சுப்ரபாதம் வாசிச்சு முடிச்சதும் திரை விலக, நம்ம பெருமாளின் தரிசனம் அருமை. ஆரத்தி எடுத்து, காலை ப்ரேக்ஃபாஸ்ட் நிவேத்யம் ஆச்சு. அடுத்து தாயார் சந்நிதி, புள்ளையார்& முருகன், ஸ்ரீ வைஷ்ணவோதேவி, நரஸிம்ஹர் & சுதர்ஸன், ஆண்டாள், ஆஞ்சுன்னு எல்லா சந்நிதிகளுக்கும் காலைஉணவைக் கண்டருளப்பண்ணதும், உற்சவர்களுக்குத் திருமஞ்சனம். கோவில் இசைக்கலைஞர்கள் நாதஸ்வரமும் தவிலுமாக ஆஜர். ஷோடஸ உபச்சாரம் ஆனதும், ஆரத்தி எடுத்துட்டு, பக்தர்களுக்குக் கண்களில் ஒற்றிக்க தீபாராதனை செய்த தீபக்கரண்டியும், கூடவே சடாரி சாதித்தலும் ஆச்சு.
தினப்படி பூஜா நியமங்களுக்காகப் பெருமாள் சந்நிதியில் திரை போடுதலும் விலகுதலுமாக இருக்கும் நேரம், நாங்க புள்ளையாரை ஸேவிக்கப் போனோம். பாலபிஷேகம் நடக்குது. பக்கத்துலேயே தம்பி வேல் வடிவத்தில் நிக்கறார்.
அஞ்சு நிமிட் நின்னு கும்பிட்டதும் அவரை வலம் வர்றோம். ஒரு பெரிய மண்டபமா இருக்குமிடத்தில் இடப்பக்கம் புள்ளையார் & ப்ரதர், வலப்பக்கம் சுதர்ஸனரும்அவர்பின்பக்கம் ஸ்ரீ நரஸிம்ஹருமாக ! இரண்டு சந்நிதிகளும் ஒட்டியொட்டி இல்லாமல் நிறைய இடைவெளியோடு இருக்கு. அந்த இடைவெளியில் கொஞ்சம் உள்ளேதள்ளி, ஸ்ரீ விஷ்ணுதுர்கையின் சந்நிதி ! சின்ன உருவமாச் செல்லம்போல இருக்காள் !
அங்கிருந்து மூலவர் சந்நிதிக்கு வலப்பக்கம் இருக்கும் தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் சந்நிதியில் தரிசனம். சுதர்ஸனரைக் கடந்து தாயார் சந்நிதிக்குப் போகும்போது, இடதுபுறம் கண்ணாடிக் கூண்டில் பாலாஜி வெங்கடேசன் ! திருமலையில் நமக்கு மூச்சுமுட்டும் வகையில் கூட்டத்தில் நம்மை மாட்டவச்சதுக்குப் ப்ரதிகாரம்போல... தனியா கூண்டுக்குள்! ஆடை அலங்காரத்துக்கு ஒரு குறைவுமில்லை. ஒரே ஜொலிப்புதானாக்கும்! கோவில் ப்ரகாரத்தில் வலம் வர்றோம். தாயார், பெருமாள் விமானதரிசனங்கள் ஆனதும் அடுத்த விமானம் நம்ம ஆண்டாளோடது.
ஆனால் அங்கே வலப்புறம் திரும்பாமல் அந்த மூலையில் இடதுபக்கம் இருக்கும் வாசலுக்குள் ஒரு எட்டுப்போக வேண்டியது ரொம்பவே முக்கியம் !! ஏனாம் ? அது உணவுக்கூடம்! பூஜை முடிய முடிய, நிவேதனம் ஆன ப்ரஸாதங்கள் இங்கே வந்தவண்ணமே! யாராவது ஸ்பான்ஸார் செய்திருந்தால் கொஞ்சம் அமர்க்களமா இருக்கும். இல்லைன்னா கோவில் வகையில் சிம்பிளான ஏதாவது. ஒருமுறை பருப்புப்பொடி ஸாதம் கூட கிடைச்சிருக்கு !
இந்த உணவுக்கூடம், ஒரு காலத்தில் அறநிலையத்துறை அலுவலகமாக இருந்தது. பல வருஷங்களுக்கு முன் (2006 ஆக இருக்கணும்.) நானும் மகளுமாக சிங்கப்பூர் வரை போயிருந்தோம். நம் வரவை முன்னிட்டு, இணைய மாநாடு ஏற்பாடு செஞ்சுருந்தாங்க நம்ம ரம்யா நாகேஸ்வரன். விவரம் கீழே சுட்டியில்....
https://thulasidhalam.blogspot.com/2005/03/blog-post_31.html
சிங்கைச்சீனுவை வலம் வந்துக்கிட்டு இருக்கும்போது சந்நிதிகளுக்கு அந்தாண்டை வளாகத்தின் பின்புறச் சுவரில் இருந்த ஒரு கதவு சட்னு திறந்தது. யாரோ ஒருவர் வெளியில் வர்றாரேன்னு தலையைத் திருப்பிப் பார்த்தால் ஒரே அதிர்ச்சி ரெண்டு பேருக்கும். அட ! நம்ம கணேசன் ! நியூஸிக்கு நாம் வந்த புதுசுலே , கொஞ்சநாட்களில் அவரும் வந்துட்டார். சிங்கப்பூர்க்காரர். இன்னொரு தமிழனைப் பார்த்த மகிழ்ச்சிதான் ! நாம் வீடுவாங்கி க்ரஹப்ரவேசம் செய்யும் நாளில் தான் அவர் வாங்கின வீட்டுக்கும் க்ரஹப்ரவேசம். ஒரே தெருவில் அவர் ஒரு திசையும் நாம் ஒரு திசையிலுமா !
நம்ம வீட்டுவிழா (!!!!) முடிஞ்சதும் அவர் வீட்டுக்குப்போனால் தனியா ஒரு சாமிப்படத்தை வச்சு விளக்கேத்திவச்சுட்டு உக்கார்ந்துருக்கார். தனி மனிதராச்சா.... ஒன்னும் செய்யலையாம் ! அடராமான்னு, இங்கே பண்ண ப்ரஸாதவகைகளைக் கொண்டுபோய் அங்கே சாமி கும்பிட்டுப் பகிர்ந்துக்கிட்டோம்.
அடுத்த வருஷம், இந்தியாவுக்குப்போய் கல்யாணம் செஞ்சு, புதுமனைவியோடு வந்தார். அடுத்துவந்த ரெண்டு வருஷங்களில் சிங்கப்பூருக்கே போயிட்டாங்க. நாமும் சிங்கை போகும்போதெல்லாம் அவுங்க வீட்டுக்கு விஸிட் செய்வோம். ஆனால் அவர் ஆஃபீஸ், கோவிலுக்குப் பின்னாண்டைன்னு அதுவரை தெரியாது. அந்த இடத்தைத்தான் இப்போ உணவுக்கூடமா மாத்தியிருக்காங்க. ஆஃபீஸ் இடம் மாறியிருக்கு போல !
ஆகிவந்த வழக்கத்தை மாத்தவேணாமேன்னு பாதிவலத்துலே கூடத்துக்குள்ளே எட்டிப் பார்த்தோம். ப்ரஸாத விநியோகம் நடக்குது. கேஸரி, பொங்கல், வடை, சாம்பார் & காஃபி ! கிடைச்சதை வாங்கி உள்ளே தள்ளிட்டு, வலத்தைத் தொடர்கிறோம். சனிக்கிழமை யாரோ ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க.
இடப்பக்கச் சுவரில் கோவில் பற்றிய விவரங்கள். புதுசா வச்சுருக்காங்க. நேஷனல் ஹெரிடேஜ் போர்ட்டின் கைங்கர்யம் !
ஆண்டாள் சந்நிதிக்குப்போய் 'தூமணி மாடத்து' ஆச்சு ! எதிரில் துளசிமாடம் ! தளதளன்னு பசுமை ! காலநிலையைப் பொறுத்துதானே செடிகொடிகள் வளர்வது. இவ்வளவு குளிரில் நம்ம வீட்டுத் துளசி கொஞ்சமாவது பிழைச்சிருப்பது, அடுக்களையில் அடுப்புக்குப்பக்கம் ஜன்னலோரம் வச்சுருப்பதால்தான்! 'துளசியின் இடம் அடுப்பங்கரைன்னு.... அதுக்குமே புரிஞ்சுருக்கு, பாருங்களேன்!!!
ப்ரகாரத்தின் கடைசிச் சந்நிதி, நம்ம ஆஞ்சுவுக்கு ! மூலவருக்கு முன்னால் பெரியதிருவடி, கொடிமரம், பலிபீடம்னு சம்ப்ரதாயமாக் கட்டியிருக்கும் கோவில் . படுசுத்தமாகவும் வச்சுருக்கு நிர்வாகம் ! முந்தியெல்லாம் திறந்தவெளியாக இருக்கும் ப்ரகாரத்தில் இப்போ மேலே சன்ஷேடு போல போட்டுருப்பதால் மழை வந்தாலும் ப்ரச்சனை இல்லை!
மூலவரிடம் சொல்லிட்டு, ஏழரை மணிக்கு கோவிலில் இருந்து வெளியே வந்ததும் எதிர்வாடையில் இருக்கும் பூக்கடை கூப்பிட்டது. முழம் மல்லி! மல்லிச்சரத்தில் அங்கங்கே குட்டிக்குட்டி சிகப்பு ரோஜா (காகிதப்பூ )வச்சுக் கட்டுவது இங்கத்து ஸ்டைலு ! தமிழ்நாட்டுலெ இருந்து தினம் வருதாம். கடையில் பூச்செடிகளும் கூட விற்பனைக்கு வச்சுருக்காங்க.
பொடிநடையில் ஃபேரர்பார்க் ஸ்டேஷன் வரை வந்துட்டு, வலப்பக்கம் பார்த்தால் நம்ம ஹொட்டேல் தெரியுது. அதை நோக்கிப்போனால்.... ரங்கூன் ரோடு வாசல் ! இதன் வழியாகக் கோவிலுக்குப் போனால் இன்னும் ஒரு முப்பது மீட்டர் தூரத்தை மிச்சப்படுத்தலாம். கால் இருக்கும் நிலைக்கு எப்படியெல்லாம் நினைப்பு வருது பாருங்க. எம் ஆர் டி உள்ளே போக எஸ்கலேட்டர்கள் ஹொட்டேல் பில்டிங்குலேயே !
அறையில் இருக்கும் எலக்ட்ரானிக் லாக்கர் பூட்டவரலைன்னு வரவேற்பில் சொன்னதும், அதுக்குண்டான பணியாளரை அனுப்பினாங்க. அவர் வந்து சரி செய்து கொடுத்துட்டுப் போனார். பாஸ்போர்ட், இன்னும் சில பொருட்களை லாக்கரில் வச்சுப் பூட்டிட்டுக் கோமளவிலாஸுக்குப் போறோம். அங்கே போனால் சனிக்கிழமை என்பதால் எட்டரைக்குத்தான் திறப்பாம். மற்ற நாட்களில் எட்டு ! வாசலில் ரெண்டு பெஞ்ச் போட்டுவச்சுருக்காங்க. செரங்கூன் ரோடை, வேடிக்கை பார்த்தால் ஆச்சு. எனக்கு இட்லிகளும், நம்மவருக்குப் பூரி & கிழங்குமா ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. முத்தாய்ப்பா அருமையான ஃபில்டர் காஃபி. விக்னேஷ்தான் நம்மைக் கவனிச்சுக்கிட்டார்.
முடிஞ்சதும் நேராகப்போனது முஸ்தாஃபா சென்டருக்குத்தான். முந்தியெல்லாம் செராங்கூன் சாலையைப் பார்த்தபடியும் இருந்த வாசல்கள் எல்லாம் இப்போ இல்லை. அங்கெல்லாம் நகைக்கடைகள் இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு ! கொஞ்சதூரம் வலப்புறம் நடந்து மசூதிக்கு முன் இருக்கும் வரிக்குதிரையைக் கடந்து எதிர்ப்புறம் இருக்கும் ஸையத் ஆல்வித் தெருவில் இருக்கும் முஸ்தாஃபாவின் பக்கவாட்டு வாசல்கள் ஒன்றின் மூலம் கடைக்குள் போகணும். போனோம். அவசரத்தேவையா எனக்கொரு நைட்டி மட்டும் போதும். பொட்டி எப்போ கிடைக்குமோன்னு தெரியலையே..........
லிட்டில் இண்டியாவில் எல்லாக் கடைகளும் காலை பத்துமணிக்குத்தான் திறக்கறாங்க. ராத்ரி பத்துவரை கடைகள் திறந்துருக்கு. முஸ்தாஃபா மட்டுமே விதிவிலக்கு..... கடையை மூடுவதே இல்லை ! இருபத்திநாலு மணி நேரமும் திறந்தே இருக்கு ! காய்கறி முதல் சகலமும் ஒரே கூரையின் கீழ் ! உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளுமா, எந்த நேரத்தில் போனாலும் கூட்டமே கூட்டம்.
ஹொட்டேலுக்குத் திரும்பிப் போனதும் பொட்டிவிவரம் கேக்க, அவுங்க கொடுத்த எண்ணுக்குப் ஃபோன் பண்ணால் .......... தொடர்பு கொள்ள முடியலை. கீழே வரவேற்பில் போய் ஃபோன் செஞ்சார். இன்னும் வரலையாம். பொட்டியின் படம் இருந்தால் அனுப்புங்கன்னு சொன்னாங்க. நான் பொதுவாப் பயணம் கிளம்புமுன் கொண்டுபோகும் பெட்டிகளை க்ளிக் பண்ணுவது வழக்கம். அது இப்போ உதவிக்கு வந்தது. நம்ம செல்ஃபோனில் அனுப்பலாமுன்னா..... முடியலை. இத்தனைக்கும் ரோமிங் வசதிக்கு நியூஸியில் முப்பது டாலர் கட்டியிருக்கு, ரெண்டு வாரத்துக்கு!
ஹொட்டேல் வைஃபை நல்லாவே வேலை செய்யுது. ஆனால் ஃபோன் பண்ண முடியாது.
நம்ம நெடுநாள் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், பதினொரு மணிக்கு நம்மை சந்திக்க வர்றாங்க.
தொடரும்..........




























0 comments:
Post a Comment