2/11
கடமை கடமைன்னு காலையிலேயே கிளம்பியாச்சு! கதவுங்களுக்குக் கைப்பிடி போடணும் இல்லையா? 311 லே இருக்கறமாதிரி ரொம்ப உயரத்துலே வைக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன். 311 லே 'எல்' ஷேப்புலே இருக்கறது, போறப்ப வர்றப்ப நம்மை இழுக்கும்! சரியா அது என் மார்பு உயரம் வேற. சில சமயங்களிலே அடிச்சுடும்........ படற வேதனை இருக்கே! ஐய்யோ.......
அதனாலே எல்லா கைப்பிடியுமே உருண்டையா வாங்கியிருக்கு! உயரம் ஜஸ்ட் எனக்குத் தகுந்தாப்போலே! நான் கதவுகிட்டே நின்னால் என் முழங்கை இருக்கும் உயரம். எது எது எங்கே போகுதுன்னு பார்த்துச் சொல்லியாச்சு! குமிழ்கள் எல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறம்.
சிலது 'டம்மி' சிலது ப்ரைவஸி லாக் உள்ளது.
வயரிங் வேலைதான் இன்னும் நடந்துகிட்டு இருக்கு! வீட்டைச் சுத்தி வெளியில் எல்லாப் பக்கமும் ரெவ்வெண்டு விளக்கு. ரெண்டு இடத்துக்கு செக்யூரிட்டி விளக்குகள், சென்ஸார் வச்சது. திறந்த வெளியா இருக்கும் பகுதிகளில் சில ப்ளக் பாய்ண்டுகள். அவுட் டோர் டிஸைன்கள். இல்லேன்னா மழைத்தண்ணியாலே ஆபத்தாச்சே.
3/11
காலையிலே எதுக்கோ போனோம். ஆங்.... பாக்கி இருந்த செங்கல் எல்லாம் வச்சிட்டாங்க! முன்னால பாக்க நல்லாதான் இருக்கு! ஜிப் ஆளுங்க வந்து வேலையை முடிச்சிட்டாங்க! இனி ஜிப் ஸ்டாப்பர்ங்க வந்து அதை ப்ளாஸ்டர் செய்யணுமாம். என்னத்தை ஸ்டாப் செய்வாங்க? எதுக்கு இந்தப் பேரு? ஒண்ணும் புரியலை. இப்ப இருக்கும் வீட்டைப் 311 புதுப்பிச்சப்பவும் இதெல்லாம் நடந்துச்சுன்னாலும், அப்ப நான் சரியாக் கவனிக்கலை. ப்ளாக் எழுத ஆரம்பிக்காத காலம் இல்லியா? 'கிரேக்' கதவுங்களுக்குப் பிடி வர்ற இடத்துலே துளை போட்டு வச்சிட்டாரு!
எலக்ட்ரீஷியந்தான் வேலையை செஞ்சுகிட்டே இருக்காரு! டவுன் லைட் வர்ற இடத்துக்கு ஓட்டை போட்டு வச்சிருக்காரு! கராஜ்லே ஆட்டோமேட்டிக் கதவுக்கு மோட்டார் பொருத்தியிருக்காங்க! ஆனால் நாம் சொன்னது இல்லை. வேற ஒண்ணு. டப்பா மாதிரி இருக்கு, நல்லாவே இல்லை! மொதல்லெ இதை மாத்தச் சொல்லணும்
சாயந்திரம் 'கிங்' ஊஞ்சல் பலகை கொண்டுவந்தாரு. அங்கே வச்சுப் பார்த்து அளவு குறிச்சோம். இன்னும் அதுலே பித்தளைக் கொக்கி பிடிப்பிக்கணும். சங்கிலிக் கம்பி போட்டுப் பார்த்தா நல்லா அம்சமா இருக்கு. ஆனா............ பலகை பயங்கர கனம்! அதுவே ஒரு 100கிலோ வருமோ? கிங் சொல்றாரு அது ஒரு 60 கிலோதானாம்! ஆஸ்ட்ராலியன் மரத்தில் செஞ்சதாம். ஜார்ரா டிம்பர்.
அவ்வளவு வெயிட் தாங்குமான்னு பாக்கணும்! 500 கிலோ தாங்கற மாதிரிதான் ஹூக் போட்டுருக்காங்க!
4/11
லேண்ட் ஸ்கேப் ஆளு வராருன்னு 10 மணிக்குப் போனேன். அந்த ஆளு வரலை! மத்தியானம் 4 மணிக்கு கோபால் சீக்கிரம் வந்து நாங்க 'மாஸ்டர் ட்ரேட்' போனோம். சாப்பாட்டறைப் பகுதியிலே கை கழுவுற வாஷ் பேஸின் இன்னும் சரியா அமையலே!
ஜிப் ஸ்டாப்பர்ங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்க! இதுக்குன்னே இருக்கும் ஒரு ப்ளாஸ்டர் காம்பவுண்ட் கலவையைச் சுவத்துலே அப்படியே அப்பிவிட்டுப் பூசறாங்க.
காலேல நம்ம முன்வாசக் கதவுக்கானப் பிள்ளையார்/யானை டிஸைன் செஞ்சு முடிஞ்சாச்சுன்னு லெட்லைட் கடையிலிருந்து ஃபோன் வந்தது. நேரம் கிடைச்சாப் போகணும்.
சாயந்திரம் போனப்பக் கடையை மூடியிருந்தாங்க! ஆனா, உள்ளே ஜன்னல் கட்டையில் அலங்காரமா உக்காந்துருக்கு. பார்கக நல்லாவே இருக்கு. கதவுக்கு ரெண்டுன்னு மொத்தம் நாலு. நாளைக்குக் கடை திறந்ததும் போகணும்.
5/11
எட்டு மணிக்குக் கிளம்பி நேரா 'கார்னிஸ்' cornice வாங்கப் போனோம். அவுங்க ( மான்ட்ரீயல் தெரு)இப்ப விக்கறதில்லையாம். இங்கே நம்ம ஊர்லே ஒரே ஒரு இடத்துலேதான் செய்யறாங்களாம். எந்த இடம் தெரியுமா? நம்ம 'தூண்' செஞ்சு கொடுத்தவுங்கதான்!ஆனா 'க்ளாஸ் ப்ரிக்' சின்னது ஒரு டாலர்ன்னு வச்சிருந்தாங்க! ஆசைக்கு ஒன்னே ஒண்ணு வாங்கினோம். கம்ப்யூட்டர்லே பதிவாகலேன்னு சும்மா எடுத்துக்கச் சொல்லுச்சு அந்தப் பையன். 50cent. இவர் ஒரு டாலரைக் கொடுத்து 'சாரிட்டி பாக்ஸ்' லே போடச் சொல்லிட்டாரு!
அங்கிருந்து நேரா, ஷார்ட் லேண்ட் ஸ்ட்ரீட் போய் கார்னிஸ், சீலிங் சென்டர் ( ரோஸ்) எல்லாம் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்துட்டு வந்தோம். மாடர்ன் டிசைன் வீடுகளில் கார்நீஸ் வைக்கறதில்லை. ஆனா இது வச்சாத்தான் ஒரு அழகும் அம்சமும் இருக்குன்னு எனக்கு எண்ணம். விக்டோரியன் லுக்! பூமாலைச் சரத்தில் அங்கங்கே ரிப்பன் முடிச்சுப் போட்டு வச்சுருக்கற டிஸைனைத் தேர்ந்தெடுத்திருக்கேன். எப்பவும் விழாக்கோலமா இருக்கட்டுமே. வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடன் இருக்கும் ஃபோயரில் ஒண்ணும், ஃபார்மல் லவுஞ்சில் ஒண்ணுமா சீலிங் ரோஸ் வைக்கறோம். அதுலே இருந்து ஷாண்டிலியர்(!) தொங்கும்.
அப்படியே, முன்வாசக் கதவுக்கு யானை டிஸைன் பண்ணிவச்சிருந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா, அதையும் போய்ப் பார்த்தோம்.ரொம்ப நல்லா வந்திருக்கு!
பகல் ரெண்டரை மணிக்கு நடந்தே 'அங்கே' போனேன். லேண்ட்ஸ்கேப் ( ஹார்டு) வந்தார். எங்கெங்கே மண்ணை நிரவி, சிமெண்ட் போடணும்ன்னு சொன்னோம். எவ்வளவு செலவாகும்ன்னு பாத்துச் சொல்றேன்னுட்டுப் போனார். என்னை நம்ம இவர், வீட்டுக்குக் கூட்டிவந்து விட்டுட்டு ஆஃபீஸ் போனார்!
ஜிப் ஸ்டாப்பர்ங்க வேலையை ஜரூரா சீக்கிரமா முடிச்சுகிட்டு இருந்தாங்க! 3 கோட்டிங்கு போடணுமாம். லெவெல் 4 ன்னு சொல்றாங்க!
இன்னைக்கு 'கை ஃபாக்ஸ் டே'Guy Fawkes Day வாணவேடிக்கை பாக்க மகள் எங்ககூட வர்றேன்னு சொன்னதாலே அவளுக்கு இஷ்டமான 'புட்டு' சமைச்சேன். அவளும் இந்த டிஸம்பர்லே வீடு மாறணும் என்று சொல்லி, ஒரு வீடு, வாடகைக்குத்தான் பார்த்திருக்கா. அங்கே அதைப் பார்வையிடப் போகறதுக்கு முன்னாலே 'அங்கே' போனோம். இதுதான் மகள் முதல் முறையா இதைப் பார்க்கவர்றது! ஒரு வினாடி அப்படியே திகைச்சு நின்னாள்.
"இப்படி இவ்வளோ நல்லா இருக்குமுன்னு எனக்குத் தெரியாது"
" ஏன்? பின்னே எப்படி இருக்குமுன்னு நினைச்சே? "
" ரொம்ப சுமாரா இருக்குமுன்னு இருந்தேன்"
" அதான் ஏன்?"
" நீங்கதான் கஞ்ச(பிசுநாரி)ங்களாச்சே.."
ஹா ஹா........... நம்மைப் பத்தின கருத்துக் கணிப்பு பார்த்தீங்களா!!! இது எப்படி இருக்கு:-)
இவருக்கு ஒரே சந்தோஷம்! உள்ளே கூட்டிட்டுப்போய் எல்லா விளக்கமும் சொல்லி சுத்திக் காமிச்சார். அவளும் 'நாக்குலே நல்ல சுருள் கத்தி' வச்சிக்கிட்டுப் அவளோட கருத்துக்களைப்(!)பேசினாள்.
எல்லா வருசமும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி 'கை ஃபாக்ஸ் டே' கொண்டாடறாங்க. இந்த 'கை ஃபாக்ஸ்' என்ற ஆள், 1605 ஆம் ஆண்டு, ப்ரிட்டிஷ் பார்லிமென்ட் கட்டிடத்தைத் தகர்ப்பதற்காகத் திட்டம் போட்டவர். ஆனால் திட்டம் நிறைவேறும் முன்பே, வெடி மருந்துடன் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அந்த நாளையே ஆங்கிலேயர்கள், 'கை ஃபாக்ஸ்' தினமாகக் கொண்டாடுறாங்க. இந்த நாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது, நியூஸியில் பட்டாஸ் விற்பனை உண்டு. அப்பக் கிடைக்கும் பட்டாஸை நாங்க வாங்கிப் பத்திரப்படுத்திக்கிட்டு, நம்ம தீபாவளிக்கு வச்சுக்குவோம். சுருக்கமாகச் சொன்னால் கை ஃபாக்ஸ், ஆங்கிலேயர்களின் 'நரகாசுரன்'!
சிட்டிக் கவுன்ஸில் பெரிய அளவுலே இந்த வாண வேடிக்கை நடத்தும். எல்லாம் ரொம்ப ஆர்கனைஸ்டு ஃபயர்வொர்க் ஷோ. கடற்கரையில் நடக்கும் இந்த கொண்டாட்டத்துக்கு சாயந்திரம் 7 முதல் இசைநிகழ்ச்சி உண்டு. கடைசியில் ஒம்போதரை மணிக்கு வாணவேடிக்கைத் தொடங்கும். என்ன......... இளையராஜா நிகழ்ச்சியா நமக்காக நடக்குது? அதான், சரியா பட்டாஸ் விடும் நேரத்துக்குப் போய்ப் பார்த்துட்டு ஓடிவந்துருவோம். இதுக்குன்னு ஒரு இடம் பார்த்து வச்சுருக்கோம். கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் இப்புறம். நல்ல மேடான இடம்.அங்கே இருந்து வா(ன)ண வேடிக்கை பார்த்துட்டுக் கடைசியா இடைவிடாம ஒரு பத்து நிமிஷக் காட்சி முடிஞ்சவுடன்,வேகமாக் கிள்ம்பிட்டோமுன்னா ட்ராஃபிக் ஜாம்லே இருந்து தப்பிச்சுடலாம்.
இன்னைக்கும் வழமை மாறாம இதைக் கடைப்பிடிச்சாச்சு:-)))))
6/11
வழக்கம்போல கோயிலுக்குப் போறதுக்கு முன்னே வீட்டைப் போனோம். வாசக்கதவு பேப்பர் கிழிஞ்சு இருந்துச்சு. மத்தியானம் போய் ஒட்டணும்!கோயிலிலே சாமியைக் கும்பிட்டுக்கிட்டு அப்படியே 'ரெட் பாத்'ன்ற ஒரு எலக்ட்ரிக்கல் சாமான் விக்கற கடைக்குப் போனோம். கும்பிடப்போன தெய்வம் குறுக்கெ வந்த மாதிரி நம்ம 'கேரி' யை அங்கெ பார்த்தோம். லவுஞ்சிலே லைட் போடறதுக்கு செஞ்சிருக்கற துளைகள் சமதூரத்திலே இல்லாம இருக்கேன்னு நினைச்சென். கேரிகிட்டே சொல்லி அதை மாற்றி வைக்கச் சொன்னேன்.
மத்தியானம் போய் பேப்பரையெல்லாம் ஒட்டினோம். துளையை ஏற்கனவே வெட்டிட்டாங்கல்லையா? அந்த வெட்டுன வட்டத்தைத் தேடி மறுபடி டேப் போட்டு ஒட்டுனோம்! தப்புத் தப்பா வெட்டுனதை பூசறதுக்கு முன்னாலே ஒட்டிட்டா அசிங்கமாத் தெரியாது. இல்லேன்னா நானும் பட்டினத்தார்(?) மாதிரி மனுஷனுக்கு ஒன்பது ஓட்டை, இந்த வீட்டுக்கு ஒன்பதினாயிரம் ஓட்டைன்னு பாடவேண்டி இருக்கும். வீட்டைப் பூட்டிட்டு வந்துட்டோம். நாளைக்குப் போய் திறக்கணும்!
7/11
சாயந்திரம் நானும் மகளும் போய், பக்கவாட்டுக் கதவைத் திறந்து வச்சிட்டு வந்தோம்.
தொடரும்................
Wednesday, September 12, 2007
வீடு 'வா வா'ங்குது ! பகுதி 21
Posted by துளசி கோபால் at 9/12/2007 01:48:00 PM
Labels: அனுபவம்/நிகழ்வுகள் வீடு
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//அவளும் 'நாக்குலே நல்ல சுருள் கத்தி' வச்சிக்கிட்டுப் அவளோட கருத்துக்களைப்(!)பேசினாள்.//
ஆறாதே நாவினால் சுட்ட வடு.
//நீங்கதான் கஞ்ச(பிசுநாரி)ங்களாச்சே// பொண்ணு 21 ம் பிறந்த நாளுக்கு ஏதாவது சிக்கனமா வாங்கிக்குடுத்திட்டீங்க்ளோ.
வாங்க கொத்ஸ்.
இப்பத்துப் பசங்க எல்லாம் எங்களைப்போல இல்லீங்க.
நாங்கெல்லாம் அந்தக் காலத்துலே அப்பா அம்மா சொல்லை
அப்படியே வேதவாக்கா எடுத்துக்கிட்டு இருந்தோம்(?!)
நீங்ககெல்லாம் எங்களுக்கு அடுத்த தலைமுறை. உங்க
எண்ணங்கள் கருத்துக்கள் எல்லாம் வெவ்வேறயா இருக்கு.
ஆனா, மனசுலே நினைச்சதைத் தைரியமா நம்மகிட்டே சொல்லும்
அளவுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கோம்னு நினைச்சுக்க
வேண்டியதுதான்.
வாங்க ச்சின்ன அம்மிணி.
அட........ நீங்க வேற......... 21 பொறந்தநாள் செலவு எல்லாமே
நாம்தானே செஞ்சோம். அதுவுமில்லாம ஒரு புது டிவிடி ப்ளேயர் வேற
பரிசாக் கொடுத்தோம். அப்ப இது விலை கூடுதலாவேற இருந்துச்சு. இப்பப் பாருங்க,
சூப்பர் மார்கெட்லே 39 டாலருக்குப் போட்டுருக்கு:-))))
நம்ம முதல் டிவிடி ப்ளேயர் சிங்கையிலே 550 டாலர்க்கு( நியூஸி 625) வாங்குனது. இப்ப
நினைச்சுப் பார்த்தா....................ஹைய்யோ
ஆமாம,் அந்த கலவையை ஜிப் லாக் அட்டை முழுவதும் பூசிகிறார்களா அல்லது ஜாயின்ட் மாத்திரமா?
அனேகமாக முழுவதுமாகத்தான இருக்கும் என்று உள் மனது சொல்கிறது.உங்கூரில் வித்தியாசமாக இருக்குமோ என்னவோ!
என்ன்னவோ செய்திருக்கிறீர்கள்...நெருப்பு பாதுகாப்புக்கு என்ன முன்னேற்பாடு உள்ளது? வெறும் அலாரம் மாத்திரம் தானா?
GAS & Fire sensor ஒருங்கிணைந்து உள்ளதா?
ஒரே கேள்விமயமாக இருக்கிறதல்லவா?
வாங்க குமார்.
ஜிப் போட்டதும் இந்தக் கலவையை முதல்லே ஒட்டும் இடத்துலே பூசிவிட்டுக் காயவைக்கிறாங்க.
அதுக்கப்புறம் மொத்தப் போர்டுக்கும்தான் பூசறாங்க. அதுவும் 3 முறை. ஒவ்வொரு முறை பூசுனதும்
காயவைச்சு, அதை லேசா சேண்டிங் செஞ்சுட்டு அடுத்த முறை பூசறாங்க. காயவைக்கன்னு ஹீட்டர்ஸ்
எல்லாம் போட்டுவைப்பாங்க.
நெருப்புக்கு படுக்கைஅறை, சமையல் அறையை ஒட்டி இருக்கும் இடம், வெராந்தா எல்லாம்
ஸ்மோக் அலாரம் கண்டிப்பா வைக்கணும். ஜிப்லேயே நெருப்பைப் பரவாமல் தடுக்கும் போர்டும்
போட்டுருக்கு. இது இல்லாம செக்யூரிட்டி அலாரம் வித் பேனிக் பட்டன் இருக்கு.
வீட்டில் பூஜை சமயம் அலாரம் அணைச்சுறணும். சாம்பிராணி புகையை சட்னு புடிச்சுட்டுக்
கத்த ஆரம்பிச்சுருது:-)
Nice!!!!!!!!!!!
ப்ரஸண்ட் மேடம்!
ஊஞ்சல் படம் பார்த்தேன். அதுக்கு சங்கிலி கம்பிதான் பெஸ்ட். அதுவுமமாடும் போது க்ரிச் க்ரிச்...க்ரிச் க்ரிச் சத்தம் வந்தாதான் ஊஞ்சல் இருக்கிற பீலிங்கே வரும். அந்த சத்தத்துக்கும் ஏற்பாடு பண்ணிருங்க. இப்பலாம் சேர் மாதிரியே ஊஞ்சல் பண்றாங்களே...படுத்துக்கிட்டே ஆடலாம். ஆடிகிட்டே படுக்கலாம்.
ஆடுமாடு
வாங்க இசக்கிமுத்து.
முதல்முறையா நம்ம வீட்டுப் பக்கம் வந்துருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?
வருகைக்கு நன்றிங்க.
வாங்க சிஜி.
ஆஜர் போட்டாச்சு:-)
வாங்க ஆடுமாடு.
நாற்காலி மாதிரி முதுகுக்கு சப்போர்ட் இருக்கறதைப் பார்த்திருக்கேன்.
நம்ம நினைவுகளில் எங்க பாட்டி வீட்டு ஊஞ்சல்தான் நிக்குது. அதுதான் கூடியவரை
அதேபோல பலகையாவே போடுறோம். இதுலே இன்னொரு வசதியும் இருக்கு.
எந்தப் பக்கம் வேணுமுன்னாலும் உக்காந்துக்கலாம்.
சங்கிலிதாங்க.........யானை இருக்கறதை எங்க இவர் சிங்கையில் பார்த்தாராம்.
ஆனால் அது நீளம் குறைவா இருக்கு. ஒருவேளை பத்தலைன்னா? கிட்டவா இருக்கு,
திருப்பித்தரன்னுட்டு இந்த மாடல் வாங்கி வந்துட்டார். நானும் அடுத்தமுறை இந்தியா
வரும்போது யானை போட்டது ஒண்ணு விசாரிக்கணும். தேறுமான்னு தெரியலை.
Post a Comment