர்க்கிரீடத்துக்கீழே ப்ளாஸ்டிக் அட்டைபோல் நாமம் இருந்ததைப் பார்த்தேன். அந்த அட்டையும் க்ரீடத்தோடு இணைஞ்சு தொங்கலா இருந்தது.

அதுவும் இதே மேஜிக் தானோ?

திருமங்கை பெருமாளைப் பாடினார்ன்னா நீங்க அதிரசத்தைப் பாடியாச்சு.
'ரெண்டுமே இனிப்பு'ன்றதால் பிரச்சனை இல்லை:-))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

கொஞ்சநாள் சென்னைதான்:-)

இன்னும் கோவில்கள் பாக்கி இருக்கே!

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

அதென்ன வெறும் 67க்கே தாத்தா பாட்டின்னு சொல்லிக்கிட்டு??????

அல்லிக்கேணியில்
அதிரசம்
கிடைத்ததா?

இந்த அதிரசத்தோட மகிமையே மகிமை. இப்படி எல்லாரையும் 'கவி' ஆக்கிருச்சே:-))))

said...

வாங்க உழவன்.

வடை கிடைக்காத ஊரிலா இருக்கீங்க?

வடை தின்னாத சிறு பொழுதில்தான் பதிவைப் படிக்கணுமுன்னு ஒரு ஏற்பாடு செஞ்சுக்கலாமா?

said...

வாங்க நானானி.

ஏடு பார்த்துருக்கலாம்தான் கோபால் கூட இல்லாம இருந்துருந்தால்...

நான் அவரிடம் போன ஜென்மத்தில் நான் மான் என்று பீத்திக்கிட்டு இருக்கேன். ஏடு பார்த்து நான் கழுதைன்னோ கழுதைப்புலின்னோ ஒருவேளை சொல்லிட்டாங்கன்னா?
அதான்:-))))

said...

பார்த்தசாரதி பத்தி இப்போதான் உங்க பதிவு பார்த்தேன் .
எனக்கு பார்த்தசாரதி, என் அப்பாவின் ஞாபகம் . சிறு வயதில் என் அப்பா வோடு newyear க்கு போவோம் ஒரே கூட்டம் . சாரதியின் அந்த உயரம் என் அப்பாவை பார்ப்பது போலவா அல்லது அவரோடு சென்ற ஞாபகமோ தெரில, மனசு ரொம்ப கஷ்ட்டப்படும் போது அங்க போய்டுவேன் . என்னமோ அப்பாவோடு இருந்த ஆறுதலா .... கூட்டம் இல்லாத நேரம் கோவில் ரொம்ப நல்லா இருக்கும் மீசையின் பளபளப்பு பெயிண்ட் என்று நினைத்தேன் (என்ன ஒரு அறியாமை என்று வெட்கினேன் ) இப்போ தெரிஞ்சுடுச்சு ,நன்றிகள் உங்களுக்கும் KRS அவர்களுக்கும் .

என் அப்பாவிற்கும் புளியோதரை ரொம்ப பிடிக்கும்.(மசால்வடையும் )எனக்கும் தான் என் மகள்களுக்கும் . ஆனால் என் கணவருக்கு உங்களைபோல அதிரசம் தான் .

என்னமோ இந்தபதிவை படித்ததும் மனசு பழைய நினைவுகளுக்கு போய்டுச்சு .

said...

பார்த்தசாரதி பத்தி இப்போதான் உங்க பதிவு பார்த்தேன் .
எனக்கு பார்த்தசாரதி, என் அப்பாவின் ஞாபகம் . சிறு வயதில் என் அப்பா வோடு newyear க்கு போவோம் ஒரே கூட்டம் . சாரதியின் அந்த உயரம் என் அப்பாவை பார்ப்பது போலவா அல்லது அவரோடு சென்ற ஞாபகமோ தெரில மனசு ரொம்ப கஷ்ட்டப்படும் போது அங்க போய்டுவேன் . என்னமோ அப்பாவோடு இருந்த ஆறுதலா .... கூட்டம் இல்லாத நேரம் கோவில் ரொம்ப நல்லா இருக்கும் மீசையின் பளபளப்பு பெயிண்ட் என்று நினைத்தேன் (என்ன ஒரு அறியாமை என்று வெட்கினேன் ) இப்போ தெரிஞ்சுடுச்சு ,நன்றிகள் உங்களுக்கும் KRS அவர்களுக்கும் .

என் அப்பாவிற்கும் புளியோதரை ரொம்ப பிடிக்கும்.(மசால்வடையும் )எனக்கும் தான் என் மகள்களுக்கும் . ஆனால் என் கணவருக்கு உங்களைபோல அதிரசம் தான் .

என்னமோ இந்தபதிவை படித்ததும் மனசு பழைய நினைவுகளுக்கு போய்டுச்சு .