காலையில் கண் விழிக்கும்போது பார்த்தால் பொழுது விடியவே மூணு மணி நேரம் இருக்கு. இன்னும் கொஞ்சநேரம் தூங்கிக்கலாமுன்னு நினைச்சது.... ப்ச்.... என் தப்பு. சுப்ரபாதம் போச்சு. அடராமான்னு அரக்கப்பரக்க எழுந்து ரெடியாகிக் கோவிலுக்குப் போறோம். அர்ச்சனை நடந்துக்கிட்டு இருக்கு. 'நீ வந்து எழுப்பக் காத்திருந்தா... அம்புட்டுத்தான்'னு பெருமாள் சொல்லியிருக்கணும்....
மூலவர் சந்நிதிக்கும் தாயார் சந்நிதிக்கும் இடையில் இருந்த இடத்தை, தனிப்பட்டவர்களின் விசேஷங்களுக்கு ஒதுக்கி வச்சாச்சு. சின்ன மேடையில் நடுவில் ஒரு ஹோமகுண்டம், பின்னால் பேக் ட்ராப்பா.... கல்யாண மண்டபங்களில் இருப்பதுபோல் தாயார், பெருமாள் படம்.
மூலவர் முன்னால் ஒரு சின்னக்கும்பல். குழந்தைப் பொண்ணுக்கு ஆயுஷ் ஹோமம் ! இங்கே பூஜை முடிஞ்சதும், அவுங்களை அங்கே கூட்டிப்போய் உக்காரவச்சார் பட்டர் ஸ்வாமிகள். நம்மவர் வழக்கமான இடத்தில் ஒரு நாற்காலியில் உக்கார்ந்து இங்கொரு கண்ணும் அங்கொரு கண்ணுமா பெருமாளையும் குழந்தையையும் பார்த்துக்கிட்டு இருந்தார்.
வீல் வச்ச ஹோம்குண்டத்தை பல வருஷங்களுக்கு முன் முதல் முதலா இதே கோவிலில்தான் பார்த்தேன். எந்த சந்நிதிக்கு முன் ஹோமம் நடத்தணுமோ அங்கே உருட்டிக்கிட்டுப் போயிடலாம். ரொம்ப நல்ல ஏற்பாடுன்னு மெச்சினேன். இப்ப ஒரே சமயத்தில் வெவ்வேறு சந்நிதிகளுக்கு ஹோமம் நடக்குது போல.... ஒரு நாலைஞ்சு குண்டங்கள், புது மூடியுடன் , ப்ரகாரத்தில் கருவறைக்குப் பின்புறம் காத்திருக்கு !
'இன்று போய் ஆறாம் நாளில் வருவேன்'ற சமாச்சாரத்தை, பெருமாளுக்கும், மற்ற கடவுளர்களுக்கும் சொல்லிக்கிட்டே வலம் போனேன். கை என்னவோ கெமெராவில்தான்....



மணி ஒன்பதை நெருங்குதேன்னு கோவிலைவிட்டுக் கிளம்பினோம். ப்ரேக்ஃபாஸ்ட்க்கு கோமளவிலாஸ்தானேன்னு கேட்ட நம்மவரிடம் 'வேணாம். விக்னேஷ் வேலையை விட்டுப்போனதுக்கு நாந்தான் காரணமுன்னு சொல்றீங்க.... அங்கே போனா மனசுக்கு பேஜாரா இருக்கும். எதிர்வாடையில் இருக்கும் அந்த சரவணா பவனுக்கே போகலாமுன்னு அங்கே போனோம். நேத்து போர்டில் பார்த்த மினி டிஃபன் வாங்கிக்கலாம்.
அங்கே போனால் பயங்கரக்கூட்டம். நம்ம சனம் ' தெரிஞ்ச பெயரைப்பார்த்துட்டுப் போயிருவோம், இல்லே ? ஸ்கேன் எல்லாம் பண்ணமுடியாது. ஸர்வரை அனுப்புங்கன்னு சொல்லிட்டுப் போய் உக்கார்ந்தோம். ஆர்டர் செஞ்சது.... மினி டிஃபன் ரெண்டு. அடுத்த விநாடி இன்றைக்கு மினி டிஃபன் இல்லை. ( ஆ.... புரிஞ்சு போச்சு. அந்த போர்டு ஒரு க்ளிக் Bபைட். சாப்பிடணுமுன்னு உள்ளே வந்துட்டு, நாம் கேட்ட ஐட்டம் இல்லைன்னா..... வேறேதாவது சொல்லுவோம் இல்லையா ? ) இன்றைக்கு இல்லை என்பது உண்மையில் என்றைக்கும் இல்லை என்பதே!



இட்லி ரெண்டு எனக்கு இட்லி மூணு நம்மவருக்கு. கூடவே காஃபி. டைனிங் ஏரியாவின் ஒரு பக்கம் சின்னதா ஒரு கிச்சன். முக்கியமா தோசைக்கு..... நம்ம பார்வைக்குன்னு ஒரு அமைப்பு ! ரெண்டு நிமிட் நின்னு வேடிக்கை பார்த்துட்டுக் கிளம்பி, அப்படியே பக்கத்துத் தெருத் திருப்பத்துக்கு எதிரில் இருக்கும் A2Bயில் சின்னப்பயணத்துக்காகக் கொஞ்சம் தீனி.
கோமளவிலாஸில் 'மெட்ராஸ் மிக்ஸர்' வாங்க எண்ணம். அங்கே போக விருப்பம் இல்லைன்னு இங்கே..... விலை அதிகம்தான் !
அறைக்கு வந்து பொட்டிகளை அடுக்கி வச்சுட்டு, பாஸ்போர்ட் எல்லாம் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணிக்கிட்டு இருந்தார் நம்மவர். ஒரு அஞ்சு நாட்கள் அண்டை நாட்டுக்குப் போய்வரணும். அதுக்குண்டான விஸாவை, ரெண்டு நாளுக்கு முன்னேயே ஆன்லைனில் வாங்கிக்கணும். பனிரெண்டுக்குச் செக்கவுட் செஞ்சதும், Bபோட் டெர்மினல் போக டாக்ஸிக்குச் சொல்லியாச்சு. concierge பகுதி ஊழியர்கள் ரொம்பவே நல்லமாதிரி இருக்காங்க இங்கே !
நாப்பது நிமிட்டில் போய்ச் சேர்ந்தோம். பெரிய க்யூ வரிசையின் வாலில் போய் ஒட்டிக்கணும். நல்லவேளையா டாக்ஸி உள்ளே போய் வாலாண்டை இறக்கி விட்டுச்சு. நேரம் ஆக ஆக வால் மட்டும் வளர்ந்துக்கிட்டுப் போகுதே தவிர தலை நகரும் அடையாளமே இல்லை. சுத்தும் முத்தும் கண்களை ஓட்டிக்கிட்டே நேரப்போக்கு. ரொம்ப தூரத்துலே பெட்டிகளா இருக்கு. நம்ம பெட்டியை செக்கின் செய்யணுமா, இல்லை கையோடு கொண்டுபோகலாமான்னு தெரியலை. அக்கம்பக்கத்து மக்கள் நம்ம பெட்டியைவிட ரொம்பவே பெரிய பெட்டிகளோடு நிக்கறாங்க. வரிசை மெதுவா நகர ஆரம்பிச்சது.
ஒரு அரைக்கிலோ மீட்டர் நகர்ந்தவுடன், பெட்டிகளுக்கு Tடேக் போடுங்கன்னு யாரோ சௌண்ட் விடறாங்க. அந்த Tடேக் எங்கே கிடைக்குமுன்னு சொல்லலாமுல்லே ? நம்மவர்தான் கொஞ்சம் வரிசையை விட்டுபோய் அலைஞ்சு திரிஞ்சு Tடேக் எழுதிப்போட்டு, பெட்டியை அங்கே ஒப்படைச்சுட்டு வந்தார். இவரைக்காணோமேன்னு நான் வரிசையை விட்டு விலகி நின்னேன். அவ்ளோதான் நம்ம இடம் போச்சு. திரும்ப வாலுக்குப் போகணுமா.....?
நல்லவேளை அங்கிருந்த பணியாளர் நம்மை வரிசைக்குள் போகச் சொல்லி வழிசெஞ்சு கொடுத்தார். இமிக்ரேஷன் கட்டடத்துக்குக் கிட்டே வந்துருந்தோம். நாம் போகும் கப்பலின் முகம் தெரிஞ்சது. கட்டடம்தான் கண்முன்னே இருக்கே தவிர அதன் வாசலுக்குப்போக மலைப்பாம்பு போல வளைஞ்சு வளைஞ்சு போகும் வரிசை. ஒரு வழியாக வாசலுக்குள் நுழைஞ்சால் வரிசை வரிசையா இருக்கைகள் போட்டு வச்சு, ரெண்டு வரிசை இருக்கைகளுக்கிடையில் போகணும். சினிமா தியேட்டரில் நம்ம ஸீட்டுக்குப்போக இடுக்கமான வழியில் போவோமே அதுதான் நினைவுக்கு வந்தது.... அங்கங்கே சுவரில் ஃபேன் வச்சுருந்தாலும்.... சூடு அப்படியே நிக்குது.....
கடைசியில் நம்ம பாஸ்போட்டில் ஸ்டாம்ப் போடும் போது மணி மூணு ! பாவம் இல்லே இந்தக் கால்வலிக்காரி? அப்ப ஒரு மெடாலியன்னு ஒன்னு கொடுத்து கழுத்துலே மாட்டிக்கச் சொன்னாங்க. நாய்ப்பட்டி..... அதுலே இருக்கும் பென்டண்ட்தான் நம்ம அறைக்கான சாவியாம். அடுத்து போர்டிங் பகுதி. பைகளெல்லாம் ஸ்கேனிங் மெஷினுக்குள்ளே போய் வந்ததும், மேலே மாடிக்குப் போகணும். ஒரு வழியாக் கப்பலுக்குள் நுழைஞ்சதும், நம்ம மெடாலியனை ஸ்கேன் செஞ்சு அறை எண்ணைச் சொல்றாங்க. நம்ம அறை ஒன்பதாவது டெக்கில். Dடால்ஃபின் Dடெக்ன்னு பெயராம் !

அறைக்கதவின் பக்கவாட்டுச் சுவரில் இருக்கும் எலெக்ட்ரானிக் போர்டில் அந்த மெடாலியனைக் காமிக்கணும். திறந்திடு ஸெசேம்............ ஓ.... கழுத்துலே மாட்டிக்கிட்டால் நல்லது !
இது க்ரூயிஸ் பயணத்தில் நமக்கு ரெண்டாவது அனுபவம். போன வருஷம் (2024) அலாஸ்கா போய் வந்தோம். அதனால் ரொம்ப எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. எதையும் பார்த்து வியக்கவும் ஒன்றுமில்லை. எல்லா க்ரூயிஸ் கப்பல்களும் ஏறக்கொறைய ஒரே மாதிரி நடவடிக்கையில்தான். Bபால்கனி இருக்கும் அறை என்பதால் கூடுதல் கட்டணம். கப்பலுக்குள் செலாவணி எல்லாம் அமெரிக்கன் டாலரில்தான். எது வாங்கினாலும் உடனே காசு கொடுக்கவேணாம். நம் அறைச்சாவியைக் காண்பிச்சால் போதும். கடைசி நாளில் எல்லாத்துக்கும் சேர்த்துக் கணக்கை செட்டில் பண்ணிக்கணும். கரையில் இருக்கும் விலையைவிட அதே பொருள் கப்பலில் பலமடங்கு ! 'குடி '? தண்ணீர் பட்ட பாடு ! எல்லா மாடிகளிலும் Bபாரே Bபார் ! (கடல்நீர் நடுவில் பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ ? யாரா... Bபார்தான் ! ) முக்கால்வாசி மனிதர்கள் கோப்பையில் குடியிருக்காங்க.
மணி நாலாகப்போகுது..... லஞ்ச் டைம் போயே போயிந்தி.... டைனிங் ஹாலுக்குப் போனோம். கப்பலில் ஒரு வசதி , டைனிங் ஹால் மூடறதே இல்லை. முழு சாப்பாடு வகைகள் எப்போதும் இருக்காது என்றாலும், சாப்பிட ஏதாவது எப்போதும் இருக்கும்தான். எப்போதுமே காஃபி டீ, வெந்நீர் வகைகளுக்குக் குறைவில்லை. நாமே போட்டுக்கணும்.
அறைக்குத் திரும்பினால் அறை வாசலில் நம்ம பெட்டி உக்கார்ந்துருக்கு ! கொஞ்சநேரத்தில் நம் தேவைகளைக் கவனிக்கும் பணியாளர் வந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு அவருடைய செல்ஃபோன் நம்பரைக் கொடுத்தார். எந்த நேரம் என்றாலும் கூப்பிட்டுச் சொல்லலாமாம் !
அஞ்சரைக்கு சங்கு ஊதி, அஞ்சே முக்காலுக்குக் கப்பல் நகர ஆரம்பிச்சது. பைபை சிங்கப்பூர், ஸீ யூ ஆஃப்டர் ஃப்யூ டே(ய்)ஸ் ! கொஞ்ச நேரம் பால்கனியில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு, டீக்கடைக்குப் போனோம்.
அறையில் இருக்கும் டிவியில் நேவிகேஷன் Pபாத் பார்க்கலாம். சூரிய அஸ்தமனம் ஆறே முக்காலுக்காம். வாங்க மேலே போய் பார்த்து ரசிக்கலாம்.
அட்டகாசமா இருக்கு ! லேசா ஒரு குளிர்காத்து..... இன்னொரு டீ போட்டு எடுத்துக்கிட்டு அறைக்குப் போயிட்டோம். ஒன்பது மணிக்கு ராச்சாப்பாட்டுக்குப் போனோம். நமக்கான உணவு எங்கேன்னு சுத்திச் சுத்தி வந்து தேடவேண்டியதாப் போச்சு. ஹாலின் கடைசிக் கோடியில் இண்டியன் சாப்பாடு ! யாருமே கண்டுக்கலை போல ! டைனிங் ஹால் முழுக்க , நாமிருவரைத் தவிர அனைவரும் சீனர்கள் !
அறைக்கு வந்து பால்கனி இருளில் கொஞ்சம் வேடிக்கை. இந்த முறை நாம் வைஃபை வாங்கிக்கலை. நாலரை நாளுக்கு இருநூற்றி நாப்பது யூ எஸ் டாலர் என்பது ரொம்பவே அதிகம் இல்லையோ ? இது இல்லாமல் உயிர்வாழ முடியுமான்னுதான் பார்க்கலாமே ! சேலஞ்ச்? அக்ரீட் !
தொடரும்..............
































0 comments:
Post a Comment