தினமும் சாயந்திரம் நம்ம அறையைச் சுத்தம் செஞ்சு, படுக்கை விரிப்புகளையெல்லாம் நீட்டாப் போட்டுட்டு, மறுநாள் எங்கே இருப்போம், கப்பலில் என்னென்ன ஆக்டிவிட்டிகள் இருக்கு, என்ன சினிமா, அரங்கத்தில் என்ன விசேஷம்னு விவரங்கள் அடங்கிய நியூஸ் லெட்டரை வச்சுட்டுப் போயிடறார், நம்மை கவனிச்சுக்கும் பணியாளர். அந்தக் கணக்கில் நாளைக்கு நாம் கொலாலம்பூர் போயிருவோம். அங்கே என்னென்ன முக்கியமாப் பார்க்கவேண்டியதுன்ற இடங்களின் சிறுகுறிப்புகளும் அந்த நியூஸ் லெட்டரில் இருக்கு. எல்லா க்ரூயிஸ் கப்பல்களிலும் இதே சிஸ்டம்தான்.
க்ரூயிஸ் கப்பல்களில் பொது டைனிங் ஹால் இல்லாமல், தனிப்பட்ட ரெஸ்ட்டாரண்டுகள் ஏழெட்டும் உண்டு. ரொம்ப கெத்து காமிச்சுக்கணுமுன்னா அங்கே போகலாம். டின்னர் சாப்பிடப்போகும்போது எந்தமாதிரியான உடைகளைப் போட்டுவரணும்ன்ற ட்ரெஸ் கோட் எல்லாம் உண்டு. அங்கே கொடுக்கற காசுக்கு, நம்ம ஊரில் இருக்கும் பிரபல மேல் தட்டு ரெஸ்டாரண்டுகளில் நாலைஞ்சு நாள் சாப்பிட்டுக்கலாம் !
எனக்கு இந்த பொங்கச்சம் (மலையாளச் சொல். அலட்டல் காமிச்சுக்கறது ) எல்லாம் அறவே கிடையாது. நமக்குத் தெரியாதவர்கள் இருக்கும் இடத்துக்குப் போனால் அவுங்களுக்கு நம் ஸ்டேட்டஸ் காமிச்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. தெரிஞ்சவுங்க இருக்கும் இடத்துக்குப் போனால்.... அவுங்களுக்குத்தான் நம்மைப்பற்றித் தெரியுமே..... அவுங்க முன்னால் எதுக்கு அலட்டிக்கணும்? ஆனால் எந்த இடத்துக்குப் போனாலும் சுத்தமான உடைகள் போட்டுக்கிட்டு நீட்டாப் போனால் போதாதா என்ன ?
ராத்ரி பதினொரு மணிக்கு மேல் பெரியவங்களுக்கான பொழுது போக்குன்னு, டிஸ்கோ, நைட் க்ளப், டான்ஸ் இப்படியெல்லாமும் கப்பலில் உண்டு. இதுலே பங்கெடுக்கன்னு விசேஷ உடைகள் எல்லாம் கொண்டுவந்து போட்டுக்கறாங்க.... (எல்லாம் போன க்ரூயிஸில் பார்த்ததுதான் ) இதுலெல்லாம் நமக்கு ஒரு ஆர்வமும் இல்லை. ஆனா மக்கள் இப்படிப் பயணம் போறதெல்லாம் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணத்தானே ? அவரவர் மனசுப்படி மகிழ்ச்சியாக இருக்கவேணும் என்பதுதான் முக்கியம் !
கப்பல் போற வேகம் பதினெட்டு நாட்டிகல் மைல். ஆடாம அசையாமத்தான் போகுது. ராத்ரி திடீர்னு தூக்கம் கலையும்போது, பால்கனிக் கதவு வழியே பார்த்தால்.. கடலில் தண்ணீர் லேசான நுரையோடு பின்னாலே போறதை வச்சுத்தான் கப்பல் போய்க்கிட்டு இருக்குன்றதை புரிஞ்சுக்கணும்.
காலையில் தூக்கம் கலைஞ்சப்ப, நம்ம கப்பல் நின்னுக்கிட்டு இருக்கு. போர்ட் கெலாங். மணி ஆறு. ஏழு மணிக்குக்கு ஊருக்குள் போறவங்க போகலாம். திரும்பி அஞ்சரை மணிக்குள்ளே வந்துறணும். தாமதமா வந்தீங்கன்னா.... உங்களுக்காகக் கப்பல் காத்திருக்காது. அடுத்த போர்ட்டுக்கு உங்க சொந்த ஏற்பாட்டில் வந்து சேர்ந்துக்கணும்.
ஏழுமணிக்கு சனம் போகத்தொடங்கியாச்சு. ஆறாவது மாடிக்குப்போய், நம்ம மெடாலியன், பாஸ்போர்ட் எல்லாம் காமிச்சுட்டு ஏணிப்பாதையில் இறங்கிப்போகணும். கரைக்குப்போக நீண்டபாலம்தான் வழி! அங்கே போய் டாக்ஸி எடுத்துக்கணும். கே எல் (KL) நகர மையத்துக்கு இங்கிருந்து நாப்பத்தியாறு கிமீ தூரம். போய்ச் சேரவே ஒரு ஒன்னேகால் மணி ஆகும். உண்மையில் ஏர்ப்போர்ட்டில் இருந்து ஸிட்டி சென்டர் போக இதைவிட தூரம் கொஞ்சம் அதிகமே. ஆனால் பஸ் சர்வீஸ் இருக்கு. அதுவுமில்லாம....... போயிட்டு உடனே திரும்பி வருவோமா என்ன ?
நாம் கே எல்லுக்குப் போறதா இல்லை. ஏற்கெனவே ரெண்டு முறை போயிருக்கோம். முக்கிய இடங்களைப் பார்த்துமிருக்கோம். அதனால் ரெஸ்ட் டேதான் நமக்கு. நம்ம மலேஸியத்தோழிகள் எல்லோரும் நினைவுக்கு வந்தாங்கதான். யாருக்கும் நாம் பயணம் போற சமாச்சாரம் சொல்லலை.... திடீர்னு சொன்னால் அதுவும் வேலை நாளில் சந்திப்பு என்பது மகா கஷ்டமில்லையோ ?
நிதானமாத்தான் ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம். உக்கார இடமில்லாமல் அப்படி ஒரு கூட்டம் ! இத்தனைக்கும் பாதிக்கும் மேல் மக்கள் ஊருக்குள் போயிருக்கங்களாம் !எல்லோரும் சீனர்கள்! சீனக்கஞ்சி கிடைக்குமான்னு போய்த் தேடிக்கிட்டு இருந்தேன். இங்கே ஒன்னு சொல்லணும். சாப்பாடு அடுக்கி வச்சுருக்கும் இடங்கள் நிறைய என்றாலும், நாம் போனமுறை போன கப்பலில் வெவ்வேறு வகைகளுக்கான உணவுக்குடில்களில் போர்டு போட்டு வச்சுருந்தாங்க, இண்டியன், இதாலியன், சைனான்னு...... இங்கே பேரே கிடையாது. கப்பல் பயணிகளில் 99.99 சதம் சீனர்கள் என்பதால் பெயர் போட வேண்டிய அவசியம் இல்லை போல...... நாலுநாட்கள் வரை மருந்துக்குக்கூட வேறொரு இந்தியரைப் பார்க்கவே இல்லை! கடைசிநாள்தான் ஒரு துப்பட்டாவை தூரத்தில் பார்த்தேன். பேசலாமான்னு யோசிச்சு, அங்கே போறதுக்குள்ளே அவுங்க போயிட்டாங்க.
இந்தக் கப்பலிலும் பத்தொன்பது டெக்குகள் தான். மொத்தப்பயணிகள் எண்ணிக்கை 3660. பணியாளர்கள் 1346. கட்டிமுடிச்சுப் பயணம் போகத்தொடங்கி மூணு வருஷம்தான் ஆச்சு. நாம் அலாஸ்கா போன கப்பலுக்கு வயசு பதினாறு (நாம் போன சமயம். ) அதுலே கூட்டமும் இவ்ளோ இல்லை. அறைகள் கொஞ்சம் பெருசாவும், பால்கனிகள் ரொம்பவே பெருசாவும் இருந்துச்சுதான். இதுலே ரெண்டு ஆள் சேர்ந்து நிற்கும் அகலம்தான் பால்கனிக்கே..... அந்தப்பக்கம் போய் உக்காரணுமுன்னா முன்னேஇருக்கும் ஆள் எழுந்து நின்னு வழிவிடணும். அப்படி ஒரு இடுக்கம்.
பதினாறாம் மாடியில் இருக்கும் பொது டைனிங் ஹாலுக்கு World Fresh Marketplace னு பெயர். என்னவோ கப்பலிலேயே விளைச்சலும் அறுவடையும் நடக்கறாப்போல.....
ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு, மற்ற இடங்களைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருக்கோம் இப்போ.
புதுக்கப்பல் என்பதால் The Piazza ( இங்கத்து க்ராண்ட் ஃபோயர் ) சரவிளக்குகள் எல்லாம் மாடர்ன் டிஸைனாம். எனெக்கென்னவோ செருப்போட அடிபாகத்து டிசைனாத்தான் தெரிஞ்சது. எனக்குத்தான் ரசனை இல்லை போல.... மூணு மாடி உயரத்துக்கு ஓப்பனா இருக்கு. இது இருப்பது அஞ்சாம் மாடி.
பொழுதன்னிக்கும் யாராவது பாடிக்கிட்டு இருக்காங்க. நின்னு கேக்கும் மக்களைப் பத்திக் கவலையே கிடையாது..... என் கடன் பாடுவதே.... மைக்கும், ஒரு பியானோவும் இருக்கு. போதாதா என்ன ? இந்தபகுதியில் பார்கள் எக்கச் சக்கம்! மதுப்ரியர்கள்தான் அங்கங்கே.... ஆனால் எல்லோரும் ஸ்டெடி :-)
ஹாலோவீனுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்குன்னாலும் பேய்கள் எல்லாம் வந்துருச்சுங்க. நம்மவருக்குத் துளிப் பயம் இருக்கணுமே......கூடவே வாழும் அனுபவம்னா சும்மாவா ?
கடைவீதியில் எல்லாக் கடைகளும் மூடிக்கிடக்கு. விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கலாம். (நம்மவருக்கு ரொம்பக் குஷி ) டிஸ்ப்ளேக்கு வச்சுருக்கும் கைக்கடிகாரங்களைப் பார்த்துக்கிட்டே போனப்ப, நம்ம ஆஸாத் (அபுல்கலாம் ஆஸாத் ) பெயரைச் சொன்னார் நம்மவர். எனக்கே வியப்புதான் அப்போ! ஆஸாத் தம்பியின் (எனக்கு மரத்தடி சொந்தம் ) பேஸ்புக் பதிவெல்லாம் படிக்கறார் போல ! ஆஹா....
கஸீனோவுக்குள் நுழைஞ்சால் எல்லா மெஷீனும் ரெஸ்ட் எடுக்குதுகள். கரையில் நிற்கும் நாளில் மக்கள்ஸ் அனைவரும் ஊருக்குள் போயிடறதால்.... கடைவீதி, கஸீனோ எல்லாம் மூடித்தான் இருக்கும் என்ற விவரம் போன பயணத்திலேயே தெரிஞ்சிபோச்சு இல்லையோ !
வெளியே பயங்கரமா சூடு என்றதால் மேலே உச்சிக்குப்போகும் எண்ணமெல்லாம் வரலை. அறையிலேயே ஏஸி போட்டுக்கிட்டு ஓய்வு. குட்டித்தூக்கம், கே எல் போர்ட் கரைகள் க்ளிக்ஸ் இப்படி நேரம் போக்கிட்டு ரெண்டு மணி ஆச்சேன்னு லஞ்சுக்கு, மார்கெட் ப்ளேஸ் போனோம். நான் இந்தியனைத் தேடிப்போனேன். அங்கே இன்றைக்கு லாங் பீன் கறி இருந்தது. நம்மவரின் ஃபேவ் காய் என்பதால் இவராண்டை வந்து சொன்னேன்.
என்ன வகை சாப்பாடுன்ற தகவல் பலகை இல்லாததால் இவருக்கு இடம் தெரியலை. கையோடு கூட்டிப்போய் இடத்தைக் காமிச்சுக் கொடுத்தேன்.
சாப்பாடு ஆனதும் இதே மாடியில் இருக்கும் நீச்சல்குளத்தாண்டை இருக்கும் கடையில் ஐஸ்க்ரீம் ! சாயங்காலங்களில் இங்கே ஐஸ்க்ரீமோடு, பாப்கார்னும் கிடைக்குது. சுடச் சுடப் பொரிச்சுத் தர்றாங்க.
சாயங்காலம் அஞ்சரைக்குள் வெளியே போனவங்க எல்லோரும் வந்துட்டாங்க போல. டீக்கடைக்குப் போனால் கூட்டம் அம்முது ! இந்த நீச்சல்குளம் இருக்கும் பகுதியில் கப்பல் சுவத்துலே ஒரு பெரிய எலெக்ட்ரானிக் ஸ்க்ரீன். அப்பப்பத் தகவல்கள் பகல் நேரத்தில் அதுலே வந்துக்கிட்டு இருந்தாலும், இது ராத்ரி சினிமா காட்டும். மூவி அண்டர் தெ ஸ்டார் !

சாயங்காலம் அஸ்தமனம் ஆனதும், மேலே சன்பாத் எடுக்க போட்டு வச்சுருக்கும் Sun Lounger களை எல்லாம் தூக்கிவந்து நீச்சல் குளத்தைச் சுத்திப் போட்டுடறாங்க. அதுக்கப்புறம் யாருக்கும் நீச்சல் குளத்தில் அனுமதி இல்லை. ஒரு வலை போட்டு மூடிவச்சுடறாங்க. ஜாலியாப் படுத்துக்கிட்டே சினிமா பார்க்கலாம்.
தியேட்டரில் மேஜிக் ஷோன்னு போனால்.... சீட்டுக்கட்டு வச்சு, மேஜிக். பத்துநிமிட் உக்கார்ந்துட்டு வந்தோம்....
டின்னருக்குப்போனால்......... அதிர்ச்சி ! அதே லாங்பீன், அதே பாத்திரத்தில்...
பியாஸ்ஸாவில் (க்ராண்ட் ஃபோயராண்டை ) ஹாலோவீன் அலங்காரங்கள் பார்த்துட்டு அறைக்கு வந்தாச்சு. கொஞ்சநேரம் வெளியே போய் உக்காரலாமுன்னா..... 'குளிர் காத்து.....உள்ளே வா.... 'ன்னு அசரீரி ! கப்பல் வெளிப்புறம் விளக்கு ஜொலிக்குது. ஆனால் நாம் முழுசாக் கப்பலைப் பார்க்கவே முடியாது. ப்ச்....
நாளைக்கு வேற ஒரு ஊரில் நிறுத்தம். நாம் பார்க்காத ஊர் என்பதால் இறங்கிப் போகணும்..... போறோம் !
தொடரும்............ :-)













































0 comments:
Post a Comment