பொழுது விடியும்போதே ரொம்பவே பாஸிட்டிவ் திங்கிங்..... பதினொரு மணிக்கு டாக்டரைப் பார்க்கணும். கிளம்பலாமுன்னுருவார். மூட்டையைக் கட்டலாம்.... சலோ!
ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு, பத்தரைக்கு வண்டியை வரச்சொல்லிட்டு.... தினசரியைப் பிரிச்சால்.... காசியில் தமிழ்ச்சங்க அறிவிப்பு ! ஆஹா...... யார் யார் தமிழகத்தில் இருந்து போறாங்களோ தெரியலையே.... என்ன இருந்தாலும் பாக்கியசாலிகள்தான் ! (நம்ம வித்யா சுப்ரமண்யம் போனாங்கன்னு அப்புறமா அவுங்க பதிவைப் பார்த்தப்போ தெரிஞ்சது !)
ஆஸ்பத்ரிக்குப் போனோம். டாக்டர் கார்த்திக் , BP செக்கப் பண்ண ட்யூட்டி நர்ஸைக் கூப்பிட்டார். நம்மைப் பார்த்து அவுங்களுக்கும் மகிழ்ச்சி. நலம் விசாரிச்சுட்டு, செக் பண்ணிட்டு டாக்டரிடம் சொல்லிட்டுப் போனாங்க. 'இந்த வயசுக்கு இது சரி'தான் என்ற வகையில் நல்லாவே குறைஞ்சுருக்கு. வெர்ட்டிகோ மாத்திரைகளை மறக்காமல் எடுத்துக்கச் சொன்னார். கொஞ்ச நாள் ஆகுமாம். இது சரியாகறதுக்கு... அதுவரை மருந்தை நிறுத்தப்டாது!
எடுத்துக்கவேண்டிய மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமோன்னு ஒரு சம்ஸயம் எழுப்பினதுக்கு, ஒரு மூணு நாள் இப்படியே எல்லா மாத்திரைகளையும் எடுத்துக்குங்க. அதுக்கப்புறம் இன்னொரு செக்கப் பண்ணிட்டு, என்ன செய்யலாமுன்னு சொல்றேன்னார். எப்படியோ கொஞ்சம் மனக்கவலை குறைஞ்சது.
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்க நம்மவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கலாம். ச்சலோ பாண்டிபஸார்! பூர்விகா கடைக்குள் போய் லேட்டஸ்ட் செல்ஃபோன் என்னன்னு பார்த்தால் S22 Ultra இருக்குன்னு எடுத்துக் காமிச்சார். (நான் ஏற்கெனவே நியூஸியில் பார்த்துவச்சுட்டுப் போயிருந்தேன். இங்கே ரெண்டு சிம் போட்டுக்கும் மாடல் கிடையாது ) கொஞ்சம் அதைபற்றி விசாரிச்சுட்டு, கூடுதல் ஸ்டோரேஜ் வேணுமுன்னு (512gb ) சேர்த்து பணம் கட்டியாச்சு. கடைக்கு முன்னால் பார்க்கிங் என்பதால் நம்மவரும் கூடவே மெல்ல நடந்து வந்துட்டார். தினமும் அறுபதடி நடக்க வச்சது இப்போ எவ்ளோ நல்லதா போச்சுப் பாருங்க.
அந்த மாடலை எடுத்துவர ஆள் அனுப்புனாங்க. கொஞ்சநேரத்துலே வந்துட்டார். இப்ப வாங்கின ஃபோனுக்கு போனஸா ஒரு ஸ்மார்ட் வாட்ச் கிடைக்குமாம். நம்ம செல்லை ஒரு மணி நேரம் பயன்படுத்தினதும், அது ரெஜிஸ்டர் ஆகும். அப்போ வாட்ச் கடைக்கு அனுப்புவாங்க. வந்ததும் தகவல் சொல்றேன்னார். இதெல்லாம் எனக்கு ஒன்னுமே புரியாது.... இண்டியா சிம் அந்த J7 லேதானே இருக்கு. அதை எடுத்து புதுசுலே மாத்தியாச்சு. புதுசை எடுத்து 'நம்மவர்' கையில் கொடுத்தேன் !
இப்போ பழைய செல் சமாச்சாரங்களை இதுலே மாத்திக்கணும். அந்த வேலை இப்போ இல்லையாம். ஃபோன் ரெஜிஸ்டர் ஆனதும்தான் மாத்த முடியுமாம். உங்களுக்கு சாம்ஸங்கிலிருந்து மெஸேஜ் வரும். நாளைக்கு இதே நேரத்தில் வாங்க. எல்லாம் மாத்திக்கலாமுன்னார்.
ஓ... ஐஸியூ வில் இருக்கும் பேஷிண்டின் நிலையைக் கேட்டால் இன்னும் 24 மணி நேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியுமுன்னு ஆஸ்பத்ரியில் சொல்றாப்படியோ !
அதுவரை என் ஃபோன் டம்மிதான். கெமெராவாத்தான் பயன்படுத்திக்க முடியும் ! லோட்டஸ் போனால் வைஃபை கிடைக்கும்னு மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டேன்.
என்னோட S9+ இதே கடையில்தான் முந்தி வாங்கினோம். அப்போ இங்கே இருந்தவர்கள் யாருமே இப்போ இங்கில்லை....
லஞ்சுக்காக பக்கத்துலே இருந்த பாலாஜி பவனுக்குள்ளே போனோம். விஜிக்கும் நம்மவருக்கும் மினி மீல்ஸ். எனக்கு மனம் நிறைஞ்சதால் பசியே இல்லை. புது செல்லின் வரவைக் கொண்டாடவேணாமா ? ரெண்டு ஜாங்கிரி. ஒன்னு அவுங்க இருவருக்கும். ஒன்னு முழுசா எனக்கும்! நம்மவருக்குப் புது ஃபோன் வர்றதுலே எனக்கு இவ்ளோ மகிழ்ச்சியா !!! இவ்ளோ நல்லவளாகவா இருக்கேன் !!!!!
'அந்த ஒரு மணி நேரம்' எப்பப்போகுமுன்னு காத்திருக்கணும்.....
சாப்பாடானதும் லோட்டஸில் இவரை விட்டுட்டு, நான் மட்டும் கிளம்பி பாண்டிபஸார் வணிக வளாகத்துக்குப் போனேன். எப்போ கிளம்புவோமுன்னு இன்னும் சரியாத் தெரியலை. திடுக்குன்னு கிளம்பணுமுன்னால்..... நியூஸியில் கிடைக்காத சில சமாச்சாரங்களை வாங்கிக்கணும். கொஞ்சம் சிக்கனக்காரி என்பதால் போரடிக்கும் பழசைப் புதுசா மாத்திக்கணும்.
அங்கே ஒரு கடையில் நம்ம தேவைக்குக் கிடைச்சது. நான் போனபோது அந்தக் கடையில் மூணு பெண்கள் கடைக்காரரிடம் பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. மலேசிய மக்கள். இந்தியாவில் நல்லா விலைகுறைச்சுக் கேக்கலாமுன்னு சொல்லி அனுப்பியிருப்பாங்க போல . அவர் சொன்ன விலையில் முக்கால் பங்கைக் குறைக்கச் சொல்லி மல்லுக்கட்டறாங்க. நான் போய் நின்னதும், 'அக்கா.... இங்கே பாருங்கக்கா.... இப்படிக் குறைச்சுக் கேட்டா எப்படிக்கான்னு என்னாண்டை முறையிடுறார் தம்பி' ! டௌரிகல்யாணம் விசு மாதிரி பேரத்துக்கு நடுவில் புகும்படி ஆச்சு.
கொஞ்சம் வியாபாரமும் ஆச்சு. ! மலேசிய மக்களைப் பார்த்ததும் என் மலேசியத்தோழிகள் எல்லாம் மனசுக்குள் வந்து போனாங்க.....
பேரம் எல்லாம் ப்ளௌஸ் பின்னால் கட்டிவிடும் குஞ்சலத்துக்குத்தான்..... கழுத்து லூஸா இருந்ததைச் சரி பண்ணறதுக்காக ஆரம்பிச்சது, இப்போ பயங்கர ஃபேஷன் சமாச்சாரமா மாறி இருக்கு. தேவையோ இல்லையோ எல்லாத்துக்கும் குஞ்சலம் கட்டியே ஆகணும். விலை உயர்ந்ததுகூட வேணாம். தைக்கும் துணியிலேயே, வெட்டும்போது சின்னத்துண்டு விழுமே அதுவே போதுமாம். நம்ம டெய்லர் கூட என்னோட துணிகளில் வச்சுத் தச்சுருக்கார். அதையெல்லாம் ஊருக்குப்போய் பிய்ச்சு எடுக்கணும். நம்ம ரஜ்ஜுவுக்கு விளையாடும் கயிறு :-)
இப்போ இது நம்ம தம்பி கடையா ஆகிப்போனதால் நானும் கொஞ்சம் நிறையவே வாங்கினேன். கனமில்லாதவைகள்தானே ! கைக்கெட்டும் தூரத்தில் ஏகப்பட்ட 'தேவையானவை' குமிஞ்சுருக்கு இந்த வளாகத்தில். இந்த டிக்கெட் அப்க்ரேடு சரியானால் இன்னும் இருபதும் இருபதுமா நாப்பது கிலோ கிடைக்கும். பிரச்சனையில்லாமக் கொண்டு போகலாம். ஆனால் இடம் இருக்குன்னு சொல்லமாட்டேங்கிறாங்களே...... நாப்பது கிலோவுக்கு இன்னும் என்னென்ன வாங்கலாமுன்னு மனசு எடைபோட்டுக்கிட்டு இருக்கு.... நல்லதா ஒரு வெங்கல உருளி, லக்ஷ்மி வாங்கின கடையில் பார்த்த பொம்மைகள்..... நல்ல கனமான அடியுள்ள தோசைக்கல்..... ஹைய்யோ ஹைய்யோ....
நாலு மணி போல நம்ம பூனா மாமி மகளும் மருமகனும் வந்தாங்க. கொஞ்ச நேரத்தில் மாமியின் மகனும் வந்தார். மாமியின் மக்கள் என்றாலும் மாமி என்னை ஸ்வீகாரம் பண்ணிட்டதால் அண்ணன் தங்கைதான்.
இப்படி எல்லோரையும் சேர்த்துப் பார்த்தே பலவருஷங்களாச்சு. பழங்கதைகள் பேசுவதும் இனிமைதான் ! பூனாவில் நாங்க இவுங்களோடு சேர்ந்து சுத்தாத இடமில்லை! ராஸ்தாபெட் கலகலத்துப்போகும் அப்போல்லாம் ! மருமகன்தான் கொஞ்சம் 'ஙே'ன்னு இருந்தார். ஆறுமணிபோல அவுங்களும் கிளம்பிப் போனாங்க. லோட்டஸில் அட்டகாசமா வளர்ந்துருக்கும் மணிப்ளாண்ட் ரொம்பவே பிடிச்சுப்போச்சாம் !
அதுலே இருந்து ஒரு கிள்ளு ! திருடிக் கொண்டுபோனால் காசு வராதுன்னேன். நாம் பூனாவில் இருந்த காலத்தில், பூனா மாமி குடும்பம் மெட்ராஸுக்கு இடம் மாறினாங்க. அப்போ மகள் டால்டா டப்பாவில் வளர்ந்த மணிப்ளாண்ட் செடி நம்மாண்டை வந்தது. நாங்க ரெண்டு பேரும் சட்னு இதை நினைச்சோம். நான் அதைத் தொட்டியில் மாத்திக் கயிறு கட்டி பால்கனியில் விட்டுருந்தேன். ரொம்ப நல்லா வளர்ந்து அதுவே ஒரு அடையாளமா ஆகிப்போச்சு நம்ம வீட்டுக்குன்னு சொன்னேன் !
நமக்கு வரவேண்டிய மருந்து ஒன்னு இன்னும் பாக்கி இருந்தது ஆஸ்பத்ரி பார்மஸியில் . ரெடியா இருக்குன்னு தகவல் அனுப்பினாங்க. போய் அதை வாங்கிக்கிட்டு அப்படியே டின்னருக்கு வேறெங்காவது போகலாமுன்னார் நம்மவர். கொஞ்சம் குஷியா இருக்கார் போல ! ஞானாம்பிகாவில் அவுங்களுக்கு நெய் ரோஸ்ட் & ரவா தோசை. எனக்கு இடியப்பம். அங்கே பாதாம் பால், எனக்கு காஃபி !
இப்பெல்லாம் எல்லா இடங்களிலும் மஞ்சக்கலர் ப்ளேட்களா இருக்கே... என்ன காரணமா இருக்கும்? வாஸ்துவா இல்லே தட்டுகளில் குழம்பு கறிகளில் இருக்கும் மஞ்சள் ஒட்டுமே... அதனாலா.........
தொடரும்...........:-)
6 comments:
ஏற்கெனவே படித்த மாதிரியே இருக்கே.. கமெண்ட்டும் கொடுத்திருந்தேனே...
வாங்க ஸ்ரீராம்,
முதலில் படங்கள் இல்லாமப் பதிவு போடும்படியாச்சு! நேற்று மறுபடி என்னதான் ஆச்சுன்னு பார்த்தால் படங்கள் போட முடிஞ்சது. அதான் அதே பதிவைப் படங்களுடன் புதுப்பித்தேன். பழையதை நீக்கலாமுன்னா..... மூணு பின்னூட்டங்கள் வந்துருக்கு. அதான் அப்படியே விட்டு வச்சுருக்கேன்.
இப்ப படங்களோடு பார்க்கறப்பதான் அம்சமா இருக்கு துளசிக்கா.
கீதா
ஜாங்கிரி வாவ்,
அந்த மொறு மொறு தோசை ... looks delicious;
வாங்க கீதா,
எனக்கும் என்னமோ மொட்டையா தோணுச்சு. அதான் இன்னொருக்கா பதிவும் செஞ்சேன் :-)
வாங்க விஸ்வநாத்,
இந்த மொறுமொறு தோசைதான் இங்கத்து ரெஸ்ட்டாரண்டிலும் கிடைப்பதில்லை. புதுசாத் திறந்த ஒரு இடத்துக்குப்போனோம். மசால் தோசை எனக்கு. சவசவ...... சாம்பாரும்..... யக்.
Feed Back கேட்ட ஓனர் (பஞ்சாபி) கிட்டே உண்மையைச் சொல்லிட்டு வந்தேன். நீங்க என்னென்ன சேர்ப்பீங்க சாம்பாரில்னு கேட்டார். ஒரு வரியில் முடியுமா ? லாங் ப்ராஸஸ்னு சொன்னேன்.
Post a Comment