மூணுநாளாச்சு! முடிச்சுடலாமுன்னு பார்த்தா.......ம்ம்ம்ம்ம்ம்ம்
கொஞ்சம் அறுவைதான். ஓடிக்கிட்டு இருக்கப்பவே கண்ணு சொருகிடுதே! உக்காந்துக்கிட்டுப் பாத்தா சமாளிச்சுடலாமுன்னு
உக்காந்தாலும் ஊஹூம்...நடக்கலையேப்பா.... ரொம்பவே நீளமா இருக்கேப்பா......
ஆரம்பம் மட்டும் கனஜோராய் இருந்துச்சு. 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா....'
டொக்கு டொக்குன்னு குதிரை குளம்படிச் சத்தத்தோட வண்டி ஓட்டம். வாத்தியார் பாடிக்கிட்டே வரார். பல்லக்குலே
போற நாட்டியப்பேரொளி 'நர்த்தகி சித்ரா'அதைக் கேட்டுக்கிட்டே(?) வராங்க.
அதுக்கப்புறம் ஒரு நாட்டியப் போட்டி. வாத்தியார் ஜெயிக்கறார். தோல்வியடைஞ்ச நாயகி வழக்கம்போல(!) அவரைக்
காதலிக்கறாங்க. வஞ்சிநாட்டு அரசனும் அரசியும் தங்கள் மகனான வாத்தியாருக்குக் கரிகால் சோழனோட மகளைப் பொண்ணு கேட்க
ஆளனுப்பினாங்க. இந்தச் சரித்திரக்கதைக்கு ஆதாரம் எதுனா உண்டான்னு தெரியலை.ஒருவேளை அம்புலிமாமாகதை போல
.... நாட்டை ....... என்னும் மன்னன் வெகுகாலமாக ஆண்டுவந்தார் ஸ்டைலோ? சரி. போகட்டும். நாம வந்த வேலையைப் பாக்கலாம்.
ம்ம் அப்புறம்? வாத்தியாருடைய தாயின் குலம் அங்கே கேள்விக்குறியாகிவிடுகிறது. தாயைப் பழித்த மன்னனை பழிவாங்கப் போகிறார்
இளவரசர் வாத்தியார். போகப்போக சொதப்பல் கூடிப்போகுது. கதை,வசனம் கண்ணதாசன் அப்படின்னு வருது.
கரிகால் சோழனோட புதல்வி கற்பகவல்லி யார்? அஞ்சலிதேவி!!!! அப்பத்தான் தூக்கம் சுழட்டிக்கிட்டு வருது.
சரி, பாட்டுங்களாவது நல்லா இருக்கான்னு பார்த்தா அதுவும் இல்லை. எம்.எல்.வசந்தகுமாரி பாடற 'ஆடாத மனமும்
உண்டோ' வும். கனியக் கனிய மழலை பேசும் கண்மணி( டி.எம்.எஸ் & சுசீலா)யும் நல்லா இருக்கு. கூட்டம் கூட்டமா
குரூப் டான்ஸ் ஆடிக்கிட்டு( இதுலே ஒருத்தர் நம்ம சி.ஐ.டி. சகுந்தலா!) பாடறதுலே ஒண்ணுகூட நல்லாலே, ஆமாம்!
எனக்கோ ஒரே எதிர்பார்ப்பு, எப்ப இந்தப் படம் முடியும்னு? கையிலே இருக்கு மந்திரக்கோல். ரிமோட்டைத்தாங்க சொல்றேன்.
ஆனாலும் எடுத்தகாரியத்தை முடிக்கிற மன உறுதி மனுஷனுக்கு வேணாமா? எத்தனை நாளானாலும் பரவாயில்லே...
மொத்தம் மூணு வி.சி.டி டிஸ்க். ஒவ்வொண்ணையும் ரெண்டுரெண்டுமுறை பார்க்கவேண்டியதாப் போச்சு. அதான்
பாதியிலே தூங்கிட்டு மறுபடி, 'ஹா எங்கே விட்டேன்?'னு ஓட்டறதுதான்:-)
இசை யாருன்னு கேட்டீங்கன்னா, நம்ம விஸ்வநாதன் & ராமமூர்த்தி! பாடல்கள் எழுதுனது ,அட! நம்ம கவிஞர் கண்ணதாசன்.
கூடவே அ.மருதகாசின்னும் வருது. இதைப் படிச்சுட்டு நான் ச்சும்மா இருந்திருக்கலாம். ஆனா படம் வெளிவந்த வருஷம் சரியான்னு
பார்க்க 'ம்யூஸிக் இண்டியா ஆன்லைன்'( எதுக்கு இந்த வேண்டாத வேலை?) போய்ப் பார்த்தேன். அதுலே சொல்லுது ஒரே ஒரு பாட்டு மட்டும்,(ஆடாத
மனமும் உண்டோ )உடுமலை நாராயணக் கவின்னு! என்னான்னு கண்டேன்?
'அச்சம் என்பது மடமையடா'வை நான் இதுநாள் வரை பாரதிதாசனோடதுன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருந்திருக்கேன். எப்படி, அப்படி
ஒரு நினைப்பு வந்துச்சுன்னே தெரியலை.
இதுலே பாருங்க வில்லன் வீரப்பா( கருவூர் நாட்டு மன்னனாம்) பத்மினியை நெருங்கும்போது, அவுங்க 'கலையோடு
பிறந்தது உண்மை'ன்னு பாடிக்கிட்டே ஆட(ஓட)றாங்க. அப்பத் திடீர்னு எனக்கு நினைவுக்கு வந்தது, பாலச்சந்தரோட
ஒரு படத்துலே 'ஆணையிட்டேன் நெருங்காதே'ன்னு ஜெயந்தி பாடிக்கிட்டு தப்பியோடப் பாக்கறதுதான். இப்படித்தான்
எதையாவது பாக்கறப்ப வேற எதாவது மனசுக்குள்ளெ வந்து தொலைக்குது. என்னத்தச் செய்ய?
இவ்வளவு சொன்னவ படத்தோட பேரை விட்டுட்டேன் பார்த்தீங்களா?
மன்னாதி மன்னன். வெளிவந்த வருசம் 1960.
'எனக்குத் தலைவர் படமுன்னா உசுரு! எல்லாப்படத்தையும் நிறைய தடவை பார்த்திருக்கேன். விட்டுப் போனது ஒண்ணு ரெண்டு மட்டும்தான்'னு
என்கிட்டே உதார் விட்டுக்கிட்டு இருந்த எங்க இவர், இந்தப் படத்துலே அஞ்சலி தேவி இருக்காங்கன்னு டைட்டில்
கார்டுலே பார்த்தவுடனே, 'எனக்கு அஞ்சலிதேவி பிடிக்காது நீயே பாரு'ன்னுட்டு எந்தலையிலே கட்டிட்டுப் போயிட்டார்!!!
இத்தோடு தலைவர் வாரத்தை முடிச்சுக்கிட்டு, கொஞ்ச நாளைக்கு வேற வேலை வெட்டி( வெட்டிவேலை?) பார்க்கலாமுன்னு
உத்தேசம். என்ன நாஞ்சொல்றது? சரிதானே?
Wednesday, August 10, 2005
கனியக் கனிய மழலை பேசும்......
Posted by துளசி கோபால் at 8/10/2005 02:04:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மன்னாதி மன்னன் படத்தை இன்றைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது.
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற சேரர் கதையைத் தழுவி எழுதியதுதான் மன்னாதி மன்னன். கதையாகப் படிக்கையில் (நாடக வடிவில்) நன்றாக இருக்கும். லேசான வரலாற்றுண்மையும் இருக்கும்.
திரைப்படத்தில் பல மாற்றங்கள்.
பொதுவாக பாடல்கள் அனைத்துமே அருமை. ஒன்றிரண்டு பாடல்கள் தவறியிருக்கலாம். அதென்ன பாட்டு சகுந்தலா சுத்தித் சுத்தி ஆடுறது? நினைவே இல்லையே........
அஞ்சலி தேவிக்கும், எம்.ஜி.ஆருக்கும் திருமணம் நடக்கும் சமயம்,
மணப்பெண்ணைத் தோழிகள் அலங்கரித்துப் பாடும் பாடல்.
ஆடும் மயிலெ அழகுநிலாவே வாடா மலரே வருக..... இதில் சி.ஐ.டி சகுந்தலா வருகிறார்.
அவளா இவளா தேர்ந்து எடு, அழகிய பெண்ணை மாலையிடு........ பாட்டிலும்
பல தெரிந்த முகங்கள் வருகின்றன. யாரென்பதுதான் நினைவுக்கு வரவில்லை(-:
அஞ்சலி தேவியை முதலில் காண்பிக்கும்போதும் ஒரு க்ரூப் டான்ஸ் உண்டு.
Post a Comment