Friday, June 16, 2023

செங்கல்சூளை இருந்த இடமுன்னா..... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 61

இந்த செராங்கூன் ரோடு இருக்கும் பகுதிக்கு லிட்டில் இண்டியான்னு ஒரு பெயர் இருக்கு !   பெயருக்கேத்தாப்போல் கடைகளும் கோவில்களும் ரெஸ்ட்டாரண்டுமா அமைஞ்சும் இருக்கு ! இங்கெல்லாம் காலை பத்துமணிக்குத்தான் கடைகள் திறக்கறாங்க. அதான் ராத்ரி பத்து, பதினொன்னுவரை  திறந்துருக்கே !     

கடைகள் திறக்கு  முன் இந்தப் பகுதியில்   நடந்து போவது எனக்கு ரொம்பப் பிடிச்ச சமாச்சாரம். காலாற நடந்து கோமளவிலாஸ் வரை போய், அட்டகாசமான காஃபியை அனுபவிச்சுக் குடிக்கணும். 

ஆரம்பகாலத்தில் எப்படியோ, இந்தியக்கடைகள் எல்லாம்  சொல்லி வச்சாப்லெ இந்தப் பகுதியில் வர ஆரம்பிச்சு , அதே வழக்கம் அப்படியே இன்னும் இருக்கு. ஒரு சில சீனக்கடைகளும் இப்போ இங்கே  இருக்குதான். 1900 களில் இருந்தே தீபாவளி சமயத்தில் கடைகளை, விளக்குகளால்  அலங்காரம் பண்ணிக்கிட்டு இருந்துருக்காங்க.  1929 ஆம் வருசம், தீபாவளிக்குப் பொது விடுமுறைன்னு அரசு ஆரம்பிச்சு வச்சது.  வழக்கம்போல் கடைக்காரர்கள் இங்கெல்லாம்  அஞ்சு நாட்கள் தீபாவளியைக்  கொண்டாடுறாங்களாம் . ஒரே ஸேல் ஸேல் தான் போங்க !

அப்போ இந்த செரங்கூன் சாலை முழுசையுமே அலங்கரிச்சு  வைக்கிறாங்க.  அரசாங்கம் செலவு செய்யுதா இல்லை இதுக்குன்னு ஒரு கமிட்டி இருந்து ஏற்பாடு செய்யுதான்னு தெரியலை.  இந்த அலங்காரங்கள் எல்லாமே  தீபாவளி, க்றிஸ்மஸ், புத்தாண்டு , சீனப்புத்தாண்டு (அதான் தை அமாவாசை ) வரை  அப்படியே  இருக்கு !   நமக்கும் பார்க்கும்போதே ஒரு உற்சாகம் மனசுக்குள்ளே வந்துருது என்பதும்  உண்மை.  ஒவ்வொரு வருசமும்  என்னமாதிரி அலங்காரங்கள்  செய்வாங்களோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளூர்வாசிகளுக்கு இருக்கலாம் !
வேடிக்கை பார்த்துக்கிட்டே ஆறு நிமிட்டில் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வந்துருந்தேன். சிங்கையின் பழமையான கோவில்களில் ஒன்னு ! அப்போ இந்தக் கோவிலுக்குப் பெயர் சுண்ணாம்பு கம்பம் கோவில். !  செங்கல் சூளையும் சுண்ணாம்பு காளவாயுமா இருந்த இடம்தான் இது.  பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில்  கோவில் இப்படி இருந்துருக்கு!   பட உதவி  :  கோவில் வலைப்பக்கம்.
களிமண் உருவச்சிலையா இருந்த  காளியம்மன், 1908 ஆம் வருசம்,  இந்தியாவில் இருந்து கற்சிலையா வந்துட்டாள். அப்புறம் ஒரே வளர்ச்சிதான் !  ஒரு முப்பத்தியெட்டு வருசத்துக்கு முன்னால் நாங்க முதல்முறையா சிங்கப்பூர் போயிருந்தோம்.. அப்பக்கூடக் கோவில் கொஞ்சம் சுமாராத்தான் இருந்தது. செராங்கூன் ரோடுமே  ரெண்டு பக்கம்  திறந்த சாக்கடை ஓட, நிறைய ஓடு போட்ட கட்டடங்களாத்தான் இருந்தது.  சிங்கையில் வேலைசெய்யப் போயிருந்த இந்தியத் தொழிலாளிகளுக்கு  ஞாயித்துக்கிழமை, வார விடுமுறை என்பதால்....  இந்தக் கோவிலுக்கு வெளியிலும், தொட்டடுத்த  திறந்தவெளியிலும் கூடி உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பாங்க. நாங்களும் கூட அங்கே உக்கார்ந்து அவுங்க கதைகளையெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்துருக்கோம்.  எதிர்வாடையில் கவிதா வீடியோ கேஸட் கடை இருந்தது.  அங்கே போய்த் தமிழ்ப்படங்கள் வாங்கி வருவோம்.  இப்போ அதெல்லாம் அடியோடு மாறிப்போச்சு !


கோவிலுக்குள் போய்  காளி அம்மனைக் கும்பிட்டுக்கிட்டுக் கொஞ்சநேரம் மதுரைவீரன் சந்நிதியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருந்தேன்.  அப்புறம் மற்ற சந்நிதிகளுக்குப்போய் கும்பிட்டும் க்ளிக்கியும்  முடிச்சுட்டு அம்மனிடம் 'போயிட்டு வரேம்மா'ன்னு சொல்லிக்கிட்டுக் கிளம்பினேன்.








இந்தக் கோவிலில் இன்னுமொரு முக்கிய விஷயம் என்னன்னா....    உச்சிகால பூஜை முடிஞ்சு, கோவில் நடையைச் சாத்தறதில்லை.  செராங்கூன் ரோடுலே எப்பவும் நிறைஞ்சு வழியும் கூட்டத்துக்கும்,  முக்கியமாச் சுற்றுலாப்பயணிகளுக்கும் எப்பவேணுமுன்னாலும் அம்மனை தரிசிக்கவும், மதிய நேரம் அன்னதானம் ஸ்வீகரிக்கவும்  ரொம்பவே வசதி !






தொட்டடுத்த பக்கத்துத் தெருவில் பூக்கடையில் ஒரு முழம் மல்லிப்பூ.  கொஞ்சம் விலை ஏறிப்போச்சு. டாலர் ட்வென்ட்டி.    
கேம்பெல் லேன் தொடக்கத்தில் இருக்கும்  காய்கறி & பழங்கள் கடையை வேடிக்கை பார்த்துட்டு, அப்படியே ஜோதி புஷ்பக்கடையில்  அஞ்சு முழம் 'அன்றலர்ந்த' மல்லி,  அலங்கார தோரணம்னு  ஷாப்பிங் முடிச்சுக்கிட்டு, திரும்ப அந்த மூலைக்கடையில்  மாம்பழம், கொய்யாப்பழம், நுங்கு வாங்கிக்கிட்டு  ஹொட்டேலுக்குப் போயிட்டேன். 





'அதுக்குள்ளே வந்துட்டயேம்மா'ன்னு  கேக்கறார்.  பழம் எல்லாம் சாப்பிட்டு  முடிச்சோம்.  தோழி வர இன்னும் நேரம் இருக்கு. அதுவரை வலை !

 தோழி 'வந்துட்டேன்'னு சேதி அனுப்பியதும், கீழே போய்க் கூட்டி வந்தேன்.   ஒரு மணி நேரம் போல பேச்சும் சிரிப்பும்,  அப்பப்ப  வாட்ஸ் அப்பில்  பேசுனது போக  மிச்சம் இருந்த மூணு வருசத்துப் பேச்சும்.
பகல் சாப்பாட்டுக்குக் கிளம்பிப்போனோம். நம்ம முஸ்தாஃபா  நகைக்கடை பில்டிங் இருக்கு பாருங்க... அதுக்குப் பின்னால்  இருக்கு  நாகர்கோவில் ஆர்யபவன்.  போனமுறை சிங்கை எழுத்தாளர்கள் சித்ரா & ரமேஷ் ஜோடி, நம்மைக் கூப்பிட்டுப் போனாங்க. தாலி இல்லாதவருக்குத் தாலி, தோழிக்கு சப்பாத்தி, எனக்கு ரவாதோசை. எதுக்கு ரவாதோசை சொன்னேன்னு எனக்கே தெரியலை...... நெய்ரோஸ்ட்தானே பிடிக்கும் ?  ப்ச்....


சாப்பாடானதும் நம்மவரைக் கூட்டிவந்து அறையிலே விட்டுட்டு, நாங்க மட்டும் கிளம்பிக் கொஞ்சம்  சுத்தப் போனோம்.   எழுத்தாளர்(தமிழ், இங்லிஷ் என்று இரு மொழிகளில் ) ஓவியர்  ஜெயந்தி சங்கர்  ரொம்பவே பிஸியானவங்க.  ஆனாலும்  தோழிக்காக எல்லா வேலைகளையும் தள்ளிவச்சுட்டு சந்திக்கவரும் எளிமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். கொஞ்சம் தலைக்கனம் இருக்கப்டாதோ ?  மரத்தடிகால நட்பு.  மறக்காமல்  அமெரிக்கத்தோழியின் அன்பளிப்பான  சாவிச்சங்கிலியைக் கொடுத்துட்டு ஒரு  படமும் சாட்சிக்காக எடுத்துக்கிட்டேன் :-)  மூணு வருசமாக் காப்பாத்தி வச்சுருந்தேனாக்கும்.....

லிட்டில் இந்தியாவிலேயே கொஞ்சம் சுத்தல்.  சில கடைகளுக்குள் நுழைஞ்சு சின்னச் சின்ன  அலங்காரச் சாமான்கள்னு வாங்கிக்கிட்டு அப்படியே இளநீர்க் கடையில் போய் ஆளுக்கொரு இளநீரைக் குடிச்சுட்டு, ஒரு இளநீர் பார்ஸல் வாங்கிக்கிட்டோம்.
லேட் செக்கவுட் ஏற்பாடு செஞ்சுருந்ததால்  கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க முடிஞ்சது.  நாலு மணிக்குத்  தோழி , கிளம்பிப் போனாங்க. நாங்களும் நாலரைக்கு செக்கவுட் செஞ்சு, வாசலில்  டாக்ஸி பிடிச்சு சாங்கி போயாச்சு. 
போர்டிங் பாஸ் எல்லாம்  நேத்தே வாங்கிட்டதால் ....  நேரா இமிக்ரேஷன் முடிஞ்சு உள்ளே போயாச்சு.  வீல்சேர் உதவியாளர் வந்து கூட்டிப்போனார். வீல்சேர் பயனாளிகளுக்குன்னு தனியா ஒரு லவுஞ்ச் இருக்கு. அங்கே  உக்கார்ந்து போறவர்ற ப்ளேன்களை வேடிக்கை பார்க்கச் சொல்லிட்டு, நான்   போய் ஒரு கப்புச்சீனோ வாங்கி வந்தேன்.  


கொஞ்சநேரம் சுத்திட்டு வரச்சொன்னார். அன்புக்கணவர் சொன்ன பேச்சைத் தட்டாமல்  கேட்டு,  சின்ன ரௌண்ட் போயிட்டு வந்தேன். 



குறிப்பிட்ட நேரத்தில்  நம்மைக்கூட்டிப்போய் கேட்டில் விட்டார்  உதவியாளர்.  வண்டிக்குள் போய்  இருக்கையில்  உக்கார்ந்து, வண்டியும் கிளம்பிருச்சு !  இனி பத்தரை மணி நேரம் ஜெயில் வாசம்!

தொடரும்........ :-)









4 comments:

said...

இந்தியா போலதான் இருக்கிறது!

said...

வாங்க ஸ்ரீராம்,

அதுக்குத்தான் இந்தப் பகுதிக்குப் பெயரே லிட்டில் இந்தியா ! என்ன ஒரே வித்தியாசம்.... கொஞ்சம் சுத்தம் அதிகம்.

said...

செரங்கூன் கடைகளையும் சாலையையும் கண்டதில் மகிழ்ச்சி.

காளிஅம்மனை தரிசித்துக் கொண்டேன்.முன்பு காளிஅம்மனை தைப்பூசத்தில் பால் குடம் காவடியில் தரிசித்திருந்தோம்.

said...

வாங்க மாதேவி,

எத்தனை முறை சென்றாலும் இன்னும் அலுக்காத ஒரு ஊர் சிங்கையும் அதன் செராங்கூன் சாலையும்தான் !