'இங்கே ரொம்பப் பழைய கோவில் ஒன்னு இருக்காம். போயிருக்கோமா'ன்னார் நம்மவர். 'ஆமாம் போயிருக்கோம். பதிவு கூட எழுதியிருந்தேன். ஆனால்..... ரொம்ப வருஷமாச்சு. இன்னிக்கு அங்கே போகலாம். பக்கத்துலே இன்னொரு கோவிலும் இருக்கு. முடிஞ்சா அங்கேயும் போயிட்டு வரலாம்.
கீழே போய், டாக்ஸிக்குச் சொல்லிட்டுக் காத்திருந்தோம். ரொம்ப பிஸியான நேரம் என்பதால் கொஞ்சம் டாக்ஸி வர லேட்டாகுமாம். ஆய்க்கோட்டே....!!
சிங்கையில் எம் ஆர் டி ரொம்ப வசதி! மலிவும் கூட. நம்ம ஹொட்டேலில் இருந்தே எஸ்கலேட்டரில் கீழே இறங்கி ஸ்டேஷனுக்குப் போகலாம். என்ன ஒன்னு..... ஸ்டேஷனுக்குள் ரொம்ப நடக்கணும். பெரிய பெரிய சுரங்கப்பாதைகள் ! எனக்கு ரயில் பிடிக்கும் என்றாலும்.... நம்ம கால் இருக்கும் நிலையில்.......... ப்ச்.
டாக்ஸி வந்ததும் அதில் போய் ஏறி உக்கார்ந்துட்டு, 'சௌத் ப்ரிட்ஜ் ரோட், மாரியம்மா டெம்பிள்'னேன். சீன ட்ரைவர்தான். இங்கே இந்தியன் ட்ரைவர்களை இதுவரை நான் பார்த்ததேயில்லை. காரணம் என்னவோ ??
பத்தே நிமிட்லே கொண்டுபோய் இறக்கிட்டார் ட்ரைவர். இந்த ஏரியா சைனாடவுன். கடைகள், கட்டடங்களுக்கு இடையில் லேசா ஒரு ஆங்கிளில் கூட்டத்தோடு கூட்டமா இருக்கு கோவில். ராஜகோபுரம் கூட, ரொம்ப அடக்கிவாசிச்சது போல சின்னதுதான், அஞ்சுநிலையில்! தெருவிலிருந்து பார்த்தாலே அதோ தூரத்துலே அம்மனை பார்க்கமுடியும். என்ன ஒன்னு.... கொடிமரம் குறுக்கே வரும் ! சின்ன மரம்தான். நம்ம தலையை லேசாச் சாய்ச்சால் அதோ..... அம்மன் ! கருவறை மூடியிருந்தாலும் அவளைப் பார்க்கலாம் ! போட்டுவச்சுருக்கும் திரைச்சீலையிலும் அச்சு அசலா அவளுருவம் !
சந்நிதிக்கு முன் ரெண்டு பக்கமும் மக்கள் வரிசை. சாயரக்ஷை பூஜை ஆரம்பமாகப்போகுது. மணி ஆறடிக்கப்போகுதே!!
ப்ரகாரத்தின் ஒரு பக்கம் ஸ்வாமி குடையும், தவில் நாதஸ்வரக் கலைஞர்களுமா.... தயாரா இருக்காங்க. வலம் வந்து கொடிமரத்துக்குப் பக்கம் ஒரு அஞ்சு நிமிட் நின்னு வாசிச்சிட்டு முன் நோக்கிக் கருவறைக்கு வர்றாங்க.
அம்மன் சந்நிதிக்கு ரெண்டு பக்கங்களிலும் மாடம் போல் அலங்கரிச்சு இருக்கும் இடத்தில் அம்மனுக்கு வலப்புறம் மூத்த பிள்ளையும், இடப்புறம் நம்ம விஸ்வநாதரும் விசாலாட்சியும் !
நமக்கு வலப்பக்கம் மண்டபத்தில் சந்நிதிபோல ஒன்னு பெரிய திரைச்சீலைக்குள். திரைச்சீலையில் நடுவில் ஓவியமாக புவனேஸ்வரி (கையில் கரும்பு இருக்கு ) வலது இடது பக்கங்களில் லக்ஷ்மி & சரஸ்வதி. ரெண்டு பக்கங்களிலும் ஆளுயரக் குத்துவிளக்கெல்லாம் இருக்கு..... சந்நிதியாகத்தான் இருக்கணும்.
கருவறை மண்டபத்தையொட்டி இருக்கும் நடராஜர் சந்நிதிக்கு இந்தாண்டை இருக்கும் ஒரு கடவுள் சிலைக்கு , குருக்கள் ஒருவர் வந்து பூஜை செஞ்சு வடைமாலை சாத்தினார். கொஞ்ச தூரத்தில் நின்னாலும் வடை மட்டும் கன்ணுக்குத் தெரிஞ்சுருது. ஆஞ்சு போலன்னு கொஞ்சம் வலப்பக்கம் நாலைஞ்சடி முன்னேறிப் போய்ப் பார்த்தால் சரபேஸ்வரர் ! வடை மாலை இவருக்கு..... முதல்முறையாகப் பார்க்கிறேன். ஆஞ்சு வடை போல கரக்முரக்ன்னு க்றிஸ்ப்பானதா இல்லாம மெதுவடை மாலை !!!




அதுக்குள்ளே மூலவர் பூஜை ஆரம்பிச்சு ஷோடஸ உபச்சாரங்கள் முடிஞ்சு அடுக்குவிளக்கு ஆரத்தி ! முன்னால் இருக்கும் சிறிய கற்சிலையும் அவருக்குப்பின்னால் சுதைச் சிற்பம் போல பெரிய அளவு அம்மன் முகமும் இப்பத்தான் என் ஊனக்கண்களுக்குத் தெரிஞ்சது! இருவருமே மூலவர்தான்னு நினைக்கிறேன்.
பழைய பதிவில், (எழுதியே பதிநாலு வருஷங்கள் ஆகியிருக்கு) விவரம் உண்டான்னு போய்ப் பார்த்தால் இப்படி இருக்கு ! கருவறையில் மஹாமாரி அருள் பொங்கும் முகத்துடன் இருக்காள். நல்ல பெரிய திருமேனி. நம்ம நாராயண பிள்ளை காலத்து சின்ன அம்மன் சிலையும் கருவறையில் இருக்கு.
நம்ம பதிவே நமக்கு ரெஃபரன்ஸ்.... ஹாஹா....
https://thulasidhalam.blogspot.com/2011/10/2011-7.html
கருவறையில் ஒரு பக்கம் உற்சவமூர்த்திகள் போல மூவர். கிட்டே கூட்டிவந்து பார்த்தேன். அட! நம்ம காத்தவராயன்ப்பா ! ரெண்டு மனைவிகளுடன் இருக்கார். ஆர்யமாலா & சூர்யகலா ன்னு பெயர்கள் !!!!!
அடுத்து குருக்கள், மூலவர் சந்நிதிக்கு இடப்புறம் போனார் வேறொரு சந்நிதிக்கு ! நாமும் பின் தொடர்ந்தோம்.... போற வழியில் அர்ச்சுனர் தனியாக ! அடுத்து வீரபத்ரர். அடுத்த சந்நிதியின் கருவறையில் த்ரௌபதி.... ஆண்டாள் கொண்டையோடு ! அந்தக் காலத்துப் பெண்கள் தலையலங்காரம் இப்படித்தான் போல ! இடம் வலம்னு மாறினாலும் மதுரை மீனாக்ஷி, ஆண்டாள் எல்லாம் இந்த ஸ்டைலில்தான், இல்லே ? (ஆனாலும் நாம் பேசும்போது ஆண்டாள் கொண்டைன்னுதான் சொல்றோம் ! )
சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் ஒரே கூட்டம் !
சிம்மாசனத்தில் தருமர், த்ரௌபதி, ரெண்டுபேருக்கு ரெண்டு பக்கமும் நகுலனும் சகாதேவனும் நிற்க கீழே ரெண்டு ஓரங்களிலும் பீமனும் அர்ச்சுனனும்! (அர்ச்சுனன் உருவம் படத்தில் வரலை . ஒரு ஓரமா கருடவாஹனக் கிருஷ்ணனுக்குப்பின்னால் மறைஞ்சுருக்கு...ப்ச்... வில்லின் நுனி மட்டும் நம் பார்வைக்கு...... ) இடப்பக்கச் சுவரில் ஸ்ரீ வேதவ்யாஸர், ஸ்ரீ கிருஷ்ணர், இந்தாண்டை கல்யாண த்ரௌபதி....

அந்தாண்டை மண்டபத்தில் சப்தகன்னிகைகள் ! போனமுறைமாதிரி யூனிஃபார்ம் புடவை இல்லை. ஒரே வகைப் புடவைகள், வெவ்வேற வண்ணங்களில்.... ஆஹா....
ரெண்டு பக்கத்து மாடங்களில் ஒன்னில் அய்யனார் & அவர் மனைவிகள் பூரணாதேவி & புஷ்கலா தேவி. இன்னொரு மாடத்தில் 'அரவான்'
தனியாக! வளாகத்தில் அரவானுக்கு ஒரு சந்நிதி வேற இருக்கு ! முற்றத்தில் கொடிமரம் பலிபீடத்தோடு சிவன் சந்நிதி.
கோவில் வரலாறு.... அறநிலையத்துறை சார்பில் இப்படி ! இது இப்போ புதுசா வச்சுருக்காங்க. ரொம்ப நல்ல சமாச்சாரம் !
அடுத்த சந்நிதியில் முத்தாலராஜா !
ப்ரகாரத்தின் ஒரு பக்கம் பெரியாத்தா, மதுரைவீரன், துர்கை..
அதுக்கடுத்து புள்ளையாருக்கு தனியா ஒரு சந்நிதி...ஸ்ரீ சுந்தர விநாயகர்
அடுத்து நம்ம கோதண்டராமர் ! சீதா பிராட்டியும் லக்ஷ்மணனுமாக....
வலம் (!) முடிச்சு மண்டபத்துக்குள் வந்தால்....அந்த புவனேஸ்வரி திரைச்சீலை சந்நிதியைப் பார்த்தபடி மக்கள் உக்கார்ந்துருக்காங்க. நம்மவர் ஓரமா ரெண்டு நாற்காலி எடுத்துப்போட்டு வச்சுருக்கார் நமக்கு . அடுத்த நிமிட்டில் குருக்கள் மூவர் வர, திரை விலகியது ! முருகன், வள்ளி & தேவயானை !
ஆஹா.... கந்த சஷ்டி விழா அஞ்சாம் நாள்! விசேஷ பூஜை ! ஆற அமரக் கண்கள் குளிர தரிசனம் !
மூத்த, பழைய கோவில்னு பெயரே தவிர, என்னமோ நேத்துதான் கட்டிமுடிச்ச கோவிலாட்டம் பளபளன்னு, பளிச்ன்னு, படுசுத்தமா அட்டகாசமா இருக்கு !
எட்டு மணிக்கு கோவிலைவிட்டு வெளியே வந்து, கொஞ்சநேரம் காத்திருந்து டாக்ஸி கிடைச்சதும் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
எட்டே முக்காலுக்கு அதே கோமளவிலாஸ் ! எனக்கு அதே ரெண்டு இட்லி! சப்பாத்தி & குருமா நம்மவருக்கு.
விக்னேஷ்தான் நம்மைப் பார்த்ததும் ஓடி வந்து கவனிச்சார். என்னடா... இது காலையில்தான் ட்யூட்டியில் இருந்தாரே.... இப்பவுமா ? ஓவர்டைமா இருக்குமோன்னு விசாரிச்சேன். இல்லையாம். காலை எட்டுமுதல் இரவு பத்துவரை வேலை நேரமாம் ! அடப்பாவமே..... பதினாலு மணி நேரமா ??????
தொடரும்............. :-)





























0 comments:
Post a Comment