Friday, June 09, 2023

மனதின் உறுதி.............. கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 58

நம்மாண்டைதான் இப்போ BP மெஷீன் இருக்கேன்னு பொழுது விடிஞ்சதும் ஒரு முறை, சாப்பாட்டுக்குப்பின் ஒரு முறை, அப்புறம் எப்பெப்போ தோணுதோ அப்பெல்லாம்னு  'அளந்துக்கிட்டு' இருக்கோம்.இன்னும் 24 மணி நேரம்தான் இங்கே....  ரொம்ப சுத்தாமல் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு நல்லபடியா வீடு போய்ச் சேரும் வழியைப் பார்க்கணும்.
கொன்னை பூத்துருந்தது............. நல்ல சகுனம் !       எனக்கு லோட்டஸில் பிடிச்ச ப்ரேக்ஃபாஸ்ட் இன்றோடு முடிவுக்கு வருது ! நல்லா சாப்பிட்டுக்கணும். ஆச்சு !
முந்தாநாள் முரளீஸ்லே இருந்து வாங்கிவந்த மாதுளைகளில் ஒன்னு பாக்கி இருக்கு.  சோம்பல்படாம உரிச்சு நம்ம ஆஞ்சிக்கு நைவேத்யம் பண்ணினேன். 
பகல் சாப்பாடு வேணாமுன்னார் நம்மவர்.  ஓக்கே.... ஃப்ரிட்ஜ் காலி செய்யணும்! தயிர், ஜூஸ்,   திறந்து வச்ச பொதிகளாய் சுஸ்வாத் சமாச்சாரங்கள் எல்லாமும் கூட இருக்கு. கொண்டுபோகறதுக்குக் கொஞ்சம் வாங்கிக்கலாமுன்னா.... எங்கே ? எடை கூடுமுன்னு பயம்.  போகட்டும்.. இந்த முறை இப்படி....
மூணுமணி போல தம்பியும் மனைவியும் வந்தாங்க,  எங்களுக்குப் புதுத் துணிகளும், ஆப்பிள் மாதுளைன்னு பழங்களும்,  பூவுமாய்......   உனக்குப் பிடித்தமான பச்சைன்னு ஆசை காமிச்சும்கூட....    ஊஹூமுன்னு தலையாட்டினேன்.  நானே என் மனவுறுதியைப் பாராட்டிக்கிட்டேன் :-)   
பொட்டி மூடியாச் !  அப்படியே இருக்கட்டும். அடுத்தமுறைக்கு வச்சுக்கறேன். பூவும், வாழைப்பழமும் போதும்.  பாவம்  நம்ம ஆஞ்சு வாடின பூவோடு இருக்கார்.





தம்பி மகனுக்கு,  ஒரு பொண் ஜாதகம் பொருந்தி இருக்கு. அவர் அடுத்த மாதம் லீவில் வரும்போது பெண் பார்த்து முடிவு செய்யணுமுன்னு  சொல்லி, பெண் படத்தைக் காமிச்சாங்க.  அட்டகாஸமா இருக்காள் !   நல்லபடி நடக்கட்டும்.

அவுங்க கிளம்பிப்போனதும்,  நாங்களும் கோவிலுக்குப் போய் வரலாமுன்னு புறப்பட்டோம்.  கீழே  வந்து, நாளைக்குக் காலை செக்கவுட் என்பதால் பில் ரெடி பண்ணி வைக்கச் சொல்லிட்டு வரவேற்பில் இருந்தவங்களோடு  சில க்ளிக்ஸ் ஆச்சு. நாம் திரும்பி வரும்போது ட்யூட்டி முடிஞ்சு போயிருப்பாங்க.  காலையிலும்  லேடீஸ் வர்றது ஒன்பது மணிக்குத்தான்.
மதியழகன்   இருந்தார். இன்றைக்கு பத்துமணி வரை   ட்யூட்டியாம்.  நாளைக்குக் காலையில் நாம் கிளம்பறோமுன்னதும்,  'காலையில் சீக்கிரமா வந்துடறேம்மா'ன்னார்.
முதலில் நம்ம அநந்தபதுமனை  ஸேவிச்சுக்கிட்டு, போயிட்டு வர்றோமுன்னு சொல்லிக்கணும்.  நெருங்கிய தோழி,  மகளுக்குக் கொஞ்சம்  உடல்நலம் சரியில்லைன்னாங்க.  கவலையே படாதீங்க. கோவிலில் அர்ச்ச்சனை பண்ணலாமுன்னு சொன்னேன்.   பதுமனிடம்  வேண்டினால் எல்லாம் நல்லபடி நடக்கும் !  


நம்மவருக்கும், தோழி மகளுக்குமாய்  ரெண்டு அர்ச்சனைச் சீட்டுகளும், பக்கத்துக்கடையில் ரெண்டு அர்ச்சனைத் தட்டுகளும் வாங்கி  நல்லபடியாய்  பூஜை நடந்தது.  ஒரு அரைமணி நேரம் 'அவன்' முன் அமர்ந்து பேசினேன்.  போயிட்டு வான்னு சொன்னானோ ? . மனசுக்கு இதமாக இருந்தது.  வெளியே வந்து  சிவன் சந்நிதிக்கும் போய் கும்பிட்டபின்  கிளம்பி  வரும்போது,  பார்த்தஸாரதியைப் பார்த்துட்டுப்போகலாமுன்னார் நம்மவர்.  கரும்பு தின்னக்கூலியா ?





வழக்கம்போல் நல்லபடி தரிசனம் கொடுத்தார் ! வெளியே ப்ரகாரத்தில் நின்னு பார்த்தாலும் பளிச் ன்னு தெரியும் விதம் இங்கே.....  (இருட்டில் நின்னு, ஊழியரின் அக்ரமங்களைக் கண்டுக்காமல் இருப்பதெல்லாம் இங்கில்லையாக்கும் !)

செல்ஃபோன் கவர் ஒன்னு  நம்மவருக்கு வாங்கிக்கணுமாம்.  ஒரு கடையில் விசாரிச்சால்  சரியானதாக இல்லை.  ஆச்சு....  ஊர்லே போய்ப் பார்த்துக்கலாம்தானே  ?  வாசல் கடையில்  தளதளன்னு தக்காளி....   இருபதே ரூ !!!! (ஐயோ.... ஊர்லே போய் சமைக்கணுமே...........  ) 
டின்னருக்கு ப்ருந்தாவன். நெருங்கிய தோழியின் கணவரின்  பீமரதசாந்திக்கு இங்கேதான் விருந்து.  இப்போ அவர் பெருமாளாண்டை போயிட்டார்.  மனசு இருக்கே.... அது ரொம்ப விசித்திரமானது.  ஒரு காட்சி கண்ணில் பட்டால்  அந்த  இடத்தில் நடந்த அத்தனை சமாச்சாரங்களையும்  கொண்டுவந்து  குவிச்சுருது.....பாருங்க....

விஜிக்கு ச்சனா பட்டூரா, நம்மவருக்குப் பூரிக்கிழங்கு, எனக்கு ரவாதோசை. டிஸ்ஸர்ட்டுக்கு ரஸ்மலாய்.  பூரியைக் கொஞ்சம் கரிச்சு வச்சுருக்காங்க. என்னமோ போங்க....  வரவர எல்லா ரெஸ்ட்டாரண்டுகளிலும்  தரம் குறைஞ்சுதான் போயிருக்கு.... ப்ச்.




லோட்டஸுக்கு எட்டரை மணிக்கே திரும்பிட்டோம்.  விஜி நல்ல பையர்.   வேலையா , மேல்படிப்பான்னு குழப்பத்தில் இருக்கார்.  சின்ன வயசுலே மேலே படிக்கறதுதான் நல்லதுன்னு  சொன்னேன். நல்லா இருக்கட்டும்.  நாளைக்கு வேற ட்ரைவர், பெரிய வண்டி கொண்டு வருவார்.  ஏர்ப்போர்ட் ட்ராப்தான். 

வரவேற்பில்  பில் ரெடியா இருந்தது.  செட்டில் செஞ்சுட்டு அறைக்குப் போனோம்.  ஃபைனல் பேக்கிங் முடிக்கணும்.  அந்த காயத்திருமேனியால் கொஞ்சம் சண்டை வந்தது. நல்லவேளை காயம் வர்ற அளவுக்குப் போகலை. பத்திரமா நான் பேக் பண்ணி என்னோடவே வச்சுக்கறேன்னாலும் கேக்கவேயில்லை. 

எடை குறைப்புன்னு  புது லுங்கிகள், இன்னும் சிலபொருட்கள் எல்லாம் 'நம்மவர்' பொட்டியில் இருந்து வெளியே வந்தன. மதியழகனுக்கு எடுத்து வச்சார். 

பாண்டுரங்கன் & ருக்மாயி தம்பதிகளைக் காசிக்குப் போகுமுன்னேயே பக்காவாப் பொதிஞ்சு வச்சுருந்தோம். இப்போ நம்ம நிக்கற லக்ஷ்மியை, பபுள் ராப் போட்டு அடிபடாதவிதம்  சுத்தி டேப் போட்டுக் கொடுத்தார். என்னுடைய கேபின் பேகில் இவுங்க வர்றாங்க.
 
நம்மவரின் கேபின் பேகில்  வீடு போய்ச் சேரும்வரை தேவைப்படும் மாற்று உடைகள். & டாய்லெட்ரி.   ஆஞ்சியை செக்கின் பேகில் வச்சோம். எல்லாம் ரெடி.

பெட்டிகளைப் பொறுத்தவரை எனக்கொரு மனத்தாங்கல் இருக்கு. என்னதான் லைட் வெயிட்னு சொன்னாலும் நாலைஞ்சு கிலோ வந்துருது காலிப்பெட்டிக்கே!  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுக்கும் முப்பது கிலோவில் அஞ்சு இதுக்கே போயிருது. ஊருக்கு வரும்போது ஆளுக்கு ரெண்டுன்னு நாலு பெட்டிகளால் ஒரு பதினெட்டுகிலோவரை பெட்டிகளுக்கே போயிருது பாருங்க....  ஒரு ஒன்னரை இல்லே ரெண்டு கிலோவில் பெட்டிகள் தயாரிச்சால் நல்லா இருக்குமே.... 

உள்ளூர் பயணத்தில் 15 கிலோதான் அனுமதி என்பதால் அந்த சைஸ் பெட்டிகள் வேற கொண்டு போகவேண்டி இருக்கு. இதுலே என்னத்தைன்னு நான் ஷாப்பிங் செஞ்சுக்கறது ?  23 கிலோவுக்கு மேல் பொட்டியின் எடை இருக்கக்கூடாதுன்னு ஏர்லைன்ஸ் சொல்லுது. தூக்கி வைக்கும் பணியாளர்களுக்குக் கஷ்டமாம்.  (பேகேஜ் ஹேண்ட்லர்ஸ் வீடியோ ஒன்னு பார்த்தேன்.  தூக்கி வைக்கறதெல்லாம் இல்லையாக்கும். தூக்கிக் கடாசறதுதான் உண்மை ) இப்படி ஒவ்வொன்னாப் பார்த்துப் பார்த்துத்தான் பயணம் செய்யணும். முந்தாநாள் பாண்டிபஸாரில் ஒரு பெரிய பெட்டி ஒன்னும் வாங்கவேண்டியதாப் போச்சு. நம்மவருக்குப் பெட்டி,  பைகள் எல்லாம்  ரொம்பவே ஃபேவரிட் ஐட்டம்ஸ் என்பதால்  கப்சுப்.  


முந்தி ஒரு காலத்தில்  ராத்ரி ஃப்ளைட்டில்தான்  இந்தியாவில் இருந்து கிளம்புவோம்.  சிங்கை ஹொட்டேல்களில் செக்கின்  டைம் எல்லாம்  பகல் மூணுமணி ஆக்கினதில்,   பகல் நேர ஃப்ளைட்டுக்கு மாறிட்டோம். ஒரு வகையில் நல்லதாப் போச்சு.  தூக்கம் கெடாது.  இப்பெல்லாம் சிங்கையில்,  ஹொட்டேல் வாடகை எல்லாம் அநியாயத்துக்குக் கொள்ளையாகப் போனதால்  ஒருநாள் தங்கலே போதுமுன்னு இருக்கு.  நேத்து ஒரு ஸர்வேயில் உலகத்தில் உள்ள பத்து  எக்ஸ்பென்ஸிவ்  நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரும் இருக்கு.  

நம்ம லோட்டஸில் 24 மணிநேர செக்கின்!!! எவ்ளோ வசதி பாருங்க !


தொடரும்......... :-)


17 comments:

said...

அருமை நன்றி

said...

போன மாதம் விடுமுறை எடுத்து இப்போ இங்கு வந்து பழைய பதிவுகளை படிக்கும் பொழுது கொஞ்சம் பக்குனு இருந்திச்சு மா ...நல்ல வேளை எல்லாம் நல்லபடியா நடந்துச்சு...ஒவ்வொருமுறையும் ஒரு அனுபவம் இல்ல..

எப்பவும் அவன் துணை மட்டுமே நமக்கு துணை ..

said...

Teacher, regarding suitcase suit to foreign travel you get @ bag plus , anna nagar 2nd avenue, near chitamani signal you can get good discount, 3 to 5 year warranty, less weight more durable, we bought 2 item ( small & medium) total 5k we 4 taken those 2 for 5 day travel so big u may get <7k American tourister, etc there suitable for foreign tour next time try to buy

said...

கிளம்பும் வைபவத்தை படிப்படியாய் விளக்கி இருக்கிறீர்கள்.  இருக்கும் இடத்துக்குப் போறோம்னு சந்தோஷமா இருக்குமா?  இந்தியாவை விட்டு போறோம்னு வருத்தமா இருக்குமா?  ரெண்டும்தான் என்று சமாளிக்கக் கூடாது!

said...

அடையாறு பத்மநாபன், திருவல்லிக்கேணி பெருமாள் சேவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. குறையொன்றுமில்லை.

எந்தப் பிரச்சனையுமில்லாமல் கிளம்பினதே சந்தோஷம். இந்தத் தடவை ரொம்ப பிரயாணமெல்லாம் வேண்டாம், தரிசனம் பண்ணினதே போதும், அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என பெருமாள் நினைத்துவிட்டார் போலிருக்கு.

said...

கோபால் சார் ஒரு வார்த்தை எழுதினதில்லை. பேசுவதெல்லாம் (எழுத்தில்) நீங்கள்தாம். இருந்தாலும் அவருக்கு ஒன்று என்றால் மனது வருத்தப்படுகிறது. சிங்கையில் சஹஸ்ரநாம்ம் படிக்க வாய்ப்பில்லையா?

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

ஆமாம்ப்பா.... ஒரு நாளும் ஒன்னுபோல இருப்பதில்லை. இதுலே பயணம், அனுபவம்ன்னா சொல்லவே வேணாம்.... ப்ச்....

கூட இருந்து காப்பாத்தின கடவுளுக்குத்தான் நன்றி !

said...

வாங்க அனந்து,

இப்ப வாங்கினதும் அமெரிக்கன் டூரிஸ்டர்தான். ஏற்கெனவே மூணு நம்மிடம் இருக்கு. ஆனாலும் பயணங்களில் எதாவது ஒன்னு வாங்கவேண்டிதான் இருக்கு.
பெரிய பெட்டிகள் வாங்கினாலும் 23 கிலோ வுக்கு மேல் வைக்கக்கூடாதுன்னு ஒன்னு இருக்கே.... ப்ச்....

said...

வாங்க ஸ்ரீராம், முந்தியெல்லாம் இந்தியா விட்டுப்போறோமேன்னு வருத்தமா இருக்கும். இப்பெல்லாம் 'போதும் போ..... இவ்ளோ பார்த்ததே அதிகம்'னு ஆகி இருக்கு.

அதிலும் இந்த முறை எப்போடா வீடு போய்ச் சேருவோமுன்னு ஆகிப்போச்சு.

ஆனால் எந்தக் கவலைன்னாலும், செக்கின் பண்ணி போர்டிங் பாஸ் வாங்கும்வரைதான். அதுக்குப்பின், ஊர் வந்ததும் நமக்காக வரிசைகட்டி நிக்கும் வேலைகளை நினைச்சுப் பார்க்கும்படி ஆகிரும்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

என்னவோ திட்டம் நாம் போட்டாலும், அதை நிறைவேற்ற 'அவன்' மனசு வைக்க வேணாமோ ?

இந்த முறை இப்படின்னு முடிவு செஞ்சுட்டான். எல்லாம் நம்ம நன்மைக்காகத்தான் இருக்கும் !

சிங்கையில் எப்படியாவது ஒருநாள் தங்குவதே சுப்ரபாதத்துக்கும், விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கும் தான். அதை நிறைவேற்றிய அன்பு மனசின் பாதம் பணிகிறேன்.

said...

பயணத்தின் தகவல்கள் அனைத்தும் சிறப்பு. பெட்டிகள் எடை...... கடினம்! ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் 15 கிலோ பிரச்சனை தான்...... அதிலும் தில்லி விமான நிலைய கெடுபிடிகள் சில சமயம் அலுப்பைத் தரும்.

said...

ஓ இப்ப்தான் கிளம்பறீங்களா...அப்ப இப்ப சிங்கையில் இல்லையா? அப்ப இங்க தான் உங்க ஆனிவெர்சரி...நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் போல!!

அங்கும் சுப்ரபாதம் சகஸ்ரநாமம் எல்லாம் நல்லபடியாக நடந்து ஊருக்குப் ப்யணம் நல்லபடியாக அமையும். கோபால் அண்ணாவும் நன்றாக ஆகிவிடுவார். ஏல்லாம் சுகமே நலமே!

கீதா

said...

@கீதா,

மறுபடி குழப்பம். இப்போ எழுதும் பதிவு ஆறு மாசத்துக்கு முந்தி இந்தியப்பயணத்து விவரங்கள்.

அனிவர்ஸரி, இந்த மாசம் இங்கே நியூஸிலாந்தில் !
அது தனி, இது தனி !

said...

அனந்தபத்மன் அருளால் நலமாகி சிங்கை பயணம் மகிழ்ச்சி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அந்தப் பதினைஞ்சு கிலோவில் சின்னப்பெட்டியே மூணு கிலோ வந்துருதே..... இனிமே துணிப்பையில் கொண்டு போகணும். அப்போ பதினைஞ்சு முழுசாக் கிடைச்சுறாதா !!!!

said...

வாங்க மாதேவி,

உண்மை. பெருமாள் அருளால் தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போயிற்று !