காலையில் கண் திறந்தவுடன் இன்றைக்கு எங்கே போகலாமுன்னு கேட்டவருக்கு, அம்மாஜி மந்திர்தான் முதலில் என்று சொன்னேன். போனமுறை பார்த்த இடங்களை விட்டுட்டுப் பார்க்காதவைகளுக்கு முன்னுரிமை தரணும்.

சரியா ஒரு பதினொரு வருஷங்களுக்கு முன்னே அயோத்யா வந்துருந்தோம். நம்ம திவ்யதேசப் பட்டியலில் அயோத்யாவும் இருக்கு. மேலும் ஏழு மோக்ஷபுரிகளில் இதுவும் ஒன்னு! ராமர் கோவிலைக் கட்டப்போவதாகப்பேச்சு பலவருஷங்களா நடந்துக்கிட்டு இருந்தது அப்பெல்லாம்.
நம்ம காசிப்பயணத்தில் அயோத்யாவையும் சேர்க்கலாமுன்னா..... அங்கே தங்கறதுக்கெல்லாம் அவ்வளவா வசதிகள் இல்லைன்னு தெரிஞ்சதும், இலஹாபாத்தில் (இப்ப இதன் பெயர் ப்ரயாக் ராஜ் ) தங்கி, அங்கிருந்து அயோத்யா போயிட்டு வரலாமுன்னு முடிவாச்சு.
பொதுவா யாத்திரைகளில் கூட்டமாகப் போறவங்களுக்கு அந்தந்த நிர்வாகிகளே தங்குமிடம், உணவு எல்லாம் ஏற்பாடு செஞ்சுருவாங்க. ஆனால் எங்களுக்கு அப்படிப்போக வாய்ப்பே கிடையாது. எப்போ இந்தியாவுக்கு வர்றமோ அப்போ சில கோவில்கள் என்ற வகையில்தான் இதுவரை எல்லாமே.
போகவர நவ்வாலு மணி நேரம், ஊர் சுத்த இன்னொரு நாலு மணின்னு பனிரெண்டு மணி நேரத்தில் அயோத்யா போய் வந்தாச்சு.
அப்போ அந்தப் பகுதிகளை எழுதியதன் சுட்டி இது. அப்படியே நூல் பிடிச்சுப்போகணும். பயந்துறாதீங்க..... வெறும் நாலே பதிவுகள்தான். நாலு மணி நேரத்துக்கு நாலு !
பாலராமனைச் சரியாப்பார்க்கலையேன்னு இருந்ததும் உண்மை. கோவில் கட்டினால் ஒரு முறை வந்து தரிசனம் பண்ணிக்கணுமுன்னு மூளையில் முடிச்சுப் போட்டுருந்தேன். போனவருஷம் (2024) ராமர் கோவிலைக் கட்டிமுடிச்சுக் கும்பாபிஷேகமும் ஆச்சுன்னதும் மூளை முடிச்சுப் பிறாண்ட ஆரம்பிச்சது. ஆகஸ்ட்னு முடிவானதும், உடல்நிலை காரணம் ரத்தானதும் எல்லாம் இப்போ பழைய கதை.
திவ்ய தேசக்கோவில்கள் என்றால் ஆழ்வார்கள் வந்து பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கணும், இல்லையா ? சில இடங்களில் மனக்கண்களால் தரிசிச்சும் பாடல்கள் பாடி இருக்காங்கதான். முக்திநாத் இவைகளில் ஒன்னு ! அதே போல நைமிஸாரண்யத்திலும் மரங்கள் நிறைஞ்ச காடுதான் கோவில்னு சொல்வாங்க. (நம்ம நைமிஸாரண்யப் பயணத்தில் திவ்யதேசக்கோவில் என்ற பெயர்போட்டக் கோவிலில் தரிசனம் செஞ்சோம். ) இங்கே அயோத்யாவில் தனிப்பட்ட எந்தக் கோவிலும் திவ்யதரிசனப்பட்டியலில் இல்லை. மொத்த ஊருமே ராமர் காலடி பட்ட இடம் என்பதால் ஊரேதான் கோவில். நாம் முன்பு அயோத்யா வந்த பயணத்தில், அம்மாஜி மந்திர், திவ்யதேசக் கோவில்னு சிலர் சொன்னாங்க. மதியம் கோவில் மூடி இருக்கும் நேரம் என்பதால் நாம் போகலை. மேலும் அந்தக் கோவிலுக்கு வயசே இப்போ 121 தான். ஆழ்வார்கள் காலம் ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரைதானே !
சரி எதாக இருந்தாலும் இன்று முதல் கோவில் அம்மாஜி மந்திர்தான் !
மாமாவை செல்லில் கூப்பிட்டுப் பேசி காலை ஒன்பதரைக்கு வரச் சொன்னோம்.

ஐராவின் ரெஸ்ட்டாரண்டில் மெனுகார்டே கிடையாது! காலை, மதியம், இரவுன்னு மூணு வேளைக்கும் பஃபேதான். விலைப்பட்டியல்னு கூட ஒன்னும் இல்லை. எல்லா வேளைக்கும் ஒரே விலை ! 'எல்லாம் செஞ்சு வச்சாச்சு. எது இஷ்டமோ அதையெல்லாம் நீயே எடுத்துப்போட்டுச் சாப்பிட்டுக்கோ' !
எல்லா வகைகளையும் ஒரு நோட்டம் விட்டேன். ஜலேபி மட்டும் சுடச் சுடத்தயாராகுது. தோசை வேணுமுன்னால் உடனே செஞ்சு கொடுக்கறாங்க. நமக்கு ரெண்டு இட்லி & ஒரு தோசை வித் மூணு வகைச் சட்னி, கூடவே இனிப்பா ஒரு சாம்பார். (என்னதான் சொல்லுங்க, நம்ம லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டை அடிச்சுக்க முடியாது கேட்டோ !)
கீழே வந்தாச்சுன்னு மாமா செல்லில் கூப்பிட்டுச் சொன்னார். மாமாவைப் பார்த்ததும் என் முதல் கேள்வி........... உங்க பெயர் என்ன ? கொஞ்சம் திடுக்னு பார்த்தவர் தீப் (Deep ) என்றார். மாமாவே பழக்கமாகி இருக்கு போல ! அடுத்த கேள்வி, ஏன் எல்லோரும் மாமான் னு குறிப்பிடறாங்க? கூப்பிடறதும் அப்படியேதானே ?
இந்த ஐரா ஹொட்டேல் முற்றத்தையொட்டியே சின்னதா ஒரு டீக்கடை ஒன்னு. யாதவ் ஜி டீ ஸ்டால். அதை நடத்தறவர் நம்ம தீப் பின் மருமகன். அவர் மாமான்னு கூப்பிடறதால் எல்லோருக்கும் இப்ப தீப், மாமா ஆகிட்டார்.
அயோத்யாவில் உள்ள பெரிய ஹொட்டேல்கள் எல்லாமே கோவில் கட்ட ஆரம்பிச்சவுடனே அவசர அவசரமா ஆரம்பிச்சவைகள்தான். அதிலும் இந்த ஐரா ஹொட்டேல், ஸ்ரீ ராமஜன்மபூமி புதுக்கோவில் திறப்பு விழா ஆன மூணுமாசத்துக்குப்பிறகுதான் 2024 ஸ்ரீராமநவமி தினத்தில் திறக்கப்பட்டுருக்கு !
தீப் ஓட்டிவந்த ஆட்டோ, நம்மூர் சென்னை ஆட்டோவைவிட வேறொரு டிசைனில் இருக்கு. சட்னு என்னால் ஏறி உக்கார முடியாதபடி கொஞ்சம் உசரம் கூடுதல். தீப், ஓடிப்போய் ரெண்டு செங்கல் கற்களை எடுத்துவந்தார். (அக்கம்பக்கம் எல்லாம் கட்டட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு !)அதுதான் எனக்குப் படி. ஏறினதும், செங்கற்களும் ஆட்டோவில் ஏறி என் காலாண்டை உக்கார்ந்தன. இறங்கும்போதும் வேணும்தானே ?
இங்கெல்லாம் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள்தானாம். ஒருமுறை சார்ஜ் செஞ்சால் சுமார் நூறு கிமீ வரை போகலாமாம்.
அம்மாஜி மந்திர் ஒரு ஒன்பதரை கிமீ தூரத்தில் ஊருக்குள் இருக்கு. சில இடங்களில் நல்ல சாலைகள் இருந்தாலும் பல இடங்களில் சந்துகளில் புகுந்து போய்க்கிட்டு இருந்தோம். ஆனால் ஊர்முழுக்க சனக்கூட்டம். ப்ரயாக் ராஜில் நடக்கும் மஹாகும்பமேளாவுக்கு வந்த சனம், அப்படியே அயோத்யா, காசின்னு ஒரு சுத்துப்போயிட்டுதான் போறாங்களாம்.
முக்காமணி நேரமாச்சுக் கோவிலுக்குப் போய்ச் சேர ! ஒன்பதரைக் கிமீ தூரம்தான். வெளிவாசல் சுவரில் போர்டு !
உள்வாசலாண்டை ரெண்டுபேர் உக்கார்ந்துருந்தாங்க. ஒருவர் செக்யூரிட்டி, மற்றவர் கோவில் பட்டர் ஸ்வாமிகள். வாசலுக்கு நேரக் கொடிமரமும் பலிபீடமும் கண்ணில் பட்டன. நம்மைப் பார்த்துட்டுப் பட்டர் ஸ்வாமிகள் எழுந்து உள்ளே வந்தார்.


தெலுங்கான்னார். இல்லை. தமிழ் என்றேன். பூட்டி இருந்த சந்நிதிக்கதவைத் திறந்ததும்,
" உள்ளே வாங்கோ . இன்றைக்கு நீங்கள்தான் முதல் பக்தர்கள். யாரும் வரலையேன்னு கொஞ்ச நேரம் வெளியிலே வெயிலில் உட்கார்ந்துருந்தேன்"
'அட ராமா.... ஏகாந்த தரிசனம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்'னு மூலவரிடம் சொன்னேன். ஆரத்தி, சடாரி, துளசித்தீர்த்தம் எல்லாம் லபிச்சது !
எங்கிருந்து வந்துருக்கோம், என்ன ஏது விவரங்கள் எல்லாம் சட்னு ஒரு விசாரிப்பில் ஆச்சு !
"பாலராமர் தரிசனம் ஆச்சோ? "
"இல்லை. நாளைக்கு மத்யானம் ."
'படம் எடுத்துக்கவா'ன்னு கேட்டதுக்கு எடுத்துக்குங்கோன்னார் ஜகந்நாத பட்டர். மனம் நிறைஞ்சது. கருவறையில் ராமர், சீதை, லக்ஷ்மணர்,ஆஞ்சு , கருடாழ்வார் எல்லாம் கற்சிலைகள். ஆனால் எல்லோருக்கும் வெள்ளிக்கவசம் சார்த்தியிருக்கு. மற்றவர்கள் எல்லாம் விக்ரஹங்கள். நல்ல கூட்டம்தான் !
அடுத்த சந்நிதியில் ஸ்ரீ ரங்கநாதர் !
இன்னொரு சந்நிதி ஆழ்வார்களுக்கு !
வெளியிலே ஜயவிஜயர்கள் அருமை !
தொன்னையில் ப்ரஸாதம் கிடைச்சது. புளியோதரைன்னு நினைக்கிறேன்.
இப்போ ஒரு ரெண்டு வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீ ராமானுஜர் சிலை (பளிங்கு ) ஸ்தாபிதம் ஆகி இருக்கு ! நல்ல அழகா இருக்கார் !



இதுவரை ராஜகோபுரம் எல்லாம் இல்லை. வருங்காலத்தில் வர வாய்ப்புண்டு !
நம்ம ஆஞ்சு, குளிர்காரணம் கம்பளிச் சொக்கா, குல்லா எல்லாம் போட்டுருந்தது. சந்நிதி இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்துருக்கலாம்.......
கோவிலுக்குள்ளே யோகி பார்த்தசாரதி ஐயங்கார், யோகி சிங்கம்மாள் புகைப்படங்கள் ! இந்தக் கோவில் இங்கே இருப்பதற்கான காரணகர்த்தாக்கள் !
நம்ம திருவல்லிக்கேணியில் இருந்து வட தேசங்களுக்கு யாத்திரை வந்த தம்பதிகளான திரு பார்த்தசாரதி அய்யங்காரும், அவர் மனைவி திருமதி சிங்கம்மாளும் அயோத்யா வந்து சிலநாட்கள் தங்குனப்ப, இங்கே ராமனுக்கு ஒரு கோவில் கட்டச் சொல்லி கனவில் உத்திரவாயிருக்கு. ஆர்டர் போட்டவர் நம்ம தில்லக்கேணி மீசைக்காரரே! ஸோ இது பார்த்தஸாரதி சொல்ல, பார்த்தஸாரதி கட்டுன கோவில். அப்புறம் சில வருசங்கள் கழிச்சு ஐயா பார்த்தஸாரதி சாமிகிட்டே போகவும், அம்மா(ள்) சிங்கம்மாள் கோவிலைப் பொறுப்பேத்து நடத்தறாங்க. அம்மாளின் சேவை பிரபலமாகி,கோவிலுக்கே அம்மாஜி மந்திர்னு பேரு கிடைச்சுருச்சு. வடக்கர்களுக்கு அம்மா அம்மா என்னும் சொல் பழகிப்போயிருக்கு. அம்மான்னா சும்மா இல்லை கேட்டோ!!!
அம்மாவும் கணவர் மறைவுக்குப்பின் முப்பது வருசம் அயோத்யாவில் தங்கி பூஜைகள் நடத்தி கோவிலை நல்லபடி கவனிச்சப்பிறகு சாமிகிட்டே போயிட்டாங்க.
இன்னொருமுறை கருவறை ராமரைக் கும்பிட்டுக்கலாமுன்னு பார்த்தால் பட்டர் ஸ்வாமிகள் கதவைப் பூட்டிக்கிட்டு, வெளியே வெயில்காயப் போயிட்டார். அங்கே பேச்சுத்துணைக்கு வாட்ச்மேன் இருக்காரே ! பாவம் அவரும்தான் ஆளில்லாத இடத்தில் எத்தனைநேரம் மூலவரை மட்டுமே பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருப்பது ?
பட்டர்ஸ்வாமிகளிடம் சொல்லிக்கிட்டுக் கிளம்பினோம். ஆட்டோபக்கத்தில் ஆஞ்சி இருந்தார். ஒரு தொன்னை ப்ரஸாதம் அவருக்கு. இன்னொன்னுக்கு நம்ம தீப் !


இதோ கிளம்பியாச்சு, அடுத்த இடத்துக்கு !
தொடரும்...... :-)
