க்ருஷ்ணா.... முகுந்தா.....ன்னு வாட்டர்லூ ரோடில் இருக்கும் க்ருஷ்ணன் கோவிலுக்கு, ஒரு டாக்ஸி பிடிச்சுக் கிளம்பியாச்சு ! எனக்கு ரொம்பவே பிடிச்ச கோவில்களில் ஒன்னு இது ! இந்தக் கோவிலைத் தொட்டடுத்து ஒரு சீனக்கோவிலும் (Kwan Im Thong Hood Cho Temple) இருக்கு ! சீன மக்களும் இங்கே நம்ம கோவிலுக்கு வந்து கும்பிடறாங்க. நான் மட்டும் சும்மாவா ? நானும் பலமுறை அங்கே போயிருக்கேன்.
கால்வலிக்கு முன்னிருந்த காலக்கட்டங்களில் லிட்டில் இந்தியாவிலிருந்து நடந்துதான் இந்தக் கோவிலுக்கு வருவோம். வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்து, சிம்லிம் ஸ்கொயர் ஷாப்பிங் சென்டருக்குள் நுழைஞ்சு, (இது எலெக்ட்ரானிக் பொருட்களுக்குப் பெயர் போன இடம்) சுத்தி வேடிக்கை பார்த்து (நமக்கு வேணுங்கறதை விலை பார்த்துவச்சுக்கிட்டு ) அடுத்த தெரு வழியா க்ருஷ்ணன் கோவிலுக்குப் போயிருவோம். இதே பொருள், செராங்கூன் ரோடு கடைகளில், என்னவிலைன்னு பார்த்து, எது மலிவு விலையோ அங்கே போய் வாங்குவதே நம் வழக்கம். பெரும்பாலும் சிம்லிம் ஸ்கொயரில் தான் கொஞ்சம் விலைகுறைவாக இருக்கும். அப்பெல்லாம் நியூஸியில் எதெடுத்தாலும் கொள்ளை விலைதான். இப்ப எப்படி ? இன்னும் மோசம்தான். என்ன ஒன்னு ச்சீனச்சாமான்கள் இறக்குமதி அதிகமா ஆகியிருக்கு. தரம் ? மாவுக்கேத்த பணியாரம்தான்..... ப்ச்.... ஒரு வருஷம் கேரண்டின்னு வாங்கும் சாமான், அந்த ஒரு வருஷம் முடிஞ்சு ஒரு பத்துநாள் ஆறதுக்குள் மண்டையைப் போட்டுரும். என்னவோ போங்க.....
ரொம்ப பிஸியான இடத்துலே வானுயரக் கட்டடங்களுக்கிடையில் நம்ம கோவிலின் கோபுரம், முகப்பில் ருக்மிணி கல்யாணக் காட்சியுடன் ! ப்ரஹ்மா & சிவன், தங்கள் மனைவியுடன் கல்யாணத்துக்கு வந்துருக்காங்க. கீழே முன் வாசலின் இரு பக்கங்களிலும் ரொம்பவே அழகான பெரிய & சிறிய திருவடிகள் பெரிய சைஸில்!
பொதுவா சிங்கைக்கோவில்களில் தெருவாசலுக்கு நேராவே கருவறை அமைப்பு. இங்கேயும் அப்படியே ! ஆனால் தெருவுக்குப் பதிலா சதுக்கம். பர்லிங்டன் சதுக்கம். இந்த க்ருஷ்ணன் கோவில் சிங்கப்பூரின் மூத்தகோவில்களில் ஒன்னும் கூட !
1800 களில் நம்நாடு ப்ரிட்டிஷார் வசம் இருந்த சமயம், ஹனுமன் பீம் சிங்னு ஒருவரை , கலகக்காரர்னு குற்றம் சுமத்தி அவரை நாடுகடத்திட்டாங்க. அவர் ரொம்ப ஆன்மிகவாதி. அவர்பின்னால் ஒரு பெருங்கூட்டம் இருந்துருக்கு. அதனால் தங்களுக்கு எதிரா அவர்களைத் திருப்பிட்டால் என்ன செய்யறதுன்ற பயம் தான் காரணம். நாடு கடத்தி எங்கே அனுப்புனாங்களாம் ? சிங்கப்பூருக்கு !!! அப்போ சிங்கையிலும் ப்ரிட்டிஷார் ஆட்சிதான். வருஷம் 1819 இல் பாரதத்தில் இருந்த ப்ரிட்டிஷ் படைகளில் ஒரு பகுதியை தங்கள் ஆட்சிக்கு உதவியா இங்கே கொண்டு வந்துருந்தாங்க. வியாபாரம் செய்யன்னு நம்மாட்களும் இங்கே வந்தது அதே காலக்கட்டத்தில்தான். புது ஊர் நிர்மாணம் ஆனதும் அப்போதான் !
இதெல்லாம் நடந்து அம்பது வருஷங்கள் போனதும்தான் ஹனுமன் பீம் சிங் இங்கே வரவேண்டியதா ஆச்சு. அதுக்கு முன்னேயே மாரியம்மன் கோவில், தண்டாயுதபாணி கோவில் எல்லாம் தமிழ் மக்கள் கட்டிமுடிச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
ஹனுமன் பீம்சிங் பாரதத்தின் எந்தப்பகுதியில் இருந்து வந்தார் என்ற விவரம் கிடைக்கலை. சிங்கை அறநிலையத்துறையும் இவரைப்பற்றிக் குறிப்பிடும்போது, ப்ரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்டு இங்கே வந்தார்னுதான் சொல்லுது. ஆனால் பெரிய செல்வந்தர் என்ற குறிப்பு மட்டும் இருக்கு !
வந்தவர் கொஞ்சநாள் கழிச்சு க்ருஷ்ணன் கோவில் கட்டியிருக்கார். மூலவராக க்ருஷ்ணனும் ருக்மிணியும் ! (பொதுவா வடக்கே க்ருஷ்ணன் கோவில்னு சொல்லும்போது ராதா கிருஷ்ணா மந்திர்னு குறிப்பிடுவாங்க. என்னதான் ருக்மிணிதேவியே க்ருஷ்ணனின் பட்டமகிஷி என்றாலும் கூட ராதைக்குத்தான் ரொம்ப மதிப்பு போல! மதுரா விருந்தாவன் இதுக்கு சாட்சி போல ராதே ராதேதான் எப்பவுமே! ருக்மிணிக்கானத் தனிக்கோவிலை நம்ம த்வாரகா பயணத்தில்தான் பார்த்தோம். வேறெங்கும் பார்த்த நினைவில்லை.)
இந்த பீம் சிங் எந்த மாநிலத்தவரோன்னு எனக்குக் குழப்பம் வந்தது இப்போதான்..... வட இந்தியாவில் பஞ்சாப் மாநில சீக்கியர்களின் பெயர்களின் கடைசியில் சர்நேமா சிங் இருப்பதைப்போல, மற்ற வட இந்திய மாநிலங்களில் பொதுவா சிங் என்ற பெயர் ஹிந்துக்களுக்களுக்கும் இருக்கு ! ஃபிஜியில் சிங்குகள் ஏராளம். யாரும் சீக்கியர்கள் இல்லை ! போகட்டும்......
முதலில் நம் மக்கள் வந்து கூடும் ஒரு ஆலமரத்தடியில் க்ருஷ்ணர் சிலையை வச்சு ஆரம்பிச்ச கோவில், காலப்போக்கில் பலமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு, இப்போ ரொம்பவே அட்டகாசமா இருக்கு. இப்போ அந்த ஆலமரம் இங்கே இல்லை. கோவில் விஸ்தரிப்பில் காணாமல் போயிருக்கும் !
ஒரு பதிநாலு வருஷங்களுக்கு முன் நாம் இந்தக்கோவிலுக்குப் போனப்ப, பழைய தூண்களுக்குப் பதிலாகப் புதுத்தூண்களைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. கட்டிமுடிச்ச தூண்களில் வைக்கறதுக்கு யானை செஞ்சுக்கிட்டு இருந்தார் ஒரு கலைஞர். கீழே உள்ள சுட்டியில் அவரைப் பார்க்கலாம் ! நேரம் இருக்கும்போது எட்டிப் பாருங்கள்.
https://thulasidhalam.blogspot.com/2011/09/2011-4.html
இன்றைக்குச் சரியா சாயரக்ஷை பூஜை நேரத்துக்கு வந்துருக்கோம். வாசலைக் கடந்து உள்ளே ப்ரகாரத்தில் இறங்கறோம். அப்சரஸ்கள் வரவேற்பு ! அடுத்து ரெண்டுபடிகள் ஏறினால் முன்மண்டபம். மூலவரை நோக்கி நிற்கும் பெரிய திருவடி ! மூலவர் சந்நிதி திரைபோட்டு மூடியிருக்கு. போனமுறை பார்க்காத சில குட்டிச் சந்நிதிகள் இந்தப்பக்கம் சுத்திவர முளைச்சுருக்கு. மஹாலஷ்மி, பெருமாளும் தாயார்களும், நரஸிம்ஹர், வைஷ்ணவி, சிறிய திருவடி.......ன்னு பலர் !
பூஜை ஆரம்பிச்சு எல்லா உபசாரங்களும் ஆச்சு ! தேன்குடிச்ச நரியா நின்னுருந்தேன். இங்கே கருவறையைச் சுத்திவரும்படியா ஒரு சின்ன உள்ப்ரகாரம் உண்டு. கோஷ்ட்டதில் இருப்பவர்களை விட என் மனசுக்கு ரொம்பவே பிடிச்சது மூணு பக்கங்களிலும் பக்கத்துக்குப் பத்தாக திருப்பாவையை வெண்பளிங்கில் செதுக்கி வச்சு, அந்த பளிங்குக்கு மேலே அதே அளவில் அந்தந்த பாசுரங்களுக்குண்டான காட்சிகளை வண்ணப்படங்களாட்டம் செதுக்கி வச்சுருந்ததுதான். முந்தி சில பயணங்களில் பார்த்து அனுபவித்திருக்கிறேன். அப்புறம் ஒரு பயணத்தில் இங்கே வந்தால் பாசுரங்களைக் காணோம். வெறும் சித்திரவரிசைகள் மட்டுமே ! பழுதாகி இருக்கலாம். சரி செஞ்சு கொண்டுவந்து போடுவாங்கன்னு இருந்தேன். ஆனால் வரவே இல்லை.
இந்த முறை சுத்தம். சித்திர வரிசைகள் இல்லை. அங்கங்கே ரெண்டு மூணுன்னு இருக்கு! பல் விழுந்த பாட்டனின் வாய்போல நிறைய பொக்கை. சித்திர வரிசை இருந்த இடத்துக்கு மேலே பெரிய சித்திரங்களா அங்கங்கே ஒன்னு!
சுத்து முடிச்சு வெளியே வருமிடத்தில் தாயாரும் பெருமாளுமா (திருப்பதி தேவஸ்தானப் படங்களில் இருப்பதைப்போல)ஒரு சந்நிதி ! அடுத்து நூத்தியெட்டு திவ்ய தேசப்பெருமாள் விக்ரஹங்கள் ! எல்லாம் போனபயணங்களில் தரிசிச்சவையே. ஆனால் புதுசா ஸ்ரீ ராமானுஜர் பஞ்சலோகச் சிலை ஒன்னு இந்த இடத்தின் நடுவில் ! ஆஹா... நம்ம குரு !


வெளிப்ரகாரம் சுற்றலாமுன்னு மண்டபத்திலிருந்து வெளியே வந்தோம். கோவில் காம்பவுண்டுச் சுவரில் அற்புதமான புடைப்புச் சிற்பங்கள் ! கோவிலுக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையில் ஒரு ஆறடி இடைவெளி இருக்கலாம். ஆனால் அழகெல்லாம் கொட்டிக்கிடப்பது இங்கேதான் ! நமக்கு வலப்புறமும் இடப்புறமும் அழகு கொஞ்சுது ! எல்லாம் போனமுறை பார்த்தவைதான்..... ஆனால் ஜொலிப்பு மாறலை !
யானை வரிசை போகும் அலங்காரத்தூண்களெல்லாமும் அப்படியே இருக்கு ! இந்தத் தூண்களுக்கான யானைகள் செய்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பும் அமைஞ்சது எனக்கு ! அட ! நம்ம யானைன்னு கொஞ்சநேரம் உக்கார்ந்து பார்த்தேன்.
வெளிப்ரகாரம் வலம் வந்துக்கிட்டு இருக்கோம். கருவறைக்குப் பின்பக்கம் இருக்கும் சுவரில் நடுவில் அன்னபூரணி கையில் கரண்டியுடன் இருக்க,த் தொட்டடுத்து ரெண்டு பக்கங்களிலும் நதி மாதாக்கள் கங்கையும் காவிரியுமா ! மற்ற இந்திய நதிகளும்கூட ஒரடி இடைவெளியில் இருக்காங்க.
படத்துக்குப்பொருத்தமா , இங்கேதான் ப்ரஸாதம் விளம்புவாங்க முன்பெல்லாம்! அதைக் கொஞ்சம் மாடர்னா மாத்தியிருக்காங்க இப்போ! டைனிங் ஹால் போலக் கொஞ்சம் மேஜை நாற்காலிகள் போட்டு வச்சு, ஒரு மரப்பெட்டி ஒரு ஓரத்தில் ! என்னன்னு யோசிக்குமுன் சுவரில் ஒரு அறிவிப்பு ! ஆஹா.... இது நல்லா இருக்கே! பொட்டியைத் திறந்து பார்த்தால் அன்றைய மாலை நைவேத்யமான மிளகுசாதம் !
வலம் தொடர்ந்தது..... நிச்சிந்தையாப் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமாள் ! க்ளிக்கிகிட்டே முன் வாசலுக்குப் போயாச்சு ! எல்லாம் அப்படிக்கப்படியே இருக்குன்னு தெரிஞ்சதும் மனசுக்குள் ஒரு நிம்மதி !


உள்ளே போய் ஒரு அஞ்சு நிமிட் யானைத் தூணாண்டை உக்கார்ந்து த்யானம் செஞ்சார் நம்மவர். கீழே உக்காரமுடியாத நான், வெளிப்புறம் இருந்த நாற்காலியில் உக்கார்ந்தேன்.
த்யானம் முடிச்சு வெளியில் வந்தோம். சீனக்கோவில்கள் போல இங்கேயும் வாசலில் ஒரு பெரிய அலங்காரப் பாத்திர அமைப்பும், பக்கத்தில் ஊதுபத்திகளும் ! சீனர்களே அமைச்சுக் கொடுத்தாங்களாம் ! சீனர்கள் வந்து பத்திக் கொளுத்திவச்சு சாமி கும்பிட்டுப்போறாங்க.
அடுத்துள்ள சீனக்கோவிலுக்குப் போகலாமுன்னு போன நம்மவர், கோவில் மூடியிருக்குன்னு திரும்பி வந்தார். காலை ஏழுக்குத் திறந்து மாலை ஆறரைக்கு மூடிடறாங்க. இப்போ நேரம் ஆறேமுக்கால்.....
ஆறேமுக்கால்தான் ஆச்சு..... நேரா.... நேத்துப் பார்க்க விட்டுப்போன கோவிலுக்குப் போகலாமான்ன நம்மவர், ஒரு டாக்ஸி பிடிச்சால் ஆச்சுன்னார் !!!!
ஆஹா..... ச்சலோ
தொடரும் ........ :-)
PINகுறிப்பு : கோவில் படங்களைத் தனி ஆல்பத்தில் போடும் எண்ணம் உள்ளது. அத்தனையும் அழகே அழகு !





















0 comments:
Post a Comment