Wednesday, June 28, 2023

ஆமை 'வந்த ' வீடு !

வீட்டுக்கு ஒரு ஆமையைக் கூட்டிவந்தேன்.  நம்மூரில்தான் ஆமைக்குக் கெட்ட பெயர். ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு....  ப்ச்..... பாவம்.  நம்ம மஹாவிஷ்ணுவே ஆமை அவதாரம்  எடுத்ததால் ஆமை நம்மை ஒன்னும் செய்யாது  என்ற நம்பிக்கைதான் !  



நல்லாப் பளபளன்னு வேற இருக்கு !  அது உக்கார்ந்துக்க ஒரு தட்டுடன்  கிடைச்சது.  ஆமையைப் புரட்டிப் பார்த்தால்  இப்படி எண்கள் வேற !  கொஞ்சம் 'அந்தப் பழமொழி'யை மனசுலே வச்சுக் கவனிச்சதுலே....   ஒரு சமாச்சாரம் தோணுச்சு.  அது தானாகவே வீட்டுக்குள் புகுந்தால் உருப்படாது. நாமே அதை வாங்கி வீட்டுக்குள் கொண்டு வந்தால் உருப்படும் சரிதானே !!!!      

வடக்கே சில கோவில்களில்  அன்னை பார்வதியின் சந்நிதியில் ஆமையைத்தான்  வாகனமாக வச்சுருப்பதைப் பார்த்துருக்கேன்.  நேபாள நாட்டில்  மகாலக்ஷ்மியின் வாகனம் ஆமைதான் ! இதுவே வங்காள மாநிலத்தில் ஆந்தையாம் !

இங்கே உள்ளூர் பெட் ஷாப்களில் ஆமைகள் விக்கறாங்க. வாங்கி வளர்க்கும் வெள்ளையர் குடும்பம் நல்லாத்தான்  இருக்கு!   சீன வாஸ்து சமாச்சாரங்களில்   ஆமைக்கு உயர்ந்த இடம் கொடுத்துருக்காங்க.  நல்லதே நடக்கட்டும் ! 

சனிக்கிழமை வந்தப்போ  நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப் போய் வந்தோம்.  நம்மவர் வழக்கம்போல் அவருக்கான வேலையைச் செஞ்சார். 


நம்ம ஆட்டோகேட்  திரும்பவும் கொஞ்சம்  சண்டித்தனம் காமிச்சதுன்னு  அதே கம்பெனிக்கு மறுபடிச் சொன்னதில்  சம்பந்தப்பட்ட நபர் வந்து பார்த்துட்டு , இன்னொருத்தரைக் கூப்பிட்டுச் சொன்னார்.  அவர் அனுபவஸ்தர்போல!  ரெண்டுபேருமா சேர்ந்து அதைச் சரிப்படுத்திக் கொடுத்துட்டுப் போனாங்க. வீட்டுலே எல்லா சமாச்சாரமும் 18 வருசப் புழக்கம் என்பதால்.... ஒவ்வொன்னா மண்டையைப் போடும் காலம். எதுக்கும் தயாரா இருந்துக்கணும், இல்லே ?





கொஞ்சம் மணி கோர்த்து 'பசங்களுக்கு' நகை செய்வது,  தோணும்போது  சின்னதா ஒரு க்றிஸ்மஸ் அலங்காரம்,  மார்கழி கோலத்துக்குப் பதிலா , சாமி அறையில்   'கோலம் வச்சு' நைவேத்யம் சமர்ப்பியாமின்னு .... 





அலங்காரம்தான் புதுசே தவிர பெரும்பாலும் ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ்தான், ஜஸ்ட் பிக்டு :-) இது இப்போ நமக்கு சம்மர்.  டிசம்பர் முதல் பிஃப்ரவரி வரை.  அதுக்காக ஒரேதா மகிழ்ந்துறக்கூடாது. எப்போ வேணுமுன்னாலும்  குளிர்காற்று கொடுமையாக வரும். அண்டார்க்டிக்கா  பக்கத்துலே தான் இருக்கு !





ஹனுமன் ஜயந்தி நமக்கெல்லாம் மார்கழி மாசம் மூல நக்ஷத்திரம். அன்றைக்கு மார்கழி மாச அமாவாசையும்கூட.  ஆனால்  வடக்கர்களுக்கு  லூனார் கேலண்டர் அனுசரிச்சு, சைத்ரமாச பௌர்ணமி.  பாருங்களேன்..... வடக்கும் தெற்கும் எப்பவும் எதிர் எதிரா இருக்கமோன்னு நினைச்சாலும்,  சந்திர நாள்காட்டி  பயன்படுத்தும் மக்கள் அனைவரும் நம்ம தெலுகு & கன்னடா உட்பட  இப்படித்தானே !

போகட்டும்......  நம்ம ஆஞ்சி பொறந்தநாளை எத்தனைமுறை கொண்டாடினால் என்ன! வழ்க்கத்துக்கு மாறா ஒரு விபரீத எண்ணம் வந்தது.  நம்ம வீட்டில் எப்பவும் அனுமனுக்கு போண்டா மாலைதான். என்னதான் கவனமாக உளுந்தை அரைச்சாலும் வடை செய்ய வர்றதே இல்லை.  வலையில் பார்த்து வடை செய்ய முடிவெடுத்தேன்.  அவனருளால் முதல்முறை செய்தது  நல்லாவே வந்துருச்சு. கரகரன்னு வேற இருக்கு !  அடடா... இப்படி ஒரு செய்முறை இருப்பதை இவ்ளோ நாள் கவனிக்காம, ஆஞ்சியைப் படுத்தியிருக்கேனே....  பாவம் இல்லையோ !  மாப்பு மாப்பு....


மறுநாள் மார்கழி ஒன்பது.  நம்ம தூமணி மாடத்து நாள் !  கொண்டாட்டத்துக்குக் கேட்கணுமா ?  ஒரு காலத்தில் எம் எல் வி மட்டுமே கேட்டு வளர்ந்த நான், இப்பெல்லாம் புதுப்புது பாடகர்கள் பாடுவதையெல்லாம்  கேட்கத் தொடங்கியிருந்தேன்.  வீட்டிலும்  கேஸட்டும் ஸிடியுமாத்தான் நிறைய இருக்கு.  ஆனால் இந்த  யூட்யூப் வந்ததில் இருந்து, பாட்டுக் கேக்கறது இன்னும் சுலபமாப் போச்சு இல்லே !

அனுராதா சுரேஷ் கிருஷ்ணமூர்த்தியின் திருப்பாவை ஆல்பம் ரசிகையா இப்போ இருக்கும்போது, ஒரு நாள் யதேச்சையா, ஸ்ரீவல்ஸன் பாடுனதைக் கேட்டு...... ஆஹான்னு ஆச்சு. கலப்படம்தான் கர்நாடிக்கும் வெஸ்டர்னும்.... 
இன்றைக்கு நம்ம 'பாட்டு'க்கு விசேஷமா ஏதாவது விசேஷமாச் செய்யலாமேன்னு யோசிச்சு, ராஸ்பெர்ரி ஹல்வா செஞ்சு ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆச்சு. ரொம்ப நல்லா வந்தது ! (அதானே.... நெய்யும் சக்கரையும் சேர்ந்தால் அதுக்கான ருசி இருக்காதா என்ன ? )  இந்த வருஷம் நம்ம வீட்டு ராஸ்பெர்ரிச் செடி செமையா பழங்களை அள்ளிக்கொடுத்துச்சு!



நம்மவர் எனக்கும் நம்மவனுக்கும் பரிசுகள் வாங்கிக்கொடுத்தார் !

நம்ம  சம்பந்திகள் வீட்டுலே  ஹனூக்கா பண்டிகைக்கு வழக்கமாப் போற நாங்க.... இந்த முறை போகலை.  முக்கால் மணி நேர ட்ரைவ்.  நம்மவர் இன்னும் பூரண குணமாகாததால்  ரிஸ்க் எடுக்க  எனக்கு விருப்பமில்லை. இவுங்க க்றிஸ்மஸ் கொண்டாடமாட்டாங்க என்பதால் பெரிய கொண்டாட்டம் &   பரிசு கொடுப்பது, வாங்கிக்கறது எல்லாம் ஹனூக்காவுக்குத்தான்.   நமக்கான பரிசுகளோடு மகளும் மருமகனுமா  வீட்டுக்கு வந்தாங்க.  நான் ஹல்வாக் கொடுத்தேன் :-)



8 comments:

said...

கொண்டாட்டங்கள் அனைத்தும் சிறப்பு. படங்கள் - குறிப்பாக பழங்களின் படங்கள் கண்களைக் கவரும் விதமாக! தொடரட்டும் பதிவுகளும் பயணங்களும்.

said...

எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவது சிறப்பு. வடை வடை போலவே இருக்கிறது. ரஜ்ஜு அமர்ந்து வாசலைப் பார்த்துக் கொண்டிருப்பது சுவாரஸ்யம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கு நன்றி ! தனியாக பயமாக இருந்தேன் :-)

said...

வாங்க ஸ்ரீராம்,

வடையின் ருசியும் வடை ருசி மாதிரியேதான் இருந்தது !

தினமும் இருட்டினபிறகு வாசத்திண்ணையில் உக்கார்ந்து வேடிக்கை பார்ப்பான். வாக் போகும் நாய்கள் பிடிக்கும்.

said...

பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாம் சூப்பர் போங்க! வடை நல்லாருக்கு. ராஸ்பெரி ஹல்வா சூப்பர்! அதானே நெய்யும் சர்க்கரையும் சேத்தா அதுக்கென்ன!

ரஜ்ஜு எல்லாத்தையும் நோட்டம் விடுந்நு!!! அவனுக்கு வந்த கிஃப்டை இன்னும் பார்க்கலை போல..

கடைசில மகளுக்கும் மருமகனுக்கும் ஹல்வா கொடுத்திட்டீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஹா

கீதா

said...

வாங்க கீதா,

ரஜ்ஜு பெரிய ஆள். சைலண்டா இருந்துக்கிட்டே எல்லாத்தையும் பார்த்து வச்சுக்குவான்.

மகளுக்கும் மருமகனுக்கும் மட்டுமா.... கோபாலுக்கும்தான்.... :-)

said...

கொண்டாட்டங்களும் பிரசாதங்களும் நன்றாக இருக்கிறது.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !