Showing posts with label மாதவப்பெருமாள் கோவில்.. Show all posts
Showing posts with label மாதவப்பெருமாள் கோவில்.. Show all posts

Tuesday, September 15, 2009

என்னமோப்பா மாதவா.....

மயூரபுரின்னு பெயர் வழங்கிவந்த பகுதியிலே....... ப்ருகு முனிவர் ஆசிரமம் அமைச்சு வேள்விகள் நடத்தித் தெய்வங்களை (?) ஆராதித்து வந்தார். இவர்தானே வண்டு ரூபமெடுத்து சிவனைமட்டும் சுற்றி வந்தவர்? அதனால்தானே சிவனும், தன் உடலில் அம்பது சதமானம் இட ஒதுக்கீடு கொடுத்து அர்த்த நாரியானது. இந்தக் கணக்கில் பார்த்தால் எல்லாத்துலேயும் ஏதோ ஒரு நன்மை கிடைச்சுருதுன்னு வச்சுக்கலாம்.

நல்லவேளை அடிச்சுச் சொல்லாமக் கேள்வியாக் கேட்டுருந்தேன்:-) 50% இடம் கொடுக்கக் காரணமானவர் ப்ருங்கி முனிவராம். நம்ம ப்ருகும் லேசுப்பட்டவரில்லை. ராமாவதாரத்துக்கு ஒரு காரணகர்த்தாவாம். ஐயம் தெளிவித்த ஆன்மீகப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களுக்குக் கோடி நன்றிகள்.
மேலும் விளக்கங்களுக்குப் பின்னூட்டங்களைப் பார்க்கணும், நீங்க எல்லோரும்.


இந்த மயூரபுரி, ஏகப்பட்ட மயில்கள் உலாவும் வனப்பகுதியாத்தான் அந்தக் காலத்துலே இருந்துருக்கு. இந்த இடத்துக்கே இது காரணப்பெயராவும் அமைஞ்சுருக்கலாம். நான் இப்பெல்லாம் அடிக்கடி மயூரபுரிக்குப் போய்வந்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னா...நீங்க நம்பணும்,ஆமா:-)


மயிலாப்பூர் கபாலி கோயில் ராஜகோபுரத்தைப் பார்த்து நில்லுங்க. ( இப்படித்தான் நாலைஞ்சுநாள் முன்னே அந்த வாசலாண்டை அகஸ்மாத்தாப் போனப்ப, சின்ன ரதத்தில் ஸ்வாமி புறப்பாடு. தூரத்துலே இருந்து பார்த்தேனா..... என்ன சாமின்னு தெரியலை. சாமிக்கு முன்னால் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வச்சுக்கிட்டு ஊர்வலத்தில் நடந்து வரும் காலம் எல்லாம் மாறிப்போயிருக்கு. சின்னதா ஒரு ஜெனெரேட்டர் வச்ச ஒரு வண்டியும், அதுலே நிக்கும் விளக்குக் கம்பமுமா ஒரு அமைப்பு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்துக்கு பதிலா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்னு உறுமல்.

கிட்டேப்போய்ப் பார்த்தால் முருகன். மனைவியருடன் ஊர்வலம். கோவிலுக்குள்ளே போனால்..... நேரெதிராப் பிள்ளையார். நமக்கிடதுபக்கம் இருக்கும் வெளிப்பிரகாரத்தில் ஒரு முப்பது நாப்பதுபேர் தரையில் அமர்ந்து ஏதோ புத்தகம் வச்சுக்கிட்டுப் பாராயணம் பண்ணறாங்க. திருப்புகழோன்னு ஒரு ஐயம். அந்த பக்தர்கள் வரிசையில் எல்லோருக்கும் முன்னால் ஒரு பைரவர். லீடர் போல உக்கார்ந்துருக்கார். பொதுவாக் கோவில்களில் இவருக்கு அனுமதி இல்லையே...எப்படி உள்ளே வந்தார்? எப்படி விரட்டாம விட்டாங்க? (கடைசியில் நாங்கள் வெளியே வரும்போதும் பார்வையை அந்தப் பக்கம் விரட்டினேன். பாராயணம் தொடருது. பைரவர் ஆழ்ந்த உறக்கத்தில். நிஷ்டையோ என்னவோ? தோழியிடம் இதைச் சொன்னபோது அவர் ஒரு சித்தராகக்கூட இருக்கலாமுன்னு சொன்னாங்க!)வலமாக உள்ளே நடந்தால் முருகன் சந்நிதியில் கற்பூர ஆரத்தி முடிஞ்சு பக்தர்கள் தொட்டுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. குருக்கள்கிட்டேயே கேட்டாச்சு என்ன விசேஷமுன்னு...... கிருத்திகையாம். அன்னிக்கு சஷ்டித் திதியும் சேர்ந்து அமைஞ்சுருச்சு. கிடைச்சவரை பாக்கியமுன்னு கோயிலை வலம்வந்து 'எல்லோரையும்' தரிசனம் செஞ்சுட்டு வந்தோம்.

சரி.....இது இருக்கட்டும். இப்ப எங்கே நிக்கறீங்க? கோவில் ராஜகோபுரத்தைப் பார்த்துத்தானே? இந்தப் பக்கம் உங்க இடதுகை வசம் கொஞ்ச தூரத்துலே ஆதிகேசவன் கோவில் இருக்கு. வலது கைப்பக்கம் கொஞ்ச தூரத்துலே மாதவப்பெருமாள் கோவில் இருக்கு.
அவ்வளவா உயரம் இல்லாத அளவான ராஜகோபுரம். மாதவா, மாதவா, மாதவான்னு மூன்று நிறங்களில் எழுதி இருக்கு. அதுக்கு அடியில் பளிச்'ன்னு திருமண். எல்லாத்துக்கும் நியான் விளக்கு அமைச்சுருக்கு. ராத்திரியில் அட்டகாசமா இருக்கும் போல!


நடுவிலே மண்டபமும், அர்த்த மண்டபமும், அதுக்கு அப்பால் கருவறையும். ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீமாதவப்பெருமாள் (மட்டும்) இருந்த கோலத்தில். வலது பாதத்தைத் தாமரை மலர்மேல் வச்சு கைகளை அருள்பாலிக்கும் விதம் அபய ஹஸ்தரா இருக்கார். நமக்கு முன்னே வலது பக்கம் உற்சவ மூர்த்தி. கொள்ளை அழகு. அநிருத்த மாதவராம். கல்யாண மாதவர். இருபக்கமும் தாயாரும் ஆண்டாளுமாத் தேவியர். அவருக்கு முன்னால் சின்ன சைஸா ஒரு வராஹமூர்த்தியும் அவர் தொடையில் அமர்ந்திருக்கும் பூமாதேவியும்.


அர்த்தமண்டபத்தில் நமக்கு வலது புறம் மூன்று சின்ன சந்நிதிகள். சேனைமுதலியார், பேயாழ்வார், நால்வராக உடையவர், பேயாழ்வார்,பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் க்ரூப்.
வெளியே முன்மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் நாலு பக்கமும் அழகழகான சிற்பங்கள். தசாவதாரமா பத்து, காளிங்கனோடு பாலகனாக் கண்ணன்( வெண்ணையும் தயிரும் பாலுமாச் சாப்பிட்டு சின்னத் தொந்தியோடு செழுமையா இருக்கார்) அனுமான், ஆட்டக்காரி, உடையவர் இப்படி வகைவகையா.
மண்டபத்தின் வெளிப்புறம் மேலே அண்ணாந்து பார்த்தால் பக்கத்துக்கு ரெண்டு மூணுன்னு வாய்பிளந்த முதலைகள். ( மழைத் தண்ணீர் சரிந்து வரும் குழாய் அமைப்பு. அதெல்லாம் விசாரிச்சுட்டேன்)

அலுவலகத்தில் இருந்த 'அதிகாரி'யிடம் படம் எடுத்துக்கலாமான்னு கேட்டதுக்கு, அவர் ஏதாவது விசேஷமா?ன்னார். கோயிலைப் பத்தி எழுதணுமுன்னு சொன்னதுக்கு எடுத்துக்குங்க. ஆனா சீக்கிரமா எடுத்துருங்கன்னார்.(???!!! ) நமக்கெதுக்கு வீண் ஆராய்ச்சி? கிடைத்தவரை உத்தமம்.

நாலு அலங்காரத்தூண்களொடுச் சின்னதா ஒரு திறந்த மண்டபம். படிகளில் யானைச் சவாரி செஞ்சுக்கிட்டு இருந்த மூன்று பொடிசுகள். அதையடுத்து கம்பிக்கதவு போட்டு மூடியிருந்தக் கோவில் குளம். சந்தான புஷ்கரணி. இங்கே இதன் கரையில்தான் மேலே சொன்ன ப்ருகு முனிவரின் ஆசிரமம் இருந்ததாம். மாசி மாதம், மகம் நட்சத்திரம், பௌர்ணமித் திதி இம்மூணும் சேர்ந்து வரும் நாளில் பூவுலகின் சகலப் புண்ணியத் தீர்த்தங்களும் இக்குளத்தில் வந்தடைவதாக ஒரு ஐதீகம். அந்த நாளில் இத்திருக்குளத்தில் புனித நீராடி அமிர்தவல்லித் தாயாரையும் மாதவப்பெருமாளையும் வழிபடும் பக்தர்களுக்குப் புத்திரப்பேறும், சகல செல்வங்களும் கிட்டுமாம். இந்த விவரமெல்லாம் ப்ரமாண்ட புராணத்தில், மயூரபுரி மகாத்மியத்தில் இருக்கு. இதே புராணத்தில் அஞ்சாவது அத்தியாயத்தில் ப்ருகு முனிவரின் ஆஸ்ரமத்தில் ஆக்நேய திக்கில்( தென் கிழக்கு மூலையில்) உள்ள கிணற்றில் அயோநிஜராக, பேயாழ்வார் அவதரித்தார். இவர் பெருமாளின் நந்தகம் என்னும் வாளின் அம்சம்.

இதே 'கதை' ஆதிகேசவப் பெருமாள் கோயிலைப் பத்தி முன்னே எழுதி இருந்த பதிவிலும் படிச்சுருப்பீங்க. இது என்னப்பா மாதவா, இப்படி ஒரு கன்ஃப்யூஷன்? நோ...நோ..... நோ கன்ஃப்யூஷன் அட் ஆல்! இந்தக் கபாலியும் மயூரபுரிக் காலத்தில் இங்கே இல்லை. சாந்தோம் சர்ச்சு இப்போ இருக்கு பாருங்க அங்கேதான் இருந்துருக்கார். இப்பத்தானே அடுக்கடுக்காத் தெருக்கள், மாடவீதிகள், கபாலி கோவில் எல்லாம் இங்கே ஆகி இருக்கு,ஒரு நானூறு வருசத்துக்கு முந்தி. அப்போ ஒரே காடு. கூப்பிடு தூரத்தில் ரெண்டு கோவிலும் இருந்துருக்கும்.என்ன....கொஞ்சம் உரக்கக் கூப்பிடணும்,அம்புட்டுத்தான்.

இந்தப் புஷ்கரணியில் தோன்றிய அருள்மிகு அமிர்தவல்லித் தாயாருக்கு, விஸ்தாரமானத் தனிச்சந்நிதி இருக்கு. திருக்குளத்தை எட்டிப் பார்த்தேன். ஏராளமான படிகளொடு கூடிய ஆழமான அமைப்பு. சுத்தம்.... சொட்டுத் தண்ணி இல்லை. அடியில் பச்சைப்பசேலுன்னு புல்தரை. இந்தியாவில் இருக்கும் 'சந்தானங்கள்' போதுமுன்னு ஆயிருச்சு அந்த சாமிக்கே.

பின்புற மதில் சுவருக்கு அருகே பூவராகர். தனிச்சந்நிதி. இடது தொடையில் ஹாயாக அமர்ந்திருக்கும் பூமாதேவி. அழகான உருவம். அதைச் சுற்றிக்கிட்டு மேலே வலம்போனால்... பெருமாள் கோவில்கள் வழக்கப்படி ஆண்டாளம்மாவுக்கானத் தனிச் சந்நிதி, எதிரே துளசி மாடம்.
இடது பக்க நீண்ட மண்டபத்தில் பரமபத வாசல், சின்னத் தேர்கள், கோவிலின் மாதிரி அமைப்பு செஞ்சுக் கண்ணாடிப்பெட்டியில் வச்சுருக்கும் மேசை, ஸ்ரீ ராமர் சந்நிதி( மூடி இருந்துச்சு) இப்படி. இந்தத் தேரில் ஒரு பசுவும் பாப்பாவும் ரொம்ப அழகாக தலையை உயர்த்தி நிக்குது. உற்சவ மூர்த்தியை நடுவில் வச்சுட்டால் கனஜோரா இருக்கும்!
அழகானச் சின்னச் சின்னக் கோபுரங்களுடன் கோயில் படு சுத்தமா ஜொலிக்குது. வெளிப்பிரகாரம், நமக்கிடது பக்கம் மடைப்பள்ளி. சுவத்துலே பெருமாளின் பதினாறு திவ்யநாமங்களும் என்னென்ன பலன்கள் கொடுக்குமுன்னு ஒரு தகவல் பலகை பார்த்ததும் நம்ம கைலாஷி நினைவு வந்தது.
ராஜகோபுரத்துக்கு எதிரே நல்ல உசரமான நாலு தூண்களோடு இன்னொரு மண்டபம். அங்கேயும் தூண்களில் அழகான தசாவதாரச் சிற்பங்கள். ஆனால் பராமரிப்பு இல்லாம அந்த இடம் கிடக்கு. இன்னும் கொஞ்சம் சுத்தமா வச்சுருக்கலாம். இங்கே உள்ளூர் வழக்கப்படி குப்பைகளை வாசலில் கொட்டும் பழக்கம், இங்கேயுமா? (-:
மாதவன், என்னை மூணுமுறை வரவச்சுட்டான். இந்தக் கோவிலுக்கு முதல்முறை நாச்சியாரோடு வந்தேன். ரெண்டாவதா, நம்ம கோபாலோடு வந்தப்ப, (நான் பெற்ற இன்பம்) சாயந்திரம் கோவில் திறக்கும் நேரம். வயசான பட்டர் ஒருத்தர் தளர்வா உக்கார்ந்துருந்தார். மூலவருக்குத் திரை போட்டு இருந்துச்சு. கோவிலைச் சுத்திட்டு வாங்கன்னார். ஆச்சு. சரேல்னு திரையை விலக்குனவர், 'பட்டர்கள் யாரும் இங்கே நிரந்தரமா வேலை செய்யறதில்லை. சம்பளம் ரொம்பக் கம்மி. வெறும் ரெண்டாயிரம்தான். அந்தப் பக்கம் அந்தக் கோவிலில் (? ஆதிகேசவன் கோவிலில்)அஞ்சாயிரம். மூணு மட்டை சாதம் வேற உண்டு அங்கே. இங்கே சாப்பாடும் கிடையாது. டிவிஎஸ்க்காரா கோவிலை நல்லாக் கட்டிவச்சுட்டுப் போயிட்டா. கோயிலுக்குச் சொத்து எக்கச் சக்கம். நல்ல வரும்படி வர்றது. சுத்தி இருக்கும் கடைகள் எல்லாம் கோவிலோடதுதான். ஆனால்...... பட்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கறதில்லை. இளவயசு பட்டர்கள் எல்லாம் ஆறுமாசம் இங்கே இருந்தாவே ஜாஸ்தி. என்னைப்போல வயசானவந்தான் வேறெங்கே போறதுன்னு இங்கேயே கிடக்கேன்'னார்.

"என்னமோப்பா மாதவா....இப்படி இதையெல்லாம் என்னைக் கேக்கவச்சுட்டியே"

நீயே குறைகேட்கும் & தீர்க்கும் கோவிந்தன். இப்ப உனக்கு நான் ப்ரதிநிதியா? அச்சச்சோ....... என்னாலே என்ன செய்ய முடியும்? பெரியவருக்குத் தன் மனசைச் சொல்லிக்கக் கிடைச்ச ஒரு ஆத்மா நான் என்ற ஆறுதல்.


உணர்வுக்கு வந்தவர்போல், 'சட்'னு திரும்பி நெய்விளக்கை ஏத்தி மூலவரை அறிமுகப்படுத்தினார். சேவிச்சுக்கிட்டோம்.

மூணாவதா நேத்து என்னமோ அங்கே போனால் தேவலைன்னு இருந்துச்சு. ரொம்பவே இருட்டிவேற போச்சு. இத்தனைக்கும் மணி ஏழரைதான். பிரகாரத்தில் வலம் வந்தப்போ ....வடகிழக்கு மூலையில் முக்காலிருட்டில் ஒரு சின்னச் சந்நிதி. போன ரெண்டுமுறையும் இதைக் கவனிக்கவே இல்லை. இப்போ...அதுவும் யாரோ உள்ளூர்க்காரர் அதை வலம்வந்துக்கிட்டு இருந்தாரேன்னு கவனிச்சால்...... ஹைய்யோ...என்னன்னு சொல்வேன்!

பால ஹனுமான், அழகாச் சின்னதா ஒரு ஆஞ்சநேயர். ' சட்' ன்னு எனக்கு கோகி நினைவு வந்துருச்சு. நான் இருக்கேன்னு காமிக்கத்தான் என்னை வரச் சொன்னாயா?

என்னமோப்பா மாதவா...உன் செயலைப் புரிஞ்சுக்கவே முடியலை.