Wednesday, August 17, 2005

ரெடிமேட் பகுதி 9

என்னங்க ஆச்சு? ஏன் இப்படி இருக்குறீங்க? ஏது இந்தப் பழைய கட்டில்? மத்தியானம் சாப்புட்டீங்களா? கேள்வி
மேலே கேள்வியா அடுக்கிக்கிட்டே போறேன். பதிலே வரலை. கவலையாப் போச்சு. அப்புறம் மெள்ள மெள்ள
விஷயம் வெளியே வருது.


காலையிலே அந்த வீட்டுக்குப் போனாரில்லையா? அப்ப அந்த ஓனர் வெள்ளையடிக்க ஒரு ஆளையும் ஏற்பாடு
செஞ்சாராம். ரெண்டு பேருமாப் போய் ஒரு கடையிலே டிஸ்டம்பர், அதைக் கலக்க ஒரு வாளி, அடிக்கறதுக்கு
மட்டை( பிரஷ்?) எல்லாம் வாங்குனாங்களாம். பக்கத்துக் கடையிலே இரும்புக் கம்பிலே செஞ்ச கட்டில்,
மேசை, நாற்காலின்னு வித்துக்கிட்டு இருந்தாங்களாம். நமக்கும் ஒரு கட்டில் வேணுமே,
இப்பக் கூட ஒருஆள் இருக்கறப்பக் கொண்டு போயிடறது சுலபமாச்சேன்னு இவர் ஒரு கட்டிலையும் வாங்கிக்கிட்டு
அந்த வீட்டுக்குப் போய் வெள்ளை(!)யடிக்க ஆரம்பிச்சாங்களாம். சுவர் மேல்புறம் கைக்கு எட்டலைன்னதும் அந்தக்
கட்டிலையே ஏணியாட்டம் உபயோகிச்சிருக்காங்க. சீக்கிரம் வேலை முடியட்டுமுன்னு இவரும் கூடவே வேலை செஞ்சிருக்கார்.
எல்லாம் முடிஞ்சு பக்கெட்டைக் கழுவறப்ப, வீட்டு ஓனரோட மகன் வந்து அவுங்க அப்பாகிட்டே ஒரே சண்டையாம்,
எப்படி அந்த வீட்டை வாடகைக்கு விடப்போச்சுன்னு? கடைசியிலே மகன் தான் ஜெயிச்சதாம்(!) வீடு நமக்கு இல்லைன்னு
ஆகிப் போச்சு. நம்ம செலவுலெ அந்த வீட்டுக்கு வெள்ளையடிக்கணுமுன்னு இருந்திருக்கு! 'நான் அடிக்கறமாதிரி அடிக்கறேன்,
நீ அழுவறமாதிரி அழு'ன்னுஒருவேளை எல்லாம் 'செட்டப்'போ?

ரெண்டு மாசம் கழிச்சு ஒரு நல்ல இடம் கிடைச்சது, எங்க இவர் வேலைசெய்யற கம்பெனிக்குப் பக்கத்துலே! ஒரு அஞ்சாறு
நிமிஷம் சைக்கிள்சவாரி. பங்களா டைப் வீடு. தனிக் காம்பவுண்டு. கீழே நாலு அறை, பாத் ரூம், டாய்லெட். மாடியிலே
மூணு அறை, தனியா பாத் ரூம், டாய்லெட். தரையெல்லாம் மொசைக். அட்டகாசமான வீடு. இவ்வளவு பெரிய வீடான்னு
அசந்துராதீங்க. இதுலே கீழே மூணும், மாடியிலெ ரெண்டுமா மொத்தம் அஞ்சு குடித்தனங்க.

நம்மது மாடி. ரெண்டு ரூம். ஒண்ணு ரொம்பப் பெரூசு. இதுலேயே ஒரு ச்சின்ன பாத் ரூம் அட்டாச்சுடா இருந்துச்சு.
அடுத்த ரூம் இதைவிடச் சின்னது.ஆனா அங்கே ஒரு பெரிய பால்கனி( மேலே கூரை) இருந்துச்சு. மாடியிலே இருந்த
இன்னொரு ரூமுக்கு பால்கனிக்குப் பதிலா ஒரு மொட்டைமாடி இருந்துச்சு. ரெண்டு குடித்தனத்துக்கும் பொதுவா
ஒரு பெரிய பாத்ரூமும் தனியா ஒரு டாய்லெட்டும். அந்தப் போர்ஷனிலே ஒரு தென்னிந்தியர்( தெலுங்குக்காரர். அவர் மனைவி
பார்ஸி இனத்தைச் சேர்ந்தவங்க) இருந்தார்.

நாங்க அங்கெ குடி போன அன்னைக்கு மாடியிலெ வேற யாருமெ இல்லை. எலெக்ட்ரிக் கனெக்ஷனும் இல்லை.
மெழுகுத்திரி வச்சுக்கிட்டு, ராத்திரி சாப்பாட்டைச் சாப்புட்டுக்கிட்டு இருக்கோம். மாடிக் கதவை 'தடதட'ன்னு யாரோ
தட்டுறாங்க. யாருன்னு போய்ப் பார்த்தா ஒருவயசான அம்மா, ஒரு இளம் பெண் கையிலே குழந்தையோட நிக்கறாங்க.
யாரு என்னன்னு விசாரிச்சப்பத்தான் தெரியுது, அவுங்கதான் நம்ம சகக் குடித்தனக்காரங்கன்னு. மூணுவாரமே
ஆகியிருந்த அழகான ஆண் குழந்தை,பேரு கேஷவ். 'கலப்புக் கல்யாணம் செஞ்சுக்கிட்டது இவுங்க அப்பாவுக்கு
இஷ்டமே இல்லை. வீட்டுலேயே சேர்க்கமாட்டேன்னு சொல்லிட்டார். நாந்தான் ஆஸ்பத்திரியிலே இருந்து கூட்டிக்கிட்டுப்
போய் தெரிஞ்சவுங்க வீட்டுலெ வச்சு மூணுவாரம் பார்த்துக்கிட்டேன். இனிமேயும் அங்கெ இருக்கமுடியாது.அதான் கொண்டு
விட வந்தென். நீங்கதான் பார்த்துக்கணும்'னு சொல்லிட்டு அந்தம்மா போயிட்டாங்க. நைட் டூட்டிக்குப் போயிருந்த
தெலுங்குக்காரர் காலையிலே வந்ததும் குழந்தையையும் மனைவியையும் பார்த்து ஆச்சரியமாயிட்டார்.

கேஷவ் எங்ககூட ரொம்பவே ஒட்டிக்கிட்டான். தவழ ஆரம்பிச்சதும், காலையிலே மொத வேலையா நம்ம ரூம் கதவைத்
தட்டுவான். அவனோட அம்மா அவனைக் கண்டுக்கவே மாட்டாங்க. நாந்தான் இடுப்புலே தூக்கிவச்சுக்கிட்டு வீட்டுவேலையெல்லாம்
செஞ்சுக்கிட்டு இருப்பேன். கேஷவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துரும். சிலநாளுலே
சண்டை முத்திப் போய் அம்மாவை மாடிப்படிக்கு வெளியே தள்ளிட்டுக் கம்பிக்கதவை சாத்திடுவார் அப்பா. அந்தம்மா
தங்தங்குன்னு கதவே உடையறமாதிரி தட்டும். இந்த மாதிரி சமயத்துலே எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியாது.
அதிர்ஷடம் என் பக்கமுன்னா நான் சமையல்( அந்தப் பெரிய ரூம்)அறையிலே இருப்பேன். சிலநாளுலே பால்கனி
இருக்கற ரூமிலே இருந்தேன்னா அவ்வளவுதான். இந்த ரெண்டு ரூமுக்கும் இடையிலேதான் மாடிப்படிக் கதவு இருக்கு.
வெளியே வரப் பயந்துக்கிட்டு உள்ளேயே இருப்பேன்.அடுப்பிலே வச்சிருக்கறதெல்லாம் தீஞ்சு போயிரும். நல்லவேளை,
நம்மகிட்டே அப்ப கெரோசின் ஸ்டவ்தான். வாரம் மூணு இல்லேன்னா நாலுதடவை சண்டை. எப்ப ஆரம்பிக்குமுன்னே தெரியாது.
அவுங்க ரூமிலே பாத்திரம் வீசியடிக்கிற சத்தம் வந்தவுடனே நான் சமையல் அறைக்குள்ளெ போயிருவேன். அங்கே இருந்து
பார்த்தா ரெயில் தண்டவாளம் தெரியும். போறவர்ற ரெயிலுங்களை வேடிக்கைப் பார்க்கலாம்.

கீழே இருக்கற குடித்தனக்காரங்களோட நட்பு வந்தது. பஞ்சாப், கர்நாடகா, குடகுன்னு மூணு பேரும் மூணு பாஷைக்காரங்க.
எல்லோருமே எஞ்சினீயருங்க. அதான் ரோடைக் கிராஸ் செஞ்சவுடனே ஹடப்ஸார் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இருக்கே.
இதுலே கர்னாடகாக்காரர் கொஞ்சம் வயசானவர். ஆனா அப்பத்தான் கல்யாணம் கட்டுனவர். தங்கைகளுக்குக் கல்யாணம்
முடிச்சு வச்சுட்டுத்தான் இவரோட கல்யாணம் ஆச்சாம். பஞ்சாபிங்களுக்கு ஒரு மூணுமாசக் குழந்தை இருக்கு.

நம்ம ஃபேவரைட் அந்தக் குடகுக்காரங்கதான்.மூணு புள்ளைங்க. மூத்தது பையன். மத்த ரெண்டும் பெண்குழந்தைங்க.

மூத்தது ரெண்டும், மூணாவதும், ஒண்ணாவதும் படிச்சுக்கிட்டு இருக்குங்க. ச்சின்னவ கவிதாவுக்கு வயசு ரெண்டரை.
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு,பொம்மையாட்டம். மெதுமெதுவா மாடிப்படியேறி வந்துரும்.அவுங்க அம்மா
பேரு மோஹினி. பேருக்கேத்த மாதிரியே உருவம். கொள்ளை அழகு. நாங்கெ ரெண்டு பேரும் சீக்கிரமே 'ஜிகிரி தோஸ்த்'
ஆகிட்டோம்.

அப்பத்தான், இவர் வேலை செய்யற கம்பெனியிலே தொழிலாளர் ஸ்ட்ரைக் வந்துருச்சு. இவுங்க ஸ்டாஃப்ன்றதாலே
தினமும் வேலைக்குப் போகணும். போயிருவாங்க.அங்கேதான் ஒரு மெஷினும் ஓடறதில்லையே. அதனாலே அங்கே இருக்கற
தோட்டத்துக்குத் தண்ணி ஊத்திட்டு, அங்கே இருக்கற 'வெஜிடபிள் கார்டன்'லே இருந்து காய் பறிச்சிக்கிட்டு வருவார்.
ச்சும்மா ஒரு பத்து மணிக்குப் போய் கையெழுத்துப் போட்டுட்டு, மத்தவங்களோட கொஞ்சநேரம் அரட்டை, தண்ணி பாய்ச்சறது,
காய் பறிக்கிறதுன்னுட்டு ஒரு பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துருவார். அந்தக் காய்ங்களுக்காக நான் காத்துக்கிட்டு
இருப்பேன். குக்கர்லெ சாதமும், பருப்பும் வெந்து ரெடியா இருக்கும். காய் வந்தவுடனே குழம்புலெ போடவேண்டியதுதான்.
இவ்வளவு ஃபிரெஷா இதுவரை சாப்புட்டதேயில்லை:-) கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இப்படியே போச்சு. அப்புறம்
சமாதானப் பேச்சுக்கு வந்து கம்பெனி திறந்துட்டாங்க. காசு கொடுத்து காய்கறி வாங்கவேண்டியதாப் போச்சு!

இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருசத்துக்குமேலே ஆயிருச்சே. எப்ப சொந்தங்களைப் பாக்கப் போறோமுன்னு ஏக்கம்
வர ஆரம்பிச்சுருச்சு. ரெண்டு வாரம் லீவு கிடைக்கும். போகலாமுன்னு முடிவு செஞ்சோம். அப்பத்தான் மோஹினியும்,
மத்தக் குடித்தனக்காரங்களும் குண்டைத் தூக்கிப் போடறாங்க. அப்படியே வீட்டை பூட்டிக்கிட்டு போயிரமுடியாதாம்.
அங்கே பக்கத்துலே ஒரு திருட்டுக் கும்பல் இருக்காம். அவுங்க வந்து பூரா வீட்டையும், (கட்டிலை விட்டுட்டு) காலி
செஞ்சுக்கிட்டுப் போயிருவாங்களாம். கீழே இருக்கற பஞ்சாபிக்கும், கர்நாடகாக் காரருக்கும் இப்படித்தான் ஆச்சாம்.
அப்படீன்னா? போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கலையா? அதெல்லாம் முடியாதாம். அப்புறம் வந்து கத்தியாலே
குத்திட்டுப் போயிருவாங்களாம்.

இப்ப என்ன செய்யறது?


இன்னும் வரும்.




7 comments:

said...

என்ன இவுக...இப்படி பயமுறுத்தறாக...

இதெல்லாம் எந்த ஊரு..எப்போ இதெல்லாம்..

said...

என்னங்க தருமி பயந்துட்டீங்களா?

இந்த ரெடிமேட் ஆரம்பிச்சு இதுவரை 8 பகுதி வந்திருக்கு. என்னவோ ரொம்பநாளா இடைவெளி விட்டுட்டேன். அதான் இப்ப மறுபடி தொடர்ந்துரணுமுன்னு முடிவு செஞ்சாச்சு.

'எடுத்த காரியத்தை முடிச்சுரு. பாதியிலே விடாதே'ன்னு ஒரு குரல் மனசுக்குள்ளெ கேக்குது இப்பக் கொஞ்சநாளா!

துளசிதளத்துலேயே எல்லாம் இருக்கு. நேரம் கிடைச்சாப் படியுங்க. படிச்சா ஒரு வார்த்தை சொல்லுங்க எப்படி இருக்குன்னு.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

என்னங்க தருமி,

previous post ஜனவரி 2005 லே இருந்து ஆரம்பிக்குது பகுதி 1

said...

ஊருக்குப் போனீங்களா இல்லையா?

said...

ஷ்ரேயா,

பின்னே போகாம? எப்படின்னு அடுத்த பகுதியிலே சொல்வேன்.

துளசி.

said...

Where is read ymade 10? Can you please add the link to next and previous in the comment section?
Thanks!

said...

வாங்க Strada Roseville.

இந்த ரெடிமேடுக்கு நேரம் சரி இல்லை போல.
எப்ப எடுத்தாலும் அதை முடிக்கூன் தடைகள் வந்துக்கிட்டே இருக்கு:(

சில லிங்க்ஸ் இத்துடன்.

http://thulasidhalam.blogspot.co.nz/2006/08/10.html

http://thulasidhalam.blogspot.co.nz/2006/08/11.html

http://thulasidhalam.blogspot.co.nz/2006/08/12_24.html
http://thulasidhalam.blogspot.co.nz/2006/08/13_29.html

http://thulasidhalam.blogspot.co.nz/2006/09/14.html
http://thulasidhalam.blogspot.co.nz/2006/09/15.html

http://thulasidhalam.blogspot.co.nz/2006/10/16.html