Showing posts with label 108 திவ்யதேசம் தஞ்சை. Show all posts
Showing posts with label 108 திவ்யதேசம் தஞ்சை. Show all posts

Monday, March 18, 2013

தஞ்சை மாமணிக் கோவில்.

 மன்னார்குடி தஞ்சாவூர் சாலையில் போகும்போது கண்ணில் பட்ட ஊர் வடுவூர்! அட  நம்ம கட்டுமானத்துறை  குமார்!  இங்கே ஒரு ராமர் கோவில் இருக்கு.  பத்து நிமிசம் பார்த்துட்டுப் போகலாமுன்னு ஊருக்குள்ளே வண்டியைத் திருப்பினோம்.

கோவில் வாசலுக்கருகில் சிலர்  தெருவோரமா இருந்தாங்க. நாங்க விடுவிடுன்னு உள்ளே போனோம்.  கம்பிக்கதவு போட்டு பூட்டி இருந்த சந்நிதியில் நல்ல வெளிச்சத்தில் ராமர் அண்ட் கோ!  எல்லோரும் கொள்ளை அழகு!   ஏகாந்த தரிசனம்.  கோவிலில் ஒரு ஈ காக்கா(??) இல்லை. தனியார் கோவிலோ?  என்னமோ தெரியலை..... வேதாந்த தேசிகர் மடம் நடத்தும் கோவிலோன்னு  மனசுக்குத் தோணுச்சு.

க்ளிக்கப் பரபரத்த கையை அதட்டி அடக்கினேன்.   சாமி பாக்கிறாரே!

ஹயக்ரீவர் சந்நிதியையும்  ஸேவிச்சுக்கிட்டுத் திரும்ப தஞ்சை சாலையைப் பிடிச்சோம்.கொஞ்ச தூரத்தில் வடுவூர் ஏரி. பறவைகள் ஏராளமாவந்து தங்குமுன்னு கேள்விப்பட்டுருக்கேன்.  போய்ப்பார்க்க வாய்க்கலை:(  விர்ர்ர்ரிடும் வண்டியில் இருந்தே ஒரு க்ளிக்.

தஞ்சைக்குள் நுழைஞ்சு   ஹொட்டேல் சங்கம் போய்ச் சேர்ந்ததும்  ரூம் வித் வ்யூ இருந்தால் கொடுங்கன்னு கேட்டதுக்கு டெம்பிள் வியூ இருக்கு வேணுமா மேடம் என்றார் வரவேற்பாளர்.  பழம் நழுவிப் பாலில் விழுந்துச்சு.

மாடிக்குப்போனதும்  பெட்டிகளை இழுத்து வந்த பணியாளர்  அகலமான பெரிய ஜன்னலில் திரைச்சீலையை சர்ன்னு இழுத்து விட்டதும்..........ட்டடா......

ஒரே இருட்டு!!!! என்னப்பா... எங்கே  கோவில்?

 அந்தப்பக்கம் நேரா இருக்குது மேடம்.  மேலே லைட் எரியும்.  இன்னிக்கு என்னமோ எரியலை.... பவர் கட்டு.

ரெண்டு நிமிசம் இருட்டையே பார்த்துக்கிட்டு நின்னேன். ...  அம்மா.............

கொஞ்ச நேர ஓய்வு.  அண்ணன்,  அத்தை , தோழின்னு  சிலபல  அலைபேசி  அழைப்பு உரையாடல்கள்,  மடிக்கணினியில் இ மெயில்கள் எல்லாம் ஆச்சு. சட்னு ஒரு ஷவர் எடுத்து  ப்ரெஷானதும்  தில்லானாவுக்குப் போனோம்.இது சங்கத்தின்  ரெஸ்ட்டாரண்டு. இந்த சங்கம்  குறிப்பது  சங்கு. பாஞ்சஜன்யம்?



கதவைத் திறக்கும்போதே  பூனையின் ஹீனக்குரல்!   அடடா.... என்ன ஆச்சு? பிரசவ வேதனையோ?

குட்டியூண்டு மேடையில்  இசைக் கலைஞர்கள்  இருவர்  வயலினும் தபேலாவுமா ட்யூன் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

இங்கொன்னும் அங்கொன்னுமா  மூலைகளில்  ஒவ்வொருத்தர்.  எண்ணி மூணே பேர்!

மேடைக்கு  சமீபமா முன்பக்கம்  இருக்கும்  இருக்கையில் போய் அமர்ந்தோம். ம்ம்..... ஆரம்பிக்கலாம் என்று ஒரு தலையசைப்பு! (வேற யாரு? எல்லாம் நாம்தான்!)

ஆலாபனை விஸ்தரிப்பு இப்படி ஒன்னும் இல்லாமல் சட்னு ஆரம்பிச்சது கீர்த்தனை. நல்லாவே தெரிஞ்ச பாட்டு.   பம்டுரீத்தி கொலு   வியவைய்ய  .....   ராமா............ . தலையை  ஆட்டி ரசிக்க நமக்குத்  தனியாச்சொல்லித்தரணுமா?

கீர்த்தனை முடிஞ்சதும்  கையைத்தட்டிக் குஷிப்படுத்திட்டு  ராகம் ஹம்ஸநாதம் தானே?ன்னதும்  வயலின்காரர்  முகத்தில் ஆயிரம் வாட்ஸ்!

சின்னஞ்சிறுகிளியே ஆரம்பிச்சார்.  வம்பு இல்லாத செலக்‌ஷன்!   முடிச்சதும்  நம்மை ஏறிட்டுப் பார்த்தவரிடம்  கண்டநாள்முதலாய்  .... மதுவந்தின்னதும்  பாடம் இல்லைன்னார்.  போட்டும்.

என்னை நீ மறவாதே    ஆகிக்கோட்டே.... அமிர்த வர்ஷிணி! ஓக்கேன்னு தலையாட்டலோடு வாசிக்க ஆரம்பிச்சார்.  கோபால் உடனே நீ பாட்டுக்கு  அது இதுன்னு  கேட்டுக்கிட்டே இருக்கே. அவர் பாட்டுக்குத் தன்னிஷ்டப்படி வாசிக்கட்டுமேன்னார்.  கலைஞர்களுக்கு  ரசிகர்கள் ஆர்வத்தோடு  கேட்பது  பிடிக்கும்.  சுருக்கமா உங்களுக்குப் புரியும்படிச் சொன்னால் பதிவர்களுக்கு பின்னூட்டம் மாதிரின்னேன். அப்பதான் பின்னூட்டப்ரேமிக்கு மனசிலாச்சு:-))))

செவிக்கு இசையும் வயித்துக்கு உணவுமா   சங்கீதசபை  அருமையா அமைஞ்சு போச்சு, பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முத்தாய்ப்பு  வச்சது போல்!!

உள்ளூர்க் கலைஞர்கள் தானாம். விஜயன் வயலின் .  ரவி  தப்லா!  சுமாரான வாசிப்புதான் என்றாலும் இது தானாகக் கிடைச்சதில்லையோ? ரெண்டு பேரையும் பாராட்டிட்டு ஒரு சன்மானம் கொடுத்ததும்   எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மறுநாள் பொழுது விடிஞ்சதும்  வியூ பார்க்க  ஜன்னலில் கண்ணை நட்டத்தில்  கோபுரம்  தெரிஞ்சது. ப்ரேக்ஃபாஸ்டுக்கு  தில்லானா போனோம். அறை வாடகையில்  இது சேர்த்தி.  ஒரு அஞ்சாறு ஆர்மி ஆஃபீஸர்ஸ்  கூடிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் உயர் அதிகாரி. மற்றவர்கள் காமிச்ச பவ்யத்தைப் பார்த்தால்  தெரிஞ்சுருது.   தென்னிந்திய  உணவுப்பகுதி நல்லா இருந்துச்சு.

தஞ்சை மாமணிக்கோவிலுக்குக்  கிளம்பினோம்.  வரவேற்பில் வழி கேட்டதுதான்  நாம் செஞ்ச தவறு. எங்கெங்கோ  அரைமணி  கும்பகோணம் நெடுஞ்சாலையில் போய் ஆற்றுப்பாலம் கடந்து  இடது புறம் திரும்பி  உள்ளே பயணிச்சு  அங்கேயும்  இன்னொரு பாலம் ரிப்பேர் வேலை நடக்குதுன்னு வந்த வழியே திரும்பி கண்ணில் பட்ட ஆளையெல்லாம் விடாம சீனிவாசன்  போய் விசாரிச்சு கோவிலைக் கண்டோம்.  நூத்தி எட்டின் வரிசையில் இது மூணாவது.   தஞ்சை  மாமணிக்கோவில், மணிக்குன்றம், யாழிநகர் என்று  மொத்தம்  தனித்தனியா மூணு கோவில்கள்  இது எல்லாம் சேர்ந்தேதான் திவ்யதேசக்கோவில்களில் ஒன்றாய் இருக்கு. தஞ்சை அரண்மனை தேவஸ்தானம்.


.  நீலமேகப்பெருமாள், மணிக்குன்றப்பெருமாள் ,வீர நரசிம்ஹப்பெருமாள்  என்ற பெயர்களில்  இங்கே சேவை சாதிக்கிறார் எம்பெருமாள்.  பராசர முனிவர் இங்கே தவம் செய்யும் காலத்தில்  தஞ்சகன், தண்டகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தார்கள்.  அவர்களை அழிக்க  ஸ்ரீ மஹாவிஷ்ணு , நீலமேகப்பெருமாளாக இங்கே அவதாரம் செஞ்சார். தஞ்சகன் யானை உருவம் எடுத்து சண்டைபோடவும், பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்து அவனை அழித்தார்.  அவந்தான் அழிஞ்சானே தவிர  அவன் பெயர்  எப்படி நிலைச்சுப்போச்சு பாருங்க!  தஞ்சை!

பயந்து போன தண்டகன் பூமியைப் பிளந்து கொண்டு ஓட,  பெருமாள் வராக அவதாரம் எடுத்துப்போய் அவனை மாய்த்தார். அங்கே இருந்த காளிகா தேவி  அரக்கன்  தாரகன் கதையை முடிச்சு  உதவினாள். அப்புறம்  எல்லாம் சுகமேன்னு பரசார முனிவர்  அங்கே இருந்து  தன் தவத்தை வெற்றிகரமாக முடிச்சார். வராக க்ஷேத்ரம் என்ற சிறப்பும் இதுக்கு உண்டு. இந்தத் தலப் புராணத்தை  கோவில்  உள்பிரகாரத்தில்  எழுதிவச்சுருக்காங்க.  மூணு கோவில்களுக்கும் ஒரே பட்டர்ஸ்வாமிகள்தான்.  நாம் போய் சொன்னால் அவரே வந்து  மூன்று கோவில்களிலும் தரிசனம் பண்ணி வைப்பாராம்.

நாம் போய்ச் சேர்ந்தப்ப  முதல் கோவிலில் யாரும் இல்லை.  நின்றபடி இருந்த நீலமேகனை  வணங்கிட்டுப் பிரகாரத்தை  ஒரு சுத்து சுத்திட்டு அடுத்த கோவில் போனோம்.   அங்கேயும் பட்டரைக் காணோம்.  சாமி தன்னந்தனியா இருந்தார்.  தரிசனம்செஞ்சுக்கிட்டு இன்னும்கொஞ்ச தூரத்திலிருந்த மூனாவது கோவிலுக்குப் போனோம். அங்கேயும் ஏகாந்த ஸேவை.  கம்பிக்கதவுக்குப்பின்  வீர நரசிம்ஹர்.

மூலவரை விட்டுட்டு  அங்கங்கே சில க்ளிக்குகள். திரும்பி முதல் கோவிலில் எட்டிப்பார்த்தால்  யாருமே இல்லை பெருமாளைத் தவிர. கோவில் முன்னால் இருக்கும் தெருவோடு போனால்  ஒரு தார்ச்சாலையில் கொண்டுவிட்டது. தஞ்சாவூர்  என்று அம்புக்குறி.  சரியா 3.7 கிலோ மீட்டர். ஆறே நிமிசத்தில்  தஞ்சை நகரத்துக்குள் வந்துட்டோம்.




 நாலு கிலோ  மீட்டர் கூட  இல்லாத தூரத்தை  நாப்பது நிமிசமாய் அலைஞ்சு  கடந்ததை என்னன்னு சொல்ல?  இந்த மாமணிக்கோவில் வெண்ணாற்றங்கரையை ஒட்டி இருக்கு.

 பெரிய கோவில் விஸிட் ஒன்னு  இருக்கு.  எதிர்வாடையில்  வண்டியைப் பார்க்கிங் செஞ்சுட்டு கோவில் வளாகத்துக்குள் நுழைகிறோம் இப்போ.

தொடரும்.................:-)