Tuesday, November 15, 2005

நியூஸிலாந்து பகுதி 26


கேப்டன் ஜேம்ஸ் குக்.

பொறந்தது அக்டோபர் 28, 1728.

19 வயசுலேயே நிலக்கரி கொண்டுபோற கப்பல்லே வேலை. அதுக்கப்புறம் ராயல் நேவி யிலே சேர்ந்தது 27வது வயசுலே.சரியான வழியைச் சொல்றதுலேயும், போற இடங்களைப்பற்றி ச்சார்ட் வரையறதுலேயும் கில்லாடி.


ஏபெல் டாஸ்மென் கண்டுபிடிச்ச நிலப்பகுதியைப் பத்தி மேலும் விவரம் அறிஞ்சுக்கறதுக்காக இவரை அனுப்புனாங்க.இங்கே வந்து பாக்கறதுக்கு முன்னாடியே வீனஸ் கிரகம் சூரியனை கடந்து போறதைப் பத்தித் தெரிஞ்சுக்கவேண்டி,தாஹித்தி தீவுவரை வந்தவர்தான். இவர் இங்கே வந்த கப்பலுக்குப் பேர் 'எண்டீவர்' ( HMS ENDEAVOUR).இவுங்களோட கப்பல்லே வந்தவுங்களிலே ரெண்டு பேர் ஸ்பெஷல் ஆசாமிங்க. ஒருத்தர் ஜோஸெஃப் பேங்க்ஸ்,தாவர இயல்நிபுணர்.இங்கே கிடைக்கப்போற புதுச் செடிங்க, பூச்சிபொட்டு, பறவை எல்லாத்தையும் பத்தித் தெரிஞ்சுக்க ஆர்வமா வந்தவர். அடுத்தவர் சிட்னி பார்கிஸன். அவர் ஓவியர். இங்கே பார்க்கப்போற இடங்களை அப்படியே படமா வரைஞ்சு கொண்டு போகவேவந்தவர். அதானே, அந்தக் காலத்துலே கேமெரா ஏது? எல்லாரும் கிளம்பி வந்துக்கிட்டே இருந்தாங்க.


1769 வது வருஷம் அக்டோபர் தேதி 6. பகல் 2 மணி. கொடிமரத்து மேலே குந்திக்கிட்டுப் பார்த்துக்கிட்டே வந்த ச்சின்னப்பையனான 'நிக்கோலஸ் யங்' 'நிலம் தெரியுது'ன்னு குரல் விட்டதும் எல்லாரும் வெளியே வந்து பார்த்திருக்காங்க. இங்கத்து வடக்குத்தீவின் கிழக்குக் கடற்கரை. நிக்கோலஸ்க்கு ஒரு பாட்டில் ரம் பரிசாக் கிடைச்சது.

முதல்முதல்லேநியூஸியின் கிழக்குப் பகுதியைப் பார்த்த ஐரோப்பியன். அந்தப் பகுதிக்கு 'யங் நிக்ஸ் ஹெட்' Young Nick's Head ன்னுபேர் சூட்டினாங்க.
இப்ப கிஸ்பேர்ன் Gisborne னு சொல்ற இடத்துலே கப்பலை நங்கூரம் போட்டாங்க. அங்கே இருக்கற உள்ளூர்ஆட்களைச் சந்திக்கலாமுன்னு பார்த்தா இவுங்க ஆட்களை மவோரிங்க அடிக்கவந்துட்டாங்க. அந்தச் சண்டையிலே பல மவோரிங்க செத்துட்டாங்க. உடனே குக் அந்த இடத்தை விட்டுக் கிளம்பிட்டார். அந்த இடத்துக்கு பாவர்ட்டி பேPoverty Bayன்னு பேர் வச்சாங்க. அதுக்கப்புறம் கரை ஓரமாவே பிரயாணம் செஞ்சுக்கிட்டு வந்தாங்க.
ஒரு இடத்துலே கொஞ்சம் ஆள்நடமாட்டம் பார்த்துட்டு ஒரு ச்சின்னப்படகுலே சிலர் மட்டும் இறங்கிவந்தாங்க.இப்ப ரொம்பத்தேவையா இருக்குறது கொஞ்சம் சாப்பாட்டுச்சாமான்கள், உலர்ந்த மீன்கள், அப்புறம் குடிக்கத்தண்ணி.பண்டமாற்று செஞ்சுக்கலாமுன்னு பார்த்தா இங்கேயும் அடிதடிதான். இந்தக் கலாட்டாலே படகுலே இருந்த ஒரு பையனைவேற மவோரிங்க இழுத்து எடுத்துக்கிட்டாங்க. அடக்கடவுளேன்னு பதறிப்போய் இன்னும் கொஞ்சம் ஜோராச்சண்டைபோட்டு, துப்பாக்கியாலே அந்தக் கனூவைச்சுட்டாங்களாம். இந்தசமயம் பார்த்து, கடலிலே குதிச்சு நீந்திக் கப்பல்கிட்டேபோய்ச் சேர்ந்துட்டப்பையனைக் காப்பாத்தி மீண்டும் கப்பலிலே ஏத்திக்கிட்டு போயிட்டாங்க. ச்சும்மாப் போகாம அந்த இடத்துக்கு 'Cape Kidnappers'னு பேர் வச்சிட்டுப் போனாங்களாம்!


அதானே, புது இடமா இருக்கறப்ப ஒரு அடையாளம் வேணாமா? வெள்ளரிப்பிஞ்சு வாங்குனோமே அந்த ஊர், கோயிலுக்குவெளியிலே விட்ட செருப்பு காணாமப் போச்சே அந்த ஊருன்னு நாம அடையாளம் சொல்றதில்லையா என்ன? அதுவுமில்லாமபேர் வைக்க காசா பணமா?


அதுக்கப்புறம் அப்படியே கிழக்குக் கடற்கரையோரமா வந்தப்ப சில மவோரி ஆட்களொட நட்பும் கிடைச்சிருக்கு. Whitianga ன்ற கடற்கரை ஓரமா இருக்கற ஊருலே 'மெர்க்குரி பே'( Mercury Bay (ன்ற இடத்துலே 11நாள் தங்கிடு அக்கம்பக்கம் இருந்த மவோரிகள் கிட்டே நட்பை வளர்த்துக்கிட்டு இருந்திருக்காங்க.


இவுங்ககிட்டே இருந்த துப்பாக்கிக்களை 'வாக்கிங்க் ஸ்டிக்'னு மவோரிங்க( அவுக பாஷையிலேதான்!) சொல்லிக்கிட்டுஇருந்தாங்களாம். அப்ப சில வெள்ளைக்காரங்க மரத்தைப் பார்த்து அதை நீட்டுனதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தச்சின்னப்பசங்க அதுலே இருந்துவந்த வெடிசத்தத்தையும், பறவைங்க 'தொப்'னு விழுந்ததையும் பார்த்து பயந்துபோய், அலறி அடிச்சுக்கிட்டுப் புதருக்குள்ளெ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்களாம். பாவம், இந்த மவோரிப் புள்ளைங்க.


Horeta Taniwha ன்னு ஒரு பையன் இருந்தான் . அங்கே இருந்த மவோரிக்குழுவின் தலைவரோட மகன்.அந்தப் பையனுக்கு கேப்டன் குக் ஒரு பரிசு கொடுத்தார். அது என்ன தெரியுமா? ஒரு ஆணி! அதுவரை உலோகத்தாலே செஞ்சஎதையும் பார்க்காத ஆளுங்க இந்த ஜனங்க. அந்த ஆணியை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வச்சிருந்தானாம்அந்தப் பையன். தன்னுடைய மர ஈட்டிக்கு முனையிலே அதை அடிச்சு வச்சுக்கிட்டும், தன்னுடைய கனூவிலே சைடுலேஓட்டை போட்டுக்கறதுக்கும்னு பலவிதமா அந்த ஆணியை பயன்படுத்தி இருக்காங்க. பல வருசத்துக்குமுன்னே'காட் மஸ்ட் பி க்ரேஸி'ன்னு ஒரு படம் வந்துச்சே, அதுலே ஒரு 'கோகோ கோலா பாட்டில் ' உள்ளூர் ஆளுங்களைஎன்ன பாடுபடுத்துமுன்னு இருந்துச்சுல்லே, அதே கதைதான் போல , இங்கேயும்:-)))


இந்த 'ஹொரெடா டானிஃபா' பின்னாளில் அந்த ட்ரைபுக்குத் தலைவனா ஆனாராம். அப்ப அவரோட நினைவில் இருந்ததைச்சொல்லியிருக்கார். அந்தக் காலக்கட்டத்துலே இந்த வெள்ளைக்காரர்களுக்குத் தலைக்குப் பின்னாலும் கண்ணுங்கஇருந்துச்சுன்னு மவோரிங்க நம்பிக்கிட்டு இருந்தாங்களாம்!
இதுக்கப்புறம் 'மெர்க்குரி பே' யிலிருந்து கிளம்பி வடக்கு நோக்கிப் பயணம் செஞ்சு இந்த வடக்குத் தீவின் மேற்பகுதியைச் சுத்திஅப்படியே இடதுபக்கமாவந்து, மேற்குபக்கம் 'குவீன் ஷலெட் சவுண்டு( Queen Charlot Sound)லே நங்கூரம் பாய்ச்சி மூணுவாரம் தங்கி கப்பலைக் கொஞ்சம் பழுதுபார்த்துக்கிட்டு அப்படியே குக் ஜலசந்தி, இது வடக்கு,தெற்குத் தீவுகளைப் பிரிக்கறதுக்கே நடுவுலே இருக்கு (இதுக்கு குக்கோட பேரே வச்சாச்சு Cook Strait )வழியா,Cape Turnagain( பேரைப் பார்த்தீங்கல்லெ? கப்பலைத் திருப்பிக்கிட்டு போனதுக்கு இந்தப்பேரு!)போய் மறுபடி தெக்காலே வந்துருக்கார். இப்படியே அங்கங்கேநில அமைப்பையெல்லாம் ச்சார்ட்டா வரைஞ்சுக்கிட்டே போயிருக்காரு நம்ம கேப்டன் குக். அதுமட்டுமில்லாம எங்கெங்கே, எப்பெப்போ, யார்யாரைப் பார்த்தார்ன்னும்நடந்த நிகழ்ச்சிகளை ஒண்ணுவிடாம எழுதிவச்சுருக்கார் அந்தப் புண்ணியவான். இல்லேன்னா, என்னாலே விலாவரியா இப்படிக் கதை சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?


இவுங்க வந்த கப்பலைக் கவுரவிக்கரதுக்காக இங்கே நியூஸிலாந்து அரசாங்கம் இந்தக் கப்பலோட உருவத்தைஇங்கத்து 50 செண்ட் காசுலே பொறிச்சிருக்காங்கன்னா பாருங்களேன்!


கேப்டன் குக்கோட இந்த விவரணத்தைப் பார்த்த/கேள்விப்பட்ட ஐரோப்பிய நாடுகளிலே இதே பேச்சா இருந்ததாம்.தொலைதூரத்துலே ஒரு வளமான இடம் இருக்குது. அங்கே போயிட்டா அருமையான வாழ்க்கை நடத்தலாமுன்னுஒரு கனவுலகம் எல்லார் மனசுலேயும் உருவாச்சாம்.


அப்ப கேப்டன் குக் சொன்னாராம், இந்த மவோரி ஜனங்க பெரிய வீரனுங்க, தீரனுங்க. பாக்கறதுக்கும் நல்ல உறுதியான உடல்கட்டுகொண்டவுங்க, கலைத்திறமை மிக்கவங்கன்னு. இந்த ரெண்டு தரப்பு ஆட்களுக்கும்( மவோரி & ஐரோப்பியர்கள்)ஒருத்தருக்கொருத்தர் பண்டமாற்று முறையிலே வியாபாரம் செய்யவும் ஆசை இருந்தாலும், மொழி தெரியாத காரணத்தாலெஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கமுடியாம தப்பர்த்தம் செஞ்சுக்கிட்டு வெட்டு குத்துன்னே நிறையதடவை நடந்திருக்கு.


இதே காலக் கட்டத்துலே1769லே ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Jean-Francois Marie de Surville ன்றவர் நியூஸிக்கு கப்பலைஓட்டிக்கிட்டு வந்திருக்கார். நெடுந்தூரப்பயணமாச்சா? அவரோடு வந்த கூட்டத்துலே அநேக ஆட்கள் 'ஸ்கர்வி'ன்றகடல் நோய் வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துலே 'டவுட்லெஸ் பே'(Doubtless Bay ) ன்ற இடம்( இப்ப இதுஇருக்கற ஊருக்குப் பேரு பே ஆஃப் ஐலண்ட்ஸ்( Bay of Islands ) வந்து கப்பலை நிறுத்தியிருக்கார். உள்ளூர் மவோரிங்கெல்லாம் சேர்ந்து இவுங்களோட சண்டை போட்டு ஓடஓட விரட்டிட்டாங்க. அப்பப் போனவர்தான்.திரும்ப வரவேயில்லை.


அப்படியும் விடாம மூணுவருஷம் கழிச்சு 1772 லே இன்னொரு ஃப்ரெஞ்சுக்காரர் Marion du Fresne இதே பே ஆஃப் ஐலண்ட்ஸ் வந்திருக்கார்.அவரையும் அவரோட குழுவிலிருந்த 15 மாலுமிகளையும் மவோரிங்க போட்டுத்தள்ளிட்டாங்க. அத்தோடு விடாமஅவுங்களை தின்னும் முடிச்சிட்டாங்க. இதையெல்லாம் பார்த்த, உயிர்தப்பின மத்த மாலுமிங்களுக்குக் கோபம்தலைக்கேறி, எப்படியாவது பழிவாங்கணுமுன்னு தீர்மானிச்சாங்க. மவோரி கிராமங்களுக்குத் தீவச்சுக் கொளுத்திவிட்டுட்டாங்க. அதுலே சுமார் 300 மவோரிங்க செத்துட்டாங்களாம்.


அதான் பிரிட்டிஷ்காரங்கதான் இங்கே ஆட்சி செய்யணுமுன்னு 'விதி' இருந்திருக்கே, அப்ப எப்படி மத்த நாட்டுக்காரங்க நுழையமுடியும்? நம்ம கேப்டன் குக் 1773லே யும், மறுபடி 1777லேயும் இன்னும் ரெண்டு ட்ரிப்அடிச்சுருக்கார். ஒவ்வொருதடவை வரும்போதும் புதுசா சில மிருகங்களையும், முக்கியமா பண்ணிங்களையும்,உருளைக்கிழங்கு இன்னும் சிலபல தாவர தானிய வகைகளையும் கொண்டுவந்து இங்கே அறிமுகம் செஞ்சுருக்கார்.அப்படியே அவரோட வரைபடத்துலே இருந்த சிலபல தவறுகளையும் திருத்தி சரியா வரைஞ்சு வச்சிருக்கார்.


இப்பவும் 'கேப்டன் குக்'ன்னாலே இங்கே பயங்கர மதிப்புத்தான். அவரைக் கவுரவிக்கத்தான் இங்கத்து 'சதர்ன் ஆல்ப்ஸ்'ன்னுசொல்லப்படுற மலைத்தொடர்களிலே இருக்கற மிக உயரமான உச்சிக்கு 'மவுண்ட் குக்'ன்னு பேர் வச்சாங்க. இதுதான்நியூஸியிலேயே மிகவும் உயர்ந்த மலை உச்சி. ஆனாப் பாருங்க சில வருஷங்களுக்கு முந்தி அந்த 'பீக் Peak' கொஞ்சம்உடைஞ்சு வுழுந்திருச்சு. வருஷக்கணக்காச்சேர்ந்த பனியோட கனம் தாங்காம இப்படி ஆயிருச்சுன்னு விஞ்ஞானிகள்சொன்னாங்க. இப்பவும் இதுதான் இங்கே ஹையஸ்ட் பீக். ஆனா மூக்கறுபட்ட சூர்ப்பநகை மாதிரி மொண்ணையாஇருக்கு இப்ப!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

5 comments:

said...

இந்த கேப்டன் குக் நியூசிலாந்து வரப்ப கொஞ்சம் கனடா மேற்கு கடற்கரை பகுதியையும் தொட்டு பாத்துட்டு தான் அங்க வந்தார். அப்ப இந்த ஊர் பொண்ணுங்களை டேஸ்ட் பாத்துட்டு தான் வந்தது அந்த கும்பல்.

said...

உதயகுமார்,
உண்மையாவா? அதுபத்தி மேலும் விவரம் கிடைச்சதுன்னா ஒரு பதிவாப் போடுங்களேன்.

said...

ஆமா அதபத்தி எழுதனும். கனடியன், அமெரிக்கன் ஹிஸ்டிரியை விரிவா எழுதலாம் தான் ஆனா எங்க நேரங்கிடக்கு!

said...

அம்மாடியோவ்! இவ்வளவு விஷயம் இருக்கு. இத நான் என்னைக்கிப் படிச்சி, டீச்சர் வைக்கிற டெஸ்ட் எழுதறது. முட்டைதான். அபீட் ஆகிட்றேன். சும்மா வேணும்னா auditing-க்கு வர்ரேன்...

said...

என்ன தருமி,
பயந்துட்டீங்களா? பதிவு பெருசாப் போச்சோ?
ரெண்டு பாகமாப் போட்டுருக்கலாமுல்லே?


auditing செய்ய ஆள் வேணாம்:-)

இனி அரைப் பக்கப் பதிவாப் போட்டுறலாமா?