Showing posts with label பார்த்தசாரதி. Show all posts
Showing posts with label பார்த்தசாரதி. Show all posts

Friday, July 03, 2009

முறுக்கு மீசையும் மசால் வடையும்!!..........(2009 பயணம் : பகுதி 39)

என்ன விசேஷம் இவ்வளவு கூட்டம் மேயுது? அதுவும் கரை வேட்டிகளா, இந்த நேரத்தில்? பீச் ரோடில் போய்க்கிட்டு இருக்கோம். எல்லாம் உள்ளூர்தான். சிடி செண்டர்ன்னு ஒன்னு இருக்காமே. அதைப் பார்க்காம இருந்தால் என் ஜென்மம் சாபல்யமடைவது எப்படி?

அம்மா உண்ணாவிரதம் (நாலு மணி நேரத்துக்கும் கூடுதலாக) இருக்காங்களாம். பீச் ரோடு முழுக்க பேனர்களும் அடிபொடிகளின் கூட்டங்களும் 'ஜெ ஜெ' ன்னு இருக்கு. இங்கே அங்கேன்னு 'காவல்' கை காமிச்சதுலே நாங்க பாசாதிக்குப் பக்கம் வந்துருந்தோம். கண்டுக்கிட்டுப் போயிறலாமுன்னு கோயிலுக்குள்ளே நுழைஞ்சோம். விசேஷ சீட்டெல்லாம் வேணாமுன்னு அண்ணி பரபரன்னு பொதுவழியில் நுழைஞ்சுட்டாங்க. நானும் காசு கொடுக்காமப் பார்த்தேன்னு கேஆரெஸ் கிட்டேச் சொல்லிக்கலாமுன்னு பின் தொடர்ந்தேன். சாமி முன் திரை போட்டுப் உச்சிக் கால பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. வளைஞ்சு போகும் கம்பி வரிசைகளுக்கிடையில் காத்து நிக்கறோம்.

திடீர்ன்னு நமக்கு முன்னால் இருந்த நாலைஞ்சுபேர் வரிசையை விட்டு விலகி வெளியே போனதால் நமக்குக் கொஞ்சம் முன்னேறும் வாய்ப்பு கிடைச்சது. சரியாப் படிக்கட்டில் இருக்கோம். இனி வலது பக்கம் இருக்கும் ராமர், ரங்கநாதன் சன்னிதிகளைக் கடந்து வலப்பக்கம் திரும்பினால்தான் மீசைக்காரனைத் தரிசிக்க முடியும்.

தரிசனத்துக்குக் காத்திருக்கும்போது மனசுக்குள் ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தாலும் கண் பரபரன்னு அலையுது. திருடர்கள் இருக்காங்களாம் கவனமா இருங்கோன்னு எழுதிப்போட்டுருக்கு அங்கங்கே. பட்டர்களைச் சொல்லலைன்னு நம்புவோம். உள்ளூர் வாசிகள் சில வயசான பெண்கள் கண்களில் வெறுமையோடு காத்திருப்பதையும் பார்த்தேன். அவரவருக்கு அவரவர் கவலை. ஆனாலும் இப்படிப் புகழ்பெற்ற கோவில்களுக்குப் பக்கத்திலே வசிக்கும் உள்ளூர்க்காரர்களை நினைச்சால் எனக்குப் பாவமா இருக்கும். அக்கடான்னு ஒரு நாளாவது ஆற அமர தரிசனம் கிடைக்குமோ என்னவோ? தினம்தினம் டூரிஸ்ட் கூட்டத்தோடு முட்டிமோதி....... ச்சீன்னு ஆகிடாதோ?

நமக்கிடதுபுறத்தில் ஆஞ்சநேயரும், ஆழ்வார்கள் வரிசையும். இந்த பதினொன்னு ப்ளஸ் ஒன்னு ஃபார்முலாவைப் பத்தி அண்ணனிடமும் புலம்புனதைக்கேட்டு நாங்கள் திருவிடந்தை போனப்ப அங்கிருந்த பட்டரிடம் விசாரித்தார். ஆண்டாளுக்கு எப்பவும் தனிச் சந்நிதின்னு அவர் சொன்னாலும் விடாம, அந்த பன்னிரெண்டில் ஆண்டாளும் ஒன்னான்னு கேட்டு, ஆமாம்னு பதில் வந்ததும்தான் என் மனசுக்கு நிம்மதியாச்சு. நாம் ஒரு பொய் சொல்லிட்டோமுன்னு நாளைய சரித்திரத்தில் வந்துறக்கூடாது பாருங்க.:-)

சரேல்னு திரை விலகியது. முட்டைக் கண்ணும் முறுக்கிவிட்ட முரட்டு மீசையுமா கண்ணுக்கு நேராய் மிரட்டும் பார்த்தசாரதி. பளபளன்னு புதுசா பெயிண்ட் அடிச்ச மீசையோ? மின்னுதே இப்படி! நாங்க நின்ன இடம் சரியான இடமாப்போச்சுன்னு நினைக்க நினைக்க, மனசுலே ஒரு பூரிப்பு. வரிசை மெதுவா நகர்ந்துச்சு. நம்ம ராமர் கூட்டத்தையும், ரங்காவையும் சேவிச்சுக்கிட்டு மூலவரை நோக்கிப் போனோம். தீர்த்தம் கிடைச்சது. எனக்கொரு தேங்காய் மூடியும் துளசியும்.

'தட்டுலே எவ்வளவு போட்டே?' அண்ணியின் மிரட்டல்:-)

"பைக்குள் கைவிட்டப்ப அம்பது வந்துச்சு. அதைத்தான்..............."

"அதானே பார்த்தேன்"

கோயிலை வலம் வந்தோம். பழமையான கோவில் 1200 வருசத்துக்கு முந்தி எப்பவோ கட்டியிருக்காங்க. அப்பெல்லாம் இங்கே துளசிவனம்தான். ப்ருந்தாரண்ய ஸ்தலமாம். ஸ்வாமி, சாமியா நிக்காம ஆசாமியா நிக்கும் கோவில் இது. நம்மளில் ஒருத்தர் என்ற சுவாதீனம் வந்துரும் இவர் முகம் பார்க்கும்போது. எட்டடி உயரம். சங்கு சக்கரம் எல்லாம் மிஸ்ஸிங். பாரதப்போரில் பார்த்தனுக்குச் சாரத்யம் செஞ்ச கையோட இங்கே வந்துட்டார் எம் பெருமாள். ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கக்கூட நேரமில்லை(-: அந்த 108 இல் இதுவும் ஒன்னுன்னாலும் பெருசாப் பிரமாண்டமா இல்லாமச் சுமாரான அளவுலேதான் இருக்கு. ஒருவேளைக் கோவிலைச் சுத்தி நெருக்கமா வீடுகள் இருப்பதால் அப்படித் தோணுச்சா? அல்லிக்குளம் எதுத்தாப்புலே அந்தப் பக்கம் கம்பி வேலியுடன். ரெண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் கோவிலின் முன்வாசல் மண்டபம். இதுக்கும் கம்பிக் கட்டங்கள் போட்டுவச்சுருக்கு. சும்மா விட்டால் சோம்பேறிகள் கூட்டம் வந்துருதாம்.

மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்ப வேலைகள். அசோகவனத்தில் மரத்தடியில் அமர்ந்துள்ள சீதை, இன்னொரு தூணில் வெண்ணெயை ஈஷிண்டிருக்கும் ஆஞ்ச நேயர் இப்படி விதம் விதமாய். நம்ம ஜனங்களும் கவனமாப் பார்த்துத் தனக்கு வேண்டிவர்களைக் கொண்டாடிக்குவாங்க.

இதுவரை கணக்கில்லாத முறை போயாச்சு. ஆனாலும் இந்த வேங்கட கிருஷ்ணனைத்தவிர ருக்மிணியையோ பலராமரையோ பார்க்கவே இல்லை. கோவில் காலண்டரில் பார்த்ததோடு சரி. ஆஜானுபாகுவா நிற்பவரைக் கவனிப்பதிலேயே அங்கே நிக்கும் ரெண்டு நிமிஷம் போயிருது. சதா ஜனக்கூட்டம்தான். முட்டிமோதிப் பார்க்கத் தோணறதில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டுமுன்னு விட்டுவச்சுருக்கேன். அனிருத்தனும் ப்ரத்யும்னனும்கூட இருக்காங்களாம் உள்ளே. இருக்கட்டுமே.......யார் வேணாமுன்னா?

தாயார் பெயர் வேதவல்லி. வழக்கம்போல் வலப்புறம் தனிச் சந்நிதியில். இடதுபக்கம் தனிச் சந்நிதி நம்ம ஆண்டாளம்மாவுக்கு. மூலவர் இருக்கும் கருவறைக்கு நேராப் பின்பக்கத்தில் நரசிம்மர். உக்ர நரசிம்ஹமாம். அழகான சிங்கர்..அங்கேயும் தீர்த்தம் சடாரி எல்லாம் கிடைச்சது இன்னிக்கு. நேர் எதிரே இன்னொரு வாசல். யானை இருக்கான்னு எட்டிப் பார்த்தேன். ஊஹூம்(-:

யானைக்கு அருளியவராக கஜேந்திர வரதராஜர் தனிச் சந்நிதியில் இருக்கார். இந்தக் கோவில் யானைதான் நம்ம முண்டாசுவைத் தூக்கி வீசியதாம். அந்த யானைக்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி இருக்கக்கூடாதா? ஹூம்.... அது ஆச்சு எம்பளத்தெட்டு வருஷங்கள் முந்தி.

வைணவக் கோயில்களுக்குரிய எல்லாம் இங்கேயும் அழகா அம்சமா இருக்கு. மார்கழி மாசம் பூராவும் மூலவர் எண்ணெய்க் காப்பில் இருப்பார். அப்போ அவரைத் தரிசிக்க முடியாது. அதானே நியாயமும், இல்லையா? ஆம்பளை எண்ணெய் தேய்ச்சிண்டு நின்னுருந்தால் எட்டிப் பார்ப்பதா?....ச்சீச்சீ......

மடப்பள்ளி அருகே பிரஸாதக் கடை. புளியோதரையும், மைசூர் பாகும், அதிரசமும் வாங்கினோம். என்னதான் இந்தப் புளியோதரையைப் பற்றி 'தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ' தாளிச்சிருந்தாலும் திங்கத் தைரியம் வரலை எனக்கு. அண்ணனும் அண்ணியும், 'பேஷ் பேஷ்'னு பாராட்டுனாங்க. ஆனா எனெக்கென்னமோ அந்த அதிரஸம் சூப்பரா இருந்துச்சு. இப்பத்தான் செஞ்சு வந்து, இன்னும் இளம்சூட்டோடு வாயில் போட்டதும் கரைஞ்சது. இன்னும் வாங்கிக்கோன்னு அண்ணன் சொல்லியும், பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்கத் தவறினேன். ஞானம் வந்து ரொம்ப நாளாச்சு. 'ஆசையே 'துன்பத்திற்குக்' காரணம்.

திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் பேயாழ்வார் என்று மூவரால் மங்களசாஸனம் செய்யப்பட்டத் திருக்கோவில் இது. பிரிட்டிஷ்காரன் முதல்முதலில் சென்னைப்பட்டினத்துக்கு வந்து, அப்போதிருந்த நவாபிடம் லீஸ் எடுத்து வாங்கின குக்கிராமம் இந்தத் திருவல்லிக்கேணிதானாம். கோவிலைப் பார்த்து என்ன நினைச்சானோ!!!

பதிவர் சந்திப்பு நடந்த அதே ஃபுட் கோர்ட் ஆஃப் சிட்டி செண்டர். சுத்திப் பார்த்தால் சாப்பாடு அயிட்டங்கள் ஒன்னும் சரிப்படலை. வந்ததுக்குக் கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யலாமுன்னு பலது பார்த்துட்டு, மகளுக்கு ஒரு பரிசுப் பொருள் வாங்கினேன். ஒரு இடத்தில் புர்க்கா வித்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னு வாங்கிக்கணுமுன்னு ஆசை. ஆயிரத்து ஐநூறுலே இருந்து அஞ்சாயிரம்வரை வகைவகையா இருக்காம். விசாரிச்சதோடு சரி.

வம்பு வேணாமுன்னு சரவணபவன் (ராதாகிருஷ்ணன் சாலை) போய்ப் பகலுணவை மூணு மணிக்கு முடிச்சுட்டு வெளியே வரும்போது வெளியே வாசலில் சமைக்கும் அறிகுறிகள். என்னன்னு பார்த்தால் வடை(யாம்). சாயங்காலம் டிஃபனுக்கு ரெடியாகுதாம். அசுவாரசியமா என்ன வடைன்னு கேட்டுவச்சேன். பாவி..... மசால்வடைன்னு பதில் வருது. பத்து நிமிஷம் காத்திருந்து, சுடச்சுடச் செஞ்சு கொடுத்ததை பார்ஸல் வாங்கிக்கிட்டு வீடுவந்தோம்.

போன ஜென்மத்துலே எலியா இருந்திருப்பேனோ? வடை வாசம் மூக்கைத் துளைக்குதே:-)

தொடரும்.....:-)

பி.கு: கெமெராவின் சார்ஜர் காணாமப்போயிருச்சுன்னு தேடல்.அதனால் கெமெராவைக் கொண்டு போகலை. படங்கள் மிஸ்ஸிங் ஆன பதிவு இது(-:
சுட்டவை ரெண்டு மட்டுமே:-)