Tuesday, March 25, 2008

வடக்கும் தெற்கும், மூணு தலைமுறையும்

பேசாமச் சும்மா கிடக்கலாமுன்னா விடறாங்களா? ரமணி வர்றாரு. கச்சேரி வச்சுருக்காங்கன்னு தூண்டில் போட்டாங்க ஒரு தோழி. என்ன ஏதுன்னு விவரம் அனுப்பச் சொல்லிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தா....விவரம் கணினியில் வந்து காத்திருக்கு.


புல்லாங்குழல் கலைஞர், டாக்டர் நடேசன் ரமணி அவர்களின் 75 வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி. பரவாயில்லையே....நம்மூர் ஆளுகளுக்கு இதெல்லாம் கூடத் தெரிஞ்சுருக்கே. யாரா இருக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு? 'மூச்' விடாம நடக்குதுன்னு பார்த்தால்....
நம்ம பல்கலைக் கழகத்தின் ம்யூசிக் டிபார்ட்மெண்ட் கொஞ்சம் ஸ்பான்ஸார் செஞ்சுருக்கு. இண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ், ஆஸ்த்ராலியா இண்டியா கவுன்ஸில், ஏஷியா நியூஸி ஃபவுண்டேஷன்னு முழ நீளம் ஸ்பான்ஸாருங்க லிஸ்ட் ப்ரோஷர்லே இருக்கு!
நடராஜ் கல்ச்சுரல் செண்ட்டர் மெல்பேர்ன் ஆஸ்தராலியா சார்பில் ஏற்பாடு செய்த ஸ்பிரிட் ஆஃப் இண்டியாவின் 28வது நிகழ்ச்சி.



வடக்கையும் தெற்கையும் இணைக்கிறாங்களாம் கர்நாட்டிக் & ஹிந்துஸ்தானி இசையின் மூலம்.பலே பேஷ் பேஷ்.



மஞ்சரி கேல்கர் என்ற மராத்தியர் ஹிந்துஸ்தானி பாடறாங்களாம். நிகழ்ச்சி நடப்பது வியாழனா இருக்கேன்னு கொஞ்சம் சடச்சுக்கலாமுன்னா மறுநாள் குட் ஃப்ரைடே. விடுமுறைநாள்.



இவ்வளவுதூரம் வந்திருக்கும் கலைஞர்களை ஆதரிக்கணும் என்றதைவிட இவுங்க நிகழ்ச்சி ஆக்லாந்துலே நடக்கப்போறதில்லைன்றதே திருப்தியா இருந்துச்சு! நல்ல நிகழ்ச்சிகள் கலைஞர்கள் எல்லாம் ஆஸ்தராலியா & நியூஸின்னு ப்ரோக்ராம் போட்டாலும் நியூஸின்னாலே, ஆக்லாந்துன்னு ஆகி இருக்கு. போனமாசம் நம்ம எஸ்.பி.பாலசுப்ரமணியம் வந்துட்டு அங்கே மட்டும் பாடிட்டுப் போயிருக்கார். இதன் காரணமா புகைஞ்சுக்கிட்டு இருந்ததுக்கு இப்பக் கொஞ்சம் ஆறுதல். இந்த நிகழ்ச்சி எங்களுக்கே எங்களுக்கு.( என்ன பொறாமை பாருங்க. அல்பம்) இங்கே டனேடின் என்ற ஊரிலும் நடக்குது. அது பரவாயில்லை. அது நம்மத் தெற்குத்தீவுதான். போனாப் போட்டும்.


ஏழரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். எப்படியும் ஒன்பது மணிக்கு முடிஞ்சுரும். வந்து சாப்புட்டுக்கலாமுன்னு ஆர்ட் செண்டருக்கு ஏழுமணிவாக்கில் போய்ச் சேர்ந்தோம். க்ரேட் ஹாலில் நிகழ்ச்சி. இங்கேதான் முந்தி எல்.சுப்ரமணியம் வயலின் கச்சேரிக்குப் போனது. எல்லாம் டெய்லர்டு ப்ரோக்ராம். நேயர் விருப்பச்சீட்டு எல்லாம் அனுப்ப முடியாது. அது நடந்தது ப.ஆ.மு.


உள்ளே ஃபோயரில் மேசைகள் போட்டு டிக்கெட்டு விற்பனை தயார். போணி நாங்கதான். கோபால் தலைக்கு 35 டாலர். எனக்கு 30. பதிவர் என்பதால் சலுகை! ச்சும்மா....... வெட்டி ஆஃபீஸர்களுக்கு 30. :-)



உள்ளே ஹார்மோனியம், தபேலா கூட்டணியில் பாடகியின் மைக் டெஸ்ட்டிங் நடந்துக்கிட்டு இருந்தது. ஆஆஆஆஆ,........ஆஅ....ஆஆ.......அ.ஆஆஅ..........



இன்னும் 10 நிமிஷத்தில் அரங்கத்துக்குள்ளே போகலாமாம். அப்படியே வளாகத்தின் உள்ளே கொஞ்சம் சுத்திக்கிட்டு இருந்தோம்.
இப்பத்தான் இது ஆர்ட் செண்டர். இந்த நகரத்தின் நிர்மாண சமயத்தில் இது இங்கே பல்கலைக்கழகக் கட்டிடமா இருந்துச்சு. எல்லாம் பிரிட்டனின் பாரம்பரியத்தில் கட்டப்பட்டது. எல்லா டிபார்ட்மெண்டும் ஒரே வளாகத்தில். கூட்டம் பெருகி, மாணவர்களின் எண்ணிக்கை ஏறுனதும் வேற இடத்துக்குப் பல்கலைக் கழகம் மாற்றி இருக்காங்க. ( இது பக்கத்தில்தான் நம்ம வீடுன்றது கூடுதல் தகவல்)

அட்டகாசமான வேலைப்பாடுள்ள தூண் வரிசைகள் உள்ள வெராந்தா, புல்வெளி, மாடர்ன் ஸ்கல்ப்ச்சர் ன்னு சிலதை சுட்டுக்கிட்டேன் கெமெராவில்.
புகைப்படபோட்டிக்கு அனுப்பணுமுன்னு இப்பெல்லாம் எங்கே நல்லதா எதைப் பார்த்தாலும் எடுத்து வச்சுக்கறதுதான். அடுத்தடுத்த போட்டிகளில் என்ன தலைப்பு வரப்போகுதுன்னு யாருக்குத் தெரியுது? கற்பனை', நம்ம பிட்' வாத்தியார்களுக்குக் கொடிகட்டிப் பறக்குதே!! தூண்கள்/பில்ல்ர்ஸ்ன்னு தலைப்பு வரணுமேன்னு இருக்கு:)


சில கட்டிடங்களில் குட்டியா சினிமாத் தியேட்டர், கலைநிகழ்ச்சி நடத்துவதற்கான 'சதர்ன் பாலே டான்ஸ் தியேட்டர்', கலைப்பொருள் விற்பனைக்கூடங்கள்ன்னு இருக்கு. ஒரு அருமையான ரெஸ்டாரண்டும் நடக்குது. இதுதவிர சாண்ட்விச், மஃப்பின், கேக் இப்படிச் சிறுதீனி & காஃபி,
ஐஸ்க்ரீம்( எங்க நாடுதான் ஐஸ்கிரீம் முழுங்குவதில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கு)னு விற்கும் கடை, இதுக்குள்ளேயே இந்தக் கட்டிடத்தின் தகவல்& விவரங்கள் வழங்கும் இடம் இருக்கு.

இங்கே ஒரு அப்ஸர்வேட்டரிகூட இருக்குதுங்க. வெள்ளிக்கிழமை இரவுகளில் பொதுமக்கள் உள்ளே போக அனுமதி உண்டு. நம்ம கேண்டர்பரி பல்கலைக்கழக அஸ்ட்ரானமி படிக்கும் மாணவர்கள் இதைக் கவனிச்சுக்கறாங்க. கோல்ட் காயின் எண்ட்ரி நமக்கு. ஒன்னு, ரெண்டு டாலர்கள் இங்கே நியூஸியில் தங்க நிறத்தில் செய்யறாங்க. நாங்களும் சிலமுறை இங்கே போய் சில கோள்களையும், பல நட்சத்திரக் கூட்டங்களையும் பார்த்துருக்கோம்.

புல்வெளிகளில் ஒண்ணை இப்ப சின்னக் குளமா மாத்தி நீலத்தண்ணீரா இருக்கு. அழுத்தமான நீல வர்ணம் அடிச்சுட்டாங்க போல அடித்தரையில். நல்லாவே இருக்கு.

நேரமாச்சுன்னு உள்ளே போய் உட்கார்ந்தோம். இதுலேயும் நாங்கதான் முதல்.
'மீ த ஃப்ர்ஸ்ட்' பின்னூட்டங்கள் போல:-)))) கொஞ்ச நேரத்தில் மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க. எல்லாம் வெள்ளையர்கள். அதில் 95 % யுனிவர்சிட்டி ஆளுங்க.
இந்திய முகம் ஏதாவது தெரியாதா என்ற நப்பாசை. ஊஹூம்.........




மொஹிந்தர் தில்லான், நட்ராஜ் கல்ச்சுரல் செண்டரின் பிரெஸிடெண்ட் ஒரு அறிமுகம் கொடுத்தார். இவர் டெல்லி யூனியில் ஆங்கிலப்பாட லெக்சரரா இருந்தது, சங்கீதத்துலே (கேட்கறதுலேதான்) ஆர்வம் வந்தது, இப்படி ஒரு கலைநிகழ்ச்சிகளுக்கான ஆரம்பமுன்னு சொன்னார். இவர் மனைவி இங்கிலாந்துக்காரர். பியானோ வாசிக்கப் படிச்சவங்களாம். அவுங்களுக்கும் வேறு நாட்டு இசையில் ஈர்ப்பு இருந்துச்சாம். அதுவும் பண்டிர் ரவிசங்கரின் சிதார் கேட்டப்பிறகு ஆர்வம் அதிகமாயிருச்சாம். அப்பத்தான் இந்த மாதிரி ஒரு எண்ணம்வந்து இந்த நட்ராஜ் கல்ச்சுரல் செண்டர் தொடங்குனதாம். ஒரு ஏழு வருசம் முன்பு இவர் மனைவி இறந்துட்டாங்க. அல்ஸைமீர் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்களாம். ஹும்..... மொஹிந்தர் இப்ப ஆஸ்தராலியா மெல்பேர்ன் நகரில் நார்தன் இன்ஸ்டிட்யூட்லே கற்பிக்கிறார்.




ப்ரோஷர்லே ஈ மெயில் விலாசம் இருக்கு. அதுலே என்னைத் தொடர்பு கொண்டீங்கன்னா, உங்களுக்கு அடுத்துவரவிருக்கும் நிகழ்ச்சிகள் விவரத்தையெல்லாம் அப்பப்பத் தெரிவிக்கிறேன்னு சொன்னார். கூடவே இங்கே இந்தியர்கள் குடும்பம் கிடைச்சால் நல்லது. ரெஸ்டாரண்ட் சாப்பாடு போரடிச்சுருதுன்னார்.(சொல்லிட்டு என்னைப் பார்த்தமாதிரி ஒரு தோணல்)
மஞ்சரி, பிஸ்மில்லாகான் அவார்ட் வாங்குனவங்களாம். அவுங்கதான் முதலில் வந்து பாடினாங்க. மொத்தம் நாலு பாட்டு. சிரிச்சமுகமா இருந்தாங்க. என்ன பாட்டு என்றதை ஆங்கிலத்தில் சின்ன விளக்கம் சொன்னாங்க. சிகப்பு & மஜெந்தா டவுள் கலர் ஷேடில் பட்டுப்புடவை.
ஹார்மோனியம் வாசித்தவர்; சுயோக் குண்டல்கர்
தபேலா : உத்பல் தத்தா.
ஆதிதேவோ மாஹாதேவோ ......ராகம் ஸ்ரீ

ரங்க் ல்லாகே மோரா பியா கா பகடி..........கணவனின் தலைப்பாகை இருக்கும் நிரத்தில் தனக்கும் உடை வேணுமுன்னு கேட்கும் இள மனைவி பாடும் பாட்டு.


அத்தரா சுகந்தா ............ உங்க ஊருக்குப் பொருத்தமான பாட்டு. ( எங்க ஊர் நியூஸியின் கார்டன் சிட்டி) காலையில் ஊர் சுற்றிப்பார்க்கப் போனால் எங்கே பார்த்தாலும் தோட்டமும் பூக்களுமா ரொம்ப அழகா இருக்கு. இந்தப் பாட்டு பசந்தா கேதார்னு ரெண்டு ராகம் ரெண்டு மெலடியும் சேர்ந்து வருதாம்.


கடைசியா ஒரு மராட்டி பஜன்.



ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ரொம்ப (?) பரிச்சயமில்லாத்தால் விளக்கிச் சொல்லத்தெரியலை. நம்ம ஸ்வரங்களுக்குப் பதிலா இதுலே ஆஆஆ தான் இருந்துச்சு. தும்ரி & தாப்பா செமி க்ளாஸிகல் பாட்டுகளாம்.



ஒரு பத்து நிமிஷ இடைவேளை. அப்பத்தான் கவனிச்சேன் ரெண்டு சேச்சிமார் வந்துருக்காங்க. எனக்கு விவரம் அனுப்புன தோழியும் வந்துருக்காங்க. டிக்கெட் வித்துக்கிட்டு இருந்த சீனரிடம் எத்தனை டிக்கெட் வித்தே? எத்தனைபேர் வந்துருக்காங்கன்னு கேட்டேன். 90 டிக்கெட் வித்துப்போச்சாம். 30 பேர் க்ரூப் புக்கிங் செஞ்சு (யூனியில்) வந்தாங்களாம். ஆக மொத்தம் 120 பேர். பரவாயில்லை. நம்மது ராசியான கைதான். போணி செஞ்சது வீண் போகலை.



டாக்டர் ரமணி மெதுநடையில் வந்தார். கூடவே தியாகராஜன்( ரமணி அவர்களின் மகன்), அதுல் ( ரமணி அவர்களின் மகள் வயிற்றுப் பேரன்) ராஜா ராவ் என்றவர் மிருதங்கம். திருச்சி முரளி கடம். எல்லாரும் வேட்டி, ஜிப்பாவில் பளிச்சுன்னு வந்தாங்க.



திருவையாறு தியாகராஜ ஆராதனையில் வாசிச்ச அஞ்சு பாட்டுகளையும் இங்கே இசைக்கப் போவதாக அறிவித்தார். முதல் பாட்டு 'எந்தரோ மகானுபாவலு' இதுமட்டும்தான் எனக்குத் தெரிஞ்சது. ரெண்டாவதுக்கு லதாங்கி ராகத்தில், கண்டசாபு தாளம்னு மட்டும் சொன்னார். அதுக்கப்புறம் மூணு பாட்டுக்கும் என்ன ஏதுன்னு விவரம் ஒண்ணுமே சொல்லலை. நானும் கச்சேரிக்கு (கேட்கப்) போனேன்னு இருந்துச்சு.

இந்த மாதிரி வெளிநாடுகளில் ( உள்நாட்டில் மட்டும் 100% சங்கீதம் தெரிஞ்சவுங்களா கச்சேரிகளுக்குப் போறாங்க?) நிகழ்ச்சி செய்யும்போது, கொஞ்சம் விளக்கம் சொன்னால் தேவலை. என்ன பாட்டு, ராகம், தாளம் சொன்னால் போதும். சொல்ல முடியலைன்னா பேசாம அச்சடிச்சுக் கொடுத்தாலும் போதும்.



வெவ்வேற சைஸுகளில் மும்மூணு குழல் வச்சுருந்தாங்க மூணு பேரும். பெரியவருக்கு வயசானது நல்லாவே தெரிஞ்சது. ரெண்டு இடத்தில் கொஞ்சம் பிசிறு. மூச்சுப்பிடிச்சு ஊதணுமே. இல்லையா? பேரனுக்கு ரெண்டு இடத்தில் 'சின்னதா' ஒரு தடங்கல். அந்த ஃப்ளோ இல்லாமல் இருந்துச்சு. (தப்புக் கண்டுபிடிக்கணுமுன்னா ரெடின்னு திட்டாதீங்க)

இந்தக் குழுவில் பெஸ்ட்ன்னு சொன்னால் மிருதங்கமும் கடமும்தான். ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிசத்துக்குத் தனி ஆவர்த்தனம், தூள் கிளப்பிருச்சு. கடக்காரர் சட்ன்னு பார்த்தா ஆஃபீஸ் உத்தியோகஸ்தர் மாதிரி இருக்கார். கைக்கு அடக்கமான குட்டியா ஒரு கடம். சட்டையைத் தொறந்துட்டுத் தொப்பையில் எல்லாம் வச்சு வாசிக்கலை:-)))))

நிகழ்ச்சி முடியும்போது பத்தே முக்கால். ரமணி & குழுவுக்கு வணக்கம் சொல்லிட்டு, நல்லா இருந்துச்சுன்னும் சொன்னேன். கடம் & மிருதங்கக்காரர்களை 'அட்டகாசம்'னு பாராட்டினேன். கிடைச்ச சந்தர்ப்பத்தை விட்டுறாம ( வேணுமா இந்தப் பெருமை?)
இந்தக் கூட்டத்தில் நாங்க மட்டுமே தமிழ்க்காரர்கள்னு சொன்னேன்.



ரமணி அவர்களும் உங்களைப் பார்த்தது சந்தோஷம்னு சொன்னார்(எல்லாம் ஒரு சம்பிரதாயம்தான் இல்லே?)



அடுத்த முறை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் வரப்போறாருன்னு மொஹிந்தர் சொன்னார். வரட்டும்.



மறக்கமுடியாத நிகழ்ச்சி, மனசில் அப்படியே பச்சக்ன்னு ஒட்டிக்கிச்சு, ஒண்டர்ஃபுல் ஈவ்னிங், அப்படி இப்படின்னு அளக்க முடியாது. சுமாராத்தான் இருந்தது. கிடைச்சவரை புண்ணியமுன்னு இருக்கணும்,நாங்கெல்லாம். இம்மாந்தூரம் யார் வருவாங்க? இல்லை?



பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தால்.....கோபாலகிருஷ்ணன் மொறைக்கிறான், எங்கேபோய்த் தொலைஞ்சேன்னு.......



அவனுக்குச் சாப்பாடு, வெளியே மத்தவங்களுக்குச் சாப்பாடுன்னு போட்டுட்டு, நாங்க மோர் சாதம் சாப்புட்டுப் படுத்தோம்..

8 comments:

said...

ரீச்சர்,

நல்லாத் தூங்கினீங்களா? கர்நாடக சங்கீதம் கேட்டா நல்ல ரிலாக்ஸ் ஆகலாம். நல்லாத் தூக்கம் வரும். கூட மோர் சாதம் வேற.

மத்தபடி இந்த பாட்டு, இந்த ராகம் எல்லாம் தெரிஞ்சாத்தான் ரசிக்க முடியும் அப்படின்னு இல்லை ரீச்சர். அப்படியே கேட்டாக் கூட போதும். ஆனால் அதெல்லாம் தெரிஞ்சா சுவாரசியம் அதிகம் அவ்வளவுதான். எனக்கு என்ன தெலுங்குக் கீர்த்தனை எல்லாம் பொருளா விளங்குது...

பொதுவா தியாகராஜ ஆராதனையில் ஐந்து பாட்டுக்கள் வாசிப்பாங்க. அவை
முறையே

1) ஜகதா நந்த காரகா - நாட்டை ராகம்
2) டுடுகு கல - கௌளை
3) சாதிஞ்சனே - ஆரபி
4) கனகன ருசீர - வராளி
5) எந்தரோ மகானுபாவலு - ஸ்ரீ

ஆனா இதில் லதாங்கி ராகம் எல்லாம் இல்லையே. ஒரு வேளை இவர் ஆராதனையில் வாசிச்ச பாட்டுக்கள் எனச் சொல்லி இருப்பாரோ? தெரியவில்லையே...

said...

வாங்க கொத்ஸ்.

அதே அதே...ஆராதனையில் இவர் வாசிச்ச பாட்டுக்கள்தான் இவையெல்லாம்.

நானும் எதுன்னு கண்டு பிடிக்கலாமுன்னு தியாகராஜர் கீர்த்தனைகள் புத்தகத்துலே லதாங்கி ராகத்துலே எதாவது இருக்கான்னு உருட்டுனேன். ஒண்ணும் கிடைக்கலை.

நான் சங்கீதத்தை அப்படியே சாப்புடுவேன்:-))))

என்ன ஏதுன்னு ரொம்பப் பார்க்கறதில்லை. நீங்க சொன்னதுபோல தெரிஞ்ச பாட்டுன்னா கூடுதலா ரசிக்கலாம்.

Anonymous said...

\\அடுத்த முறை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் வரப்போறாருன்னு மொஹிந்தர் சொன்னார். வரட்டும்\\
முடிஞ்சா ரெகார்ட் பண்ண முயற்சி செய்யுங்க. பொதுவா கச்சேரிக்காரங்க ரெகார்ட் பண்ண விடறதில்லை. பாம்பே ஜெயஸ்ரீ வந்திருந்தப்ப எல்லாம் மொபைல் போன்ல கொஞ்சம் பாட்டு டேப் பண்ணினாங்க திருட்டுத்தனமா. ஆனா ஒண்ணும் அவ்வளவு நல்லா வரலை.

said...

வாங்க சின்ன அம்மிணி.

டிக்கெட் வாங்குனப்பவே கேட்டுக்கிட்டேன் போட்டோ எடுக்க அனுமதி உண்டான்னு?
அதுக்கு அவர் ஃப்ளாஷ் இல்லாம எடுக்கலாமுன்னுட்டார்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதாமே.....

நம்ம வீட்டுப் பூசாரி அதெல்லாம் எடுக்கவேணாம். முன் வரிசையில் உக்காந்துக்கிட்டு இருக்கே. கெமெராவை நீட்டி எடுத்தா நல்லா இருக்காதுன்னு
எனக்கு 1000 அட்வைஸ். ' வீடியோ எடுக்கக்கூடாது. அது நியாயம் இல்லை'ன்னு வேற என் தலையைத் தின்னுட்டார்.

என் மொறைப்பைப் பார்த்துட்டுக் கேமெராவைத் தன் மடியில் வச்சுக்கிட்டுக் கொஞ்சம் ரெகார்ட் செஞ்சார். அதன் அழகைச் சொல்லவும் வேணுமா?(-:

said...

ரமணி சார் அங்க வந்தாரா. நநன் ிரண்டு தடவை கச்சேரிக்குப் போயிருக்கேன்.
இரண்டு தடவையும் தூங்கிட்டேன்:(சங்கீத ஞானம் உள்ளவங்க ரசிச்சு பதிஞ்சது
எனக்கும் பிரயோசனமாச்சு:)

said...

அக்கா!
இங்கே 10 வருசத்துக்கு முன் ரமணி தனியே தான் வந்தார். ஆனால் கச்சேரி பிரமாதம்.
மெண்டலின் ஸ்ரீநிவாசைத் தவற விட வேண்டாம்.
படங்களுக்கு நன்றி!
படம் எடுக்க வீடியோ எல்லா இடத்திலும் தடையே, எனினும் இது விற்றுப் பிழைக்க அல்ல, ஒரு ஞாபகத்துக்கு என சொல்லிப் பார்க்கவும். தலையசத்து விடுவார்கள்.

said...

வாங்க வல்லி.

//சங்கீத ஞானம் உள்ளவங்க ரசிச்சு பதிஞ்சது...//

இதானே வேணாங்கறது:-))))

எதாவது உ.கு?

நம்ம கொத்ஸ் பாருங்க, ராகத்தோட என்னெல்லாம் சொல்றாருன்னு....

சரி.. சங்கீத ஞானம் உள்ளவரின் டீச்சர்னு பெருமைப்பட்டுக்கலாமுன்னு இருக்கேன்.

said...

வாங்க யோகன்.

இருக்கும் ரெண்டரை மணி நேரத்தில் ரெண்டுவித இசைக்குப் பாகம் போட்டதில் எதையுமே முழுசா அனுபவிக்க முடியலை. அதிலும் முக்கியமா குழலை.

படம் எடுக்கத் தடை இல்லை. நம்ம 'இவர்'தான் எல்லாத்துக்கும் அதாரிட்டியா இருந்துக்கிட்டு நியாயம் பேசிக்கிட்டு இருந்தார். சரியான நாட்டாமை!

மேண்டலின் ஸ்ரீனிவாஸ், போனவருசம் ச்சென்னை இசைவிழாவில் கேட்டோம். அப்படியே விரல் ஓடுது. அருமைன்னு அப்பவே சிலாகிச்சுக்கிட்டு இருந்தார். நான்?
கொஞ்சம் கண்ணயர்ந்துட்டேன், அலைச்சல் காரணம். தாலாட்டா இருந்துச்சு :-)))