Saturday, June 24, 2023

புள்ளையாருக்கு ஒரு இடம் அமைஞ்சது !

அஞ்சு வருஷமா காத்திருந்தோம்..... நம்ம புள்ளையாருக்கு  ஒரு இடம் அமைச்சுக்கொடுக்க..... !    புள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டும் எண்ணத்தோடு, இதே எண்ணம் கொண்ட சிலருடன் சேர்ந்துகொண்டோம்.  மலேசியாவைச் சேர்ந்த செல்லா & ராஸ் என்பவர்கள் ஆரம்பித்துவைச்ச திட்டம்.  இன்னும் பல மலேசிய , இலங்கை நண்பர்களும்  ஆர்வமாகச்  சேர்ந்து கொண்டதால்  கோவில் கட்டுவது உறுதியாச்சு. 
ச்சும்மாக் கோவில் கட்டுவதுன்னா..... ச்சும்மாவா ? இடம் வாகா அமையணும்.  சிட்டிக் கவுன்ஸிலிடமிருந்து விசேஷ அனுமதி வாங்கணும். கோவிலுக்கான சாமி சிலைகளை இந்தியாவிலிருந்து வரவழைக்கணும்,  கோவில் என்று வந்துட்டால்... நித்யப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்யணும், பூஜை நடத்த, நடத்திக்க ஆர்வமுள்ள மக்களை ஒன்னு சேர்க்கணும். இவை எல்லாத்துக்கும் மேலா....  தேவையான பணத்தைத் திரட்டணும்.  எல்லாம் ஒருநாளில் ஆகும் சமாச்சாரமா .... என்ன ?

ஆர்வம் குறையாமல் பார்த்துக்கறது முக்கியம் இல்லையோ ?  மாசம் ஒருநாள் (ரெண்டாவது சனிக்கிழமைகளில்) எல்லோரும் ஒரு இடத்தில் கூடி,  பூஜையும் பஜனையும்  செஞ்சுக்கும்படியா ஒரு சத்சங்கம் தொடங்கினோம். 
 
ஆரம்பகாலத்தில்.....  சிட்டிக்கவுன்ஸில் கம்யூனிட்டி  ஹால் ஒன்னை வாடகைக்கு ஏற்பாடு செஞ்சோம்.  புள்ளையார் விக்ரஹம் ஒன்னு  மலேசியாவில் இருந்து வந்தது. அன்பளித்தவர்  அங்கே இருக்கும்  மலேசிய பக்தர்  ஒருவர்.  சத்சங்கம் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருந்தது.  பக்தர்கள் ஏதாவது பிரசாதம் செய்து கொண்டு போவோம்.  பூஜை முடிந்தவுடன்,  பிரசாதங்களைப் பகிர்ந்துகொள்வோம்.  ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிச்சு,  நிர்வாகக்கமிட்டி அங்கங்களை இணைச்சு எல்லா வேலைகளும் ஒரு நியமத்தோடு நடந்துக்கிட்டு இருந்தது.

சத்சங்கம் கூடும் நாட்களில் 'வந்து போன   & வந்து கொண்டிருக்கும்' பண்டிகைகளைக் கொண்டாடிக்கொள்வோம்.  முதலில் இப்படிக் கொண்டாடின விழா வரலக்ஷ்மி நோன்பு.  அப்புறம்  புள்ளையார் சதுர்த்தி, ஸ்ரீக்ருஷ்ணாஷ்டமி, நவராத்ரி, தீபாவளி, கார்த்திகை,  தைப்பூசம் என்று ஒன்னொன்னாச் சேர்ந்து கொண்டது.  கொஞ்சம் பெரிய விசேஷமுன்னா..... வெலிங்டன் நகரில் இருக்கும் திரு பத்மன் ஐயரை அழைத்துக் கொண்டாடுவோம். கொஞ்சம் சம்ப்ரதாயமான பூஜையாகத்தான் இருக்கட்டுமே ! அவருக்கு வரமுடியாத சமயங்களில் உள்ளூரில் இருக்கும் நேபாள் நாட்டுப் பண்டிட் வந்து நடத்திக்கொடுப்பார். ஆனால் ஒன்னு..... எந்த விழாவா இருந்தாலும் வீகெண்ட் சனிக்கிழமைக்கு நேர்ந்துவிடுவதுதான்.

இப்படியே அஞ்சு வருஷங்கள் ஓடிப்போச்சு.  இதுக்குள்  அம்மன் , முருகன் குடும்பம் விக்ரஹங்களா வந்து சேர்ந்தாங்க.  சிவன் சம்பந்தமான்ன விசேஷ நாளுன்னா.... ஒரு நண்பர் வீட்டில் இருந்த பாணலிங்கம்  இங்கே எழுந்தருளி அபிஷேகம் ஆரத்தியெல்லாம் நடத்திக்கொண்டது !  சத்சங்கம் முடிந்தவுடன்,  விக்ரஹங்கள், விளக்குகள், அலங்காரம் & அபிஷேகத்துக்கான சமாச்சாரங்கள் எல்லாம் நிர்வாகக்கமிட்டி அங்கத்தினர்கள் வீடுகளுக்குப்போய் விடும்.  ஒருத்தரே எல்லாத்தையும் கொண்டுபோய் வச்சுக்கறதிலும் சிரமங்கள் இருக்குல்லையா ?  கோவில் வரும்வரை இப்படித்தான்  செஞ்சுக்கவேண்டி இருக்கு !

நம்ம ஊருக்குள்  கோவில் அமைவதுதான் எல்லோருக்கும் நல்லதுன்னு தேடித்தேடிக் காத்திருந்தோம். காரியம் கைகூடுவது போல இருக்கும். கடைசியில் கூடாது. என்னென்னவோ காரணங்கள். ப்ச்.....  அப்போ நான் நினைப்பேன், 'புள்ளையாருக்கு இங்கே இருக்க ஆசைன்னா.... அவரே ஏதாவது ஏற்பாட்டு பண்ணிக்குவார்'னு.

திடீர்னு அவரே ஏற்பாடு பண்ணிட்டார். ஊருக்குள் ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒரு இடம் விலைக்கு வந்தது. லாயர்ஸ் ஆஃபீஸ் இருக்கும் இடம்.  ஆர்வமுள்ள மக்கள் அவர்களால் ஆன தொகை அளிக்க முன்வந்தார்கள்.  அதைக் கொண்டும், மீதிப் பணத்துக்கு பேங்கில் கடன் வாங்கியும் சமாளிச்சாச்சு.  
லாயர்ஸ் ஆஃபீஸ் உள்ளே  இருந்த அறைத் தடுப்புகளை எல்லாம் எடுத்துட்டு ஒரே ஹால் போல மாற்றி, நமக்குத் தேவையான  வசதிகள்  இருக்கும்படி மாத்திக்க  ஒரு அஞ்சு மாசம் ஆச்சு.  இந்த வேலைகள் எல்லாம் கூட வீகெண்ட்களில்தான். முடிந்தவர்களின்  உடலுழைப்பால் ஒரு வழியாக  எல்லாம் சரியாச்சு. 

என்னைப்பொறுத்தவரை இந்த இடத்துக்கு ஒரு சிறப்பு  என்னன்னா.....  எங்க யோகா வகுப்பு நடக்கும்  வளாகத்தில்தான் இதுவும் !  

இதோ நாளைக்குக் கோவிலின் திறப்பு விழா!  டிசம்பர் 11, 2022.    நியூஸியின் தெற்குத்தீவின்  முதல் பிள்ளையார் கோவில் ! 

அதிகாலை 6 மணிக்கு சங்கல்ப பூஜையுடன் ஆரம்பம். நம்மவரின் உடல்நிலை காரணம் அவ்வளோ சீக்கிரம் கோவிலுக்குப் போக இயலாது.  விவரத்தைச் சொல்லி ஒரு ஒன்பது மணியளவில் வந்து கலந்துக்கறதாச் சொன்னேன்.அதே போல் ஆச்சு.
கோவில் என்ற சொல்லுக்கு ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்யுது !  ஏராளமான புதுமுகங்களைப் பார்த்தேன் ! நம்ம பதுமன் ஐயர் அவர்களின் வழிகாட்டுதல்படி நேபாள் நாட்டு பண்டிட், நம்ம நண்பரான கேசவன் இருவரும் பூஜைகளில்  உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஹோமம் நடத்தும் ஏற்பாடு இப்போ !  கடவுளர்களின் திருவுருவங்கள்  அபிஷேகத்துக்காகக் கங்கைக்குடத்துடன்  மேடையில் வரிசைகட்டி நின்னுருந்தாங்க.


யாரோ ஒரு  பக்தர்,  ஒரு அழகான  க்ருஷ்ண விக்ரஹத்தைக்  கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்துருக்கார். !  எனக்குப் பரம திருப்தின்னு தனியாகச் சொல்லவேணாம்தானே :-)




அபிஷேகம், அலங்காரம், வேதபாராயணம் எல்லாம்  நியதிப்படி நடந்து,  பத்கினாறுவகை உபச்சாரங்களின் அங்கமான பஜனை, பாட்டு, நடனம் என்று எல்லாம்  அமர்க்களம் போங்க ! 

மொத்தத்தில் நாங்க எல்லோருமே தேன் குடித்த நரிகளாய்  மயங்கி, மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கிட்டு இருந்தோம் !  பூஜைகள் முடிஞ்சு மஹாப்ரஸாதம் என்ற வகையில் அன்னதானம் ! மனமும் வயிறும் நிரம்பப் புள்ளையாரை வாழ்த்தி வணங்கினோம்.



ஆச்சு. கோவில் வந்தாச்சு. இனி தினமும் கோவிலைத் திறந்து வச்சு விளக்கேத்தி வைப்பது ரொம்ப முக்கியமில்லையோ !  தன்னார்வலர்களாக  ஏழு குடும்பங்கள்  இப்போதைக்குப் பொறுப்பெடுத்துருக்காங்க.  கோவில்  திறந்திருக்கும் நேரம் முடிவு செய்து  நம்ம சமூகத்திற்கு  அறிவிச்சோம். 
வெள்ளிக்கிழமைகளில் நம்ம நேபாள் நாட்டு பண்டிட் வந்து பூஜைகளை நடத்திக்கொடுப்பார்.  ஒரு வழியா அவரை நம்ம தமிழ்நாட்டுக் கோவில் வழக்கத்துக்கு  மாற்றியாச்சு :-)
நமக்கு புதன் கிழமைகளில் யோகா வகுப்பு இருப்பதால், நாங்க  வகுப்பு முடிஞ்சதும் கோவிலுக்கு வந்து தரிசனம் செஞ்சுக்குவோம்.  வகுப்பு முடிஞ்சதும் யோகா வகுப்பு மக்களிடம் 'யார் யார் கோவிலுக்கு வர்றீங்க?' ன்னு ஒரு (கூவல்) அழைப்பு விடுவேன்.  அவரவர்  வசதியைப் பொறுத்து  ஒரு சின்னக்கூட்டம்  கிளம்பும்.  நம்ம புள்ளையாருக்கும்  போரடிக்காமல் கொஞ்சம் நல்லாத்தான் இருக்குமுன்னு என் நம்பிக்கை.
புள்ளையாருக்கு அருகம்புல் இருந்தால்  நல்லதுன்னு கொஞ்சம் தீவிரமா ஆராய்ஞ்சதில்  பெர்மூடா க்ராஸ் என்றதுதான் நம்ம அருகம்புல் னு விவரம் கிடைச்சது.  நம்மூரில் இது கிடையாது. வலை வீசியதில் ஹேமில்டன் நகரில் (வடக்குத்தீவு ) இருக்குன்னும், ரெடி லான் வகையா அவுங்க சப்ளை செய்யறாங்கன்னும்  தெரிஞ்சது.  ஒரே ஒரு சதுர மீட்டர் கொடுப்பாங்களான்னு  தயங்கித்தயங்கி விநயமாக் கேட்டதில்,   தெற்குத்தீவுக்கு அனுப்புவது சிரமம். அதுவும் அவ்ளோ சின்ன அளவுன்னா.....  மூச் னு சொல்லிட்டாங்க.  ஆனால்  ஆக்லாந்து நகரில் ஒரு புல்விதைகள் விற்கும் இடத்தைச் சொல்லி அங்கே கேட்டுப்பாருங்கன்னாங்க. 
அதன்படி கேட்டதில் 'அனுப்பறோம் எத்தனை கிலோ வேணும்?'  கேள்வி.   ஒரு நூறு...........   கி.......ராம்.  உள்ளூற உதறல்.  ஆனால் ஆச்சரியமான பதில்  வந்தது!  அனுப்பறோம். அட்ரஸ்  சொல்லு !  சொல்லியாச்.  விதையும் வந்தது.... கொஞ்சம் பரிசோதனை முறையில்  தூவி விட்டதில் புல்லும் முளைச்சது.  புள்ளையாருக்கும்  சமயங்களில் மாலையாகவும்,  சின்னக்கொத்தாகக் கையில் பிடிச்சுக்கவும்  லபிச்சது !

இப்பெல்லாம் நம்ம கோவிலில் ப்ரதோஷம், சங்கடஹர சதுர்த்தி,  சஷ்டி,  சத்யநாராயணா பூஜைன்னு ஒவ்வொன்னா ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வர்றோம்.  இனி வீகெண்டுக்குன்னு நேர்ந்து விட வேண்டியதில்லை. பொங்கல்,  தைப்பூசம், வருஷப்பிறப்புன்னு பண்டிகைகளும், விழாக்களும் நல்ல முறையில் நடக்குது. நம்ம கோவிலுக்கு வயசு ஏழுமாசம் !  அடுத்த விழா ஆடிப்பூரம் !  
எல்லோருக்கும் புள்ளையாரின் அருள் கிடைக்கவேணும் என்று வேண்டியிருக்கேன் !





6 comments:

said...

பிள்ளையாரும் வந்து கோவில்கொண்டு அருள்பாலிப்பதில் மகிழ்ச்சி.

said...

பிள்ளையார் வந்ததில் மகிழ்ச்சி.  அறிவிப்புப் பலகையில் கோவில் திறந்திருக்கும் நேரம் திங்கள் முதல் சனி வரை இந்த நேரம், ஞாயிறு மட்டும் இந்த நேரம் என்று சுருக்கமாக எழுதி இருக்கலாமே...!

said...

அருமை நன்றி

said...

வாங்க மாதேவி,

கடைசியில் புள்ளையார் கோவில், ஒன்னுக்கு ரெண்டா வந்துருச்சு !!!! விவரம் இன்றையப் பதிவில் :-)

said...

வாங்க ஸ்ரீராம்,

கோவிலுக்கான வலைப்பதிவுகளைச் செய்து கொடுக்கும் அட்மின் போட்டு வச்சதே இது !

அவுங்க ஐடியா என்னவோ !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !