Friday, November 25, 2005

பெரியது கேட்கின்.

அது ஒரு கல்யாண வீடாத்தான் இருந்துச்சு. சம்பவம் நடந்தது ஒரு முப்பத்துவருசத்துக்கு முன்னாலே . இப்பத்தான் வீட்டுலே கல்யாணம் செய்யறதுன்றது கொஞ்சம் கொஞ்சமா மாறி,கல்யாணமண்டபம் கிடைச்சப்பிறகுதான் பொண்ணு பார்க்கறதே நடக்குதாமே?


அது ஒரு கல்யாண மண்டபம். இடம் சமையலறை. மறுநாள் கல்யாணவிருந்துக்காக எல்லாக் காய்கறிகளும் குமிஞ்சுகிடக்குது. கல்யாணவீட்டுக்காரங்களோட சத்தம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிருச்சு. எல்லாரும் நல்ல தூக்கத்துலே.


காய்கறிகள் மட்டுமே முழிச்சுக்கிட்டு இருக்குதுங்க. மறுநாளோட தங்கள் வாழ்வு முடியப்போதுன்றதாலே தூக்கம்வராமத் துக்கமா இருக்குதுங்க. ஒவ்வொண்ணும் தான் பொறந்த இடத்தையும், 'வாழ்ந்த' வாழ்வையும் சொல்லிச் சொல்லி அங்கலாய்க்குதுங்க. இவ்வளவு ஆத்தாமைக்கு நடுவிலேயும் தங்களில் யார் பெரியவன்/ள் ன்ற பிரதாபம் வேற!


பூசணிக்காய் சொல்லுச்சு, 'என் உருவத்தைப் பார்த்துமா உங்களுக்கு இந்த சந்தேகம்? நாந்தான் பெரியவன்.'


புடலங்காய்: என் உயரத்தைப் பார்த்துட்டு நீங்களே முடிவு செய்யுங்க!


கத்தரிக்காய்: நான் இல்லாத ஒரு விருந்தை நினைச்சுப் பார்க்க முடியுமா? ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாம எல்லார் வீட்டு விசேஷத்திலும் நான் இருக்கேன் பாருங்க.


வெண்டைக்காய்: ச்சும்மா வழவழ கொழகொழன்னு பேசாதீங்க. என்னாலேதான் ஜனங்களுக்கு 'மூளை' வளருதாம். அப்ப யாரு பெரியவன்?


கருவேப்பிலை: என்னதான் என்னை கடைசியிலே வீசி எறிஞ்சாலும் நான் இல்லாம சமையல் பூரணமாகுமா?


இப்படி ஒவ்வொண்ணும் பிரதாபத்தை அளந்து விட்டுக்கிட்டு இருக்கும்போது பெரிய வெங்காயம் மட்டும் ஒருசிரிப்போடு எல்லாத்தையும் பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருந்துச்சு. அப்பப்ப ஒரு எள்ளல் பார்வை வேற!


பொறுத்துப் பொறுத்த்ப் பார்த்த மத்த காய்கறிகள் எல்லாம் இப்ப வெங்காயத்தைச் சுத்தி நின்னுக்கிட்டு ஒரே கூச்சல்போட்டுச்சுங்க. 'என்னமோ நீதான் எல்லாரையும் விடப் பெரிய 'வஸ்தாது'ன்றமாதிரி ஏளனமாச் சிரிக்கிறே, என்னாவிஷயம்? நீ தான் பெரியவனா? எப்படி எப்படி? கொஞ்சம் சொல்லு, சொல்லு'


வெங்காயம் சொல்லுச்சு, ' என்னை உரிக்கிறப்பயும் நறுக்கறப்பயும் மக்கள் விடுற கண்ணீரைப் பார்த்தீங்களா?உங்களை வெட்டுறப்ப யாருக்காவது துக்கம் இருக்கா? அப்படியே சரசரன்னு வெட்டிருவாங்கல்லெ. எனக்கு மட்டும்தான்இந்த சிறப்பு. ஏன்னா நான் கடவுளின் அம்சம்'!!!


மத்த காய்ங்க எல்லாம் வாயடைச்சு நின்னுச்சுங்க. பச்சமிளகாய் மட்டும், சின்னக் குரல்லே, 'என்னைத் தொட்டுட்டுக் கையைத் தெரியாம கண்ணுலே வச்சுப் பாருங்க. அப்பத்தெரியுமு'ன்னு சொல்லுச்சு.


வெங்காயம் என்ன சொல்லப்போவுதோன்னு எல்லாரும் அமைதியா இருந்தாங்க. கொஞ்சநேரமாச்சு. வெங்காயம்சொல்லுச்சு, என்னைக் குறுக்கா நறுக்கிப் பார்த்தா. மஹாவிஷ்ணு கையிலே இருக்கற சக்கரம். நெடுக்கா நறுக்கிப்பார்த்தா அது அவரோட மத்த கையிலே இருக்கற சங்கு. இப்பச் சொல்லுங்க யார் பெரியவன்?


அட! இதை நாம இதுவரைக் கவனிக்கலையேன்னு இருந்துச்சு மத்ததுங்களுக்கு. எனக்கும்தான்!அது நான் கேரளாவுலே இருந்த சமயம். மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டது அப்பத்தான். 'பாலரமா'ன்ற சிறுவர்பத்திரிக்கையிலே வந்த கதை இது. என்னவோ தெரியலை, அப்படியே மனசுலெ நின்னுபோன கதைகளிலே இதுவும் ஒன்னு.

15 comments:

said...

காய்கறி கதை எழுதிட்டீங்க!நல்லா இருக்கு

//வெங்காயம்சொல்லுச்சு, என்னைக் குறுக்கா நறுக்கிப் பார்த்தா. மஹாவிஷ்ணு கையிலே இருக்கற சக்கரம். நெடுக்கா நறுக்கிப்பார்த்தா அது அவரோட மத்த கையிலே இருக்கற சங்கு. இப்பச் சொல்லுங்க யார் பெரியவன்?// பெரிய வெங்காயம் தான் :-)

said...

உதயகுமார்,

சந்தேகமென்ன? இப்ப வெங்காயம் தட்டுப்பாடு திடீர் விலை உயர்வுன்னு செய்தி வந்துருக்குல்லே.

said...

நல்ல கதை அக்கா...ரசித்தேன். :-)

said...

அருமையான கதை மூத்த சகோதரி. தற்பெருமை பேசித்திருந்தவைகளுக்கு சரியான சவுக்கடி. நம்மைவிடப் பெரியவர் இவ்வுலகத்தில் எங்காவது நிச்சயம் இருப்பார்கள்.

said...

உரிக்க, உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு இருக்கா?. நல்லா இருக்கு கதை.

said...

அன்புள்ள குமரன், மூர்த்தி, மரம்

நன்றிகள்.

கதை பிடிச்சிருந்தது சந்தோஷம்.

said...

ada.. template nalla irukkuthe.. eppo change panneenga?!

said...

வெங்காயம்..
அப்படின்னு ஏளனமா சொல்லக்கூடாதோ :)

said...

ராம்கி,

ஆடிக்கொருநாள் அம்மாவாசைக்கொருநாள் வந்தா
இப்படித்தான். யானை போய் பூனை வந்தே ஒரு மாசத்துக்கும் மேலாச்சே.

ஓரங்கட்டிக்கிட்டே இங்கேயும் அப்பப்ப வந்து போங்க:-)))

said...

மணியன்,

அதான் 'வெங்காயம் வெங்காயம்'னு சொன்னவர் போயிட்டாரே.

வெங்காயம் விலையைப் பார்த்தா எங்கே இருந்து வரும் ஏளனம் இனி?

said...

periyamma yanai hip hop aaduthu pola:-)

said...

//இப்படித்தான். யானை போய் பூனை வந்தே ஒரு மாசத்துக்கும் மேலாச்சே//

நான் கேக்குறதுக்கு முன்னாலேயே ராம்கி கேட்டுட்டார். அவர் ஒரு ஆளு கேட்டா நூறு பேர் கேட்டதுக்குச் சமம் :-))

கோச்சுக்காதீங்க அக்கா. நானும் ரொம்ப லேட்டாத்தான் வர்ரேன். இனிமே ஒழுங்கா வர்ரேன்

நல்லா இருக்கு பூனை

said...

என்ன சொல்றாங்க ...இவங்க ந்ல்லாம்? ஆன போய் பூன வந்து, அதுவும் போய்..இப்ப ப்ளெயினா இருக்கிறப்போ இவங்க என்ன பூனையப் பத்திச் சொல்றாங்க...புரியலையே?

said...

தருமி,

எல்லாம் இந்தப் பக்கத்துலே 'தூங்கற பூனை'யைத்தான் சொல்றாங்க.

ப்ளெயினாவா இருக்கு?

தேவுடா!

said...

கல்வெட்டு,

வாங்க வாங்க. என்னடா ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்.

கொஞ்சம் நம்ம தருமிக்கு 'பூனை' இருக்கற இடம் சொல்லிடுங்க:-))))