எப்படா ரெண்டு வாரம் ஆகுமுன்னு துடிச்சுக்கிட்டு இருந்தாரா.... டிசம்பர் 12 தேதி பொழுது விடிஞ்சதும், ஆச்சுன்னார். டாக்டர் ஒரு மாசம்னு சொன்னாங்களே...... கூகுளில் பார்த்தால் ரெண்டு வாரம் போதுமாம். (நிஜ டாக்டரை விட கூகுள் டாக்டருக்குத்தான் மதிப்பு கூடுதலோ ? ) ஏற்கெனவே சம்பவம் நடந்துதான் ஒரு மாசத்துக்கு மேல் ஆயிருச்சே!
நின்னு சண்டை போட என்னால் முடியலை. வீட்டு வேலை வெளிவேலைன்னு ஏற்கெனவே நொந்துபோய்க்கிடக்கேன். ஆனால் ஒரு கண்டிஷன், சின்ன வண்டிதான் எடுக்கணும். சட்னு ஏதாவதுன்னால்.... நான் சமாளிச்சுருவேன். சரியா ?
ஒத்துண்டார் !
உக்கார்ந்திருந்தால் மயக்கம் தலைசுற்றல் இல்லையாம். எழுந்து நிக்கும்போதுதான் சிலசமயம் (!) லேசா.......... சரி...... தொலையட்டும். இன்றைக்கு டென்டல் அப்பாய்ன்ட்மென்ட் வேற இருக்கு. நம்ம தோழியின் க்ளினிக்தான். நம்ம பேட்டையின் மால், மாடியில்தான் போய் பல்லைக் காமிக்கணும்.
மாலில் க்றிஸ்மஸ் அலங்காரங்கள் அட்டகாசமா இருக்கு. சாண்ட்டாவும் விஸிட்டர்ஸ் இல்லாம போரடிச்சுக்கிட்டு உக்கார்ந்திருந்தார். அவராண்டை போய் குசலம் விசாரிச்சுட்டு, மெர்ர்ரிக்றிஸ்மஸ்னு வாழ்த்திட்டு வந்தேன். நம்ம சொந்த சாண்ட்டா நமக்கிருக்கார். அது போதும். பல்வேலை ஆச்சு. வீட்டுக்குப் பத்திரமாக வரும்வரை எனக்குக் கொஞ்சம் திக் திக்குன்னுதான் இருந்தது. ஆனால் காமிச்சுக்கலை.
போனபதிவில் நம்ம புள்ளையார் கோவில் பத்திச் சொல்லியிருந்தேனில்லையா? நம்மூர்லே இன்னொரு புள்ளையாரும் வந்துருந்தார். தனியார் கோவில். இவுங்களும் நம்ம நண்பர்கள்தான். மனைவிக்குப் பிள்ளைப்பேறு நிகழும்போது ஏற்பட்ட சிக்கலில் இருந்து காப்பாத்தச் சொல்லிப் புள்ளையாரை நினைச்சுக் கும்பிட்டுக் 'கோவில் கட்டறேன்'னு வேண்டிக்கிட்டவர் இவர் . மஹாபலிபுரத்தில் புள்ளையார் சிலை உருவாகி, நம்மூருக்கும் வந்து சேர்ந்தாச்சு. வீட்டு வளாகத்திலேயே ஒரு அறை கட்டி, அங்கே பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஆகஸ்ட் மாசம் (2022) 17 ஆம்தேதி, காலை முஹூர்த்தக்கால் நடும் வைபவத்துக்கு நம்மை அழைச்சுருந்தாங்க.
மேலே படம்: கோவில் உடமையாளர்கள்.
சீனியர் சிட்டிஸனாக விழாவை ஆரம்பிச்சு வச்சேன். சம்ப்ரதாயப்படி எல்லாம் அனுசரிச்சு அஞ்சு நாள் விழாவாக இந்த மஹாகும்பாபிஷேகம் நடந்தது. ஆக்லாந்து புள்ளையார் கோவிலில் இருந்து சந்த்ரு குருக்கள் வந்து அருமையாக நடத்திக்கொடுத்தார்.
https://www.facebook.com/1309695969/videos/1017734428905263/
அன்பு விநாயகர் அட்டகாசமாக இருக்கார். அஞ்சடி உயரம், மூணரை டன் எடை ! முகமும், குறிப்பாகக் கண்களும் கொள்ளையழகு!
ஊர்திரும்பியபின் இன்னும் கோவிலுக்கே போகலையேன்னு.... சாயந்திரம் நம்ம வீட்டு ராஸ்பெரி பழங்களோடு போய் புள்ளையாரைக் கும்பிட்டு வந்தோம். நம்ம வீட்டிலிருந்து ஒரு ரெண்டு கிமீ தூரம்தான் ! இந்தக் கோவிலின் நேரம் , திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6 முதல் 8 , சனிக்கிழமை காலை 9 முதல் 11, ஞாயிறு பொதுமக்களுக்கு லீவு.
கோவிலே இல்லைன்னு ஒரு காலத்துலே அழுதுக்கிட்டு இருந்ததுக்கு இப்போ ஏழு கோவில்கள் நம்மூர்லே என்றால் நம்ப முடியுதோ !!!! (இதுலே ரெண்டு , தனியார் கோவில்கள். ஒன்னு ஆஞ்சிக்கு, ஒன்னு புள்ளையாருக்கு )
இந்த புதன்கிழமைதான் நம்ம யோகா வகுப்புக்கு இந்த வருஷத்துக்கான கடைசிநாள். ஒன்னரை மாசம் லீவுக்குப்பின் ஃபிப்ரவரி மாதம் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும். க்றிஸ்மஸ் பார்ட்டிக்குத் தனியா ஒரு நாள் ஒதுக்காமல் கடைசிநாள் வகுப்பில் கொஞ்சநேரம் களவாடிக்கலாமுன்னு முடிவு செஞ்சோம். இங்கெல்லாம் நவம்பர் கடைசி முதலே க்றிஸ்மஸ் பார்ட்டின்னு அமர்க்களம் ஆரம்பமாகிரும். ஆஃபீஸ், கம்பெனிகள், கடைகள், வியாபார நிறுவனங்கள்னு எத்தனை இருக்கு, இல்லையோ..... அதனால் பொதுவான ஹால்கள் எதுவுமே வாடகைக்குக் கிடைக்கறது கஷ்டம்..... ஊருக்குமுன்னால் புக் பண்ணி வச்சுருவாங்க. இவ்ளோ ஆர்வம் சர்ச்சுக்குப் போவதில் இருக்குமோ ? ஊஹூம்....
வெறும் அரைமணி நேரம் ஒதுக்கினதால் விஸ்தாரமான டின்னர் வேணாமுன்னு முடிவு பண்ணோம். ஆளுக்கொரு ஸ்நாக்ஸ் வகை கொண்டுபோனால் ஆச்சு. இதைப்போல விசேஷ நாள் பார்ட்டின்னால்..... எங்களோடு, எங்கள் குடும்ப அங்கங்களும் கலந்து கொள்ளலாம். பார்ட்டி நல்ல மஜாவாப் போச்சு. என்ன ஒன்னு 40 நிமிட்டுக்குள்ளே எல்லாத்தையும் முடிக்கவேண்டி இருந்தது. அடுத்த புக்கிங் இருக்கறவங்க வர்றதுக்கு முன்னால் இடத்தைக் காலி செஞ்சுறணும்.
ஆட்டோகேட்டுக்கான புது ஸர்க்யூட் போர்டு வந்துருச்சுன்னு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டு மறுநாள் வந்து அந்த வேலையை முடிச்சுட்டுப் போனாங்க. ரெண்டு வாரமா நாமே கையால் திறந்து வச்சு, கையால் இழுத்துமூடின்னு ஒரே ஸல்யம். ஈசி வாழ்க்கைக்குப் பழகிட்டால் சின்ன வேலைன்னாலும் பெரிய கஷ்டமாத் தோணுது. ப்ச்....
கார்த்திகை போய் மார்கழி பொறந்தாச்சு. நம்ம ஜன்னுதான் நமக்கு ஆண்டாள் ! அலங்காரப்ரியை ! நம்ம புள்ளையார் கோவிலிலும் மார்கழி முதல் நாள் பூஜை நடந்தது. வெள்ளிக்கிழமையா அமைஞ்சதால் நம்ம நேபாள் நாட்டுப் பண்டிட் வந்து பூஜையை நடத்திக்கொடுத்தார். கோவில் மூடும் நேரம் (8.30 ) கடைசி ஆரத்தி எடுக்க எனக்கு ச்சான்ஸ் கிடைச்சது.
வீட்டுலே மற்ற வேலைகளைச் சிறுகச் சிறுகச் செஞ்சுக்கிட்டாலும் தோட்டவேலையும், வீடு பெருக்கும் வேலையும் கொஞ்சம் பாடாய்ப் படுத்திருது. பொதுவா தோட்டத்துலே புல்வெளிப் பராமரிப்புன்னு ஒருத்தர் ரெண்டு வாரத்துக்கொருமுறைன்னு வந்து புல் வெட்டிட்டுப்போவார். இந்த வருஷம் புதுச்செடிகளை வாங்க வேணாம். இருக்கறதைக் காப்பாத்தினால் போதும் என்று முடிவு செஞ்சோம். காய்கறி ஒன்னும் போடலை. அக்டோபர் கடைசியில் செஞ்சுருக்கணும். இப்போ டிசம்பர் பாதிக்குமேலே ஆச்சு. இனி வாங்கி வச்சாலும் பயன் இல்லை.
இந்த வீடு பெருக்க, நம்ம வீட்டில் சென்ட்ரல் வேக்யூம் இந்த வீட்டைக் கட்டும்போதே போட்டுருக்கோம். அந்த ஹோஸை இழுத்து எடுத்துக்கிட்டு வரவே என்னால் முடியாது. அதுக்கான இன்லெட்லே கனெக்ட் பண்ணறதும் இப்போக் கொஞ்சம் கஷ்டம். சோஃபா, பூந்தொட்டி அது இதுன்னு எல்லாம் இன்லெட்டை மறைச்சு இடம் புடிச்சுருக்குகள். சின்னதாக் கொஞ்சம் ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்யணுமுன்னா... சின்னதா ஒரு வேக்குவம் க்ளீனர் நல்லதுன்னு வாங்கி வச்சுருக்குதான். ஆனாப் பாருங்க இந்த வீடு பெருக்கும் வேலை நம்மவருக்கானது. அவருக்குதான் இப்போ உடம்பு சரியில்லையே....
ரோபோ ஒன்னு வாங்கினோம். அது நிதானமாப் போய்வந்து, போய்வந்துன்னு பெருக்குது. எப்படியோ வேலை ஆனால் சரி.
தோழி மகளின் கல்யாணம் நாம் ஊரில் இல்லாதப்ப நடந்தது. 'ரிஸப்ஷன் நவம்பர் ரெண்டாம் வாரம் வச்சுருக்கோம். அதுக்காவது கட்டாயம் வந்துருங்க'ன்னு சேதி அனுப்பினாங்க. இன்னும் இந்தியாவில்தான் இருக்கோம். நவம்பர் கடைசியில்தான் வர்றோம்னு பதில் அனுப்பியிருந்தேன். தோழியின் கணவர் எனக்குத் தம்பி முறை! 'யாவரும் கேளிர்' வகையில் நியூஸியில் ஏற்பட்ட சொந்தம்.
ஆனால் பாருங்க..... மாப்பிள்ளைக்குக் கோவிட் வந்துருச்சுன்னு நிகழ்ச்சியைத் தள்ளிவச்சுட்டாங்க. அதுக்கு நாம் போகணும்னு இருந்துருக்கு போல ! அந்த நிகழ்ச்சிக்கு மறுநாள் போனோம்.
இப்படி ஏதாவது ஒன்னு நம்மைச் சுத்தி இருந்துக்கிட்டே இருக்கு.... நாமும் முடிஞ்சவரை போய் வந்துக்கிட்டுதான் இருக்கோம்.
பக்கத்துவீட்டுக்கு ஒரு புதுக்குடித்தனம். பூனை வச்சுருக்காங்க. நம்மைப்பத்தித் தெரிஞ்சுக்கிட்டானோ என்னவோ ? மறுநாளே நம்ம வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்தான். ஏற்கெனவே ரெண்டு பேர் வந்து போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. ரஜ்ஜு பார்த்தால் விரட்டுவான் !
வீட்டுக்கு வந்ததுமுதல் ஒரு கணமும் பிரியாமல் ஒட்டிக்கிட்டே இருக்கான் !
8 comments:
பிள்ளையார் கொள்ளை அழகு. ரஜ்ஜுவின் பாசம் நெகிழ்ச்சி.
வாங்க ஸ்ரீராம்,
அதுவும் பக்கவாட்டுலே நின்னு பார்க்கும்போது குழந்தைக் கண்களாத் தெரியும் !ரொம்பவே அழகு !!!
ரஜ்ஜூ ..... செல்லம்!
பிள்ளையார் அழகோ அழகு போங்க. ரஜ்ஜு செம க்யூட். பின்ன எவ்வளவு நாள் பிரிஞ்சுருந்திருக்கான் அதான் ஒட்டிக்கிட்டே இருக்கான். புதுசா பூனாச்சுகளின் வரவு ரஜ்ஜுவுக்கு நல்ல பொழுது போகும்!!
கீதா
விவரங்கள் அனைத்தும் சிறப்பு. ரஜ்ஜூவின் பாசம் - ஆஹா...
பிள்ளையார் கொள்ளை அழகு. பார்க்க ஆனந்தம்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
நேற்றும் இதே பிள்ளையார் தரிசனம் அமைஞ்சது. ரொம்பவே அழகு!
ரஜ்ஜுவுக்கும் வயசாகிப்போச்சு. எங்கேயும் போறதே இல்லை. ஒட்டிக்கிட்டே இருக்கான்.
வாங்க கீதா,
குழந்தையில் இருந்தே ஒன்னா இருந்தால்தான் பாசம். இல்லைன்னா... அவ்ளோதான். இவனுடைய சாப்பாடைத்தான் அதுகளுக்கு தர்றோம் என்பதால் கண்ணில் கண்டவுடன் 'ஓடு' என்ற சவுண்டு கொடுப்பான். அதுகளும் ஓடிரும் :-) டைகர் ஒன்னு இவன் இருக்கானான்னு பார்த்துக்கிட்டே பதுங்கிப் பதுங்கி என் காலாண்டை வந்து நிக்கும். நானும் பாவமாச்சேன்னு இவனுக்குத் தெரியாமல் சாப்பாடு தருவேன்.
ஆனால் தொடக்கூடாதுன்னு கோபால் கத்துவார். தொட்டால் வீட்டுக்குள் வந்துருவானாம். ஆளாளுக்கு இப்படி ஒரு பயம் :-)
பிள்ளையார் அழகோ அழகு.
ரஜ்ஜு செல்லம் அன்பு நெகிழ வைக்கிறது.
வாங்க மாதேவி,
நம்ம ரஜ்ஜுவுக்கும் வயதாகி வருதே.... இப்பெல்லாம் ஒட்டிப்பிடிச்சே இருக்கான் !
Post a Comment