Monday, September 03, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 17

12/10
இன்னைக்குப் போயி அடுக்களை கேபினெட்க்கு கைப்பிடியெல்லாம் முடிவு செஞ்சாச்சு. பார்க்க ரொம்ப ப்ளெயினா, லேசா ஒரு கர்வ் இருக்கும் கைப்பிடிகள். அழுக்கு சேராது. துடைக்கறதும் சுலபம். அந்தக் கடை இருக்கறதே நமக்குத் தெரியாது! 'கிங்'தான் கூட்டிட்டுப் போனார். விதவிதமான நல்ல சாமான்கள் அங்கே இருக்கு!

பூட்டுகள் தயார்ன்னு ·போன் வந்ததாம். இவர் போய் வாங்கிகிட்டு வந்தார். அந்தம்மா 'தப்புத்தப்பா'க் கொடுத்திருக்காங்க. அதை திருப்பிட்டு வந்தோம். நல்லது வந்ததும் ஃபோன் பண்ணுவாங்களாம்! இவங்க வேற, ஏதாவது கொஞ்சம் மாத்தணும்னு சொன்னாலும் பயந்திருவாங்க!


எலக்ட்ரீஷியன் தான் பொறுப்பா வேலை செஞ்சுகிட்டு இருக்கார். இன்னும் கொஞ்சம் ஒயர் வேணுமாம். வாங்கிக் கொடுத்தாச்சு!கதவுங்க எல்லாம் 'ஹேக்ளி'யிலேயிருந்து வந்திருச்சாம். பாத்தோம். நல்லாதான் செஞ்சிருக்காங்க. நிலைப்படியோடவே வருது! கொஞ்சம் வேலை தெரிஞ்சிருந்தா, நாம வீடு கட்டறது இங்கே சுலபம்தான்:-) அதுக்குள்ளே சில கதவைப் போட்டுட்டேன்னு பெருமையாச் சொல்லிக்கிட்டுக் கூட்டிட்டுப்போய் காமிச்சார் க்ரேக். எனக்கு ரெண்டு கைகள் போதுமா, தலையில் அடிச்சுக்க? பாருங்க, கண்ணாடிக் கதவை ரெண்டு 'பெட் ரூமுக்கு' போட்டு வச்சிருக்காரு! யாராவது, கண்ணாடிக் கதவைப் படுக்கை அறைக்குப் போடுவாங்களா? இங்கே என்ன லைவ் ஷோவா நடக்குது? :-) இந்தச் சின்ன விஷயம் கூடவா மனசுக்குத் தெரியாது? அசடு வழியறார் க்ரேக்:-)


'க்ளிண்டன்' அவனோட 'முதல் கதவு' போட்டுட்டானாம். சந்தோஷமா இருந்தான். அந்தக் கதவுகூட அவனை ஒரு ·போட்டோ எடுத்தேன். சின்னப் பையந்தானே! 17 வயசுதான். தொழில் படிப்புன்னு நம்ம வீட்டுலே அவன் 'வேலை கத்துக்கறான்.' இது பாத்ரூம் கதவு. நல்லவேளை இதையும் ஸீ த்ரூவா போடலை:-)
சாயந்திரம் போனப்ப எல்லாக் கதவுகளும் போட்டிருந்தாங்க. ஆனா, கேவிட்டி ஸ்லைடர்' கதவுகளையேக் காணோம். அப்புறம் 'பில்டருக்கு' ஃபோன் செஞ்சு மெஸ்ஸேஜ் விட்டிருக்கு!

கோட் கப்போர்டுக்கு ஒரு இடத்துலே 'பை ஃபோல்ட்' சொல்லிட்டு, இங்கே ஏற்கனவே ஆர்டர் செஞ்சதை கேன்ஸல் செய்யலே. இப்பப் பார்த்தா இது வந்திருக்கு! உடனே இன்னொரு இடத்துலே செய்யச் சொன்ன ரெண்டு கதவுலே ( பை·போல்ட்) ஒண்ணைக் கேன்ஸல் செஞ்சோம்!

13/10
இன்னைக்கும் எலக்ட்ரீஷியன் தான் வேலை செய்யறார். இன்னும் ஒயர் வேணுமாம். வலைப்பின்னல் மாதிரி ஒயருங்க கண்டமேனிக்கு இழுத்துருக்கு. இதுலே வீடு முழுக்க பாட்டு கேக்கலாமுன்ற ஆசையில் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர்ன்னு வேற ஏற்பாடு. இப்பவே ஒயர் இழுத்து வச்சுட்டா, வேணுங்கறபோது சுலபமாப் போட்டுக்கலாமாம். எல்லா அறைகளிலும் ரெவ்வெண்டு டெலிபோன் ஜாக், டிவி ஆண்டெனா, நாலு சுவத்துக்கும் ப்ளக் பாய்ண்ட்ஸ்ன்னு களேபரமா இருக்கு. மத்தியானம் மூணேமுக்காலுக்கு ஜன்னல் வருதாம். நான் போகணும்! ஒரு நாலேமுக்காலுக்குப் போனா, ஜன்னல் வந்து அதை சரியான இடத்தில் வச்சிருந்தாங்க! வாசக்கதவும் வந்து அதையும் பொருத்தியாச்சு.ஆனா, ஜன்னலுங்க எல்லாம் தப்பான டிசைன்!
ஒரு படுக்கை அறையோட ஜன்னல், முதல்லே பெருசா செஞ்சுட்டு திருப்பி எடுத்துகிட்டுப் போனது வந்திருச்சு, ஆனா அதையும் சரியாச் செய்யலெ! எத்தனைதடவைதான் திருப்பித் திருப்பி எடுத்துகிட்டுப் போவாங்களோ?
நாளைக்கு காலையிலே 11 மணிக்கு வராங்களாம். தப்பான ஜன்னலுங்களை என்ன செய்யலாம்னு யோசிக்கறதுக்கு! இந்தக் கம்பெனியைப் பத்தி ஒரு தகவல் இப்ப சொல்லப்போறேன் உங்களுக்கு.இந்தக் கம்பெனிக்கு முதல் முதல்லே போனப்ப, நமக்குக் கொடேஷன் கொடுத்து நம்ம வேலைக்குப் பொறுப்பு எடுத்துக்கிட்டார் ஒருத்தர். தேவைக்கு ஆறுவாரம் இருக்கும்போது ரிமைண்டர் கொடுக்கலாமுன்னு இருந்தோம். இதுக்கு அடுத்தவாரமே இந்தக் கம்பெனியை மூடப்போறாங்கன்னு பேப்பரில் செய்தி வந்துச்சு. சரி, அப்ப இன்னொரு இடத்துலே கொடேஷன் வாங்கலாமுன்னு இருந்தோம். அப்ப இந்தப் பொண்ணு 'லிஸா', ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வந்து, 'எங்கப்பாவோட கம்பெனிதான் இது. பார்ட்னர்ஸ் கூடத் தகராறு ஆகிப் போய்த்தான் மூடும்படியான நிலை வந்துருச்சு. இப்ப தகராறை ஒருமாதிரி சரி செஞ்சுட்டோம். இனிமே நாந்தான் இந்த பிஸினெஸைப் பார்த்துக்கப் போறேன். நான் பொறுப்பு எடுத்துக்கிட்டதும் செய்யப்போற முதல் வேலை உங்களுதுதான். எனக்கு நீங்க சப்போர்ட் செய்யுங்க. நல்லபடியா ஜன்னல்களைச் செஞ்சுதரேன்'னு சொன்னாங்க. எங்க வேலைப் பொறுப்பை ஏத்துக்கிட்டவர் இப்ப வேலையை விட்டுட்டுப் போயிட்டாராம். அவுங்கத் தொழிற்சாலைக்கு நேர் எதிரா இருக்கும் இன்னொரு இடத்துக்குத்தான் போயிருக்கார். எதாவது வெரிஃபை பண்ணணுமுன்னா நாங்க அவர்கிட்டேக் கேட்டுக்கிட்டுச் சரியா செஞ்சு தரோமுன்னு சொன்னாங்க.

எனக்கும் ஒரு கடை நடத்தி( மூடு)ன அனுபவம் இருந்ததாலே, 'பாவம். ச்சின்னப் பொண்ணு'. (என் மகளைவிட ரெண்டு மூணு வயசுதான் அதிகம் இருக்கும்.) அழமாட்டாக் குறையாக் கேக்குது. ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாமுன்னு கொஞ்சம் இரங்கிட்டேன். பெண் என்றால் பேயும் இரங்குமாமே............ இந்த விஷயத்தி (லும்)ல் கோபாலைப் பேசவே விடலை(-:பொய்டு ஃபோன் செஞ்சாரு. க்ளாஸ் ப்ரிக் விஷயம் சொன்னேன். 'அது சரியான அளவு இடம்தான் விட்டுருந்தேன் ப்ளானில். நான் 'பில்டர்'கிட்டே பேசறேன்'னு சொன்னாரு!


செங்கல் வைக்கப்போற ஆளு ஃபோன் செஞ்சு, நாளைக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வேணும்னு சொன்னாரு!. என்னவோ எல்லாம் ஒரே குழறுபடியா இருக்கு.
பிங்க்பேட்ஸ் வந்து இறங்கியிருக்கு. சனிக்கிழமை போடறாங்களாம்!

14/10
காலையிலே 11 மணிக்கு லிஸா & க்ரூப் 'டாண்'ணு வந்துட்டாங்க! நம்ம 'ப்ளான்'லே இருக்கறதும் அவுங்க சப்ளை செஞ்சதும் வேற வேற டிஸைன்! மன்னிப்பெல்லாம் கேட்டாங்க. அதையெல்லாம் சரி செஞ்சு தரேன்னு சொன்னாங்க. ஆனா ரெண்டு வாரம் ஆகுமாம்! கண்ணாடி போடற ஜன்னலுங்களையெல்லாம் கணக்கெடுத்துக்கிட்டுப் போனாங்க! '

லிஸா'கிட்டே 'நான் உங்க கம்பெனியை மத்தவுங்களுக்கு ரெகமண்ட் செய்யமாட்டேன்னு சொல்லிட்டேன். அவுங்க எல்லாம் போன பிறகு, 'நீ என்னாத்துக்கு இப்படி முகத்துக்கெதிராச் சொன்னே? உன் மனசுலே போட்டு வச்சுருக்கலாமுல்லே'ன்னு இவர்தான் கத்துனார். உண்மையைச் சொன்னாத் தப்புங்களா?


15/10இன்னைக்கும் எலக்ட்ரீஷியன்தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தார்! சில அறைகளில் பிங்க் பேட்ஸ் போட ஆரம்பிச்சாச்சு! கராஜ்லே அடுக்கி இருக்கற பேட்ஸ்ங்களை வேற இடத்துக்கு மாத்தச் சொன்னோம். கராஜ்லேதான் மழைத் தண்ணி வந்திருதே. பில்லர்ங்க வந்து இறங்கியிருக்கு. பாலிகட் ஆளுங்க வந்து மறுபடியும் பாத்துட்டுப் போனாங்க!

16/10
காலையிலே கோயிலுக்குப் போறமுந்திப் போனோம். ரெண்டு பசங்க, நம்ம க்ளிண்டனும், அவன் ஃப்ரெண்ட் ஃப்லிப்பும் பிங்க் பேட்ஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க! கிரேக் கதவுங்களையெல்லாம் சரியாப் போட்டுக்கிட்டு இருந்தார். 'ஸ்லைடிங் கதவு' நல்லா சுலபமா சாத்துது! கொஞ்சம் பிரவுண் பேப்பர் கொண்டுபோய் முன்கதவு கண்ணாடி வரப்போற இடத்துலே ஒட்டுனோம்!
தூண் கராஜ் பக்கம் வர்றதை ஒருத்தர் வந்து 'செட்' பண்ணிக்கிட்டு இருந்தார். அடி வட்டத்தை நல்லா மழ மழன்னு ஆக்கி அதும்மேலே ரெண்டு பாகமா வர்ற தூணை ஒருவிதமான பசை போட்டு ஒட்டினார்.நம்ம மஹா விஷ்ணு 'நரசிம்ம அவதாரம்' எடுத்தப்ப, ஹிரண்யனைக் கொல்ல தூணை ரெண்டாப் பிளந்துகிட்டு வந்ததாச் சொல்வாங்க பாருங்க. இப்போ அப்படி வந்தார்னா சரி பாதியா பிளக்கலாம்!
மத்தியானமா மறுபடிப் போய்ப் பார்த்தோம். வேலை நடந்துகிட்டு இருந்துச்சு! கராஜ் முன்பக்கம் ரெண்டு தூணையும் வச்சாச்சு. பசை ஒட்டிக்கறதுக்காகக் கயிறுபோட்டு கட்டி இருந்தாங்க!அப்பப் பாத்து, நம்ம மலேசிய நண்பர்கள் ரேச்சலும் விஜயனும் வந்தாங்க. அவுங்களுக்குச் சுத்திக் காமிச்சோம்!
இன்னைக்கு ராத்திரி தமிழ்ச் சங்க நவராத்திரி விழா முடிஞ்சு வெளியே வந்து பாத்தா, பயங்கர மழை பேய்ஞ்சிருக்கு. வீட்டுக்கு வரும்போதேமணி 10 ஆயிருச்சு. வீட்டுலே ஏதாவது ஒழுகி இருக்குமோன்னு ஒரே கவலையா இருக்கு.சங்க நிகழ்ச்சிங்கவேற ரொம்ப நல்லா அமைஞ்சுடுச்சு! அதுலே என் மனசுக்கு ரொம்பத் திருப்தி. நாந்தானே கலை & கலாச்சார ஒருங்கிணைப்பாளர். மனசு நிறைஞ்சதாலேயும், வீட்டுக் கவலையாலேயும் சரியாத் தூக்கமே வரலை!தொடரும்................

7 comments:

Anonymous said...

ஜன்னல இத்தன தரவ மாத்திருக்காங்களா? மாத்தரதுக்கு எக்ஸ்ட்ரா எதுவும் சார்ஜ் பண்ணலியே!!

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

என்னங்க நீங்கவேற..............

தப்புத்தப்பாச் செஞ்சு கொடுத்துட்டு அதை மாத்தக் காசுவேற
கொடுக்கணுமா?

கொடுத்த டிஸைனை சரியாச் செஞ்சு, சப்ளை செய்யணுமுன்னுதானே ஒப்பந்தம்?

said...

இந்த விஷயத்தி (லும்)ல் கோபாலைப் பேசவே விடலை
அதான் இங்கு வந்தபோது அவ்வளவாக பேசவில்லையா? :-))
அதென்னங்க பிங்க் பெட்ஸ் ?
எங்காயாவது தூங்கிட்டனா?
அந்த கேரேஸ் தூணின் மர்மம்(படம்) உடைத்ததற்கு ரொம்ப நன்றி.

said...

வாங்க குமார்.

//அதென்னங்க பிங்க் பெட்ஸ் ?
எங்காயாவது தூங்கிட்டனா?//

இல்லீங்க. இனிமேத்தான் அடுத்த பகுதியில் இதைப்பத்துன
முழுவிவரம் வருது.

தூணில் அப்படி என்னங்க மர்மம்?

'நரசிம்மன்' இருக்கானா? இல்லையான்னா? :-))))

said...

//மத்தியானம் மூணேமுக்காலுக்கு ஜன்னல் வருதாம். நான் போகணும்! ஒரு நாலேமுக்காலுக்குப் போனா, //

IST!!

//கேவிட்டி ஸ்லைடர்'// Cavity Slider - இது எந்த மாதிரியான கதவு? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. முடிஞ்சா ஒரு படம் ப்ளீஸ்.

said...

வாங்க கொத்ஸ்.

// IST // :-)))))

வந்து இறங்கட்டும். அப்புறம் போனால் ஆச்சுன்னுதான்:-)))
அதுவரை பதிவு எதாவது எழுதலாமே..............
அன்னைக்கு என்ன பதிவு போட்டேன்னு சொல்லவா?

வீடுகள்??????? என்ற தலைப்பில் மெய்யாலுமே எழுதி இருக்கேனாக்கும்:-)

Cavity Slider பிரமாதமில்லை. வாச நிலைப்படியில் வெற்றிடம் வச்சுக் கதவு அதுக்குள்ளே
போயிருது. எல்லாம் இடம் அடையாம இருக்கத்தான்:-))))

படம் அடுத்த பகுதியில் போடறேன், உங்களுக்கான ஸ்பெஷல்:-)

said...

Thulasi, puthu veettuk kathaiyila pinnoottam poda mudiyalai.
adhaan inga potten.
ithai padicchaattu iththanai naaL ithukkum pinnuttam podaamap ponemee nu irukku.

துளசிதளத்தின் வேற ஒரு பதிவில் வந்த பின்னூட்டம் வல்லியிடமிருந்து.