Wednesday, May 03, 2023

உடனுக்குடன்........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 43

செய்திகளை  முந்தித்தருவதுன்னு..... தினப்பத்திரிகை ஒன்றில் சொல்வாங்களே அதைவிட விரைவில் சேதிகளை எல்லோருக்கும் சொல்றதில் ஃபேஸ்புக்கை மிஞ்சமுடியாதுன்னு நினைக்கிறேன்.  வலைப்பதிவுகள்  வாராந்தரி, மாதாந்தரி சில சமயம்  வருஷாந்திரின்னு இருக்கு.  பயணம் போய் வந்த பின் பயணக்கதை எழுதறேன் பாருங்க.... அதுக்கு எப்படியும் சில மாசங்கள் இடைவெளி வந்துருது.  இப்பக்கூடப் பாருங்க    இந்தப் பதிவும் கூட  போனவருஷ நவம்பர் மாதத்தில் நடந்ததுதான்,  இப்ப இந்தவருஷ மே மாசத்தில் வெளிவருது. ஆனால் ஃபேஸ்புக் ?
முந்திமாதிரி பயணங்கள் போகும்போது  துளசிதளத்தில் லீவுக் கடுதாசி போட்டுட்டுப் போறதெல்லாம் போயே போச்சு.  இருத்தலின்  அடையாளமாக  பயணத்தில் இருக்கும்போதும் 'தினம் உள்ளேன் ஐயா'ன்னு  ஃபேஸ்புக்கில்  தினசரி நடக்கும் நிகழ்ச்சிகளைக் கோடி  காமிச்சுருவேன்.  நேற்றைக்கு  ஷாரதாம்பாள் தரிசனம்  கிடைச்சதை வழக்கம்போல்  ஃபேஸ்புக்கில் சில படங்களோடு  நேற்றே போட்டாச்சு.

அப்பதான்  நண்பர்  கீதாப்ரியன் கார்த்திகேயன்,  இன்றைக்கு மாலையில் அந்தக் கோவிலுக்குப் போவேன் னு சொன்னதோடு,  நீங்க எங்கே இருக்கீங்கன்னு சொன்னால், நாளை தி நகர் வரும்போது சந்திக்கிறேன்னு பின்னூட்டியிருந்தார்.   எனக்கும் இவரை சந்திக்க ஆவல் இருந்தது.  இப்போ சில வருஷங்களாக இவர் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருக்கேன்.

மனிதர், எதை எழுதினாலும் சுவாரஸியமா, பல செய்திகளை உள்ளடக்கி எழுதறார். அதிலும் சினிமாப் பதிவுகள், விமரிசன ரீதியில் இல்லாமல், டெக்னிக்கலா ஆராய்ச்சி செஞ்சு எழுதறார். எடுத்துக்காட்டாக.... அந்த 'ஹே ராம்' படத்தைப் பற்றி எழுதினார் பாருங்க.....  அதில் ஒவ்வொரு ப்ரேமிலும்  அமைஞ்சவைகளை விளக்கி விலாவரியா எழுதியதைப் படிச்சதும்  இவ்வளவெல்லாமா அந்த ஸீனில் இருக்கு. நாமும்தான்  அந்தப் படத்தைப் பார்த்தமே.... சரியாக் கவனிக்கலை போல இருக்கேன்னு நம்ம வீட்டில் இருக்கும் டிவிடியை எடுத்துப் போட்டுப் பார்த்துட்டு, அடடா.... எப்படி இவ்வளவு நுணுக்கமா இந்தக் காட்சியைப் பற்றிச் சொல்லியிருக்கார்னு வர்ற ஆச்சரியம்தான்  எப்பவும்.


டெக்னாலஜி மாறிப்போயிருச்சு.... இப்ப 'டிவிடி ப்ளேயர்' கூட  கடைகளில் விற்பனை இல்லை தெரியுமோ ?  இந்த இடத்தில் ஒன்னு சொல்லிக்கறேன்,  நாம் இங்கே வந்த புதுசுலே,  தமிழ்சினிமா எல்லாம்  கிடைக்காது.  ஹிந்திப் படங்கள் மட்டும் ஒரு  இடத்தில் வீட்டில் வச்சு வாடகைக்குக் கிடைக்கும்.  நாங்க ஃபிஜியில் இருந்து இங்கே இடம் மாறி வந்தப்பவே வீடியோ ப்ளேயர் ஒன்னு கையோடு கொண்டு வந்திருந்தோம். அதுலே அந்தப் படங்களைப் போட்டுப் பார்க்கிறதுதான்.

அப்புறம்   ஆக்லாந்து நகரில் (வடக்குத்தீவு ) இலங்கை நபர் ஒருவர் தமிழ்ப்பட வீடியோ கேஸட்டுகள்  'ஐங்கரன் வீடியோ' மூலம்  வாங்கி விற்கிறார்னதும்  அவரிடம் கேட்டு நமக்கும் படங்கள் அனுப்பச் சொன்னோம். வேற பொழுது போக்கும் நமக்கு இல்லைதானே ?  கொஞ்சநாளில்  நம்ம ஊரில் தமிழ்ச்சங்கம் தொடங்கினதில், இங்கிருக்கும்  தமிழ் நண்பர்கள் (எங்களையும் இன்னொரு நண்பரையும் தவிர  எல்லோரும்  இலங்கை மக்கள்தான் )  தமிழ்ப்படங்கள் வேணும்  எனக் கேட்டதால்  நான் வீட்டிலேயே  ஒரு வீடியோ லைப்ரரி நடத்த ஆரம்பிச்சேன்.  வரும் வருமானத்தில் படத்துக்கான செலவு போக, மீதி இருக்கும் காசை தர்ம காரியங்களுக்கு  இந்தியாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.  

கொஞ்சநாளில்  வீடியோ கேஸட் டெக்னாலஜியும் போச்சு. விசிடி வரலாச்சு.   வீட்டில் இடம் அடைக்காததும் நல்லதாப் போச்சு !  அப்ப பழைய வீடியோ கேஸட்ஸ் ?  அதை அஞ்சஞ்சா வச்சு  டேப் போட்டு, செங்கல் அளவில் செஞ்சு, அதை நம்ம வீட்டுக் கொலுவுக்குப் படி கட்ட வச்சுக்கிட்டேன். (இப்பவும்   நம்மாண்டை ப்ரிக்ஸ் இருக்கு! )

நமக்கு விசிடி வரவழைப்பதில் தபால் செலவும் கொஞ்சம்  குறைஞ்சதுதான். ஆக்லாந்து நண்பர்,  அவர் பாட்டுக்கு  அவருக்கு வரும் படங்களையெல்லாம் அனுப்பிருவார். பல படங்களின்  பெயர்கள் கூட நமக்குத் தெரியாததாக இருக்கும் ! நாந்தானே இங்கே சென்ஸார் போர்டு என்பதால்  எல்லாப் படங்களையும் ஒருமுறை போட்டுப் பார்த்துருவேன்.  கேள்விப்படாத படங்கள் பற்றி துளசிதளத்தில் எழுதுவேன்.  நம்ம மக்கள் எல்லோரும்  உங்களுக்காகவே படம் எடுத்து அனுப்பறாங்கன்னு கலாட்டா செய்வாங்க. இதுலே மலேசியாவில் லோக்கல் தயாரிப்புப் படங்கள் வேற ! ஹாஹா...

அந்த சமயம்தான்  ஹோப் பவுண்டேஷன், எய்ட்ஸ் வந்த பெற்றோரால்  அநாதைகளா ஆன  எய்ட்ஸ் நோய் இருக்கும்  பிள்ளைக் கவனித்து மருத்துவம் செஞ்சும் படிக்க வச்சும் செய்யும் சேவையை ஒரு தோழி மூலம்  தெரிஞ்சதும்  (தோழியின் உறவினர் அங்கே  வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார் இப்பவும்தான் )  கிடைக்கும் காசை அவுங்களுக்கு அனுப்ப ஆரம்பிச்சேன்.   இந்தியப்பயணம் போகும்போது  சென்னையில் குழந்தைகள் இருக்கும் ஹாஸ்டலைப் போய்ப் பார்த்தும் வருவேன். ரொம்ப நல்லாவே கவனிக்கிறாங்க. பிள்ளைகளும் மகிழ்ச்சியாகத்தான் இருக்காங்க.

சரி... சினிமாவுக்கு வரலாம். விசிடி போய் டிவிடி வந்தது.  இதுக்கிடையில் நம்மவரின்  வேலை சம்பந்தம்மா.... இந்தியாவில் ஒரு ப்ராஜக்ட். அதுக்காக நாங்க இந்தியாவுக்குக் கொஞ்சநாள் போகவேண்டியதாச்சு. ஹிமாச்சல் ப்ரதேஷில்  வேலை ! 

அப்போ  வலையிலேயே படங்கள் வர ஆரம்பிச்சு இருந்தது.  இப்போ நமக்கும் வாடிக்கையாளர்கள் அவ்வளவா இல்லை.  இருக்கும் சிலரும், நம்மிடம் எடுத்த படங்களை, அவுங்க பார்த்துட்டு, அவுங்க நண்பர்களுக்கும் விநியோகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.  படங்களைத்  திருப்பித்தரச் சொல்லி போன் செஞ்சால், இன்னும் பார்த்து முடியலை. பாதிதான் பார்த்திருக்கொம் னும்  சொல்வாங்க.   அந்த சிலரில் , சிலர்  எடுக்கும் படங்களுக்குக் காசும் கொடுக்காம, அப்புறமாத் தாரோமுன்னு  கணக்கில் எழுதிக்கச் சொல்வாங்க.  அப்புறம்  வந்துச்சுன்னா நினைக்கிறீங்க ? ஹாஹா......  தெரிஞ்சவங்ககிட்டே என்ன கணக்குன்னு விட்டுத்தொலைச்சுட்டேன். ஆனால் ஹோப் ஃபௌண்டேஷனுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்தலை.  பிள்ளைகள் பாவம்தானே ? 

நம்ம வீடியோ லைப்ரெரியை மூடியாச்!  சொந்த உபயோகத்துக்கான  தரமான டிவிடிகள் இப்பவும் நம்மிடத்தில் இருக்குதான். அதிலும் மகளுக்கும் கமலஹாசன் படங்கள் பிடிக்கும் என்பதால்  முக்கால்வாசி கமல் படங்கள்தான் !

அதான்  கீதாப்ரியன் கார்த்திகேயன், கமலின் படங்களில்  தொழில்நுட்பமெல்லாம் விஸ்தரிச்சு  எழுதும்போது 'ஆவ்'னு  படிப்பது:-) அவர் சந்திக்க வரேன்னதும் ரொம்பவே ஆர்வமா எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்.  நமக்கு ஏற்கெனவே துளசிதளம் வாசகரான அனந்து, குடும்ப நண்பராக மாறியிருந்தார். உடம்பிறந்தாளைப் பார்க்கப்போகும் வகையில்தான் கைநிறையப் பூவும், இனிப்பு வகைகளுமா  எப்பவும் வந்து சந்திப்பார்.  ஞாயிறு என்பதால் அவரும்  மறுநாள் வருவதாகச் சொல்லி இருந்தாரா.......    ரெட்டிப்பு மகிழ்ச்சியோடு இருந்தோம்.
காலை வழக்கமான ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போய் வந்ததும்,   நம்மவர்,  கொஞ்சம் உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் தூங்கினால் சரியாகிரும்னு சொன்னார். அனந்து  வந்ததும்,  ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டு, தூங்கப்போனார்.  நம்ம லோட்டஸில்  எப்பவும்  நாம் தங்கறது ஜூனியர் ஸ்யூட்டில்தான். ( அதே மாடி, அதே எண் அறைதான் இந்த 16 வருஷங்களில் )  ஒரு சின்ன அறையும், ஒரு பெரிய அறையுமா  ரெண்டு இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் வரும்போது  உக்கார்ந்து பேச  வசதிதான்.  இங்கே அடுக்களையோடுகூடிய அறைகளும் இருக்கு. ஆனால்  ஊருக்குப் போனாலும் அடுப்பைக் கட்டிண்டே இருக்கணுமான்னு அதை எடுக்கறதில்லை.

நாங்கள் பேசிக்கிட்டே இருக்கும்போது  கீதாப்ரியன் கார்த்திகேயனும் வந்துட்டார். (இனி அவரை கார்த்திக் என்று குறிப்பிடுவேன் ) பக்தி & வாஸ்து சமாச்சாரங்கள் அன்பளிப்பாகக் கொண்டு வந்தார்.  வலையில் தொடர்பு இருந்துக்கிட்டே இருப்பதால்  யாரும் யாருக்கும் புதுமுகமாகத்  தெரியறதில்லைதானே !  அவரைப் பார்த்ததும், சபரிமலைக்கு மாலை போட்டுருக்காரோன்னும் நினைச்சேன்.  இல்லையாம்.
பேச்சுவாக்கில்  என் காது சமாச்சாரம் வெளியில் வந்ததும்,  அதுக்கொரு அக்குபஞ்சர் சிகிச்சையைப்போல் மிளகு வைத்தியம் ஒன்னு இருக்குன்னும்,  அதைச் செய்யும் நபர் திறமையானவங்கன்னதும்  எனக்கும் எப்படியாவது காது சரியானால் சரின்னு இருந்துச்சு.  உடனே அவர், சிகிச்சை தரும் நபரை செல்லில் கூப்பிட்டு வரமுடியுமான்னு கேட்டார். நம்ம அதிர்ஷ்டம்.... அவுங்க அப்போ இதே ஏரியாவுக்குப் பக்கமாத்தான்  வேற ஏதோ வேலையா வந்துருக்காங்க. வரேன்னு சொன்னவங்க ஒரு அரைமணி நேரத்தில் வந்துட்டாங்க.  சித்ரான்னு பெயர்.  எனக்குப் பார்த்தவுடன், ஃபேஸ்புக் தோழி செல்வி சங்கரின் நினைவு வந்தது. இவுங்களையும் நேரில் சந்திச்சதில்லைதான்.  ஆனால்  வலையில் ஏறக்கொறைய தினமும்  பார்க்கிறோமே !
சித்ரா சொன்னாங்க..... மிளகுகளை, குறிப்பிட்ட ப்ரெஷர் பாய்ண்ட்டில் வச்சு லேசா அழுத்திட்டு மேலே மிளகுகள் நகராமல்  ஒரு டேப் போட்டு ஒட்டிருவாங்களாம்.  ஒரு  சிலமணி நேரத்தில் அதைப் பிரிச்சு எடுத்துடலாமாம்.  ஒவ்வொரு குறிப்பிட்ட  நோய்/வலிகளுக்கு வேவ்வேற ப்ரெஷர் பாய்ண்ட். 

ஆமாம். நம்ம லோட்டஸுக்கு ரெண்டு பில்டிங் தள்ளியே ஒரு அக்குபஞ்சர்& அக்கு ப்ரெஷர் க்ளினிக் இருக்கு. டாக்டர் ஜயலக்ஷ்மி ரொம்ப நல்லபடி வலிகளைக் குணமாக்கறதாக  ஒரு வலைஉலகத் தோழி சொன்னதில் இருந்து, ஒவ்வொரு பயணத்திலும் அங்கே போய் வருவதுண்டு.  தோள்வலி 90% குறைஞ்சது அவுங்க சொல்லித்தந்த பயிற்சியால்தான்.  இவுங்களைப் பற்றி ஒரு பதிவும் அப்போ எழுதியிருந்தேன்.   ஆனால் கோவிட் அரக்கன், இவுங்களையும் பலி வாங்கிட்டான்.  இப்ப க்ளினிக் இருக்கான்னு தெரியலை... ப்ச்.... 

http://thulasidhalam.blogspot.com/2015/01/17.html

இதுக்குள்ளே லஞ்ச் டைம் வந்து, போயிருச்சுன்னு (இப்பவே மணி ரெண்டே கால்) எல்லோருமாக் கீழே  க்ரீன்வேஸில் போய் சாப்பிட்டு வரலாமுன்னு நம்மவரை எழுப்பினால்....    லேசா ஜுரம்  இருக்கு. 'நீங்க போய் சாப்பிடுங்க. எனக்கு ரெண்டு இட்லி மட்டும் ரூமுக்குக் கொடுத்தனுப்பு'ன்னுட்டார். 





கீழே போய்ச் சொன்னதும்,  ரெண்டு இட்லி மாடி அறைக்குப் போயிருச்சு. நாங்க மூவரும்  நிதானமாச் சாப்பிட்டு முடிச்சுட்டு அறைக்குத் திரும்பினோம்.  நம்மவரைப் போய்ப் பார்த்தால்....  அரை இட்லி சாப்பிட்டுருக்கார்.  ஓய்வில்லாமல்  சுத்திக்கிட்டு இருந்தது காரணமுன்னு நினைச்சேன்.

கொஞ்ச நேரத்தில் அனந்து கிளம்பிப்போனார். அப்புறம் சித்ராவும். பாவம்.... இவுங்களை செல்வி செல்வின்னே கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.  அப்படி ஒரு உருவ ஒற்றுமை(ன்னு நினைக்கிறேன் ) என் தடுமாற்றம் புரிஞ்சு அவுங்களும் ரொம்பக் கண்டுக்கலை.

சித்ராவை எனக்கு  ரொம்பப்பிடிச்சுப்போச்சு. ரொம்பத் தன்மையா பழகுறாங்க.  வைஷ்ணவோ காலேஜ்லே பார்ட் டைம் வகுப்பு எடுக்கறதாச் சொன்னாங்க.  சிலசமயம் மருத்துவம் செஞ்சுக்கும்போது, அவுங்க அணுகுமுறையாலேயே நோய்,  கொஞ்சம் நம்மை விட்டுப்போறது உண்மைதான். என்னோட முழங்கால் வலிக்கும் நீலக்கலரில் ஒரு டேப்/ ப்ளாஸ்டர் மாதிரி ஒன்னு போட்டு விட்டாங்க.  வலி குறைஞ்சமாதிரி தெரிஞ்சால் எடுத்துடலாம். சில நாட்கள் வரை எடுக்காமல் இருந்தாலும் பிரச்சனை இல்லையாம்.
அப்பதான் கார்த்திக் சொல்றார் 'சார், வாயிலெடுக்கறாரு மேடம்'னு.  அதான் காது ரிப்பேராச்சே. என் காதுலே விழலை.  எழுந்துபோய்ப் பார்த்தால் அந்த அரை இட்லி  வெளியே வந்துருக்கு :-(

'நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்க'ன்னு சொல்லிட்டுக் கார்த்திக்கும் கிளம்பிப் போனார்.   

தொடரும்............ :-)


6 comments:

said...

சாருக்கு உடம்புக்கு அந்நேரம் முடியாமல் போனது உங்களுக்கு கையொடிந்த மாதிரி இருந்திருக்கும்! பார்க்க வேண்டிய இடங்களை பார்க்க முடியாமல் ஒரு கட்டாய பிரேக்!

said...

எல்லாம் நன்மைக்கே, நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்,

நம்ம வீட்டில் நாந்தான் நிரந்தர நோயாளி ! இப்படி போட்டி வருமுன்னு எதிர்பார்க்கலை.....

said...

வாங்க விஸ்வநாத்,


ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

said...

இனிய நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சியான தரூணத்தில் அட...டா....திரு.கோபால் அவர்களுக்கு உடல் நலம் இல்லாமல் போனது மனதுக்கு கஷ்டமாக இருந்திருக்கும்.

said...

வாங்க மாதேவி,

பயணத்தில் உடல் நலமில்லை என்றால் ரொம்பவே கஷ்டம் இல்லையோ !