Tuesday, March 04, 2008

தோழியின் கையால்......

இந்த இரண்டு தோழிகளுக்கும் வயது 70க்கு மேல். நேத்து இரண்டு தோழிகளுமாச் சேர்ந்து பொழுதுபோக்கா எங்கியோ (ஷாப்பிங்/ இன்னொரு தோழியைச் சந்திக்க)போயிட்டுக் காரில் வீடு திரும்பும் நேரம், தோழியை அவர் வீட்டுக்கு முன்புறம் தெருவில் இறக்கிவிட்டுட்டுக் காரை ரிவர்ஸ் எடுத்திருக்கிறார் தோழி.அடுத்த கணம், கீழே நின்றிருந்த தோழி வண்டிக்கடியில்.............
என்ன ஆச்சு? பின்னாலேயே இன்னொரு காரில் வந்துகொண்டிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவி சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில்.......

என்னைப் பார்க்க ஒரு தோழி வர்றேன்னு சொல்லி இருந்தாங்க. வந்துட்டாங்களான்னு பார்க்கத் தற்செயலா ஜன்னலில் பார்த்தப்ப ஒரு வெள்ளைக்கார் வீட்டுக்கு முன்னால் இருந்துச்சு. தோழியின் வண்டி வெள்ளை என்றதால் தெருக்கதவைத் திறந்தால்...சர் சர்ன்னு எதிரும் புதிருமா ரெண்டு தீயணைக்கும் வண்டிங்க வந்து நம்ம வீட்டுமுன்னால் நிக்குதுங்க. இது என்னடான்னு வாசலில் வந்து பார்த்தால் ஏழெட்டு போலீஸ் வண்டிங்க வேற. எதுத்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டைப் பார்த்தபடி ஒரு சின்னக்கும்பல் எங்க வரிசையில். எதுத்த வீட்டின் வேலியோரம் ஒரு நாற்காலியில் கம்பளிப் போர்வையில் ஒரு பாட்டி உக்காந்துருக்காங்க. அவுங்க பக்கத்தில் சிலர். நானும் ஓடினேன்...............

எதிர்ப்புறம் நடைபாதையின் மேலே இடிச்சமாதிரி கோணையா நிக்கும் கார். அதுக்கடியில் சிகப்பு உடுப்புப் போட்ட ஒரு உருவம் தலைக் குப்புறக் கிடக்குது. ஆம்புலன்ஸ் வந்து பக்கத்துலே நின்னுருக்கு. வண்டியை ஜாக்கி வச்சுத் தூக்கிக்கிட்டு இருக்காங்க. ஓரளவு உயர்ந்ததும், கீழே இருப்பவரை மெதுவாப் புரட்டி நிமிர்த்துனாங்க. பெர்ம் செஞ்ச சுருட்டை முடி கறுப்பும் வெளுப்புமாக் கலந்து தெரிஞ்சது. கழுத்துப்பட்டியை மாட்டித் தலையை அசையாம வச்சு அப்படியே ஸ்ட்ரெச்சரில் வச்சு ஆம்புலன்ஸுக்குள்ளே கொண்டு போனாங்க.

விபத்து நடந்த இடத்துக்கு நேர் எதிரே பாலே நடனப்பள்ளி. நேரம் மதியம் மூணரை. பள்ளிக்கூட நேரம் முடிஞ்சுதான் இந்த நடனப்பள்ளிக்குப் பிள்ளைகள் வருவாங்க. கார்கள் சரசரன்னு வர்றதும் போறதுமா இருக்கு. தெருவின் அடுத்த பகுதியில் ஒரு உயர்நிலைப்பள்ளி இருக்கு. இன்னும் கொஞ்சம் இடதுகைப்பக்கம் போனா இன்னொரு ஆரம்பப் பள்ளியும், அதுக்கு எதிர்வரிசையா மெயின் ரோடில் இன்னொரு உயர்நிலைப்பளியும் இருக்கு.
கொஞ்சம் கூடுதலாவே போக்குவரத்து இருக்கும் நேரம் இது.இதுக்குள்ளே போலீஸ் கார்களை தெருவின் குறுக்கே சில இடங்களில் நிறுத்தி வச்சாங்க.என்னைப் பார்க்க வந்த தோழி வந்துட்டாங்க. எங்கே பார்த்தாலும் தலையில் விளக்கோடு மின்னும் போலீஸ் கார்களைப் பார்த்ததும் பயந்துட்டாங்களாம். இதுக்குள்ளே தெருவுக்குள் நுழையும் பாதைகளை மூடியாச்சு. 'போலீஸ் எமர்ஜென்ஸி' னு அச்சடித்த டேப் சுருளை எடுத்து எதுத்த பக்கம் நிக்கும் மின்சாரக் கம்பத்தில் கட்டி மறு முனையை எங்க வீட்டு கேட்டில் இணைச்சாங்க. அதேபோல பாலே நடனப்பள்ளிக்கு அந்தப் பக்கமும் கட்டி முடிச்சாச்சு. இதுக்குள்ளே ஒரு ட்ரக் நிறைய ட்ராஃபிக் கோன்ஸ் கொண்டு வந்து எல்லா இடத்தையும் அடைச்சு வச்சாங்க.
ப்ளெயின் க்ளோத்ஸ் போலீஸ்காரர்கள் இருக்கும் ரெண்டு வண்டியும் வந்தது. போலீஸ் போட்டோக்ராஃபர் பெண்மணி படம் எடுக்க ஆரம்பிச்சாங்க.

சம்பவத்தைப் பார்த்த சாட்சியான பெண்ணிடம் விவரம் எல்லாம் கேட்டு எழுதிக்கிட்டு இருந்தாங்க ஒரு போலீஸ். தெருவின் ரெண்டு முனையிலும் வண்டிகள் தேங்க ஆரம்பிச்சதும் அந்தக் கோன்களை வச்சு சின்னதா ரெண்டு பாதை ஏற்படுத்திட்டு, கோன்கள் வந்த ட்ராஃபிக் மேனேஜ்மெண்ட் வண்டியில் இருந்த எலெக்ட்ரானிக் போர்டுலே அம்புக்குறிகள் வழி காட்டும்படி முடுக்கிவிட்டாங்க. இப்போ சீரா போக்குவரத்து பாதித் தெருவிலேயே போக ஆரம்பிச்சது.
ஆம்புலன்ஸ் இன்னும் போகாம அங்கேயே நிக்குது. அடுத்த வீட்டுக்காரம்மா( ஐலாவோட அம்மா)வும் வாசலில் நின்னாங்க. அவுங்களே ஒரு நர்ஸ் என்றதால்... இன்னும் ஏங்க ஆம்புலன்ஸ் போகலை. என்ன இப்படி டிலே செய்யறாங்கன்னு பதைக்கிறேன். அதுக்கு அவுங்க 'அவ்வளவு சீரியஸ்ஸா இருக்காது. அப்படி இல்லேன்னா அவுங்க இறந்து போயிருப்பாங்க'ன்னு சொல்றாங்க. எனக்கு 'பக்'ன்னு இருந்துச்சு.நடுக்கத்தோடு உக்கார்ந்திருந்த பாட்டியை போலீஸ் மெதுவாத் தாங்கிப்பிடிச்சுப் பாலே பள்ளிக்குள்ளே கொண்டு போய் உக்காரவச்சாங்க. அந்தம்மா கண்ணுலே கண்ணீர்வழிய உயிரில்லாத நடையில் மெதுவா நடந்துபோனது பார்க்க ரொம்பப் பாவமா இருந்துச்சு.


நேஷனல் தொலைக்காட்சி சானல் 1( டிவி ஒன்) கேமெராவோடு வந்தாங்க. அதே சமயம் பெரிய பெரிய லென்ஸ் களைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கிட்டுக் கையில் பெரிய கேமெராவோடு ஒருத்தர்( ப்ரெஸ்/ ஃப்ரீ லேன்ஸர்)வந்து சேர்ந்தார்.


இதையெல்லாம் பார்த்துக்கிட்டு நின்ன நான், அப்பத்தான் ரெண்டு படமாவது எடுக்கலாமே நினைச்சேன். கூடவே நாம் எடுக்கலாமான்னும் தெரியலை. நம்ம வீட்டுவாசலில் நின்னு எடுக்கலாமுன்னு நாலைஞ்சு படங்களை எடுத்தேன்.
ஒருமணிநேரம் நின்னுக்கிட்டு இருந்த ஆம்புலன்ஸ் சைரன் ஒண்ணும் போட்டுக்காம மெதுவா நகர ஆரம்பிச்சது.இதுக்கிடையில் என்னைப்பார்க்க மகளும் வந்தாள். வாசலில் இருக்கும் களேபரத்தைப் பார்த்து பதற்றமா இருந்தாள்னு முகம் சொன்னது. நல்லவேளை நான் காரில் வராமல் நடந்து வந்தேன்னு சொன்னாள். இல்லேன்னா தெருவில் நுழைஞ்சிருக்க முடியாது. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. வீட்டுக்குப்போகணும். எங்க வீடு இதுதான்னு சொல்லிட்டு வரலாம்னு சொன்னேன்.பொதுமக்கள் பாட்டுக்கு நடக்கறதைப் பார்த்துக்கிட்டு நின்னாலும், காவல்துறை ஆட்கள் ஒண்ணும் சொல்லாம அவுங்க வேலையை அவுங்க பார்த்துக்கிட்டு இருந்தாங்க. கூட்டத்தை மேய்க்கறேன்னு கொஞ்சம் அதிகாரம் காமிக்கிற ஜோர் எல்லாம் ஒண்ணுமே இல்லை. அதேபோல சம்பவத்தைப் பார்த்த சாட்சிகளுக்கும் தொந்திரவு இல்லாமக் கேட்டு எழுதிக்கிட்டாங்க, அதே இடத்துலேயே. 'ஸ்டேஷனுக்கு வா'ன்னு மிரட்டறதெல்லாம் இல்லை.

சம்பவத்தின் காரணமான (சின்னக் கார்தான்) வண்டியைப் படம் எடுத்து முடிச்சதும் 'டோ' பண்ணாம அப்படியே அதைத் தூக்கி ஒரு ட்ரக்லே வச்சுக் கொண்டு போனாங்க. ரெண்டு மணி நேரத்துலே எல்லாத்தையும் சரி செஞ்சு வழக்கமான தெருவா ஆகிப்போச்சு. மழை பெய்ய ஆரம்பிச்சது. பாட்டி மரணத்துக்கு இயற்கை சிந்தும் கண்ணீர்.............. அப்படியே அங்கே சிதறி இருந்த ரத்தத்தையும் சேர்த்துக் கழுவிருச்சு. எதிர் நடைபாதையில் மட்டும் ஒருத்தர் ட்ராஃபிக் வேகத்தைக் கணக்கெடுக்கறதுபோல ஒரு சாதனம் வச்சு, ஒரு மணிநேரத்துக்கும் அதிகமா எதோ செஞ்சுக்கிட்டு இருந்தார். அப்பப்ப அந்த சாதனம்(ஒரு கெமெரா போல இருந்துச்சு) திரும்பி நம்ம வீட்டையும் பார்த்துச்சு! அவர் கிளம்பிப்போனதும் (மணி ஏழு ) விபத்து நடந்த சுவடே இல்லை.

காவல்துறையின் திறமையை மனதாரப் பாராட்டினேன்.

பாட்டிக்கு என்ன ஆச்சோ, பிழைச்சுக்கிட்டாங்களான்னு இருந்துச்சு. யாரைக்கேட்பது? உடனே மகள்தான் நெட்லே உள்ளூர் சேதியைத் தேடித் தந்தாள். பாட்டியின் மரணம் உறுதியாகிப்போச்சு. மறுநாள் காலைப் பேப்பரில் செய்தி வந்துருச்சு.இந்த வீட்டுக்கு நாங்க வந்து மூணு வருசமாகுது. இதுவரை அக்கம்பக்க ஆட்களைப் பரிச்சயம் செஞ்சுக்கலையான்னு மனக்கணக்குப் போட்டால்........
ஆட்களை அடையாளம் காமிக்கிறதைவிட இந்தத் தெரு பூனை நாய்களை நல்லாவே அடையாளம் கண்டு வச்சுருக்கேன். பார்க்கறதுக்கு எதோ வயசான மனிதர் ஒருத்தர் கையைப் பின்னாலே கட்டிக்கிட்டு நடந்து போகும் தோரணையில் ஒரு குள்ள நாய் தினமும் அஞ்சாறுதடவை எதிர்வரிசையில் நடந்துபோகும். அந்த நாய்க்கே 'பெரியவர்'ன்னு பேர் வச்சுருந்தேன். அந்தப் பெரியவரின் அம்மாதான் இந்த விபத்தில் போயிட்டாங்க.


அன்னிக்கு ராத்திரி முழுசும் என்னென்னமோ யோசனையில்,ஒரே மன உளைச்சல். விபத்தில் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் நீண்டகாலத் தோழிகள். தன் தோழியின் முடிவுக்குத் தானே காரணமுன்னு ஆகிப்போன அந்தம்மாவுக்கு வாழ்நாள் முழுசும் குற்றவுணர்ச்சி வந்து தாக்குமே.... (பாட்டிக்கு, மேன்ஸ்லாட்டர் என்று தண்டனை கிடைச்சாலும் கிடைக்கும்.)
ச்சும்மா வாசலில் இறக்கிவிட்டுட்டு வரேன்னு கணவர்கிட்டே சொல்லிட்டு வந்திருக்கலாம். அவருக்கு இந்த சேதி எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்(-:
இறந்துபோனவரின் கணவர் அந்த நேரம் வீட்டுக்குள்ளே இருந்துருக்கார். வீட்டுவாசலில் மனைவி அடிபட்டு இறந்துட்டாங்கன்னா அவர் நிலை என்ன?
வண்டிக்கடியில் இருந்தவரைப் பார்த்த அதிர்ச்சியில் எனக்கே இப்படி இருந்தா..... அவுங்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும்?இன்னிக்கு எதிர்த்த வீட்டு முன்னால் சிலர் நின்னுக்கிட்டு இருந்தாங்க. நாங்க போய் என்ன ஏதுன்னு விசாரிச்சோம். இறந்து போன பாட்டியின் மருமகளாம்.
இன்னும் சவ அடக்கம் எப்போன்னு முடிவு செய்யலையாம்...........
எப்பன்னு தெரிஞ்சுக்கிட்டுப் போய்வரணும். ......என்னதான் நகர வாழ்க்கைன்னாலும் சில நிமிஷங்கள் செலவு செஞ்சு அயல்வீட்டுவாசிகளைக் கொஞ்சம் தெரிஞ்சுவச்சுக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு இங்கே வலைப்பதிவர்களுக்கிடையில் நாம் கொண்டாடிக்கிட்டு இருக்கோம். நண்பருக்கு நம்மால் எதாவது தொந்திரவு வரக்கூடாதுன்னும் நினைக்கிறோம்.தன் தோழியைத் தானே கொன்னுட்டோமுன்னு அந்தப் பாட்டிக்கு எப்படி மனசு துடிக்குமுன்னு நினைச்சா எனக்கு 'ஐயோ'ன்னு இருக்கு.
லீப் வருசம் ஃபிப்ரவரி 29ன்னாவே இனி இதுதான் மனசுலே நிக்குமோ?

36 comments:

said...

ஹ்ம்ம்ம்,. ரொம்ப சிக்கல்தான். பாவம் இந்த வயசுல குற்ற உணர்ச்சியோட இருப்பாங்க, இதுல தண்டனை வேற.. கவனம் கொஞ்சம் இல்லைன்னாலும் இப்படி ஆவுமா?

said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இறந்த பாட்டி தான் தன் தோழியாலே இறப்போம் என்று 70 வருட வாழ்க்கையில் ஒரு கணமேனும் எண்ணியிருப்பாரா?
இல்லை இறப்புக்குக் காரணமான பாட்டி தான் தன் தோழியின் மரணத்துக்குக் காரணமாவோம் என்று 70 வருட வாழ்க்கையில் ஒரு கணமேனும் எண்ணியிருப்பாரா?
வாழ்க்கை ?! :(

said...

:(

(ஆனாலும் இதையும் இம்புட்டுப் பெரிய பதிவா படங்களோட போட உங்களால்தான் முடியும்!)

said...

வாங்க இளா.

கவனம்....... இல்லேன்னா இப்படித்தானோ?

நான் நிறையப்பேரை பார்த்துருக்கேன். இறங்குனபிறகு இல்லேன்னா அவுங்க வீட்டுக்கு விஸிட் போனபிறகு, திரும்ப வந்து நாம் வண்டியில் உக்கார்ந்ததுக்கு அப்புறம் ட்ரைவர் பக்கம் வந்து நின்னு கொஞ்சம் பேசி வழியனுப்புவாங்க.

இது எவ்வளவு தவறான செய்கை பாருங்க. இறங்குன பாட்டி நடைபாதையில் நின்னு பை சொல்லிட்டுப் போயிருக்கலாம் இல்லே.

said...

வாங்க ரிஷான்.

ரெண்டு தாத்தாக்களுக்கும், தவிப்பில் இருக்கும் பாட்டிக்கும்
வாழ்நாள் முழுக்க சமாதானம் இல்லாமப்போச்சு(-:

said...

வாங்க கொத்ஸ்.

எங்கெங்கோ நடப்பதையெல்லாம் விவரிச்சு எழுதும்போது, நம்ம வீட்டு வாசலில் நடந்ததை எப்படிச் 'சுருக்' க முடியும்?

டீடெயில்ட் வெர்ஷந்தான் நம்ம வகுப்பில்.........எப்பவும்.

said...

பாட்டிக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.(போன பாட்டிக்கா இருக்கிற பாட்டிக்கா என்று சொல்லத்தேவையில்லை)
படங்களை பார்க்கும் போது அந்த சாலையில் கிரிக்கெட் விளையாடனும் போல் இருக்கு,ஏனென்று தெரியவில்லை.
பிளாஸ்டிக் கோன் வைத்து தடத்தை ஒழுங்குபடுத்தியுள்ளது நன்றாக இருக்கு.

said...

ரொம்ப கஷ்டந்தான் பாட்டிக்கு....:-(

said...

பாவம் அந்தப் பாட்டிக்கும் குற்ற உணர்ச்சி இருக்கும்..

said...

வாங்க குமார்.

தெருவுலே கிரிக்கெட்டா?

நோ சான்ஸ்.

இங்கே நம்ம பேட்டையில் அப்படியெல்லாம் யாரும் தெருவில் விளையாடுறதில்லை.

ஒருவேளை இந்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் அப்படி இருக்குமோ?

said...

வாங்க ச்சின்னப்பையன்.

பாவமா இருக்குங்க, அந்தப் பாட்டிகளை நினைச்சால்(-:

said...

வாங்க பாச மலர்.

சரம் தொடுக்கும் வேலைக்கிடையிலும் இங்கே வந்து போனதுக்கு நன்றிப்பா.

said...

எங்க குடும்ப நண்பர்கள் வீட்டில் இப்படித்தான் ஒரு நிகழ்ச்சி பேரன் கார் ஓட்டி விபத்தாகி தாத்தா நடக்கமுடியாம ஆகிட்டார் பாவம் அவன் எத்தனை கவலையாகி இருப்பான்..

said...

பாவம்.
:(

said...

சின்ன அஜாக்கிரதை...எவ்வளவு பெரிய இழப்பில் முடிந்திருக்கிறது.
இங்கு பெற்ற தாயின் கண் முன்னேயே
பள்ளி வானிலிருந்து முன்புறமாக இறங்கிய குழந்தையை கவனிக்காமல் ஓட்டுனர் வண்டியை கிளப்ப முன் சக்கரத்தில் மாட்டி நசுக்கிய கோரமெல்லாம் நடந்திருக்கிறது.

said...

லீவு முடிந்து வந்தாச்சு..டீச்சர்!!!!

said...

இறந்து போன பாட்டி, நண்பியான பாட்டியை மன்னிக்கட்டும்..

எப்படியெல்லாம் சாவு வருது..?

said...

பாவம் அந்த பாட்டிகள் :(

said...

வாங்க கயல்விழி.

நம்ம வீட்டுலேயும் இப்படி ரிவர்ஸ் பண்ணப்பக் கவனிக்காம என்னை இடிச்சுட்டு, இப்பவும் நான் முதுகுவலியில் கஷ்டப்படும்போது குற்ற உணர்வுடன் முகத்தைப் பரிதாபமா வச்சுக்க இவர் முயற்சி செய்வதைப் பார்க்கணுமே:-)

said...

வாங்க நானானி.

நீங்க சொல்லும் சம்பவத்தை நினைச்சுப் பார்க்கவே முடியலைங்க.
ஐய்யோ... இப்படியெல்லாம்கூட ஆகுமா?

பாவம் அந்தத் தாய்......(-:

said...

வாங்க புதுகைத் தென்றல் & கோபி.

எதிர்வீட்டைப் பார்த்தாலே பாவமா இருக்கு இப்பெல்லாம்(-:

said...

வாங்க உண்மைத்தமிழன்.

சினிமாவுலே வில்லன் எப்படி கோரமா
கொலை செய்வான்னு இயக்குனர்களும், சண்டைக்காட்சி அமைக்கும் ஆட்களும் 'உக்காந்து 'யோசிக்கிறதைப் போல் எமனும் உக்காந்து யோசிக்கிறான் போல இருக்கு(-:

said...

//என்னதான் நகர வாழ்க்கைன்னாலும் சில நிமிஷங்கள் செலவு செஞ்சு அயல்வீட்டுவாசிகளைக் கொஞ்சம் தெரிஞ்சுவச்சுக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.//

அக்கா!
கட்டாயம் சும்மா ஹலோ ஆவது சொல்ல வேண்டும்.
நான் இயன்றவரை செய்கிறேன்.
விதி வலியது..தோழியின் உருவில் வந்துள்ளது.

said...

துளசி, பாவம் அந்தப் பாட்டிகள். நானும்மிவர்களோட சுதந்திரப் போக்கைக் கண்டு அதிசயப்படுவேன்.

இந்த ரிவர்ஸ் னால எத்தனை துன்பங்கள்.எத்தனை கேள்விப்படுகிறோம்.
மனசு கஷ்டப்படுதுப்பா.

said...

மேடம்,

1. ஒரு பெண் கார் ஓட்டி விபத்து ஏற்பட்ட விஷயம் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். பொதுவாக வாகனம் ஓட்டும் விஷயத்தில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள புள்ளி விவரம்.

2. ரிவர்ஸ் எடுக்கும் விஷயத்திலும், சிறிய இடைவெளியில் பார்க்கிங் செய்யும் வித்தையிலும் பெண்கள் மிகவும் வீக். இது ஆணாதிக்கத் தகவல் அல்ல; PHYSIOLOGY.

3. எல்லோரும் மிகவும் மன உளைச்சலில் இருந்தால் அந்த இடத்தை சகஜமாக்க ஏதாவது நகைச்சுவை சொல்வது முதலில் மனம் தேறியவரின் கடமை.

தான் மிக வேகமாகக் கார் ஓட்டுபவன் என்று பந்தா விட்டுக் கொள்ளும் ஒருவன், நண்பர் ஒருவருடன் பந்தயம் வைத்து சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டே மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து காட்டினானாம். சென்னையில் இருந்து நேரம் குறித்துக் கொண்ட நண்பருக்கு மொபைலில் அவன் தகவல் சொன்ன போது அவரால் நம்பவே முடியவில்லையாம்; "சரி, எதற்கும் நீ இப்போது இருக்கும் இடத்தை மொபைலில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி வா, எவ்வளவு நேரத்தில் வந்து சேர்கிறாய் என்று பார்க்கலாம்" என்றாராம். அவன் திரும்பி வர ஏழு மணி நேரம் ஆனதாம். அதற்கு அவன் சொன்ன காரணம்: "முன்னே போவதற்கு வண்டியில் ஐந்து கியர் வச்சிருக்கான்; திரும்பி வர்றதுக்கு ஒண்ணே ஒண்ணு தான் வச்சிருக்கான் பாருங்க"

said...

வாங்க யோகன்.

இந்தத் தெரிஞ்சுக்கறதை நேத்து சிவராத்திரிப் பூஜைக்குப்போன இடத்துலேயே மங்களகரமாத் தொடங்கியாச்சு.

புதுசா ரெண்டுபேரை ( பழகியமுகம் & தெரியாத பெயர்) பெயரோடு அறிமுகம் செஞ்சுக்கிட்டு நல்லா கதையடிச்சுட்டு & கதை கேட்டுட்டு வந்தேன்

said...

வாங்க வல்லி.

எனக்கும் இங்கே முதியோர்களின் சுதந்திரம் ரொம்பப் பிடிக்கும்.
பொருளாதாரத்தில் பின்தங்கி இல்லாமல் இருக்கறாங்க பாருங்க.

வயதானோர்க்கு வருமானம் இருந்தாலே வாழ்வும் வளமா இருக்குல்லையா

said...

வாங்க ரத்னேஷ் (சீனியர்)

1. உண்மைதான்.

2. என்னைப்போல கழுத்து எலும்பு தேய்மானக்குறை இருக்கறவங்களுக்கு
கஷ்டமாத்தான் இருக்கும். நான் பொதுவா பார்க் செய்யும்போது கூடியவரை ரிவர்ஸ் எடுக்காம அப்படியே முன்னாலேயே வண்டியை எடுக்கும் விதத்தில் நிறுத்துவேன்.

ஆனா எல்லாப் பெண்களுக்கும் நீங்க ச்சொன்னது பொருந்தாது. கில்லாடிங்களும் இருக்காங்க. ச்சின்ன இடங்களிலும் 'சக்'னு வண்டியை லாகவமா நிறுத்துறதைப் பார்த்துருக்கேன். என் பொண்ணும் ஒரு கில்லாடி.

3. இறுக்கத்தைக் குறைக்கணுமுன்னு நினைச்சீங்களே, அதுக்கு நன்றி.
மனசு லேசாகிக்கிட்டு வருது.

said...

இம்புட்டு சோகமா ஒரு கதை நீங்க சொல்லிகினு
இருக்கீக. நாங்க எல்லாம் அடுத்தாப்போல
என்ன ஆகுதோ ஆகுதோன்னு அப்படியே
கண்ண துறந்துகினு ஒக்காந்திட்டு இருக்கோம்.
ஒரு சீரியஸ்னஸ் தெரியவேண்டாம்.
உங்க யானைக்குட்டி பக்கத்திலே
கும்மாளம் போட்டுகினு இருக்குது.
கொஞ்சம் சொல்லி வைங்க.

சுப்பு
தஞ்சை.
PS: your narration is just great.

said...

துளசி..எவ்வளவுக்கஷ்டம்

said...

இங்கே இது போல் சம்பவங்கள் நிறைய கேள்விப் படுவோம் டீச்சர். சமீபத்தில் ஒரு வயதானவர், ப்ரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டர் அழுத்த, அந்தோ பரிதாபம் துணிக்கடையில் இருந்த 5 மக்கள். தாத்தாவுக்கு மேன் ஸ்லாட்டர் கொடுத்து சிறை எடுத்தது. இவரின் வயது 82.

இவர்களின் சுதந்திரத்தை நாம் மெச்சினாலும், வயது ஏற ஏற சில விஷயங்கள் பிடிபடாமல் போகும் என்பது இயற்கை. இன்னும் லைசன்ஸ் எதன் அடிப்படையில் கொடுக்குறாங்கன்னு தெரியல.

பாவமாக தான் இருக்குது.

பின்குறிப்பு:
கேக்காம இருக்க முடியல. எப்படிங்க இவ்ளோ விரிவா எழுதுனீங்க? உங்களுக்கு ஆனாலும் பொறுமை ஜாஸ்தி தான்.

said...

படிக்க ரொம்பவும் பாவமாக இருக்கிறது அக்கா. மரணம் எப்படி எல்லாம் வருகிறது?! :-((

said...

வாங்க சுப்பு.

நம்மோட வருத்தம் ச்சின்னப்புள்ளைங்களுக்குத் தெரியுதா?
அதான் ஆட்டமும் பாட்டமுமாக் கிடக்குதுங்க நம்ம யானையும், பூனைகளும்.

போயிட்டுப்போகுது......... விடுங்க. அதுங்களாச்சும் எப்பவும் இப்படி மகிழ்ச்சியாவே இருக்கட்டும்.

'சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ'

said...

வாங்க டெல்ஃபீன்.

கஷ்டம்தான். இப்பப் பாட்டிக்கு ரொம்ப டிப்ரஷன்னு சைக்கியாட்ரிக் அஸெஸ்மெண்ட்க்கு அனுப்பி இருக்கு போலீஸ்.

நம்ம தோழி அங்கே மருத்துவர். இந்தக் கேஸ் அவுங்ககிட்டே இருக்காம். பாட்டிக்கு ஒரே அழுகைதானாம். பேசவே முடியாம இருக்காம். வெரிமச் டிப்ரஸ்டுன்னு சொன்னாங்க.(-:

said...

வாங்க காட்டாறு. இங்கே 60 வயசானதும் ஒரு ட்ரைவிங் டெஸ்ட் ப்ராக்ட்டிக்கல் போகணும்.
அதுக்கப்புரம் ஒவ்வொரு 10ம் வருசத்துக்கும் டெஸ்ட் உண்டு.

நம்ம பாட்டி கேஸ்லே ஒரு மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் ஆகி இருக்கு போல.

ரிவர்ஸ் எடுக்குமுன்னு இறந்த பாட்டி நினைச்சிருக்கலாம். இல்லே அவுங்க பின்னாலே போயிருவாங்கன்னு இவுங்க வண்டியை முன்னாலே எடுத்திருக்கலாம்.

பாவம். ரொம்பக் கஷ்டமா இருக்கு எதிர்வீட்டைப் பார்க்கும்போதெல்லாம்(-:

said...

வாங்க குமரன்.

எக்ஸிட் எப்ப & எப்படின்றதே இன்னும் புரியாத விஷயம்தான்(-: