Friday, December 12, 2025

திடீர் மழையும், எப்பவும் இருக்கும் வெயிலும் சர்வசாதாரணம்தான் !

மறுநாள் காலையில்  அஞ்சரைக்கெல்லாம்  கோவிலுக்குப்போக ரெடியாகிட்டோம்.  ஆனால் வெளியே தலைகாட்டமுடியாமல் அப்படியொரு கனமழை !  ஜன்னல்வழியாக வேடிக்கைப் பார்க்கக்கூட முடியாதபடி 'சார்ங்கம் உதைத்த சரமழை.....'  கொஞ்சம் மழை நிக்கட்டும், போகலாமுன்னு காத்திருக்கோம்.  நேரம் போக்கதான்  செல்ஃபோன் இருக்கே.  ச்சும்மா இருக்கும்போது கொஞ்சம் காஃபி குடிச்சால் தேவலைபோல இருக்கு.  டீ போட்டுக் கொடுத்தார் நம்மவர்.

பொதுவாக ஹொட்டேல் அறையில் இருக்கும் காஃபிப்பொடி, பால் எல்லாம் த்ராபைதான்.  ஆனால்  நம்ம அலாஸ்கா பயணத்தில் வான்கூவர் (கனடாவில்) ஹொட்டேலில்  காஃபி மெஷீன் வச்சுருந்தாங்க.  அட்டகாசமான காஃபி குடிக்க முடிஞ்சது.  அங்கிருக்கும்வரை வெளியே ரெஸ்டாரண்டுகளில் காஃபியே வாங்கிக்கலைன்னா பாருங்க !  யூஎஸ் ஹொட்டேல்களிலும் காஃபி மெஷீன் இருந்தது. )  

மழை விட்டதும் கோவிலுக்குப் போனோம். பெருமாள் எழுந்து, மாலை மரியாதைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு கொஞ்சம் விஸ்ராந்தியா இருந்தார். வேலைநாள் என்பதால் கோவிலில் கூட்டம் ரொம்பவே குறைவு. 
நம்ம புள்ளையார் சந்நிதியில் முருகன் வேல்வடிவில்தான் இருப்பார். இன்றைக்குப் பார்த்தால் புதுசா ஒரு விக்ரஹம் ! 


தாயார் ரொம்ப அழகாகத் தெரிஞ்சார் எனக்கு. ஆளுயரத்வார பாலகிகள் புடவை அருமை !  இந்தக் கலரின் ஒன்னு வாங்கிக்கணும்.... 

ஆண்டாளுக்குத் தூமணி மாடம் ஆச்சு.
                                   

திரும்ப மூலவர் சந்நிதிக்கு வந்தோம்.  உற்சவர்கள், முன்மண்டபத்துக்கு வந்திருந்தனர்.  இங்கே ரெண்டு செட் உற்சவர்கள் இருக்காங்கன்றதை இப்பத்தான் கவனிச்சேன்.   மூலவராண்டை இருப்பவர் பாண்டியன் கொண்டையில் !  எத்தனை வருஷம், எத்தனை முறை இங்கே வந்துருக்கேன்..... கண்ணைக் கட்டியிருப்பானோ ???? 

மனிதர்கள் யாரும் இல்லாத கருவறைக்குள் ரொம்ப ஸ்வாதீனமா புறாக்கள் புகுந்து வர்றாங்க. புண்ணியம் செய்த பிறவிகள் ! 
மண்டபத்தின் ரெண்டு பக்கச் சுவர்களிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும்,  யோக நரஸிம்ஹரும்! மைக் ஒயர் எல்லாம் ஸ்ரீ சுதர்ஸனர் கையில்தான்.  
தவில் & நாதஸ்வரக்கலைஞர்கள்   வந்து வாசிக்க ஆரம்பிச்சாங்க.  கோவில் ஊழியருக்கு   காண்டாமணியடிக்கும் ட்யூட்டி !  பூஜை ஆரம்பிக்கப்போகுது... நான் 'படம்' எடுத்துக்கிட்டு இருக்கேன். மடி நிறைய சீவாளி ! எதுன்னு எப்படிக் கண்டுபிடிப்பார் ?  என் கவலை எனக்கு..... உங்களை ஒரு படம் எடுத்துக்கவான்னு கேட்டதுக்குத் திரும்பி நின்னு போஸ் கொடுத்தார். நன்றி சொன்னேன்.


இதுக்கிடையில் நம்மவர் எங்கே இருக்காரோன்னு சுத்திமுத்திக் கண்களை ஓடவிட்டால்.... சந்நிதி முன்னால் ரெண்டு வரிசைகளில் பக்தர்கள்  ஓசைப்படாமல்  வந்து நின்னுருக்காங்க !  உற்சவருக்கும் மூலவருக்கும் தீபாராதனை ஆச்சு.

ஆஞ்சு சந்நிதிக்குப் போய் வணங்கினோம்.  கழுத்துச் செயின் பதக்கம் இன்றைக்குப் பளிச்ன்னு இருக்கு !  சுத்தம் செஞ்சுருக்கலாம்.  வெள்ளியுமே கருத்துத்தான் போகுது !ராமனும் சீதையும்  ஆஞ்சியின் நெஞ்சில் !  
மழை பெய்த அடையாளமே இல்லாம ரோடு பளிச் ! 
ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்கு சரவணபவன் போறோம். கோமளவிலாஸுக்கு  எதிர்சாரியில்தான்.
'

சரவணா பவன்னு  'ஏ ' ஒன்னு கூடுதல் ! வியாபாரத் தந்திரங்களில் ஒன்னாக இருக்கணும் ! நியூஸியிலும்   ஆக்லேண்ட் நகரில் ஒரு கிளை திறந்தாச்சு. 
உள்ளே பளிச்னு அமைப்பு நல்லாவே இருக்கு !  உள்ளே போய் உக்கார்ந்தாச்சு.  மெனு கார்டைக் காணோம். QR Code இருக்கும் அட்டை மட்டும் டேபிளில். 

அந்த  QR Code ஐ ஸ்கேன் பண்ணினால் மெனு வருமாம். அதுலே நமக்கு வேணுங்கறதுக்கு டிக் பண்ணி அனுப்பினால், கொஞ்சநேரத்தில் நாம் கேட்டவை வருமாம் ! என்னதான் மாடர்ன்  வொர்ல்ட்ன்னாலும் இப்படியா ? முதலாவது, எல்லார் கையிலும் செல்ஃபோன், வித் நெட் கனெக்ஷன் இருக்கணும்.  டூரிஸ்ட் அனைவரும் ரோமிங் எடுத்து வந்துருக்கணுமா ? 

 எடுத்துக்காட்டா.... நான் இருக்கேன். என்னாண்டை செல்ஃபோன் இருக்கு. ஆனால் நெட் கனெக்ஷன் கிடையாது.  வைஃபை இருந்தால் வேலை செய்யும். நியூஸியில் வீட்டில் எனக்குப் பிரச்சனையே இல்லை. வெளியே போகும்போது, நம்மவர் ஃபோனில் இருந்து ப்ளூடூத் மூலம் எடுத்துக்குவேன். என்னோடது prepaid service. வருஷம் ஒருக்கா இருவது  டாலர் கட்டுவதோடு சரி. டாடா எதுவும் யூஸ் பண்ணுவதில்லை. (சரியான கருமி! ) நிறையக்காசு அதுலே இருக்கு. 
 வருஷாவருஷம் அந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் காசு கட்டணும். ஒரு முறை மறந்துட்டு எல்லாக் காசும் போச்சுன்னு நம்ம ஃபோன் கம்பெனி செய்தி அனுப்பினதும்,  அவங்களோடு சண்டை போட்டு நம்ம காசை மீட்டெடுத்தது எல்லாம் தனிக்கதை ஹாஹா....

நம்மவரின் ரோமிங் கூட வேலை செய்யாமல் போனதை ரெண்டுமூணு பதிவுகளுக்குமுன் புலம்பியும் இருந்தேனே....

இப்படிக் குழப்பங்கள் இருக்கும்போது   ரெஸ்ட்டாரண்டில் போய் உக்கார்ந்துட்டு, சாப்பாடு ஆர்டர் கொடுக்க க்யூஆர் கோட் ஸ்கேன் பண்ணனுமுன்னா எப்படி ? 

சப்ளையரைக் கூப்பிட்டு, ப்ரிண்டட் மெனு கொண்டுவரச் சொன்னால் இல்லையாம் !  நீங்க சொல்லுங்க, நான் ஆர்டர் எடுத்துக்கறேன்னாங்க. ப்ரேக்ஃபாஸ்ட் புதுசா  என்ன சாப்பிடுவோம் ?  அதே இட்லி வடை, காஃபிதான் !   எத்தனை இட்லி எத்தனை வடைன்னு அடுத்த கேள்வி!  எனக்கு ரெண்டு, நம்மவருக்கு மூணு.  ஆளுக்கொரு வடை. ஆச்சு. பில் வந்தது....நம்ம கோமளவிலாஸை விட ஒரு மடங்கு அதிகவிலை.  ருசி ஒன்னும் ப்ரமாதமா இல்லை. ஒரு சட்னி கூடுதல் ! 
கல்லாவுக்குப் பக்கம் இருக்கும் போர்டை அப்பத்தான் பார்த்தேன். பேசாம அந்த மினி டிஃபனே வாங்கியிருக்கலாம்.   ப்ச்.....  

பத்துமணிக்கெல்லாம் அறைக்குத் திரும்பிட்டோம்.  இங்கே கடைகள் எல்லாம் பத்துமணிக்குத்தான் திறக்குறாங்க. உடனே போகவேணாம். (நம்மூர்லே காலை எட்டரை முதல் அஞ்சரை வரைதான் ) அதுவுமில்லாம வலைஉலக நண்பர் பதினொரு மணிக்கு நம்மைப் பார்க்க வரேன்னு சொல்லி இருக்கார்.
அதே போல சொன்ன நேரத்துக்கு ஒரு சாக்லெட் பாக்ஸோடு வந்தார். முந்தி, நியூஸியில் நம்மூரில் ஒரு விவரம் வேணுமுன்னு கேட்டிருந்தப்ப, நம்மவருடைய எண்களைத் தந்தேன்.  அவர் கேட்ட விவரங்களுக்குப் பதில் சொல்ல நம்மவருக்கு அனுபவம் உண்டு என்பதால்! 

கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். இதுவரை நியூஸிக்கு வரலையாம்.  சம்மர் டைமில் வாங்கோன்னு அழைப்பு நம் சார்பில் !  வேலைக்கு நடுவில் வந்ததால் அரைமணியில் கிளம்பிப்போனார். 

மகளுக்கு சில பொருட்கள் வேணுமுன்னு சின்னதா ஒரு லிஸ்ட் வந்துச்சு. கிடைக்குதா பார்க்கலாமுன்னு ஒரு மணிக்குக் கிளம்பி செராங்கூன் ரோடில் பொடிநடையாப் போனோம். ஒன்னும் சரிப்படலை....  சிங்கப்பூர்னு போட்ட 'டி ஷர்ட்கள்'  முந்தியெல்லாம் ஏராளமாக்  குவிஞ்சு கிடக்கும்.  குழந்தைக்கு வாங்கலாமுன்னு பார்த்தால் அதெல்லாம்  காணவே காணோம்.   ஏதோ ஒரு கடையில் இருந்தவைகளும் தரமானதாக இல்லை.  நினைவுப்பொருட்களாக் கொஞ்சம் நம்ம யோகா குடும்ப லேடீஸுக்கு வாங்கினேன். 

மெதுவாப் பார்த்துக்கிட்டுப்போகும்போதே.... அங்கிருக்கும் ஏராளமான நகைக்கடைகள் ஒன்றில் மலிவாகத் தர்றோம்னு ஒரு போர்டு.  ஒருகாலத்தி கிராம் பத்து வெள்ளி என்றது  இப்போ இன்றைக்கு இருநூற்றிப்பத்தாம். ஆனால் இவுங்க விலை இன்றைக்கு  நூற்றறுபத்தினாலு புள்ளி நாற்பதாம் !  அட! பரவாயில்லையே !!! விலையை ரவுண்டப் பண்ணாமல் புள்ளி நாப்பது ன்னு போட்டு வச்சுருப்பதப் பார்த்தால் நியாயவிலைக் கடையோன்னு தோணுது பாருங்க !  அது(வும்) ஒரு வியாபார உத்திதான், இல்லே !!! 
 
நடந்துகிட்டே போனவங்க, சட்னு ஒரு ஸ்டாப் போடவேண்டியதாப் போச்சு ! பழைய கோமளவிலாஸ் வாசல் !  லஞ்சு டைம் நேரம் தாண்டியிருக்கு ! அதிசயம்தான் போங்க ! எனக்குத் தயிர்வடை & மஸால்வடை.  நம்மவருக்கு தென் இந்தியத் தாலி! 


இன்னும் கொஞ்ச தூரம் போனால் கிட்டத்தட்ட செராங்கூன் ரோடு ஆரம்பம். டெக்கா மாலில் கிடைக்குதான்னு பார்க்கலாமுன்னு அங்கே போனால்..........  சுத்தம் ! ஒரு காலத்துலே கால்வைக்க இடமில்லமல் ஜே ஜேன்னு இருந்த இடம்,  காத்துவாங்குது ! ஒரு ரெண்டுமூணு கடைகள் கண்ணில் பட்டது. எல்லாம் இண்டியன் துணி, காஸ்ட்யூம் ஜூவல்லரி கடைகள் தான்.  அட ராமா.... என்ன ஆச்சு ? இங்கே தரைத்தளத்தில் ஒரு சூப்பர் மார்கெட் கூட இருந்ததே ! உதிரிப்பூக்களா மல்லியை வாங்கியிருக்கேனே ஒருமுறை.... வெறும் காலமாற்றமா இருக்காது.............  கொரானா காலத்தால் வந்த மாற்றங்களா இருக்கணுமுன்னு தோணுச்சு......... எப்படி உலகத்தையே புரட்டிப் போட்டுருக்கு பாருங்க.... கிமு கிபி எல்லாம் இனி இல்லை. கொமு கொபிதான் !


திரும்பி ஹொட்டேலுக்கு வரும் நடை.   கேம்பெல் லேனுக்கு வந்துருந்தோம். பலா கூப்பிட்டது. சின்னதா ஒரு ட்ரே வாங்கியாச்.  தோழி கொண்டுவந்த மாம்பழம் வேற இருக்கு. கூடவே பேத்தி கொணர்ந்த ஸ்ட்ராபெர்ரியும்.  இன்றைக்கு முடிச்சே ஆகணும்.  மாம்பழம் நறுக்கக் கத்தி ?   கனடாவில் ஒரு கத்திவாங்கி பயன்படுத்திட்டு, நியூஸ் பேப்பரில் சுத்தித் தெருவோரக் குப்பைத் தொட்டியில் போட்டது நினைவில் வந்தது...
வழியில் நம்ம குமார் மாமா டீக்கடை ! இந்த இடத்தில் முன்னே ப்ராட்வே ஹொட்டேல் இருந்துச்சுல்லே ? 'எம்பத்தியஞ்சில் வந்தப்ப அங்கேதான் தங்கினோம்னு நம்மவராண்டை சொன்னேன்.  மனசு பூராவும் நினைவுகளே சுத்திக்கிட்டு இருக்கு.  ஒரு சின்ன விஷயம் கன்ணுலே பட்டால் போதும்.......... பின்னால் 'ரொம்ப தூரம்' போயிருவேன். இது நல்லதுக்கா இல்லை கெட்டதுக்கான்னு.......... மகிழ்ச்சியானவைகள் மட்டும் வரப்டாதோ ?  கெட்டதும் கூடவே வந்துருதே.... முக்கியமாக  நம்மவரோடு இந்த ஐம்பத்தியொன்னரை வருடங்களில் போட்ட சண்டைகள் !!!! ப்ச்....

மாமா கடையில் போய் ஒரு டீ குடிக்க ஆசைதான்.  லேட் லஞ்சு ஆனதால்.... அப்புறம் போகலாமுன்னு நடையைக் கட்டினோம்.

ஹொட்டேல் பணியாளரிடம், பழம் நறுக்க ஒரு கத்தி வேணுமுன்னு சொல்லிட்டு அறைக்குப்போனோம். அடுத்த ரெண்டாவது நிமிட்டில் கத்தி வந்தது.... டும் டும் டும் !!

தொடரும்.......:-)







0 comments: