Monday, December 08, 2025

மீட்டர் பூ..... மூணரை !!!

இருட்டத்தொடங்கியதில் விளக்கலங்காரம் பளிச் !  இவ்வளவு தூரம் வந்துட்டோம், கையோடு ஜோதி புஷ்பக்கடைக்கு போயிட்டுப் போகலாமுன்னேன்.  வீரமாகாளியம்மனிடம் இருந்து இன்னொரு அஞ்சு நிமிட் நடை.  கேம்பெல் லேனுக்குள் நுழைஞ்சதும் ஒரு ஸ்டேண்டில் பழங்கள் விற்பனைக்கு வச்சுருக்காங்க. 

 முந்தியெல்லாம்  முதல் கட்டடத்தையொட்டியே காய்கறி, பழங்கள் எல்லாம் அருமையாக  இருக்கும். எல்லாம் இங்கே நியூஸியில் கிடைக்காத வகைகள் ! ஒரு பெரிய்ய்ய பெருமூச்சோடு, கெமெராக் கண்களாலும், வெறும் கண்களாலும் பார்த்துத் தின்னுட்டு வருவேன்.  இப்போக் கடையையே காணோம். ஒரு ஸ்டேண்டுலே அடங்கிக்கிடக்கு !




தெருவோரக்கடைகளை எல்லாம் எடுத்துருக்காங்க.  கிச்னர் & செராங்கூன் ரோடு சந்திப்பில்  அருமையான இளநீர் விற்கும் கடை இருக்கும். இப்போ இல்லை.... ப்ச்.... நான் ஒரு இளநீர்ப்ரியை ! 
கேம்பெல் லேனே கலகலன்னு இருக்கு ! 

ஜோதிக்குப்போயிட்டுத் திரும்பி வரும்போது பலாப்பழம் வாங்கிக்கணும். ஜோதியில் எனக்கு நித்யமல்லி வாங்கணும். பூஜைக்கான ஐட்டங்கள் எவ்வளவோ  இருந்தாலும் எனக்கு மல்லி தவிர வேறொன்னும் வேணாம்.  சின்னத்தேடலுக்குப்பின்  மல்லி மூணு மீட்டர், கனகாம்பரம் மூணுமீட்டர்னு ஷாப்பிங் முடிஞ்சே போச்சு !
பழக்கடையில் பலா, கொய்யா !!

'ரொம்ப தூரம் வந்துட்டோம். உன்னாலே நடக்க முடியாது.... டாக்ஸியில் போகலாமு'ன்னார் நம்மவர்.   சின்ன தூரம்தான் டாக்ஸி கிடைக்காதுன்னேன். ஆனால்......... கிடைச்சுருச்சு.

ஏழரைக்கெல்லாம் அறைக்கு வந்துட்டோம். 

ராச்சாப்பாடு ?

எட்டரைக்குப் போகலாம்.  இருக்கவே இருக்கு நம்ம கோமளவிலாஸ்!
ரெண்டு இட்லி, மூணு சட்னி, சாம்பார் கிடைச்சது! தாராளம்!
நம்ம விக்னேஷ்தான் ஓடிவந்து உபசரிச்சார்!
சாப்பிட்டு முடிச்சதும், வெளியே போட்டுருந்த பெஞ்சில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வந்தோம்.  பகலில்  அடிச்ச வெயிலுக்கு, இப்ப இதமான  காத்தோடு காலநிலை அருமையா இருக்கு !  டபுள் டெக்கர் பஸ்கள் புதுசா இங்கே  பார்க்கிறேன். அதான் சில வருஷங்கள்  நமக்கு இங்கே வரவே முடியாமல் போச்சே....
மறுநாள் காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து தயாராகி, சுப்ரபாத ஸேவைக்குக் கிளம்பினோம். அனக்கமே இல்லாத விசாலமான சாலைகள் ,  அதிகாலைப்போதில் அருமை !
ஆஞ்சுதான் வாவான்னார் !
இன்னும் ஸேவை ஆரம்பிக்கலை.  ரெண்டு பக்தர்கள் உக்கார்ந்துருக்காங்க. இதோ நாம் இருவர்.  கால்வலி காரணம், தரையில் உக்காரமுடியாது.... நம்மைப்போல் இருக்கும் மக்களுக்காக அங்கங்கே நாற்காலிகளை அடுக்கி வச்சுருக்காங்க.  அதிலிருந்து ரெண்டை எடுத்துப்போட்டு உக்கார்ந்தோம்.  பட்டர் ஸ்வாமிகள் வந்தவுடன் சுப்ரபாத ஸேவை ஆரம்பிச்சது.  பக்தர்கள்  வர ஆரம்பிச்சாங்க.
 

திரை விலகி, நித்ய பூஜைகள் ஒவ்வொன்னா ஆரம்பம்.   வழக்கம்போல் நாங்க பிள்ளையார் சந்நிதிக்குப் போய்க் கும்பிட்டு, ஸ்ரீ வைஷ்ணவி,  ஸ்ரீ சுதர்ஸனர் , ஸ்ரீ நரசிம்ஹர்  எல்லோரையும் வணக்கிட்டுப் ப்ரகாரம் சுத்தத் தொடங்கறோம். அன்றைக்குக் கடவுளர்களுக்கு சாத்தவேண்டிய மாலைகளும், மற்ற பொருட்களும் அந்தந்த சந்நிதியில் தயாரா  வச்சுருக்காங்க.
தாயாரை ஸேவிச்சுட்டு, வலம்போகும்போது குறுக்கே டைனிங் ஹால் வருதே !!. இன்றைக்கு யாரும் ஸ்பான்ஸார் செய்யலை போல..... கேஸரியும், தேங்காய் சாதமும்  ப்ரஸாதம், கோவில் வகையில் ! 



நம்ம ஆண்டாளம்மாவுக்குத் தூமணிமாடம்.! மூலவர்கள் உருவில் சிறிதாக இருந்தாலும்  த்வாரபாலகிகள் லைஃப் சைஸ்தான்!   அழகாப் புடவை உடுத்தியிருக்காங்க. முற்றம் கடந்தால் நம்ம ஆஞ்சு!
கோவிலில் சில நாட்களில், சில நேரங்களில் கூட்டம் அதிகம், சில நேரங்களில் நம் வரவை எதிர்பார்த்து 'அவன்' காத்திருப்பதும் உண்டு! எப்படியானாலும் கண்ணும் மனசும் குளிரக்குளிர  தரிசனம் நிச்சயமே !

இன்றைக்கும் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு.   ' கூடாது' போட்டுவச்சுருக்காங்க.  எங்கள்  உடை, எங்கள் உரிமைன்னு யாரும் கொடிபிடிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
தீபாவளிக்கு   கோபுரவாசலில் கட்டுன வாழையாக இருக்கணும் !

எல்லோரும் கோபுரவாசலாண்டை காலணிகளை விட்டுட்டுப்போனாலும்,  மெயின் கேட்டாண்டையே காலணிக்கு ரெண்டு ஸ்டேண்ட் வச்சுருக்கு நிர்வாகம்.  குழந்தைக்காகக் கொண்டுவரும் தள்ளுவண்டிகளை அங்கேயே விட்டுட்டுப் போகலாமாம்.  உக்கார நாற்காலிகள் (ப்ளாஸ்டிக்) போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே இழுத்துப்போட்டுக்கிட்டு உக்காரணுமுன்னா....  ரெண்டு பேர் வேணும் !
இன்றைக்கு மதில் க்ளிக்ஸும் ஆச்சு!






இன்னும்  எஞ்சினுக்குப் பெட்ரோல் போட்டுக்கலை..... லேசான உறுமல் ! முதலில் தீ எரிய ஆரம்பிக்குமுன்  நாமே போனால் நல்லதுன்னு.... அதே கோமளவிலாஸ்! ஏகாந்த சேவை லபிச்சது. விக்னேஷ் வந்து  ஆர்டர் எடுத்துக்கிட்டுப் போனார்.  நம்மூர் நண்பர் செந்தில் போல இருக்காருன்னு எனக்குத்தோணுச்சு. கோபாலிடம் சொன்னால் 'ஆமாவாம்' ! க்ளிக் க்ளிக்


தினம் என்ன இட்லின்னுட்டு.........

இன்றைக்கு பதினொருமணிக்கு, பேத்தி தரிசனம் !  இங்கே சிங்கையில் படிப்பு! சென்னையில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை.  நம்ம மகரின்  மகள்! முதல் சந்திப்பு !!   சின்னப்பொண்ணு என்றாலும்..... பெரியவங்களைப் பார்க்க வெறுங்கையோடு போகவேணாமேன்னு  ரெண்டு Punnet, Strawberry  வாங்கி வந்தவிதம் என்னை 'அட !' போடவச்சது.  படிப்பு பற்றியெல்லாம் விசாரிச்சுக்கிட்டு இருந்தோம்.  இதுக்கிடையில் பொட்டி தேடித்தரும்ஆஃபீஸுக்குப் ஃபோன் போட்டார் நம்மவர்.

பொட்டி கிடைச்சுட்டதாம் !  பகல் மூணு மணிக்கு முன் கொண்டு வர்றாங்களாம் ! ஆஹா ஆஹா.... பேத்தி வந்த அதிர்ஷ்டம், பொட்டியும் வருது !!!!  அதுக்காக மூணு வரை அறையிலேயே இருக்க முடியுமா என்ன ? பகல் சாப்பாடுன்னு ஒன்னு இருக்குல்லே ?  கீழே வரவேற்பில் பொட்டியைக் கொடுக்கச் சொன்னோம்.

சாப்பாட்டு நேரம் வந்ததும்,  எங்கே போகலாமுன்னு ஒரு யோசனை.  நேத்து நாகர்கோவிலில் இருந்து நோவாடெல் வழியாத் தோழியுடன்  நடந்துவந்தோமே.... அப்பக் கன்ணில்ப்பட்ட அன்னபூரணாவுக்குப் போகலாமுன்னு நாந்தான் ஐடியாக் கொடுத்தேன் ! கிளம்பிப்போனோம். 
நோவாவை அடுத்து இருக்கும் பெரிய கட்டடத்தின்  பக்கவாட்டில் ஒரு சின்னப்பகுதி! அதுலே இருக்கும் வெளிவராந்தாதான் டைனிங் ஹால் ! 
மூவருமே தோசைன்னோம் ! வகைகள் மட்டும் வெவ்வேற ! நம்மவருக்கு ஒரு லஸ்ஸி.  எல்லாமே ரொம்ப சுமார் ரகம் !  பாவம் குழந்தை.... நல்ல இடமாக் கூட்டிப்போகலயேன்னு மனசுக்குள் குற்ற உணர்ச்சியா இருந்தது எனக்கு. 
அப்படியே பொடிநடையில் முஸ்தாஃபாவில் ஒரு சுத்து.  பக்கத்துலே ஒரு ரெஸ்ட்டாரண்டின் வாசலில் இளநீர் இருந்தது.  பக்கத்தில் விற்பனையாளர் யாருமே இல்லை!  கல்லாவில் இருந்தவர், வெளியே எட்டிப்பார்த்துட்டு நம்மை உள்ளே வந்து உக்காரச் சொன்னார்.  ரெஸ்ட்டாரண்டின்  ஓனர் அவர்தானாம்.  குடிச்சு முடிச்சபின் ரெண்டா வெட்டித்தரும் பிஸினஸெல்லாம் இங்கில்லை. கைப்பிடி  நீளமான ஸ்பூன் கொடுக்கறாங்க. நாமே  சுரண்டிச் சாப்பிடணும். மத்தவங்க ரெண்டுபேரும் நாசுக்காக் குடிச்சுட்டு, லேசா ஒரு சுரண்டல்.  நான் ஒட்டச் சுரண்டிட்டுத்தான்  விடுவேன்.   நியூஸியில் கிடைக்காத அபூர்வ வஸ்துவை நாசுக்கு பார்த்தால் எப்படி ? சுரண்டினேன்!
ஹொட்டேலுக்குத் திரும்பினோம். பொட்டி வந்து காத்திருக்கு ! பேத்திக்காகக் கொண்டுபோயிருந்த சின்ன பரிசுப்பொருள் பொட்டிக்குள்தான் இருக்கு !  ரெண்டுமணிக்குப்  பேத்தி கிளம்பிப் போயாச்சு.    நம்ம அன்பையும் ஆசிகளையும் கூடவே அனுப்பி வைத்தோம்!  குழந்தை நல்லா இருக்கட்டும் !சொந்த வேலைகளுக்கு ஞாயிறுதான் நேரம் கிடைக்குதாம்.  

 ரெண்டரைக்கு நம்ம வலைக்குடும்பத்திலிருந்து கோவி.கண்ணன் வந்தார்.        ( நண்பர் என்பதைவிட குடும்ப அங்கம் என்பது கூடுதல் நெருக்கம் இல்லையோ !!!  ) முதல்நாள்தான் அவர் பதிவில் ஒரு அதிர்ச்சி  செய்தியைப் பகிர்ந்து கொண்டவர், அதிர்ச்சி அடைய வேணாம். ஒரு மாசம் ஆச்சு. இப்போது நலமேன்னு சொல்லியிருந்தார்.  அவரும் மனைவியுமா வந்தாங்க. பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ! இவர் பாதியாகவும், மனைவி முக்கால் வாசியுமா  மெலிஞ்சுருக்காங்க. ரெண்டுபேருமே  ஒல்லி வகையினர்தான். அதுலேயும்  இப்படி இளைச்சுட்டால் எப்படி ? ப்ச்..... பொதுவாப் பெண்களுக்கு,  கணவர் உடம்பு சரியில்லைன்னா.... கவலை தின்னுரும்.  தனக்கு ஏதாவது உடம்புக்கு வந்தா.... அவ்வளவாப் பொருட்படுத்த மாட்டோம். 

பேச்சுவாக்கிலே லஞ்சு ஆச்சான்னு கேட்டதுக்கு, இல்லையாம் ! மணி மூணு! இவ்வளவு நேரம் கழிச்சுச் சாப்பிட்டால் எப்படி ? நம்மவருக்குப் பசி இருக்கோ இல்லையோ.... சாப்பாட்டு நேரம் வந்தவுடன் சாப்பிட்டுடணும்.  நான்கூடக் கேப்பேன்..... 'கடிகாரமே கண்டுபிடிக்கப்படாமல்  இருந்துருந்தா என்ன செய்வீங்க'ன்னு !

கோமளவிலாஸில் தஞ்சமடைந்தோம். அதுக்குப்பின் அறைக்கு வந்து, இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். இன்று ஞாயிறு. வரும் ஞாயிறு அவுங்க வீட்டில் நமக்கு லஞ்சுன்னு ஒரு அழைப்பு  !  அருமையான வீடு ! எனக்கு ரொம்பப் பிடிச்சதும் கூட !
நம்ம காய்கறிகளுக்கான கடைகள் செராங்கூன் ரோடில்தான்!  இப்போ சில வருஷங்களா முஸ்தாஃபாவிலும்!  24 மணிநேரமும் திறந்து வைப்பதால் எப்போ நேரம் கிடைக்குமோ அப்போ வந்து வாங்கிப்போவது  உள்ளுர் மக்களின் வழக்கமா இருக்கு !  நம்ம கோவியாரும், மனைவியும் எதிரில் இருக்கும் முஸ்தாஃபாவில் கறிகாய்  ஷாப்பிங் செஞ்சுக்கணுமுன்னு  கிளம்பிப் போனாங்க.

மணி நாலரை ஆச்சுன்னு நாங்களும் கோவிலுக்குப் போகலாமுன்னு  கிளம்பினோம்.

 தொடரும்.............. :-)

0 comments: